உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 1/22 பக். 28-29
  • உலகைக வனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகைக வனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தேய்பிறையாகும் திருமணம்
  • “மோசேயின் விளைவு”
  • இங்கிதம் தெரியாத சுற்றுலாப் பயணிகள்
  • குழந்தைக்கு பாலூட்டுவதில் இருதலைநிலை
  • உலக சுகாதார நிலை மேலும் மோசமாகிறது
  • வீடே மிகச்சிறந்தது
  • இதுவல்லவோ நட்பு
  • கூட்டன்பர்க் பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது
  • நீண்ட ஆயுள்
  • கூட்ட—உலகை ன்பர்க் மாற்றிய மனிதர்!
    விழித்தெழு!—1998
  • பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சிகள்
    விழித்தெழு!—1994
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
    விழித்தெழு!—1993
  • பிள்ளைகள் உயிருடன் இருப்பதற்கு உதவுதல்!
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 1/22 பக். 28-29

உலகைக வனித்தல்

தேய்பிறையாகும் திருமணம்

கனடாவில் திருமண உறவு மிக வேகமாகத் தேய்ந்து வருகிறது. கனடாவின் புள்ளிவிவர அறிக்கையின்படி, கடந்த 15 வருடங்களில், “திருமணமின்றி வெறுமனே ஒன்றாகச் சேர்ந்து வாழும் கனடா நாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக 7 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்தில் நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கையைவிட ஆறு மடங்கு அதிகமாகும்” என்பதாக த டோரன்டோ ஸ்டார் அறிவிப்பு செய்தது. மேலும், “கனடாவில் முதன்முறையாக இணையும் ஜோடிகளில் பாதிப்பேர், சட்டப்படி திருமணமாகாதவர்களே, இந்த எண்ணிக்கை க்யுபெக் மாகாணத்தில் ஐந்துக்கு நான்கு என்ற விகிதத்தில் உயரப்பறக்கிறது.” ஏன் இந்த மாற்றம்? கட்டுப்பாடற்ற ஜோடி சேர்க்கை என்பது “சமுதாயப் புரட்சியின் ஒரு பாகம், அது நவீன நாகரிகத்திற்கு பொருந்தாது என்று கருதப்படும் சமுதாயத்தில் வேர்கொண்டுள்ள, நிராகரிக்கப்படும் அமைப்புகளின் வரிசையில் இதுவும் ஒன்று” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “திருமணமின்றி ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது முன்பு சோதனைத் திருமணமாக கருதப்பட்டது, ஆனால் இப்பொழுதோ திருமணத்திற்கு பதில் இதையே தெரிவு செய்வதாகத் தெரிகிறது” என்று செய்தித்தாளின் கட்டுரை குறிப்பிடுகிறது.

“மோசேயின் விளைவு”

ஜப்பானில் உள்ள இரண்டு இயற்பியல் வல்லுநர்கள் ஆய்வுக்கூடத்தில் வெற்றிகரமாகத் தண்ணீரை பிரித்திருக்கிறார்கள் என்பதாக நியூ சயன்டிஸ்ட் அறிவிக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின், மாசாகாசூ இவாசாகா என்பவரும், ஷொகொ யூனொ என்பவரும் சக்தி வாய்ந்த மின்சார கம்பிச்சுருளை உபயோகித்து, ஓரளவு தண்ணீர் நிரப்பப்பட்டு கிடைநிலையில் வைக்கப்பட்ட குழாயைச் சுற்றி காந்தப் புலத்தை உருவாக்கினர். பூமியில் இருப்பதைவிட 5,00,000 மடங்கு சக்திவாய்ந்த இக்காந்தப்புலம், தண்ணீரை குழாயின் இரு ஓரங்களுக்குத் தள்ளி, நடுவில் உலர்ந்த பகுதியை உருவாக்கியது. இந்த செயல் 1994-ஆம் ஆண்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ஐரோப்பா மற்றும் ஐக்கிய மாகாணங்களில் உள்ள இயற்பியல் வல்லுநர்களால் திரும்பவும் செய்துகாட்டப்பட்டது. இது எவ்விதம் நிகழ்கிறது? டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அந்த விஞ்ஞானிகளோடு பணியாற்றும் கொயிச்சி கிடாசாவா குறிப்பிடுகிறபடி, தண்ணீர் “காந்த அழுத்தத்திற்கு உட்படுவதை சற்றே தவிர்க்கும். ஆகவே ஒரு சக்திவாய்ந்த காந்தம், காந்தப்புலம் எங்கே அதிகமாக இருக்கிறதோ அங்கிருந்து தண்ணீரை விலக்கி எங்கே குறைவாக இருக்கிறதோ அங்கே தள்ளுகிறது.” கிடாசாவா இந்த செயலுக்கு “மோசேயின் விளைவு” என்று பெயரிட்டிருக்கிறார்.

