அப்புறப்படுத்தக்கூடிய பொருட்கள் அகற்றப்படமுடியாத குப்பைக்கூளமாகின்றன
குப்பைக்கூள பிரச்னையும் அதற்கு எது துணைபோகிறது என்பதையும் கண்டு காணாமல் இருந்துவிடுவது, பொருளை உபயோகத்திற்குப் பின் எறிந்துவிடும் சமுதாயத்தின் பழக்கத்தை அசட்டை செய்வதாக இருக்கிறது. உதாரணமாக, சமையலறையில் துணித் துவாலைகளுக்குப் பதில் காகிதத் துவாலைகள் கவர்ச்சியாக இருப்பதாய்க் காண்கிறீர்களா? உணவு வேளைகளில் கைத் துடைப்புக் குட்டைகளுக்குப் பதில் காகிதக் குட்டைகளைப் பயன்படுத்துகிறீர்களா? உங்கள் குழந்தைகளுக்கு அணையாடைகளைப் பயன்படுத்துகிறவர்களாய் இருந்தால், துணிக்குப் பதிலாக பயன்படுத்திய பின்னர் எறிந்துவிடக்கூடியவற்றை உபயோகிக்கிறீர்களா? பயன்படுத்தியதும் எறிந்துவிடக்கூடிய சவரத்துக்குரிய உபகரணங்களும் நிழற்படக்கருவிகளும் வாங்குவதற்கு வசதியாக இருப்பதாய்க் காண்கிறீர்களா? இன்று மைப் பேனாக்களில் எழுதியவர்கள் மிகக் குறைவானவர்களே; பால் பாய்ன்ட் பேனாக்கள், சிலவற்றைப் பயன்படுத்திய பின்னர் அப்படியே எறிந்துவிட வேண்டியதாகவும், இன்னும் சில, மைப் பகுதிகளை மட்டுமே எறிந்துவிடக்கூடியவையாகவும் இருக்க, இவை வெகு காலமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. வர்த்தக நிறுவனங்கள் பால் பாய்ன்ட் பேனாக்களை ஆயிரக்கணக்கில் தருவிக்கின்றன. விளம்பரதாரர்கள் அவற்றை இலட்சக்கணக்கில் கொடுத்து வருகின்றனர்.
தேனீர், காபி, பால் கலந்த பானங்கள், மற்றும் சிற்றுண்டி உணவுகள் காகித கோப்பைகளிலும் காகிதத் தட்டுகளிலும் பரிமாறப்படுவதில்லை. அவற்றின் இடத்தைப் பாலிஸ்டிரீன் உருப்படிகள் எடுத்துக்கொண்டன. பிளாஸ்டிக் கத்திகளும், முள்கரண்டிகளும், கரண்டிகளும் இருக்கின்றன, உபயோகத்திற்குப் பின்னர் குப்பையில் போட்டுவிடவேண்டும். இப்படியாக உபயோகித்துவிட்டு எறிந்துவிடுவதற்கு இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையும் வகையும் ஏராளம். “நாம் ஓர் எறிந்துவிடும் சமுதாயமாய் இருந்துவந்திருக்கிறோம்,” என்றார் நியு யார்க் மாநிலத்தின் வீண்படுத்தப்படும் திடப்பொருள் பிரிவின் இயக்குநர். “நம்முடைய வழிகளை நாம் வெறுமென மாற்றிக்கொள்ள வேண்டும்.”
கண்ணாடி புட்டிகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பால் புட்டிகள், தோல் அல்லது ரப்பர் காலணிகளுக்குப் பதில் பிளாஸ்டிக் காலணிகள், தண்ணீர் உள் சென்று விடுவதைத் தடுத்திடும் இயற்கை இழைமங்களாலான மழைக் கோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் மழைக்கோட்டுகள் ஆகியவை பற்றியதென்ன? பிளாஸ்டிக் சகாப்தத்துக்கு முன்னர் உலகம் எவ்விதம் செயல்பட முடிந்தது என்று சில வாசகர் வியந்து யோசனை செய்யக்கூடும். மேலும் சிறப்பு அங்காடிகளிலும் சரக்குகள் பிளாஸ்டிக் உறைகளில் விற்கப்படும் கடைகளிலும் பெருத்த உறைகளில் சரக்குகள் அலமாரிகளில் வரிசை வரிசையாக அமர்ந்து உங்களைப் பார்த்து அழைப்பதைக் கவனியுங்கள். கம்ப்யூட்டர்கள் சகாப்தம்—பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான காகிதங்களைக் கக்கிட—ஏற்கெனவே மலை உச்சிக்குக் குவிந்திருக்கும் காகிதக் குவியலில் அவற்றைச் சேர்க்கிறது.
