உணவின் மூலம் பரவும் நோயிலிருந்து உங்களைப் பாதுகாப்பீர்
“என்னால் கழிவறையை 12 மணிநேரங்களுக்கு விட்டுவர முடியவில்லை. நம்பமுடியாத அளவுக்கு தசைப்பிடிப்பு வலி. என் உடல் நீர் குறைவினால், மருத்துவமனையின் அவசரப்பிரிவு அறையில் எனக்கு IV (சிரை வழி) மூலம் நீர்மம் ஏற்றப்பட்டது. நான் மீண்டும் இயல்பான நிலையை அடைவதற்குள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆயிற்று,” என்று பெக்கி கூறுகிறார்.
உணவு நச்சு, அதாவது உணவின் மூலம் பரவும் நோயால் பெக்கி பாதிக்கப்பட்டார். பாதிக்கப்படும் அநேகரைப் போல் அவரும் பிழைத்துக் கொண்டார். ஆனால் அவர் பட்ட பாடு நினைவில் காட்சிபோல் நிற்கிறது. “உணவு நச்சு உங்களை அவ்வளவு அலுப்படையச் செய்யும் என்று நான் எப்போதுமே உணர்ந்ததில்லை,” என்று அவர் கூறுகிறார்.
இது போன்ற அனுபவங்களும், இதைவிட இன்னும் மோசமான அனுபவங்களும் தொல்லைப்படுத்தும் விதத்தில் பரவலாக உள்ளன. டஜன் கணக்கான பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் ஓரணு உயிரிகள் நம் உணவை நச்சுப்படுத்துவதாக அச்சுறுத்துகின்றன. தொழில்மயமான நாடுகளில் சமீப ஆண்டுகளில், சில வகையான உணவின் மூலம் பரவும் நோய்கள் குறைக்கப்படுகையில், “சால்மொனெல்லாசிஸ் நோயும் மற்ற நோய்களும் அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தோல்வியடையச் செய்கின்றன,” என்று உலக சுகாதாரம் (ஆங்கிலம்) பத்திரிகை அறிக்கையிடுகிறது.
உணவு நச்சால் நிகழும் சம்பவங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது, ஏனென்றால், பல நோயாளிகளைப் பற்றிய அறிக்கை இல்லாமலே போய்விடுகிறது. ஐ.மா.-வின் நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்பதைச் சேர்ந்த டாக்டர் ஜேன் கோலர் கூறுகிறார்: “நாம் அதைப் பற்றி அறிந்திருப்பதன் அளவானது ஒரு பெரிய பனிக்கட்டியின் வெறும் சிறிய நுனியைத்தான்.”
உணவின் மூலம் பரவும் நோயை எது உண்டாக்குகிறது? அங்காடிக்கு உணவு வந்து சேருவதற்கு வெகு முன்பே பிரச்சினை ஆரம்பமாகிவிடுகிறது என்று அறியும்போது நீங்கள் ஒருவேளை ஆச்சரியமடையலாம்.
கொள்ளை நோய் பண்ணைத்தொழில்
நவீன பண்ணைத் தொழில் நுட்பங்கள் அனைத்தும் கால்நடைகளுக்கு இடையே நோய்க் கிருமிகள் வேகமாக பரவுவதை கிட்டத்தட்ட உத்தரவாதம் அளிக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் மாட்டிறைச்சித் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 9,00,000 பண்ணைகளிலிருந்து வெட்டுவதற்காகக் கொண்டுவரப்படும் கன்றுகள் நூற்றுக்கும் குறைவான கொட்டில்களில் அடைத்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு கலந்து வைப்பது, ஒரு பண்ணையின் தொற்றுநோய் கொள்ளை நோயாக தொடங்குவதற்கு காரணமாகலாம்.
