ஐடிட்டராடு—பத்து நூற்றாண்டுகளாக ஸ்தாபிக்கப்பட்டது
அலாஸ்காவில் உள்ள விழித்தெழு! நிருபர்
எங்கள் கழுத்தை நீட்டி, நகரத்தின் முக்கியத் தெருவைப் பார்க்கிறோம். காமிராக்களோடும் கருவிகளோடும் நிற்கும் செய்தித்துறையினரோடு, ஜனங்கள் கூட்டமாக இங்கு நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறோம். நாங்கள் அனைவருமே தெருக் கோடிக்கு எங்கள் பார்வையைத் திருப்புகிறோம். அலாஸ்காவிலுள்ள நோம் நகரத்தில், முடிவெல்லைக் கோட்டில், “ஐடிட்டராடு—இறுதி மகா பந்தயத்தில்” வெற்றிவாகை சூடுபவரை முதல் முதலாகக் காண்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
உலகப் பிரசித்திபெற்ற, சுமார் 1,800 கிலோமீட்டர் தூர, பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்ப் பந்தயம் மெய்யாக பத்து நாட்களுக்கு மேல் நடந்தது. போன வருடம் இதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் ஒன்பது நாட்களும் ஒருசில மணிநேரமுமாகும். இப்பந்தயத்தின் முதல் 24 மணிநேரம், ஒரு சடங்காச்சார தொடக்கமாக இருந்ததால், அந்த நேரம் இந்த வருடத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்த்துக்கொள்ளப்படவில்லை. எனவே இந்த இரண்டு நேரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது. வேறு பந்தயங்களில் அனுபவம் வாய்ந்தவர்களையும் உள்ளடக்கிய டஜன்கணக்கான நாய்-ஓட்டிகள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து மும்முரமாக பங்கெடுத்தனர்.
பத்து நாட்களோ அதற்கு அதிகமான நாட்களோ, பெரும்பாலும் ஆள் நடமாட்டமேயில்லாத, தரிசான ஒரு வனாந்தரத்தில் கழிப்பதாக கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் போய்சேர வேண்டிய இடமாகிய நோமை நோக்கி தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போகையில், மலைக் கணவாய்கள்; பனிக்கட்டி இடுக்குகள்; தூந்திரப் பகுதிகள்; அகலமான, உறைந்த ஆற்று நெடுஞ்சாலைகள்; கரடுமுரடான கடல் பனிக்கட்டிகள் ஆகியவற்றைக் கடந்து பிரயாணம் செய்யவேண்டியது மட்டுமல்லாமல், பூஜ்ய டிகிரிக்குக் கீழான குளிர்நிலையையும் சகிக்கவேண்டியிருக்கும்.
தைரியத்தின் வெளிக்காட்டுதலாலும், மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான ஒத்துழைப்பின் இந்த வெளிக்காட்டுதலாலும் தூண்டிவிடப்பட்ட கிளர்ச்சியைக் கவனித்து, ‘இதெல்லாம் எங்குத் தொடங்கிற்று?’ என்று யோசிக்கிறோம்.
நாய் ஓட்டுதலின் பாரம்பரியம்
நாய் ஓட்டுதல் என்று அர்த்தப்படுத்தும் “மஷிங்” என்ற ஆங்கில வார்த்தையும் நாய் ஓட்டி என்று பொருள்படும் “மஷர்” என்ற ஆங்கில வார்த்தையும் எங்கிருந்து வந்தன? கனடாவின் வடமேற்குப் பகுதியில் குடியேற்றம் நடந்துகொண்டிருந்த சமயம் இந்த வார்த்தைகள் தோன்றின. பிரெஞ்சு-கனடாவின் நாயோட்டிகள், “மா-ர்-ஷே!” என்று கத்தினார்கள். இது கனடாவில் குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு, “மஷ்!” என்று சொன்னதைப் போல் ஒலித்தது. இவ்வாறே பின்னர் ஒரு நாயோட்டி ஆங்கிலத்தில் மஷர் என்று அறியப்படலானார்.
