என் மரண அவதியிலிருந்து மருத்துவர்கள் கற்றுக்கொண்டனர்
மே 1991-ன் மத்திபத்தில், எங்களுடைய நான்காவது பிள்ளை பிறக்கப்போவதை அறிந்துகொண்டோம். எங்கள் கடைசி மகன் மீகெலுக்கு ஒன்பது வயதும், எங்கள் இரட்டைப் பிள்ளைகளாகிய மகள்கள் மாரீயா மற்றும் சாராவுக்கு 13 வயதுமாக இருந்தது. இன்னொரு பிள்ளை திட்டமிடப்படாததாக இருந்தபோதிலும், மற்றொரு குழந்தையைப் பெறுவது பற்றிய எண்ணத்தை விரைவில் ஏற்றுக்கொண்டோம்.
கருவுற்றிருந்த மூன்றாம் மாதத்தில் ஒரு மாலைவேளையில், என்னுடைய நுரையீரலில் திடீர் வலியை உணர்ந்தேன். அதற்கடுத்த நாள் எனக்கு நடப்பதே கடினமாக இருந்தது. எனக்கு நுரையீரல் அழற்சி என்று அந்த மருத்துவர் சொல்லி, பெனிசிலினைக் கொடுத்தார். இரண்டு நாட்கள் கழித்து, நான் நன்றாக உணர ஆரம்பித்தேன், ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தேன். பின்னர் என்னுடைய அடுத்த நுரையீரலில் திடீரென்று வேதனைகளை அனுபவித்தேன்; அதே சிகிச்சை மீண்டும் செய்யப்பட்டது.
தொடர்ந்துவந்த நாட்களில், எனக்கு மூச்சுவிட கஷ்டமாக இருந்த காரணத்தால், என்னால் படுக்க முடியவில்லை. முதல் முறை வலி தாக்கியபின் ஒரு வாரத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குப் பிறகு, என்னுடைய ஒரு கால் நீலநிறமாகி, வீங்கியிருந்தது. இந்த முறை நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். என் நுரையீரலிலிருந்த வலி நுரையீரல் அழற்சியின் காரணமாக அல்ல, ஆனால் குருதியுறைவுகள் காரணமாகவே என்று மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். என்னுடைய தொடை அடிவயிறுடன் சேரும் பாகத்திலும் ஒரு குருதியுறைவுக் கட்டி இருந்ததாகவும் சொன்னார். ஸ்வீடனில் கருவுற்றிருக்கும் பெண்கள் மத்தியில் மரணத்திற்கு மிகப் பொதுவான காரணங்களில் ஒன்று குருதியுறைவு என்று அறிந்தேன். ஒருசில நாட்களுக்குப் பின்னர், ஸ்டாக்ஹோமிலுள்ள காரோலின்ஸ்கா ஷுயக்குயசெட் மருத்துவமனைக்கு நான் மாற்றப்பட்டேன்; சிக்கல்வாய்ந்த கருவுறுதல்களுக்காக விசேஷித்த மகப்பேறு கிளினிக் அங்கு இருக்கிறது.
இரத்தத்தின் அடர்த்தி குறையச் செய்யும் மருந்தாகிய ஹெப்பாரின்னை எனக்குத் தரவேண்டுமென்று மருத்துவர்கள் தீர்மானித்தனர். நுரையீரலில் மற்றுமொரு குருதியுறைவை அனுபவிக்கும் அபாயத்துடன் ஒப்பிடுகையில் ஹெப்பாரின்னை உட்கொள்வதால் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் குறைவானதே என்று அவர்கள் எனக்கு உறுதியளித்தனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நான் வீடு திரும்புமளவுக்குப் போதிய சுகமடைந்தேன். நான் உயிருடன் இருப்பதைக் குறித்தும் உயிரூட்டமுள்ள சிறு பிள்ளை என்னுள் வளர்வதைக் குறித்தும் இதமான, பரபரப்பான மகிழ்ச்சியை அனுபவித்தேன்.
பேறுகாலம்
பிள்ளை பேற்றைத் தூண்டுவிக்கும்படி தீர்மானிக்கப்பட்டது; ஆனால் அதன் செயல்முறைக்கான படிகளை எடுப்பதற்குள், என்னுடைய அடிவயிற்றில் கடுமையான வலியை உணர்ந்தேன். ஆகவே அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். என்றபோதிலும், எந்தக் கோளாறையும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்கடுத்தநாள் மாலையில் என்னுடைய வயிறு மிகவும் வீங்கி இருந்தது; வலி குறையவில்லை. நடுராத்திரியில், ஒரு மருத்துவர் என்னைப் பரிசோதித்து நான் பிரசவ வேதனையில் இருப்பதாகக் கண்டார். அடுத்த நாள் காலை என்னுடைய வயிறு இன்னுமதிகமாக வீங்கி இருந்தது; வலி தாங்க முடியாததாக இருந்தது. மருத்துவர் வருத்தமடைந்தவராகத் தோன்றினார்; குழந்தையின் அசைவுகளைக் கடைசியாக நான் எப்போது கவனித்தேன் என்று கேட்டார். கொஞ்ச காலமாக அந்த அசைவுகளைக் கவனிக்கவில்லை என்பதைத் திடீரென்று நான் உணர்ந்தேன்.