மேலுமாக, ஐக்கிய மாகாணங்களில் “முப்பது சதவிகித அல்லது அதற்கும் அதிகளவான விலங்கு தீவனம் நோய்க்கிருமிகளால் கெட்டுள்ளன,” என்று கால்நடை மருத்துவர்களின் தேசிய கூட்டிணையாட்சி கூட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் எட்வர்டு எல். மென்னிங் குறிப்பிடுகிறார். அதிகப்படியான புரோட்டீனை பெறுவதற்காக சில சமயங்களில் விலங்கு தீவனத்துடன் இறைச்சிக் கொட்டிலின் கழிவுகளையும் சேர்க்கும் பழக்கம் சால்மொனெலா மற்றும் மற்ற கிருமிகளைப் பரவச்செய்யும். விலங்குகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக சிறிய அளவில் கொடுக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்திற்கு எதிராக கிருமிகள் மருந்தை-எதிர்ப்பவையாக செயல்படுகின்றன. “ஒரு நல்ல உதாரணம் சால்மொனெல்லா கிருமி, அது நோய்த் தடுப்பு மருந்தை அதிகமதிகமாக எதிர்க்கும் ஒன்றாக மாறுகிறது. உணவு விலங்குகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால் நாம் இவ்வாறு நினைக்கிறோம். மற்ற பாக்டீரியாக்கள் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கலாம்,” என்பதாக நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் டாக்டர் ராபர்ட் வி. டாக்ஸ் கூறுகிறார்.
ஐக்கிய மாகாணங்களில், பண்ணையிலிருந்து இறைச்சிக் கொட்டிலுக்கு வரும்போது கோழிகளின் குடல்களில் சால்மொனெலாசிஸ் குறைவான சதவிகிதத்தில் மாத்திரமே உள்ளது. ஆனால், “இது இருபதிலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் வரை போக்குவரத்தில் படுவேகமாக அதிகரிக்கிறது,” என்று நுண்ணுயிரியல் வல்லுநர் நெல்சன் காக்ஸ் வாதிடுகிறார். சிறு கூண்டுகளில் திணிக்கப்படுவதால், கோழிகளுக்கு எளிதில் நோய் தொற்றக்கூடும். உச்ச வேகத்தில் வெட்டுவதும் பதப்படுத்துவதும் ஆபத்தை அதிகரிக்கிறது. “கடைசியாக இந்தப் பறவைகள் நுகர்வோரை அடையும்போது, ஒருவேளை அவற்றை அழுக்கான கழிவறையில் முக்கி எடுத்தால் எவ்வளவு தூய்மையாக இருக்குமோ அதைவிட தூய்மையாக இருப்பதில்லை. அவை கழுவப்பட்டிருக்கலாம், ஆனாலும் கிருமிகள் இன்னும் அங்கே இருக்கின்றன” என்று நுண்ணியிரியல் வல்லுநர் ஜெர்ரால்டு கஸ்டர் வாதிடுகிறார்.
இதேபோல், பிரமாண்டமான அளவில் இறைச்சியைப் பதப்படுத்துவதும் ஆபத்தானதாக இருக்கலாம். “நவீன பதப்படுத்தும் இயந்திரங்களில் உணவு ஈடுகள் ஒவ்வொன்றும் மிகப் பெரியளவில் உள்ளதால், வந்து சேரும் ஓரிரண்டு கெட்டுப்போன தொகுதிகள், டன்கணக்கில் தயாராகிவிட்ட உணவுப்பொருளைக் கெடுத்துவிடக்கூடும்,” என்று பொதுவான நோய்களின் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) கூறுகிறது. உதாரணமாக, மாட்டிறைச்சியின் ஒரு சிறிய கெட்டுப்போன துண்டு, அதே அரவை இயந்திரத்திலிருந்து வெளிவரும் அரைத்த அனைத்து மாட்டிறைச்சியையும் கெட்டுப்போகச் செய்யலாம். மேலும், ஒரு மையத்தில் தயாரிக்கப்படும் உணவை, பிற்பாடு கடைகளுக்கும் உணவகங்களுக்கும் எடுத்துச்செல்கையில், எடுத்துச்செல்லப்படும் சமயத்தில் ஒருவேளை சீரான தட்பவெப்பநிலையைக் காக்கவில்லை என்றால் கெட்டுப்போகும் வாய்ப்பு இருக்கிறது.
