உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 1/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சனி கிரகத்தின் மிகுதியான உபகிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
  • மன்னிப்பு—50 வருடங்களுக்குப் பிறகு
  • மார்மன் சர்ச் நாசிக்களை எதிர்க்கவில்லை
  • கவனிக்கப்படாத பிள்ளைகள்
  • “சக்திபெற சிறுதூக்கம்”
  • தோட்ட ரசாயனங்கள்—ஒரு பயமுறுத்தலா?
  • வெப்ப எறும்புகள்
  • ஓசையை நிறுத்துக
  • எலும்பு மெலிதலை எதிர்த்தல்
  • இரத்தம்-மூலமான நோய்கள் குறித்த கவலை
  • இரத்தமேற்றுதல்—எந்தளவு பாதுகாப்பானது?
    உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
  • ‘வடிவமைக்கப்பட்டது போல் தோன்றுகிறதா’?
    விழித்தெழு!—2005
  • பூச்சி உலகில் கழிவுகளை நீக்குவதில் கில்லாடிகள்
    விழித்தெழு!—2002
  • உலகைக வனித்தல்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 1/8 பக். 28-29

உலகை கவனித்தல்

சனி கிரகத்தின் மிகுதியான உபகிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சனி கிரகத்தைச் சுற்றிவரும், முன்பு அறியப்படாத, குறைந்தபட்சம் இரண்டு உபகிரகங்களையாவது வெளிப்படுத்தியிருக்கின்றன. ஓர் அரிதான சந்தர்ப்பமான, சனி கிரகத்தின் வளையத்தை, பூமி அதன் விளிம்புப் பகுதி நோக்கைக் கொண்டிருப்பதான, “பூமி-வளையம் குறுக்கே செல்லுகையில்,” படங்கள் எடுக்கப்பட்டன. இச்சூழ்நிலைகளில் வளையங்களின் பிரகாசமான பிரதிபலிக்கப்பட்ட ஒளி குறைக்கப்படுவதோடு உபகிரகங்கள் மிக எளிதாகக் கண்டுகொள்ளப்படுகின்றன. உபகிரகங்கள் 10 கிலோமீட்டரிலிருந்து 60 கிலோமீட்டர் வரை குறுக்களவுள்ளதாக வானவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உபகிரகங்கள் சனி கிரகத்தை அதன் மத்தியிலிருந்து 1,40,000 கிலோமீட்டர் முதல் 1,50,000 கிலோமீட்டர் வ ரையுள்ள தூரத்தில் சுற்றிவருகின்றன. பூமிக்கும் அதன் உபகிரகத்திற்கும் இடையேயுள்ள 4,00,000 கிலோமீட்டர் தூரத்தைவிட இது மிக அருகானது. சனி கிரகம் பூமியிலிருந்து சுமார் 150 கோடி கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

மன்னிப்பு—50 வருடங்களுக்குப் பிறகு

“எல்லாருக்கும் மேல், கடவுளின் சந்நிதியில் மேஜீ காக்கூய்ன் [பல்கலைக்கழகம்] கடந்த போரில் ஒரு பங்கு வகித்த பாவத்தை நாங்கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறோம், அதே சமயத்தில் அயல்நாட்டு மக்களிடம், விசேஷமாக கொரியா மற்றும் சீனா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்” என்று பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராகிய ஹீரோமாஸா நாகாயாமா டோக்கியோவிலுள்ள பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட பிரார்த்தனை செய்யுமிடத்தில் கடந்த ஜூனில் தன் உரையாற்றலின்போது கூறினார். மாஜீ காக்கூய்ன் பல்கலைக்கழகம் ஒரு “கிறிஸ்தவ” மிஷன் பள்ளியாகும். ஆஸாஹீ ஷிம்புன் பத்திரிகையின்படி, போர் நடவடிக்கையில் அந்தப் பள்ளி பங்கு கொண்டதை அப்பள்ளியின் தலைவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது அதுவே முதல் தடவையாகும். போரின்போது பல்கலைக்கழகத்தின் இயக்குநர் குழுவின் தலைவர், போர் நடவடிக்கையில் சர்ச்சுகளை ஒன்றுபடுத்த ஜப்பானிலுள்ள யுனைட்டெட் சர்ச் ஆஃப் கிறைஸ்ட்-ஐ ஒழுங்கமைத்தார். யுனைட்டெட் சர்ச் ஆஃப் கிறைஸ்ட், போர் விமானங்களை உண்டாக்குவதற்காக பணம் வசூலித்தது, மேலும் தங்கள் நாட்டிற்கு நிபந்தனையின்றி தங்களைக் கீழ்ப்படுத்த கிறிஸ்தவர்களை உத்வேகப்படுத்தியது என்று நாகாயாமா கூறினார்.