இங்கிதம் தெரியாத சுற்றுலாப் பயணிகள்

தொன்மையான கலாச்சாரங்கள் நிறைந்திருக்கும் இத்தாலி பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலா மையமாக விளங்குகிறது. விசனகரமாக விடுமுறையை கழிக்க வருபவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ளும் முறைக்கு ‘டாட்டா’ சொல்லிவிடுகிறார்கள். ஃப்ளாரென்ஸின் சுற்றுச்சூழல் மற்றும் சிற்பகலாச்சார ஆணையர் மொரியொ லொலி கெட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தங்களுடைய வீட்டில் இருக்கும்போது கனவிலும் நினைக்காத சில செயல்களை இங்கே செய்வதற்கு தங்களுக்கு உரிமையிருப்பதாக அநேகர் நினைக்கிறார்கள்.” ஆகவே ஃப்ளாரென்ஸ் நகரம், “சுற்றுலாப் பயணிகளுக்கான உரிமைகளும் கடமைகளும் என்ற சாசனம் தயாரித்திருக்கிறது”; அது பார்வையாளர்கள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பவற்றை நினைவுபடுத்துகிறது என்பதாக லா ரேப்பூப்பிளிக்கா அறிவிக்கிறது. இதோ இங்கே நினைவில் வைக்கவேண்டிய சில குறிப்புகள்: அலங்கார நீரூற்றுகளில் குளிக்கவோ அல்லது காலை நனைக்கவோ கூடாது; நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் முன்பாக பிக்னிக் பாணியில் உணவருந்தக்கூடாது; குளிர்பான கேன்களை அல்லது சூயிங்கம்களை தரையில் போடக்கூடாது; அருங்காட்சியகங்களுக்குச் செல்லும்போது கையில்லாத டி-சர்ட் போடக்கூடாது; சரித்திரப்புகழ் மிக்க பூங்காக்கள் மற்றும் தெருசந்திகளில் குளியல் உடையில் சன்பாத் எடுக்கக்கூடாது. ஆனால் நன்னடத்தையுள்ள சுற்றுலாப் பயணிகள் இப்பொழுதும் போற்றப்பட்டு வரவேற்கப்படுகிறார்கள்.

