வாழ்க்கை சரிதை
என்றும் என்னை யெகோவா காத்து வந்திருக்கிறார்
ஃபாரஸ்ட் லி சொன்னபடி
அப்போதுதான் எங்கள் கிராமஃபோன்களையும் பைபிள் பிரசுரங்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். எதிரிகள் இரண்டாம் உலகப் போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை சட்ட விரோதமானது என அறிவிக்கும்படி கனடாவின் புதிய கவர்னர் ஜெனரலை தூண்டிவிட்டனர். இது நடந்தது ஜூலை 4, 1940-ல்.
இதையெல்லாம் குறித்து கொஞ்சமும் பயப்படாமல் பிரசுர கிடங்கிலிருந்து நிறைய பிரசுரங்களை பெற்று, தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டு வந்தோம். “அத்தனை சுலபமாக நாம் நிறுத்திவிட முடியாது. பிரசங்கிக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே” என்று அன்று அப்பா சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. துருதுருப்பான எனக்கு அப்போது 10 வயது. ஊழியத்திடம் அப்பாவுக்கு இருந்த உறுதியும் வைராக்கியமும், நம் கடவுளாகிய யெகோவா தம்மிடம் பக்தியோடு இருக்கிறவர்களை எப்படி காத்து வருகிறார் என்பதை இன்றும் தொடர்ந்து நினைப்பூட்டி வருகின்றன.
அடுத்த முறை போலீஸார் எங்களை பிடித்தபோது, பிரசுரங்களைப் பறித்துக்கொண்டதோடு என் அப்பாவையும் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். இப்போது நான்கு பிள்ளைகளோடு அம்மா தனியாக இருக்க வேண்டிய நிலை. இந்த சமயத்தில், நாங்கள் சஸ்காட்செவானில் இருந்தோம். அது, செப்டம்பர், 1940. அதன் பிறகு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என்னுடைய மனசாட்சி இடங்கொடுக்காததால் கொடி வணக்கத்திலும் தேசியகீதத்திலும் கலந்துகொள்ளவில்லை. விளைவு? பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். அஞ்சல் வழி கல்வியில் என்னுடைய பள்ளி படிப்பைத் தொடர்ந்தேன். இதனால் பிரசங்கிப்பதில் இன்னும் அதிக நேரத்தை செலவழிக்க முடிந்தது.
1948-ல் பயனியர்கள் என அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களுக்கு, கனடாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஊழியம் செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆகவே பயனியர் ஊழியம் செய்வதற்காக ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்காடியா, கேப் உல்ஃப், பிரின்ஸ் எட்வார்டு தீவு ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அடுத்த வருடம், டோரன்டோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு வேலை செய்யும்படி வந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். அங்கு இரண்டு வாரங்கள் மட்டுமல்ல, ஆனால் ஆறு வருடங்களுக்கும் மேலாக பயனுள்ள சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக, என்னைப் போலவே யெகோவாவை நேசிக்கும் மெர்னியை சந்தித்தேன். 1955, டிசம்பர் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அண்டோராவிலுள்ள மில்டனில் குடியேறினோம். சீக்கிரத்தில் அங்கு ஒரு புதிய சபை உருவானது. எங்கள் வீட்டின் அடித்தளம் ராஜ்ய மன்றமாக மாறியது.
ஊழியத்தை அதிகரிக்க ஆசை
மூத்த மகள் மிரியாம், அதற்குப்பின் ஷார்மென், மார்க், ஆனட், கிரான்ட், கடைசியாக கிளென் என எங்களுக்கு அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள் பிறந்தனர். வேலை முடித்து வீடு திரும்புகையில் நான் அடிக்கடி காணும் காட்சி: பிள்ளைகள் எல்லாரும் குளிர்காயும் இடத்தைச் சுற்றி தரையில் உட்கார்ந்திருப்பார்கள், மெர்னி பைபிளிலிருந்து அவர்களுக்கு வாசித்துக் காண்பித்து, பைபிள் நிகழ்ச்சிகளை விவரித்துக் கொண்டிருப்பாள். இப்படித்தான் யெகோவாவிடம் உண்மையான அன்பை அவர்கள் இருதயங்களில் பதிய வைத்தாள். இதில் அவள் எனக்கு பக்க துணையாக இருந்ததால் சின்னஞ்சிறு வயதிலேயே எங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் போதுமான பைபிள் அறிவு இருந்தது.
