மக்கவைத்து—குப்பைக் குவியலுக்குத் தீர்வு காணுதல்
பின்லாந்தில் உள்ள விழித்தெழு! நிருபர்
மனிதவர்க்கத்தினால் போடப்படும் குப்பை அதிகரிக்க அதிகரிக்க, அது நம்முடைய காலத்தில் தீர்த்து வைப்பதற்கு மிகவும் கடினமான பிரச்சினைகளில் ஒன்றைத் தருகிறது. நவீன தொழில்நுட்பம், குப்பையை உற்பத்தி செய்வதில் மிகவும் கைதேர்ந்ததாய் இருந்தாலும், அந்தக் குப்பையை நீக்குவதற்கு மிகவும் திண்டாடுவதாகத் தெரிகிறது. நெடுங்காலமாக இருந்துவரும் தெளிவான தீர்வுகள் பிரச்சினைகளினால் நிறைந்திருக்கின்றன. குப்பையைக் குவித்து வைப்பது அக்கம்பக்கத்தில் இருக்கும் நிலத்தடி நீரை மாசுபடுத்துமாகையால், குப்பைத் தொட்டிகளை மூடும்படி அநேக நாடுகள் வற்புறுத்தியிருக்கின்றன. குப்பையை எரிப்பதானது நச்சு ரசாயனப் பொருட்களை வெளிவிட்டு சாம்பலை மிச்சமாக விட்டுச்செல்லும். இவை இரண்டையும் நீக்குவது அவற்றிற்கே உரித்தான பிரச்சினைகளைக் கொடுக்கிறது. இதன் காரணமாக அநேக இடங்களில் உயர் தொழில்நுட்ப எரிதொட்டிகள் (incinerators) வரவேற்கப்படுவதில்லை.
இதைத்தவிர வேறு என்ன வழி இருக்கிறது? திண்மக் கழிவுகளை இயற்கை வழியில்—மக்கவைத்தல் என்றழைக்கப்படும் ஒரு வகை உயிரியல் “தீ” மூலம்—அழிக்கும்படி சிலர் ஆலோசனை கூறுகின்றனர். தீயைப் போல, மக்கவைத்தல் கரிமப் பொருளை அநேக துணைப் பொருட்களாக சிதைத்து, இவ்வினையால் வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. மக்கவைத்தலால் கிடைக்கும் துணைப் பொருட்கள் மிகவும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கலாம். இதன் வாயுக்களும் வெப்பமும் ஆற்றலின் மூலங்களாக உபயோகிக்கப்படலாம். துணைப் பொருட்களாகக் கிடைக்கும் திடப் பொருளாகிய மக்கிய மண், விவசாயத்திற்கு ஒரு விலையேறப்பெற்ற மண் உரமாக இருக்கிறது.
மக்கவைத்தல் மிகவும் பிரபலமாகிக்கொண்டே போகிறது. எடுத்துக்காட்டாக, பின்லாந்தில், கூர்ஷால்ம் என்ற ஊர் மக்களும் அதற்குப் பக்கத்தில் இருக்கும் வாஸா நகரத்தினரும் மக்கவைத்தல் முறையைப் பயன்படுத்தும் குப்பையை செயல்முறைப்படுத்தும் முன்னேற்றமடைந்த ஒரு நிலையத்தை நிறுவியிருக்கின்றனர். இந்நிலையத்தைத் திட்டமமைத்தவர்கள், இப்பகுதி எதிர்ப்படும் பிரச்சினைகளில் இரண்டை உடனடியாக தீர்த்துவைக்க புத்திசாலித்தனமான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். கட்டுமானப் பணிக்கும் சாலை அமைத்தலுக்கும் பயன்படும் ஜல்லி கிடைப்பதற்கரிய ஒரு பொருள்வளமாக இருக்கிறது. ஆகவேதான் பாறையின் அடித்தளத்தில் 40 மீட்டர் ஆழ துளை ஒன்றை ஏற்படுத்த வெடிவைத்து நொறுக்குவதற்கான கருத்து உருவாயிற்று. பேரளவு ஜல்லியை உற்பத்தி செய்தபின், அந்தத் துளை முனிசிபல் கழிவுகளை சுத்திகரிக்கும் பெரிய உயிரியல் வினைகலத்திற்கு (bioreactor) ஏற்ற இடமாக அமைந்தது. சுற்றிலும் திடமான பாறையால் சூழப்பட்டிருப்பது நொதித்தலுக்கு அவசியமாக இருக்கும் நிலையான வெப்பநிலையைக் காத்துக்கொள்வதில் இந்த வினைகலத்திற்கு உதவுகிறது.
