உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உலகம் “உடல்நல அழிவை” எதிர்ப்படுகிறது
  • தொட்டில் மரணத்தைக் குறைத்தல்
  • முதுகுவலியை சமாளித்தல்
  • வன்முறை நிறைந்த வீடியோ விளையாட்டுகள்
  • உபத்திரவிக்கும் வைரஸ்கள்
  • நச்சு சுற்றுச்சூழலின் பாதிப்புகளா?
  • இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையில்லை
  • HIV நோயாளிகளுக்கு தெரியப்படுத்தவே இல்லை
  • ஒட்டக சந்தையில் புதியதொன்று
  • சீனாவின் சீரழிந்துவரும் மதிப்பீடுகள்
  • புதிய இனங்கள்
  • கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகளில் நான் பங்குகொள்ள வேண்டுமா?
    விழித்தெழு!—1996
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
  • விளையாடினால் ஆபத்தா?
    விழித்தெழு!—2003
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

உலகம் “உடல்நல அழிவை” எதிர்ப்படுகிறது

“இந்த உலகத்தின் மிகப் பெரிய கொலையாளியாகவும், இந்த பூமி முழுவதிலும் உடல்நலக் குறைவுக்கும் துன்பத்திற்கும் மிகப் பெரிய காரணமாகவும் இருப்பது . . . கொடூரமான வறுமையாகும்.” இவ்வாறு சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) வெளியிடப்பட்ட தி உவர்ல்ட் ஹெல்த் ரிப்போர்ட் 1995. இந்த ரிப்போர்ட் சொல்கிறபடி, உலக மக்கள் தொகையாகிய 560 கோடியினரில் பாதிப்பேருக்கு அத்தியாவசியமான மருந்துகள் கிடைக்க வழியில்லை; உலகில் உள்ள பிள்ளைகளில் அநேகமாக மூன்றிலொரு பாகத்தினருக்கு ஊட்டச்சத்துக் குறைவுபடுகிறது; உலக மக்களின் ஐந்திலொரு பாகத்தினர் வறுமையின் கொடுமையில் வாழ்கின்றனர். “சமீப பத்தாண்டுகளில் சாதிக்கப்பட்ட மகா சாதனைகளில் அநேகம் . . . தீவிர பின்னடைவை எதிர்ப்படவிருக்கும் உடல்நல அழிவு” பற்றி WHO-வின் பொது இயக்குநர் எச்சரித்ததாக, இங்கிலாந்தில் உள்ள லண்டனின் தி இன்டிப்பென்டன்ட் செய்தித்தாள் மேற்கோள் காட்டுகிறது.

தொட்டில் மரணத்தைக் குறைத்தல்

ஜெர்மானிய மாநிலமாகிய வட ரைன்-வெஸ்ட்ஃபேலியாவில் நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தில், தொட்டில் மரணத்திற்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதற்கான காரணிகளைப் பற்றிய தகவல்களை அளிக்கும் ஒரு கைப்பிரதி பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் செய்தித்தாள் சொல்லுகிறபடி, இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்பு, அந்த மாநிலத்தில் தொட்டில் மரணத்தின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்திருக்கிறது. இதைப் போன்ற திட்டங்களைப் பின்பற்றி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த மரணத்தை 60 சதவீதம் வரையாக குறைத்திருப்பதாக சொல்லப்படுகின்றன. தொட்டில் மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தத் திட்டம், மெல்லிறகினாலான ஒரு பெரிய படுக்கையை அல்லது மிருதுவான மெத்தையை உபயோகித்து, பிள்ளைகளை குப்புறப் படுக்கவைத்து உறங்கச்செய்வது, கர்ப்பமாக இருக்கும்போது புகைபிடிப்பது, புகையிலையின் புகை நிறைந்த சூழலில் பச்சைக் குழந்தைகளை விட்டுவைப்பது போன்றவற்றிற்கு எதிராக பெற்றோர்களை எச்சரிக்கிறது.