மார்மன் சர்ச் நாசிக்களை எதிர்க்கவில்லை

நாசி ஜெர்மனியிலிருந்த யூதர்கள் தொடர்பான வன்முறை அறிக்கைகளை எதிர்ப்பட்டபோது, “மார்மன் சர்ச் கிட்டத்தட்ட ஒன்றுமே செய்யவில்லை,” என்று தி சால்ட் லேக் ட்ரிப்யூன் கூறுகிறது. சில மார்மன்கள், மற்ற சர்ச்சுகளின் அங்கத்தினர்களோடு சேர்ந்து, “ஹிட்லராலும் இனக்கலப்பின்மை பற்றிய அவரது செய்தியாலும் பரவசப்படுத்தப்பட்டனர், மேலும், அரசாங்கத் தலைவர்களுக்கு கனம் செலுத்தவேண்டும் என்ற தங்களுடைய சர்ச்சுகளின் போதனைகளுக்குக் கீழ்ப்படிவதாக நினைத்தவர்களும் அவர்களுள் இருந்தனர்.” படுகொலையின்போது, ஜெர்மன் தொகுதியைச் சேர்ந்த மார்மன்கள் “பெரும்பாலான சர்ச்சுகள் என்ன செய்தனவோ அதையே செய்தனர்; சர்ச் தலைவர்கள் எதிர்க்கவில்லை,” என்று பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த டெம்ப்பில் யுனிவர்சிட்டியின் பேராசிரியர் ஃபிராங்க்ளின் லிட்டெல் கூறினார். ப்ரிகெமிலுள்ள யங் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் டக்லஸ் டோப்லர், “நாசிக்கொள்கைக்கு எதிராக சர்ச் ஒரு ஸ்தாபன அளவிலான நிலைநிற்கை எடுக்கத் தவறிய”தைக் கூர்ந்தாராய விரும்புகிறார் என்பதாக அந்தச் செய்தித்தாள் கூறினது. அக்கறையூட்டும் விதத்தில், நாசிக்களைப் பின்பற்ற முற்றிலும் மறுத்த ஒரே மத அமைப்பு யெகோவாவின் சாட்சிகள் என்று கனடாவைச் சேர்ந்த யுனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வரலாற்று ஆசிரியர் ஜான் எஸ். கான்வே கூறினதாக ட்ரிப்யூன் கருத்தறிவித்தது. இந்நிலைநிற்கைக்காக பாதியளவுக்கும் மேற்பட்டோர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

கவனிக்கப்படாத பிள்ளைகள்

ஆறு வயதே ஆன சிறிய பிள்ளைகள் தங்கள் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றிருக்கையிலோ அல்லது தோழமை நடவடிக்கைக்குச் சென்றிருக்கையிலோ வீட்டில் தனித்து விடப்படுகின்றனர் என்று தி கான்பரா டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பாய்ஸ் டவுன் நேஷனல் கம்யூனிட்டி ப்ராஜக்ட்ஸ்-க்காகப் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்ணாகிய வென்டீ ரீட்-ன் படி, “பாதியளவுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் தாங்கள் தனிமையாக உணர்வதாகவும் தங்கள் பெற்றோர்களின் துணையைத் தவறவிடுவதாகவும் கூறினபோது, 12 வயதுக்குட்பட்டவர்களின் அதிக சதவீதமானவர்கள்—இருட்டைக் குறித்து, புயலைக் குறித்து, உட்புகுபவர்களைக் குறித்து, அல்லது கடத்தப்படுவதைக் குறித்து—பயப்பட்டனர்.” மேலும், “[அந்தப்] பிள்ளைகளில் 71 சதவீதமானோரிடம் ஏதாவது அவசரநிலை ஏற்பட்டால் பின்பற்றுவதற்கென கவனமான திட்டங்கள் எதுவும் இல்லை, மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் பாதிப்பேர் தங்கள் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்வது எப்படி என்றுங்கூட அறியவில்லை,” என்று ரீட் கூறினார் என்று டைம்ஸ் அறிக்கை செய்தது.

