நம் கிரகத்தைப்—பாதுகாப்பதற்கான போராட்டம்
ஸ்பெய்னிலிருந்து விழித்தெழு! நிருபர்
காராபாஷ் என்ற ரஷ்ய நகரில் வாழும் யூரய்க்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்; அவர்கள் இருவரும் நோயாளிகள். அவர் கவலைப்படுகிறார், ஆனால் ஆச்சரியப்படவில்லை. “உடல்நலமுள்ள குழந்தைகள் எவருமே இங்கில்லை,” என்று அவர் விளக்குகிறார். காராபாஷிலுள்ள மக்கள் விஷமூட்டப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் உள்ளூர் தொழிற்சாலை ஒன்று, 1,62,000 டன் மாசுபடுத்தும் பொருட்களைக் காற்றினுள் பீறிடச் செய்கிறது—அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் 9 டன் என்ற அளவில் அது இருக்கிறது. ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே கோலா தீபகற்பத்திலுள்ள நீகெல் மற்றும் மான்செகார்ஸ்க்கில், “உலகின் மிகப் பெரியதும் மிகப் பழமையானதுமான நிக்கல் உருக்கிப் பிரித்தெடுக்கும் ஆலைகள் இரண்டு . . . ரஷ்யாவிலுள்ள அதுபோன்ற மற்றெந்த தொழிற்சாலைகளைக் காட்டிலும் அதிகமான கன உலோகங்களையும் சல்ஃபர் டையாக்ஸைடையும் ஒவ்வொரு வருடமும் காற்றிற்குள் வெளிவிடுகின்றன.”—தி நியூ யார்க் டைம்ஸ்.
மெக்ஸிகோ நகரில் காற்று இனிமேலும் ஆரோக்கியகரமானதாக இல்லை. அந்த நகரின் செழுமையான பகுதியில்கூட, பிள்ளைகள் 5 நாட்களில் 4 நாட்கள் உடல்நலமின்றி இருந்ததாக டாக்டர் மார்காரீடா காஸ்ட்டியெஹாஸ் நடத்திய சுற்றாய்வில் கண்டறியப்பட்டது. “உடல்நலமின்றி இருப்பது அவர்களுக்கு இயல்பானதாகிவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார். நகர தெருக்களில் எங்கும் நிறைந்து காணப்படும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெளிவிடும் ஊடுருவக்கூடிய புகைமூடம் அந்தக் குற்றத்திற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் என்று அவர் சொல்லுகிறார். ஓசோன் அளவுகள், உலக சுகாதார அமைப்பின் அதிகபட்ச வழிகாட்டு வரையறையைவிட நான்கு மடங்காக இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் அந்த ஆபத்து காணக்கூடாததாக இருக்கிறது—ஆனால் அதைப்போலவே அழிவுக்குரியதாக இருக்கிறது. பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஓடியாடிக்கொண்டிருக்கும்போது பிள்ளைகள் இப்போது தொப்பிகளை அணிய வேண்டும். தென்பாதிக் கோளத்திலுள்ள ஓசோனாலான பாதுகாப்புப் பகுதி பேரளவில் அழிக்கப்பட்டிருப்பது, ஆஸ்திரேலியர்கள் சூரியனை ஒரு நண்பனாகக் கருதுவதற்கு மாறாக ஒரு பகைவனாக கருதத் தொடங்கும்படி செய்வித்திருக்கிறது. தோல் புற்றுநோய்களில் அவர்கள் ஏற்கெனவே மும்மடங்கு அதிகரிப்பைக் கண்டிருக்கின்றனர்.