முதுகுவலியை சமாளித்தல்

முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலியானது, உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் 90 சதவீதத்தினருக்கு அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவதொரு சமயத்தில் வருகிறது. இது, “மனிதர்களை அடிக்கடி பாதிக்கும் ஒரு நிலைமை”யாக இருக்கிறது என்று கனடாவில் வெளியிடப்படும் தி மெடிக்கல் போஸ்ட் சொல்லுகிறது. இருப்பினும், பெரும்பாலானோருடைய விஷயத்தில் அதிக செலவாகும் மருத்துவ சிகிச்சை அவசியமில்லாமல் இருக்கலாம். “90% ஆட்களுக்கு திடீரென அல்லது கடுமையாக ஏற்படும், வீக்கத்தோடுகூடிய முதுகுவலி (சாதாரணமாகவே உடலுழைப்பைத் தொடர்ந்து ஏற்படுவது), முதுகில் ஏற்படும் கடுமையான தசைப்பிடிப்பை மட்டுமே உட்படுத்துகிறது. ஆகவே இரண்டோ மூன்றோ நாட்களுக்கு படுத்து ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்,” என்று எலும்பு மருத்துவர் டாக்டர் கார்த் ரஸல் சொல்லுகிறார். இதற்குப் பிறகு, “லேசான உடற்பயிற்சி செய்யத் தொடங்கி, உங்களுடைய அனுதின வேலைகளை மீண்டும் செய்ய ஆரம்பியுங்கள்,” என்று டாக்டர் ரஸல் சிபாரிசு செய்கிறார்.

வன்முறை நிறைந்த வீடியோ விளையாட்டுகள்

நிஜமான, வன்முறையான வீடியோ விளையாட்டுகள் அநேக இளைஞர்களின் நாகரிகத்தில் பரவலாக காணப்படுகின்றன என்று கனடாவிலிருந்து வெளியிடப்படும் தி வான்கூவர் சன் என்ற செய்தித்தாளில் தோன்றிய ஒரு அறிக்கை கூறிற்று. அத்தகைய விளையாட்டுகளை விளையாடுகையில் இளம் விளையாட்டு வீரர்கள் சரீரப்பிரகாரமாக கிளர்ச்சியடைகின்றனர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஆராய்ச்சியை அந்த செய்தித்தாள் மேற்கோள் காட்டுகிறது. அவர்களுடைய இதயத் துடிப்பு வீதம் குறிப்பிடத்தக்கவகையில் அதிகரிக்கிறது—சிலருடைய விஷயத்தில் இரண்டு மடங்குக்கும் கூடுதலாக அதிகரிக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு கவலைதரும் கேள்வி என்னவென்றால், “இந்தப் பிள்ளைகள் வன்முறையை வீடியோ விளையாட்டுகளோடு நிறுத்திவிடுவார்களா அல்லது தங்களுடைய நிஜ வாழ்க்கையிலேயும் நுழைத்துவிடுவார்களா?” என்பதே ஆகும். பிரச்சினைகளை தீர்க்க வன்முறை ஒரு வழியாக இருக்கிறது என்பதே அத்தகைய விளையாட்டுகள் அனுப்பும் செய்தியாக இருக்கிறது என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை பேராசிரியர் சார்லஸ் உங்கர்லைடர் நம்புகிறார். அவர் கூறுவதாவது: “வன்முறை நிறைந்த வீடியோ விளையாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ரகமான ஒரு பொழுதுபோக்கு என்று சொல்வது, சமுதாயத்தைப் பற்றிய ஒரு வினோதமான குறிப்புரையாக இருக்கிறது.”

