உலகத்தைக் கவனித்தல்
ரத்தப் பணம்
ரத்தமேற்றிக் கொண்டதன் மூலமும் ரத்தப் பொருட்கள் மூலமும் சுமார் 2,500 பேர் HIV தொற்றப்பெற்றிருக்கின்றனர் என்று அறிந்தபோது, 1994-ல் ஜெர்மனி நாட்டு பொதுமக்கள் அதிர்ச்சியுற்றனர். (விழித்தெழு! ஏப்ரல் 22, 1994-ல் பக்கம் 28-ஐப் பாருங்கள்.) ஜனவரி 1995-ல் நடந்த பாராளுமன்ற விவாதத்தின்போது, மத்திய சுகாதார அமைச்சர், பலியாட்களின் துன்பத்தை அதிகரித்திருக்கிற தவறுகளுக்காக, “மத்திய அரசின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்” என்பதாக ஸ்யெட்டாய்ச்செ ட்ஸைட்டுங் அறிவிக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் டாக்டர்களுமே இதற்கு முக்கியமாக பொறுப்புள்ளவர்கள் என்றும், “ரத்தத்திலிருந்து மருந்து தயாரிக்கும் நிறுவனமாக ஆவதற்கு” கடுமையாக முயற்சித்த ஜெர்மானிய செஞ்சிலுவைச் சங்கம் தனது நற்பெயரைக் கெடுத்துக்கொண்டது என்றும் அவர் சொன்னார். இறந்துபோன தனது கணவனிடமிருந்து HIV தொற்றப்பெற்ற ஒரு பெண்மணி புலம்பியதாவது: “அந்த [மருந்து கம்பெனி] மட்டும் பணம் சம்பாதிக்கிறதவிட அதிகத்த யோசித்திருந்தா அந்த ரத்த ஒழுக்கு நோயாளிகள் 700 பேரும் இன்னும் உயிரோட இருந்திருப்பாங்களே.”
பாதிரிகளுக்கான பஞ்சம்
கத்தோலிக்க மிஷனரிகளை ஏற்றுமதி செய்வதற்கு ஒருகாலத்தில் பெயர்பெற்ற ஸ்பெய்ன் இப்போது உள்ளூர் தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமான பாதிரிகளைக் கொடுப்பதற்கே திண்டாடுகிறது. ஸ்பெய்னிலுள்ள பாதிரிகளின் மொத்த எண்ணிக்கையில் வருடாவருடம் 150 குறைந்துகொண்டு வருகிறது என்பதாக மாட்ரிட் நகர செய்தித்தாள் எல் பாயிஸ் அறிவிக்கிறது. பாதிரிகளுக்கான எதிர்கால தேவையைப் பூர்த்திசெய்ய தற்போது குருமடங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் 2,000 மாணாக்கர்கள் போதுமானவர்களாக இருக்கமாட்டார்கள் என்று சர்ச் நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். போன வருடம் 216—1993-ஐவிட 73 குறைவான—பாதிரிகளுக்கு மட்டுமே பட்டமளிக்கப்பட்டது. ஸ்பானிய குருவர்க்கத்தில் 70 சதவீதத்தினர் 50-க்கும் மேற்பட்ட வயதினராக இருக்கின்றனர். மறுபட்சத்தில், சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளோ தங்கள் மத்தியில் பயனியர் சேவை செய்வோரின் எண்ணிக்கையில் வருடாவருடம் 300 அதிகரித்துக்கொண்டு போவதாகக் காண்கின்றனர். பயனியர்கள் என்றால் ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 90 மணிநேரத்தை செலவழிக்கும், ஊதியமேதுமின்றி சேவைசெய்யும் ஊழியர்களாக இருக்கின்றனர்.