குவியும் இந்தக் குப்பைப் பிரச்னையிலிருந்து சற்று விடுதலைக் காண நாம் எந்தளவுக்கு நம்முடைய அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ள மனமுள்ளவர்களாயிருப்போம்? அமெரிக்கர் மட்டுமே தங்களுடைய குப்பைத் தொட்டியில் ஒவ்வொரு சராசரி நாளும் ஒரு முறை உபயோகித்ததும் எறிந்துவிடக்கூடியவற்றில் 43 லட்சம் பேனாக்களையும் 54 லட்சம் சவரத்துக்கான உபகரணங்களையும் எறிந்துவிடுகின்றனர் என்றாலும், பிளாஸ்டிக் மற்றும் உயர்-தொழில் நுட்பத்தின் சகாப்தத்துக்கு முன்பு ஓர் அரை நூற்றாண்டு செல்வதற்கு ஆயத்தமாயிராது என்று தெரிகிறது; இந்தச் செளகரியங்களுக்கு நாம் கொடுக்கும் விலை அதிர்ச்சியூட்டுவதாயிருந்தாலும் அதற்கு ஆயத்தமாயிராது.
ஒருமுறை பயன்படுத்தியதற்குப் பின்னர் எறிந்துவிடப்படும் குழந்தை அணையாடைகளைக் குறித்தும் அதே நிலை என்று சொல்லலாம். “தேசம் முழுவதும் குறைந்துவரும் குப்பைக் கிடங்குகளில் ஒவ்வொரு ஆண்டும் 28 லட்சம் டன்கள் மலஜலம் கொண்ட 1,600 கோடி குழந்தை அணையாடைகள் கொட்டப்படுகின்றன,” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. இப்படியாக எறியப்படும் 42,75,000 டன்கள் குழந்தை அணையாடைகள் நம்முடைய கண்களை திறக்கக்கூடும். “இது ஒரு பூரண உதாரணம்,” என்றார் வீணாகும் திடப்பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு வாஷிங்டன் நிபுணர், “திரும்ப பயன்படுத்த முடிந்த ஒன்றின் விலையைக் காட்டிலும் அதிக விலையான, சுற்றுப்புறச் சூழலுக்கு அதிக ஆபத்தான, மற்றும் திரும்ப பயன்படுத்தமுடியாத வளங்களை வெறுமையாக்கிவிடும் உபயோகத்திற்குப் பின்னர் எறிந்துவிடப்படும் ஒன்றை நாம் பயன்படுத்துகிறோம்.” பெற்றோர் தங்கள் குழந்தைகளின் அணையாடைகளைத் துவைத்துப் பயன்படுத்தும் அல்லது வண்ணான் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கிறார்களா? ஒருமுறை பயன்படுத்தப்பட்டப் பின்னர் எறிந்துவிடும் குழந்தைகள் அணையாடைகள் இல்லாத ஓர் உலகத்தை எண்ணிப்பார்ப்பதும் அநேகருக்குக் கூடாததாய் இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழல் நிபுணர்களுக்கு இந்த முழு குப்பைப் பிரச்னைகளுக்கும் ஒருமுறை உபயோகித்தப் பின்னர் எறிந்துவிடப்படும் இந்தக் குழந்தை அணையாடைகள் ஒரு சின்னமாக ஆகிவிட்டிருக்கிறது. “மிகவும் மோசமான காரியம் என்னவெனில்,” யு.எஸ். நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் எழுதுகிறது, “1961-ல் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு பிளாஸ்டிக் அணையாடையும் இன்னும் இருக்கிறது; அவை முற்றிலும் சீரழிந்து போவதற்கு இன்னும் 500 ஆண்டுகள் எடுக்கும்.”