உலகின் மற்ற பகுதிகளில், போதுமானளவு தண்ணீரைக் கண்டடைவது ஒரு தினசரி போராட்டமாக இருக்கிறது. ஆமால்யா 13 வயதாக இருந்தபோது, மொஸாம்பிக்கில் வறட்சி ஏற்படத் தொடங்கியது. முதல் வருடத்தில் சமாளித்துக்கொள்ள போதியளவும், அதற்கடுத்த வருடத்தில் அரிதாகவுமே தண்ணீர் இருந்தது. காய்கறி பயிர்கள் வாடிவதங்கி செத்துப் போயின. ஆமால்யாவும் அவளுடைய குடும்பத்தினரும் காட்டுப் பழங்களைச் சாப்பிட்டு, தங்களால் கூடியவரையில் அருமதிப்பான தண்ணீர் எவ்வளவு கிடைக்குமோ அதைக் கண்டுபிடிக்க மணற்பாங்கான ஆற்றுப்படுகைகளை தோண்டிக்கொண்டிருக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
இந்திய மாநிலமான ராஜஸ்தானில், மேய்ச்சல் நிலங்களே வேகமாக மறைந்து வருகின்றன. மேய்ச்சல் நாடி நாடோடியாகத் திரியும் இனத்தைச்சேர்ந்த ஃபாகூ என்பவர், உள்ளூர் விவசாயிகளுடன் அடிக்கடி தர்க்கம் செய்கிறார். தன்னுடைய செம்மறியாட்டு மந்தைகளுக்கும் வெள்ளாட்டு மந்தைகளுக்கும் மேய்ச்சல் நிலத்தை அவரால் கண்டுபிடிக்க முடிகிறதில்லை. செழிப்பான நிலம் மிகவும் குறைவுபடுவதன் காரணமாக, விவசாயிகளுக்கும் நாடோடிகளுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக இருந்த நட்பமைதியுடன்கூடிய கூட்டு வாழ்வு முறிந்திருக்கிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள சஹாராவின் தென்புற விளிம்பிலுள்ள பகுதி வறண்ட நிலத்தாலான ஒரு பரந்த மண்டலமாகிய செஹிலில் நிலைமை இன்னும்கூட மோசமாக இருக்கிறது. காடு அழிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த வறட்சி ஆகியவற்றின் காரணமாக, மந்தைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன; மேலும் எண்ணற்ற சிறிய பண்ணைகள் விரிவடைந்துகொண்டே வரும் பாலைவன மணல்களில் புதைந்துகிடக்கின்றன. ஏழாவது முறையாக தன்னுடைய தினைப் பயிர் விளையாததைப் பார்த்தப்பின் “நான் இனிமேலும் பயிரிடமாட்டேன்,” என்பதாக நைஜரிலிருந்து வந்த ஃபுலானி விவசாயி உறுதிபூண்டார். மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தால் அவருடைய கால்நடைகள் ஏற்கெனவே செத்துவிட்டன.
வளர்ந்துவரும் அச்சுறுத்தல்
சமீபத்திய வறட்சிகள், மோசமான அறுவடைகள், ஒன்றன்பின் ஒன்றாக நகரங்களை மூச்சுத்திணறவைக்கும் மாசுபடுத்தப்பட்ட காற்று ஆகியவற்றிற்கும் பின்னால் முன்னறிகுறியான ஒரு மாதிரி இருந்திருக்கிறது. அவை நோய்வாய்ப்பட்ட ஒரு கிரகத்தின், மனிதன் அதன்மேல் குவித்துக்கொண்டு வரும் அத்தனை கோரிக்கைகளையும் இனிமேலும் சமாளிக்க முடியாதிருக்கும் ஒரு கிரகத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன.
நாம் சுவாசிக்கும் காற்று, நாம் உண்ணும் உணவு, நாம் குடிக்கும் தண்ணீர் ஆகியவற்றைவிட நம் பிழைப்புக்கு பூமியில் அதிக முக்கியமானது வேறெதுவுமில்லை. உயிர்பிழைக்கத் தேவையான இந்தக் காரியங்கள் இடைவிடாமல், மனிதனாலேயே கறைபடுத்தப்பட்டோ மெதுமெதுவாக அழிக்கப்பட்டோ வருகிறது. சில நாடுகளில் சுற்றுச்சூழலின் நிலை ஏற்கெனவே உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிக்காயில் கார்பச்சேவ் அதைச் சித்தரித்ததுபோல, “சூழலியல் நம்மைத் தொண்டையில் கவ்வியிருக்கிறது.”
