பிரிந்து செல்ல பயிற்சி
பைபிள் சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.” (சங்கீதம் 127:5) ஒரு அம்பு தற்செயலாக அதன் இலக்கை சென்றெட்டிவிடாது. அதை கவனமாக குறிபார்த்து எய்த வேண்டும். அதே விதமாக, பெற்றோரின் வழிநடத்துதல் இல்லாமல் பொறுப்புள்ள பெரியவர்களாகும் இலக்கை பிள்ளைகளால் அடைய முடியாது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று பைபிள் அறிவுறுத்துகிறது.—நீதிமொழிகள் 22:6.
குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களின் காலையே சுற்றிச் சுற்றி வரும் பிள்ளைகள் பெரியவர்களாகையில் சொந்தகாலில் நிற்பதென்பது திடீரென்று நடந்துவிடாது. எனவே, பிள்ளைகள் தங்களுடைய சொந்தகாலில் நிற்க பெற்றோர் எப்போதிருந்து பயிற்சியைத் தொடங்கலாம்? அப்போஸ்தலன் பவுல் இளைஞனாகிய தீமோத்தேயுவுக்கு இவ்வாறு நினைப்பூட்டினார்: “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் [“சிசுப்பருவம்,” NW] அறிந்[திருக்கிறாய்]” (2 தீமோத்தேயு 3:15) கற்பனை செய்து பாருங்கள், தீமோத்தேயுவின் தாய், அவன் சிசுவாக இருக்கையிலேயே ஆவிக்குரிய பயிற்சியைத் தொடங்கிவிட்டார்!
சிசுக்கள் ஆவிக்குரிய பயிற்சியிலிருந்து நன்மையடைய முடியுமென்றால், பிள்ளைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக, வயதுவந்தோராவதற்கான பயிற்சி கொடுக்கப்பட வேண்டுமென்பது நியாயமாயிருக்கிறதல்லவா? பொறுப்புள்ளவர்களாக இருப்பதற்கும், தங்களுடைய சொந்த தீர்மானங்களை எடுப்பதற்கும் கற்றுக்கொடுப்பதே இதை செய்வதற்கு ஒரு வழியாகும்.
பிள்ளைகள் பொறுப்பாக நடப்பதற்கு கற்றுக் கொடுத்தல்
உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் காரியங்களை செய்வதற்கு நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்? தம்பதியரான ஜாக்கும் நோராவும் தங்கள் மகளைக் குறித்து இவ்வாறு நினைவுகூருகின்றனர்: “அவளுக்கு அவ்வளவா நடக்க வராததுக்கு முன்னாடியே, தன்னோட படுக்கையறைக்கு ஸாக்ஸையோ சின்ன பொருட்களையோ எடுத்துட்டுப்போய் அதை அதற்குரிய டிராயர்ல வைக்க கத்துக்கிட்டா. விளையாட்டு சாமான்களையும் புஸ்தகங்களையும் அததற்குரிய இடத்தில் வைக்கனும்னுகூட அவ கத்துக்கிட்டா.” இவை சிறிய தொடக்கங்களே; ஆனால், பொறுப்பான தீர்மானங்களை எடுக்க பிள்ளை ஏற்கெனவே கற்றுக்கொண்டிருக்கிறது. பிள்ளை வளர்ந்து வருகையில், ஒருவேளை அவனிடமோ அவளிடமோ ஓரளவு முக்கியமான பொறுப்புகளும்கூட ஒப்படைக்கப்படலாம். அவ்வாறே ஆப்ராவும் அனிட்டாவும், தங்கள் மகளுக்கு செல்லப்பிராணியாக நாயை வளர்க்க அனுமதியளித்தனர். நாயைப் பராமரிக்கும் பொறுப்பு இந்த இளைஞிக்கு இருந்தது; அதோடு அவள் அதை பராமரிப்பதற்காக தன்னுடைய கைச்செலவுக்கான பணத்திலிருந்தும் செலவு செய்தாள். பிள்ளைகளை அவர்களுடைய பொறுப்புகளுக்கு ஏற்றவாறு வாழ பயிற்றுவிப்பதற்கு பொறுமை தேவைப்படுகிறது. ஆனால், அது வீண் போகாது; மேலும் அவர்களுடைய உணர்ச்சிப்பூர்வ வளர்ச்சிக்கும் உதவியளிக்கிறது.