சந்தைக்கு வந்துசேரும் எவ்வளவு உணவு அபாயத்திற்குள்ளாகும் வாய்ப்பிலிருக்கிறது? “சில்லறை விற்பனை செய்யப்படும் அனைத்திலும் குறைந்தபட்சம் 60 சதவிகிதம்,” என்று ஐக்கிய மாகாணங்களைப் பற்றிப் பேசுகையில் டாக்டர் மென்னிங் வாதிடுகிறார். ஆனால் உணவின் மூலம் பரவும் நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் சில படிகளை எடுக்கலாம், ஏனென்றால் “அத்தகைய நோய்கள் அனைத்திலும் 30 சதவிகிதம் வீட்டில் உணவைப் பாதுகாப்பில்லாமல் கையாளுவதன் விளைவுதான்,” என்று எஃப்டிஏ (உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை [Food and Drug Administration]) கன்ஸ்யூமர் என்னும் பத்திரிகை குறிப்பிடுகிறது. என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்?
நீங்கள் அதை வாங்கும் முன் . . .
லேபிளை வாசிக்கவும். அதிலுள்ள கலவைகள் யாவை? சாலடு டிரஸ்ஸிங் அல்லது முட்டை-பாலேடு-புளிக்காடி கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து (mayonnaise) போன்றவற்றில் இருப்பதைப்போன்று பச்சை முட்டைகள் கலந்திருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள். பால், பாலாடைக்கட்டி ஆகியவற்றில் “வெப்பத்தூய்மையாக்கல் செய்யப்பட்டது” (pasteurized) என்ற லேபிள் ஒட்டியிருப்பது அவசியம். “இதற்குள் விற்கவும்” “இதற்குள் பயன்படுத்தவும்” போன்ற எச்சரிக்கை தேதிகளைக் கவனியுங்கள். இயற்கையான பொருட்கள் என்று சொல்லப்படும் அனைத்தும் பாதுகாப்பை உறுதியளிக்கிறது என்று ஊகிக்காதீர்கள்; ஒருவேளை அவை இரசாயன சேர்ப்பு வஸ்துக்கள் தடுக்கக்கூடிய அபாயங்களுக்கு உங்களை ஆளாக்கக்கூடும்.
உணவையும் அதன் பொட்டலத்தையும் கூர்ந்தாராயவும். உணவு பார்ப்பதற்கு புதிதாக இல்லையென்றால் அதை வாங்காதீர்கள். மீனைப் பொருத்தமட்டில், முழு மீனும் தெளிவான கண்களையும், சிவந்த செவுள்களையும், கெடாததும், கெட்டியான சதையையும் அதன் கண்டங்களும் துண்டுகளும் பளிச்சென்றும் பளபளப்பாகவும் இருக்கவேண்டும், பலமான, அருவருப்பான துர்நாற்றம் அற்றதாக இருப்பது அவசியம். மீன் ஐஸ்மீது கிடத்தப்பட்டிருக்கவேண்டும் அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டியிலிருக்க வேண்டும். பச்சை மீனின் பக்கத்தில் முன்-சமைக்கப்பட்ட மீனைக் காட்சிக்காக வைக்கையில் ஒன்றையொன்று கெடச்செய்யலாம். மேலுமாக, ஒழுகும், பொங்கி வழியும் அல்லது சேதமடைந்த கேன்களும் ஜாடிகளும் நச்சேற்றத்திடமாக (botulism) வழிநடத்தக்கூடும். இது ஒரு அரிதான ஆனால் மரணத்திற்கேதுவான நச்சேற்றம், இது மைய நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது.
நீங்கள் அதை சாப்பிடுவதற்கு முன் . . .
