என்றென்றும் வாழ வடிவமைக்கப்பட்டிருக்கிறது
மனித உடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது உருப்பெறுதலும் வளர்ச்சியும் உண்மையிலேயே ஓர் அதிசயம்தான். பண்டைய எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு வியந்துரைத்தார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன்.’ (சங்கீதம் 139:14) மனித உடலின் அற்புதங்களை முழுவதும் அறிந்தவர்களாக, சில நவீன விஞ்ஞானிகள் மூப்பையும் மரணத்தையும் ஒரு புதிராக காண்கிறார்கள். நீங்களுமா?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுநர் ஸ்டீவன் ஆஸ்டட் எழுதினார்: “மூப்பு நம்மை அவ்வளவு தொடர்ச்சியாக எதிர்ப்படுவதால், அதை உயிரியலின் ஒரு முக்கிய மர்மமாக அநேக மக்கள் உணராதிருப்பது குறித்து நான் ஆச்சரியமடைகிறேன்.” அனைவரும் மூப்படைகிற உண்மையானது, “[மூப்படைதல்] சற்றே குழப்பமடைய செய்வதாகத் தோன்றுகிறது,” என்று ஆஸ்டட் குறிப்பிட்டார். இருப்பினும், நீங்கள் உண்மையிலேயே அதைப்பற்றி யோசிக்கும்போது, மூப்படைதலும் மரணமும் அறிவுக்கேற்றதாக இருக்கின்றனவா?
சென்றாண்டு, எப்படி மற்றும் ஏன் நாம் மூப்படைகிறோம் (ஆங்கிலம்) என்னும் தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் லெனர்டு ஹேஃபிளிக், மனித உயிரையும் அதன் வளர்ச்சியையும் பற்றிய அற்புதங்களை ஒத்துக்கொண்டு, அவர் எழுதினார்: “நம்மை கருவுறுதலிலிருந்து பிறப்புக்கும், பிறகு பாலியல் முதிர்ச்சிக்கும் மற்றும் பருவமடைதலுக்கும் கொண்டுசெல்கின்ற அற்புதங்கள் நிகழ்ந்த பின்னர், இந்த அற்புதங்களை வெறுமனே என்றென்றும் தக்கவைத்துக்கொள்ள, மூப்பை நிறுத்தும் மிகவும் எளிய இயந்திர அமைப்பாகத் தோன்றுவதை உருவாக்க, இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. இந்த உட்பார்வைதான் பத்தாண்டுகளாக உயிர் மூப்பியல் மருத்துவர்களைக் [மூப்படைதலின் உயிரியல் அம்சங்களை ஆய்வுசெய்வோரைக்] குழப்பியது.”
மூப்படைதலாலும் மரணத்தாலும் நீங்கள் குழப்பமடைகிறீர்களா? அவை என்ன நோக்கங்களைச் சேவிக்கின்றன? ஹேஃபிளிக் கவனித்ததாவது: “கருவுறுதல் முதற்கொண்டு முதிர்ச்சியடைதல்வரை கிட்டத்தட்ட அனைத்து உயிரியல் நிகழ்ச்சிகளும் ஒரு நோக்கத்தை உடையதாகத் தோன்றுகின்றன, ஆனால் மூப்படைதல் நோக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏன் மூப்படைதல் நிகழ்கிறது என்பது தெளிவாக இல்லை. மூப்படைதலின் உயிரியலைப்பற்றி நாம் அதிகம் கற்றுக்கொண்டபோதிலும் . . . , நோக்கமில்லாத மூப்பின் தடுக்கமுடியாத விளைவையும் அதனைப் பின்தொடர்ந்து வரும் மரணத்தையும் நாம் இன்னும் எதிர்ப்படுகிறோம்.”
மூப்படைவதற்கும் மரிப்பதற்கும் அல்ல, ஆனால் பூமியில் என்றென்றும் வாழ்வதற்காக நாம் உருவாக்கப்பட்டோம் என்பது சாத்தியமா?
