அந்தப் போராட்டம் வெற்றிபெற்று வருகிறதா?
“இந்தக் கிரகத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள், இது ஒன்றுதான் நமக்கு இருக்கிறது.” இயற்கைக்காகச் செயலாற்றும் உலகுதழுவிய நிதி நிறுவனத்தின் (World Wide Fund for Nature) தலைவராகிய பிரிட்டன் இளவரசரின் துடிப்புள்ள வேண்டுகோள் இது.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர், சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” (சங்கீதம் 115:16) கடவுள் பூமியை நம் வீடாகக் கொடுத்திருக்கிறார்; ஆகவே நாம் அதைக் கவனித்துப் பேண வேண்டும். சூழலியலைப் பற்றியதெல்லாம் அதுவே.
சொல்லர்த்தமாக “சூழலியல்” (ecology) என்ற வார்த்தை “வீட்டைப் பற்றிய ஆய்வு” என்று அர்த்தப்படுகிறது.a தி அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்ஷனரி கொடுக்கிற விளக்கத்தின்படி, அது பாதுகாப்பின்மூலம் தடுக்கும் அல்லது பழைய நிலைக்குக் கொண்டுவரும் நோக்குடன் “சுற்றுச்சூழலின்மீது நவீன நாகரீகம் ஏற்படுத்தும் தீங்கிழைக்கும் விளைவுகளைப் பற்றி மேற்கொள்ளும் ஆய்வு.” எளிய நடையில் சொன்னால், சூழலியல் என்பது மனிதன் ஏற்படுத்தியிருக்கும் சேதத்தைக் கண்டுபிடித்து, பின்னர் அவற்றைச் சரிப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதாகும். இரண்டுமே எளிதான வேலைகள் அல்ல.
சூழலியலின் மூன்று அடிப்படை உண்மைகள்
துர்ப்பிரயோகத்திற்கு பூமி ஏன் அவ்வளவு எளிதில் பலியாகக்கூடும் என்பதை விளக்கும் மூன்று எளிய சூழலியல் விதிகளை கிரகத்துடன் சமாதானம் செய்துகொள்ளுதல் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் உயிரியலாளர் பாரி காமனர் எடுத்துரைக்கிறார்.
ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் தொடர்புடையவையாய் இருக்கின்றன. மோசமான பல் ஒன்று முழு உடலையும் பாதிப்பது போல, ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தின் சேதம் ஒரு முழு தொடரான சூழலியல் பிரச்சினைகளைத் தூண்டுவிக்கலாம்.
உதாரணமாக, கடந்த 40 வருடங்களாக, நேப்பாளத்தின் இமாலய காடுகளில் 50 சதவீதமானவை, விறகாக பயன்படுத்துவதற்கு அல்லது மரச் சாமான்களைச் செய்வதற்கு வெட்டப்பட்டிருக்கின்றன. மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன என்றால், மலைச் சரிவுகளிலுள்ள மண், பருவ மழை வந்ததும் விரைவில் அடித்துச்செல்லப்படுகிறது. மேற்பரப்பு மண் இல்லாமல், புதிய மரங்கள் வேர்கொள்ள முடிவதில்லை; அதனால் அநேக மலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. காடு அழிப்பின் காரணமாக, நேப்பாளம் இப்போது ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான டன் அளவு மேற்பரப்பு மண்ணை இழக்கிறது. அந்தப் பிரச்சினைகள் நேப்பாளத்திற்கு மட்டுமே உரியவையாக இல்லை.
வங்காள தேசத்தில், மரங்களால் ஒருகாலத்தில் உறிஞ்சிக்கொள்ளப்பட்ட விசைமாரியாகப் பொழியும் மழைகள், மேற்பரப்பு அகற்றப்பட்ட மலைகளின் வழியாக வழிந்தோடி, கரையை நோக்கிச் சென்று, அங்கு அழிவுக்குரிய வெள்ளப்பெருக்குகளை உண்டாக்குகின்றன. கடந்த காலங்களில், வங்காள தேசத்தில் ஒவ்வொரு 50 வருடங்களுக்கும் ஒருமுறை அபாயகரமான வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன; இப்போதோ ஒவ்வொரு 4 அல்லது அதற்குக் குறைந்த வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது.
