சிதைவுறக்கூடிய நம் கிரகம்—எதிர்காலத்தைப் பற்றியதென்ன?
இருநூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க அரசியல் மேதகை பாட்ரிக் ஹென்றி இவ்வாறு சொன்னார்: “எதிர்காலத்தைக் குறித்து தீர்மானிப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை.” கடந்த காலத்தில், மனிதன் சுற்றுச்சூழலை ஏறி மிதித்திருக்கிறான். எதிர்காலத்தில் மனிதன் ஒரு புதிய அத்தியாத்தை ஆரம்பிப்பானா? இதுவரைக்கும், அறிகுறிகள் எதுவும் உற்சாகமளிப்பதாயில்லை.
மெச்சத்தக்க முன்னேற்றம் கொஞ்சம் இருந்திருக்கிறபோதிலும், அது பெரும்பாலும் மேலோட்டமானதாக, காரணங்களைக் கையாளுவதற்கு மாறாக அறிகுறிகளைக் கையாளுவதாகவே இருந்திருக்கிறது. ஒரு வீட்டில், உலர் அழுகல் (dry rot) பிரச்சினை இருந்தால், மரவேலைப்பாடுகளுக்கு பெயின்ட் அடிப்பது அது இடிந்து விழுவதைத் தடுக்காது. கட்டமைப்புச் சார்ந்த ஒரு பெரிய திருத்தும் வேலை மட்டுமே அதைக் காப்பாற்ற முடியும். அதேவிதமாக, மனிதன் இந்தக் கிரகத்தைப் பயன்படுத்தும் விதமும் திருத்தி அமைக்கப்படவேண்டும். வெறுமனே சேதத்தைக் கட்டுப்படுத்துவது போதுமானதாக இராது.
ஐக்கிய மாகாணங்களில் 20 வருடங்களாக செய்யப்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளின் விளைவுகளை ஆராய்கையில், “சுற்றுச்சூழல் மீதான தாக்குதல் திறம்பட்ட வகையில் கட்டுப்படுத்தப்பட முடியாது, ஆனால் தடுக்கப்படவேண்டும்,” என்று ஒரு நிபுணர் முடிவாகக் கூறுகிறார். தெளிவாகவே, தூய்மைக் கேட்டைத் தடுத்தல் அதன் கேடான விளைவுகளை நிவர்த்தி செய்வதைக் காட்டிலும் மிகச் சிறந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு இலக்கை அடைவது, மனித சமுதாயத்திலும் பெரிய வணிகம் கவனம் செலுத்தும் காரியத்திலும் ஓர் அடிப்படை மாற்றத்தை நிச்சயமாகவே தேவைப்படுத்தும். பூமியைப் பராமரிப்பது, “இன்று நிலவிவரும் பெரும்பாலான மதிப்பீடுகள், பொருளாதாரங்கள் மற்றும் சமுதாயங்களிலிருந்து வித்தியாசப்பட்டவற்றை” தேவைப்படுத்துகிறது என்று பூமியைப் பராமரித்தல் புத்தகம் ஒத்துக்கொள்கிறது. இந்தக் கிரகத்தைப் பாதுகாப்பதற்காக மாற்றப்படவேண்டிய இந்த மதிப்பீடுகளில் சில யாவை?
நெருக்கடிக்கான ஆழமாகப் பதிந்துள்ள காரணங்கள்
தன்னலம். சுரண்டிப்பிழைக்கும் மனிதரின் அக்கறைகளுக்கு மேலாக கிரகத்தின் அக்கறைகளை வைப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முதல் அவசியமான படியாகும். என்றபோதிலும், செல்வச்செழிப்புமிக்க வாழ்க்கை பாணி, வருங்கால தலைமுறைகளுக்கு இந்தக் கிரகத்தை அழித்துவிடுவதாக இருந்தாலும்கூட, அதைத் துறக்க மனமுள்ளவர்களாய் இருப்பவர்கள் வெகு சிலரே. மேற்கு ஐரோப்பாவில் மிகவும் மாசுபடுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகிய நெதர்லாந்தின் அரசு, தூய்மைக்கேட்டிற்கு எதிரான பிரச்சாரத்தின் பாகமாக காரில் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்த முயன்றது; பரவலான எதிர்ப்பு அந்தத் திட்டத்தை நாசமாக்கியது. டச் ரோடுகள் உலகிலேயே மிகவும் நெருக்கமானவையாக இருந்தாலும், வாகனங்களில் செல்கிறவர்கள் தங்கள் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்களாய் இருந்தனர்.