ரத்தமேற்றுதலின் அதிக அபாயங்கள்
ஆஸ்திரேலியாவின் தி கேன்பரா டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறபடி, மாசுபடுத்தப்பட்ட ரத்தம் சாவுக்கேதுவான பாக்டீரிய தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்றும் இந்நாள்வரை இந்த நுண்கிருமிகளைத் தடுப்பதற்கு திட்டவட்டமான வழி ஒன்றும் கிடையாது எனவும் செஞ்சிலுவைச் சங்கம் டாக்டர்களுக்கு எச்சரிப்பு விடுத்திருக்கிறது. நியூ சௌத்வேல்ஸ் மாகாணத்தில் 1980 முதல் 1989 வரை பாக்டீரியாவால் மாசுபடுத்தப்பட்ட இந்த ரத்தத்தால் நான்கு பேர் இறந்தனர் என்று தி மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்திரேலியா பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டுக்காட்டி டைம்ஸ் செய்தித்தாள் சொல்கிறது. அந்தச் செய்தித்தாள் கட்டுரை மேலும் சொன்னதாவது: “பிரச்சினை என்னவென்றால், யெர்ஸினியா எண்டெரோகோலிட்டிக்கா என்ற இந்த பாக்டீரியா, மாசற்ற ரத்தம் உள்ள பாக்கெட்களிலும், ரத்தத்தின் வெப்ப அளவு உறைநிலைக்கு அருகில் இருந்தாலும்கூட படுவேகமாக இனப்பெருக்கம் செய்ய வல்லதாய் இருக்கிறது. ரத்த தானம் செய்வதற்கு ஒருசில வாரங்களுக்குமுன் இரைப்பையில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தவர்கள் சிலசமயங்களில் இந்தக் கிருமிகளைக் கடத்திவிடுகின்றனர். பின்னர் இந்த ரத்தம் ஏற்றப்படுவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும்போது இவை பேரெண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்கின்றன. ரத்தமேற்றிக்கொண்ட நோயாளிகள் தீவிர நச்சு அதிர்ச்சியால் உபத்திரவப்பட்டு இறக்கின்றனர்.”
கனடாவின் தடிப் பிள்ளைகள்
“சோர்வுற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திட்டமிடப்படாத, அளவுக்குமீறி செயல்முறைப்படுத்தப்பட்ட, அதிக கொழுப்புச்சத்துள்ள உணவைக் கொடுத்துவருகின்றனர் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அநேகர்” கூறுவதாக தி க்ளோப் அண்ட் மெய்ல் அறிவிக்கிறது. பெரும்பாலும் பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ள நேரமே கிடைக்காத அளவுக்கு வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாய் இருக்கிறது. அதன் விளைவு? நிபுணர்கள் மதிப்பிடுகிறபடி, “அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு, உடற்பயிற்சியின்மை ஆகிய இவையிரண்டும் கலந்த காரணத்தால், கனடாவின் பிள்ளைகளில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தினர் தடியர்களாக இருக்கின்றனர்,” என்று தி க்ளோப் கூறுகிறது. மான்ட்ரீலில் உள்ள மேக் கில் பல்கலைக்கழகத்தில் திட்டவுணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையின் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஸ்டான் கூபோ, சமநிலை தேவை என்று கூறுகிறார். பெற்றோர்கள் “தங்களுடைய [பிள்ளைகளின்] உணவில் பால்பண்ணைப் பொருட்கள், புரோட்டீன், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து போன்றவை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று அவர் சொன்னார். அக்கறையுள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர் கேட்டார்: “உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்கள் கவனிக்கவில்லையென்றால், பிறகு எதைத்தான் கவனிப்பீர்கள்?”
ஆஸ்பெஸ்டாஸ் எச்சரிப்பு தொடர்கிறது
பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளின் தவறான கணிப்பின் காரணமாக, ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் கட்டிடத் தொழிலாளர்கள் கல்நார் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் இறந்துபோவார்கள் என்று அறிவிக்கிறது நியூ சயண்டிஸ்ட் பத்திரிகை. அநேக வருடங்களுக்குமுன், 1960-களில், ஆஸ்பெஸ்டாஸில் உள்ள நார்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக இருக்கின்றன என்று மருத்துவ நிபுணர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, காற்றில் இருக்கும் இந்த நார்களின் அடர்த்தியைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் தொழிற்சாலை ஒழுங்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்திற்று. எனினும், மிக அதிக ஆபத்திலிருக்கும் தொழிலாளர்கள் தச்சு வேலைக்காரர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், வாயுத் தொழிலாளிகள், ஆஸ்பெஸ்டாஸ் சம்பந்தமான பொருட்களை வைத்து பாதுகாப்பின்றி வேலைசெய்தவர்கள் ஆகியோர்களாவர் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஒருவகை நுரையீரல் புற்றுநோய் வளர்வதற்கு 30 வருடங்கள் தேவைப்படுவதால், அவர்கள் செய்த தவறு சமீபத்தில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது எந்தெந்த கட்டிட செய்முறைகள் அல்லது ஆஸ்பெஸ்டாஸ் பொருட்கள் மிகவும் அபாயமானவை என்று தெரியவில்லை. இதன் விளைவாக, ஆஸ்பெஸ்டாஸ் அடங்கியுள்ள ஒரு பொருளென்று கண்டுபிடித்தால் மிகமிக எச்சரிக்கையாக இருக்கும்படியாகவும், அவர்களுடைய கவலைகளை, அப்பொருட்களை சோதித்து போதுமான பாதுகாப்பு தரவேண்டிய கடமையிலிருக்கும், தங்களுடைய முதலாளிகளிடம் தெரியப்படுத்தும்படியாகவும் பிரிட்டனின் சுகாதார மற்றும் பாதுகாப்பு செயற்குழு கட்டிடத் தொழிலாளர்களை உத்வேகப்படுத்துகிறது.