உலகின் மற்ற பாகங்களில், காடுகளை வெட்டி அழித்தல், வனாந்தரமயமாக்குதலுக்கும் உள்ளூர் தட்பவெப்ப நிலையில் மாற்றங்களுக்கும் வழிநடத்தியிருக்கிறது. அளவுக்கு அதிகமாக மனிதன் பயன்படுத்தும் ஒரே ஒரு இயற்கை வளம்தான், காடுகள். நமது மிகப்பெரிய சூழலமைப்பில் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் பாகங்களைப்பற்றி சூழலியலாளர்கள் இன்னும் ஓரளவுக்குக் குறைவாகவே அறிந்திருப்பதால், ஏற்கெனவே கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டிருக்கும் வரையாக ஒரு பிரச்சினை கவனிக்கப்படாமல் இருக்கக்கூடும். கழிவுப் பொருட்களை அகற்றுதலைப் பொறுத்தவரையில் இது உண்மையாக இருக்கிறது; இது சூழலியலின் இரண்டாவது விதியை நன்கு சித்தரிக்கிறது.
ஒவ்வொன்றும் எங்காவது செல்லவேண்டியதாய் இருக்கிறது. குப்பை அகற்றப்படாமல் விடப்பட்ட, மாதிரி வீடு ஒன்று எப்படி காட்சியளிக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள். நமது கிரகம் அதுபோன்ற ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பாக இருக்கிறது—நம் கழிவுகள் அனைத்தும் நம்முடைய பூமிக்குரிய வீட்டைச் சுற்றி எங்காவதுதான் முடிவாக வந்து சேர வேண்டும். க்ளோரோஃப்ளூரோகார்பன்களைப் (CFC-கள்) போன்ற கேடு விளைவிக்காததாகத் தோன்றும் வாயுக்கள்கூட, மெல்லிய காற்றினுள் முற்றிலுமாக மறைந்துவிடுவதில்லை என்று ஓசோன் படலமானது ஓரளவுக்கு மெதுவாக அழிக்கப்பட்டு வருவது காண்பிக்கிறது. வானத்திலும், ஆறுகளிலும், சமுத்திரங்களிலும் விடப்பட்டு வரும் அபாயகரமாகவல்ல நூற்றுக்கணக்கான பொருட்களில் CFC-கள் ஒன்று மட்டுமே.
சில பொருட்கள்—“உயிர்ப்பொருள் சிதைவுறக்கூடியவை” என்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பவை—காலப்போக்கில் எளிய பொருட்களாக சிதைவுறச் செய்யப்பட்டு, இயல்பான நிகழ்வுகள் மூலமாக உறிஞ்சிக்கொள்ளப்படும் என்பது உண்மைதான்; மற்றப் பொருட்களோ அவ்வாறு செய்யப்பட முடியாதவையாக இருக்கின்றன. உலகின் கடற்கரைகள், பிளாஸ்டிக் கலங்கள் நிறைந்த குப்பையால் நிரப்பப்பட்டிருக்கின்றன; வரப்போகும் பத்தாண்டுகளில் அவை அவ்வாறே கிடக்கும். தொழிற்சாலையின் நச்சுக் கழிவுகள் அந்தளவுக்கு காணக்கூடியவையாக இல்லை; அவை வழக்கமாக எங்காவது புதைக்கப்படுகின்றன. அவை காட்சியில் இல்லையென்றாலும் எப்போதுமே மனதிலிருந்தும் மறக்கப்பட்டிருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அவை இன்னும்கூட நிலத்தடி தண்ணீர் மூலங்களுக்குள் கசிந்துசென்று, மனிதனுக்கும் மிருகங்களுக்கும் கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தலாம். “நவீன தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் எல்லா ரசாயனப் பொருட்களையும் வைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என்று புடாபெஸ்ட் நீரியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஹங்கேரிய அறிவியலாளர் ஒத்துக்கொண்டார். “அவற்றைக் குறித்து முழுமையாகத் தெரிந்துவைத்துக்கொள்ளக்கூட முடிவதில்லை,” என்கிறார்.
எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகவும் அச்சுறுத்தும் குப்பையானது, கதிரியக்கக் கழிவாகும்; அது அணுக்கரு ஆற்றல் நிலையங்களிலிருந்து கிடைக்கும் உபவிளைவுப் பொருளாக இருக்கிறது. ஏற்கெனவே சில, சமுத்திரங்களில் கொட்டப்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான டன் அணுக்கரு சார்ந்த கழிவுகள் தற்காலிகமான இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வருடக்கணக்கான அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறபோதிலும், பாதுகாப்பான, நிரந்தரமான சேமிப்பிற்கோ அகற்றுதலுக்கோ எவ்வித தீர்வும் இன்னும் கண்டுபிடிக்கப்படவுமில்லை; சமீப எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்போவதாகத் தெரியவுமில்லை. சூழலியல்சார்ந்த இந்தக் காலக் குண்டுகள் என்று வெடிக்கக்கூடும் என்று எவருக்கும் தெரியவும் தெரியாது. அந்தப் பிரச்சினை நிச்சயமாக மறைந்துவிடாது—வரப்போகும் நூற்றாண்டுகளுக்கு அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, அல்லது கடவுள் நடவடிக்கை எடுக்கும் வரையாக அந்தக் கழிவு கதிரியக்கமுள்ளதாகவே இருக்கும். (வெளிப்படுத்துதல் 11:18) கழிவுப்பொருட்களை அகற்றுவதைக் குறித்ததில் மனிதன் அசட்டையாக இருப்பது, சூழலியலின் மூன்றாவது விதியை நினைவுபடுத்துவதாகவும் இருக்கிறது.
இயற்கை தன் போக்கைத் தொடரும்படி விடவேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதன் இயற்கை நிகழ்வுகளை அசட்டை செய்து, தான் நினைக்கும் ஏதோவொன்று அவற்றைவிட மேம்பட்டது என்று நினைப்பதற்கு மாறாக அவற்றுடன் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகள், பொருத்தமான உதாரணமாக இருக்கின்றன. முதல்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, களைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், நாசமாக்கும் பூச்சிகளைக் கிட்டத்தட்ட முற்றிலும் நீக்குவதற்கும் அவை விவசாயிகளுக்கு உதவின. அமோக விளைச்சல் உறுதியளிக்கப்பட்டதாகத் தோன்றியது. ஆனால் பின்னர், காரியங்கள் தவறாகிவிட்டன. களைகளும் பூச்சிகளும் ஒவ்வொரு பூச்சிக்கொல்லிக்கும் எதிராக எதிர்ப்பாற்றலை உடையவை ஆயின; அந்தப் பூச்சிகளை இயல்பாகவே கொன்றுண்ணும் உயிர்களுக்கும், வனவாழ் உயிர்களுக்கும், மனிதனுக்கும்கூட அந்தப் பூச்சிக்கொல்லிகள் விஷமூட்டின என்பது தெளிவாயிற்று. நீங்களும் பூச்சிக்கொல்லி விஷமூட்டலால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அப்படியானால், உலகெங்குமுள்ள குறைந்தபட்சம் பத்துலட்ச பலியாட்களில் நீங்களும் ஒருவர்.
முரண்பட்டுநிற்கும் முடிவான உண்மை என்னவென்றால், பூச்சிக்கொல்லிகள் முடிவில் பயிர் விளைச்சல்களை அதிகரிக்காமல்கூட போய்விடலாம் என்பதற்கு அதிகரித்து வரும் அத்தாட்சி இருப்பதேயாகும். ஐக்கிய மாகாணங்களில், பூச்சிக்கொல்லி புரட்சிக்கு முன்பைவிட தற்போது அதிகளவான அழிவைப் பூச்சிகள் அறுவடையில் ஏற்படுத்திவிடுகின்றன. அதேவிதமாகவே, தென்கிழக்கு ஆசியாவில் பூச்சிக்கொல்லிகள் இனிமேலும் அரிசி விளைச்சல்களை அதிகரிப்பதில்லை என்று பிலிப்பீன்ஸை தலைமை இடமாகக் கொண்டிருக்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் கண்டிருக்கிறது. உண்மையில், இந்தோனீஷிய அரசால் ஆதரவளிக்கப்பட்ட, அதிகமாகப் பூச்சிக்கொல்லிகளின்மேல் சார்ந்திராத திட்டம் ஒன்று, 1987 முதற்கொண்டு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டில் 65-சதவீத குறைப்பின் மத்தியிலும் அரிசி உற்பத்தியில் 15-சதவீத அதிகரிப்பைப் பெற்றிருக்கிறது. என்றபோதிலும், ஒவ்வொரு வருடமும் உலகின் விவசாயிகள் இன்னும் பூச்சிக்கொல்லிகளை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.
