முள்ளில்லா யுக்கா—வளைந்து கொடுக்கும் அதிசய செடி
கோஸ்டா ரிகாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
மூலிகைத்தன்மையோடும், சோப்பின்தன்மையோடும், சுவை மிக்க, சத்துள்ள உணவு. இந்தக் கருத்தைக் கவரும் செடியில் இவ்வளவு தன்மைகளும் இன்னும் அதிகமும் அடங்கியிருக்கிறது! மத்திய அமெரிக்காவில் நன்றாக அறியப்பட்டிருக்கிறபோதிலும், இது முள்ளில்லா யுக்கா (spineless yucca) என்ற பெயரால் அறியப்படவில்லை. அந்தப் பெயரை நீங்கள் மத்திய அமெரிக்காவில் பயன்படுத்தினால், அநேக மக்கள் புரியாமல், மரியாதையுடன் தெரிந்துகொள்ளும் ஆவலில் உங்களை நோக்குவார்கள். இடாபோ, இசாட், அல்லது டாகீஜோ என்ற பெயர்களை சொன்னதுமே புரிந்து கொண்ட புன்னகை அவர்களுடைய முகத்தில் தோன்றும்; கோஸ்டா ரிகா, குவாதமாலா, ஹாண்டுராஸ், மற்றும் நிகரகுவாவில் இச்செடி அவ்விதமே அழைக்கப்படுகின்றது. கோஸ்டா ரிகா, மற்றும் மத்திய அமெரிக்காவில் இதன் மலர்களினால் வித்தியாசமான உணவு வகைகளை தயாரித்து விரும்பி உண்கிறார்கள்.
உயர் ரகக் குடும்பத்தின் ஒரு செடிவகை
தாவரங்களை வகைப்படுத்துபவர்கள் மத்தியில் பலப்பரிட்சையைப் போல் தோன்றிய ஒரு காரியம், அவர்கள் முள்ளில்லா யுக்காவை லில்லியேசியே குடும்பத்தின் பாகம் என்று முன்பு வகைப்படுத்தி தற்சமயம் அகாவாசியே குடும்ப அங்கத்தினராக்கி இருக்கின்றனர். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட சொரசொரப்பான செடிவகைகளில், சுமார் 550 இனங்கள் லில்லியேல் (lily) என்ற துறையைச் சேர்ந்தவை. தாவரவியல் வல்லுநர்கள் அதன் விஞ்ஞானப் பெயரை யுக்கா எலிப்பன்டிப்ஸ் (Yucca elephantipes) என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.
யுக்கா பேரினத்தில் 40 இனங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன; அவை வட அமெரிக்கா, மெக்ஸிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. புகழ்பெற்ற இதன் நெருங்கிய உறவினர்களில், இராட்சத ஜோஷுவா மரமும் (Yucca brevifolia) மற்றும் சிறிய ஸ்பானிஷ் பயொனட்டும் (Yucca aloifolia) சேர்ந்துள்ளன. நிச்சயமாகவே பெரிய குடும்பம்தான்!
பல்வகை பயனுள்ள இந்தச் செடியின் தனித்தன்மைகள் யாவை? பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் கருத்தைக் கவரும் தோற்றமுடையது; இதன் விரைப்பான நீண்ட இலை, நடுத்தண்டிலிருந்து ஒரு மீட்டர் அளவுக்கு வெளிவருகிறது. இதன் பருத்த நடுத்தண்டு நார் இழை அமைப்புடன், பழுப்பு சாம்பல் நிறத்துடன், தோற்றத்தில் யானையின் முன்னங்காலை ஒத்திருக்கிறது—இதனால், எலிப்பன்டிபிஸ் என்ற விஞ்ஞானப் பெயர் பெற்றிருக்கிறது.
முள்ளில்லா யுக்காவை முதலில் பார்க்கும்போது, 4.5 முதல் 7.5 மீட்டர் உயரம் இருப்பதால், அது ஒரு மரம் என்று தவறாக நினைத்து விடலாம். கோஸ்டா ரிகாவின் கோடை காலத்தில், குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில், நூற்றுக்கணக்கான மலர்கள் கோயில் மணி வடிவத்தில் சந்தன நிறத்தில் இடாபோ செடிக்கு மகுடம் சூட்டுகின்றன. இவை மார்கெட்டுகளிலும், தெரு வியாபாரிகளாலும் விற்கப்படுகின்றன, அந்தச் சமயத்தில் எப்பக்கம் திரும்பினாலும் இவையே காணப்படுகின்றன! இந்தச் செடியின் விறைப்பான, கத்தியைப் போன்ற இலைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாக, மென்மையான இதன் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன; இவை செடியின் மத்தியில் அட்டென்ஷனில் இருப்பதைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன.