பிள்ளைகளை பொறுப்புடன் நடப்பதற்கு கற்றுக்கொடுக்க வீட்டு வேலைகள் மற்றொரு வாய்ப்பை அளிக்கிறது. பிள்ளைகள் வீட்டு வேலைகள் செய்வதை உதவியாக கருதுவதைவிட உபத்திரவமாக கருதும் பெற்றோர் சிலர் இத்தகைய வேலைகளை செய்ய அவர்களை விடுவதே கிடையாது. ‘தாங்கள் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாது’ என்ற முடிவுக்கு சிலர் வந்துவிடுகின்றனர். இது மிகவும் தப்பான விவாதம். வேதவசனம் இவ்வாறு சொல்கிறது: “ஒருவர் தன் அடிமையை இளமைப் பருவமுதல் செல்லமாக நடத்தினால், அவன் பிற்காலத்தில் நன்றிகெட்டவனாவான்.” (நீதிமொழிகள் 29:21, NW) இந்த வசனத்திலுள்ள நியமம் நிச்சயமாகவே பிள்ளைகளுக்கு பொருந்துகிறது. ஒரு இளைஞன் பெரியவனாகும்போது ‘நன்றிகெட்டவனாக’ மட்டுமில்லாமல், சாதாரண வீட்டு வேலையும்கூட செய்ய லாயக்கற்றவனாக இருக்கையில், அது எவ்வளவு வருத்தகரமான விஷயம். பைபிள் காலங்களில் வாழ்ந்த இளைஞர்களுக்கும் பொதுவாகவே வீட்டு வேலைகள் கொடுக்கப்பட்டன. உதாரணமாக, யோசேப்பு, மிக இளம் வயதிலேயே, அதாவது தன் பதினேழாவது வயதிலேயே, தன் குடும்பத்தின் மந்தைகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். (ஆதியாகமம் 37:2) அவருடைய தந்தையின் மந்தைகள் ஏராளமானவையாக இருந்ததால், இது சாதாரண காரியமாக இருக்கவில்லை. (ஆதியாகமம் 32:13-15) யோசேப்பு அதிகாரமுள்ள அதிகாரியாக ஆனாரென்பதை கருத்தில் கொள்கையில் இந்த இளம்பிராய பயிற்சியே அவருடைய குணநலன்களை சரியான விதத்தில் உருவமைக்க உதவியது என்ற உண்மை விளங்குகிறது. எதிர்காலத்தில் இஸ்ரவேலின் அரசராகவிருந்த தாவீதும்கூட, இளைஞராக இருந்தபோது, குடும்பத்தின் மந்தைகளை மேய்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தார்.—1 சாமுவேல் 16:11.
இதிலிருந்து இன்றைய பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்? உங்கள் பிள்ளைகளுக்கு உபயோகமுள்ள வீட்டு வேலைகளை கொடுங்கள். உங்கள் இளம் பிள்ளைகளுக்கு, சுத்தம் செய்தல், சமையல் செய்தல், கொல்லைப்புறத்தை பராமரித்தல், வீட்டையும், வாகனத்தையும் பழுது பார்த்தல் போன்ற வேலைகளை செய்ய நேரம் எடுத்து, முயற்சியோடு, பொறுமையோடு கற்றுக்கொடுக்கலாம். பிள்ளையின் வயதையும், திறமையையும் பொருத்து அதைச் செய்யவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், சிறு பிள்ளைகளும்கூட தங்கள் ‘டாடி ஸ்கூட்டர் ரிப்பேர் செய்கையில்’ அல்லது ‘மம்மி சமைக்கும்போது’ கொஞ்சம் கூடமாட உதவிசெய்யலாம்.
வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுக்க பெற்றோர் பிள்ளைகளுக்கு பெரும் மதிப்புவாய்ந்த பரிசை—தங்களுடைய நேரத்தை—கொடுக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளுடைய ஒரு தம்பதியிடம் பிள்ளை வளர்ப்பின் வெற்றிக்கு இரகசியம் என்னவென்று கேட்கப்பட்டபோது அவர்கள் “நேரம், நேரம், நேரம்!” என பதிலளித்தார்கள்.
