ஏழை நாடுகள் பணக்கார நாடுகளின் குப்பை கொட்டும் இடங்களாகின்றன
நச்சுத்தன்மையுள்ள சரக்கு, வேண்டப்படாத ஓர் அநாதையைப் போல, ஒரு வீடுதேடி கப்பலிலிருந்து கப்பலுக்கும் துறைமுகத்திலிருந்து துறைமுகத்திற்கும் அலைந்தது. விஷமுள்ள பிசின்களும், பூச்சிக்கொல்லிகளும், மற்ற ஆபத்தான ரசாயனப் பொருட்களும் ததும்புகிற பதினோராயிரம் உருளை கலங்கள் ஆப்பிரிக்காவில் ஜிபௌதியிலிருந்து வெனிசுவேலாவுக்கும் சிரியாவுக்கும் கிரீஸுக்கும் இடையில் இங்குமங்குமாக அடிக்கடி அனுப்பப்பட்டன. கடைசியாக, கசிந்தொழுகும் அந்தப் பீப்பாய்கள் சரக்குக்கப்பல்களில் ஒன்றின் சரக்கேற்றுகிறவர்களின் குழுவைக் கொள்ளைகொள்ள ஆரம்பித்தன. கப்பலிலிருந்த நச்சுப் பொருட்களின் காரணமாக ஒருவர் இறந்துவிட்டார்; மற்றவர்களில் அநேகர் தோல், சிறுநீரகம், மற்றும் மூச்சு சம்பந்தமான உடல்நலக் குறைகளைக் கொண்டிருந்தனர்.
அவற்றைப் போன்ற சாவுக்கேதுவான கழிவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள், ட்ரக்குகள், மற்றும் ரயில்கள் இந்தக் கிரகத்தில் வீடு எனப்படுவதற்கான இடம்தேடி குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. பெரும்பாலும், ஏற்கெனவே வறுமை, பஞ்சம், மற்றும் நோயால் சூறையாடப்பட்டிருக்கும் நாடுகளே டன் கணக்கான நச்சுக்களும் மாசுபடுத்தப்பட்ட குப்பைகளும் கொட்டப்படும் இடங்களாகின்றன. சூழலியல் சார்ந்த பேரழிவு ஏற்படப்போவது நேர அவகாசத்தின் ஒரு பிரச்சினை மட்டுமே என்று சுற்றுச்சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர்.
பழைய பெயின்ட்டுகள், கரைப்பான்கள், டயர்கள், பாட்டரிகள், கதிரியக்க கழிவுப்பொருட்கள், ஈயம் மற்றும் அச்சிட்ட மின்சுற்று அட்டைகளால் [PCB] நிறைந்துள்ள உருக்கிய கசடு ஆகியவை உங்களுக்கு கவர்ச்சியற்றவையாக இருக்கக்கூடும்; ஆனால் விரைவில் வளரும் தொழிற்சாலைக் கழிவுகளின் வியாபாரத்திற்கு அவை கவர்ச்சியூட்டுகிறவை. எதிர்பார்ப்புக்கு முரணாக, ஒரு அரசாங்கம், சூழல் சம்பந்தமாக எவ்வளவு அதிக கண்டிப்பானதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் தொழிற்சாலைகள் மற்ற நாடுகளில் தங்கள் நச்சுக் கழிவுப்பொருட்களை கழித்துவிடுகின்றன. “கிட்டத்தட்ட இரண்டு கோடி டன் அளவான விஷத்தன்மையுள்ள இரசாயனப் பொருட்கள் மூன்றாவது உலக நாடுகளில் கழிக்கப்படும்படி” தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளின் “மனச்சாட்சியற்ற” நிறுவனங்களால் “வருடந்தோறும் அனுப்பப்படுகின்றன,” என்பதாக லண்டனின் வாராந்தர பத்திரிகையாகிய தி அப்ஸர்வர் குறிப்பிட்டது. சட்டத்தின் ஓட்டைகளும் சட்டங்கள் கண்டிப்பாக அமல்படுத்தப்படாமையும், ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் விஷத்தன்மையுள்ள கழிவுகள் ஆசிய, ஆப்பிரிக்க, மற்றும் லத்தீன்-அமெரிக்க மண்ணில் குவிக்கப்படுவதில் விளைவடைகின்றன.