நவீன பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்ப் பந்தயம் ஒப்பிடுகையில் புதியதொரு பொழுதுபோக்காக இருந்தாலும், பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்கள் குறைந்தது ஆயிரவருடங்களாவது உபயோகிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில், நாய்களும் பனிச்சறுக்கு வண்டிகளும், பூமியின் வடபகுதியில் பனிபடர்ந்து மற்றும் தரிசாகக் கிடக்கும் நிலப்பரப்பின்மீது முக்கியமாக சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டன. நாய்கள் பனிச்சறுக்கு வண்டியிழுக்க பயன்படுத்தப்பட்டதைப்பற்றி எழுதப்பட்ட முதல் பதிவு பத்தாம் நூற்றாண்டின் அரேபிய இலக்கியங்களில் காணப்படுகிறது. சைபீரியாவிலுள்ள சக்சி மக்கள்தான் முதன்முதல் நாய்களை நம்பியிருந்து, எவ்வளவு தூரமானாலும் பனிச்சறுக்கு வண்டியில் போனார்கள் என்பதாக சில ஆசிரியர்கள் நம்பினர்.
தங்கத்தைக் கண்டுபிடித்ததே ஆரம்பகால பனிச்சறுக்கு வண்டித் தடத்தை அமைப்பதற்கு வழிவகுத்தது. ஆத்தப்பஸ்கன் இந்தியர்கள் மான்களை வேட்டையாடின ஒரு பகுதியில் 1908-ல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பகுதியைத்தான் அவர்கள், “தொலைவிடம்” என்று அர்த்தப்படுத்தும் ஹெய்டிட்டராடு என்றழைத்தனர். இது பின்னர் ஆங்கிலத்தில் மருவி ஐடிட்டராடு என்று ஆனது. இதன் விளைவாக, நோமுக்கு ஐடிட்டராடு நகரம் வழியே கடந்து செல்லும் 1,800 கிலோமீட்டர் தூரமுள்ள ஒரு பாதை அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இது ஐடிட்டராடு தடம் என்றறியப்படலாயிற்று.
அலாஸ்காவிலும் கனடாவிலும் தங்கத்திற்காக ஆட்கள் ஓடி அலைந்து திரிந்தபோது, நாய் பனிச்சறுக்கு வண்டிகள் சாதனங்களையும், கடிதங்களையும், தங்கத்தையும் அடர்ந்த காடுகளினூடே கொண்டு சென்றன. 1911-ன் பிற்பகுதியில், நான்கு நாய் அணிகள் ஐடிட்டராடு தடத்தினூடே 1,200 கிலோகிராம் தங்கத்தை ஒரே முறையில் சுமந்து, 1912, ஜனவரி 10-ம் தேதியன்று அலாஸ்காவின் க்னிக் நகரத்தைச் சென்றடைந்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.
நவீன பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்ப் பந்தயம் தோன்றுகிறது
தங்கத்திற்காக அலைந்த காலப்பகுதியில், அநேக நாயணிகள் ஓட்டத்தில் இருந்ததன் காரணமாக தங்களுடைய அணிதான் அல்லது வழிநடத்தும் நாய்தான் மிகுந்த பலமுள்ளது எனவும் மிகவும் வேகமானது அல்லது புத்திக்கூர்மை உள்ளது என்றும் நாய்க் குத்திகள் என்று அழைக்கப்பட்ட நாயோட்டிகள் சாதாரணமாக நினைத்து வந்தனர். இதன் விளைவாக, அடிக்கடி போட்டிகள் ஏற்பட்டன. பிறகு, நோமில், 1908-ம் ஆண்டு, முதன்முதலாக ஒழுங்கமைக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்ப் பந்தயம், அதாவது அனைத்து அலாஸ்கா சவாரிப் பந்தயம் நடத்தப்பட்டது. நவீன பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்ப் பந்தயத்தின் முன்னோடியாகிய இது, நாயோட்டிகளை மற்றொரு பந்தயத்திற்குத் தயார்செய்தது—தங்கப் பரிசைப் பெறுவதற்கல்ல ஆனால் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு.