அன்பாக திருத்துதல்
பிள்ளைகள் வேலையை நன்றாக செய்யும்போதும் அல்லது நன்றாக செய்ய முயற்சி எடுத்தாலும் போதும், அவர்களை தாராளமாக, மனப்பூர்வமாக பாராட்டி தட்டிக்கொடுங்கள்! (மத்தேயு 25:21-ஐ ஒப்பிடுக.) பிள்ளைகள் எப்போதாவதே பெரியவர்கள் மாதிரி திறமையோடு வேலை செய்ய முடியும் என்பது உண்மையே. மேலும், சொந்த தீர்மானங்களை எடுக்க பிள்ளைகளை அனுமதித்தால், அவர்கள் பெரும்பாலும் தவறான தீர்மானங்களையே எடுப்பார்கள். ஆனால் அத்தகைய தவறுகளை பெரிசுபடுத்தாமல் ஜாக்கிரதையாயிருங்கள்! நீங்கள் வயதுவந்தவராக இருந்தபோது தவறு செய்யவில்லையா என்ன? அப்படியென்றால், உங்கள் பிள்ளை தவறு செய்யும்போது ஏன் பொறுமையாக இருக்கக்கூடாது? (சங்கீதம் 103:13-ஐ ஒப்பிடுக.) தவறுகளை பொறுத்துக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்வதில் அவையும் அடங்கும்.
எழுத்தாளர்களான மைக்கேல் ஷூல்மென்னும் ஈவா மெக்லரும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்: “நண்பர்களாக நடத்தப்படும் பிள்ளைகளுக்கு தாங்கள் சுயமாக செய்யும் காரியத்துக்கு தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இல்லை.” இருப்பினும், “பாசத்தைக் காட்டாத, கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள், பிரயோஜனமான காரியங்கள் உட்பட எந்தவொரு காரியத்தையும் சுயமாக செய்வதற்கு பயப்படுகின்றனர்; தாங்கள் செய்யும் காரியத்தில் பெற்றோர் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து, கேலி செய்வார்களோ, தண்டிப்பார்களோ என்ற பயமே இதற்கு காரணம்.” இந்தக் குறிப்பு, பெற்றோர்களுக்கு பைபிள் கொடுக்கும் எச்சரிப்பிற்கு இசைவாக உள்ளது: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” (கொலோசெயர் 3:21) எனவே ஒரு பிள்ளை கடுமையாக முயன்றும்கூட எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செய்யத் தவறியதென்றால், முயற்சி எடுத்ததற்காவது ஏன் நீங்கள் அவனை பாராட்டக்கூடாது? அடுத்த முறை இன்னும் நன்றாக செய்யும்படி தட்டிக் கொடுங்கள். அவனுடைய முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அவன் அறியட்டும். அவன்மீது உங்களுக்கிருக்கும் அன்பை நிச்சயப்படுத்துங்கள்.
உண்மைதான், அவ்வப்போது திருத்தமும் அவசியமே. இது வளரிளமைப் பருவத்தில் விசேஷமாக தேவைப்படுகிறது. அப்போது இளம் பிள்ளைகள் தங்களுடைய தனித்தன்மையை நிலைநாட்டவும், தங்களுடைய தகுதியின்படி தனிப்பட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று போராடுகின்றனர். எனவே பெற்றோர் இத்தகைய முயற்சிகளை அடங்காப்பிடாரித்தனம் என்று எப்போதும் கருதுவதற்கு மாறாக, புரிந்துகொள்ளுதலோடு சொந்தகாலில் நிற்பதற்கான முயற்சிகளாகவே ஞானமாக கருதுவர்.
