கோஸ்டா ரிகா சிறிய நாடு, பல்வகை வித்தியாசங்கள்
கோஸ்டா ரிகாவிலிருக்கிற விழித்தெழு! நிருபர்
தலைநகருக்கு வெளியே ஒருசில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு நீங்கள் விமானத்தில் சென்றால், கோஸ்டா ரிகா ஒரு சிறிய நாடு என்பது விரைவில் வெளிப்படும். ஒரு நிமிஷம் கரிபியன் கடலுக்கு மேலாக இருக்கிறீர்கள், சில நிமிஷங்களுக்குள் தரையிறங்க பசிபிக்மீது கீழ்நோக்கி பறந்து வருகிறீர்கள். சுமார் 30 லட்சம் குடிமக்களைக் கொண்ட நாடாகிய கோஸ்டா ரிகா, நிகரகுவாவையும் பனாமாவையும் பிரிக்கிற மலையும் எரிமலையும் நிறைந்த குறுகிய நிலப்பரப்பாக இருக்கிறது. வட அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோவுக்கும் தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவுக்கும் இடையே உள்ள நில இணைப்பாகிய பனாமா பூசந்தி உட்பட அது மத்திய அமெரிக்காவை உருவாக்கும் ஏழு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.—17-ம் பக்கத்திலுள்ள வரைபடத்தைப் பாருங்கள்.
அதன் சுற்றுப்புற சூழலோடு பழக்கப்பட்ட பிறகு, நாட்டுப்புறத்தின் பச்சைப்பசேலென்ற அழகால் நீங்கள் அசந்து நின்றுவிடுகிறீர்கள். நீங்கள் எங்குப் பார்த்தாலும் பனைமரங்களையும் வாழை மரங்களையும் கரும்பு மற்றும் காப்பி தோட்டங்களையும் அநேக விதமான அபூர்வ செடிகளையும், புதர்களையும் பூக்களையும் காண்பதாக தோன்றும். கோஸ்டா ரிகா தாவரவியல் வல்லுநரின் பரதீஸாகும். இந்தக் கவர்ச்சி வாய்ந்த நாட்டினால் நாம் வசீகரிக்கப்படுவதற்கு முன்பாக, அதன் சரித்திரத்தில் சிலவற்றை பார்ப்போம்.
கொலம்பஸின் மற்றொரு கண்டுபிடிப்பு
1502-ல், கிறிஸ்டஃபர் கொலம்பஸ் தன்னுடைய நான்காம் கப்பற்பயணத்தில், இன்று ஹாண்டுராஸ் என்றழைக்கப்படுகிற கரைக்கு அப்பாலுள்ள இடத்தில் தன்னுடைய கப்பல்களோடு புயலில் திடீரென அகப்பட்டுக்கொண்டார். புகலிடம் தேடி, மஸ்கீடியா கரை என்று இப்போது அழைக்கப்படுகிற நிகரகுவா பகுதியைத் தாண்டி சென்று, காரியாரீ என்றழைக்கப்படுகிற சிறிய கிராமத்திற்கு வந்துசேர்ந்தார். மக்களின் மனமார்ந்த அன்பாலும் செழிப்புள்ள தாவரங்களாலும் அவர் மனங்கவரப்பட்டார். அங்குள்ள குடிமக்களில் சிலர் அணிந்திருந்த பொன்னாபரணங்களைக் கண்டு அவர் இன்னும் கவர்ந்திழுக்கப்பட்டார். பொன்னை அதிகம் விரும்பியவராக, கொலம்பஸ், விலையுயர்ந்த கனிமங்கள் நிறைந்த கரையாக இது இருக்கும் என்று ஊகித்தார். ஆனால் அவருடைய நம்பிக்கைகள் குலைந்தன, அதற்குள் ஸ்பானிய ஆய்வாளர்கள் அவ்விடத்தை கோஸ்டா ரிகா அல்லது ரிச் கோஸ்ட் (வளமுள்ள கரை) என்றழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாளடைவில், கோஸ்டா ரிகா ஸ்பெய்னிலிருந்து தனியே பிரிந்து அதன் சுதந்திரத்தை அடைந்தது. 