1925 நோம் நிணநீர் சவாரி
வரலாற்றுப் புகழ்பெற்ற நோம் நிணநீர் சவாரியானது மரணத்திற்கு எதிரான ஒரு பனிச்சறுக்கு நாய்ப் பந்தயமாக இருந்தது. ஜனவரி 1925-ல் நோமில் தொண்டை அடைப்பான் நோய் (diphtheria) தோன்றியது. அது கொள்ளைநோயாக மாறிவிடுமோ என்ற பயம் நிலவியிருந்ததால், நோமிற்கு உடனடியாக நிணநீர் சப்ளை வந்தடைய வேண்டியதாய் இருந்தது. 20 நாயோட்டிகளையும் அவர்களுடைய அணிகளையும் கொண்ட ஒரு தொடர் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் அணி மைனஸ் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியிருந்த நீனான என்ற ஊரிலிருந்து கிளம்பிற்று. இவ்வாறு சாதாரணமாக 50 முதல் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கிராமங்களுக்கு இடையே தொடர் சவாரிகள் தொடங்கப்பட்டன. அவ்வருடத்தில் அச்சமயம் ஆர்க்டிக் பிரதேசத்தில் பகல் நேரம் மூன்று முதல் நான்கு மணிநேரம் மாத்திரமே இருக்கிறபடியால் பெரும்பாலான இந்தச் சவாரிகள் இருட்டில் நடத்தப்பட்டன.
1,080 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருந்த நோம் 5 1/3 நாட்களில் சென்றடையப்பட்டது. இதே பயணத்திற்கு சாதாரணமாக 25 நாட்கள் தேவைப்படும். அந்த நாயோட்டிகள் காற்றைக் குளிர்விக்கும் காரணிகளாகிய மைனஸ் 57 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழான வெப்பநிலையில் கடுமையாக வீசும் உறைபனிப்புயல்களினூடே ஓட்டிச் சென்றனர். இந்தச் சாகசம் அவ்வளவு பெரியதாக இருந்ததனால், இதில் பங்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் ஐ.மா.-வின் ஜனாதிபதி கால்வின் கூலிடிஜ் ஒரு பதக்கமும் சான்றிதழும் அளித்தார்.
வழிநடத்தும் நாய்கள்
ஒரு அணியில் வழிநடத்தும் நாய் மிக முக்கியமானது. வெகுசில நாய்கள் மட்டுமே வழிநடத்தும் நாயாக தகுதிபெறுகின்றன. ஒரு அணியில் இருக்கும் நாய்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல், வழிநடத்தும் நாயானது நாயோட்டியிலிருந்து 15 முதல் 20 மீட்டர் தூரத்திலோ அல்லது அதைவிட அதிகமான தூரத்திலோகூட இருக்கலாம் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். இரவு நேரங்களிலோ பனியினால் காணமுடியாமல் போகும் வேளைகளிலோ அல்லது திருப்பங்களில் திரும்பும்போதோ வழிநடத்தும் நாய், நாயோட்டியின் கண்ணுக்குத் தென்படாமலே இருக்கலாம். ஆகவே, தனது எஜமானின் உதவியின்றியே, அந்தத் தடத்தை மோப்பம் பிடித்து சரியாக அத்தடத்தில் போவது அல்லது மிகப் பாதுகாப்பான தடத்தைத் தெரிந்தெடுப்பதும் ஒவ்வொரு கணமும் மற்ற தெரிவுகளைச் செய்வதும் இந்த நாயின் பொறுப்பாகும்.
கடந்த வருடம் அதற்கு முந்தின வருட பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றவராகிய, அலாஸ்காவைச் சேர்ந்த நாயோட்டி டீடீ ஜான்ரோ, மிகவும் நம்பகரமான தனது வழிநடத்தும் நாயாகிய பார்க்ளியை நிறுத்திவிட வேண்டியதாயிற்று. அது அவருடைய அணிக்கு ஒரு பலத்த அடியாக இருந்தது. இரண்டு வருடங்களுக்குமுன், பத்துமுறை ஐடிட்டராடு பந்தயத்தில் பங்குகொண்ட நாயோட்டி லேவன் பர்வ், நோமுக்கு 369 கிலோமீட்டருக்கு முன்னதாகவே நின்றுவிட்டார். இதற்குக் காரணம் தனது அனுபவமற்ற இரண்டு வழிநடத்தும் நாய்களுக்கு கத்தி கத்தி கட்டளைகளைக் கொடுத்து அவருக்குத் தொண்டை கட்டிப்போய்விட்டது.