சுய அக்கறை, தீர்மானம் செய்கிறவர்களையும் பொது மக்களையும் பாதிக்கிறது. அரசியல்வாதிகள் தங்களுக்கு கிடைக்கும் வோட்டுகளைப் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் திட்டங்களை அமல்படுத்த மனமில்லாதவர்களாய் இருக்கிறார்கள்; லாபத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் அச்சுறுத்தக்கூடிய எந்தத் திட்டத்தையும் தொழிலதிபர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
பேராசை. லாபங்களுக்கும் பாதுகாப்பிற்கும் இடையிலான தெரிவு என்று வருகையில் வழக்கமாய் பணம் சத்தமாகப் பேசுகிறது. மாசுக் கட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு அல்லது அரசு சட்டதிட்டங்களை மொத்தமாக தவிர்ப்பதற்கு பலம்மிக்க தொழிற்சாலைகள் பொது அதிகாரிகள்மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. ஓசோன் படலத்தின் சேதம் இந்தப் பிரச்சினைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. மார்ச் 1988 வரையாகக்கூட, ஐ.மா.-வின் பெரிய ரசாயன நிறுவனம் ஒன்றின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தற்போது, CFC வெளியேற்றத்தைப் பேரளவில் குறைப்பதற்கான தேவை இருப்பதாக அறிவியல்பூர்வ அத்தாட்சி குறிப்பிடவில்லை.”
என்றபோதிலும், க்ளோரோஃப்ளூரோகார்பன்களை (CFC-கள்) உண்டுபண்ணுவதை ஒட்டுமொத்தமாக நிறுத்தவேண்டும் என்று அதே நிறுவனம் பரிந்துரை செய்தது. மனநிலையில் எப்பேர்ப்பட்ட மாற்றம்? “சுற்றுச்சூழல் சேதப்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதைச் சார்ந்ததாக அது இருக்கவில்லை,” என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme [UNEP]) பொது இயக்குநர் முஸ்டாஃபா டால்பா விளக்கினார். “யார் யாரைவிட [பொருளாதார] லாபத்தைப் பெற முடியும் என்பதை [பற்றியதாகவே] அது இருந்தது.” வரலாற்றிலேயே மனிதனால் உண்டுபண்ணப்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவுகளில் மிகவும் மோசமான ஒன்று ஓசோன் படலத்தின் அழிவு என்று இப்போது அநேக அறிவியலாளர்கள் உணருகின்றனர்.
அறியாமை. நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு. “வெப்பமண்டல மழைக் காடுகளில் இருக்கும் மிகுதியான உயிர் வாழ்வைக் குறித்து நாம் இன்னும் ஓரளவுக்குக் குறைவாகவே அறிந்திருக்கிறோம்,” என்று மிஸ்ஸௌரி தாவரவியல் தோட்ட இயக்குனர் பீட்டர் ஹெச். ரேவன் விளக்குகிறார். “வியப்பூட்டக்கூடியதாய், சந்திரனின் மேற்பரப்பைப் குறித்து நாம் அதிகத்தை—அதிகமதிகமானதை—அறிந்திருக்கிறோம்.” வளிமண்டலத்தைக் குறித்ததிலும் அதுவே உண்மையாக இருக்கிறது. உலகளாவிய தட்பவெப்பநிலையைப் பாதிக்காமல் நாம் எவ்வளவு கார்பன் டையாக்ஸைடை வானிற்குள் செலுத்திக்கொண்டே இருக்க முடியும்? எவருக்கும் தெரியாது. ஆனால் டைம் பத்திரிகை சொன்னபடி, “விளைவு அறியப்படாமலும், சாத்தியமான விளைவுகள் எண்ணிப்பார்ப்பதற்கு மிகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கும்போது அப்படிப்பட்ட மிகப் பெரிய சோதனைகளுக்கு இயற்கையை உட்படுத்துவது துணிச்சலான காரியம்.”