அதன் விளைவு? இந்தப் பகுதியிலுள்ள குப்பையின் பிரச்சினையை இந்த நவீன நிலையம் பேரளவில் தீர்த்துவிட்டிருக்கிறது. இது குப்பையை பருமனில் 75 சதவீதத்தையும் எடையில் 66 சதவீதத்தையும் குறைக்கிறது. இது எப்படி முடியும்? நாம் அந்த நிலையத்திற்குப் போய்ப் பார்ப்போம் வாருங்கள்.
தனித்தன்மைவாய்ந்த குப்பை சுத்திகரிப்பு நிலையம்
இந்த இடம் குப்பை கொட்டும் பழைய இடங்களைவிட வித்தியாசமாக இருக்கிறது என்பதே சென்றடைந்தவுடன் எங்கள் மனதில் தோன்றுகிற எண்ணமாக இருக்கிறது. எலிகள் ஒன்றும் காணப்படுவதில்லை, துர்நாற்றமும் இல்லை. இங்குக் கழிவுகளைக் கையாளுவது ஏதோவொரு உற்பத்தித் தொழிலைப் போலவே தோன்றுகிறது.
இந்நிலையத்தின் மேலாளர் இந்த நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை விளக்கும் ஒரு விளக்கப்படத்தை முதலாவது எங்களுக்குக் காண்பிக்கிறார். இரண்டு படிகள் அடங்கிய ஒரு செயல்முறை குப்பையின் பெரும்பாலான கனத்தையும் பருமனையும்—முதலாவது அதை மக்கவைப்பதன் மூலமும் பின்னர் அதை அழுகவைப்பதன் மூலமும்—குறைக்கிறது. மக்கவைத்தலில் கழிவுப்பொருள் காற்றுள்ள சூழலில் சிதைக்கப்படுகிறது; அழுகவைப்பதிலோ காற்றில்லா சூழலில் அது நொதிக்கவைக்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டும் தொடங்குவதற்குமுன் கழிவுப்பொருள் நொறுக்கப்படுகிறது.
ஒரு பெரிய கதவு வழியே குப்பை வண்டி ஒன்று பின்னோக்கி உள்ளே நுழைவதை நாங்கள் கட்டுப்பாட்டு அறையின் ஒரு ஜன்னலிலிருந்து பார்க்கிறோம். இது குப்பையை பெரிய புனல் வடிவ குழி ஒன்றிற்குள் கொட்டுகிறது; இதிலிருந்து ஒரு பெல்ட் குப்பையை உடைக்கும் ஒரு இயந்திரத்துக்குள் செலுத்துகிறது. சைக்கிள் ஃபிரேம்கள், கார் டயர்கள், புகைபோக்கி குழாய்கள் போன்றவையும், பெரும்பாலான பிளாஸ்டிக் துண்டுகளுமான பெரிய பொருட்கள் பாரந்தூக்கிகள் மூலம் பிரிக்கப்படுகின்றன. பழைய ரெஃப்ரிஜிரேட்டர்களும் ஃப்ரீஸர்களும் வந்தால், அவை பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்டு பின்னர் அவை வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளுக்கு விற்கப்படுகின்றன என்று விளக்குகிறார், எங்களுடைய உபசரிப்பாளர்.
முதன்முறையாக நொறுக்கப்பட்டதற்கு பின்னர், அந்தக் கழிவுப்பொருள் பெரிய துளைகளையுடைய ஒரு சல்லடை வழியே கடந்துசெல்கிறது. இரண்டு அங்குலத்திற்குக் குறைவான அளவுள்ள அனைத்துப் பொருட்களும் இதிலிருந்து கீழே விழுகின்றன. குப்பையில் சுமார் பாதியளவு இப்படிப்பட்டதாய் இருக்கிறது. இது, அதன் உயிரியல் சுத்திகரிப்பின் முதல் படியான மக்கவைத்தலுக்கு கடந்து செல்கிறது. நொறுக்கப்பட்ட கழிவுப்பொருள் நகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கிடைக்கும் கசடுகளோடு கலக்கப்படும் ஒரு பெரிய கொள்கலனில் இது நடைபெறுகிறது.