வாழ்வதற்கான ஆவல்
கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் மூப்படைவதையும் மரிப்பதையும் வெறுக்கிறார்கள் என்பதை நிச்சயமாகவே நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பார்க்கப்போனால், அந்த வருங்கால நிகழ்வுக்குப் பலர் பயப்படுகிறார்கள். நாம் எப்படி மரிக்கிறோம் (ஆங்கிலம்) என்னும் தன்னுடைய புத்தகத்தில், மருத்துவ டாக்டர் ஷெர்வன் பி. நூலண்டு எழுதினார்: “ஒன்றுமில்லாமலோ வெறுமையாகவோ—வெறுமனே ஒன்றுமில்லாமல்—இருக்கும் நிரந்தரமான உணர்வற்ற ஒரு நிலை என்ற கருத்துடன், நாமே மரித்துவிட்ட நிலை என்ற எண்ணத்தை நம்மில் எவரும் மனரீதியில் சமாளிக்க முடிந்திருப்பதாகத் தோன்றவில்லை.” மூப்படைய, நோயுற மற்றும் மரித்துப்போக விரும்பும் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?
ஆயினும், மூப்பும் மரணமும் இயற்கையானதாகவும் பெருந்திட்டத்தின் பாகமாகவும் இருக்கிறது என்றால் நாம் அவற்றை வரவேற்க மாட்டோமா? நாம் வரவேற்பதே இல்லை. ஏன்? விடையானது நாம் உருவாக்கப்பட்ட விதத்தில் காணப்படுகிறது. பைபிள் சொல்கிறது: “[கடவுள்] நித்தியகால நினைவையும் அவர்கள் [நம்] உள்ளத்திலே வைத்திருக்கிறார்.” (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு) இந்த முடிவில்லா எதிர்காலத்தின் ஆவல் காரணமாக, இளமையின் ஊற்று என்று அழைக்கப்பட்டதை ஆட்கள் நெடுநாளாய் தேடியிருந்திருக்கிறார்கள். என்றென்றும் இளமையாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். நீண்டநாள் வாழ்க்கைக்கான திறனை நாம் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
தானாகவே பழுதுபார்க்க வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இயற்கை வரலாறு (ஆங்கிலம்) பத்திரிகைக்கு எழுதும்போது, உயிரியல் வல்லுநர் ஆஸ்டட் பொதுவான கருத்தை முன்வைத்தார்: “இயந்திரங்களை நாம் நினைக்கும் அதே ரீதியில் நம்மையும் மற்ற மிருகங்களையும் இயல்பாய் நினைக்கிறோம்: தேய்மானம் வெறுமனே தவிர்க்க முடியாதது.” ஆனால் இது உண்மை அல்ல. “அடிப்படையில் உயிரியல் உறுப்புக்கள் இயந்திரங்களிலிருந்து வித்தியாசமானவை. அவை சுயமாக பழுதுபார்ப்பவை: காயங்கள் ஆறும், எலும்புகள் சீராகும், நோய்கள் பறந்துவிடும்,” என்று ஆஸ்டட் கூறினார்.
எனவே, ஏன் நாம் மூப்படைகிறோம்? என்பது அக்கறையை ஈர்க்கும் கேள்வியாக இருக்கிறது. ஆஸ்டட் கேட்டது போலவே: “பிறகு, ஏன் இயந்திரங்களைப் போலவே, [உயிரியல் உறுப்புக்களும்] அதே தேய்மானத்திற்கு இலக்காக வேண்டும்?” உடல்சார்ந்த திசுக்கள் தாமாகவே மாற்றீடு செய்வதால், அதை என்றென்றும் தொடர்ந்து செய்ய அவற்றால் முடியாதா?