UNEP கணிப்புகளின்படி, இந்தப் பத்தாண்டின் முடிவுவரை ஏற்படும் ஓசோன் இழப்பு, இறுதியில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான புதிய ஆட்களுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. பயிர்கள் மற்றும் மீன்வளத்தின்மீது அதன் பாதிப்பு இன்னும் அறியப்படாமல் இருக்கிறது, ஆனால் பேரளவான பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகியபார்வையுள்ள நோக்குநிலைகள். மற்ற பேரழிவுகளைப் போலில்லாமல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம்மீது தந்திரமாக மெதுவாக நுழைந்துவிடுகின்றன. நிரந்தரமான சேதம் ஏற்படுத்தப்படுமுன் ஒத்திசைவான நடவடிக்கைக்கு தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்படுவதை இது தடைசெய்கிறது. இந்தக் கிரகத்தைப் பாதுகாத்தல் (ஆங்கிலம்) என்ற புத்தகம், 1912-ல் செயலிழந்துபோன டைட்டானிக்கிலிருந்த அழிந்துபோன பயணிகளின் நிலைமையுடன் நம்முடைய தற்போதைய நிலைமையை ஒப்பிடுகிறது: “சாத்தியமாக இருக்கும் அவலம் எவ்வளவு பெரிய அளவுகளில் இருக்கும் என்பதைக் குறித்து ஒருசிலரே அறிந்திருக்கின்றனர்.” அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் நிஜத்தை எதிர்ப்பட்டு, குறுகியகால நன்மைகளுக்குப் பதிலாக சாத்தியமாக இருக்கும் நெடுங்காலத்திற்கு நீடித்திருக்கும் தீர்வுகளைக் கருத்தில்கொண்டு சிந்தித்தால் மட்டுமே இந்தக் கிரகம் பாதுகாக்கப்பட முடியும் என்று அந்த நூலாசிரியர்கள் நம்புகின்றனர்.
தன்னலம் கருதும் மனப்பான்மைகள். “பிரச்சினை உலகளாவியது, ஆகவே தீர்வும் உலகளாவியதாகத்தான் இருக்கவேண்டும்,” என்று 1992-ல் பூமி மாநாட்டில், ஸ்பானிய பிரதம மந்திரி ஃபேலீபே கான்ஸாலிஸ் குறிப்பிட்டார். உலகெங்கும் ஏற்கத்தக்க தீர்வுகளைக் கண்டுபிடிப்பது ஊக்கமிழக்கச் செய்யும் ஒரு வேலையாக இருக்கும் என்பது உண்மையான கூற்றுதான். பூமி மாநாட்டிற்கு வந்த ஐ.மா. பிரதிநிதி இவ்வாறு வெளிப்படையாகச் சொன்னார்: “அமெரிக்க வாழ்க்கைப் பாணி பேச்சுவார்த்தைகளுக்கு இடங்கொடுப்பதாக இல்லை.” மறுபட்சத்தில், “மேற்கத்திய நாட்டில் ஒரு பிள்ளை, கிழக்கத்திய நாட்டில் 125 பேர் நுகரக்கூடியதை நுகர்கிறது,” என்று இந்திய சுற்றுச்சூழலியலாளர் மேனகா காந்தி முறையிட்டார். “ஏறக்குறைய கிழக்கிலுள்ள சுற்றுச்சூழல் சீரழிவு அனைத்தும் மேற்கிலுள்ள நுகர்வின் காரணமாகவே ஏற்படுகிறது,” என்று அவர் வலியுறுத்தினார். மீண்டும் மீண்டுமாக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் தன்னலம் கருதும் தேசிய அக்கறைகளின் காரணமாகத் தோல்வியுற்றிருக்கின்றன.