குழந்தைக்கு பாலூட்டுவதில் இருதலைநிலை

த நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது, “ஏழை நாடுகளில் குழந்தைப் பெற்ற புதிய தாய்மார்களுக்கு, கடந்த இருபது வருடங்களாக டாக்டர்களும், பொதுநல சுகாதார ஆணையர்களும் கொடுத்த ஆலோசனை: குழந்தைகளின் உடல்நலம் காக்க தாய்ப்பால் கொடுக்கவேண்டும். ஆனால், இப்பொழுது விரைந்து பரவிவரும் எய்ட்ஸ் இந்த அறிவுரையை உபயோகமற்றதாக்கியுள்ளது. எய்ட்ஸ் நோய் கிருமி தொற்றப்பட்ட தாய்மார், தாய்ப்பால் மூலம் அந்தக் கிருமிகளை பெருமளவுகளில் கடத்தமுடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. . . . ஹெச்.ஐ.வி. நோய் கிருமிகள் உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அவற்றைத் தாய்ப்பால் மூலம் பெற்றனர் என்பதாக ஐக்கிய நாடுகள் சமீபத்தில் கணக்கிட்டிருக்கிறது.” தாய்ப்பாலுக்கு பதிலாக பால் பவுடரே உள்ளது. ஆனால், அதிலும் அதற்கே உரிய பிரச்சினைகள் இருக்கின்றன. அநேக நாடுகளில் தாய்மார்களுக்கு அதை வாங்குவதற்கு பணம் கிடையாது அல்லது கொதிநீரில் பாட்டிலை நோய்கிருமிகளின்றி சுத்தப்படுத்த வசதியில்லை, மேலும் சுத்தமான தண்ணீரும் கிடைப்பதில்லை. இதன் விளைவாக பிள்ளைகள் வயிற்றுப்போக்கால் உடலின் நீர் அகற்றப்பட்டு கஷ்டப்படுகிறார்கள்; இதோடுகூட சுவாசநோயாலும் வயிறு மற்றும் குடல் நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். ஏழைக் குடும்பங்கள் பால் பவுடரில் அதிகத் தண்ணீரைக் கலந்து கொடுத்துவிடுகின்றனர்; அதனால் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இப்பொழுது சுகாதார அதிகாரிகள் இந்த இரண்டு பிரச்சினைகளையும் எவ்விதம் சமாளிப்பது என்று அறியாமல் தவிக்கிறார்கள். உலகமுழுவதும் ஒவ்வொரு நாளும் 1,000-திற்கும் அதிகமான சிசுக்களும் பிள்ளைகளும் புதிதாக ஹெச்.ஐ.வி. கிருமிகளால் தாக்கப்படுகிறார்கள்.

உலக சுகாதார நிலை மேலும் மோசமாகிறது

“சுமார் 300 கோடி ஜனங்களுக்கு, அதாவது உலக ஜனத்தொகையில் பாதிக்கும் மேலானவர்களுக்கு, குறைந்த வசதியுள்ள கழிப்பிடத்தைக்கூட உபயோகிக்கும் வாய்ப்பில்லை” என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள், UNICEF-ன் (ஐநா குழந்தைகள் நல அமைப்பு) தேசங்களின் வளர்ச்சி (ஆங்கிலம்) வருடாந்தர சுற்றாய்வின் ஒரு பகுதியாகும்; இது வெளிக்காட்டுவது என்னவென்றால், “உலகம் முழுவதுமாக கழிவுநீக்க ஏற்பாடுகள் முன்னேற்றமடையவில்லை, அதற்கு பதில் மிக மோசமடைந்திருக்கின்றன.” ஒரு உதாரணத்திற்கு, ஏழை ஜனங்களுக்கு சுத்தமான தண்ணீர் அளிப்பதில் வெற்றியடைந்த சில நாடுகள் கழிவை அகற்றுவதில் தோல்வியடைந்துள்ளன. இப்படிப்பட்ட அடிப்படை சுகாதாரக்குறைவு புதிய நோய்கள் பரவுவதற்கும் பழைய நோய்கள் புதுத்தெம்புடன் வெளிப்படுவதற்கும் பெருமளவு காரணமாகி இருக்கிறது என்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சுகாதாரக்குறைவின் நிமித்தமே 20 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சாகிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த ஆய்வின் ஆசிரியர் அக்தர் ஹமீத் கான் குறிப்பிடுகிறபடி: “இடைநிலை காலத்திற்கு சமமான சுகாதார நிலைமை இருந்தால், இடைநிலை காலத்தில் இருந்த அதே அளவான நோய் பாதிப்பும் இருக்கும்.”

