பேப்பருக்கு ஆபீஸ் டாட்டா காட்டுமா?
இக்கட்டுரையின் கடைசி நகல், சாதாரண அளவு பேப்பரில் a 11 பக்கங்களில் அச்சிடப்பட்டது. பதிப்புக்கு வேண்டிய முறையில் திருத்தியமைத்தபோது கிட்டத்தட்ட 20 தடவை இது மறுபடியும் மறுபடியும் அச்சிடப்பட்டது. முடிவாக, உலகம் முழுவதிலும் இருக்கும் சுமார் 80 மொழிபெயர்ப்புக் குழுக்களுக்கு இவை அனுப்பிவைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவும் ஆறு மொழிபெயர்ப்பு நகல்களை அச்சிட்டன. மொத்தத்தில், பிரிண்டிங் பிரஸ்ஸுக்கு போவதற்குமுன், இந்தக் கட்டுரைக்காக செலவழிக்கப்பட்ட பேப்பர் 5,000-க்கும் மேலே!
கம்ப்யூட்டர் யுகத்தின் ஆரம்பத்தில், “பேப்பரில்லா அலுவலகம்” உடனடியாக வந்துவிடும் என்று பறைசாற்றிய சிலருடைய முன்னறிவுப்புகளுக்கு முரணாக இந்தக் குறிப்புகள் இருக்கின்றன. ‘எதையுமே பேப்பரில் பிரதி எடுப்பது, எலெக்ட்ரானிக் உவார்ட் ப்ராஸசிங் இயந்திரங்களை அநாகரிகமாக உபயோகிப்பதற்கும் இந்த இயந்திரங்களின் நோக்கத்தையே துச்சமாக நினைப்பதற்கும் சமம்’ என எதிர்கால கணிப்பாளர் ஆல்வன் டாஃப்லர், த தேர்ட் வேவ் என்ற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவெனில், 1981-ல், இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன், முதன் முதலாக பர்சனல் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியபோது, அதோடு பிரிண்டர் ஏதும் கொடுக்கவேண்டாம் என்றே விரும்பினர். கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறவர்கள், அதனுடைய மானிட்டரில் இருந்தே தகவல்களை வாசிக்க விரும்புவார்கள் என்றே அந்தக் கம்பெனி உணர்ந்ததாக சிலர் நினைத்தனர். எது எப்படியிருந்தாலும், “பேப்பரில்லா நந்தவனம்” வரும் என்றே சிலர் கனா கண்டனர். சீக்கிரத்தில் பேப்பர் மியூஸியத்திலும் தூசி படிந்த கலைக்கூடங்களிலும் காட்சிக்காக வைக்கப்படும் பொருளாகிவிடும் என்றே எண்ணினர்.
பேப்பர் வேண்டாம் வாக்குறுதிகள் vs உண்மை நிலை
பேப்பரில்லா அலுவலகத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்த்து நம்பிக்கொண்டிருந்த கருவியே, கடைசியில் கத்தை கத்தையான பேப்பருக்குள் நம்மை திணித்துவிட்டதுதான் உண்மை நிலை. உண்மையில், சமீப ஆண்டுகளில், பேப்பர் அதிகமாக செலவழிக்கப்படுவதாக சிலர் கணித்திருக்கின்றனர். “நம்முடைய அலுவலகங்களை தானியங்கிகளாக மாற்றியிருப்பதன்மூலம், பேப்பர் தயாரிக்கும் நம்முடைய திறமையை வருடத்திற்கு 25 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறோம்” என இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனில் உள்ள ஆராய்ச்சியாளர் ஸ்காட் மெக்ரிடி சொல்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், ஃபாக்ஸ் இயந்திரங்கள், எலெக்ட்ரானிக் மெயில், காப்பியர்கள், இன்டர்நெட் போன்றவை தகவல்களையும் எடுக்கவேண்டிய அச்சுப்பிரதிகளையும் ஒவ்வொரு நாளும் பெருமளவில் அதிகரித்து இருக்கின்றன. 1998-ல், உலகம் முழுவதிலும் 21.8 கோடி பிரிண்டர்கள், 6.9 கோடி ஃபாக்ஸ் இயந்திரங்கள், 2.2 கோடி பல்வகை செயலாற்றும் இயந்திரங்கள் (பிரிண்டர், ஸ்கேனர், காப்பியர் அடங்கியவை), 1.6 கோடி ஸ்கேனர்கள், 1.2 கோடி காப்பியர்கள் புழக்கத்தில் இருந்ததாக CAP வென்சர்ஸ், இன்கார்ப்பரேஷன் குறிப்பிடுகிறது.