என்றபோதிலும் சுற்றுப்புறச் சூழல் நிபுணர்களும் அரசு அதிகாரிகளும் சொல்வது என்னவென்றால், நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் நம்முடைய சொந்த குப்பைக்கூளத்தில் புதைந்துவிட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய பின்னர் எறிந்துவிடப்படும் நவீன பொருட்கள் அவற்றைப் பயன்படுத்துகிறவர்களுக்கு வரப்பிரசாதமாய் இருக்கக்கூடும், ஆனால் பூமியின் குப்பைக் கூளத்திற்கு அது ஓர் அணுகுண்டாக இருக்கிறது. அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்குக்கு முடிவு என்பது அண்மையில் இல்லை. தற்போதைய ஞானத்திற்கு எதிராக, அமெரிக்கரால் ஒவ்வொரு நாளும் எறியப்படும் 16 கோடி கிலோகிராம் எடையுள்ள காகிதமும் உலகமுழுவதும் எறியப்படும் நாம் அறியாத அளவு காகிதமும் பல ஆண்டுகள் குப்பைக்கூளத்தில் புதைக்கப்பட்டிருந்தும் அழிந்துபோவதில்லை. 35 ஆண்டுகளுக்கு மேல் குப்பைக் கிடங்குகளில் புதைந்திருந்த செய்தித்தாள்கள் வெளியிடப்பட்ட அந்தத் தேதியில் இருந்தவிதமாகவே வாசிக்க முடிந்த நிலையில் இருந்தன.
மறு உபயோகம் செய்வதில் பிரச்னை
குப்பைக்கூளப் பிரச்னையைக் கையாளுவதற்கு நான்கு வழிகள் மட்டுமே இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது “புதைத்துவிடுங்கள், எரித்துவிடுங்கள், திரும்பப் பயன்படுத்துங்கள்—முதலிடத்தில் அதிகத்தை உண்டுபண்ணாதீர்கள்.” குப்பைக் கிடங்காக அமையும் நிலப்பரப்பில் புதைந்துகிடக்கும் குப்பைக்கூளம் பார்வைக்கு நச்சாக அமைவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடும். குப்பை அந்த நிலப்பரப்பில் அழுக ஆரம்பிக்கும்போது, அது நிறமணமற்றதும் எரியக்கூடியதுமான மித்தேன் என்ற ஒரு வாயுவை உண்டாக்குகிறது. கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மித்தேன் நிலத்தடியில் கசிந்து இடம்பெயர்ந்து சென்று, தாவரங்களை அழித்திடக்கூடும், அண்மையில் இருக்கும் கட்டிடங்களுக்குள் கசிந்து, நெருப்பு பட்டால் வெடித்திடவும் கூடும். சில சம்பவங்களில், மரணமும் விளைந்திருக்கிறது. வேதியில் நச்சுப்பொருட்கள் நிலத்தடியில் கசிவதால் நிலத்தடி நீர்த் தேக்கங்கள் அல்லது நீர்நிலைகள் அச்சுறுத்தப்படுகின்றன, மனிதனின் நீர்வளம் நச்சுப்படுத்தப்படுகின்றது.
நியுஸ்பிரின்ட் என்ற செய்தித்தாள் அச்சிடப்படும் காகிதத்தை மறு உபயோகம் செய்வதில் பிரச்னை அளவுக்கு அதிகமான உற்பத்தியாக இருக்கிறது. “உபயோகப்படாத செய்தித்தாள் இருப்புப் பட்டியல் எல்லாக் காலத்துக்குமான ஓர் உச்சப் பதிவைக் காட்டுகிறது,” என்றார் ஓர் அமெரிக்க காகித நிறுவனத்துப் பிரதிநிதி. “காகிதத் தொழிற்சாலைகளும் விற்பனையாளர்களும் தங்களுடைய இருப்புகளில் பத்து லட்சம் டன்களுக்கும் அதிகமான நியுஸ்பிரின்ட் காகிதத்தை வைத்திருக்கிறார்கள், இது ஓர் ஆண்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பாகத்தைக் குறிக்கிறது. இருப்புக் கிடங்குகள் முழுவதுமாய் நிரம்பிவிடும் கட்டம் வருகிறது.” இந்தக் காகிதக் குவியலின் பலனாக, தங்களுடைய காகிதத்துக்கு ஒரு டன்னுக்கு 40 டாலர் பெற்றுக்கொண்டிருந்த அநேக நகரங்கள் அதைக் குறைப்பதற்காக இப்பொழுது கான்ட்ராக்டர்களுக்கு டன்னுக்கு 25 டாலர் கொடுக்கின்றன—எரித்துவிடுவதற்காக அல்லது குப்பைக் கிடங்குகளில் அப்புறப்படுத்திவிடுவதற்காக.