1949-ல் சிறிய ஒரு உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நவீன சரித்திரத்தில் அந்நாடு தனிச்சிறப்பு பெற்றதாக ஆனது—இடைக்கால ஜனாதிபதியாகிய ஹோசே ஃபிகெரெஸ் என்பவர் இராணுவத்தை ரத்து செய்த ஒரு அரசமைப்புச் சட்டத்தை வரையறுத்தார். இந்தத் தீவிர நடவடிக்கை அமெரிக்கன் க்வேக்கர்ஸ் என்ற மதப்பிரிவைச் சேர்ந்த சிலரை கோஸ்டா ரிகாவிற்கு மாறிச்செல்லும்படி ஊக்குவித்தது; இங்கே அவர்கள் சான்டா எலேனா என்ற இடத்தில் பாலாடைக்கட்டி தொழிற்சாலை ஒன்றை அமைத்தனர். மத்திய அமெரிக்காவின் தொந்தரவு நிறைந்த நாடுகள் சிலவற்றின் சூழலில் கோஸ்டா ரிகா உண்மையில் சமாதானமுள்ள பாலைப்பசுந்திடலாக இருந்திருக்கிறது.
பல்வகை வித்தியாசங்கள் நிறைந்த நாடு
போயாஸ் மற்றும் ஆரெனால் எரிமலைகளை விஜயம்செய்ய நாட்டின் சிறிய பகுதியின் வழியாக பயணஞ்செய்கையில், செடிகளின் மற்றும் மரங்களின் பல்வகை வித்தியாசங்களாலும், வெப்பமண்டல பூக்களாலும் கறுப்பான வலைபோன்ற வேலியால் பாதுகாக்கப்பட்ட பூக்களின் பண்ணைகளாலும் விரிவான ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தாலும் நாங்கள் கவர்ந்திழுக்கப்பட்டோம். சாம்பிரீயா டெல் போப்ரெ (ஏழை நபரின் குடை) செடியின் பெரிய இலைகளுக்குப் பக்கத்தில் நாங்கள் குட்டையானவர்களாக உணர்ந்தோம். சிவந்த பழங்களோடு பச்சைப்பசேலென்று இருந்த காப்பி புதர்களால் மலைப்புறங்கள் மூடப்பட்டிருந்தன.
கோஸ்டா ரிகாவில் வண்ணத்துப்பூச்சிகள் எங்குமுள்ளன. சான் ஜோஸுக்கு அண்மையில், இரண்டு வண்ணத்துப்பூச்சி பண்ணைகள் உள்ளன; அங்கே அவற்றை பார்த்து இயற்கைச் சூழலில் வண்ணத்துப்பூச்சிகளை படம்பிடிக்க முடியும். “ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும் இருப்பதைக் காட்டிலும் இந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் அதிகமான வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன” என்று ஒரு துணைப்புத்தகம் சொல்கிறது. “உலகில் உள்ள இடங்களிலேயே கோஸ்டா ரிகா, உயிரியல்ரீதியில் பல்வேறு வகைகள் வாழும் நாடாக இருக்கிறது என்று இப்போது அறிவியல் நிபுணர்கள் அறிந்திருக்கின்றனர்” என்றும் அது சொல்கிறது. தாவரவியல் நிபுணர்களும் உயிரியல் நிபுணர்களும் இந்தக் கச்சிதமான கோஸ்டா ரிகாவில் உள்ள பல்வேறு வகைகளை ஆராய திரண்டு வருவதில் ஆச்சரியமேயில்லை.—இதோடு சேர்ந்து வரும் பெட்டியைப் பாருங்கள்.