ஐக்கிய மாகாணங்கள், ஒரு வருடத்தில் 1,30,000 கோடி ஆவணங்களை அச்சிட்டது. இவை, கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு முழுவதையும் சுற்றி அழகுபடுத்தும் அலங்கார பேப்பராக உபயோகிக்க போதுமானவை. ஒரு தடவை இரண்டு தடவையல்ல, 107 தடவை என பவர்ஷிஃப்ட் என்ற தன்னுடைய 1990-ம் வருட புத்தகத்தில் டாஃப்லர் குறிப்பிட்டிருக்கிறார்! இந்த எண்ணிக்கை மளமளவென உயர்ந்துகொண்டே போகிறது. 1995-ல், ஐக்கிய மாகாணங்கள் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 60 கோடி ஆவணங்கள் அச்சிட்டன. இவை, 270 கிலோமீட்டர் நீளமுள்ள மேசை டிராயரை தினம் தினம் நிரப்ப போதுமானவை என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டு துவங்குகையில், இந்த நிலையில் மாற்றம் வரும் என எதிர்பார்ப்பதற்கில்லை. இன்னும் அதிகமான தகவல்கள் பேப்பர்மூலம்தான் தெரிவிக்கப்படுகின்றன.
ஏன் இன்னும் பேப்பர்
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பேப்பரை ஒன்றுக்கும் உதவாததாக ஆக்கிவிடும் என்ற முன்னறிவிப்புகள் எல்லாம் எங்கே போயின? “கீபோர்டை விரல்நுனியால் லேசாக தட்டியதும் தகவல்கள் வருவதை மக்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆனால், விரல்களுக்கிடையில் [பேப்பரில்] தகவல்கள் இருப்பதையே விரும்புகின்றனர். அதை தொடவும் மடித்து வைக்கவும் அடையாளத்திற்காக பேப்பர் நுனியில் கொஞ்சம் மடிக்கவும் ஃபாக்ஸ் செய்யவும் பிரதி எடுத்து குறிப்புக்காக வைத்துக் கொள்ளவும் ஓரங்களில் கிறுக்கவும் அல்லது ரெஃப்ரிஜரேட்டரின் மேல் கண்ணில் படுகிறவாறு பெருமையாக ஒட்டிக்கொள்ளவுமே விரும்புகின்றனர். எல்லாவற்றையும்விட, பளிச்சென்று பலவண்ணங்களில் பிழைகள் இல்லாமல் சீக்கிரம் பிரிண்டரில் அச்சிடவே விரும்புகின்றனர்” என இன்டர்நேஷனல் பேப்பர் கம்பெனி ஊகிக்கிறது.
பேப்பரில் பல பயன்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாததே. எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மலிவானது, நீடித்து உழைப்பது, கோப்புகளாக தொகுத்து வைக்க எளியது, வீணாக்காமல் மறுபடியும் பயன்படுத்தக்கூடியது. தவறான பக்கத்தை எடுத்துவிட்டால் மிக சுலபமாக திருப்பிக்கொள்ளலாம். நீங்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர்கள் என்றும் எத்தனை பக்கங்களை தவறவிட்டுவிட்டீர்கள் என்பதையும் எளிதில் பார்த்துக்கொள்ளலாம். “ஜனங்களுக்கு பேப்பர் மோகம் அதிகம். கையால் தொட்டுப் பார்க்கவே விரும்புகிறார்கள்” என அலுவலகத்திற்கு தேவையான பேனா, பேப்பர் போன்ற பொருட்களை விற்கும் கம்பெனியின் பிரதிநிதி டேன் காக்ஸ் சொல்கிறார். “பேப்பரில்லா அலுவலகத்தை சாதிக்க அநேகர் முயற்சி செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், நாங்கள் பார்க்கும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் எல்லாவற்றிலும் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம்: அவை எல்லாமே குறைந்தபட்சம் ஒரு பிரிண்டரோடாவது இணைக்கப்பட்டு இருப்பதே” என அரிஜோனாவின் நூலகங்கள், சுவடிகள் மற்றும் பொது ஆவணங்கள் துறையில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஜெர்ரி மாலரி கூறுகிறார்.