அவ்வாறு கழிவைக் கொட்டுவது இந்த நிறுவனங்களுக்கு ஆசையைத் தூண்டுவதாய் இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை! பொருத்தமான இடம் பயன்படுத்தப்பட்டால் செலவு பெரிதளவில் குறைக்கப்படலாம். ஒரு காலத்தில் அமெரிக்க பயணக் கப்பற்தொகுதியில் பெருமைக்குரிய கொடிக் கப்பலாக இருந்த United States என்ற சுற்றுப்பயணக் கப்பல் இதற்கொரு எடுத்துக்காட்டு. அது 1992-ல் வாங்கப்பட்டு இன்பச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்துவதற்காகப் புதுப்பிக்கப்பட்டது. மிதந்துகொண்டிருந்த எந்தக் கப்பலையும்விட அதுவே அதிக ஆஸ்பெஸ்டாஸைக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸை அகற்றுதல் ஐக்கிய மாகாணங்களில் $10 கோடி செலவை உட்படுத்தியிருக்கும். $20 லட்ச செலவில் செய்துமுடிக்கப்படுவதற்காக அந்தக் கப்பல் துருக்கிக்கு கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. ஆனால் துருக்கிய அரசு மறுத்தது—46,000 சதுர மீட்டருக்கும் அதிகமான புற்றுநோயைத் தூண்டவல்ல ஆஸ்பெஸ்டாஸ் நாரை தங்கள் நாட்டில் உரித்து அகற்றப்பட அனுமதிப்பது மிக ஆபத்தானது. முடிவாக அந்தக் கப்பல், சுற்றுச்சூழல் தராதரங்களில் குறைந்தளவு கண்டிப்புள்ள மற்றொரு நாட்டின் துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டது.
சாவுக்கேதுவான மறுசுழற்சிப்படுத்தல்
வளரும் நாடுகளிலுள்ள மேற்கத்திய வியாபார நிறுவனங்கள், ஏழைகளுக்கு நன்மை செய்கிறவையாய் இருப்பதாகத் தங்களைத்தாங்களே நினைத்துக்கொள்ள விரும்பக்கூடும். “கழிவு ஏற்றுமதியும் மறுசுழற்சித் தொழிலும் இந்த நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது” என்று ஐ.மா. வணிகர் கழகத்தைச் சேர்ந்த ஹார்வி ஆல்டர் வாதாடுகிறார். ஆனால் வெளிநாட்டில் அவர்களுடைய வர்த்தக நடத்தையில் சிலவற்றை பரிசீலித்தபோது, பெரும்பாலான சம்பவங்களில், வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்குப் பதிலாக, இந்த நிறுவனங்கள் “பெரும்பாலும் உள்ளூரிலுள்ள குறைந்தபட்ச கூலியைவிட அதிகத்தைக் கொடுக்காமலும், சுற்றுச்சூழலை அழுக்காக்குவதாகவும், சில சமயங்களில் ஆபத்தானதும் ஏமாற்றுவழியில் வியாபாரம் செய்யப்பட்டதுமான பொருட்களை விற்பவையாகவும்” இருந்தன.
வளர்ச்சியடையும் நாடுகளில் மாசு பற்றிய சமீபத்திய பயிலரங்கு ஒன்றில் போப் ஜான் பால் II தன்னுடைய அக்கறையின் குரலையும் கூட்டினார். போப் சொன்னார்: “மக்களின் சூழலையும் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிற அழுக்காக்கும் தொழில்நுட்பங்களையும் கழிவுகளையும் ஏற்றுமதி செய்வதன்மூலம் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளின் பொருளாதாரக் குறைவு மற்றும் சட்டக் குறைபாடுகளிலிருந்து லாபமடைவது பெருந்துர்ப்பிரயோகமாகும்.”
பாதரசக் கழிவுகளை மறுசுழற்சிப்படுத்துவதில் உலகிலேயே மிகப் பெரிய நிறுவனம் அமைந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா, குறிப்பிடத்தக்க ஒரு மாதிரியாக இருக்கிறது. “அந்தக் கண்டத்தில் மாசு தொடர்பான அவமானங்களிலேயே மோசமான ஒன்று” என்பதாக பெயர் பெற்றிருந்ததில், நச்சுத்தன்மையுள்ள கழிவுகள் ஒரு வேலையாளைக் கொன்றது, மற்றொருவர் ஆழ்ந்த மயக்க நிலைக்கு உள்ளானார், பணியாளர்களில் மூன்றிலொரு பாகத்தினர் ஏதாவதொரு வகையான பாதரச விஷ பாதிப்பை அனுபவிப்பதாக அறிக்கை செய்யப்படுகின்றனர். தொழில்மயமாக்கப்பட்ட குறிப்பிட்ட நாடுகளிலுள்ள அரசாங்கங்கள், குறிப்பிட்ட பாதரசக் கழிவுகளை கொட்டுவதற்கு தடைவிதித்திருக்கின்றன அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. இந்த நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு நாட்டிலிருந்தாவது வியாபாரக் கழக கப்பல்கள் ஆபத்தான சரக்குகளை ஆப்பிரிக்க கரையோரங்களுக்குக் கொண்டுசெல்கின்றன. மூன்று அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வந்த 10,000 பீப்பாய் பாதரசக் கழிவுகள், அந்த மறுசுழற்சிப்படுத்தும் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை ஒரு பரிசோதனைக் குழு கண்டுபிடித்தது.