காட்டிலுள்ள பல்வேறு வகைக்கான இன்னொரு உதாரணம் கோஸ்டா ரிகாவின் பறவை இனங்களாகும். சில பறவைகளைப் பார்ப்பதற்கு நீங்கள் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும், உடனடியாக போட்டோ பிடிப்பதற்கு அவற்றைவிட விரைவாய் செயல்பட வேண்டும்! எங்கே போனாலும் பச்சைக் கிளிகளின் கூட்டங்கள் சத்தம் போடுகின்றன. மேலே உயர பறப்பவை சோபிலோடெஸ் அல்லது கருப்பு பருந்துகளாகும்; தங்கள் அடுத்த உணவிற்காக ஊடுருவி நோக்கியவண்ணம் அவை தேடிக்கொண்டிருக்கின்றன. காட்டின் மேற்கட்டியில், விகாரத் தோற்றமுடைய பழம் தின்னும் அமெரிக்க வெப்பமண்டல பறவைகள் தங்கள் பெரிய அலகுகளோடு இருப்பதை நோட்டமிடலாம். மஞ்சள் தொடையுள்ள பாடும் பறவையும் மஞ்சள் மார்புள்ள கிஸ்கடீ என்ற ஈக்கள் தின்னும் பறவையும் மரங்களினூடே வேகமாய் பறப்பதை நாங்கள் பார்த்தோம். அருகாமையிலுள்ள பூக்கள்மீது தேன்குருவி ஒன்று தேனை ருசிக்க சுற்றி சுற்றி வருவதை வேகமாக நோட்டமிட்டோம். சோயாவெயில் (பறவைகாட்சி சாலை) எல்லா வகையான கோஸ்டா ரிகா பறவைகளையும் நாங்கள் கண்டு களித்தோம். அங்கே பலவண்ண, கரகரப்பான குரலுடைய மாகாவ் கிளிகள் அவை அங்கு இருப்பதை தெரியப்படுத்தின. அந்தோ, பார்ப்பதற்கு அதிக ஞானிகளைப்போல் தெரிகிற நான்கு ஆந்தைகள் அடங்கிய குடும்பம் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருப்பது உட்பட, மற்றப்பல பறவைகள் கூண்டுகளில் அடைக்கப்பட வேண்டியதாயிற்று.
கோஸ்டா ரிகா பல்வேறு வகைப்பட்ட தேசிய பூங்காக்களுக்கும் தனியார் பூங்காக்களுக்கும் இந்தியக் காப்புக் காடுகளுக்கும் காட்டுப் பிராணிகளின் சரணாலயங்களுக்கும் பெயர்பெற்றதாயிருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால், நாட்டின் கிட்டத்தட்ட 27 சதவீதம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இது உலகிலுள்ள எந்த நாட்டைக் காட்டிலும் மிக அதிகமான வீதமாக இருக்கிறது. ஆகவே நீங்கள் பயணஞ்செய்ய மனமுள்ளவர்களாயிருந்தால், நிலவகையின மற்றும் சுற்றுப்புற சூழல் அமைப்பை தெரிந்தெடுத்து பயணஞ்செய்யலாம்.
நீங்கள் கோஸ்டா ரிகாவிற்கு சென்றால், கவனிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு சிறிய எச்சரிப்பு உள்ளது. ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டு அங்கே சென்றால், உங்களுக்கு முன்பாக இருக்கிற அநேக ஓட்டுனர்கள் குடிபோதையிலிருக்கின்றனர் என்று நீங்கள் யோசித்தால் தவறில்லை. ஏன்? ஏனென்றால் எவ்வித முன்னெச்சரிப்புமின்றி அவர்கள் திடீரென வண்டியை வளைப்பார்கள், திருப்புவார்கள். அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? நாட்டின் சாலை அமைப்பை பீடித்திருக்கும் பெரிய பள்ளங்களைத் தவிர்க்க அவ்விதம் ஓட்டுகின்றனர். எனவே, பிரபலமான மான்டவெற்ட க்ளவுடு ஃபாரஸ்ட் ரிசர்வைப் பற்றி ஒரு சுற்றுப்பயண சிற்றேடு சொன்னது: “பயங்கரமான சாலை நிலைமைகளில் மணிக்கணக்காக அவதிப்படுவதன் மூலந்தான் [அதை] அடைய முடியும்; சீக்கிரமாக உள்ளே போய் திரும்பி வருவதற்கு மாறாக பல நாள் விஜயம் சிபாரிசு செய்யப்படுகிறது.’’ இருசுகளில் வாகனத்தின் மேற்பாகத்தைத் தாங்கும் ஸ்பிரிங் அமைப்பு முறையை நன்றாகவும் டயர்களை கடினமாகவும் வைத்திருக்கிற வாகனத்தில் நீங்கள் பயணஞ்செய்தால், இந்தக் குழிகளால் அதிகமாக பாதிக்கப்பட மாட்டீர்கள்.