உடனடியாக நான் பிரசவிக்கும் அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். சற்று தொலைவில் இருந்து அங்குள்ள பணியாளர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிந்தது. “இரத்தமேற்றுதலை அவள் ஏற்க மறுக்கிறாள்,” என்று யாரோ ஒருவர் சொன்னார். பின்னர் ஒரு தாதி என் மேலாகச் சாய்ந்து, சத்தமான குரலில் இவ்வாறு சொன்னாள்: “உங்கள் குழந்தை செத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?” என் நெஞ்சிற்குள் யாரோ பட்டயத்தை வைத்துக் குத்தியதைப்போல நான் உணர்ந்தேன்.—நீதிமொழிகள் 12:18.
இரத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு உறுதியாக மறுத்தல்
திடீரென்று என் மருத்துவர் வந்து என்னுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னார். இரத்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்ற என்னுடைய தீர்மானத்தில் நான் இன்னும் நிலைத்துநிற்க விரும்புகிறேனா என்று அவர் கேட்டார். ஆம் என்று ஆணித்தரமாக குறிப்பிட்டேன்; அதற்குப் பிறகு என்ன நடந்ததென்று எனக்கு அவ்வளவாக நினைவில்லை. என்றபோதிலும், கிறிஸ்தவர்கள் இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள் என்றும், நான் கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன் என்றும் என் மருத்துவருக்கு மிகவும் தெளிவாக எடுத்துக்கூறினேன்.—அப்போஸ்தலர் 15:28, 29; 21:25.
இதற்கிடையில், ஒரு திறம்பட்ட அறுவை மருத்துவராகிய பார்ப்ரா லார்ஸான் என்ற வேறொரு மருத்துவரை அவர்கள் அழைத்தனர். அவர் சீக்கிரமாக வந்து உடனடியாக அறுவை சிகிச்சையைச் செய்தார். அவர்கள் என்னுடைய வயிற்றைத் திறந்தபோது, உட்புற இரத்தக் கசிவின்மூலம் மூன்று லிட்டர் இரத்தத்தை நான் இழந்திருப்பதாகக் கண்டார்கள். ஆனால் இரத்தமேற்றுதல் சம்பந்தமான என்னுடைய தீர்மானத்தை டாக்டர் லார்ஸான் மதித்தார்.
அதற்குப் பின்னர், இன்னும் ஒருசில நிமிடங்களுக்குள் நான் இறந்துவிடுவேன் என்று மற்றொரு மருத்துவர் சொன்னார். “இப்போது அவள் உயிருடன் இருக்கிறாளா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் சொன்னதாக அறிவிக்கப்பட்டது. அந்த இரத்தக் கசிவின் மூலத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பின்னர் தெரியவந்தது; ஆகையால் என்னுடைய வயிற்றில் அழுத்தந்தரப் பயன்படுத்தும் பஞ்சு திணித்த கட்டுத்துணியை வைத்தார்கள். என்னவாயினும் நான் பிழைப்பேன் என்று மருத்துவர்களும் தாதிகளும் எவ்வித நம்பிக்கையையும் அளிக்கவில்லை.
என்னுடைய பிள்ளைகள் மருத்துவமனைக்கு வந்து என் நிலைமையைப் பற்றி அறிந்தபோது, அவர்களில் ஒரு பிள்ளை சொன்னது என்னவென்றால், அர்மகெதோன் சீக்கிரம் வந்துவிடும் என்றும் அதற்குப் பிறகு அவர்கள் என்னை உயிர்த்தெழுதலில் பெற்றுக்கொள்வார்கள் என்றுமாகும். உயிர்த்தெழுதல் எவ்வளவு ஆச்சரியகரமான, நியாயமான ஒரு ஏற்பாடு!—யோவான் 5:28, 29; 11:17-44; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:3, 4.