ஊழியத்தில் அப்பாவுக்கிருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக்கொண்டது; அது என் மனதிலும் இருதயத்திலும் ஆழமாக வேர்விட்டு நிலைத்திருந்தது. (நீதிமொழிகள் 22:6) ஆகவே, 1968-ல் பிரசங்க வேலையில் உதவ யெகோவாவின் சாட்சிகள் குடும்பமாக மத்திப மற்றும் தென் அமெரிக்காவுக்கு செல்லும்படி அழைக்கப்பட்டபோது நாங்களும் செல்ல உடனடியாக தீர்மானித்தோம். அப்போது பிள்ளைகள் 5-13 வயதில் இருந்தனர். எங்கள் யாருக்கும் ஸ்பானிய மொழியில் ஒரு வார்த்தைக்கூட பேச தெரியாது. ஆகவே ஆலோசனையை ஏற்று நான் மட்டும் பல நாடுகளை முதலில் போய் பார்த்துவந்தேன். அங்கே நிலவும் வாழ்க்கை சூழலைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு சென்றேன். வீடு திரும்பியபின், குடும்பமாக ஜெபத்தோடு அதைக் குறித்து சிந்தித்தோம். முடிவில் நிகராகுவா செல்வது என தீர்மானித்தோம்.
நிகராகுவாவில் ஊழியம்
அக்டோபர் 1970-ல் எங்கள் புதிய வீட்டில் குடியேறினோம். மூன்றே வாரங்களில் சபை கூட்டத்தில் சிறிய பகுதியை கையாளும்படி நியமிப்பைப் பெற்றேன். எனக்கு தெரிந்த அரைகுறை ஸ்பானிய மொழியில் எப்படியோ கஷ்டப்பட்டு பேச்சை கொடுத்தேன்; பேச்சின் முடிவில், சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு செர்வஸாவுக்காக என் வீட்டுக்கு வரும்படி சபையார் அனைவரையும் அழைத்தேன். செர்வஸியோவுக்கு, அதாவது வெளி ஊழியத்திற்கு வரும்படி சொல்வதற்குப் பதிலாக செர்வஸாவுக்கு, அதாவது பீர் குடிப்பதற்கு வரும்படி தவறுதலாக சொல்லிவிட்டேன். அப்பப்பா, மொழியைக் கற்றுக்கொள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது!
ஆரம்ப காலத்தில் ஒரு பிரசங்கத்தை எழுதி வைத்துக்கொண்டு ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்குச் செல்லும்வரை படித்துப் பார்த்துப் பழகிக் கொள்வேன். “இந்தப் புத்தகத்தோடு இலவச வீட்டு பைபிள் படிப்பும் வரும்” என்று சொல்வேன். இப்படி புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர், நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை புரிந்துகொள்வதற்காகவே கூட்டங்களுக்கு வந்ததாக பின்பு ஒருநாள் என்னிடம் சொன்னார். பின்னர் அவர் யெகோவாவின் சாட்சியாக ஆனார். அப்போஸ்தலன் பவுலும் ஒப்புக்கொண்ட விதமாக, சத்தியத்தின் விதைகளை மனத்தாழ்மையுள்ள இருதயங்களில் வளரச் செய்கிறவர் கடவுளே என்பது எவ்வளவு தெள்ளத்தெளிவாக தெரிகிறது!—1 கொரிந்தியர் 3:7.
தலைநகராகிய மனாகுவாவில் சுமார் இரண்டு ஆண்டுகள் ஊழியம் செய்தோம். அதற்குப்பின் நிகராகுவாவின் தென் பகுதிக்கு எங்களைப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். அங்கே ரிவாஸ் சபையோடும் அக்கம்பக்கத்திலிருந்த மற்ற தொகுதிகளோடும் சேர்ந்து ஊழியம் செய்தோம். பாத்ரோ பான்யா என்ற வயதான உண்மையுள்ள சாட்சி இந்தத் தொகுதிகளுக்குப் போகையில் எங்களுடன் வருவார். ஒரு தொகுதி நிகராகுவா ஏரியிலுள்ள எரிமலை தீவில் அமைந்திருந்தது. அங்கு ஒரு குடும்பத்தினர் மட்டுமே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர்.