உபத்திரவிக்கும் வைரஸ்கள்

யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை சொல்கிறபடி, “புதிய கொள்ளை நோய்களும் ஏற்கெனவே அறியப்பட்ட நோய்களும் தலைவிரித்தாடுகின்றன.” ஏன்? அநேக காரணிகள் மனிதனை நோய்க்கு அதிகளவு ஆளாக்கியிருக்கின்றன என்று சுவிஸ் செய்தித்தாளாகிய நாய்யெ ஸூர்ச்செர் ட்ஸைடுங் விவரிக்கிறது. இக்காரணங்கள் சர்வதேச பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பையும் உள்ளடக்குகின்றன; இந்த அதிகரிப்பு, நோய்த் தடுப்பு சக்தியே இல்லாத மக்களுக்கு நோயை அறிமுகப்படுத்துவதில் விளைவடைகிறது. இதுமட்டுமல்லாமல், யூ.எஸ்.நியூஸ் குறிப்பிடுகிறது, ஜார்ஜியாவைச் சேர்ந்த அட்லாண்டாவில் உள்ள நோய்த் தடுப்பு நிலையத்தில் (Centers for Disease Control) உள்ள ஆட்களை பயப்படுத்துவது என்னவென்றால், “ஒரு காலத்தில் நோயுயிர்முறிகளால் சுலபமாக ஒழித்துக்கட்ட முடிந்த சாதாரண நுண்கிருமிகள், இன்றைய புத்தம்புதிய மிகவும் வல்லமைவாய்ந்த மருந்துகளையும்கூட முறியடிக்கத் தொடங்கியதேயாகும்.”

நச்சு சுற்றுச்சூழலின் பாதிப்புகளா?

தி க்ளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் கூறுகிறபடி, கனடா தனது தேசிய இறப்பு வீதத்தில் முதன்முறையாக எதிர்பார்த்ததைவிட மிக அதிக அதிகரிப்பை எதிர்ப்பட்டது. எதிர்பார்த்த அதிகரிப்பாகிய 3 சதவீதத்திற்குப் பதிலாக, கனடா மக்கள் மத்தியில் இறப்பு எண்ணிக்கை 1992 முதல் 1993 வரை 4.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதுவரை ஏற்பட்ட அதிகரிப்பிலேயே இதுதான் மிகமிக அதிகம். இந்த எண்ணிக்கை, குழந்தை மரணத்தில், 31 வருடங்களில் முதன்முறையாக ஏற்பட்ட அதிகரிப்பையும் உள்ளடக்குகிறது. அந்த அறிக்கையின்படி, இந்த அதிகரிப்புகள் வழக்கத்துக்கு மாறானவையாகவும் அச்சத்தை உண்டாக்குபவையாகவும் இருக்கின்றன. சுரங்கங்களில் நச்சுக் காற்றுகள் இருக்கின்றன என்பதை எச்சரிக்க கடந்தகாலங்களில் உபயோகப்படுத்தப்பட்ட கானரி பறவைகளின் இறப்பை கனடாவைச் சேர்ந்த ஒரு வல்லுநர் நினைப்பூட்டப்பட்டார். “சுற்றுச்சூழல் அதிகமதிகம் நச்சுள்ளதாக மாறிக்கொண்டு வருகிறது என்பதற்கான முதல் அடையாளமாக இது இருக்குமோ?” என்பதே கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தது.

இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையில்லை

ஆஸ்திரேலியா “ராசியான நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் இளைஞர்களில் அதிகமானோர் இந்த மதிப்பீட்டை இன்று ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். 15 முதல் 19 வயதுள்ள இளைஞர்களை வைத்து நடத்திய ஒரு ஆராய்ச்சியை தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் அறிக்கை செய்கையில், அவர்களுக்கு, “ஆஸ்திரேலியாவின் பொருளாதார எதிர்காலத்திற்கு ஒரு ‘தவிர்க்கமுடியாத அழிவு’ இருக்கிறது என்ற எண்ணம்” இருந்ததாக கண்டுபிடித்தது. அரசாங்க பள்ளிகளிலும், கத்தோலிக்க பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், 9, 10, 11 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பேட்டி காணப்பட்டனர். “அந்த அறிக்கை சொல்லுகிறபடி, 15, 16 வயது நிறைந்தவர்களால் ஆன தற்போதைய தலைமுறை, சமுதாயம் அதிக வன்முறை நிறைந்ததாய் மாறிவருவதாகவும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டுதான் போகும் என்பதாகவும் நம்புகிறது. ஆகவே அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஆவல் நிறைந்த எதிர்நோக்கு ஒன்றுமில்லை என்பதாக அந்தக் கண்டுபிடிப்புகள் ‘மிகத் தெளிவாக’ ஆலோசனை கூறுகின்றன” என்று அந்த செய்தித்தாள் அறிவிக்கிறது. இன்னும் பத்து வருடங்களுக்குப்பின் தங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று விவரிக்கச் சொல்லி கேட்டபோது, “பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர், சீரழிந்துகொண்டு போகும் பொருளாதாரத்தைப் பற்றியும், தங்களுடைய பொருளாதார போக்கின் மீது கட்டுப்பாடும் இல்லாத தனிநபர்களைக் கொண்டுள்ள ஒரு சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பிட்டனர்.”