ஜெயிப்பது யார்?
“சூதாட்ட வியாபாரத்தில், நெருக்கடி ஏதுமில்லை,” என்று அறிவிக்கிறது வேழா பத்திரிகை. பிரேஸில் நாட்டவர் வருடத்திற்கு சுமார் $4 பில்லியன் (யூ.எஸ்.) லாட்டரியிலும் மற்ற வகை சூதாட்டங்களிலும் செலவிடுகின்றனர் என்று இந்தப் பத்திரிகை கூறுகிறது. இந்தத் தொகை ஒரு மிகப் பெரிய தேசீய மோட்டார் வாகன தொழிற்சாலையின் வருடாந்தர வருமானத்தைவிடவும் அதிகமாக இருக்கிறது! பிங்கோ களியாட்டத்தின்மீதுள்ள கவர்ச்சி இதன் சமூகத்தொடர்பான அம்சங்களாக சொல்லப்படுகிறது. “பிங்கோ களியாட்டத்தில் முன்பின் தெரியாதவர்களோடோ பழக்கப்பட்டவர்களோடோ சேர்ந்து பேசிக்கொண்டிருக்க, சாப்பிட, குடிக்க, சூதாடிக்கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாரவாரம் செய்ய முடியும்,” என்று இந்தப் பத்திரிகை அறிவித்தது. ஆனால் ஜெயிப்பது யார்? “வேறெந்த வகையான சூதாட்டமும் இவ்வளவு அதிகமான லாபம் தருவதில்லை. [பிங்கோவில்] ஒரு சுற்றில் ஜெயிப்பவர் பந்தயப் பணமாக வைக்கும் அவ்வளவு தொகையில் 45 சதவீதத்தை மட்டுமே பெறுகிறார்” என்று ஆஸ்வல்ட் ட சோஸா அடித்துக்கூறுகிறார்.
பிரச்சினைகள் பரிகாரங்களை மிஞ்சுகின்றன
இந்திய அரசாங்கம் உலகிலேயே மிகப் பெரிய சத்துணவுத் திட்டத்திற்கு நிதி கொடுத்துவருகிறபோதிலும், அந்நாட்டில் இன்னும் 25 கோடி மக்கள் வெவ்வேறு அளவிலான சத்துணவு பற்றாக்குறையினால் அல்லல்பட்டு வருகின்றனர். எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் அனைத்தும் இருந்தபோதிலும் இந்தியாவில், 43.8 சதவீத குழந்தைகள் மித அளவு புரோட்டீன் சக்தி ஊட்டக்குறைவினால் அவதிப்படுகின்றன என்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி அறிக்கை ஒன்று காட்டுகிறது. இது மட்டுமல்லாமல், 66 லட்சம்பேர் சிறிதளவு வளர்ச்சி குறைந்தவர்களாகவும் எதோவொரு வகை இயங்கு நரம்பு முடமாக்கப்பட்டவர்களாகவும், 22 லட்சம் பேர் குன்றிய வளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வைட்டமின் குறைவினால் ஒவ்வொரு வருடமும் 60,000 பேர் பார்வை இழக்கின்றனர். பள்ளிப்பருவத்திற்கு முற்பட்ட வயதிலுள்ள பிள்ளைகளில் 56 சதவீதத்தினருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறது, மேலும் கழலை உள்ளவர்களில் 4 கோடியினர் பிள்ளைகளாகவும் இருக்கின்றனர்.