“சக்திபெற சிறுதூக்கம்”

“சிறுதூக்கமானது, மனோநிலை, சுறுசுறுப்பு, வேலைசெய்யும் விதம் ஆகியவற்றை முன்னேற்றுவிக்கக்கூடும்,” என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை செய்கிறது. ஒரு நல்ல சிறுதூக்கம் போடுவதால், மீண்டும் இளமையூட்டும் அதன் விளைவுகள், ஒழுங்கான வேலைநாட்களில் சிறுதூக்கங்களைச் சேர்த்துக்கொள்ள வழிகளைத் தேடும்படி சில தொழிற்துறைகளைத் தூண்டியுள்ளன. வேலைசெய்பவர்களின்—லாரி ஓட்டுநர்கள், விமான கம்பெனியின் விமானிகள், அணுசக்தி இயந்திர இயக்குநர்கள் போன்றவர்களின்—விழிப்புணர்ச்சியோடு இணைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பு நடவடிக்கையைத் தேவைப்படுத்தும் சந்தர்ப்பங்களில் இது விசேஷமாக உண்மையாயிருக்கிறது. “ஒரு 15-நிமிட சிறுதூக்கத்தின் மூலம் நீங்கள் மிகப்பெரியளவில் விழிப்புணர்ச்சியை—பல மணிநேர மதிப்புள்ளதை—மீண்டும் பெறுகிறதை நாங்கள் கண்டிருக்கிறோம்,” என்று தூக்க ஆராய்ச்சியாளர் க்ளூட்யோ ஷ்டாம்ப்பி கூறுகிறார். வேலைசெய்யுமிடத்தில் சிறுதூக்கம் என்பது, நீண்ட காலத்துக்குப்பின் இருக்கப்போகிறது. இருந்தபோதிலும், அதற்குமுன்பே பெரும்பாலான தொழிலாளர்களால் விரும்பி வரவேற்றுக்கொள்ளப்படும். “வேலைசெய்யுமிடத்தில் தூங்குவதை ரம்மியமானதாய் ஆக்குவதற்கு, அதை முன்மொழிபவர்கள் ‘சக்திபெற சிறுதூக்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள்” என அந்த ஜர்னல் கூறுகிறது.

தோட்ட ரசாயனங்கள்—ஒரு பயமுறுத்தலா?

புல்வெளியிலும் தோட்டத்திலும் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உங்கள் பிள்ளைகளின் உடல்நலத்தை ஆபத்துக்குள்ளாக்குவதாய் இருக்கலாம் என்று பிரெஞ்சு இயற்கை பத்திரிகையான ட்டெர் ஸோவாஸ் அறிக்கை செய்கிறது. “தோட்டத்திற்கு களைக்கொல்லிகளை அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் வீடுகளில் வசிக்கும் பதினான்கு வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகள்,” அத்தகைய ரசாயனங்களுக்கு காப்பற்ற நிலையில் இல்லாத பிள்ளைகளுடையதைக் காட்டிலும் “இணைப்புத் திசுப்புற்று [ஸார்கோம] எனப்படும் ஒருவகைப் புற்றுநோயால் பீடிக்கப்படுவதில் நான்கு மடங்கு அதிக ஆபத்தைக் கொண்டிருக்கின்றனர்” என்று எச்சரிக்கிறது. ஒரு பிள்ளையின் சுற்றுப்புறத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகித்தலானது, வெள்ளணுப்புற்று தோன்றும் அபாயத்தை ஒன்றரை மடங்கிலிருந்து மூன்று மடங்கு வரை அதிகரிக்கச் செய்கிறது என்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. பிரெஞ்சு குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரிலும் பாதிக்கு மேற்பட்டோர் தோட்ட ரசாயனத்தை உபயோகிப்பதால், அசுத்தமாக்கப்பட்ட ஒரு பெரிய நகரத்தினுடையதை விட அதிக நச்சுத்தன்மையுடைய ஒரு சுற்றுப்புறத்தை பலர் கவனமின்றி உண்டாக்கிக் கொண்டிருக்கலாம்.