HIV நோயாளிகளுக்கு தெரியப்படுத்தவே இல்லை

ஜப்பானில் சில டாக்டர்கள், HIV நோயாளிகளுக்கு HIV இருக்கிறது என்பதை அந்த நோயாளிகளுக்கு தெரியப்படுத்த தவறுகின்றனர், இதன் காரணமாக அவர்களுடைய வாழ்க்கைத் துணைவிகளுக்கும் இது தொற்றிக்கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 363 மருத்துவமனைகளிலும் மருத்துவ நிலையங்களிலும் சுற்றாய்வு நடத்திய பிறகு, இவ்வமைப்புகளில் 43 சதவீதம் மட்டுமே எல்லா HIV நோயாளிகளுக்கும் அவர்களுடைய நிலைமையைப்பற்றி அறிவித்ததாக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளிப்படுத்தியது. சுமார் 28 சதவீதம் தங்களுடைய நோயாளிகளில் ஒருசிலருக்கு மட்டுமே தெரிவித்தன. தங்களுடைய நோயாளிகளுக்கு தெரியப்படுத்த தவறிவிட்டதாக ஒருசில மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டன. வேறு சிலவையோ சுற்றாய்வு கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டன என்று தி டெய்லி யெம்யூரி கூறிற்று. தெரிவிக்காததற்கு டாக்டர்களால் கொடுக்கப்பட்ட ஒரு முக்கியமான காரணம், நோயாளிகளின் “சிறிதும் நிலையற்ற மனநிலை” ஆகும்.

ஒட்டக சந்தையில் புதியதொன்று

சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும்போது பெரும்பாலும் வித்தியாசமானவற்றை காண விரும்புகின்றனர். ஆனால் உள்ளூர்வாசிகளுக்கு சுற்றுலா பயணிகள் தாமே வித்தியாசமானவர்களாக தோன்றலாம். மேற்கத்திய சுற்றுலா பயணிகள், உலகிலேயே மிகப்பெரிய ஒட்டகச் சந்தையாக இருக்கக்கூடிய ஒன்றை இந்தியாவின் வடக்கத்திய பாலைவன நகரமாகிய புஷ்கரில் கண்டுபிடித்திருக்கின்றனர் என்பதாக இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. அங்குள்ள ஒட்டக வியாபாரிகள் தங்களுடைய வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளைப் பார்ப்பதற்கு வேடிக்கையாய் இருப்பதாக காண்கின்றனர். ட்ரிப்யூன் விவரிப்பதாவது: “பாலைவன வெயிலிலே மேனி சிவந்து, தங்களுடைய முகங்களுக்குமுன் பிடித்திருக்கும் கருப்புப் பெட்டிகளின் [கேமராக்களின்] வழியாக உலகத்தைப் பார்க்கும், தள்ளாடித்தள்ளாடி நடந்துபோகும் ஒரு ஒட்டகத்தின்மேல் ஒரு மணிநேரம் சவாரி செய்ய $2 (பெரும்பாலான பாலைவன பண்ணையார்களின் இரண்டு நாளைய ஊதியத்திற்கும் கூடுதல்) கொடுக்கத் தயாராக இருக்கும் இந்த புதுமையான இனத்தவரைக் கண்டு ஒட்டகம் ஓட்டிகள் அதிசயப்படுகின்றனர்.” சுற்றுலா பயணிகள் அதிகமதிகமான எண்ணிக்கையில் வருவது நல்லதா கெட்டதா என்று கேட்டபோது, அந்த ஒட்டக வியாபாரிகள், “நல்லதுதான். அவங்கள பாக்கறதுக்கு எங்களுக்கு ஆசைதான்,” என்று பதிலளித்தனர்.