மறுசுழற்சிக்காக வளரும் நாடுகளுக்குப் பொருட்களை அனுப்புதல், அவற்றில் கழிவுகளைக் கொட்டுவதைவிட மிகவும் மேலானதாகத் தோன்றுகிறது. பயனுள்ள உப பொருட்களை அது உண்டாக்கலாம், வேலை வாய்ப்புகளை அளிக்கலாம், பொருளாதாரத்தை ஊக்குவிக்கலாம். ஆனால் பேரழிவுக்குரிய விளைவுகளும் ஏற்படலாம் என்று தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மேற்சொல்லப்பட்ட அறிக்கை காண்பிக்கிறது. இந்தப் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை மீட்டெடுத்தல், மாசுபடுத்தலையும் நோயையும் சில வேளைகளில் பணியாளர்களுக்கு மரணத்தையும் உண்டுபண்ணக்கூடிய அழிவுக்கேதுவான இரசாயனங்களை வெளிவிடலாம். நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது: “கழிவைக் கொட்டுவதற்கு ஒரு சாக்குப்போக்காக சில வேளைகளில் மறுசுழற்சிப்படுத்தல் பயன்படுத்தப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.”
ஐ.மா.செய்தியும் உலக அறிக்கையும் (ஆங்கிலம்) என்பதில் அந்தச் சூழ்ச்சிமுறை விவரிக்கப்படுகிறது: “நச்சுத்தன்மையுள்ள கழிவுநீர்க் கசடை ‘கரிம உரம்’ என்றோ பழமைப்பட்ட பூச்சிக்கொல்லிகளை ‘பண்ணைக்கு உதவி’ என்றோ விற்கத் தயாராக இருக்கும் கழிவுப் பொருள் வியாபாரிகளுக்கு, பொருட்களைப்பற்றிய பொய்யான விவரங்கள், சட்டத்தில் ஓட்டைகள், தொழில் திறமையில் குறைவு ஆகியவை வளர்ச்சியடையும் நாடுகளை எளிய இலக்காக்குகின்றன.”
அயல்நாட்டுக்குச் சொந்தமான மாகிலாடோராஸ் அல்லது தொழிற்சாலைகள் மெக்ஸிகோவில் வரத் தொடங்கியிருக்கின்றன. கண்டிப்பான மாசு கட்டுப்பாட்டு தரங்களைப் பின்பற்றுவதிலிருந்து விடுபட்டு, குறைந்தளவு ஊதியத்திற்கு வேலைசெய்யும் எண்ணற்ற வேலையாட்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதே அந்த அயல்நாட்டு நிறுவனங்களின் முக்கியமான ஒரு குறிக்கோளாகும். மாசுபடுத்தப்பட்ட இருளடர்ந்த தண்ணீருள்ள கால்வாய்களுக்கு அருகே அழுக்கடைந்த குடிசைகளில் பத்தாயிரக்கணக்கான மெக்ஸிக்கர்கள் வாழ்கின்றனர். “வெள்ளாடுகள்கூட அதைக் குடிக்காது,” என்றாள் ஒரு பெண். அமெரிக்க மருத்துவ கழக அறிக்கை அந்த எல்லைப் பகுதியை “நிஜமான கழிவுநீர்க் குழி மற்றும் தொற்று நோய்க்கு வளர்ப்பு நிலம்,” என்று குறிப்பிட்டது.