இந்தக் குடும்பத்தார் வசதியானவர்கள் அல்ல, இருந்தாலும் நாங்கள் சென்றபோது போற்றுதலோடு பெரும்பாடுபட்டு எங்களை கவனித்துக் கொண்டனர். மாலையில் அங்குபோய் சேருகையில் எங்களுக்கு உணவு தயாராக காத்திருந்தது. நாங்கள் ஒரு வாரம் தங்கினோம். பைபிளை நேசித்த அன்புள்ளம் படைத்த அக்கம்பக்கத்தில் இருந்த பலர் எங்களுக்கு உணவளித்து உபசரித்தனர். ஞாயிறு அன்று நடந்த பொதுப் பேச்சுக்கு 101 பேர் வந்திருந்ததைப் பார்த்தபோது நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
யெகோவா என்னை பலப்படுத்திக் காத்தது மற்றொரு சந்தர்ப்பத்திலும் மிகத் தெளிவாக தெரிந்தது. அது, கோஸ்டா ரிகாவின் எல்லைக்கருகே மலைகளில் வாழ்ந்து வந்த ஆர்வம் காட்டிய சிலரை நாங்கள் சந்திக்க சென்ற சமயம். நாங்கள் புறப்பட வேண்டிய நாளில் என்னை அழைத்துச் செல்ல பாத்ரோ வந்தார்; அப்போது நான் மலேரியா காய்ச்சலில் படுத்துவிட்டேன். “என்னால் வர முடியாது பாத்ரோ” என்று சொன்னேன். நெற்றியில் கையை வைத்துப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு காய்ச்சல் கொதிக்கிறது, ஆனாலும் நீங்கள் வந்துதான் ஆகணும். ஏனெனில் சகோதரர்கள் எல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள்” என்றார் அவர். அதற்குப் பின் மிகவும் உருக்கமாக ஜெபம் செய்தார்; அப்படிப்பட்ட ஒரு ஜெபத்தை நான் கேட்டதேயில்லை.
பின்னர், “நீங்கள் போய் ஜூஸ் வாங்கி குடியுங்கள். அதற்குள் பத்தே நிமிடத்தில் ரெடியாகிவிடுகிறேன்” என்று சொன்னேன். நாங்கள் சென்ற இடத்தில் சாட்சிகளின் இரண்டு குடும்பங்கள் இருந்தன. அவர்கள் எங்களிடம் அன்பு மழை பொழிந்து அருமையாய் கவனித்துக் கொண்டனர். மறுநாள் காய்ச்சலும் பலவீனமும் என்னை வாட்டியபோதிலும் அவர்களோடு ஊழியத்திற்குச் சென்றேன். ஞாயிறு நடைபெற்ற கூட்டத்துக்கு நூற்றுக்கும் அதிகமானோர் வந்திருந்ததைப் பார்த்து மிகுந்த தெம்படைந்தோம்!
மீண்டும் பயணம்
1975-ல் எங்கள் ஏழாவது மகன் கடைக்குட்டி வான் பிறந்தான். அதற்கு அடுத்த வருடம் ஏற்பட்ட பண கஷ்டத்தால் நாங்கள் கனடாவிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. நிகராகுவாவை விட்டு வருவது எங்களுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, ஏனென்றால் அங்கே இருந்த காலமெல்லாம் யெகோவா எங்களை கண்ணுக்குள் வைத்து காத்து வந்ததை உண்மையிலேயே உணர முடிந்தது. அந்த இடத்திலிருந்து நாங்கள் புறப்படுகையில் எங்கள் சபை பிராந்தியத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சபை கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருந்தனர்.
மகள் மிரியாமும் நானும் நிகராகுவாவில் விசேஷித்த பயனியர்களாக நியமிக்கப்பட்ட போது அவள் என்னிடம், “நீங்க ஒருவேளை கனடாவுக்குத் திரும்பி போக வேண்டியிருந்தால் நான் இங்கேயே இருக்க சம்மதிப்பீங்களா?” என கேட்டாள். எனக்கே நிகராகுவாவை விட்டு போகும் எண்ணமில்லாதிருந்ததால், “கட்டாயம் சம்மதிப்பேன்” என்று சொல்லியிருந்தேன். ஆகவே நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட போது மிரியாம் தன் முழுநேர ஊழியத்தைத் தொடர அங்கேயே இருந்துவிட்டாள். பின்னர் ஆண்ரூ ரீட் என்பவரை மணந்தாள். 1984-ல், நியூ யார்க், புரூக்ளினில் அப்போது மிஷனரிகளுக்கு நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய கிலியட் பள்ளியின் 77-வது வகுப்பில் அவர்கள் கலந்துகொண்டனர். மிரியாமும் அவளுடைய கணவனும் இப்போது டொமினிகன் குடியரசில் சேவை செய்து வருகின்றனர். இப்படியாக, நிகராகுவாவில் இருந்த அருமையான மிஷனரிகள் அவளுக்குள் ஊட்டி வளர்ந்திருந்த ஆசை நனவானது.