வெப்ப எறும்புகள்

சஹாரா பாலைவனத்திலுள்ள குறிப்பிட்ட எறும்பு வகைகள் 140 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுள்ள பொசுக்கும் வெப்பநிலையை ஏன் தாங்க முடிகிறது என்பதை ஸ்விட்ஸர்லாந்திலுள்ள இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜூரிக் பல்கலைக்கழக உயிரியல் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ரூடிகர் வேனர் என்பவரும் பாசல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வால்ட்டெர் கெரிங் என்பவரும், “வெப்பத் தீங்கிலிருந்து உடல் புரதங்களைக் காக்க உதவும் வெப்ப அதிர்ச்சிப் புரதங்கள் (HSP-கள்) என்று அறியப்படும் பொருட்களை,” எறும்புகள் உண்டுபண்ணுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர் என்பதாக ஸயன்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. மிதமிஞ்சிய வெப்பநிலைகளுக்கு உள்ளாக்குகையில், “எல்லா விலங்குகளும் [வெப்ப அதிர்ச்சியிலிருந்து] தீங்கு ஆரம்பித்த பிறகு கொஞ்சம் HSP-களை தயாரிக்கின்றன,” ஆனால் “எறும்புகள் முன்கூட்டியே தங்களுக்குள் தயாரிக்கின்றன,” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. எவ்விதத்தில்? எறும்புகள் வெப்ப அதிர்ச்சியைப் பாவனைசெய்து, தாங்கள் கூட்டைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பே HSP-களை உற்பத்தி செய்கின்றன என்று அவ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கெரிங் மேலும் கூறுகிறார்: “இவ்விதமாக நினைத்துப் பார்க்குமளவிற்கு நாம் புத்திசாலிகளாயிருக்கவில்லை, ஆனால் எறும்புகள் அவ்விதம் இருந்தன.” அல்லது அவற்றின் படைப்பாளர் அவ்விதம் இருந்தாரோ?

ஓசையை நிறுத்துக

“தயவுசெய்து அந்த ஓசையை நிறுத்துங்களேன்,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் ஒரு தலைப்புச் செய்தி கெஞ்சுகிறது. வாயுவைக் கொண்டு இயக்கப்படும் புல்வெளி கத்தரிக்கும் இயந்திரங்கள், இலைகளைக் கூட்டிச்சேர்க்கும் இயந்திரங்கள், பாறையில் துளையிடும் கருவிகள், கார் ஹார்ன்கள், காரின் எச்சரிக்கையொலி எழுப்பும் கருவிகள், ஒலிபெருக்கிக் கருவி கொண்ட பெட்டிகள், குரைக்கும் நாய்கள், அழும் குழந்தைகள் மற்றும் நீண்ட-இரவு விருந்துகள் ஆகியவற்றிலிருந்து விடாது தொடரும் நகர்ப்புற ஓசை, சமாதானம் மற்றும் அமைதிக்கான பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தொகுதியினரின் நகர்ப்புற ஓசையெதிர்ப்பு தொடர் இயக்கத்தைக் கொண்டுள்ளது. நீடித்த நேரம் அத்தகைய ஓசையைக் கேட்கும்படி இருத்தல், “களைப்பையும் கவலையையும் அதிகப்படுத்தக்கூடும்,” என்று ஸ்டார் கூறுகிறது. அது மேலும் கூறுவதாவது: “இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும், இருதயத் துடிப்பின் வேகம் மாறக்கூடும், மேலும் உடலானது இரத்தக்குழாய்களை பாதிக்கும் அட்ரீனலையும் மற்ற ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சி காட்டுகிறது.” சுகாதார அதிகாரிகள் சொல்கிறபடி, எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாக, அதிக ஓசையெழுப்பும் புல்வெளி கத்தரிக்கும் இயந்திரம் அல்லது ஒரு மோட்டார் வண்டி போன்ற 85 டெசிபெல் அளவுக்கும் மேற்பட்ட எந்தவித சத்தத்துக்கும் காப்பற்ற நிலையில் இருப்பதானது, உங்கள் கேட்கும் திறனுக்கு அபாயகரமானது.

