நாம் ஏன் மூப்படைகிறோம் மரணமடைகிறோம்?
“ஒவ்வொரு தனிப்பட்ட செல்லுக்குள் வயது மாற்றங்கள் நிகழ்வதன் கண்டுபிடிப்பு நீங்கலாக, மூப்படைவதற்கான அடிப்படையான காரணத்தைப் பற்றி ஒரு நூற்றாண்டிற்கு முன் நமக்குத் தெரிந்திருந்ததைக் காட்டிலும் அதிகம் ஒன்றும் இன்று தெரியவில்லை,” என்று டாக்டர் லெனார்டு ஹேஃபிளிக் ஒத்துக்கொள்கிறார். பார்க்கப்போனால், “மூப்புறுதல் எதற்காக நிகழவேண்டும் என்பதற்கான சரியான காரணம் நமக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
கருவிலிருந்து எடுக்கப்பட்ட இயல்பான மனித செல்களை சிறந்த நிலைமைகளின் கீழ் வளர்த்தபோது, சுமார் 50 தடவைகள் இரட்டைமடங்குகளாக பிரிந்த பின்னர் மரணம் நிகழ்ந்தது. மறுபட்சத்தில், வயதான நபரிடமிருந்து எடுக்கப்பட்ட செல், மரிப்பதற்கு முன் இரண்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட தடவைகள் மாத்திரம் இரட்டைமடங்குகளாக பிரிந்தன என்று சுமார் 30 வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட பரிசோதனைகள் காண்பித்தன. தேசிய புவியியல் சங்க புத்தகம் வியக்கவைக்கும் இயந்திரம் (ஆங்கிலம்) இவ்வாறு கவனித்தது: “நம் ஒவ்வொருவரின் பிறப்பிலேயே மரணமானது திட்டமிடப்பட்டுள்ளது என்ற எண்ணத்தைச் சோதனைகளின் அத்தாட்சி ஆதரிக்கிறது.”
ஆயினும், நின்றுவிடுகின்ற செல் பிரிதல் தவிர்க்க இயலாததா? தவிர்க்க இயலாததுதான். மூப்பியலின் இரு வல்லுநர்களும் பேராசிரியர்களுமான ராபர்ட் எம். சாபோல்ஸ்கீயும் கேலப் இ. ஃபின்ச்சும் கருத்து தெரிவித்தனர், “பார்க்கப்போனால், மூப்படையாமலிருக்கும் நிலைதான் [மூப்படையாமை] உண்மையிலேயே பூமியில் வாழும் உயிரிகளின் ஆதி நிலை என தோன்றுகிறது.” நகைப்புக்குரிய விதத்தில், சில இயல்பு மாறிய மனித செல்கள்கூட இன்று மூப்படைவதில்லை.
மனிதனிடத்திலிருந்து மனிதனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலாக செய்த டாக்டர் கிரிஸ்டீயன் பர்னாடு தொகுத்த உடல் இயந்திரம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்கியது: “‘மரிக்காத செல்களின்’ கண்டுபிடிப்பு, அத்தகைய செல்கள் இயல்புக்கு மாறானவை என்பது தெளிவாகும் வரைக்கும் மூப்படையும் நிலையைப்பற்றி ஆர்வமாக இருந்த உயிரியல் வல்லுநர்களுக்கு தலைவலியாக இருந்தது.” ஆம், முடிவில்லாத இரட்டித்தல் என்னும் போலித் தோற்றத்தின் மூலம் சில புற்றுநோய் செல் தொகுதிகளைத் தொடர்ந்து வளர்ப்பதை நீடிக்க முடியும்! தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிட்டது: “அத்தகைய இயல்புக்கு மாறான செல்கள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன என்பதை விஞ்ஞானிகளால் ஒருவேளை வரையறுக்க முடிந்தால் செல் மூப்படையும் படிநிலையைப் பற்றிய உட்பார்வையை அவர்கள் ஒருவேளை பெறக்கூடும்.” இவ்வாறாக, இன்று ஆய்வுக்கூடத்தில் சில புற்றுநோய் செல்களால் காணக்கூடியவிதத்தில் முடிவில்லாமல் விருத்தியடைய முடியும், ஆனால் சாதாரண செல்கள் வயதாகி மரிக்கின்றன.
குறைபாடுள்ள ஒரு இயந்திர அமைப்பு
உடல் இயந்திரம் குறிப்பிடுவதைப்போல், “விருத்தியடையும் திறன் [சாதாரண] செல் இனங்களில் இழக்கப்படுவதன்” விளைவாக மனித மூப்பும் மரணமும் ஏற்படுகின்றனவா? அப்படியானால், அந்தப் புத்தகம் கூறியது, “மனித ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு முயற்சியைக் கையாளுவதற்காக, இந்த முடிவடையும் மீண்டும் மீண்டும் நிகழும் திறனைக் கட்டுப்படுத்தும் இயந்திர அமைப்பைக் கண்டுபிடிப்பதும் புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம்.”