சீனாவின் சீரழிந்துவரும் மதிப்பீடுகள்

“சொத்து சேர்ப்பதில் மூழ்கிக் கிடப்பது சீன சமுதாயத்தின் அடித்தளமாகிய குடும்பத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறது,” என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவிக்கிறது. “குடும்பங்கள் தகர்ந்துபோகின்றன, இளைஞர்களாலான, தன்னலம் நிறைந்த, ‘நான் என்கிற மனநிலையுள்ள சந்ததி’யைப் பிறப்பிக்கிறது. குற்றச்செயல்களும் ஊழலும் பதிவை ஏற்படுத்துமளவுக்கு பெருகியிருக்கின்றன.” முன்பு பெற்றோர்களை மதித்துவந்த பிள்ளைகள் இப்போது அவர்களை வேலைக்காரர்களாக உபயோகிக்கின்றனர்; அவர்களுக்கு வயதாகும்போது கவனித்துக்கொள்ள விருப்பமில்லாதவர்களாக இருக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் சொல்லுகிறார். சீனாவில் உள்ள அநேகர் இன்னும் பழங்கால மதிப்பீடுகளைக் கைக்கொள்கின்றனர் என்றாலும், லட்சக்கணக்கானோர் தங்களுடைய வீட்டைவிட்டு வளங்களைத்தேடி வேறு இடங்களுக்குப் போவதனால், இந்த மதிப்பீடுகள் சீரழிந்துகொண்டு வருகின்றன. “பணத்தை நாடி ஓடுவது இலக்காக ஆகிவிட்டது. பணத்துக்காக மக்கள் நல்லவற்றை விட்டுக்கொடுக்கவும், சமுதாய ஒழுக்க நெறிகளை அசட்டை செய்யவும் தயாராக இருக்கின்றனர்,” என்று பொதுமக்கள் பாதுகாப்பு துறையின் உதவி மந்திரி பாய் ஜிங்ஃபு சொல்கிறார்.

புதிய இனங்கள்

பிரிட்டிஷ் மற்றும் பிரேஸில் தாவரவியல் நிபுணர்கள், புதிய இனத் தாவரங்களைத் தேடித்தேடி, பிரேஸிலின் வடகிழக்கில் உள்ள மலை ஒன்றை கடந்த 20 வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை ஆச்சரியமூட்டும் வகையில், இதற்குமுன் அறியப்படாத 131 இனங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இவையனைத்தும் வெறுமனே 171 சதுர கிலோமீட்டர் அளவுள்ள நிலப்பரப்புக்குள் வளர்கின்றன. இந்த இடத்தை ஃபோல்யா டி சாவ்ன்-பாவ்லோ என்ற செய்தித்தாள் “ஏதேன் தோட்டம்,” என்று அழைக்கிறதுபோல், பிரேஸிலின் பாஹியா மாநிலத்தில் உள்ள 1,960 மீட்டர் உயரமுள்ள பீகோ டாஸ் ஆல்மாஸ் மலையில் வளருகிறது. இந்தத் தாவரங்கள் அனைத்தும் மெய்யாகவே புதிய கண்டுபிடிப்புதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள தாவரவியல் நிபுணர்கள் உலரவைத்த 3,500 தாவர இன மாதிரிகளை ஆராய்ந்தனர்—அவை புதிய கண்டுபிடிப்புகளேதான். இங்கிலாந்தின் ராயல் தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த சைமன் மேயோ இந்தச் செய்தித்தாளுக்கு பேட்டி அளிக்கையில் சொன்னதாவது: “இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தனை அநேக தாவரங்களைக் கண்டுபிடிப்பது கவனத்தைக் கவருவதாக இருக்கிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்