உண்மையில், கோஸ்டா ரிகாவில் பார்ப்பதற்கும் கிரகிப்பதற்கும் அதிகம் இருப்பதால், அந்தக் கவர்ச்சிவாய்ந்த நிலத்தின் அழகையும் பல்வேறு வகைகளையும் இரண்டு வார விடுப்பு மேலோட்டமாக காணவே அனுமதிக்கும். ஒரு ஹோட்டல் ஒரு சிறு மிருகக்காட்சி சாலையில் ஒருசில உயிரினங்களைக் காட்சிக்காக வைத்திருந்தது. கூண்டுகளுக்குள் சென்று பழம் தின்னும் அமெரிக்க வெப்பமண்டல பறவையையும் நொசிவான அமெரிக்க காட்டுப் பூனையையும் போட்டோ பிடிக்க காவலாளி எங்களை தயவுடன் அனுமதித்தார். பல்வகை வித்தியாசங்கள் என்பது கோஸ்டா ரிகாவின் உபசரிக்கும் தன்மையுள்ள மக்களுக்கும் பொருந்துகிறது.
டீகோஸின் தனிச்சிறப்புவாய்ந்த கூட்டம்
டீகோஸ் என்பது என்ன? கோஸ்டா ரிகாவின் மக்களுக்கு கொடுக்கப்பட்ட யாவரறிந்த பெயர் அது. ஸ்பானிய மொழியில் சுருக்கமான ஈற்றசையாகிய -ஈகோவைப் பயன்படுத்தும் வழக்கத்திலிருந்து அது வருகிறது. உதாரணமாக, சிறியதற்கு சிக்கிடீகோ என்றும் அழகிற்கு போனிடீகோ என்றும் இளமைக்கு ஹோவென்சிடீகோ என்றும் இருக்கிறது. சார்ச்சீ என்ற நாட்டுப்புற பட்டணத்தில் உள்ள டீகோ கைவினைஞர்கள், அசலான, கையினால் வண்ணமடிக்கப்பட்ட காரேடாஸுக்கு அல்லது காளை இழுக்கும் வண்டிகளுக்கு பிரபலமாயிருக்கின்றனர். ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்த கலை வேலைப்பாடாகும். நூற்றுக்கணக்கில் சுற்றுலா பயணிகள் அதுபோன்றே தோற்றமளிக்கும் பொம்மை வண்டிகளை வாங்குகின்றனர்.