இதற்கிடையில், “அத்தனை சுலபமாக நாம் நிறுத்திவிட முடியாது” என்ற என் அப்பாவின் வார்த்தைகள் இன்னும் என்னுடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆகவே 1981-ல் மத்திப அமெரிக்காவுக்கு திரும்புவதற்கு போதுமான பணத்தை சேமித்தப்பின், மறுபடியும் வேறு இடத்திற்கு மாறினோம். இந்தத் தடவை கோஸ்டா ரிகாவுக்கு சென்றோம். அங்கே ஊழியம் செய்கையில் புதிய கிளை அலுவலக கட்டுமான பணியில் உதவுவதற்கு அழைப்பைப் பெற்றோம். ஆனால் 1985-ல் எங்கள் மகன் கிரான்டுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் நாங்கள் கனடாவுக்குத் திரும்பினோம். கிளை அலுவலக கட்டுமான பணியில் உதவுவதற்கு கோஸ்டா ரிகாவிலேயே கிளென் தங்கிவிட்டான். ஆனட்டும் ஷார்மெனும் விசேஷித்த பயனியர்களாக சேவை செய்தனர். கோஸ்டா ரிகாவிலிருந்து புறப்படுகையில் மீண்டும் அங்கு திரும்பமாட்டோம் என கனவிலும் நினைக்கவில்லை.
துன்பத்தை சமாளித்தல்
1993, செப்டம்பர் 17-ம் தேதி காலை வேளையில் வெயில் சுரீரென்று அடித்துக்கொண்டிருந்தது. நானும் மூத்த மகன் மார்க்குவும் கூரை வேய்ந்துகொண்டிருந்தோம். வழக்கம் போல அருகருகே அமர்ந்து ஆன்மீக விஷயங்களைப் பேசிக்கொண்டே பணியில் மூழ்கியிருந்தோம். திடீரென்று நான் தடுமாறி கூரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். எனக்கு நினைவு திரும்பியபோது என்னைச் சுற்றிலும் பிரகாசமான ஒளியும் வெள்ளை உடையில் ஆட்களும் இருப்பதைக் கண்டேன். அது அவசர சிகிச்சை பிரிவு அறை.
இரத்தத்தைப் பற்றிய பைபிளின் கருத்தை அறிந்திருப்பதால் கண்ணைத் திறந்தவுடன் “இரத்தம் வேண்டாம், இரத்தம் வேண்டாம்” என புலம்ப ஆரம்பித்தேன். (அப்போஸ்தலர் 15:28, 29) “சரிங்கப்பா, நாங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம்” என்று ஷார்மென் சொன்னபோதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. டாக்டர்கள் ஏற்கெனவே என்னுடைய மருத்துவ கோரிக்கை அட்டையைப் பார்த்திருந்தனர். ஆகவே இரத்தம் பிரச்சினையாகவே இருக்கவில்லை என்பது எனக்குப் பின்னர்தான் தெரிந்தது. என் கழுத்து எலும்பு முறிந்ததால் முழுவதும் செயலிழந்து கிடந்தேன். என்னால் சுயமாக சுவாசிக்கக்கூட முடியவில்லை.
துளியும் நகர முடியாமல்போன அச்சமயத்தில் யெகோவாவின் காக்கும் கரங்களின் அரவணைப்பு எனக்கு இன்னும் அதிகம் தேவைப்பட்டது. ட்ராகியோடமி (tracheotomy) அறுவை சிகிச்சை செய்து ரெஸ்பிரேட்டர் டியூப் பொருத்தப்பட்டதால் என் குரல் நாண்களுக்குள் காற்றுப்புக முடியாமல் போனது. எனவே என்னால் பேச முடியவில்லை. என் உதட்டு அசைவை வைத்து நான் சொல்ல வந்ததை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.