பூச்சிகள் மட்டும் சாவதில்லை
“ஒரு நாடு தன் நாட்டில் ஒரு விஷத்துக்குத் தடை விதித்துவிட்டு, அதேநேரத்தில் அதை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வது எப்படி? இதன் ஒழுக்கப்பண்பு எங்கே?” என்று கார்ட்டூமைச் சேர்ந்த உழவியல் நிபுணரும் பூச்சிக்கொல்லி நிபுணருமாகிய ஆரிஃப் ஜமால் கேட்கிறார். இவ்வாறு முத்திரையிடப்பட்டிருந்த பீப்பாய்களின் நிழற்படங்களை அவர் காண்பித்தார்: அவை எந்தத் தொழில்மயமான நாட்டிலிருந்து வந்ததோ அங்கே “பயன்படுத்துவதற்கு பதிவு செய்யப்படாதது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. அவை சூடானிய வனவாழ்வு காப்பிடம் ஒன்றில் காணப்பட்டன. அவற்றின் அருகே ஏராளமான இறந்துபோன விலங்குகள் காணப்பட்டன.
ஒரு பணக்கார நாடு, “உள்நாட்டு உபயோகிப்பிற்கு தடைவிதிக்கப்பட்ட, வரையறைக்குட்படுத்தப்பட்ட அல்லது வீட்டு உபயோகிப்பிற்கு உரிமம் வழங்கப்படாத சுமார் 2,270 லட்சம் கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை வருடந்தோறும் ஏற்றுமதி செய்கிறது,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. DDT-க்கு இணையான ஹெப்டக்ளோர் என்ற புற்றுநோய் உருவாக்கும் மருந்தொன்று உணவுப் பயிர்கள்மீது பயன்படுத்தப்படக்கூடாது என்று 1978-ல் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதைக் கண்டுபிடித்த இரசாயன நிறுவனம் தொடர்ந்து அதை உற்பத்தி செய்து வருகிறது.
குறைந்தபட்சம் 85 வளர்ச்சியடையும் நாடுகளிலாவது “மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகள்” பரந்தளவில் கிடைக்கின்றன என்று ஐநா கணக்கெடுப்பு கண்டுபிடித்தது. ஒவ்வொரு வருடமும், சுமார் பத்து லட்சம் மக்கள் கடும் விஷத்தால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஒருவேளை 20,000 பேர் இரசாயனங்களால் சாகின்றனர்.
புகையிலைத் தொழிலானது அழிவுக்கேதுவான பேராசையின் சிகரம் என்பதாகச் சொல்லப்படக்கூடும். ஸயன்டிஃபிக் அமெரிக்கன் என்பதில் “உலகளாவிய புகையிலை கொள்ளைநோய்” என்ற தலைப்புடைய கட்டுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “உலகெங்கிலும் புகையிலை சம்பந்தமான நோய்கள் மற்றும் இறப்புகளின் அளவை மிகைப்படுத்திச் சொல்லமுடியாது.” புகைபிடிக்க ஆரம்பிக்கிறவர்களின் சராசரி வயது எப்போதையும்விட குறைந்துகொண்டே போகிறது, புகைபிடிக்கிற பெண்களின் எண்ணிக்கை அதிசயிக்கத்தக்க அளவில் அதிகரிக்கிறது. விளைவுத்திறம் மிக்க புகையிலை நிறுவனங்கள், தந்திரமான விளம்பரதாரரின் கூட்டிணைவுடன் குறைந்தளவு வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் மிகப்பெரிய வியாபாரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிவிடுகின்றனர். செல்வத்திற்கு வழிநடத்தும் அவர்களுடைய பாதையை, இறந்துபோனதும் நோயால் பீடிக்கப்பட்டதுமான உடல்களின் சுவடுகள் நிரப்புகின்றன. a
என்றபோதிலும், எல்லா நிறுவனங்களுமே வளர்ச்சியடையும் நாடுகளின் நலனைக் குறித்து அசட்டையாக இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். வளர்ச்சியடையும் நாடுகளில் நேர்மையான, பொறுப்பார்ந்த வியாபாரத்தை நடத்த முயலும் சில நிறுவனங்களும் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நிறுவனம் ஓய்வு ஊதியங்களையும் சுகநல உதவிகளையும் அளித்து, அதன் பணியாளர்களுக்கு தேவையானதைவிட மூன்று மடங்கு அதிக ஊதியத்தை அளிக்கிறது. மற்றொரு நிறுவனம், மனித உரிமைகள் சார்பாக பலமான நிலைநிற்கையை எடுத்து, துர்ப்பிரயோகங்களின் காரணமாக டஜன் கணக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்கிறது.