மேலே விளக்கப்பட்டுள்ள, சூழலியலின் மூன்று விதிகளும் காரியங்கள் ஏன் தவறாகச் செல்கின்றன என்பதை விளக்குகின்றன. மற்ற முக்கியமான கேள்விகள் என்னவென்றால், ஏற்கெனவே எவ்வளவு சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறது, மேலும் அது எப்படி சரியாக்கப்படலாம்?
எவ்வளவு சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறது?
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உலக வரைபடம் (பக்கங்கள் 8-9-ஐப் பார்க்க) சில முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் அவை எங்கு மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன என்பதையும் சிறப்பித்துக் காட்டுகிறது. தெளிவாகவே, வாழ்விடத்தை இழத்தல் அல்லது வேறு ஏதாவது காரணங்கள் ஒரு தாவர அல்லது மிருக இனத்தை அழிந்துபோகச் செய்யும்போது, அந்தச் சேதங்களை மனிதன் சரிசெய்ய முடியாது. ஓசோன் படலம் மெதுவாக அழிதல் போன்ற மற்ற சேதங்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன. தொடர்ந்து ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவைப் பற்றியதென்ன? அதைத் தடுத்துநிறுத்துவதில் அல்லது குறைப்பதிலாவது ஏதாவது முன்னேற்றம் செய்யப்பட்டு வருகிறதா?
சூழலியல் சேதத்தைக் கணிக்கும் முக்கியமான அளவைகளில் இரண்டு விவசாயமும் மீன்வளமுமாகும். ஏன்? ஏனென்றால் அவற்றின் உற்பத்தி ஓர் ஆரோக்கியமான சூழலைச் சார்ந்திருப்பதாலும், நம் வாழ்க்கை நம்பகரமான உணவு வரவைச் சார்ந்திருப்பதாலும் ஆகும்.
இரண்டு துறைகளுமே சீரழிவிற்கான அறிகுறிகளைக் காண்பிக்கின்றன. மொத்த மீன் இருப்புகளைக் கடுமையாக அச்சுறுத்தாமல், உலகெங்குமுள்ள மீன்பிடிக்கும் கப்பற்தொகுதிகள் பத்துக் கோடி டன்னுக்கு அதிகளவான மீன்களைப் பிடிக்க முடியாதென்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கணக்கிட்டிருக்கிறது. அந்த மொத்த அளவு 1989-ல் மீறப்பட்டபோது, எதிர்பார்த்தபடியே அதற்கடுத்த வருடம் உலகெங்கும் மொத்த மீன்பிடிப்பு 40 லட்ச டன் அளவில் குறைவுபட்டது. கடலில் மீன்கள் திரண்டு வரும் இடங்களில் திடீர் குறைவு ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, வடகிழக்கு அட்லான்டிக்கில் கடந்த 20 வருடங்களின்போது பிடித்த மீனின் அளவு 32 சதவீதம் குறைந்திருக்கிறது. அளவுக்கதிகமாக மீன்பிடிக்கப்பட்டிருத்தல், சமுத்திரங்கள் மாசுபடுத்தப்படுதல், இனப்பெருக்கத் தளங்கள் அழிக்கப்படுதல் ஆகியவை முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன.