பணம் தண்ணீராய் செலவழிந்தது. என்னுடைய மனைவியும் பிள்ளைகளில் பலரும் முழுநேர ஊழியத்தில் இருந்ததால், செலவுகளைச் சமாளிப்பதற்கு இவர்கள் எங்கே ஊழியத்தை விட்டுவிட வேண்டிய நிலைமை வருமோ என பயந்தேன். ஆனால் மார்க்குவுக்கு ஒரு வேலை கிடைத்தது, இதனால் மூன்றே மாதங்களில் இதற்குச் செலவழித்ததில் பெருந்தொகையை ஈடுகட்ட முடிந்தது. இப்படியாக என்னையும் என் மனைவியையும் தவிர மற்ற எல்லாரும் முழுநேர ஊழியத்தை தொடர முடிந்தது.
ஆறு நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான கார்டுகளும் கடிதங்களும் மருத்துவமனையில் என் அறையின் சுவர்களை அலங்கரித்தன. உண்மையிலேயே யெகோவா என்னைக் காத்து வந்தார். சபையிலுள்ளவர்களும் உதவினார்கள்; ஐந்தரை மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் நான் வைக்கப்பட்டிருந்தபோது என் குடும்பத்தாருக்கு அவர்கள்தான் உணவு அளித்து பார்த்துக்கொண்டனர். ஒவ்வொரு நாள் மதியமும் ஒரு மூப்பர் என்னோடு இருந்தார். பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் எனக்கு வாசித்துக் காண்பித்தார், உற்சாகமூட்டும் அனுபவங்களையும் சொன்னார். எங்கள் குடும்பத்தில் இரண்டு பேர் என்னோடு சேர்ந்து ஒவ்வொரு கூட்டத்திற்கும் தயாரித்தனர். ஆகவே அத்தியாவசியமான ஆன்மீக உணவு எனக்கு ஒருபோதும் கிடைக்காமல் போகவில்லை.
மருத்துவமனையில் இருக்கும்போது விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரலில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நர்ஸும் ரெஸ்பிரேட்டரி டெக்னீஷியனும் நாள் முழுவதும் என்னோடு இருக்க மருத்துவமனையும் வசதி செய்து கொடுத்தது. அதனால் மீண்டும் என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு மாநாட்டில் கூடிவந்தபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை! வரிசையாக நூற்றுக்கணக்கில் சகோதரர்கள் என்னிடம் பேச காத்துக்கிடந்த அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது.
ஆன்மீகத்தைக் காத்தல்
விபத்திற்கு சுமார் ஒரு வருடத்துக்குப் பின்பு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டேன். ஆனால் இப்போதுவரை 24 மணிநேரமும் என்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும். விசேஷ வசதிகள் செய்யப்பட்ட ஒரு வேனில் கூட்டங்களுக்குச் செல்வேன், இந்தக் கூட்டங்களை நான் தவறவிடுவதே இல்லை. ஆனால் இதற்கு அதிக மன உறுதி தேவை என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். வீடு திரும்பியது முதல் எல்லா மாவட்ட மாநாடுகளுக்கும் என்னால் போக முடிந்திருக்கிறது.
கடைசியாக, 1997-ல், பிப்ரவரி மாதம் முதற்கொண்டு மீண்டும் என்னால் ஓரளவு பேச முடிந்திருக்கிறது. பைபிள் சார்ந்த என் நம்பிக்கைகளைக் குறித்து நர்ஸுகளிடம் பேசுகையில் சிலர் மிகவும் ஆவலாக கேட்டனர். ஒரு நர்ஸ் யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகம் முழுவதையும் மற்ற உவாட்ச் டவர் பிரசுரங்களையும் எனக்கு வாசித்துக் காண்பித்திருக்கிறாள். ஒரு கோலை வைத்து கம்ப்யூட்டரில் டைப் செய்து கடிதங்கள் எழுதி சாட்சிகொடுக்கிறேன். இது அதிக கஷ்டமானதாக இருந்தாலும் ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட மிகவும் உதவியாயுள்ளது.