வழிநடத்தும் நாய்களைப் புகழுவதுதானே அந்த நாயோட்டி தனது அணியை வழிநடத்த ஒன்றும் செய்வதில்லை என்று அர்த்தப்படுத்தாது. ஆனால் மறுபட்சத்தில், “ஜீ” (வலது), “ஹா” (இடது), அல்லது “உவா” (நில்), என்று சத்தம்போட்டு கட்டளைகளை கொடுப்பதன்மூலம் அவன் முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறான். பழங்காலத்து “நாயோட்டுதல்” பொதுவாகவே சாதாரணமான கால்பந்தாட்ட பதங்களாகிய “நட” அல்லது வெறுமனே “போகலாம்” போன்றவற்றால் மாற்றீடு செய்யப்படுகின்றன. இவையும் இவற்றைப் போன்ற வார்த்தைகளும் அணியை இயங்கச் செய்து அதன் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. அத்தகைய கட்டளைகள், அதைவிட பலனளிக்கும் ஒரு பனிக் கொக்கியோடு சேர்ந்து வழக்கமாக அணியை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. இந்தப் பனிக்கொக்கியானது அதிக ஆர்வமாயிருக்கும் நாய்கள் அவற்றிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன் புறப்படுவதைத் தடைசெய்ய பனியில் குத்திவைக்கப்படும் ஒருவித நங்கூரமாகும்.
“வழக்கமாக” என்ற வார்த்தை இங்கு உபயோகிக்கப்படுகிறது. காரணம் மினிசோடாவைச் சேர்ந்த மார்க் நார்ட்மன் வழிநடத்தும் நாயின் நம்பகத்தைப் பற்றியோ அல்லது கட்டளைகளுக்கு அணி பிரதிபலிப்பதைப் பற்றியோ ஒருவேளை சுருக்கமாக வாதாடலாம். சமீப பந்தயம் ஒன்றில், முடிவெல்லையை சென்றெட்டுவதற்கு சற்றுமுன், சிக்கு மாட்டிக்கொண்ட சில கயிறுகளை நேராக்கிவிட தன்னுடைய அணியை நிறுத்தினார். சிக்கைப் பிரித்துவிட்டுக் கொண்டிருக்கும்போது, நாய்கள் தங்கள் கயிறுகளை சிக்கு மாட்டவைத்து, ஒவ்வொரு நாயும் இணைக்கப்பட்டிருப்பதும், பனிச்சறுக்கு வண்டியிலிருந்து வரும் உலோகக் கம்பியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருப்பதுமான முக்கிய கயிறை விடுவித்துக் கொண்டு, அந்த நாய்கள் ஓட ஆரம்பித்தன. அணியானது பனிச்சறுக்கு வண்டியிலிருந்து தூரமாக விலகியோடிக்கொண்டிருக்கையில் மார்க் தாவிக் குதித்து கடைசி நாய்கள் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை எட்டிப் பிடித்தார். (வனாந்தரத்தில் உங்கள் அணியை இழப்பதானது மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாக இருக்கிறது.) அடுத்த அரை கிலோமீட்டர் தூரத்திற்கு, அவர் பனிவாரியாகவும் தண்ணீர் சறுக்கு விளையாடுபவனைப் போலவும், காற்றினால் ஒதுக்கிக் குவிக்கப்பட்ட பனிகளினூடேயும் வழிந்தோடும் ஆற்றுத் தண்ணீரினூடேயும் தன்னுடைய அணியால் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டார். தன்னுடைய அணிக்குப் பின்னால் சறுக்கிச் சென்றுகொண்டிருக்கையில் தனது மேலாடையில் தண்ணீர் வாரப்பட்டது மற்றும் தாடைக்குக்கீழ் பனிக்கட்டி சேர்ந்தது, இவ்வளவு நேரமும் நிற்கும்படி உரக்கக் கத்தி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் நாய்கள் செவிசாய்த்தன, அவரும் பின்னாலே விட்டுவந்த பனிச்சறுக்கு வண்டியை திரும்ப கொண்டுவர வந்த வழியே நடந்தார். இவ்வளவும், அந்தச் சமயத்தில், வழிநடத்தும் நாய்களின் கீழ்ப்படியாமையினால் வந்த வினை!
இருந்தபோதிலும், வழிநடத்தும் நாயின் நம்பகத்தன்மையினால் சந்தோஷமான காரியங்கள் நடக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. ஐடிட்டராடின்போது, தூக்கம் மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றாக இருக்கிறது. தடமானது நேரானதும் சமமானதுமாக இருக்கும் சமயத்தில் அவ்வப்போது நாயோட்டி அணியை வழிநடத்தும் நாயிடத்தில் ஒப்படைத்துவிட்டு பனிச்சறுக்கு வண்டியில் சிறிது நேரம் தூங்குகிறான். அவன் தூங்கும் நேரமெல்லாம், அந்த நாய்கள் சென்றடையவேண்டிய இடமாகிய நோமை நோக்கி சுறுசுறுப்பான வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றன.