இந்த அடிப்படை பிரச்சினைகள் எல்லாவற்றின் மத்தியிலும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கியிருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. நமது கிரகத்தின் தற்காப்பு அமைப்பின் மீளும்தன்மை அவற்றில் ஒன்றாகும்.
பூமி குணமடைதல்
மனித உடலைப் போலவே, தன்னைத்தான் குணப்படுத்தக்கூடிய வியப்பூட்டும் திறம் பூமிக்கு இருக்கிறது. இதற்கு குறிப்பிடத்தக்க ஓர் உதாரணம் கடந்த நூற்றாண்டில் சம்பவித்தது. இந்தோனீஷிய எரிமலை தீவாகிய க்ராக்காடாவ் (க்ராக்காடோஆ) ஒரு மாபெரும் வெடிப்பில் வெடித்தது; அது ஏறக்குறைய 5,000 கிலோமீட்டர் தள்ளியும் கேட்கப்பட்டது. கிட்டத்தட்ட 21 கனசதுர கிலோமீட்டர் பொருட்கள் வானத்திற்குள் தூக்கிவீசப்பட்டன; அந்தத் தீவின் மூன்றில் இரண்டு பாகம் கடலுக்கடியில் மறைந்தது. ஒன்பது மாதங்கள் கழித்து, உயிர் வாழ்விற்கான ஒரே அடையாளம், நுண்ணோக்காடியில் பார்க்கக்கூடிய ஒரு சிலந்தி மட்டுமே. இன்று அந்த முழு தீவும், செழிப்பான வெப்பமண்டல தாவரங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது; பறவைகள், பாலூட்டிகள், பாம்புகள், பூச்சிகள் ஆகியவற்றின் நூற்றுக்கணக்கான இனங்களை அவை பிழைப்பூட்டுகின்றன. ஊஜங் கூலான் தேசிய பூங்காவின் பாகமாக இந்தத் தீவு அனுபவிக்கும் பாதுகாப்பின் காரணமாகவே இந்த மீட்பு தூண்டப்பட்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சேதமும் சரியாக்கப்பட முடியும். காலம் அனுமதிக்கப்பட்டால், பூமி தன்னைத்தான் குணப்படுத்த முடியும். கேள்வி என்னவென்றால், பூமிக்குத் தேவையான ஓய்வுகாலத்தை மனிதர் அதற்குக் கொடுப்பார்களா? கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் நம் கிரகம் தன்னைத்தானே குணப்படுத்த அனுமதிப்பதற்குத் தீர்மானமாக இருக்கும் ஒருவர்—அதைப் படைத்தவராகிய அவர்—இருக்கிறார்.
“பூவுலகம் களிகூரட்டும்”
மனிதன் பூமியை அழிக்கவேண்டுமென்று கடவுள் ஒருபோதும் உத்தேசிக்கவில்லை. அவர் ஆதாமிடம் ஏதேன் தோட்டத்தை ‘பண்படுத்தவும் காக்கவும்’ சொன்னார். (ஆதியாகமம் 2:15) யெகோவா இஸ்ரவேலருக்குக் கொடுத்த அநேக சட்டங்களிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அவருடைய அக்கறை வெளிக்காட்டப்பட்டது. உதாரணமாக, ஏழு வருடங்களுக்கு ஒருமுறை—ஓய்வு வருடம்—அந்த நிலம் சும்மா கிடக்க விடப்பட வேண்டும் என்று அவர்கள் சொல்லப்பட்டார்கள். (யாத்திராகமம் 23:10, 11) இதையும் கடவுளால் கொடுக்கப்பட்ட மற்ற கட்டளைகளையும் அடிக்கடி இஸ்ரவேலர் அசட்டை செய்தபோது, முடிவில் அந்த தேசத்தைக் குடியிருப்பில்லாமல் ஆகச் செய்யும்படி பாபிலோனியர்களை அனுமதித்தார்; அப்போது அந்த “தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அனுபவித்துத் தீருமட்டும்” 70 வருடங்களுக்கு பாழாய்க் கிடந்தது. (2 நாளாகமம் 36:21) இந்த வரலாற்றுப்பூர்வ முன்னிகழ்வின் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு மனிதனால் ஏற்படும் தாக்குதலிலிருந்து பூமி மீண்டுவரும்படியாக கடவுள், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்று சொல்வதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.—வெளிப்படுத்துதல் 11:18.