முழுமையாக அதை சமைக்கவும். நோய் தொற்றுவதற்கு எதிரான உங்களுடைய தற்பாதுகாப்புகளில் இது மிகப் பெரியது. “விலங்கிலிருந்து வரும் ஒவ்வொரு பொருளும் கெட்டிருக்கிறது என்று ஊகித்து, அதற்கு ஏற்றாற்போல் கையாளவும்,” என்று அறிவுரை கூறுகிறார் டாக்டர் கொஹென். முட்டைகளை மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் கெட்டியாகும் வரை வேகவைக்க வேண்டும், நீர்மநிலையில் இருக்கக்கூடாது. பாக்டீரியாக்கள் நான்கு டிகிரி செல்ஷியஸுக்கும் 60 டிகிரி செல்ஷியஸுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் வளருவதால், இறைச்சியின் மத்தியப்பகுதி 71 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அடையும்வரை வேக வேண்டும், பறவை இறைச்சி 82 டிகிரி செல்ஷியஸை அடையவேண்டும்.
சுத்தமாகச் சமைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளவும். பாத்திரங்களைப் பயன்படுத்திய பிறகு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். மரத்தாலான வெட்டுப் பலகைகள் பாக்டீரியாக்களுக்கு உறைவிடமாகின்றன என்று சிலர் வாதிடுகையில், அவை பிளாஸ்டிக் பலகைகளைக் காட்டிலும் பாதுகாப்பானவை என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. a நீங்கள் எத்தகைய பலகையை உபயோகித்தாலும் சரி, அதை சோப்பு மற்றும் வெந்நீரால் முழுமையாக கழுவ வேண்டும். பிளீச்சைக்கூட பயன்படுத்தலாம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். பச்சை இறைச்சியையும், பறவை இறைச்சியையும் (poultry) கையாண்டபின்னர் உங்கள் கைகளைக் கழுவுங்கள், ஏனென்றால் நீங்கள் எதைத் தொட்டாலும் கெட்டுப்போகக் கூடும்.
கடிகாரத்தை நோக்கவும். சாமான்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்குக் கொண்டு வாருங்கள். மேலுமாக, “சமைக்கப்பட்ட பொருளோ அல்லது பச்சையானதோ குளிர்பதனப் பெட்டிக்கு வெளியே இரண்டு மணிநேரங்களுக்கு மேல் இருக்கக்கூடாது,” என்று கூறுகிறார் நல உணவு வல்லுநர் கேயில் ஏ. லீவ்வி. “ஒருவேளை வெளியே இருக்கும் தட்பவெப்பநிலை 32 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக இருக்குமானால், அந்த நேரத்தை ஒரு மணிநேரமாகக் குறைத்துவிடுங்கள்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
அதை சேமித்து வைப்பதற்கு முன் . . .
போதிய பாத்திரங்களை உபயோகிக்கவும். சூடாக இருக்கும் உணவை சிறு சிறு பாத்திரங்களில் பங்கிடுங்கள், அப்போது அவை குளிர்பதனப்பெட்டியில் சீக்கிரமாக ஆறிவிடும். பாத்திரங்களுக்கு இடையே புழக்கத்திற்குப் போதுமான இடம் விடுங்கள், அப்போது உங்களுடைய குளிர்பதனப் பெட்டி அல்லது ஃப்ரீஸரின் தட்பவெப்பநிலை அதிகரிக்காது. ஒன்றையொன்று கெடச்செய்வதிலிருந்து தடுப்பதற்காக அனைத்துப் பாத்திரங்களையும் மூடிவைப்பது அவசியம்.
உங்கள் குளிர்பதனப் பெட்டியைச் சரிபார்க்கவும். ஃப்ரீஸரின் தட்பவெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகமாக இல்லாதபடியும், குளிர்பதனப் பெட்டியின் தட்பவெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸுக்குக் குறைவாகவும் இருக்கவேண்டும். இறைச்சியும் பறவை இறைச்சியும் ஃப்ரீஸரில் மாதக்கணக்கில் சேமித்து வைக்கலாம், குளிர்பதனப் பெட்டியில் வெறும் நாட்கணக்கில் வைத்தால்கூட அவை கெடத் தொடங்கிவிடும். முட்டைகளை மூன்று வாரத்திற்குள் உபயோகிக்க வேண்டும். விரிசல் விடுவதைத் தவிர்ப்பதற்காகவும் அவற்றைப் போதுமான குளிரில் வைப்பதற்காகவும் அவையிருந்த அட்டைப் பெட்டியோடு, குளிர்பதனப் பெட்டியின் பிரதான பகுதிக்குள் வைக்கவேண்டும். இது குளிர்பதனப் பெட்டியின் மிக வெப்பமான பகுதிகளுள் ஒன்றான, அதன் கதவின் உட்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள முட்டை வைக்கும் அடுக்கில் வைப்பதைக்காட்டிலும் சிறந்தது.