மேலும், பழைய பழக்கங்களை அவ்வளவு சீக்கிரமாக விட்டுவிட முடியாது. இன்றைக்கு தொழிலில் இருக்கும் மக்கள் வளர்ந்ததே அச்சிடப்பட்ட பேப்பரில் படித்துத்தான். மௌஸை (mouse) ஒரு கிளிக் செய்தாலே போதும், எந்த ஒரு எலெக்ட்ரானிக் மெயிலையோ அல்லது ஆவணத்தையோ பிரிண்டரில் அச்சிட்டுவிடலாம். பிறகு, அவருக்கு எப்பொழுது படிக்க நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது அவர் எங்கே இருந்தாலும்சரி அதைப் படித்துக்கொள்ளலாம். பேப்பரை—படுக்கையில் இருந்து குளியலறைக்கோ அல்லது கடற்கரைக்கோ—எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லமுடியும்! ஆனால், கம்ப்யூட்டரையோ எல்லா இடத்திற்கும் தூக்கி செல்ல முடியாது.
மற்றொரு அம்சம்: கொஞ்ச நாட்களுக்கு முன்புகூட, அச்சுத்தொழிலில் கைதேர்ந்தவர்கள் மட்டுமே உருவாக்கும் சிலவகை ஆவணங்களை இப்பொழுது கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்களே மிக எளிதாக செய்யமுடியும். இதை சுலபமாக்கியது கம்ப்யூட்டர்களே. நகல்களைக் கலரில் பிரிண்ட் எடுப்பதிலிருந்து, சாதாரண முதல் படிவத்தையும், அறிக்கைகளையும் எளிதாக பிரிண்ட் எடுக்கலாம். படங்களோடுகூடிய குறிப்புகள், விளக்க அட்டவணைகள், வரைபடங்கள், விசிட்டிங் கார்டுகள், போஸ்ட்கார்டுகள்வரை எல்லாமே ரொம்ப சுலபமாக அச்சடித்துவிடலாம். இப்படிப்பட்ட செயல் திறமைகள் வேறு வேறு வழிகளில் பிரிண்டரில் அச்சடிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. கம்ப்யூட்டரை பயன்படுத்துபவர் ஒரு ஆவணத்தை அச்சடித்த பிறகு, அச்சு வடிவத்தையும் டிசைனையும் மாற்றி, மறுபடியும் மறுபடியும் அச்சடிக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை ஏற்படலாம். இதனால் பலமுறை பிரிண்டரில் மாற்றி மாற்றி அச்சிடுவார். அவர் சுயஉணர்வுக்கு வருமுன்னே, நிறைய அச்சுப் பிரதிகளை வைத்திருப்பார் என்று துல்லியமாகவே எதிர்பார்க்கலாம்!
கணக்கிலடங்கா விவரங்கள b தருவதன்மூலம் இன்டர்நெட்டும் இதே சூழ்நிலையைதான் உருவாக்கி இருக்கிறது. இன்டர்நெட்டை உபயோகிப்பவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிக் குறிப்புகளை பிரிண்டரில் அச்சிடுவதால், இது பெருமளவு பேப்பர்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாததாக்குகிறது.
எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரும் அது சம்பந்தப்பட்ட மற்ற உபகரணங்களும் மார்க்கெட்டை நிரப்புவதால், அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதை விளக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. இதை எவருமே மறுக்கமுடியாது. கம்ப்யூட்டர் அவ்வளவு பரவலாக உபயோகிக்கப்படுவதால், அதைப் பற்றிய பத்திரிகைகளும் கையேடுகளும் பிரவாகமாக பெருகியிருக்கின்றன.
கம்ப்யூட்டர் மானிட்டரில் இருந்து—குறிப்பாக பழைய மானிட்டர்களில் இருந்து—விவரங்களை வாசிப்பது சில குறைகளை உடையதாய் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கண்களுக்கு மிகவும் ஸ்ட்ரெயினாக இருப்பதாக இப்பொழுதும் சிலர் குறைகூறுகின்றனர். எது எப்படியிருந்தாலும், மானிட்டரில் வரும் தகவல்களை தெளிவாகவும் நுணுக்கமாகவும் பார்க்க, பழைய படக்காட்சி சாதனங்களின் தரத்தை இன்னும் பத்து மடங்கு முன்னேற்ற வேண்டுமென கணக்கிடப்பட்டிருக்கிறது.
மேலும், சிலருக்கு திரையில் பார்ப்பதைவிட, ஒரு துண்டு பேப்பர்தான் சிறந்ததாகவும் அவசியமானதாகவும்—ஏன் மிக விரைவானதாகவும், துல்லியமானதாகவும்—இருக்கிறது. அச்சிடப்பட்ட ஆவணம், ஒருவருடைய வேலைத் திறமைக்கும் முயற்சிக்கும் சிறந்த கண்கண்ட நிரூபணங்களாய் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஓர் எலெக்ட்ரானிக் செய்தியைவிட, ஒருவருடைய மேலதிகாரியின் அல்லது வாடிக்கையாளரின் கைகளில் இருக்கும் அச்சிடப்பட்ட ஆவணத்திற்கே அதிக கவனமும் செல்வாக்கும் உண்டு.
முடிவாக, கம்ப்யூட்டரில் விவரங்களை இழந்துவிடும் பயம் அநேகருக்கு இருக்கிறது. இந்த பயம் சரியானதே என்பதும் அடிக்கடி நிரூபிக்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் விவரங்களை பதிவு செய்து சேமிப்பதற்கு எவ்வளவுதான் அதிநவீன முறைகள் இப்போது இருந்தாலும், நம்முடைய கடினவேலைக்கு சான்றாய் இருப்பவை மதிப்புமிக்க தகவல்களே. இப்படி பல மணிநேரமாக நாம் பாடுபட்டு பதிவு செய்த தகவல்களை, திடீரென ஏற்படும் மின்தடை, டிஸ்க் குறைபாடுகள், அல்லது கம்ப்யூட்டரில் தவறான விசையை தட்டுதல் போன்றவற்றாலும் இழக்க நேரிடலாம். எனவேதான், பேப்பரே மிகவும் பாதுகாப்பானது என அநேகர் நினைக்கின்றனர். அமிலம் இல்லா பேப்பரின் ஆயுட்காலம் 200 முதல் 300 வருடங்கள். ஆனால், இதோடு ஒப்பிட, எலெக்ட்ரானிக் பதிவுகளின் ஆயுட்காலமோ மிக குறுகியதே என்று சில நிபுணர்கள் கூறுவது ஆச்சரியமாய் இருக்கலாம். எலெக்ட்ரானிக் தகவல்கள் மிக மிக மெதுவாகத்தான் சிதைவுறுகின்றன என்பதென்னவோ உண்மையே. ஆனால், தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் வளருகிறது. பழைய மாடல் ஹார்ட்வேர்களும் ஸாஃப்ட்வேர்களும் தூக்கியெறிப்பட்டு விடுவதால், பழைய கம்ப்யூட்டர் பதிவுகளை படிப்பது அதிக கடினமாகி விடலாம்.
பேப்பரில்லா அலுவலகம் என்ற கனவு பலிக்குமா பலிக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதற்கிடையில், பேப்பரின் சாவு பற்றிய அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற சொற்றொடரை மார்க் ட்வைனிடம் இருந்து கடன்வாங்குவது சரியே.