கண்டுபிடிப்பு (ஆங்கிலம்) பத்திரிகையில், உடல் உறுப்புக்கள் தாமாகவே பழுதுபார்க்கும் அற்புதத் திறனை பரிணாம உயிரியல் வல்லுநர் ஜார்ரட் டைமண்ட் விவாதித்தார். அவர் எழுதினார்: “காயம் ஆறுவது நம் உடலுக்குப் பொருத்தப்படும் சேத கட்டுப்பாட்டின் மிகவும் காணக்கூடிய அளவிலான உதாரணமாகும், அதன் மூலம் நம் தோலின் சேதத்தை நாம் பழுதுபார்க்கிறோம். பல மிருகங்கள் நம்மைக் காட்டிலும் இன்னும் அதிக பிரமிப்பூட்டும் விளைவுகளை அடையக்கூடும்: பல்லிகள் அறுபட்ட வால்களையும், நட்சத்திர மீனும் நண்டுகளும் தங்களுடைய கைகால் உறுப்புக்களையும் கடல் கீயுகம்பர்கள் தங்கள் குடல்களையும் மீண்டும் உருவாக்க இயலும்.”
பற்களை மாற்றீடு செய்வதை குறித்து டைமண்ட் குறிப்பிட்டார்: “தங்கள் வாழ்நாளில், மனிதர்கள் இரண்டு தடவையும், யானைகள் ஆறு தடவையும் சுறாக்கள் எண்ணற்ற தடவையும் மாற்றீடு செய்கின்றன.” பிறகு அவர் விளக்கினார்: “நுண்ணிய அளவிலும் மாற்றீடு செய்தல் சீராக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. நம் குடலில் பரவியுள்ள செல்களை சில தினங்களுக்கு ஒருமுறையும் சிறுநீர்ப்பையில் பரவியுள்ளவையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும் நமது இரத்த சிகப்பணுக்களை நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் நாம் மாற்றீடு செய்கிறோம்.
“மூலக்கூறு மட்டத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட புரதத்தினுடைய விசேஷித்த தன்மையின் விகிதத்தில், நம் புரத மூலக்கூறுகள் தொடர்ச்சியான சுழற்சிக்கு உட்படுகின்றன; அதன்மூலம் சேதமடைந்த மூலக்கூறுகள் படிப்படியாக சேருவதை நாம் தவிர்க்கிறோம். இவ்வாறாக, ஒருவேளை உங்கள் அருமையானவரின் இன்றைய தோற்றத்தை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடுவீர்களானால், அவர் அல்லது அவர்கள் அதேபோல் காணக்கூடும், ஆனால் அந்த அருமையான உடலை உருவாக்கிய பல தனித்தனி மூலக்கூறுகள் வெவ்வேறானவை. அரசனின் அனைத்து குதிரைப்படைகளும் ஆட்களும் ஹம்டி டம்ட்டியை மீண்டும் ஒன்றாக இணைக்க முடியாதபோது, இயற்கை நம்மை ஒவ்வொரு நாளும் தனியே பிரித்து மறுபடியும் ஒன்றாக இணைக்கிறது.”
உடலின் அநேக செல்கள் புதிதாக உருவாகிய செல்கள் மூலம் காலாகாலத்தில் மாற்றீடு செய்யப்படுகின்றன. ஆனால் மூளையின் நியூரான் போன்ற சில செல்களை ஒருவேளை ஒருபோதுமே மாற்றீடு செய்யமுடியாது. ஆயினும், ஹேஃபிளிக் விளக்கினார்: “ஒருவேளை செல்லின் ஒவ்வொரு பாகமும் மாற்றீடு செய்யப்பட்டிருக்குமானால், அது அதே பழைய செல் கிடையாது. நீங்கள் பிறந்தபோது இருந்த நியூரான்கள் இன்றும் ஒரேவிதமான செல்களாக ஒருவேளை தோன்றலாம், ஆனால் உண்மையில் நீங்கள் பிறந்தபோது அவற்றை உருவாக்கிய பல மூலக்கூறுகள் . . . புதிய மூலக்கூறுகளால் ஒருவேளை மாற்றீடு செய்யப்பட்டிருக்கலாம். ஆகவே, எப்படியிருப்பினும் பிரியாத செல்கள், உங்கள் பிறப்பிலேயே கொண்டிருந்த அதே செல்களாக ஒருவேளை இருக்காது!” இது ஏனென்றால் செல்களின் பாகங்கள் மாற்றீடு செய்யப்படுகின்றன. இவ்வாறாக, உடல் மூலப்பொருள்களின் மாற்றீடானது கோட்பாட்டு ரீதியில் நம்மை என்றென்றும் உயிருடன் வைத்திருக்கும்!