‘நம்மை கருவுறுதலிலிருந்து பிறப்புக்கும், பிறகு பாலியல் முதிர்ச்சிக்கும் மற்றும் பருவமடைதலுக்கும் கொண்டுசெல்கின்ற அந்த அற்புதங்கள்,’ என்று முந்தைய கட்டுரையில் டாக்டர் ஹேஃபிளிக் சொன்னதை ஒருவேளை நீங்கள் நினைவுகூரலாம். ‘இந்த அற்புதங்களை என்றென்றும் தக்கவைக்கும் மிகவும் எளிய இயந்திர அமைப்பை,’ அவர் பிறகு குறிப்பிட்டார்.
வருடக்கணக்கான பரஸ்பரமான முயற்சிகள் இருந்தபோதிலும், உயிரை என்றென்றும் தக்கவைக்கும் இயந்திர அமைப்பைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தோல்வியுற்றிருக்கிறார்கள். “மூப்படைதலின் காரணங்கள் புதிராகவே உள்ளன,” என்று வியக்கவைக்கும் இயந்திரம் என்ற புத்தகம் ஒத்துக்கொள்கிறது.
ஆயினும், மூப்புக்கும் மரணத்திற்குமான காரணம் உண்மையில் இரகசியமல்ல. அதற்கு விடை இருக்கிறது.
விடை என்ன?
விடையைக் கொண்டுள்ளவரே ‘நம்மை கருவுறுதலிலிருந்து பிறப்புக்குக் கொண்டுசெல்லும் அற்புதங்களுக்கு’ காரணராகிய நமது சர்வ ஞானமுடைய சிருஷ்டிகர் யெகோவா தேவன். “ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது.” “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்,” என்று அவரைப்பற்றி பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 36:9; 100:3.
கருப்பையில் உங்களுடைய வளர்ச்சியை எவ்வளவு அற்புதமாக திட்டமிட்டுள்ளார் என்பதை சிந்தியுங்கள், உருவகத்தில் சொன்னால், உங்களை ஒரு பிரத்தியேக தனிநபராக்குவதற்கான ஆணைகளின் ஒரு புத்தகம்! “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.” ‘நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டபோது, . . . என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; அவயவங்கள் அனைத்தும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது,’ என்று எழுதினார் சங்கீதக்காரன். (சங்கீதம் 139:13, 15, 16) தெளிவாகவே, அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நமது மானிட உயிரி தானாகவே தோன்றிய ஒரு விளைவல்ல!
இருப்பினும், யெகோவா தேவன் நாம் என்றென்றும் வாழ்வதற்காக நம்மை பரிபூரணமாகப் படைத்தார் என்றால், ஏன் நாம் மூப்படைகிறோம் மரணமடைகிறோம்? விடையானது முதல் மனிதன் ஆதாம்மீது விதிக்கப்பட்ட தடையில் காணப்படுகிறது, அவனை பூமியில் அழகான வீட்டில் கடவுள் வைத்தார். கடவுள் அவனுக்குக் கட்டளையிட்டார்: ‘நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனால் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.’—ஆதியாகமம் 2:16, 17.
என்ன நடந்தது? தன்னுடைய பரம தந்தைக்குக் கீழ்ப்படிவதற்கு பதிலாக, அந்த மரத்தின் கனியைப் புசிப்பதில் தன் மனைவி ஏவாளுடன் சேர்ந்துகொண்டு, ஆதாம் கீழ்ப்படியாமல் போனான். ஒரு கலகக்கார தூதனின் பொய்யான வாக்குறுதியைத் தன்னலமாக ஆவலோடு அவர்கள் பற்றிக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:1-6; வெளிப்படுத்துதல் 12:9) ஆகவே, கடவுள் எச்சரித்திருந்ததைப்போலவே அவர்கள் மரித்தார்கள். ஆதாமும் ஏவாளும் என்றென்றும் வாழ்வதற்கான திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தும், கடவுளுக்குக் கீழ்ப்படிவதுடன் அது சம்பந்தப்பட்டிருந்தது. கீழ்ப்படியாமல் இருந்ததால் அவர்கள் பாவம் செய்தார்கள். பிறகு, பாவிகளாக, தங்களின் அனைத்து சந்ததிக்கும் மரணத்திற்கேதுவான குறைபாட்டை அவர்களின் உடல்களுக்குக் கடத்தினார்கள். ‘இப்படியாக மரணம் எல்லாருக்கும் வந்தது.’—ரோமர் 5:12; யோபு 14:4.
இருந்தபோதிலும், மூப்பையும் மரணத்தையும் மேற்கொள்வதற்கான நம்பிக்கை ஏதுமில்லை என்று இது அர்த்தப்படுத்துகிறதில்லை. சர்வ ஞானமுடைய நம் சிருஷ்டிகர் எத்தகைய மரபியல் முறைகேடுகளையும் சரிசெய்யமுடியும் மற்றும் நமது வாழ்க்கை என்றென்றும் தொடர்ந்திருப்பதற்கான சக்தியை அளிக்க வல்லவர் என்று நம்புவது அவ்வளவு கடினமல்ல. ஆனால், இதை அவர் எப்படி செய்வார்? நித்திய ஜீவனுக்கான வாக்குறுதிகளை அனுபவிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?