வீடே மிகச்சிறந்தது

பெற்றோர் வேலைக்குச் சென்று திரும்பும்வரை குழந்தை காப்பகத்தில்—மற்றவர்களுடைய மேற்பார்வையில் இருப்பது பிள்ளைகளுக்கு—நன்மை அளிக்குமா? இதைத்தான் தேசிய குழந்தை ஆரோக்கிய மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனத்தின் ஐ.மா. ஆய்வு கண்டுபிடிக்க விரும்பியது. இதைத் தெரிந்து கொள்வதற்காக 1,364 குழந்தைகளை, அவர்கள் பிறந்ததிலிருந்து மூன்று வயதுவரை 14 பல்கலைக்கழகங்களில் உள்ள பிரபலமான குழந்தை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் படிப்படியாக ஆய்வு செய்தனர். இதில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பிள்ளைகள் தங்களுடைய தாயால் வீட்டில் கவனிக்கப்பட்டனர்; மற்றவர்கள் குழந்தை காப்பகப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர் அல்லது சம்பளத்திற்காக பிள்ளைகளை கவனித்துக் கொள்ளுபவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆய்வின் முடிவு என்ன? “ஆராய்ச்சியாளர்கள் பிள்ளைகளின் மொழி, கற்றுக்கொள்ளும் திறமை ஆகியவற்றை கவனித்தபோது, நல்ல தரமிக்க குழந்தை காப்பகங்களில்—அதாவது பெரியவர்கள் அவர்களிடம் மிக அதிகமாக சம்பாஷிக்கும் இடங்கள்—பிள்ளைகளிடம் அதிகமாக கவனம் செலுத்தாத இடங்களில் இருந்த பிள்ளைகளைவிட சற்றே நன்மை அடைந்தனர். ஆனால், ஆய்வின் இறுதி முடிவு என்னவென்றால், குடும்பச்சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் மனம் மற்றும் உணர்ச்சி சம்பந்தமான வளர்ச்சியை ஒப்பிடும்போது, குழந்தை காப்பகத்தினால் பிள்ளைகளிடத்தில் ஏற்பட்ட நன்மை மிகக் குறைவே. . . . இந்தக் குழந்தைகள் மத்தியில் 1 சதவீத வித்தியாசத்தை மட்டுமே குழந்தை காப்பகத்தினால் ஏற்பட்ட விளைவாக காரணம் காட்டமுடியும், ஆனால், 32 சதவீத வித்தியாசமான குணயியல்புகளை தங்கள் குடும்பத்தின் அனுபவத்திலிருந்தே அவர்கள் பெறுகிறார்கள் என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள். இதிலிருந்து கிடைக்கும் தகவல் என்ன? மதிப்பு வாய்ந்த கற்றுக்கொடுக்கும் மையம் வீடுதான்” என்று டைம் பத்திரிகை அறிவிக்கிறது.

இதுவல்லவோ நட்பு

ஆப்பிரிக்க அக்காசியா மரங்களுக்கும் எறும்புகளுக்கும் இடையே இருக்கும் உறவைப் பார்த்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். அந்த மரங்கள் எறும்புகளுக்கு உணவையும் தங்கும் இடத்தையும் தருகின்றன. எறும்புகள் பிரதிபலனாக மரங்களைப் பாழாக்கும் பூச்சிகளைத் தாக்கி இலைகளை பாதிக்கும் விலங்குகளைக் கொட்டுகின்றன. இந்தப் பாதுகாப்பை நம்பியே மரங்களும் உயிரோடு இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டுமென்றால் பூச்சிகளின் உதவியும் மரங்களுக்குத் தேவை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் தங்களுடைய கடமையை நிறைவேற்ற எவ்விதம் வாய்ப்பு கிடைக்கும்? விஞ்ஞானப் பத்திரிகை நேச்சர் குறிப்பிடுகிறபடி, “மலர்கள் கருவளத்திற்கான உச்சநிலையில்” இருக்கும்போது, இந்த மரங்கள் எறும்புகளை விலகிப்போகும்படி தூண்டும் ஒரு இரசாயனத்தை வெளிவிடுகின்றன. இது, “மிகமுக்கியமான அந்தத் தருணத்தில்” பூச்சிகள் மலர்களை நாடுவதற்கு இடமளிக்கிறது. மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடந்து முடிந்த பிறகு எறும்புகள் தங்கள் காவல் பணியை தொடர திரும்பி வருகின்றன.