டாக்டர் ஹேஃபிளிக் கூறிய ‘நம்மை கருவுறுதலிலிருந்து பிறப்பு வரை கொண்டு செல்லும் அற்புதங்களை,’ நினைவுகூருங்கள். அவற்றில் சில யாவை? நாம் அவற்றை சுருக்கமாக ஆராயும்போது, அவர் ‘வெறுமனே அந்த அற்புதங்களை என்றென்றும் தக்கவைத்துக்கொள்ள, மிகவும் எளிய இயந்திர அமைப்பு,’ என்று கூறியதை நடைமுறையாக்கும் சாத்தியத்தை கவனியுங்கள்.
செல்
ஒரு முழு வளர்ச்சியடைந்த நபர் சுமார் ஒரு கோடி கோடி செல்களை தன்னகத்தே கொண்டவர், அவற்றில் ஒவ்வொன்றும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சிக்கலானவை. இதன் சிக்கலான தன்மையைச் சித்தரிப்பதற்காக, நியூஸ்வீக் என்ற பத்திரிகை செல்லை, ஒரு மதிலால் சூழப்பட்ட நகரத்திற்கு ஒப்பிட்டது. “மின் நிலையங்கள் செல்லின் சக்தியை உற்பத்தி செய்கின்றன. புரதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் முக்கியமான இரசாயன வாணிபப் பிரிவுகளாகும். சிக்கலான போக்குவரத்து அமைப்புகள் குறிப்பிட்ட இரசாயனப் பொருட்களை செல்லிற்குள்ளேயும் அதற்கு வெளியேயும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்கு வழிநடத்துகின்றன. வழியடைப்புகளில் இருக்கும் காவலாளிகள் ஏற்றுமதி இறக்குமதி சந்தைகளை கட்டுப்படுத்துகின்றனர் மற்றும் வெளியிலிருந்து வரும் அபாய சின்னங்களை எச்சரிக்கின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட உயிரியல் படைகள் அத்துமீறி நுழைபவர்களை இறுகப்பிடிப்பதற்காகத் தயார்நிலையில் நிற்கின்றன. மையப்படுத்தப்பட்ட ஒரு மரபியல் அரசாங்கம் ஒழுங்கை பராமரிக்கிறது,” என்று அந்தப் பத்திரிகை கூறியது.
உங்களுடைய சுமார் ஒரு கோடி கோடி செல்கள் எவ்வாறு வந்தன என்பதை கவனியுங்கள். உங்கள் அப்பாவிடமிருந்து விந்து உங்கள் அம்மாவிடமிருந்த முட்டை செல்லுடன் இணையும்போது உருவான ஓர் ஒற்றை செல்லாக நீங்கள் ஆரம்பமானீர்கள். அந்த இணைப்பின்போது, பிற்பட்டு நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அவராக ஆன, முற்றிலும் புதிய மற்றும் பிரத்தியேக மனிதனை உருவாக்க, அந்தப் புதிதாக உருவாகிய செல்லின் டிஎன்ஏ-விற்குள்ளே (டி ஆக்ஸி ரிப்போநியூக்ளிக் அமிலத்தின் சுருக்கம்) திட்டங்கள் வரையப்பட்டன. டிஎன்ஏ-விலுள்ள ஆணைகளை “எழுத்தில் வடித்தால் 600-பக்கங்களைக் கொண்ட ஓராயிரம் புத்தகங்களை நிரப்பிடும்,” என்று சொல்லப்படுகிறது.