சிலசமயங்களில், ஒரு நல்ல தடத்தில் அணி ஒன்று தவ்வுநடை போட்டால் மணிக்கு 18 முதல் 19 கிலோமீட்டர் வேகத்தில் சுலபமாக நடக்கலாம் அல்லது லேகமாக ஓடினால் சிறிது நேரத்திற்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் ஓடலாம். சராசரி வேகம் மிகக் குறைவுதான், ஆனால் பெரும்பாலும் நாளொன்றுக்கு 160 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்கிறது. பந்தயத்தில் முதலிடம் பெற்ற ஒரு அணி பத்துநாள் ஓட்டம் முழுவதிலும் ஒரு மணிநேரத்திற்கு சுமார் ஏழு கிலோமீட்டர் வீதத்தில் கடந்தது.
அலாஸ்காவின் பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்
இந்தப் பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்கள் கொடூரமாக நடத்தப்படுகின்றன அல்லவா, மனிதனின் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன அல்லவா என்று சிலர் யோசிக்கின்றனர். அவ்வப்போது மனிதன் விலங்குகளை துர்ப்பிரயோகப்படுத்தி இருப்பதைப் பார்க்கும்போது, இவ்வாறு அக்கறை காண்பிப்பது ஒன்றும் நியாயமற்றதாக ஆகிவிடாது.
பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்கள் பந்தயத்தின் தொடக்கக் கோட்டில் இருக்கும்போது குரைக்கும் ஏகப்பட்ட குரைத்தலைப் பார்த்தால் தங்களுடைய வேலையை ஆர்வத்துடன் எடுத்துச் செய்வதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு நாயும் தடத்தில் ஓடுவதற்கான ஆசையைத் தெரிவிக்கும் குரல் கொடுப்பதாகத் தெரிகிறது. பத்து நாய்களைக் கொண்ட ஒரு அணி தங்களுடைய முழு பலத்தையும் கூட்டி தங்களோடு கட்டப்பட்டிருந்த ஒரு ட்ரக்கை, அதுவும் கியரில் கிடந்து பிரேக்கும் போடப்பட்டு இருந்த ட்ரக்கை இழுத்துக்கொண்டு போகுமளவுக்கு சில நாய்கள் ஆர்வம் நிறைந்தவையாய் இருக்கின்றன!
நாயோட்டிகள் தங்களுடைய நாய்களின் நலத்தை மிகவும் கண்ணும்கருத்துமாக பேணுகின்றனர். நிறுத்தங்களில், நாய்களுக்கு உணவு தயாரித்தல், அவற்றின் பனிப் படர்ந்த படுக்கைகளில் அவற்றைப் போர்த்துவதற்கு வைக்கோலைப் பரப்புதல், அவற்றின் கால்களைப் பாதுகாத்த காலணிகளை சரிபார்த்தல், கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால் அவற்றிற்கு மருத்துவம் பார்த்தல் போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஐடிட்டராடில் இருக்கும் நாயோட்டிகளுக்கு எப்போதாவது ஒரு சமயத்தில் ஒன்றரை முதல் இரண்டு மணிநேர ஓய்வு கிடைக்கலாம். இருப்பினும், கட்டாயமாக நிறுத்தப்படவேண்டிய 24 மணிநேர நிறுத்தமொன்றில் நாயோட்டிகளுக்கு ஆறு அல்லது ஏழு மணிநேர ஓய்வு கிடைக்கலாம். சந்தோஷகரமாக நாய்களுக்கு நாயோட்டியைவிட அதிக ஓய்வு கிடைக்கிறது.