அந்த அச்சுறுத்தல் கவனிக்காமல் விடப்படவேண்டிய ஒன்றல்ல. உலக மக்கள்தொகை நிலையாக அதிகரித்து வருகிறது; வரையறுக்கப்பட்ட வளங்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. “நம்முடைய எதிர்காலத்தைக் குறித்த திணறவைக்கும் அச்சுறுத்தல் இராணுவ ஆக்கிரமிப்பு அல்ல, ஆனால் இந்தக் கிரகத்தின் சுற்றுச்சூழல் சீரழிவே ஆகும்,” என்று உலககவனிப்பு நிறுவனத்தின் (Worldwatch Institute) தலைவராகிய லெஸ்டர் ப்ரௌன் சமீபத்தில் குறிப்பிட்டார். ஓர் அவலம் நேரிடுவதைத் தடுப்பதற்காகப் போதிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறதா?
இந்தக் கிரகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்
குடிப்பதில் தனக்கொரு பிரச்சினை இல்லை என நிச்சயமாக இருக்கும் ஒரு குடிகாரனுக்கு உதவுவது கடினம். அதேவிதமாகவே, இந்தக் கிரகத்தின் நலத்தை மேம்படுத்துவதற்கான முதல் படி, அது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். சமீப வருடங்களில் கல்வியே மிகவும் தலைசிறந்து நிற்கும் சுற்றுச்சூழல் சம்பந்தமான வெற்றியாக ஒருவேளை இருக்கலாம். நம்முடைய பூமி வளங்குன்ற வைக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகிறது என்றும் அதைக் குறித்து ஏதாவது செய்யப்பட வேண்டும் என்றும் இன்றைய மக்களில் பெரும்பாலானோர் நன்கு அறிந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் சீரழிவின் அச்சுறுத்தல் அணுக்கருப் போரைவிடவும் அதிகமாக தற்போது பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
உலகத் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளைக் குறித்து அசட்டையாய் இல்லை. நாடுகளின் தலைவர்கள் சுமார் 118 பேர், 1992-ல், பூமி மாநாட்டில் (Earth Summit) ஆஜராகி இருந்தனர்; வளிமண்டலத்தையும், குறைந்துகொண்டே போகும் பூமியின் வளங்களையும் பாதுகாப்பது சம்பந்தமாக ஒருசில படிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன. காலச் சூழ்நிலை ஒப்பந்தம் ஒன்றில் பெரும்பாலான நாடுகள் கையொப்பமிட்டன; அண்மை எதிர்காலத்தில், கார்பனின் மொத்த வெளியீட்டை நிலையானதாக்குவதற்காக, அந்த வெளியீடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிக்கை செய்வதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவதற்கு அவர்கள் அதில் ஒத்துக்கொண்டார்கள். நம் கிரகத்தின் உயிரியல் பல்வகைமையை, தாவர மற்றும் விலங்கு இனங்களின் மொத்த எண்ணிக்கையை, பாதுகாப்பதற்கான வழிகளையும் அவர்கள் கலந்தாலோசித்தனர். உலகின் வனங்களைப் பாதுகாப்பது பற்றி ஒப்பந்தத்திற்கு வரமுடியவில்லை; ஆனால் “நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை” நாடுகள் எவ்வாறு அடையமுடியும் என்பதற்கான வழிகாட்டுக் குறிப்புகளை உடைய இரண்டு ஆவணங்களாகிய “ரியோ அறிவிப்பு,” “அஜன்டா 21” ஆகியவற்றை அந்த மாநாடு உருவாக்கியது.
சுற்றுச்சூழலியலாளராகிய ஆலன் ஹாமண்ட் குறிப்பிடுகிறதுபோல, “ரியோவில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் காத்துக்கொள்ளப்படுமா—அந்த பலமான வார்த்தைகள் வருகின்ற மாதங்களிலும் வருடங்களிலும் செயலுரு பெறுவதற்கு வழிநடத்துகின்றனவா—என்பதே கடுஞ்சோதனையாக இருக்கும்.”