மேற்கூறப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கைகள் மத்தியிலும், ஒருவேளை உணவு சந்தேகப்படும்படி காணப்பட்டால் அல்லது வாசனை வந்தால் அதைத் தூர எறிந்துவிடுங்கள்! உணவின் மூலம் பரவும் நோய், பயங்கரமான பின்விளைவுகளைப் பின்விட்டுச் செல்லாமல் அடிக்கடி வந்து போனாலும்கூட, சிலருடைய விஷயத்தில் விசேஷமாக பிள்ளைகள், வயதானோர் மற்றும் நோய்த் தடுப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு இது ஆபத்தாக முடியலாம். b
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கடவுள் நோவாவிடம் கூறினார்: ‘சகல மிருகங்களும், பறவைகளும், மச்சங்கள் யாவும் உங்களுக்கு ஆகாரமாய் . . . தந்தேன்.’ (ஆதியாகமம் 9:2, 3) வெட்டுதல், மையமாக்கப்பட்ட பதனிடுதல், அதோடுகூட பெரியளவில் விநியோகித்தல் ஆகியவை அடங்கிய தயாரிப்பு வரிசை, விலங்கு-உணவிலிருந்து நோய் பெறும் சாத்தியத்தை மேலும் சேர்க்கிறது. ஆகவே, நீங்கள் ஒரு நுகர்வோராக உங்களுடைய பங்கை செய்யுங்கள். உங்கள் உணவை கடைகளில் வாங்கும்போதும், சமைக்கும்போதும், சேமிக்கும்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில விழித்தெழு! டிசம்பர் 8, 1993, பக்கம் 28-ஐக் காண்க.
b உணவின் மூலம் பரவும் நோய்க்கு நீங்கள் ஆளானால், தாராளமாக ஓய்வெடுங்கள், ஜூஸ், பிராத் (இறைச்சி அல்லது காய்கள் வேக வைக்கப்பட்ட சாறு), நுரை நீக்கிய சோடா போன்ற திரவங்களைத் தாராளமாகப் பருகவும். நரம்பியல் சம்பந்தமான அறிகுறிகள் ஆரம்பமானால் அல்லது ஒருவேளை காய்ச்சல், மயக்கம், வாந்தி, சீதபேதி அல்லது தொடர்ச்சியாக பயங்கர வலி அல்லது நீங்கள் ஒருவேளை அதிக ஆபத்தான நிலை என்னும் பிரிவில் இருப்பீர்களானால் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பரிந்துரை செய்யப்படுகிறது.