கூட்டன்பர்க் பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது

ஜோஹனஸ் கூட்டன்பர்க்கினால் 15-ஆம் நூற்றாண்டில் அச்சடிக்கப்பட்ட பைபிளின் ஒரு பகுதி, ஜெர்மனியில் ரென்ட்ஸ்புர்க் என்ற இடத்தில் ஒரு சர்ச்சின் சுவடிக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1996-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு, இந்த 150 பக்க பைபிளின் பகுதி உண்மையில் கூட்டன்பர்க்கின் ஒரு பிரதி என்று அறிவிப்பதற்கு முன்பு கவனத்துடன் ஆராயப்பட்டது என்று வீஸ்பாடெனர் குரீர் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. உலகம் முழுவதும் 48 கூட்டன்பர்க் பைபிள்கள் இருப்பதாகத் தெரிகிறது, அவற்றுள் 20 முழுமையானவை. “ஜோஹனஸ் கூட்டன்பர்க்கினால் அச்சடிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற இரண்டு தொகுதி பைபிள்களே, புத்தகம் அச்சடிப்பதில் முதன்முதலாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய சாதனை” என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இந்தக் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியோடு, “பைபிள் திருடப்படுவதை தடுப்பதற்காக உரை மேடையோடு இணைத்துக் கட்டும் பழைய புத்தகச் சங்கிலியும் பத்திரமாக இருக்கின்றன.”

நீண்ட ஆயுள்

ஒரு நபர் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ எது உதவி செய்யும்? பாஸ்டனில் உள்ள பிரிகம் பெண்கள் மருத்துவமனையின் டாக்டர் ஜார்ஜ் வயான் குறிப்பிடுகிறபடி, “மன அழுத்தத்தை தவிர்த்து, நிலையான நல்ல மனநிலையை எப்போதும் காத்துக்கொள்ளும் குணமே, உணவு மற்றும் உடற்பயிற்சியைவிட உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.” 1942-ல் வேலையில் நியமிக்கப்பட்ட சுமார் 230 நபர்களை வைத்து தொடர்ந்து செய்யப்படும் ஒரு ஆராய்ச்சியின் அடிப்படையில் வயான் இந்தக் கருத்தை தெரிவிக்கிறார். அவர்களில் 52 வயதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர்களை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டனர்: “கவலையில் ஆழ்ந்துவிடுபவர்” என்று எண்ணப்பட்டவர் (இவர்கள் அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறார்கள், தூக்க மருந்தை தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள், அல்லது மனநல மருத்துவரை அணுகியிருக்கிறார்கள்), “கவலையைக் கண்டுகொள்ளாதவர்” (இவர்கள் அளவுக்கு அதிகமாகக் குடித்தது கிடையாது, மனநிலையை மாற்றும் மருந்து வகைகளை உபயோகித்தது கிடையாது அல்லது மனநல மருத்துவரை அணுகியது கிடையாது), மேலும் “இடைப்பட்டவர்கள்” (இவர்கள் இந்த இரண்டு தொகுதிக்கும் இடைப்பட்ட குணயியல்புடையவர்கள்). இவர்களை 75 வயதில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது “5 சதவீதத்தினர் [கவலையைக் கண்டுகொள்ளாதவர்] மட்டுமே இறந்தனர், ஆனால் இடைப்பட்டவர்கள் தொகுதியில் 25 சதவீதத்தினரும், கவலையில் ஆழ்ந்துவிடும் ஆண்கள் தொகுதியில் 38 சதவீதத்தினரும் இறந்து விட்டனர்” என்பதை சயன்ஸ் நியூஸ் அறிவிக்கிறது. நிச்சயமாகவே நல்ல உணவும் ஒழுங்கான உடற்பயிற்சியும் நல்ல ஆரோக்கியத்திற்கு உதவும். ஆனால், “ஆண்களை பொருத்தமட்டுமாவது நீண்ட ஆயுள், மனச்சோர்வின் பயங்கர வலியைத்தவிர்க்கும் உணர்ச்சிப்பூர்வமான உறுதியை சார்ந்திருக்கிறது” என்று சயன்ஸ் நியூஸ் குறிப்பிடுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்