உயிர் ஊசலாடுகிறது
என்னுடைய ஹிமோகுளோபின் ஒரு டெசிலிட்டருக்கு 4 கிராம் என்ற அளவிற்குக் குறைந்திருந்தது, ஆனால் இரத்தக்கசிவு நின்றுவிட்டதாகத் தோன்றியது. ஏற்கெனவே என்னுடைய நோய்க்குறிப்புப் பதிவில் நவம்பர் 22, 1991-ன் விழித்தெழு! (தமிழில் டிசம்பர் 8, 1992) பத்திரிகையின் பிரதி ஒன்றை வைத்திருந்தேன். டாக்டர் லார்ஸான் அதைக் கண்டு, “இரத்தமேற்றாமல் இரத்த இழப்பைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும்” என்ற தலைப்பைக் கவனித்தார். என்னைப் பிழைக்க வைப்பதற்கு உதவும்படி அவர் பயன்படுத்தத்தக்க ஏதாவது அதில் இருக்கிறதா என்று பார்க்க ஆவலுடன் அதைக் கூர்ந்து கவனித்தார். “எரித்ரோபொய்டின்” என்ற வார்த்தையின்மீது அவர் கவனித்தார்; சிவப்பு இரத்த செல்களை உண்டாக்குவதற்கு உடலைத் தூண்டும் ஒரு மருந்து அது. அவர் இப்போது அதை எனக்குள் செலுத்தினார். ஆனால் அந்த மருந்து பலன் கொடுக்க நேரம் எடுக்கும். ஆகவே, கேள்வி என்னவென்றால், எரித்ரோபொய்டின் போதுமான அளவு விரைவில் செயல்படுமா?
அதற்கடுத்த நாள் என்னுடைய ஹிமோகுளோபின் அளவு 2.9-ஆகக் குறைந்திருந்தது. நான் விழித்து, என் படுக்கையருகே என் குடும்பத்தினர் அனைவரையும் கண்டபோது எனக்கு என்ன சம்பவித்திருந்தது என்று யோசித்தேன். மூச்சுக்கருவி பொருத்தப்பட்டிருந்ததால் என்னால் பேச முடியவில்லை. துக்கத்தின் காரணமாக ஏறக்குறைய உணர்ச்சிக் கோளாறுள்ளவளைப்போல உணர்ந்தேன்; ஆனால் என்னால் அழக்கூட முடியவில்லை. பிழைப்பதற்காக என்னுடைய பலத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்று எல்லாரும் என்னிடம் சொன்னார்கள்.
என்னுடைய வயிற்றிலிருந்து எடுக்காமல் விடப்பட்டிருந்த அழுத்தந்தரும் கட்டுத்துணியால் ஏற்படுத்தப்பட்ட வீக்கத்தின் காரணமாக அடுத்த நாள் எனக்கு காய்ச்சல் இருந்தது. என்னுடைய ஹிமோகுளோபின் 2.7-ஆகக் குறைந்திருந்தது. அந்த நிலையில் ஒருவருக்கு மயக்க மருந்தளிப்பது மிகவும் ஆபத்தானதாக இருந்தபோதிலும், அழுத்தந்தரும் கட்டுத்துணியை எடுக்கும்படி அபாயத்தைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அறுவை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக டாக்டர் லார்ஸான் விவரித்தார்.
அறுவை சிகிச்சைக்கு முன்னர் பிள்ளைகள் உள்ளே வந்து என்னைப் பார்க்கும்படி அனுமதிக்கப்பட்டனர். அது ஒரு பிரியாவிடை என்றே அனைவரும் நினைத்தனர். மருத்துவ பணியாளர்களில் பல அங்கத்தினர் அழுதுகொண்டிருந்தார்கள். நான் பிழைத்துவிடுவேன் என்று அவர்கள் நம்பவில்லை. என்னுடைய பிள்ளைகள் மிகவும் தைரியமாக இருந்தார்கள்; இது என்னை அமைதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்க வைத்தது.
மிகவும் குறைவான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், அங்குள்ள பணியாளர்கள் ஒருவருடன் ஒருவர் என்ன பேசினார்கள் என்பதை என்னால் சிலசமயங்களில் கேட்க முடிந்தது. நான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக நினைத்து சிலர் என்னைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், அறுவையின்போது நான் என்ன கேட்டேன் என்பதைத் தெரிவித்தபோது ஒரு தாதி என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். ஆனால் நான் இறந்துவிடுவேன் என்பதைக் குறித்து அவள் நிச்சயமாக இருந்ததாகவும், நான் எப்படி பிழைத்தேன் என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை என்றும் அவள் சொன்னாள்.
அதற்கடுத்த நாள் நான் கொஞ்சம் நன்றாக உணர்ந்தேன். என்னுடைய ஹிமோகுளோபின் 2.9-ஆகவும் என்னுடைய ஹிமட்டோகிரிட் 9-ஆகவும் இருந்தன. என்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சந்திக்க வந்தனர்; வருகையில் என் குடும்பத்தினருக்காக உணவையும் காப்பியையும் கொண்டுவந்தனர். அவர்களுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றியுள்ளவர்களாய் இருந்தோம். மாலைவேளைக்குள் என்னுடைய நிலைமை இன்னும் மோசமானதாகவே இருந்தது, ஆனால் நிலையாக இருந்தது; நான் வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டேன்.