இந்த அச்சந்தருகிற போக்கு பயிர் உற்பத்தியில் வெளிக்காட்டப்படுகிறது. 60-களிலும் 70-களிலும், முன்னேற்றுவிக்கப்பட்ட பயிர் வகைகளும், பாசனமுறைகளும், ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பரவலான பயன்பாடும், உலக பயிர் உற்பத்தியை ஓரளவுக்கு அதிகரித்திருக்கின்றன. தற்போது, பூச்சிக்கொல்லிகளும் உரங்களும் தங்கள் திறத்தை இழந்துவருகின்றன; மேலும், தண்ணீர் பற்றாக்குறைகளும் மாசுறுதலும்கூட குறைந்த விளைச்சல்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் கூடுதலாகக் கிட்டத்தட்ட பத்து கோடி பேருக்கு உணவளிக்க வேண்டுமென்றாலும், கடந்த பத்தாண்டில் பயிரிடப்பட்ட நிலத்தின் மொத்த அளவில் குறைவு இருந்திருக்கிறது. இந்தச் சாகுபடி நிலம் அதன் செழுமையை இழந்துவருகிறது. கடந்த 20 வருடங்களின்போது, 50,000 கோடி டன் மேற்பரப்பு மண்ணை அரிப்பின் காரணமாக விவசாயிகள் இழந்திருப்பதாக உலககவனிப்பு நிறுவனம் கணக்கிடுகிறது. தவிர்க்கமுடியாதபடி, உணவு உற்பத்தி குறைய ஆரம்பித்திருக்கிறது. “1984-க்கும் 1992-க்கும் இடையில் ஒவ்வொரு நபருக்கும் கிடைக்கக்கூடிய பயிர் விளைச்சல் அளவில் 6-சதவீதம் குறைந்திருப்பதுதான் இன்று உலகில் ஒருவேளை மிகவும் வருத்தந்தருகிற பொருளாதார போக்காக [இருக்கிறது]” என்று 1993 உலகின் நிலை (ஆங்கிலம்) அறிக்கை குறிப்பிடுகிறது.
தெளிவாகவே, சுற்றுச்சூழலை மனிதன் அசட்டை செய்திருப்பதன் விளைவாக, கோடிக்கணக்கான மக்களின் உயிர் ஏற்கெனவே அபாயத்திலிருக்கிறது.
பிரச்சினைகளை மனிதன் சமாளிக்க முடியுமா?
என்ன தவறாக சென்றுகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி மனிதன் தற்போது ஓரளவு புரிந்துகொண்டாலும், அதைச் சரியாக்குவது எளிதல்ல. முதல் கஷ்டம் என்னவென்றால், 1992-ல் பூமி மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்ட விரிவான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமானால், அதிக பணம்—குறைந்தது ஒரு வருடத்துக்கு 60,000 கோடி ரூபாயாவது—தேவைப்படும். நிஜமான தியாகங்களும் அவசியப்படும்—குறைவாக வீணாக்கி அதிகமாக மறு உபயோகப்படுத்தல், தண்ணீரையும் ஆற்றலையும் பேணிக்காத்தல், தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு மாறாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், மேலும், எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகவும் கடினமாக, ஒருவரது சொந்த கொல்லைப்புறத்தைவிட இந்தக் கிரகத்தைக் கருத்தில்கொண்டு சிந்தித்தல் போன்ற தியாகங்கள். நீர்வாழ் சூழலமைப்பை மீண்டும் நிலைப்படுத்தலுக்கான ஐ.மா. குழுவின் தலைவர் ஜான் கார்ன்ஸ் ஜூனியர், இந்தப் பிரச்சினையை ரத்தினச்சுருக்கமாகச் சொன்னார்: “நாம் என்ன செய்யலாம் என்பதைக் குறித்து நான் நன்னம்பிக்கை உடையவனாக இருக்கிறேன். நாம் என்ன செய்வோம் என்பதைக் குறித்து நான் நம்பிக்கையிழந்தவனாக இருக்கிறேன்.”
மொத்த சுத்திகரிப்புக்கு ஆகும் வெறும் செலவுதானே அவ்வளவாக இருப்பதால் அதைக் கணக்கிட்டுத் தீர்வுசெய்யும் நாளை அநேக நாடுகள் தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வதைத் தெரிந்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு சமயத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகள் வேலைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக அல்லது பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகின்றன. உதட்டளவில் சொல்வது செயலில் காண்பிப்பதைவிட சுலபமானது. “இடியுடன் கூடிய புயல் போன்ற வெற்றாரவாரப் பேச்சுக்களுக்குப்பின் நடவடிக்கைகளற்ற வறட்சிகள்” போல இதுவரைக்குமான பிரதிபலிப்பு இருப்பதாக பூமியைப் பராமரித்தல் (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்குகிறது. ஆனால் இப்படி இழுத்துக்கொண்டே செல்கிறபோதிலும், புதிய தொழில்நுட்பம்—காலம் கொடுக்கப்பட்டால்—இந்தக் கிரகத்தின் பிரச்சினைகளுக்கு வேதனையற்ற நிவாரணத்தைக் கண்டுபிடிக்க முடியாதா? முடியாததாகவே தோன்றுகிறது.