எலும்பு மெலிதலை எதிர்த்தல்

எலும்பு மெலிதல் (Osteoporosis) அளவுக்குச் சென்றுவிட்ட இழக்கப்பட்ட எலும்பின் நிறையைத் திரும்பப் பெறுவதற்கு உடல்சம்பந்தப்பட்ட சுறுசுறுப்பு உதவக்கூடும் என்று ஜார்னல் டோ பிராஸீல் செய்தித்தாள் கூறுகிறது. ரியோ டி ஜெனீரோவிலுள்ள காயம்தொடர்பான கிளினிக்குகளில் உள்ள நிபுணர்கள் உடற்பயிற்சி சிகிச்சையளிக்கின்றனர். அதுமட்டுமல்ல, சிகிச்சை பெறுவோருக்கு “சரியாக நடப்பது மற்றும் சரியான தோற்ற அமைவில் இருப்பது” எப்படியென்று கற்பிக்கவும் செய்கின்றனர். 45-லிருந்து 77 வயது வரையுள்ள பெண்களடங்கிய ஒரு தொகுதியோடு இரண்டு வருடங்கள் வேலைசெய்த பிறகு, அத்தொகுதியின் 80 சதவீதம் எலும்பு நிறையில் ஒரு கணிசமானளவு அதிகரிப்பை அனுபவித்திருந்தது. அச்சமயத்தின்போது, அப்பெண்களுக்கு குறைவான மூட்டுவாத முதுகுவலி இருந்தது, மற்றும் எவருக்கும் எலும்பு முறிவுகள் ஏற்படவில்லை. கிளினிக்கின் இயக்குநரான டாக்டர் தீயோ கோஹென், கால்ஸியம் அதிகமாயும் கொழுப்புச்சத்து குறைவாயுமுள்ள உணவுவகையைப் பரிந்துரைக்கவும் செய்கிறார். மேலும், வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டுபிடிக்க அவர் உற்சாகப்படுத்துகிறார். “வயதானவர்கள் உட்கார்ந்துகொண்டும் பின்னல்வேலை செய்துகொண்டும் இருப்பதைப் பார்க்க நாங்கள் விரும்புவதில்லை,” என்று கவனித்தறிகிறார் டாக்டர் கோஹென். “வெளியே சென்று சுற்றுமுற்றும் நடப்பதானது, மூளை செல்களுக்குப் பயிற்சியளிக்க குறுக்கெழுத்துப் போட்டிகள் செய்வதைப்போன்ற அதே அளவு முக்கியமானது.”

இரத்தம்-மூலமான நோய்கள் குறித்த கவலை

யு.எஸ். நேஷனல் அகடமி ஆஃப் ஸயன்ஸஸ்-இன் மருத்துவ ஸ்தாபனத்தால் செய்யப்பட்ட ஓர் அறிக்கையின்படி, இரத்த வழங்கீட்டைப் பாதுகாக்க மேம்பட்ட பாதுகாப்புள்ள கவனமான முறைகள் தேவைப்படுகின்றன. அதன் நிரூபணமாக, எய்ட்ஸ் நோயின் ஆரம்ப வருடங்களில் செய்யப்பட்ட இரத்தமேற்றுதல்கள் மூலம் பரவிய மானிட நோயெதிர்ப்புக்குறைவு வைரஸைக் (HIV) குறித்துக்காட்டுகிறது. அவ்வறிக்கையை மறுசீராய்வு செய்கையில், தி நியூ யார்க் டைம்ஸ் கூறியது: “ஐக்கிய மாகாணத்திலுள்ள இரத்த ஒழுக்கு நோயால் பாதிக்கப்பட்ட 16,000 பேர்களில் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளும், இரத்தமேற்றுதல்களையும் இரத்தமடங்கிய பொருட்களையும் பெற்றுக்கொண்ட 12,000-க்கு மேற்பட்ட நோயாளிகளும் H.I.V.-யால் தொற்றப்பட்டவர்களாயினர்.” HIV-யைப் போன்ற முன்னறியாத, ஆபத்தான தொற்றுக்கிருமிகள், தேசிய உடல்நல அமைப்பு தயார்நிலையில் இல்லாதபோது மறுபடியும் திடீரென தாக்கிவிடக்கூடுமோ என்று அந்த ஸ்தாபனத்தின் அறிக்கை கவலை தெரிவிக்கிறது. “இரத்தத்தையும் இரத்தமடங்கிய பொருட்களையும் பெற்றுக்கொள்பவர்களில் கெடுதலான விளைவுகளைக் கண்டுபிடிக்க, சரிபார்க்க மற்றும் எச்சரிக்க” ஓர் அமைப்பை நிறுவுவதை அது பரிந்துரைத்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்