மருத்துவர்கள் கற்றுக்கொள்கின்றனர்
மருத்துவ பணியாளர்களில் அநேக அங்கத்தினர்கள் என்னைக்குறித்து அறிய ஆவலுள்ளவர்களாய் இருந்தார்கள்; அவற்றில் பெரும்பாலானவர்கள் மிகவும் தயவாக இருந்தார்கள். ஒரு தாதி சொன்னாள்: “உங்கள் கடவுள்தான் உங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.” வேறொரு வார்டிலிருந்து ஒரு மருத்துவர் வந்து இவ்வாறு சொன்னார்: “அவ்வளவு குறைந்தளவு ஹிமோகுளோபின் உள்ள ஒருவர் எப்படி இருப்பார் என்று நான் வெறுமனே பார்க்க வேண்டும். நீங்கள் எப்படி அவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
அதற்கடுத்த நாள், என்னுடைய மருத்துவருக்கு ஓய்வு நாளாக இருந்தபோதிலும் என்னைப் பார்க்க வந்தார். அங்கு சம்பவித்த காரியம் அவரைத் தாழ்மையாய் உணரவைத்ததாக என்னிடம் சொன்னார். நான் முழுமையாகக் குணமடைந்தால், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இரத்தமேற்றுதலுக்கு பதிலாக மாற்றுவகை சிகிச்சைகளைக் குறித்துப் புதிய ஆராய்ச்சியை அவர்கள் தொடங்கிவைக்கப்போவதாக அவர் சொன்னார்.
நான் குணமடைந்தது வியப்பூட்டுவதாய் இருந்தது. என் துக்ககரமான பிரசவத்திற்கு பின் இரண்டரை வாரங்கள் கழித்து, என் ஹிமோகுளோபின் அளவு 8-க்கு சற்று அதிகமாகியிருந்தது. ஆகவே நான் மருத்துவமனையிலிருந்து திரும்பினேன். மூன்று நாட்களுக்குப் பின் வருடாந்தரமாக நிகழும் யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாடு எங்களுக்கு இருந்தது; நான் அதற்குச் சென்றேன். எங்களுடைய சோதனையின் காலத்தில் எங்களுக்கு அவ்வளவு ஆதரவாக இருந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை மீண்டும் பார்ப்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருந்தது!—நீதிமொழிகள் 17:17.
டாக்டர் லார்ஸான் வாக்களித்தபடி, லாகர்டினிங்கன் என்ற ஸ்வீடிஷ் மருத்துவ பத்திரிகையில் “எரித்ரோபொய்டின் இரத்தமேற்றுதலை மாற்றீடு செய்கிறது,” என்ற என்னுடைய நோய்க்குறிப்பைப் பற்றிய ஒரு அறிக்கை பின்னர் பிரசுரிக்கப்பட்டது. அது இவ்வாறு சொன்னது: “35 வயதுள்ள ஒரு பெண், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், திடீரென்று அதிகளவில் பேறுகால இரத்தக்கசிவை அனுபவித்தார். அவர் இரத்தமேற்றுதலை மறுத்தார், ஆனால் எரித்ரோபொய்டின் சிகிச்சையை ஏற்றுக்கொண்டார். அந்த அறுவைக்குப் பின் அதிகளவான எரித்ரோபொய்டின் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின் ஒன்பது நாட்கள் கழித்து, எவ்விதமான பக்க விளைவுகளுமின்றி ஹிமோகுளோபின் ஒரு டெசிலிட்டருக்கு 2.9-லிருந்து 8.2 கிராம் வரையாக அதிகரித்தது.”
அந்தக் கட்டுரை இவ்வாறு சொல்லி முடித்தது: “ஆரம்பத்தில் அந்த நோயாளி மிகவும் பலவீனமாக இருந்தார், ஆனால் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் விரைவாகக் குணமடைந்தார். மேலுமாக, அறுவைக்குப் பின்னான சிகிச்சை முற்றிலும் எந்தச் சிக்கல்களுமில்லாததாக இருந்தது. அந்த நோயாளி இரண்டு வாரங்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து திரும்பிச்செல்லும் நிலையில் இருந்தார்.”
இந்த அனுபவம் எங்களுக்கு ஒரு பேரிடியாக இருந்தபோதிலும், அதன் விளைவாக, இரத்தமேற்றுதலுக்கான மாற்றுவகைச் சிகிச்சைகளைப் பற்றி சில மருத்துவர்கள் அதிகத்தைக் கற்றுக்கொண்டிருக்கக்கூடும் என்பதைக் குறித்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம். வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைச் செய்ய முயலுவதற்கு அவர்கள் மனமுள்ளவர்களாய் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.—ஆன் இப்ஸியோட்டிஸ் சொன்னபடி.
[பக்கம் 26-ன் படம்]
உதவியாயிருந்த என் மருத்துவருடன்