ஏற்ற சமயத்தில், அந்த ஆரம்ப செல் பிரியத் துவங்கி, இரண்டு செல்லாகவும் பின்னர் நான்காகவும் எட்டாகவும் இவ்வாறாக மேலும் மேலும் பிரியத் துவங்கியது. கடைசியில், சுமார் 270 நாட்களுக்குப் பின்பு—இந்தக் காலக்கட்டத்தில் பல்லாயிரக் கோடிக்கணக்கான பல்வேறு வகையான செல்கள் ஒரு குழந்தையை உருவாக்குவதற்காக உங்கள் அம்மாவிற்குள்ளேயே வளர்ச்சியடைந்தன—நீங்கள் பிறந்தீர்கள். உங்களை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்னும் விரிவான ஆணைகளின் புத்தகங்களை ஒரு பெரிய அறை முழுவதும் அந்த முதல் செல் கொண்டிருப்பதைப்போல் இது இருக்கிறது. ஆயினும், இத்தகைய சிக்கலான ஆணைகள் பின்வரும் ஒவ்வொரு செல்லிற்கும் கடத்தப்படும் உண்மையானது அதேபோல் அற்புதமானது. ஆம், ஆச்சரியமாகவே, உங்கள் உடலிலுள்ள செல்கள் ஒவ்வொன்றும் அந்த ஆரம்பக் கருவுற்ற முட்டையில் அடங்கியுள்ள அதே விஷயங்கள் அனைத்தையும் கொண்டுள்ளன!
இதையும் கவனியுங்கள். ஒவ்வொரு செல்லும் எல்லா வகையான செல்களை உருவாக்கும் ஆணைகளைக் கொண்டிருப்பதால், உதாரணமாக இருதய செல்களை உருவாக்கும் சமயம் வந்தபோது, மற்ற செல்களையெல்லாம் உருவாக்கவேண்டிய ஆணைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டன? வெளித்தோற்றத்தில், ஒரு முழுமையான பெட்டகத்தின் (cabinet) நீல வரைபடங்களுடன் (blueprints) செயல்படுகின்ற ஒரு ஒப்பந்தக்காரரைப்போல், ஒரு குழந்தையை உருவாக்குவதற்காக, ஒரு செல் அதன் கோப்பு பெட்டகத்திலிருந்து இருதய செல்களை உருவாக்குவதற்கான நீல வரைபடத்தைத் தேர்ந்தெடுத்தது. மற்றொரு செல், நரம்பு செல்களை உருவாக்குவதற்கான ஆணைகள் அடங்கிய வேறு நீல வரைபடத்தைத் தேர்ந்தெடுத்தது, மேலும் மற்றொன்று ஈரல் செல்களை உருவாக்குவதற்கான மற்றொரு நீல வரைபடத்தை எடுத்துக்கொண்டது, இவ்வாறு நீண்டுகொண்டே போகிறது. நிச்சயமாகவே, ஒரு குறிப்பிட்ட வகை செல்லை உருவாக்குவதற்கு தேவையான ஆணைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதே சமயத்தில் மற்ற ஆணைகளையெல்லாம் கட்டுப்படுத்தும் இன்னும் விளக்கப்படாத செல்லின் இந்தத் திறமை, ‘நம்மை கருவுறுதலிலிருந்து பிறப்பு வரை கொண்டு செல்லும் அற்புதங்கள்,’ பலவற்றில் மற்றொரு அற்புதமாகும்.