ஐ.மா. நேஷனல் அகாடமி ஆஃப் சயன்ஸஸ் மற்றும் ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டனின் கூட்டு அறிக்கை ஒன்றில் அவர்கள் இவ்வாறு வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர்: “மக்கள்தொகை வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய முன்னறிவிப்புகள் சரியானவையாக நிரூபித்து, இந்தக் கிரகத்திலுள்ள மனித நடவடிக்கைகளின் மாதிரிப்போக்குகள் மாறாமல் தொடர்ந்தால், சுற்றுச்சூழலின் மாற்றியமைக்க முடியாத சீரழிவை அல்லது உலகின் பெரும்பாகத்தில் தொடர்ந்திருக்கும் வறுமையை அறிவியலும் தொழில்நுட்பமும் தடுக்க முடியாததாகவே இருக்கக்கூடும்.”
எங்கு கொட்டுவது என்றே தெரியாமல் இருக்கும் அணுக்கரு கழிவுப்பொருட்களின் பயமுறுத்தும் பிரச்சினையானது, அறிவியல் எல்லாவல்லமையும் படைத்ததல்ல என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கிறது. உயரளவு கதிரியக்க கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காக பாதுகாப்பான இடங்களை அறிவியலாளர்கள் 40 வருடங்களாக தேடியிருக்கின்றனர். எவ்வளவுதான் விரைவுபடுத்தினாலும் 2040-ம் வருடம் வரையாக அதற்கான ஓர் இடம் தயாராகாது என்று இத்தாலி, அர்ஜன்டினா போன்ற நாடுகள் முடிவு செய்யுமளவிற்கு அந்தத் தேடல் மிகவும் கடினமானதாக நிரூபித்து வருகிறது. இந்தத் துறையில் மிகவும் நன்னம்பிக்கையுள்ள நாடாக இருக்கும் ஜெர்மனி, 2008-ம் வருடத்தில் திட்டங்களை முடிவுசெய்யப்போவதாக நம்புகிறது.
அணுக்கரு கழிவு ஏன் அவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது? “மிகச் சிறந்த சேமிப்பிடங்களிலிருந்தும்கூட கதிரியக்க கழிவு என்றாவது ஒருநாள் ஆபத்தான அளவுகளில் கசிந்தொழுகாது என்று எந்த அறிவியலாளரோ பொறியாளரோ முழுமையாக உறுதியளிக்க முடியாது,” என்று புவியியலாளராகிய கான்ராட் க்ராவ்ஸ்காப்ஃப் விவரிக்கிறார். ஆனால் கழிவைக் கொட்டுதலின் பிரச்சினையைப் பற்றிய முன்னெச்சரிக்கைகளின் மத்தியிலும், எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஒரு தீர்வைக் கொண்டுவரும் என ஊகித்துக்கொண்டு, அரசாங்கங்களும் அணுக்கரு சம்பந்தமான தொழில்துறையும் கவலையின்றி தொடர்ந்தனர். அந்த எதிர்காலம் வரவே இல்லை.
சுற்றுச்சூழல் நெருக்கடிக்கான உடனடித் தீர்வு தொழில்நுட்பத்தில் இல்லையென்றால், வேறு என்ன தெரிவுகள் இருக்கின்றன? இந்தக் கிரகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றுசேர்ந்து உழைக்கும்படி, தேவை முடிவில் தேசங்களை வற்புறுத்துமா?
[அடிக்குறிப்பு]
a கிரேக்க ஆய்க்காஸ் (வீடு, இல்லம்) மற்றும் லாஜியா (ஆய்வு) என்பதிலிருந்து.
[பக்கம் 7-ன் பெட்டி]
புதுப்பிக்கப்படும் ஆற்றல் மூலங்களுக்கான தேடல்
நம்மில் பெரும்பாலானோர் ஆற்றலை—மின்தடை ஏற்பட்டாலொழிய அல்லது எண்ணெய் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் வரையாக—ஏனோதானோவென்று பயன்படுத்துகிறோம். என்றபோதிலும், ஆற்றல் நுகர்வு, தூய்மைக்கேட்டின் மிகப் பெரிய காரணங்களில் ஒன்றாகும். பயன்படுத்தப்படும் ஆற்றலில் பெரும்பாகம், மரம் அல்லது புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதிலிருந்து கிடைக்கிறது; இந்த செய்முறை, கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்ஸைடை வளிமண்டலத்திற்குள் செலுத்தி, உலகின் காடுகளையும் பெருமளவில் அழிக்கிறது.