பிளாஸ்டிக்குகள் பற்றி என்ன சொல்லப்படலாம்? “மறு உபயோகம் செய்வதற்கு ஆதரவு தேடி பிளாஸ்டிக் தொழில் அலைகிறது, பெரும்பாலும் எங்கும் காணப்படுகிற தன் உற்பத்திப் பொருட்கள் தடை செய்யப்பட்டுவிடுமோ என்ற பயத்தால் அப்படிச் செய்கிறது,” என்று யு.எஸ். நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் கூறியது. உதாரணமாக, பிளாஸ்டிக் புட்டிகள், பாலிஸ்டர் தரை விரிப்புகள், மலைப் பிரதேச ஆடைகள் போன்ற ஏராளமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கு இழைகளாக மாற்றப்படலாம். என்றபோதிலும் பிளாஸ்டிக் தொழில் சந்தையில் அதன் நிலை குறித்து கவலைப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. சில இடங்களில் சில்லறை உணவகங்களில் பாலிஸ்டிரீன் மற்றும் PVC (பாலிவினில் குளோரைடு) பொருட்களைப் பயன்படுத்துவதும் விற்பனை செய்வதும் சட்டப்பூர்வமாகவே தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தடை பிளாஸ்டிக் பலசரக்குப் பைகள், பாலிஸ்டிரீன் கோப்பைகள், தட்டுகள், சிற்றுண்டி உணவுக் கொள்கலங்கள் ஆகியவற்றையும் உட்படுத்துகிறது.
ஐக்கிய மாகாணங்களில் ஊராட்சித் திடக் கழிவுகளில் 75 சதவீதத்துக்கும் அதிகம் மறு உபயோகம் செய்யப்படக்கூடியது என்று கணக்கிடப்படுகிறது. என்றாலும், பொது மக்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடு மற்றும் தொழில்நுட்பத்திலுள்ள குறைபாடுகள் காரணத்தால் இந்தக் காரியம் இப்பொழுது செய்யப்படுவதில்லை. “மறுஉபயோகம் செய்யும் காரியம் மிகவும் ஆபத்தான காலக்கட்டத்திற்குள் பிரவேசிக்கிறது,” என்று மறு உபயோகத்தில் நிபுணர் ஒருவர் கூறினார். “இந்தத் தேக்கத்தைப் போக்குவதில் அநேக அரசுகளுக்குக் கஷ்டம் இருக்கிறது.”
குப்பைகளை ஊராட்சியின் இராட்சத எரி தொட்டிகளில் எரிப்பதே விடை என்பதாக சில அதிகாரிகள் கூறுகின்றனர். இதிலும் பிரச்னைகள் இருக்கின்றன. சுற்றுப்புறச் சூழல் நிபுணர்கள் எச்சரிப்பதாவது, பிளாஸ்டிக் மற்றும் வேறு குப்பைப் பொருட்களை எரிப்பது டையாக்சின் உட்பட வேதியல் நச்சு வாயுக்களைக் காற்றில் கலந்துவிடுகிறது. “ஓர் எரி தொட்டியை நீங்கள் டையாக்சின் தொழிற்சாலையாக எண்ணிப்பார்க்கலாம்,” என்றார் ஒரு பிரபல சுற்றுச்சூழல் நிபுணர். “இந்த எரி தொட்டிகள் ஈயம் மற்றும் தகர உலோகத்தால் நச்சுப்பட்ட சாம்பலை டன்கள் கணக்கில் உற்பத்தி செய்கின்றன,” என்று நியுஸ்வீக் பத்திரிகை கூறுகிறது. எரிதொட்டிகள் அமைக்கப்படுவதற்கான இடங்களுக்கு அண்மையில் வாழும் குடிமக்களிடமிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்படுகிறது. அதை எவருமே தங்கள் பகுதியில் கொண்டிருக்க விரும்புவதில்லை. அவை ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான அச்சுறுத்தலாயிருப்பதாகக் காண்கின்றனர். எனவே இந்தக் குப்பைக்கூள நெருக்கடி தொடர்ந்து உயருகிறது. இதற்கு விடை எவரிடத்திலாவது இருக்கிறதா? (g90 9/22)