ஆயினும், அதில் இன்னும் அதிகம் உட்பட்டிருக்கிறது. உதாரணமாக, இருதய செல்கள் தூண்டப்பட வேண்டும், அப்போதுதான் அவை ஓசையொழுங்குடன் சுருங்கும். இவ்வாறாக, உடல் ஈடுபட்டிருக்கும் செயலை ஆதரிப்பதற்காகச் சரியான விகிதத்தில் இதயத் துடிப்பை உண்டுபண்ணும் மின் தூண்டுதலை உற்பத்தி செய்வதற்காக இருதயத்திற்குள் ஒரு சிக்கலான அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே ஓர் அதிசயமான வடிவமைப்பு! “மனிதன் இதுவரை உருவாக்கிய எந்த இயந்திரத்தின் எத்தகைய வகையைக்காட்டிலும் இது மிகவும் திறம்பட்டது,” என்று இருதயத்தைப்பற்றி மருத்துவர்கள் சொன்னதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மூளை
இன்னும் மிகப் பெரிய விந்தையானது மூளையின் வளர்ச்சி—மனித அற்புதத்தின் மிகவும் புதிரான பாகம். கருவுற்று மூன்று வாரங்களுக்குப் பின் மூளை செல்கள் உருவாகத் துவங்குகின்றன. ஏற்ற சமயத்தில் நியூரான் என்று அழைக்கப்படும் நரம்பு செல்கள் சுமார் 10,000 கோடி—பால்வீதி மண்டலத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளனவோ அவ்வளவு—மனிதனின் மூளையில் நெருக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.
“இவற்றுள் ஒவ்வொன்றும் மூளையிலுள்ள சுமார் 10,000 மற்ற நியூரான்களிடமிருந்து செய்திகளைப் பெற்றுக்கொண்டு, மேலும் ஓராயிரம் நியூரான்களுக்கு செய்திகளை அனுப்புகின்றன,” என்று டைம்ஸ் பத்திரிகை அறிவித்தது. நேரக்கூடிய சேர்வகை சாத்தியங்களைக் குறிப்பிடுகையில் நரம்பியல் வல்லுநர் ஜெரல்டு இடில்மேன் கூறினார்: “தீக்குச்சி முனையளவான மூளையின் சிறிய பகுதி, சுமார் 100 கோடி இணைப்புகளைக் கொண்டுள்ளது. அது சேரும் விதங்களை மிக பிரமாண்டமான எண்ணிக்கையில்—பத்தை அடுத்து லட்சக்கணக்கான பூஜ்ஜியங்கள் தொடரும் அடுக்குத் தொகையின் படிமுறையில்—மட்டுமே விளக்கமுடியும்.”
இது மூளைக்கு என்ன உள்ளார்ந்த ஆற்றல் திறனைக் கொடுக்கிறது? “உலகின் மிகப் பெரிய நூல்நிலையங்களிலுள்ள எத்தனை அநேக புத்தகத் தொகுதிகள் உள்ளனவோ அத்தனை, சுமார் இரண்டு கோடி புத்தகத் தொகுதிகளை நிறைத்திடும்,” தகவலை மனித மூளையால் தாங்க முடியும் என்று வான ஆராய்ச்சியாளர் கார்ல் சாகன் கூறினார். ஆசிரியர் ஜார்ஜ் லெனார்டு வியந்துரைப்பதில் மேற்கொண்டு சென்றார்: “ஒருவேளை, உண்மையில் நம்மால் இப்போது எடுத்துரைக்க முடியும், நம்பமுடியாத புனை கொள்கையை: மூளையின் மூலாதாரமான படைப்பு திறன் அனைத்து நடைமுறையான காரியங்களுக்கும் எல்லையற்றதாக ஒருவேளை இருக்கக்கூடும்.”