அணுக்கரு ஆற்றலாகிய மற்றொரு தெரிவு, விபத்துகளின் ஆபத்து மற்றும் கதிரியக்க கழிவை சேமித்து வைக்கும் பிரச்சினையின் காரணமாக அதிகமதிகமாகப் பிரபலமற்றதாகி வருகிறது. புதுப்பிக்கப்படும் ஆற்றல் மூலங்கள் என்பதாக வேறு மாற்றுமூலங்கள் அழைக்கப்படுகின்றன, ஏனென்றால் அவை இயற்கையில் இருக்கிற தொடர்ந்து கிடைக்கிற ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துகின்றன. அவற்றில் ஐந்து முக்கியமான வகைகள் இருக்கின்றன.
சூரிய ஆற்றல். வெப்பமூட்டுவதற்காக இது எளிதில் பயன்படுத்தப்பட முடியும்; இஸ்ரேல் போன்ற சில நாடுகளில், தண்ணீரைச் சுடவைப்பதற்காக அநேக வீடுகள் சூரிய ஆற்றல் திரட்டும் தட்டுகளைக் கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்ய சூரியனைப் பயன்படுத்துவது அதிக கடினமான காரியம்; ஆனால் நவீன ஒளி மின்னழுத்தும் கலங்கள் ஏற்கெனவே நாட்டுப்புறப் பகுதிகளுக்கு மின்சாரத்தை அளித்து அதிக சிக்கனமானவையாய் ஆகி வருகின்றன.
காற்றாற்றல். உலகில் அதிக காற்றுவீசும் பகுதிகள் பலவற்றில் மிகப் பெரிய காற்றாலைகள் பரவலாகக் காணப்படுகின்றன. எயோலியன் ஆற்றல் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதிலிருந்து பெறப்படும் மின்சாரம், நிலையாக குறைந்த செலவுள்ளதாகி வந்திருக்கிறது; இப்போது சில பகுதிகளில் பாரம்பரிய ஆற்றல் தருவிப்பு முறைகளைக் காட்டிலும் இது குறைந்த செலவுள்ளதாக இருக்கிறது.
நீர்மின் ஆற்றல். உலகின் மின்சக்தியில் 20 சதவீதம் ஏற்கெனவே நீர்மின் நிலையங்களிலிருந்து வருகிறது; ஆனால் கவலைக்குரியவிதத்தில், வளர்ச்சியடைந்த நாடுகளில் அவ்வாற்றல் உள்ளதாக நம்பிக்கையளிக்கும் பெரும்பாலான இடங்கள் ஏற்கெனவே சுரண்டப்பட்டுவிட்டன. மிகப் பெரிய அணைகளும் கணிசமான சூழலியல் சேதத்தை ஏற்படுத்த முடியும். விசேஷமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இன்னும் சிறந்த வாய்ப்பளிப்பதாகத் தோன்றுவதென்னவென்றால், அநேக சிறிய நீர்மின் நிலையங்களைக் கட்டுவதாகும்.
நிலவெப்ப ஆற்றல். குறிப்பாக ஐஸ்லாந்து மற்றும் நியூ ஜீலாந்து போன்ற சில நாடுகளால், நிலத்திலுள்ள “வெப்ப நீர் அமைப்பை” பயன்படுத்த முடிந்திருக்கிறது. நிலத்தடியில் எரிமலையின் இயக்கம் தண்ணீரை வெப்பப்படுத்துகிறது; இது வீடுகளை வெப்பப்படுத்தவும் மின்சாரத்தை உற்பத்திசெய்யவும் பயன்படுத்தப்படலாம். இத்தாலி, ஐக்கிய மாகாணங்கள், பிலிப்பீன்ஸ், மெக்ஸிகோ, மற்றும் ஜப்பானும் இந்த இயற்கையான ஆற்றல் மூலத்தை ஓரளவுக்கு வளர்ச்சியடையச் செய்திருக்கிறது.
கடல் ஓத ஆற்றல். பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா போன்ற சில நாடுகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு கடல் ஓதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. என்றபோதிலும், இந்த ஆற்றல் தருவிப்பை சிக்கனமான செலவில் தருவதற்கு ஏற்றவாறு உலகெங்கிலும் ஒருசில இடங்களே இருக்கின்றன.