இளம் பிள்ளைகள் உணர்ச்சித் தூண்டுதலின்படி நடக்கவோ, “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு” விட்டுக்கொடுக்கவோ மனம் சாயலாம். (2 தீமோத்தேயு 2:22) இளவயது நடத்தையில் கட்டுப்பாடுகள் வைக்கத் தவறுவது பிள்ளையை உணர்ச்சிரீதியில் பாழாக்கிவிடக்கூடும்: அதாவது அவன் தன்னடக்கத்தையும் சுயகட்டுப்பாட்டையும் கற்றுக்கொள்ள தவறுவான். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” (நீதிமொழிகள் 29:15) ஆனால், பொருத்தமான சிட்சை, அன்புடன் கொடுக்கப்படும்போது பிரயோஜனமானதாகிறது; வயதுவந்த பருவத்தின் தேவைகளுக்கும் அழுத்தங்களுக்கும் அவனை தயாராக்குகிறது. பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.” (நீதிமொழிகள் 13:24) இருப்பினும், சிட்சை என்பது தண்டிப்பதை அல்ல, பயிற்றுவிப்பையும் போதனையையுமே குறிக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள “பிரம்பு” என்ற வார்த்தை மந்தைகளை வழிநடத்துவதற்கு மேய்ப்பர்கள் உபயோகிக்கும் கோலை குறிக்கிறது. (சங்கீதம் 23:4) அது அன்பான வழிநடத்துதலையே அன்றி கொடூரத்தனத்தை அர்த்தப்படுத்துவதில்லை.
வாழ்க்கையை நடத்த கல்வி
பிள்ளையின் கல்வி என்ற விஷயத்திற்கு வரும்போது பெற்றோரின் வழிநடத்துதல் குறிப்பாகத் தேவைப்படுகிறது. உங்கள் பிள்ளையின் படிப்பில் ஆர்வம் கொள்ளுங்கள். பள்ளியில் பொருத்தமான பயிற்சிப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கும் கூடுதல் கல்வி தேவைதானா என்பதைக் குறித்ததில் பொறுப்புள்ள தீர்மானத்தை எடுப்பதற்கும் அவனுக்கு உதவுங்கள். a
நிச்சயமாகவே, எல்லாவற்றிலும் மிக முக்கியமான கல்வி ஆவிக்குரிய கல்வியே. (ஏசாயா 54:13) பெரியவர்களின் உலகில் தொடர்ந்து வாழ பிள்ளைகளுக்கு தெய்வீக மதிப்பீடுகள் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றன. அவர்களுடைய ‘பகுத்தறிவதற்கான ஆற்றல்கள்’ பயிற்றுவிக்கப்பட வேண்டும். (எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு) இவ்விஷயத்தில் பிள்ளைகளுக்கு உதவ பெற்றோர் அதிகத்தை செய்யலாம். யெகோவாவின் சாட்சிகளான குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளோடு தவறாமல் பைபிள் படிப்பை நடத்தும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றன. தீமோத்தேயுவின் சிசுப்பருவத்திலிருந்தே வேதவசனங்களை கற்றுக்கொடுத்த அவருடைய தாயின் முன்மாதிரியைப் பின்பற்றி, சாட்சிகளான பெற்றோரும், தங்களுடைய சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.
ஒற்றைத் தாயான பார்பரா குடும்ப பைபிள் படிப்பை தன்னுடைய பிள்ளைகளுக்கு மிக சுவாரஸ்யமான அனுபவமாக ஆக்குகிறார். “அந்தச் சாயங்காலம் பிள்ளைங்களுக்கு நல்ல சாப்பாடும், பிடிச்ச ஸ்வீட்டும் செஞ்சு குடுப்பேன். சரியான சூழ்நிலையை ஏற்படுத்துகிறதுக்காக கிங்டம் மெலடீஸை போடுவேன். அப்புறம், ஜெபத்தோட ஆரம்பிச்சு, பொதுவா காவற்கோபுர பத்திரிகையை படிப்போம். அவசியமேற்பட்டா, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் b போன்ற பிரசுரங்களை பயன்படுத்துவேன்.” பார்பராவின்படி, பைபிளைப் படிப்பதானது “காரியங்களில் யெகோவாவின் நோக்குநிலையை பெற்றுக்கொள்ள” பிள்ளைகளுக்கு உதவுகிறது.
ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அறிவையும், புரிந்துகொள்ளுதலையும் கொடுப்பதைக் காட்டிலும் பிள்ளைக்கு கொடுக்கத்தக்க மிகப்பெரிய பரிசு வேறொன்றும் இல்லை. அது ‘பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கிறது.’ (நீதிமொழிகள் 1:4) இவ்விதம் ஆயுதம் பூண்டவனாக, ஒரு இளைஞன் புதுவிதமான அழுத்தங்களையும் சூழ்நிலைகளையும் சந்திப்பதற்கான தகுதியுடன் வயது வந்தோரின் உலகிற்குள் நுழைகிறான்.