மாய்மாலமான தவறுதல்
நாடுகளுக்கிடையே அபாயகரமான கழிவுப்பொருட்களின் போக்கை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, 1989-ல் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பாஸலில் ஐநா மாநாட்டு ஒப்பந்தம் ஒன்று கையொப்பமிடப்பட்டது. அது பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது; மேலும், அதே நாடுகள் சேர்ந்து பின்னர், மார்ச் 1994-ல் நடத்திய கூட்டம் ஒன்றைக்குறித்து நியூ ஸயன்டிஸ்ட் இவ்வாறு அறிக்கைசெய்தது:
“வளர்ச்சியடையும் நாடுகளின் புரிந்துகொள்ளத்தக்க கோபத்திற்கு பிரதிபலிப்பாக, பாஸல் மாநாட்டில் பங்கெடுத்த 65 நாடுகளும், OECD [Organization for Economic Cooperation and Development (உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக் குழு)] நாடுகளிலிருந்து OECD-சாராத நாடுகளுக்கு அபாயகரமான கழிவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதிப்பதன்மூலம் மாநாட்டுக் குறிப்புகளைச் செயல்படுத்த தீர்மானித்தபோது முக்கியமான முன்னேற்றப் படி ஒன்றை எடுத்தனர்.”
ஆனால் பிந்தைய இந்தத் தீர்மானம் வளர்ச்சியடையும் நாடுகளுக்கு அவ்வளவு விருப்பமுள்ளதாகத் தோன்றவில்லை. நியூ ஸயன்டிஸ்ட் தன் அக்கறைக் குரலை எழுப்பியது: “ஆகவே, ஐமா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அனைத்தும் இப்போது இந்தத் தீர்மானத்தை இரகசியமாக வீழ்த்த முயலுகின்றன என்ற செய்தி கவலைக்குரியதாக இருக்கிறது. அந்த மாநாட்டை உறுதிசெய்வதற்கு ஒத்துக்கொள்ளும் முன்னர் அந்தத் தடைவிதிப்பை ‘மாற்றியமைக்க மறைவான’ பேச்சுவார்த்தை முயற்சிகள் நடப்பதை ஐமா அரசிலிருந்து வெளியாகிய பத்திரங்கள்தாமே காட்டிக்கொடுக்கின்றன.”
பேராசைக்காரரைக் கணக்குத்தீர்க்கும் ஒரு நாள்
“பணக்காரரே, உங்களுக்கு வரப்போகிற துயரங்களின் காரணமாக நீங்கள் அழுது புலம்புவதற்கான சமயம் இதுவே!” என்று யாக்கோபு 5:1-ல் பைபிள் எச்சரிக்கிறது. (ஜே. பி. ஃபிலிப்ஸின் நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு) காரியங்களைச் சரிசெய்யக்கூடிய ஒருவரால் கணக்குத்தீர்க்கப்படுவார்கள்: “ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.”—சங்கீதம் 103:6.
சங்கீதம் 72:12, 13-ன் (NW) வார்த்தைகள் சீக்கிரத்தில் நிறைவேற்றப்படும் என்றறிந்து, இன்று கடும் வறுமையில் இருப்பவர்கள் ஆறுதலடையலாம்: “உதவிக்காக கூப்பிடுகிற எளியவனையும், அல்லல்படுகிறவனையும், உதவியற்றவனையும் விடுவிப்பார். சிறுமைப்பட்டவனுக்காகவும் எளியவனுக்காகவும் அவர் மனம் வருந்துவார், எளியவனின் ஆத்துமாவை அவர் ரட்சிப்பார்.”
[அடிக்குறிப்பு]
a விழித்தெழு! மே 22, 1995, “லட்சக்கணக்கில் சம்பாதிக்க லட்சக்கணக்கில் கொல்லுதல்,” என்பதைப் பார்க்கவும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
நீங்க மறுக்கும் சாவுக்கேதுவான குப்பை
“எந்தவொரு தெளிவான உடனடித்தீர்வுமின்றி சாவுக்கேதுவான அணுக்கருக் கழிவுப் பொருள்கள் குவிகின்றன.” கடந்த மார்ச் மாத தி நியூ யார்க் டைம்ஸ்-ன் அறிவியல் பிரிவின் தலைப்புச் செய்தி இவ்வாறு வாசித்தது. “அதைப் புதைத்துவிடுவதே மிக எளிய தெரிவாக இருக்கிறது. ஆனால் இது நெவாடாவில் புளூட்டோனிய கழிவுகளால் நிரப்பப்படும்படி திட்டமிடப்பட்டுள்ள நிலத்தடி கொட்டுமிடம் ஒன்று கடைசியாக அணுக்கரு வெடிப்பு ஒன்றில் விளைவடையக்கூடுமா என்பது பற்றி அறிவியலாளர்கள் வாதாடுவதிலும் கூட்டுக் கழகங்கள் ஆராய்வதிலும் தற்போது தாக்குதலின்கீழ் இருக்கிறது,” என்று அந்தக் கட்டுரை சொன்னது.