1994-ன் முடிவில், தங்கள் கத்தோலிக்க நாட்டில் டீகோ ஆட்கள் அதிவிசேஷமான ஏதோவொன்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய மதசம்பந்தமான மாநாட்டிற்கான தேதிகள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1, 1995 வரையாக இருந்தன; இந்த மாநாடு சான் ஜோஸிலிருக்கும் சாபானா பார்க்கில் தேசிய கால்பந்தாட்ட அரங்கில் நடைபெற்றது. டேமோர் பியாடோஸோ (தேவ பயம்) என்ற பைபிள் தலைப்பில் அது நிகழ்த்தப்பட்டது; சாட்சிகள் தேசமெங்குமிருந்து வந்தனர், சில பிரதிநிதிகள் பிற மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலுமிருந்து வந்தனர். கோஸ்டா ரிகாவில் 15,000-ற்கும் மேலான சுறுசுறுப்புள்ள சாட்சிகள் இருக்கின்றனர். இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை என்னவாயிருக்கும்? வெள்ளியன்று 21,726 பேர் வந்திருந்தனர்—இளைஞர், முதியவர், பெற்றோர், பிள்ளைகள் ஆகிய யாவரும் நேர்த்தியாகவும் அடக்க ஒடுக்கமாகவும் உடுத்திவந்திருந்தனர். சனியன்று கூட்டமானது 25,539-ற்கு அதிகரித்தது. களத்தின் ஒரு பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று பெரிய குளங்களில் 681 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். ஞாயிறு அன்று ஆஜரானவரின் எண்ணிக்கை 27,149-ஆக உயர்ந்தது! கோஸ்டா ரிகா பிராந்தியத்தை வீடுவீடாய் சென்று மிகவும் கடினமாக வேலைசெய்யும் மிஷனரிகள், பயனியர்கள் (முழுநேர சுவிசேஷகர்கள்), மனத்தாழ்மையுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு என்னே ஒரு கிளர்ச்சி! மேலும் பல குடும்பங்கள் வெயிலை தடுக்க தங்கள் பலவண்ண குடைகளின் கீழ் திறந்தவெளி அரங்கில் அமர்ந்திருந்ததை பார்ப்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாயிருந்தது!
அந்த நிகழ்ச்சிநிரல் முடிந்ததும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கைக்குட்டைகளை எடுத்து ஒருவருக்கொருவர் பிரியாவிடை சொல்லி அசைத்தனர். அது மனதை நெகிழவைக்கும் நேரமாயிருந்தது.
கோஸ்டா ரிகாவிற்கு கடவுளுடைய புதிய உலகம் தேவை
இந்த நாட்டில் பரதீஸை நினைவுபடுத்துவதற்கு—பல்வேறுபட்ட தாவரங்களும் மிருகங்களும் மேலும் அதன் இனிமையான தட்பவெப்ப நிலைமையும்—அதிகம் இருந்தாலுங்கூட, டீகோ ஆட்களுக்கு எந்தவொரு நாட்டிலுமுள்ள ஆட்களையும்போல, கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவா வாக்களித்திருக்கும் ‘புதிய வானங்களும் புதிய பூமிகளும்’ தேவைப்படுகிறது. (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4) உலகெங்கும் காணப்படுவதுபோல, ஏழ்மைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன, குடும்பங்கள் போதுமான வீட்டுவசதியில்லாதவையாக இருக்கின்றன. முழு மனிதவர்க்கத்தையும் தொல்லைபடுத்தும் நோயும் மரணமுங்கூட இருக்கின்றன. எனவேதான், யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியதிகாரத்தின் நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கித்து வருகின்றனர்; அந்த ராஜ்யத்திற்காகவே உண்மை மனமுள்ள எல்லா கிறிஸ்தவர்களும் பிரபலமான பரமண்டல ஜெபத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வாக்குப்பண்ணப்பட்ட அந்த நீதியான ஆட்சியின்கீழ், கோஸ்டா ரிகாவின் பல்வகை வித்தியாசங்கள், கடவுளுடைய நித்திய துதிக்காக இன்னும் பொலிவுடன் பிரகாசிக்கும்.