என்றபோதிலும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் க்ளோரோஃப்ளூரோகார்பன்களின் (CFC-கள்) உற்பத்தியை நிறுத்திவிடுவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உட்படுத்திய 1987 மான்ட்ரீல் ப்ரோட்டோகால், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னேற்றப் படியாக இருந்தது.a ஏன் இந்தக் கவலை? ஏனென்றால், பூமியின் பாதுகாப்பான ஓசோன் படலம் விரைவில் மென்மையாகிக்கொண்டே வருவதற்கு CFC-கள் காரணமாய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தோல் புற்றுநோய்களையும் கண்புரைகளையும் ஏற்படுத்தவல்ல சூரியனின் புற ஊதாக் கதிர்களை வடிகட்டுவதில் பூமியின் மேற்பரப்பிலிருக்கும் வளிமண்டலத்திலுள்ள ஓசோன், முக்கியமான பாகத்தை வகிக்கிறது. இது ஆஸ்திரேலியாவில் மட்டுமுள்ள பிரச்சினை அல்ல. சமீபத்தில், வடபாதிக் கோளத்திலுள்ள சில மிதமான தட்பவெட்ப நிலை உள்ள பகுதிகளுக்கு மேல், குளிர்கால ஓசோன் அளவில் 8-சதவீத குறைவு இருந்ததாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இரண்டு கோடி டன் அளவான CFC-கள் ஏற்கெனவே வெப்பச்சீரடுக்கு மண்டலத்திடமாக மேல்நோக்கிச் சென்றுவிட்டன.
வளிமண்டலத்தின் இந்தப் பேரழிவுக்குரிய கறைபடுத்தலை எதிர்ப்படுகையில், உலக நாடுகள் தங்கள் வேற்றுமைகளைத் தள்ளி வைத்துவிட்டு தீர்மானமான நடவடிக்கை எடுத்தனர். அற்றுப்போகும் நிலையில் இருக்கும் இனங்களைப் பாதுகாப்பதற்கும், அன்டார்க்டிகாவின் வளத்தைக் காப்பதற்கும், நச்சுக் கழிவுப் பொருட்களின் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் மேலுமான சர்வதேச நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
அநேக நாடுகள் தங்கள் ஆறுகளைத் தூய்மைப்படுத்தவும் (வஞ்சிர மீன்வகைகள் இங்கிலாந்தின் தேம்ஸ் ஆற்றிற்கு இப்போது திரும்பிவிட்டன), காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தவும் (ஐக்கிய மாகாணங்களில் மிகவும் மோசமான அளவில் தூசிப்புகையை உடைய நகரங்களில் அது 10 சதவீதம் குறைந்திருக்கிறது), சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தவும் (ஐஸ்லாந்திலுள்ள 80 சதவீதமான வீடுகள் நிலவெப்ப ஆற்றலால் வெப்பமூட்டப்படுகின்றன), அவற்றின் இயற்கை சொத்தைப் பாதுகாக்கவும் (கோஸ்டா ரிகாவும் நமிபியாவும் அவற்றின் மொத்த நிலபரப்பில் சுமார் 12 சதவீதத்தை தேசிய பூங்காக்களாக மாற்றியிருக்கின்றன) படிகளை மேற்கொள்ளுகின்றன.
ஆபத்தை மனிதவர்க்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த உடன்பாடான அறிகுறிகள் நிரூபணமாக இருக்கின்றனவா? எப்படியும் சீக்கிரத்தில் நம்முடைய கிரகம் மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்குமா? பின்தொடரும் கட்டுரைகள் அந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.
[அடிக்குறிப்பு]
a CFC-கள், வளிமக் கரைசல் தெளிப்பான்கள், குளிர் பதனப்படுத்தல், காற்றுப்பதனப்படுத்தல் சாதனங்கள், துப்புரவாக்கும் பொருள்கள், மற்றும் நுரைபொருள் காப்பீடுகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டிசம்பர் 22, 1994, விழித்தெழு!-வில் “நமது வளிமண்டலம் சேதமடையும்போது” என்பதைப் பார்க்கவும்.