யுக்கா செடிவகைகளில், இடாபோ இனத்தை தோட்டக்காரர்களும் நிலத்தை அழகுபடுத்துபவர்களும் விரும்புகின்றனர்; ஏனென்றால், அது வித்தியாசமான சீதோஷண நிலைகளுக்கும் மண் வளங்களுக்கும் வளைந்து கொடுத்து உள்ளத்தைக் கவரும் வெப்ப மண்டலம் போன்றத் தோற்றத்தைக் கொடுக்கிறது. கோஸ்டா ரிகாவில், நிலத்தின் எல்லையைக் குறித்திட இவை முன்பு வேலியாகப் பயன்படுத்தப்பட்டன; இதன் காரணமாக நாட்டின் எல்லா பாகத்திலும் பரவிக்கிடக்கும் இடாபோ காணப்படுவது குறித்ததில் ஆச்சரியமேதுமில்லை.
உள்ளூர் மக்கள் இச்செடியின் அநேக உபயோகங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நார்களால் பாய்கள், பெல்டுகள், தோள்பைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் இதன் இலைகளை வளைந்து கொடுக்கும் அளவிற்கு சூடாக்கினால், காய்கறிகளை கட்டி எடுத்து செல்வதற்கு நல்ல கயிறைப்போல் தோட்டக்காரர்கள் பயன்படுத்தலாம். இச்செடியின் உபயோகத்திற்கு எல்லையே இல்லை என்பது போல் தோன்றுகிறது!
சுவைத்து உண்ணும் உணவு
உலகத்தின் மலர்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் நூலாசிரியர் ஃபிரான்சஸ் பெர்ரி, எழுதுகிறார்: “யுக்கா இனப் பூக்களை [அமெரிக்க] இந்தியர்கள் உண்கிறார்கள்; கனிகளுக்கும் வேர்களுக்கும் [வழவழவென்று] சோப்பின் தன்மை இருப்பதால் துணிகளை துவைப்பதற்கு பயன்படுத்தலாம்.” மத்திய அமெரிக்காவில் வாழ்பவர்கள் யுக்காவின் சமையல் பண்புகளையும் சுத்தமாக்கும் பண்புகளையும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனுடைய சற்றே புளிக்கும் அருமையான சுவையை மிகவும் விரும்புகின்றனர். மலர்களை சாலடாகவும், முட்டை மற்றும் உருளைக் கிழங்குடனும் சேர்த்து சமைப்பது, கோஸ்டா ரிகா மற்றும் மத்திய அமெரிக்க மக்களுக்கு மிகவும் விருப்பமான உணவு. யுக்கா செடிகளுக்கு ஊட்டச்சத்து அதிகம், ஏனென்றால் அவை சுண்ணாம்பு, இரும்பு, தையமின், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின் போன்ற வைட்டமின்களாலும், தாதுக்களாலும் நிறைந்துள்ளன.
யுக்கா மருத்துவத்தன்மைக்கும் பிரபலமானது; மலர்களை கொதிக்கவைத்து புரையூட்டுவதன் மூலம் வயிற்றுக்கு இதமளிக்கும் ஒரு டானிக் தயாரிக்கப்படுகிறது. இலைகள் சிறுநீரகநோய், குடல்நோய் போன்றவற்றை குணப்படுத்தவும், அதிக சிறுநீரை வெளியேற்றவும் பயன்படுத்தப்படலாம். மூலிகைத்தன்மையும், சோப்பின்தன்மையும், சுவையும், சத்தும் நிறைந்த இந்த உணவுச்செடி, நாம் ரசித்து உண்ணக்கூடிய பூமியில் இருக்கும் சிருஷ்டிப்புகளில் ஒன்றே!
[பக்கம் 26-ன் படம்]
மத்திய அமெரிக்காவில் முட்டை மற்றும் உருளைக் கிழங்குடன் தயாரிக்கப்படும் யுக்கா விரும்பி உண்ணும் ஓர் உணவு
[பக்கம் 27-ன் படம்]
கிராமங்களில் வளர்க்கப்படும் யுக்கா செடிகள் பார்ப்பதற்கு மரத்தைப் போல் இருக்கும்