மிகையான புளூட்டோனியத்தை உலகிலிருந்து அகற்றுவதற்கு அறிவியலாளர்கள் அநேக திட்டங்களை எடுத்துரைத்திருக்கின்றனர்; ஆனால், செலவும், சர்ச்சைகளும், பயங்களும் இந்தத் திட்டங்களை மறக்கப்பட்ட நிலையில் வைத்திருக்கின்றன. அதைக் கடலில் புதைத்துவிடும் கருத்து அநேகருக்கு விரும்பத்தகாத ஒன்றாக இருக்கிறது. அதிக கற்பனாதிறம் வாய்ந்த ஒரு ஆலோசனை என்னவென்றால், அதை சூரியனுக்குள் அனுப்பிவிடுவதாகும். மற்றொரு தீர்வு என்னவென்றால், உலைகளைப் பயன்படுத்தி அதை எரித்துவிடுவதாகும். ஆனால், அதை நிறைவேற்ற “நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்கள் செல்லும்” என்பதால் இந்த எண்ணம் கைவிடப்பட்டது.
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மக்கீஜானி சொன்னார்: “தொழில்நுட்பம் சார்ந்த வகையில் நல்லதாக இருக்கும் ஒவ்வொரு தீர்வும் பயங்கரமான அரசியல்பூர்வ பக்கங்களை உடையதாக இருக்கிறது; அரசியல்ரீதியில் நல்லதாக இருக்கும் ஒவ்வொரு தீர்வும் தொழில்நுட்ப ரீதியில் மோசமானதாக இருக்கிறது. இந்தக் குழப்படிக்கு, மொத்தமான நல்ல தீர்வுகள் எங்களை உட்பட, எவருக்கும் இல்லை.”
ஆறு கோடி வீடுகளுக்கு மின்சாரம் அளிப்பதற்காக—நாட்டின் 20 சதவீத ஆற்றல்—ஐக்கிய மாகாணங்களில் அணுக்கரு ஆற்றல் நிலையங்களிலுள்ள 107 உலைகள் 2,000 டன் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை ஒவ்வொரு வருடமும் உண்டுபண்ணுகின்றன, மேலும் 1957 முதற்கொண்டு, அந்த பயன்படுத்தப்பட்ட எரிபொருள், அணுக்கரு நிலையங்களில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீக்குவதற்கு ஒரு வழியை அரசாங்கம் கண்டுபிடிப்பதற்காக மக்கள் பத்தாண்டுக்கணக்கில் வீணாகவே காத்திருந்திருக்கின்றனர். ஒன்பது ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கின்றனர், கதிரியக்க கழிவுப்பொருட்களை நிலத்தடி வசதிகளில் சேமித்து வைப்பதற்காக 18 சட்டமாமன்றங்கள் திட்டங்களை அளித்து கால வரையறைகளையும் அளித்தனர்; ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்கள் பாதுகாத்து வைக்கப்படவேண்டிய அழிவுக்கேதுவான கழிவுப்பொருட்கள் முடிவாக நீக்கப்படவேண்டியது பற்றிய காரியம் இன்னும் தீர்மானிக்கப்படாததாகவே இருக்கிறது.
இதற்கு முரணாக, பிரபஞ்சத்தின் தொலைக்கோடியிலுள்ள நட்சத்திரங்களில் யெகோவா தேவன் இயக்கும் நூறாயிரங்கோடி பிணைப்பு உலைகள் எவ்வித அச்சுறுத்தலையும் அளிக்கவில்லை, மேலும் நம் சூரியனில் அவர் இயக்கும் உலை பூமியில் உயிர்வாழ்வைச் சாத்தியமாக்குகிறது.
[படத்திற்கான நன்றி]
UNITED NATIONS/IAEA
[பக்கம் 7-ன் படம்]
விஷத்தன்மையுள்ள ரசாயனங்கள் குடிப்பதற்கும் கழுவுவதற்கும் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன
[பக்கம் 7-ன் படம்]
ஆபத்தான அல்லது சாவுக்கேதுவான கழிவுப்பொருட்களின் மத்தியில் பிள்ளைகள் விளையாடுகின்றனர்