நாயோட்டியின் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலான நியமம் என்னவென்றால், ஒரு நாய் தன்னுடைய எடைக்கு கூடுதலான பாரத்தை இழுக்கக்கூடாது என்பதே. சாதாரண ஐடிட்டராடு பனிச்சறுக்கு வண்டி நாயோட்டியையும் சேர்த்து, 140 முதல் 230 கிலோகிராம் எடையுள்ளதாய் இருக்கிறது. ஒரு பந்தயக்காரரின் அணியில் 15 நாய்கள் இருக்குமானால், ஒவ்வொன்றும் சுமார் 15 கிலோகிராமோ அதற்குக் குறைவான எடையையோ, அதாவது நாயின் சராசரி எடையான 25-கிலோகிராமுக்கு மிகக் குறைவாகவே இழுக்கின்றன. அதுமட்டுமல்லாமல், ஓட்டத்தின் பெரும்பகுதியில் அந்த நாயோட்டி அந்தப் பனிச்சறுக்கு வண்டியில் சவாரி செய்வதில்லை. அதற்குப் பதிலாக, ஏற்றத்திலோ கரடுமுரடான பாதையிலோ இழுப்பதை இலகுவாக்க உதவுவதற்கு அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறான்.
இருந்தபோதிலும், நாயோட்டிகள் தங்களுடைய நாய்களை எவ்வளவுதான் பேணிக்காத்தாலும், இந்தப் பந்தயங்கள் நாய்களில் சிலவற்றுக்கு சேதம் விளைவிக்கின்றன என்பதாக சொல்கிறவர்களும் உள்ளனர். சில நாய்களால் பந்தயத்தை ஓடி முடிக்கமுடியவில்லை என்பதாகவும், இடைவிடாமல் மிகவும் கடினமாக தள்ளிவிடுவதால் சில நாய்கள் இறந்தும்கூட போய்விடுகின்றன என்பதாகவும் ஹ்யூமேன் சொஸைட்டி ஆஃப் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் உறுதியோடு கூறியதாக தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளுக்கு வந்திருந்த கடிதம் ஒன்று சொன்னது. பந்தயங்களுக்கு ஆதாரமளிக்கும் நிறுவனங்களால் கொடுக்கப்படக்கூடிய பெருந்தொகையான பரிசுப் பணமே பெரும்பாலும் இதற்குக் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது.
நான்கு வகை நாய்கள்
சீரான வேகத்தில் செல்லமுடிந்ததும் அதை அனுபவிப்பதுமான வகை நாய் எது? இழுப்பதற்குப் பயிற்சியளிக்கப்பட்ட எந்த நாயுமே பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாயாக இருக்கமுடியும். ஆனால் பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய் உலகம் என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியை, லார்னா காப்பிஞ்கர் சொல்லுகிறபடி, பந்தயத்தில் பங்கெடுக்கும் பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய் பொதுவாக நான்கு முக்கிய வகைகளில் ஏதாவதொரு வகையாகவே இருக்கிறது: அலாஸ்கன் மேலம்யூட், சைபீரியன் ஹஸ்கி, அலாஸ்கன் ஹஸ்கி, அல்லது கிராம நாய், அல்லது இண்டியன் நாய் ஆகியவையாகும்.
1) அலாஸ்கன் மேலம்யூட் ஆர்க்டிக் பிரதேசத்திற்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த கலப்பினமாக இருக்கிறது. ரஷ்ய கடல்பயண ஆராய்ச்சியாளர்கள் கோட்ஸ்பு கடற்கால் பகுதியைச் சேர்ந்த இன்யவட் பழங்குடியினரிடம் இந்த மேலம்யூட்டைக் கண்டனர். இப்பழங்குடியினர் அப்போது மாலம்யூட் அல்லது மாலெமியூட் என்றழைக்கப்பட்டனர். இந்த நாய் உரம்வாய்ந்த உடலமைப்பை உடையதும் மிகுந்த வலிமை உடையதுமாக இருக்கிறது. தங்கத்திற்காக அலைந்து திரிந்த காலத்தின்போது அதிக பாரத்தைச் சுமந்துசெல்ல இது மிகச் சிறந்ததாக நிரூபித்தது. இதன் குறைந்த வேகமானது இதற்கிருக்கும் பேராற்றலினாலும் சகிப்புத் தன்மையினாலும் ஈடுகட்டப்படுகிறது.
2) பெரும்பாலும் கவர்ச்சியற்ற நீலநிற கண்களை உடைய சைபீரியன் ஹஸ்கி, அதைப்போலவே ஒரு கலப்பினமாகக் கருதப்படுகிறது. இது உடலமைப்பில் சிறியதாகவும், புத்திக்கூர்மை உடையதாகவும், வேகமாக ஓடக்கூடியதும் தனித்தன்மை வாய்ந்த சுபாவங்களை உடையதாகவும் இருக்கிறது. இது 1909-ல் ரோமம் விற்கும் ஒரு ரஷ்யரால் அலாஸ்காவிற்கு முதன்முதலாக கொண்டுவரப்பட்டது. இவர் இரண்டாவது அனைத்து அலாஸ்கா சவாரிப் பந்தயத்தில் பத்து சைபீரியன் ஹஸ்கியைக்கொண்ட தனது அணியைப் பங்கெடுக்க வைத்தார்.