ஒடுங்கிப்போன டப்பாவில் அடைக்கப்பட்ட உணவை வாங்குதல்
“பலசரக்குக் கடைக்காரர்கள் பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில், மிகுந்த ஆபத்தென கருதி தூக்கியெறியவேண்டிய டப்பாக்களில் அடைத்துவைத்த உணவுப்பண்டங்களை வாங்கலாம் அல்லது வைத்திருக்கலாம்,” என்று எச்சரிக்கிறது வின்னிப்பெக் ஃப்ரீ ப்ரெஸ். “ஒடுக்கங்கள் உள்ள டப்பாக்கள் அநேகத்தை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சிலவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது,” என்று அந்நகரத்தின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பீட்டர் பேரிஸ் சொன்னார். “சாதாரணமாக டப்பாக்களில் அடைக்கும்போது அவை பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன; பின்னர் அவற்றில் ஒடுக்கங்கள் ஏற்படுகின்றன.” அந்நகர சுகாதாரத் துறை சொல்கிறபடி, எதைத் தூக்கியெறிய வேண்டும் என்ற ஒரு சுருக்கமான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறவற்றை உள்ளடக்குகிறது: இணைப்புகளில் துருப்பிடித்திருக்கும் டப்பாக்கள், டப்பாவின் மேல்பாகத்தில் துருப்பிடித்திருத்தல், அல்லது உடற்பகுதியில் எளிதில் துடைக்கமுடியாத துரு, குலுக்கிப் பார்க்கும்போது வரும் சளக்சளக்கென்ற சப்தம், ஏதாவது வகையில் உப்பியிருக்கும் அல்லது வீங்கியிருக்கும் டப்பாக்கள், கசியும் டப்பாக்கள், அல்லது தேதி எழுதியில்லாத அல்லது தேதி தாண்டிய லேபிள்களைக்கொண்ட டப்பாக்கள் ஆகியவையாகும். அந்தச் செய்தித்தாள் அறிக்கை இவ்வாறு எச்சரிக்கிறது: “அடைப்பு ஒருமுறை பழுதடைந்துவிட்டதென்றால், டப்பாக்கள் சால்மொனெல்லா, ஸ்டஃபைல்லோகாக்கஸ் ஆகிய பாக்டீரியாக்களின் சரியான இனப்பெருக்கக் களங்களாக மாறிவிடுகின்றன. பாக்டீரியா உள்ள ஒவ்வொரு டப்பா உணவும் பேதி, வாந்தி, தசைப் பிடிப்பு ஆகியவற்றை விளைவிக்கிறது.”
குறைந்த பிறப்பு வீதம்
பணம் மற்றும் வேலை சம்பந்தமாக பாதுகாப்பின்றி உணர்வதால் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் அநேக தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுகிறார்கள். இந்த “பாதுகாப்பற்ற உணர்ச்சியானது பிறப்பு வீதத்தில் ஒரு திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், திருமண வீதத்திலும் குறைவை ஏற்படுத்தியிருக்கிறது, மேலும் கருத்தடை செய்துகொள்வதில் பத்து மடங்குக்கும் கூடுதலான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. மக்கள்தொகை நிபுணர்கள் சொல்கிறபடி, “அத்தகைய திடீர் குறைவு யுத்த காலங்கள், கொள்ளைநோய் அல்லது பஞ்ச காலங்கள் தவிர இதற்குமுன் வேறு ஒருபோதும் ஏற்பட்டது கிடையாது,” என்பதாக டைம்ஸ் தொடர்ந்து கூறுகிறது. இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த, பெல்ஜியம், போர்ச்சுகல், போலந்து, லக்ஸம்பர்க், ஹங்கேரி ஆகிய நாட்டின் அரசாங்கங்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை உற்சாகப்படுத்துவதற்கு சன்மானமாக சிலகாலமாக பணம் கொடுத்துவந்தது. வெகு சமீபத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த மாகாணமாகிய பிராண்டன்பர்க் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் $650 கொடுக்கத் தொடங்கிற்று.
நீடித்திருக்கும் போரின் விளைவுகள்
முன்னாள் யுகோஸ்லாவியாவில் நடந்த போரில் பலியானவர்களில் தோட்டாக்கள் அல்லது குண்டுகளால் கொல்லப்பட்டவர்களையும் ஊனமாக்கப்பட்டவர்களையும் மட்டுமல்லாமல் அதிகமானோரை உட்படுத்துகிறது. “சுடுதலாலும், வெடிப்புகளாலும், ரசாயனக் கசிவுகளாலும் சுற்றுச்சூழலுக்குள் செலுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள நச்சுப் பொருட்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான பாதிப்புகளைக் கொண்டிருக்கும்” என்று சமீபத்தில் நடத்திய ஒரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியதாக தி மெடிக்கல் போஸ்ட் கூறுகிறது. இந்த ரசாயனப் பொருட்களும் நச்சு உலோகங்களும் ஆறுகளை மாசுபடுத்துகின்றன, மேலும் நிலத்தடி நீரையும்கூட தூய்மையற்றதாக ஆக்கலாம். போஸ்ட் சொல்லுகிறபடி, “நச்சுப் பொருட்களால் மாசுபடுத்தப்பட்ட குடிநீரை பெற்றோர்கள் குடித்ததன் காரணமாக பிறவி ஊனத்தோடு பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.