எமது வாசகரிடமிருந்து
காலந்தாழ்த்துதல் “காலந்தாழ்த்துதல்—காலத்திருடன்” (ஏப்ரல் 8, 1995) என்ற கட்டுரை நடைமுறையாகவும் நகைச்சுவையாகவும் எழுதப்பட்டிருந்தது. காலந்தாழ்த்தும் மோசமான பழக்கம் எனக்கு இருக்கிறது. ஆகவே நான் அதை வாசித்தபோது, என்னை நினைத்தே சிரித்துக்கொண்டேன்.
எஃப். பி. ஹெச்., பிரேஸில்
என்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியில் நான் நீண்டகாலமாகவே காலந்தாழ்த்துபவனாக இருந்திருக்கிறேன். ஆகவே இது எனக்கு காலத்துக்கேற்ற தகவலாக இருந்தது. இது நன்றாக எழுதப்பட்டிருந்தது, ஆகவே என்னுடைய நேரத்தை நல்லமுறையில் திட்டமிடுவதில் எனக்கு உதவ இந்தத் தகவலை உபயோகிக்கலாமென்று யோசிக்கிறேன். வெவ்வேறு கட்டுரைகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று அடிக்கடி நான் விரும்பியதுண்டு, ஆனாலும் ஒருபோதும் எழுதியது கிடையாது. கடைசியாக இப்பொழுது நான் அதை சாதித்துவிட்டேன்!
எம். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
நான் இந்தப் பத்திரிகையின் பக்கங்களை அப்படியே புரட்டிக்கொண்டிருக்கும்போது இந்தக் கட்டுரை என் கண்ணில் தென்பட்டது. கட்டுரையின் பிற்பகுதியை பிறகு படித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு அதன் தொடக்கத்தைப் படித்தேன். ஆனால் ஆரம்ப வார்த்தைகளோ, “நில்லுங்கள்! இந்தக் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள்!” என்று கூறின. காலந்தாழ்த்துதலினால், என்னுடைய நேரம் திருட்டுப்போகும்படி நானே அனுமதித்துவிட்டேன் என்பதை இப்போது உணருகிறேன்.
ஏ. ஈ., இத்தாலி
நான் ஒரு டெய்லர். காலந்தாழ்த்துதல் என்னுடைய வாழ்க்கைமுறையாகவே ஆகிவிட்டிருக்கிறது. செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட்டு தகுந்த நேரத்தில் அவற்றை செய்து, இடையில் ஏற்படும் தடங்கல்களைக் குறித்து திட்டமிடுவதை அலட்சியப்படுத்திவிட்டேன். ஆனால் இப்போதோ உங்களுடைய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த கற்றுக்கொண்டேன், ஆகவே அதன் பலன்களை அனுபவிக்கிறேன்.
எஸ். என்., நைஜீரியா
கடைசி நாட்கள் ஒரு முழுநேர பிரசங்கியாக, நான் நம்முடைய பத்திரிகைகளுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏப்ரல் 22, 1995 இதழில் சிறப்பித்துக் காட்டப்பட்டிருந்த “இவை கடைசி நாட்களா?” என்ற தொடர் கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ‘இந்தக் கட்டுரைகள் எவ்வளவு தெளிவானவையாகவும், ஒளிவுமறைவற்றவையாகவும், நன்கு விளக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன!’ என்று எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். இதன் வடிவமைப்பு (layout), மிகச் சிறந்த புகைப்படங்கள், படவிளக்கங்கள் (captions) ஆகியவை கருத்துக்களை தெளிவாக புரிந்துகொள்ள உதவுவதோடு, கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை சுலபமாக்கின. நம்முடைய அயலகத்தாரிடம் இத்தகைய பத்திரிகைகளை அளிப்பது என்னே ஒரு மகிழ்ச்சி!
ஜே. பி., ஐக்கிய மாகாணங்கள்
ஷிங்கெல்ஸ் “ஷிங்கெல்ஸ்—வலியைச் சமாளித்தல்” (ஏப்ரல் 22, 1995) என்ற உங்களுடைய கட்டுரையை நான் வாசித்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, உங்களுடைய கட்டுரையில் இருந்த ஷிங்கெல்ஸின் விவரிப்புக்கு அநேகமாக ஒத்திருந்த தடிப்பு எனது தோலில் ஏற்பட்டது. நான் டாக்டரிடம் போய், எனக்கு ஷிங்கெல்ஸ் வந்திருப்பதாக நினைக்கிறேன் என்று சொன்னேன். நிச்சயமாகவே, “நீங்கள் புத்திசாலிதான்” என்று அவர் என்னிடம் சொன்னார்—நான் கண்டுபிடித்தது சரியாகவே இருந்தது! இந்த நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதனால், பெரும்பாலான ஷிங்கெல்ஸ் நோயாளிகள் அனுபவிக்கும் அதிக வலியிலிருந்து நான் காப்பாற்றப்பட்டேன் என்பதாக சொன்னார். உங்களுடைய கட்டுரைக்காக நன்றி!
கே. பி., ஐக்கிய மாகாணங்கள்
மாட்ரியாஷ்கா “மாட்ரியாஷ்கா—என்னே ஒரு பொம்மை!” (ஏப்ரல் 22, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நான் அதை வாசித்தபோது, அது எழுதப்பட்டிருந்த முறை என் மனதில் பதிந்தது. புகைப்படங்கள் அழகாக இருந்தன! நான் சிறுமியாக இருந்ததால் இந்தப் பொம்மையால் கவரப்பட்டிருந்தேன். ஆனால் அதன் தோற்றத்தைப்பற்றி எனக்கு ஒன்றும் அறியாமலிருந்தது. இப்போது நான் யாரையாவது எனக்கு ஒன்றை வாங்கித்தரவைக்க வேண்டும்!
எம். டி., இத்தாலி
கருக்கலைப்பு “இளைஞர் கேட்கின்றனர் . . . கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?” (மார்ச் 8, 1995) என்ற கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. இருபத்து நான்கு வருடங்களுக்குமுன், 15 வயதில் நான் கர்ப்பிணியானபோது, அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளம் பெண்கள் உணர்ந்ததைப் போலவே உணர்ச்சியலைகள் என்னுள் எழும்பின. நான் கருக்கலைப்பு செய்துகொள்ளும்படி குழந்தையின் தகப்பன் ஆலோசனை கூறினார். ஆனால் நான் என் குழந்தையைப் பெற்றெடுக்கத் தீர்மானித்தேன். என்னுடைய பாதிரி என் குழந்தையை நான் தத்தெடுப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று விரும்பினார். இதுநாள்வரை நான் அந்தச் சர்ச்சின் வாசற்படியில் மறுபடியும் காலெடுத்துக்கூட வைக்கவில்லை! இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர்கள் ஆதரவாக இருந்தனர். என்னுடைய குழந்தையை ஆவிக்குரிய விதத்தில் மிக உறுதியாக வளர்க்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். யெகோவாவின் சாட்சிகள் எங்களுடைய வீட்டுக்கு வந்தபோது, பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, விரைவில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். இன்று நான் சந்தோஷமான திருமண வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறேன். என்னுடைய மகனா? அவன் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் சேவை செய்துவருகிறான். எனக்கிருந்த முதலாவது தெரிவைப்பற்றி—கருக்கலைப்பைப்பற்றி—நினைப்பதற்கே நான் நடுங்குகிறேன். அது தீர்வே கிடையாது!
ஜி. ஜே., ஐக்கிய மாகாணங்கள்