எனவே, பின்வரும் கூற்றுகளால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை: “நம் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடித்ததில் மூளையானது மிகவும் சிக்கலான ஒன்றாகும்,” என்றார் டிஎன்ஏ-வின் உருவ அமைப்பைக் கண்டுபிடித்த உடன் கண்டுபிடிப்பாளரும் மூலக்கூறு உயிரியல் வல்லுநருமான ஜேம்ஸ் வாட்சன். நரம்பியல் வல்லுநர் ரிச்சர்டு ரீஸ்டாக் மூளையைக் கணிப்பொறியுடன் ஒப்பிடுதலுக்கு வருந்துகிறார்: “மூளையின் ஈடிணையற்ற தன்மையானது, அதைக் கொஞ்சமாவது ஒத்திருக்கும் ஒன்று, இந்த அறியப்பட்ட பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை என்ற உண்மையிலிருந்து உதயமாகிறது.”
நமது தற்போதைய வாழ்நாட்காலத்தில், நம் மூளையின் உள்ளார்ந்த ஆற்றலின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று நரம்பியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி வெறுமனே சுமார் 1/10,000 அல்லது 1 சதவிகிதத்தில் 1/100 அளவு மட்டுமே பயன்படுத்துகிறோம். சிந்தித்துப்பாருங்கள். இத்தகைய அற்புதமான சாத்தியங்களுடன்கூடிய மூளையை, என்றுமே அதை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்காகவே நமக்கு அளிக்கப்பட்டது என்பது நியாயமானதா? மனிதர்கள் எல்லையே அற்ற கற்கும் திறனுடன் உண்மையிலேயே வடிவமைக்கப்பட்டிருப்பது என்றென்றும் வாழ்வதற்காகவே என்பது நியாயமாக இருக்கிறதல்லவா?
அது உண்மையென்றால், நாம் ஏன் மூப்படைகிறோம்? என்ன தவறு நேர்ந்தது? தெரிந்தவிதமாகவே, நம் உடல்கள் என்றென்றும் நிலைத்திருக்க வடிவமைக்கப்பட்டு இருந்தபோதிலும், சுமார் 70 அல்லது 80 வயதுக்குப் பிறகு நாம் ஏன் மரிக்கிறோம்?
[பக்கம் 7-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
செல்—வடிவமைப்பின் ஓர் அற்புதம்
செல் புறச்சவ்வு
செல்லிலிருந்து வெளிச்செல்வதையும் அதனிடத்தில் ஏதேனும் உள்ளே நுழைவதையும் கட்டுப்படுத்தும் சவ்வு
நியூக்ளியஸ்
இரட்டை சவ்வால் மூடியுள்ள உறை, இதுதான் செல்லின் செயல்களை வழிநடத்தும் கட்டுப்பாட்டு மையம்
ரைபோசோம்கள்
அமினோ அமிலங்கள் புரதங்களாக சேகரிக்கப்படும் அமைப்புகள்
குரோமோசோம்கள்
அவை செல்லின் டிஎன்ஏ-வை கொண்டுள்ளன, அதன் மரபியல் மூல திட்டமாகும்
நியூக்ளியோலஸ்
ரைபோசோம்கள் சேர்க்கப்படும் இடம்
என்டோபிளாச வலை
சவ்வுகளின் பரப்புகள், அவற்றுடன் இணைந்துள்ள ரைபோசோம்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களை அவை சேமிக்கின்றன அல்லது கடத்துகின்றன (சில ரைபோசோம்கள் தடையின்றி செல்லில் மிதக்கின்றன)
மைட்டோகாண்ட்ரியா
செல்லுக்கு சக்தியை அனுப்பும் மூலக்கூறுகளான, ATP-ன் உற்பத்தி மையங்கள்
கால்கை உறுப்பு (Golgi Body)
தட்டையான சவ்வு பைகளின் ஒரு தொகுதி, அது செல் உற்பத்தி செய்யும் புரதங்களை திரட்டிக் குவிக்கிறது மற்றும் வினியோகம் செய்கிறது
சென்ட்ரியோல்கள்
அவை நியூக்ளியஸிற்கு அருகில் இருக்கின்றன மற்றும் செல்லின் இனப்பெருக்கத்திற்கு மிகவும் முக்கியம்