எல்லா மரங்களையும் அழித்துவிடுவோமா?
ஒரு மரத்தில் இருந்து எவ்வளவு பேப்பர் தயாரிக்க முடியும்? பல அம்சங்கள்—மரத்தின் அளவு, வகை, பேப்பரின் வகை, எடை—உட்பட்டிருந்தாலும், மார்க்கெட்டில் நன்கு விலைபோகும் பேப்பர் தயாரிக்கும் மரம் ஒன்றில் இருந்து சுமார் 12,000 எழுதும் அல்லது அச்சடிக்கும் பேப்பர்கள் தயாரிக்கலாம். இருந்தபோதிலும், பேப்பர்கள் இன்றும் பெருமளவில் உபயோகிக்கப்படுவதால், வறண்ட, வெறுமையான காடுகளின் அச்சந்தரும் காட்சிதான் கண்முன் வருகிறது. உயிரினங்களின் வாழ்க்கைச்சூழலையே அழிக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறோமா?
இந்த பீதியான நிலைக்கு எதிராக பேப்பர் தயாரிப்பாளர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பயனற்றப் பொருட்கள் என மரத் தொழிற்சாலைகளால் நிராகரிக்கப்படும் மரச் சில்லுகளை உபயோகித்தே அதிக அளவிலான பேப்பர் செய்யப்படுகின்றன. சில நாடுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேப்பர் இவ்விதமே தயாரிக்கப்படுகிறது. இதை இவ்விதம் உபயோகிக்கவில்லையென்றால் அது நிலங்களைச் சமப்படுத்தத்தான் அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, மரச் சில்லுகள் சிதைவுறும்போது மீதேன் என்னும் வாயுவை வெளியேற்றுகின்றன. பூமி உஷ்ணமாவதை துரிதப்படுத்தும் வாயு இது. எனவே, இந்த சில்லுகளை பேப்பர் தயாரிக்கும் ஆலைகள் நன்மையான விதத்தில் பயன்படுத்துகின்றன. ஆனால், காடுகளை சரியாக பராமரிக்காததாகவும் தூய்மைக்கேட்டை அதிகரிப்பதாகவும் வாடிக்கையாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொகுதிகள் பேப்பர் கம்பெனிகளைக் குற்றம்சாட்டுகின்றன. அவர்கள் வாதாடுவது, பேப்பர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் பூமியை உஷ்ணப்படுத்தும் வாயுக்களை வெளியேற்றுகின்றன என்பதே! நிலங்களை சமப்படுத்துவதற்காக பழைய பேப்பர்களை உபயோகிப்பதால், அவை சிதைவுறும்போது இன்னும் அதிகமாக இந்த வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
என்றபோதிலும், பூமியின் இயற்கை வளங்களை மொட்டையடிக்காமல், தேவையான அளவு பேப்பரை தயாரிப்பது சாத்தியமே என உவர்ல்ட் பிஸினஸ் கவுன்சில் ஃபார் சஸ்டெய்னபிள் டெவலப்மண்ட் மேற்கொண்ட ஓர் ஆய்வு முடிவுக்கு வந்தது. அதற்கு ஒரு காரணம், மரங்கள் மறுபடியும் துளிர்த்துவிடும்; பேப்பரையும் திரும்பவும் பயன்படுத்தமுடியும். இருந்தபோதிலும், “பேப்பர் தயாரிப்பு தொழிலைப் பொறுத்தவரை—காடுகளை நிர்வகித்தல், மரக்கூழ், பேப்பர் தயாரித்தல், பேப்பரை உபயோகித்தல், பழைய பேப்பரையே புதிதாக்குதல், ஆற்றலை புதுப்பித்தல், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் போன்ற பல கட்டங்கள் இருக்கின்றன. இந்த சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் முறைகளில் இன்னும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என அந்த ஆய்வு வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலை கெடுக்காமலும் சிக்கனமான முறையிலும் மரக்கூழ் தயாரிக்க, கோதுமை உமி, வேகமாக வளரும் மரங்கள், சோளம், சணல் போன்ற மற்ற கச்சாப் பொருட்களை பயன்படுத்துவதைக் குறித்து பேப்பர் கம்பெனிகள் சிந்தித்து வருகின்றன. இந்த முறை எந்தளவுக்கு சிறந்தது என்றும் நடைமுறைக்கு ஒத்தது என்றும் காலம்தான் பதில் சொல்லும்.