[பக்கம் 19-ன் பெட்டி]
கோஸ்டா ரிகாவின் நிறைவான வேறுபாடு
கோஸ்டா ரிகா—இயற்கை சேருமிடம் (ஆங்கிலம்) புத்தகம் சொல்கிறது: “கோஸ்டா ரிகாவில் அபரிமிதமான இனங்கள் உள்ளன. பூமியின் நிலப்பரப்பினுடைய மூவாயிரத்தில் ஒரு பகுதியைவிட [0.03 சதவீதம்] குறைவான அளவை உடைய இந்தச் சிறிய நாடு, இருக்கிற எல்லா செடியினங்களில் மற்றும் மிருக இனங்களில் 5 சதவீதத்திற்கு வாழ்விடமாக இருக்கிறது.” அங்கு, உதாரணமாக:
பழம் தின்னும் அமெரிக்க வெப்பமண்டல பறவைகள் மற்றும் மத்திய அமெரிக்க பறவைகள் உட்பட குறைந்தது 830 பறவை இனங்கள்
குறைந்தது 35,000 பூச்சியினங்கள்
குறைந்தது 9,000 செல்குழாய் நாளச் செடி இனங்கள்
அமெரிக்க காட்டுப் பூனைகள் உட்பட குறைந்தது 208 பாலூட்டும் உயிரினங்கள்
பெரிய உடும்புகள் உட்பட குறைந்தது 220 ஊரும் பிராணி இனங்கள்
நஞ்சுள்ள அம்பு தவளைகள் உட்பட குறைந்தது 160 நிலநீர்-வாழ் உயிரினங்கள்
குறைந்தது 130 நன்னீர்வாழ்-மீன் இனங்கள்
கோஸ்டா ரிகாவில் பத்து லட்சம் உயிரினங்கள் இருக்கக்கூடும் என்று சில அறிவியலாளர்கள் ஊகிக்கின்றனர்
[பக்கம் 19-ன் பெட்டி]
எரிமலைகள்
அணைந்துபோனவையும் எரிந்துகொண்டிருப்பவையும் சேர்த்து 112 எரிமலைவாய்கள் இருப்பதாக அறியப்பட்டிருக்கின்றன. 1,500 மீட்டருக்கும் மேலாக எழும்பும் மனதில் பதியத்தக்க ஆரெனால் எரிமலை உலகிலேயே மிக அதிகமாக செயல்படும் எரிமலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதை பார்ப்பதற்கு நீங்கள் விரும்பினால், பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் சிரமப்பட்டு பயணஞ்செய்வதற்கு முன்பாக நீங்கள் வானிலை அறிக்கையை பார்ப்பது நல்லது. ஆரெனால் அடிக்கடி மேகங்களால் மூடப்பட்டிருக்கிறது.
இரசூ எரிமலை 3,400 மீட்டருக்கு மேலாக எழும்புகிறது. 1963 முதல் 1965 வரை அது எரிந்துகொண்டிருந்தது.
போயாஸ் எரிமலை 2,700 மீட்டருக்கு மேலாக எழும்புவதாய், இரண்டு கண்களுடைய மலையாக இருக்கிறது—ஒன்று வெள்ளையாயும் எரிந்துகொண்டிருக்கும் எரிமலையாக இருக்கிறது, இன்னொன்று, செழிப்புள்ள காட்டினால் சூழப்பட்ட நீலநிற ஏரியாயிருக்கிறது.
[பக்கம் 17-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நிகரகுவா
பனாமா
கோஸ்டா மரிகா
ஆரெனால்
மான்டவெற்ட
போயாஸ்
சார்ச்சீ
சான் ஜோஸ்
கர்டேகோ
லிமொன்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
16-ம் பக்கம்:
பழம் தின்னும் அமெரிக்க வெப்பமண்டல பறவையும் ஆரெனால் எரிமலையும்
17-ம் பக்கம்:
1. போயாஸ் எரிமலை வாய்
2. மாகாவ் கிளி
3. கிராமிய நடனம்
4. பிரோமிலியடு
5. குடைச் செடி
6. உடும்பு
7. அமெரிக்க காட்டுப் பூனை
[பக்கம் 18-ன் படங்கள்]
சான் ஜோஸில் “தேவ பயம்” மாநாடு; 681 பேர் முழுக்காட்டப்பட்டனர், டிக்னா (வலது கோடியில்) உட்பட