3) அலாஸ்கன் ஹஸ்கி ஒரு கலப்பினமாகக் கருதப்படுவது கிடையாது, ஆனால் தனித்தன்மை வாய்ந்த தனக்கே உரித்தான பல்வேறு பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இது வடபகுதியில் உள்ள நாய்களின் ஒரு கலப்பாகும். எஸ்கிமோ என்பதற்கான—ஹஸ்கி என்ற “பச்சை இறைச்சி தின்னி” என்ற அர்த்தமுடைய வார்த்தையிலிருந்து தனது பெயரைப் பெற்றது. இந்தப் பெயர் ஒன்றும் பொருத்தமற்றது கிடையாது. ஏனென்றால், வடபகுதியில் உள்ள நாயோட்டிகள் கடந்த காலத்தில் தங்களுடைய அணிகளுக்கு தீனி கொடுக்க கருவாட்டின்மீது வெகுவாக சார்ந்திருந்தனர்.
4) அலாஸ்காவின் பனிச்சறுக்கு வண்டியிழுப்பு பந்தயத்திற்கு இன்று சாதாரணமாக பயன்படுத்தப்படும் இண்டியன் நாய் அல்லது கிராம நாய் அடிக்கடி எந்த வகையையும் சேராததாய் இருக்கிறது. அது வளரும் கிராமப் பகுதியில் கிடைக்கும் மரபணுக் குழுமங்களில் பல வருடங்களாக தெரிந்தெடுத்து இனப்பெருக்கம் நடத்தியதன் விளைவே ஆகும். இந்த நாயால் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடும். ஆகவே 30-கிலோமீட்டர் ஓட்டத்தை மணிக்கு 27 கிலோமீட்டர் வேகத்தைவிட வேகமாக ஓடிமுடித்துவிட்ட பிறகும், அடுத்த நாளின் ஓட்டத்தை மிக ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருப்பதற்கு போதுமான சக்தியும் இதற்கு இருக்கிறது. மற்றவர்களுக்கு கவர்ச்சியற்றதாக தோன்றினாலும், தகுந்தமுறையில் நடக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், நாயோட்டிக்கு அழகாகத் தோன்றுகிறது.
முடிவுநிலை
வெற்றி பெறும் அணி வந்துசேர்ந்ததும் ஐடிட்டராடு முடிவடைவதில்லை. அதிகாரப்பூர்வமாக பந்தயம் முடிவடைந்து முடிவுநிலைக் கோட்டைக் கடக்கும் கடைசி நாயோட்டிக்கு சிகப்பு லாந்தர் பரிசளிக்க இன்னும் எட்டு அல்லது பத்து நாட்களாகும். சிகப்பு லாந்தர் சின்னமானது ரயில் வண்டியின் நாட்களில், ரயில் வண்டியின் கடைசியில் அல்லது கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் புகைவண்டி காவலர் பெட்டியில் தொங்கவிட்டிருக்கும் சிகப்பு லாந்தர் விளக்கிலிருந்து இந்தக் கருத்து பெறப்பட்டிருக்கிறது.
ஐடிட்டராடைப்பற்றி சிந்திக்கும்போது, மனிதனும் நாயும் கரடுமுரடான தடத்தில் மனிதர் வாழ்வதற்கு ஒவ்வாத காலநிலையில் 1,800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பிரயாணம் செய்ய உதவிசெய்கிற அவர்களுக்கிடையிலான ஒன்றுபட்ட ஒத்துழைப்பு எங்களுடைய மனதில் பதிவதாய் இருந்தது. எனினும் சில அணிகள் இப்பிரயாணத்தை சுமார் பத்தரை நாட்களில் முடிக்கின்றன. இத்தகைய சாகசத்தைச் செய்து முடிப்பதற்கு உதவியாக கடவுள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் கொடுத்த உடல் வலிமையும் புத்திக்கூர்மையும்கூட எங்களைக் கவர்ந்தன.