[அடிக்குறிப்புகள்]
a மேற்கோள் குறிப்புகள், படங்கள் பற்றிய குறிப்புகள் உட்பட.
b ஜூலை 22, 1997 விழித்தெழு! பிரதியில் வெளிவந்த “இன்டர்நெட்—உங்களுக்கு உண்மையிலேயே தேவையா?” என்ற தொடர் கட்டுரையைக் காண்க
[பக்கம் 27-ன் பெட்டி]
அலுவலகத்தில் பேப்பர் வீணாவதை எப்படி குறைப்பது
✔ எவ்வளவு குறைவாக பிரிண்டரில் அச்சடிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக அச்சடியுங்கள். ஆவணங்களில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் திருத்தங்களையும் திரையிலேயே செய்யுங்கள். நீங்கள் பேப்பரில் எடுக்க வேண்டிய பிரதிகளையும் நகல்களையும் மட்டுப்படுத்துங்கள்.
✔ பெரிய ஆவணங்களுக்கு, வாசிப்பதற்கு முடிந்த சிறிய அளவு எழுத்துக்களை பயன்படுத்துங்கள்.
✔ ஓர் ஆவணத்தை அச்சிடும்போதோ அல்லது பிரிண்ட் எடுக்கும்போதோ, ஒவ்வொரு பக்கத்திலும் கொட்டை எழுத்துக்களில் தலைப்புகள் வரும் ஏற்பாட்டை வைத்திருந்தால், அந்த முறையை தவிர்த்திடுங்கள்.
✔ பழைய பேப்பரையே புதிதாக்குங்கள். (Recycle)
✔ பழைய பேப்பரை புதிதாக்குவதற்குமுன், (Recycle) ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்ட பேப்பரை தனியாக வைத்து, பிறகு பிரதிகள் எடுக்கவோ அல்லது ஒன்சைடு பேப்பராகவோ உபயோகியுங்கள்.
✔ பிரிண்ட் எடுக்கும்போதும், காப்பி எடுக்கும்போதும் முடிந்த போதெல்லாம், இரண்டு பக்கமும் உபயோகியுங்கள்.
✔ ஒரு அலுவலகத்திற்கு உள்ளேயே ஆவணங்களை பலர் வாசிக்கவேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி எடுப்பதைவிட ஒரு பிரதி எடுத்து அதையே எல்லோருக்கும் வாசிக்க அனுப்புங்கள்.
✔ பேப்பரில் பிரிண்ட் எடுப்பதை தவிர்க்க, கம்ப்யூட்டரில் இருந்தே நேரடியாக ஃபாக்ஸ் செய்யுங்கள். பேப்பரில் பிரிண்ட் எடுத்த பக்கத்தை உபயோகித்து ஃபாக்ஸ் அனுப்ப வேண்டி இருந்தால், ஒவ்வொரு தடவையும் கவர் ஷீட்டை அச்சிடாமல் பேப்பரை மிச்சப்படுத்துங்கள்.
✔ ஈ-மெயில் செய்திகளை அச்சடிப்பதை தவிருங்கள்.
[பக்கம் 14-ன் படம்]
பேப்பரில்லா அலுவலகத்தை கொண்டு வரவேண்டிய கருவியே நம்மை கத்தை கத்தையான பேப்பருக்குள் திணித்துவிட்டது என சிலர் வாதிடுகின்றனர்
[பக்கம் 14-ன் படம்]
சில சமயங்களில், கம்ப்யூட்டரை உபயோகிப்பதைவிட அச்சிடப்பட்ட பேப்பரே சுலபம்