எங்களுடைய உபசரிப்பாளர் சொல்வதாவது: “இந்தச் செயல்முறையை உருவாக்கியபோது, நாங்கள் எப்போதும் சுற்றுச்சூழலைப் பற்றியே யோசித்தவர்களாக இருந்தோம். ஆகவே நொறுக்கும்போது வெளிவரும் தூளையும்கூட நாங்கள் பிரித்தெடுப்போம். அதுமட்டுமல்லாமல், மக்கவைக்கும் இயந்திர கலனுக்குள் நாங்கள் காற்றை ஊதுகிறோம். இதனுள் கழிவுப்பொருள் மற்றும் கசடுகளின் கலவையானது ஒருபடித்தாக்கப்பட்டு (homogenized) சுமார் 40 டிகிரி செல்சியஸுக்கு [104 டிகிரி ஃபாரன்ஹீட்] சூடாக்கப்படுகிறது. காற்றுள்ள சூழலில் அழிவுற்றதனால் இதிலிருந்து வரும் காற்று முதலாவதாக ஒரு வடிகட்டியின் வழியே அனுப்பப்படவில்லையெனில், தாக்குப்பிடிக்கமுடியாத அளவுக்கு நாற்றமடிக்கும்.”
மக்கவைக்கும் இயந்திரத்தினுள் ஓரிரு நாட்கள் இருந்தபின்பு, இந்தப் பொருள் 40 மீட்டர் உயரமுள்ள முக்கிய எரிவாயு வினைகலனுக்குள் (biogas reactor) செல்கிறது. இங்கு என்ன நடக்கிறது? இந்தக் கலவையின் கரிம கூட்டுப் பொருட்கள், ஆக்ஸிஜன் இல்லாத இந்தச் சூழலில் வாழக்கூடிய நுண்கிருமிகளால் அழுகிப்போகும்படி செய்யப்படுகின்றன. செயல்முறையின் இந்தக் கட்டம்தான், எளிதில், அழுகவைத்தல் என்றழைக்கப்படுகிறது. இது 35 டிகிரி செல்சியஸில் 15 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதன் விளைவாக கிடைப்பவை எரிவாயுவும், 85 முதல் 90 சதவீதம் தண்ணீரால் ஆன மக்கிய மண்ணுமாகும். இத்தண்ணீரின் பெரும்பகுதி பிழிந்தெடுக்கப்பட்டு மீண்டும் வினைகலத்திற்குள்ளேயே திரும்ப செலுத்தப்படுகிறது.
ஆனால் சல்லடையினுள் கடந்தேசெல்லாத பாதி குப்பைக்கு என்ன சம்பவிக்கிறது? இதில் முக்கியமாக பேப்பரும் பிளாஸ்டிக்கும் அடங்கியுள்ளதால் இந்தப் பாகம் எளிதில் தீப்பற்றி எரியக்கூடியதாக இருக்கிறது என சொல்கிறார் எங்கள் வழிகாட்டி. ஆனால் இந்தக் கழிவுப்பொருளைப் பாதுகாப்பாக எரிக்க 1,000 டிகிரி செல்சியஸுக்கும் கூடுதலான வெப்பநிலை தேவைப்படுகிறது. அத்தகைய எரிதொட்டி இப்பகுதியில் கிடையவே கிடையாது. அவர் சொல்வதாவது: “ஆகவேதான் மீதியிருக்கும் கழிவுப்பொருளையும் இன்னொருமுறை நொறுக்கி மீண்டும் செயல்முறைப்படுத்துகிறோம். இந்த உயிரியல் செயல்முறையால் பிளாஸ்டிக்கை சிதைக்க முடிவதில்லை என்பது உண்மைதான், ஆனால் இந்தக் கழிவுப்பொருள் பெரும்பாலும், இறுதியில் மக்கிய கூட்டுப்பொருளாக ஆகக்கூடிய பேப்பரால் ஆனது.”