என்றபோதிலும், அந்த நடவடிக்கை முதல் படி மட்டுமே. உயிரியலாளர் பாரி காமனர் சரியாகவே குறிப்பிடுவதுபோல, இந்தக் கிரகத்தின் தப்பிப்பிழைப்பு, “இயற்கையுடனுள்ள போராட்டதை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் நமக்குள்ளிருக்கும் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சமமாகவே சார்ந்திருக்கிறது.” அந்த இலக்கை அடைவதற்கு, பூமியிலுள்ள மக்கள் ஒருவரையொருவர் கவனிப்பதற்கும் தங்கள் பூமிக்குரிய வீட்டைக் கவனிப்பதற்கும் ‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருக்க’ வேண்டும். அதன் பலனாக, அவர்களுடைய சமாதானம் “மிகுதியாக” இருக்கும்.—ஏசாயா 54:13, NW.
பூமியின் சூழியல் அமைப்புகள் புதுப்பிக்கப்படும் என்று கடவுள் உறுதி அளிக்கிறார். தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக, வனாந்தரங்கள் “புஷ்பத்தைப்போலச் செழிக்கும்.” (ஏசாயா 35:1) உணவு குறைபாடுகளுக்குப் பதிலாக, “பூமியில் ஏராளமான தானியம்” இருக்கும். (சங்கீதம் 72:16) தூய்மைக்கேட்டின் காரணமாக சாவதற்குப் பதிலாக, பூமியின் ஆறுகள் ‘கைகொட்டும்.’—சங்கீதம் 98:8.
அப்படிப்பட்ட ஒரு மாற்றம் எப்போது சாத்தியமாகும்? ‘யெகோவா தாமே ராஜாவாகி’ இருக்கும்போது அப்படியாகும். (சங்கீதம் 96:10) கடவுளுடைய ஆட்சி பூமியிலுள்ள ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்கும் ஆசீர்வாதத்தை நிச்சயப்படுத்தும். “வானங்கள் மகிழட்டும், பூவுலகம் களிகூரட்டும்,” என்று சங்கீதக்காரன் சொல்கிறார். “கடலும் அதில் வாழ்வனவும் ஆரவாரம் செய்யட்டும். வயல் வெளியும் அதில் உள்ள அனைத்தும் ஆர்ப்பரிக்கட்டும்; காட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்போது ஆண்டவர்முன் மகிழ்ச்சியுறும்.”—சங்கீதங்கள் 95:11, 12, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
தன் சிருஷ்டிகரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் நீதியால் அரசாளப்பட்டதுமான ஒரு பூமி ஒரு மகிமையான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது. பலன்களை பைபிள் விவரிக்கிறது: “கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப் பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.” (சங்கீதம் 85:10-12) அந்நாள் விடிகையில், நம் கிரகம் என்றென்றுமாக ஆபத்தின்றி இருக்கும்.
[பக்கம் 13-ன் படம்]
மனித உடலைப் போலவே, தன்னைத்தான் குணப்படுத்தக்கூடிய வியப்பூட்டும் திறன் பூமிக்கு இருக்கிறது