நரம்பு வலியில் நான் துடிப்பேன், ஆனால் மற்றவர்களிடம் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது அல்லது பைபிள் சம்பந்தமானவற்றை யாராவது எனக்கு வாசித்துக் காண்பிக்கும்போது வலியின் பிடி தளர்வது போல இருக்கும். அவ்வப்போது என் அருமை மனைவியோடு தெரு ஊழியம் செய்வேன்; எனக்கு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் என் சார்பில் பேசி பக்கபலமாக இருப்பாள். பல தடவை துணைப் பயனியர் ஊழியம் செய்திருக்கிறேன். கிறிஸ்தவ மூப்பராக சேவை செய்வது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, கூட்டங்களில் அல்லது வீட்டில் என்னைத் தேடிவரும் சகோதரர்களுக்கு உதவியும் உற்சாகமும் அளிக்கையில் எனக்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நொடியில் சோர்வு நம்மை தழுவலாம் என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி சோர்வு ஏற்படுகையில் உடனடியாக சந்தோஷம் பெற ஜெபிப்பேன். யெகோவா தொடர்ந்து என்னைக் காத்தருள இராப் பகலாக ஜெபிப்பேன். யாராவது என்னை வந்து பார்த்தாலோ அல்லது எனக்கு கடிதம் எழுதினாலோ உடனடியாக எங்கிருந்தோ வந்து உற்சாகம் என்னை தொற்றிக்கொள்ளும். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதும் இதமளிக்கும் எண்ணங்களால் என் மனதை நிரப்பிக் கொள்ள உதவுகிறது. சில சமயங்களில் இந்தப் பத்திரிகைகளை வெவ்வேறு நர்ஸுகள் வாசித்துக் காண்பிப்பார்கள். நான் விபத்துக்குள்ளானதில் இருந்து இதுவரை முழு பைபிளையும் டேப்பில் ஏழு தடவை கேட்டுவிட்டேன். யெகோவா இப்படி பல விதங்களில் என்னைக் காத்து வந்திருக்கிறார்.—சங்கீதம் 41:3.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா ஜீவனுக்கான வழியில் எவ்வாறு நமக்குப் போதிக்கிறார் என்பதை தியானிக்க எனக்கு அதிக நேரத்தை அளித்திருக்கிறது. அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் பற்றிய திருத்தமான அறிவை, பயனளிக்கும் ஊழியத்தை, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்திற்கு ஆலோசனையை, கஷ்ட காலங்களில் செயல்படுவதற்கான பகுத்துணர்வை அவர் நமக்கு தருகிறார். தங்கமான மனைவியை தந்தும் யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார். என் பிள்ளைகளும்கூட எப்போதும் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் முழுநேர ஊழியத்திற்கு பங்களித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மார்ச் 11, 2000-ல் எங்கள் மகன் மார்க்கும் அவன் மனைவி ஆலிசனும் 108-வது கிலியட் வகுப்பிலிருந்து பட்டம் பெற்ற பின்பு ஊழியம் செய்ய நிகராகுவாவுக்கு அனுப்பப்பட்டனர். பட்டமளிப்பு விழாவுக்கு நானும் என் மனைவியும் சென்றிருந்தோம். உண்மையில், கஷ்டங்கள் என்னுடைய வாழ்க்கையை மாற்றியிருந்தாலும் என் இருதயத்தை துளியும் மாற்றவே இல்லை.—சங்கீதம் 127:4, 5.
எனக்குக் கிடைத்த ஆவிக்குரிய ஆஸ்தியை என் குடும்பத்துக்கு கொடுக்கும் ஞானத்தை யெகோவா எனக்குத் தந்ததற்காக அவருக்கு நன்றி. “அத்தனை சுலபமாக நாம் நிறுத்திவிட முடியாது. பிரசங்கிக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே” என்று சொன்ன அப்பாவின் அதே மனப்பான்மையோடு படைப்பாளரை என் பிள்ளைகள் சேவிப்பதைக் காண்கையில் அது என்னைப் பெரிதும் பலப்படுத்தி, உற்சாகத்தை அளிக்கிறது. ஆம், யெகோவாவே என்னையும் என் குடும்பத்தையும் வாழ்நாள் முழுக்க காத்து வந்திருக்கிறார்.
[பக்கம் 24-ன் படம்]
பயனியர் ஊழியத்திற்கு நாங்கள் பயன்படுத்திய நடமாடும்-வீட்டுக்கு அருகில் என் அப்பா, அண்ணன்கள், அக்காவுடன். வலக்கோடியில் நான்
[பக்கம் 26-ன் படம்]
என் மனைவி மெர்னியுடன்
[பக்கம் 26-ன் படம்]
எங்கள் சமீபத்திய குடும்ப படம்
[பக்கம் 27-ன் படம்]
இன்னும் கடிதங்களின் வாயிலாக சாட்சி கொடுக்கிறேன்