இருந்தபோதிலும், பிள்ளைகள் பிரிந்து செல்வது பெரும்பாலான பெற்றோரின் வாழ்க்கைப்பாணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்களுடைய வெறிச்சோடிப்போன கூட்டில் எப்படி வெற்றிகரமாக சமாளிக்கலாம் என்பதைப் பற்றி எமது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a அக்டோபர் 8, 1989 விழித்தெழு! இதழிலுள்ள “பெற்றோர்களே—உங்களுக்கும் வீட்டுப்பாடம் உண்டு!” என்ற தொடர்க்கட்டுரையைக் காண்க.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“பாசத்தைக் காட்டாத, கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள், பிரயோஜனமான காரியங்கள் உட்பட எந்தவொரு காரியத்தையும் சுயமாக செய்வதற்கு பயப்படுகின்றனர்; தாங்கள் செய்யும் காரியத்தில் பெற்றோர் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து, கேலி செய்வார்களோ, தண்டிப்பார்களோ என்ற பயமே இதற்கு காரணம்.”—மைக்கேல் ஷூல்மென், ஈவா மெக்லர் எழுதிய நல்லொழுக்கமுள்ள பிள்ளையை வளர்த்தல்
[பக்கம் 6-ன் பெட்டி]
ஒற்றைப் பெற்றோர்—பிள்ளைகள் பிரிந்து செல்வதன் சவால்
ஒற்றைத் தாயான ரெபேக்கா குறிப்பிடுகிறார்: “ஒற்றைப் பெற்றோருக்கு பிள்ளைகள் பிரிந்து செல்வதென்பது தாங்க முடியாத விஷயம். நாம ஜாக்கிரதையா இல்லாவிட்டா, அவங்கள மட்டுக்குமீறி பாதுகாத்து, அவங்களோட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருப்போம்.” குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்* என்ற புத்தகம் பக்கங்கள் 106-7-ல் இத்தகைய உதவியளிக்கும் தகவல்களை அளிக்கிறது:
“விசேஷமாக தங்கள் பிள்ளைகளோடு நெருக்கமாய் இருப்பதற்கு ஒற்றைப்பெற்றோர் விரும்புவது இயற்கையானதே, இருப்பினும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கடவுள்-நியமித்திருக்கும் வரம்புகள் முறிந்துபோகாமல் இருக்க கவனமாயிருக்க வேண்டும். உதாரணமாக, தன் மகன் குடும்பத்தலைவனுக்குரிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும்படி ஒற்றைத்தாய் எதிர்பார்த்தால் அல்லது தன் மகளை நம்பிக்கைக்குப் பாத்திரமான சிநேகிதியாக நடத்தி, உள்ளார்ந்த பிரச்சினைகளையெல்லாம் தெரிவித்து பாரமடையச் செய்தால் வினைமையான பிரச்சினைகள் எழும்பக்கூடும். அவ்வாறு செய்வது பொருத்தமற்றதாயும், மனதுக்கு பாரமானதாயும், ஒருவேளை பிள்ளைக்கு அது குழப்பமூட்டுவதாயும் இருக்கும்.
“பெற்றோராக, நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்—பிள்ளைகள் உங்களை கவனித்துக்கொள்வார்கள் என்று அல்ல. (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 12:14.) சில சமயங்களில் உங்களுக்கு ஆலோசனையோ அல்லது ஆதரவோ தேவைப்படலாம். கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்தோ அல்லது ஒருவேளை முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவப் பெண்களிடமிருந்தோ நீங்கள் அதை நாடுங்கள், உங்கள் வயதுவராதப் பிள்ளைகளிடமிருந்து அல்ல.—தீத்து 2:3.” ஒற்றைப் பெற்றோர் சரியான வரம்புகளை நிறுவி, தங்களுடைய பிள்ளைகளோடு சீரான உறவைக்
காத்து வருகையில், அவர்களை பிரிந்து செல்ல விடுவது எளிதாக இருக்கிறது.
உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 14-ன் படம்
நடைமுறை பயிற்சி அதிக பொறுப்புள்ள பெரியவர்களாக வளர பிள்ளைகளுக்கு உதவும்
[பக்கம் 8-ன் படம்]
பெரியவர்களாகையில் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தேவையான ஞானத்தைப் பெற குடும்ப பைபிள் படிப்பு பிள்ளைகளுக்கு உதவும்