[பக்கம் 23-ன் பெட்டி]
வீட்டிற்கு வெளியே சாப்பிடும்போது
உல்லாசப் பயணங்கள். ஐஸ் திணிக்கப்பட்ட, நன்றாக வெப்பத் தடைசெய்யப்பட்ட (well-insulated) கூலரை உபயோகிக்கவும். அதை உங்கள் காரில் சாமான்கள் வைக்கும் இடத்தில் வைப்பதைக் காட்டிலும் பயணிகளின் இருக்கையில் வைப்பது சிறந்ததாக இருக்கலாம். உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் கூலரை மூடிய நிலையில் நிழலில் வைக்கவேண்டும். பச்சை உணவு வகைகள் அனைத்தையும் மற்ற உணவுப் பொருள்களிலிருந்து தனியே வைக்கவும். வீட்டில் ஓரளவுக்கு வேகவைத்து, பிறகு வாட்டியெடுத்துச் சமைத்து முடிப்பது உகந்ததல்ல, ஏனென்றால் சரிவர வேகாத உணவு பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
உணவகங்கள். “பார்ப்பதற்கு சுத்தமாக இல்லாத உணவகங்களைத் தவிர்த்திடுங்கள். சாப்பிடும் இடம் சுத்தமாக இல்லையென்றால் சமைக்கும் இடமும் ஒருவேளை சுத்தமாக இருக்காது,” என்று டாக்டர் ஜான்னத்தன் இடுலொ எச்சரிக்கிறார். “சூடான” உணவு எனப்படும் எதுவும் சூடாக இல்லை என்றால் அல்லது முழுமையாக வேகாமல் இருந்தால் திருப்பி அனுப்பிவிடுங்கள். பறவை இறைச்சிகள் கொஞ்சம் சிகப்பாக இருந்தாலும்கூட சாப்பிடக் கூடாது. பொரித்த முட்டைகள் இரு பக்கங்களிலும் நன்றாக வேகவைக்கப்பட்டிருக்க வேண்டும். “மஞ்சள் கரு எவ்வளவு நீர்ம நிலையில் உள்ளதோ அவ்வளவு அதிக ஆபத்தும் இருக்கிறது,” என்று எஃப்டிஏ கன்ஸ்யூமர் எச்சரிக்கிறது.
சாலடு பார்கள். வேகவைப்பதிலும் குளிர்விப்பதிலும் வித்தியாசமான அளவுகளைத் தேவைப்படுத்தும் உணவுகளை, சாலடு பார்கள் கலந்துகொடுப்பதால் “நுண்ணுயிரி செயலாற்றும் மிகப் பொருத்தமான இடம்” என்று நியூஸ்வீக் பத்திரிகை அழைத்த இடத்தை அவை உருவாக்குகின்றன. சாலடு பார்கள் சுத்தமாக இருக்கிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள், குளிர்ச்சியாக வைக்கவேண்டிய உணவுகள் ஐஸ் மீது கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். சாலடு பார்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டபோதிலும் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து மற்றவருக்கு கிருமிகள் தொற்றக்கூடும். நுண்ணுயிரியல் வல்லுநர் மைக்கேல் பாரிட்ஸா கூறியதைப் போல்: “டிரஸ்ஸிங்கில் விழுகிற கோப்பைக்கரண்டியை யார் கடைசியாகத் தொட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாது.”
தோழமைக் கூட்டங்கள். விருந்தாளிகள் தாங்களே உணவைப் பரிமாறிக்கொள்ளும் விருந்தில் (buffet-style) விருந்தளிப்பவர் “சிறிய அளவுகளில் மாத்திரம் உணவை மேசையில் வைக்கவேண்டும், அதிகப்படியான உணவை நீண்ட நேரம் அறையின் தட்பவெப்பநிலையில் விட்டுவிடுவதைக் காட்டிலும் குளிர்பதனப் பெட்டியிலிருந்து அல்லது சூடாக்கி அளிக்கும் சாதனத்திலிருந்து பரிமாறப்படும்படி அங்கேயே திரும்பவும் அவற்றை வைக்கவும்,” என்று டாக்டர் இடுலொ ஆலோசனை கொடுக்கிறார். குளிர்ச்சியான உணவுகளை நான்கு டிகிரி செல்ஷியஸுக்குக் குறைவாகவும் சூடான உணவுகளை 60 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகமாகவும் வையுங்கள். பிற்பாடு உபயோகிப்பதற்காகச் சமைத்த இறைச்சியை உடனடியாக குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும், அது எடுத்துச்செல்லப்படுவதற்குத் தயாராகும் வரை அதேநிலையில் இருக்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன், உணவு முழுமையாக மறுபடியும் சூடாக்கப்பட்டிருக்க வேண்டும்.
[பக்கம் 20-ன் படம்]
உணவு பார்ப்பதற்குப் புதிதாக இல்லையென்றால் அதை வாங்காதீர்கள்
[பக்கம் 22-ன் படம்]
நீங்கள் சாப்பிடும் உணவகத்தின் சமையல் அறை சுத்தமாக உள்ளதா?