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படங்கள்]
உலகின் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சில
காடுகள் அழிக்கப்படுதல். உலகிலுள்ள மித வெப்பமண்டல காடுகளில் முக்கால் பாகமும் வெப்பமண்டல காடுகளில் பாதியும் ஏற்கெனவே இழக்கப்பட்டுவிட்டது; மேலும் கடந்த பத்தாண்டில் காடழிப்பு அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 1,50,000 சதுர கிலோமீட்டருக்கும் 2,00,000 சதுர கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட அளவு, சுமார் உருகுவேயின் அளவை ஒத்த அளவு வெப்பமண்டல காடுகள் அழிக்கப்படுவதாக சமீப கணக்குகள் தெரிவிக்கின்றன.
நச்சுக் கழிவுகள். தற்போது உற்பத்தி செய்யப்படும் 70,000 ரசாயனங்களில் பாதி நச்சுத்தன்மை உள்ளவை என வகைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஐக்கிய மாகாணங்கள் மட்டும், 24 கோடி டன் நச்சுக் கழிவுகளை உண்டாக்குகின்றன. புள்ளிவிவரங்கள் இல்லாததால் உலகளாவிய மொத்த அளவைக் கணக்கிட முடியாததாய் உள்ளது. மேலுமாக, 2000-ம் வருடத்திற்குள், கிட்டத்தட்ட 2,00,000 டன் கதிரியக்க கழிவு தற்காலிகமான இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
நிலத்தின் சீரழிவு. உலகின் மேற்பரப்பில் மூன்றிலொரு பங்கு பாலைவனமாக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்ப்படுகிறது. ஆப்பிரிக்காவின் சில பாகங்களில், சஹாரா பாலைவனம் வெறும் 20 வருடங்களுக்குள் 350 கிலோமீட்டருக்கு விரிவடைந்திருக்கிறது. ஏற்கெனவே கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறை. சுமார் 200 கோடி மக்கள், தீராத தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான கிணறுகள், அவை சார்ந்திருக்கிற நீர்ப்படுகைகளின் அளவுகள் தாழ்ந்துகொண்டே செல்வதால் வற்றிப்போய்க்கொண்டிருப்பது அந்தப் பற்றாக்குறையை மோசமாக்குவதாக இருக்கிறது.
அற்றுப்போகும் ஆபத்திலிருக்கும் இனங்கள். எண்ணிக்கைகள் ஓரளவுக்கு தோராயமாக சொல்லப்பட்டவை என்றாலும், மிருகங்கள், தாவரங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் 5,00,000-க்கும் 10,00,000-க்கும் இடைப்பட்ட அளவான இனங்கள் 2000-ம் வருடத்திற்குள் இனமற்றுப்போயிருக்கும் என்று அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர்.
வளிமண்டல தூய்மைக்கேடு. நகரப் பகுதிகளில் வாழும் 100 கோடி மக்கள், ஆரோக்கியத்தை-அச்சுறுத்தும் அளவுகளில் உள்ள புகைக்கரி துகள்கள் அல்லது சல்ஃபர் டையாக்ஸைட், நைட்ரஜன் டையாக்ஸைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற நச்சு வாயுக்களுக்கு தினசரி ஆளாகின்றனர் என்று ஆரம்ப 1980-களின் ஐக்கிய நாடுகளின் ஆய்வு ஒன்று கண்டறிந்தது. கடந்த பத்தாண்டில் நகரங்களின் விரைவான வளர்ச்சி சந்தேகமின்றி இந்த பிரச்சினையை மோசமாக்கி இருக்கிறது. மேலுமாக, வருடந்தோறும் 2,400 கோடி டன் கார்பன் டையாக்ஸைட் வளிமண்டலத்திற்குள் வழங்கப்பட்டு வருகிறது; இந்த “கண்ணாடி அறை வளிமம்” உலகளாவிய வெப்பத்தை ஏற்படுத்தக்கூடுமென அஞ்சப்படுகிறது.
[வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
காடுகள் அழிக்கப்படுதல்
நச்சுக் கழிவுகள்
வளிமண்டல தூய்மைக்கேடு
தண்ணீர் பற்றாக்குறை
இனங்கள் அருகிவருதல்
நிலத்தின் சீரழிவு