நுணுக்கமான இந்தச் செயல்முறை எதை உற்பத்தி செய்கிறது? எங்களுடைய உபசரிப்பாளர் பதிலளிக்கிறார்: “முக்கியமாக மக்கிய கூட்டுப்பொருள் மற்றும் எரிவாயு ஆகிய இரண்டு உற்பத்திப் பொருட்கள் கிடைக்கின்றன. மக்கிய மண்ணை பசுமைப் பகுதிகளை உருவாக்கவும் நிரப்பி உயர்த்தப்பட்ட தாழ்நிலங்களின் மேல் பரப்பிவிடவும் நாங்கள் விற்கிறோம். முன்பு குப்பை கொட்டுவதற்காக பயன்படுத்தியிருந்த அநேக இடங்கள் மூடப்பட்டதனால் இந்த மக்கிய மண்ணுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருக்கிறது. எதிர்காலத்தில் கண்ணாடியையும் பிளாஸ்டிக்கையும் நீக்கியபின் அதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. எரிவாயுவில் 60 சதவீதம் மீத்தேனும் 40 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் அடங்கியுள்ளது. தரத்தைப் பொருத்தளவில் இது இயற்கை வாயுவுக்கு சமமானதாக இருக்கிறது, ஆகவே அதே முறையில் அது உபயோகிக்கப்படுகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக நாங்கள் குழாய் இணைப்பு அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.”
குப்பையிலும் கசடுகளிலும் உள்ள கனரக உலோகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியதென்ன? எங்களுடைய உபசரிப்பாளர் தொடர்ந்து கூறுவதாவது: “இந்த கனரக உலோகங்கள் தண்ணீரில் பேரளவில் காணப்படுகின்றன. ஆகவே, எதிர்காலத்தில் கனரக உலோகங்களைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுப்பதற்கான உபகரணங்களை வாங்கும் யோசனையில் இருக்கிறோம். அதன் பிறகு எங்களுடைய உற்பத்திப் பொருள் அனைத்து உபயோகங்களுக்கும் ஏற்றதாய் இருக்கலாம். எதிர்காலத்தைப்பற்றி நாங்கள் பேசும்போது, என்னுடைய கனவை உங்களிடம் சொல்லியே தீரவேண்டும். அதென்னவென்றால், கண்ணாடியையோ பிளாஸ்டிக்கையோ உலோகத்தையோ நாங்கள் பெறாதபடி அனைத்துக் குடும்பங்களும் தங்களுடைய குப்பைகளைப் பிரித்தெடுக்கும். அவை எல்லாமே மறுசுழற்சி செய்யப்படக்கூடியவையே. செயற்கைத் துணிகள், பிளாஸ்டிக்குகள், ரப்பர் போன்ற பொருட்களும்கூட மறுசுழற்சி செய்யப்படக்கூடியவையே.”
இந்த நிலையம் 1,00,000 மக்களால் உண்டாக்கப்பட்ட கழிவுப்பொருளைக் கையாளுவதற்கான திறனைக் கொண்டிருக்கிறது. இது பின்லாந்தில் முக்கியமானதாக இருக்கிறது. 2000-மாவது ஆண்டில் தனது குப்பைகளில் சுமார் பாதியை—மூலப் பொருட்கள் வடிவிலோ ஆற்றல் வடிவிலோ—பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த நாடு திட்டமிடுகிறது.
குப்பைக் குவியலைப் போக்க ஏதோவொன்று செய்யமுடியும் என்பதற்கான ஆணித்தரமான அத்தாட்சியை எங்களுடைய சுற்றுப்பயணம் கொடுத்திருக்கிறது. நாம் எங்கு வாழ்ந்தாலும் அங்கு என்னென்ன மறுசுழற்சி சட்டங்கள் நடைமுறையில் உள்ளனவோ அவற்றோடு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைக்கலாம். வழிகாட்டியிடமிருந்து விடைபெறுமுன், இந்த நிலையத்தைப் போலவே திறம்பட்ட முறையில் குப்பையை சுத்திகரிக்கும் அநேக நிலையங்கள் இருக்கின்றனவா என்று நாங்கள் கேட்கிறோம். “சொல்வது கடினம். இதைப்போன்ற நிலையங்கள் இருக்கின்றனவா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை குப்பைக் குவியல் அநேக இடங்களில் ஒரு பெரும்பிரச்சினையாக இருப்பதனால் இந்த மாதிரி முயற்சிக்க யாருமே முன்வராமல் இருந்திருக்கலாம்,” என்று எங்களுடைய வழிகாட்டி பதில் சொல்லுகிறார்.