என் பெற்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல்
ஹில்ட பஜெட் சொன்னபடி
“மகா உன்னதமானவரின் சேவைக்காக என் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது; என்னால் இரண்டு எஜமான்களை சேவிக்க முடியாது,” என்பதாக அந்தச் செய்தி அறிக்கை வாசித்தது. இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் தொழிலாளர் அமைச்சகத்திடமாகவும் தேசிய சேவை அதிகாரிகளிடமும், 1941-ல் அவர்களால் வழங்கப்பட்ட கட்டாய மருத்துவ வேலையைச் செய்ய மறுப்புத் தெரிவித்து நான் கூறிய பதில் கூற்றிலுள்ள வார்த்தைகள் அவை. அதற்குப்பின் சிறிது காலத்தில், என் மறுப்பிற்காகக் குற்றவாளியென தீர்க்கப்பட்டு, மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டேன்.
இந்த இக்கட்டான நிலைக்கு என்னைக் கொண்டுவந்தது எது? ஏதோவொரு இளம்பருவ தற்போக்கெண்ணமோ கலகத்தனமான நடத்தையோ இதற்குக் காரணமாக இருக்கவில்லை. மாறாக, அதற்குரிய காரணங்கள் நான் ஒரு குழந்தையாகவே இருந்த அந்தக் காலம் வரையாகச் செல்கின்றன.
ராஜ்யத்திற்காக அப்பாவின் வைராக்கியம்
வட இங்கிலாந்தில், லீட்ஸுக்கு அருகிலுள்ள ஹார்ஸ்ஃபர்த்தில் நான் ஜூன் 5, 1914 அன்று பிறந்தேன். என் பெற்றோராகிய அட்கன்ஸன் மற்றும் பாற்றி பஜெட், ஸன்டே ஸ்கூல் டீச்சர்களாகவும், என் அப்பா ஆர்கன் இசைக்கருவியை வாசித்த பிரிமிட்டிவ் மெத்தடிஸ்ட் சேப்பலின் பாடகர் குழு அங்கத்தினர்களாகவும் இருந்தனர். நான் ஒரு குழந்தையாக இருந்தபோது, ஒரு காரியத்தைத் தவிர, மற்றபடி எங்கள் குடும்பம் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. உலக நிலைமைகள் அப்பாவைக் கவலைகொள்ளச் செய்தது. அவர் போரையும் வன்முறையையும் வெறுத்தார்; “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற பைபிள் கட்டளையை நம்பினார்.—யாத்திராகமம் 20:13.
1915-ல் எல்லா இளைஞர்களும் மனமுவந்து படையில் சேரும்படியும், அதனால் கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்கும்படியும் அரசாங்கம் உந்துவித்தது. ஏதோ சந்தேகத்தின் காரணமாக, அப்பா தன்னுடைய பெயர் ஒரு படைவீரனாக பதிவுசெய்யப்படும்படி தன் முறைக்காக அந்த நாள் முழுவதும் மழையில் நின்று காத்திருந்தார். அதற்கு அடுத்த நாளே, அவருடைய முழு வாழ்க்கையும் மாறியது!
ஒரு பெரிய வீட்டில் குழாய்ப் பணிகளைச் செய்துகொண்டிருக்கையில், உலக நிலைமைகளைக் குறித்து மற்ற பணியாளர்களிடம் பேசினார். அங்கு தோட்டவேலை செய்பவர் கர்த்தரின் விலையுயர்ந்த மணிகளைக் கூட்டிச்சேர்த்தல் என்ற ஆங்கில துண்டுப்பிரதியை அவரிடம் கொடுத்தார். அப்பா அதை வீட்டுக்கு எடுத்துச்சென்று, மறுபடியும் மறுபடியுமாக வாசித்தார். “அதுதான் சத்தியம் என்றால், மற்றவை அனைத்தும் தவறு” என்று அவர் சொன்னார். அடுத்த நாள், அவர் அதிகப்படியான தகவலைக் கேட்டார்; மூன்று வாரங்களாக விடியற்காலை வரையிலுமாக அவர் பைபிளைப் படித்தார். தான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதை அவர் அறிந்தார்! ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 2, 1916 அன்று அவருடைய நாட்குறிப்பேடு இவ்வாறு சொல்கிறது: “காலையில் சேப்பலுக்குச் சென்றேன், இரவு I.B.S.A.-க்குச் [யெகோவாவின் சாட்சிகள் அப்போது இங்கிலாந்தில் அறியப்பட்ட (International Bible Students Association) சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் சங்கத்துக்கு] சென்றேன்—எபிரெயர் 6:9-20-ஐ படித்துக்கொண்டிருக்கிறேன்—நான் சகோதரர்களைச் சந்திக்கச் சென்ற முதல் முறை.”
எதிர்ப்பு சீக்கிரமாக வந்தது. உறவினர்களும் சர்ச் கூட்டாளிகளும் அப்பாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்தார்கள். ஆனால் அவர் தன் தீர்மானத்தைச் செய்துவிட்டார். கூட்டங்களும் படிப்புமே அவருடைய வாழ்க்கையில் முக்கிய பாகத்தை வகித்தன; மார்ச் மாதத்திற்குள் யெகோவாவுக்கான தன் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக அடையாளப்படுத்தினார். ஒருசில வாரங்களுக்கு அப்பா தனியாகக் கூட்டங்களுக்குச் சென்றபின், அம்மாவால் இனியும் அங்கு செல்லாமல் இருக்க முடியவில்லை. குழந்தையைக் கொண்டுசெல்லும் வண்டியில் என்னை வைத்து, லீட்ஸ் வரையாக எட்டு கிலோமீட்டர் நடந்து, கூட்டம் முடியும் நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பாவின் சந்தோஷத்தை எண்ணிப் பார்க்கவேண்டும். அப்போதிருந்து, எங்கள் குடும்பம் யெகோவாவின் சேவையில் ஒன்றுபட்டு இருந்தது.
அப்பாவின் நிலைமை மிகக் கடினமானதாக இருந்தது—படைத்துறையில் ஒரு தொண்டராக இருந்து, அதற்குப்பின் ஒருசில வாரங்களுக்குள், மனச்சாட்சியினிமித்தம் படைத்துறைப் பணியை மறுப்பவராகவும் இருந்தார். அவர் வரவழைக்கப்பட்டபோது, ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்த மறுத்தார்; படைத்துறை நீதிமன்றத்தில் ஐந்து விசாரணைகளில் முதலாவதை ஜூலை 1916-க்குள்ளாக எதிர்ப்பட்டு, 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். முதல் தீர்ப்பை நிறைவேற்றிய பிறகு, அப்பாவுக்கு இரண்டு வார அதிகாரப்பூர்வ விடுப்பு வழங்கப்பட்டது; மற்றொரு படைத்துறை நீதிமன்ற விசாரணையும், இன்னும் 90 நாள் சிறையிருப்பும் அதைத் தொடர்ந்தது. இரண்டாவது முறை சிறையிருப்பின் காலப்பகுதி முடிவடைந்தபின், அவர் ராயல் ஆர்மி மருத்துவ படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்; பிப்ரவரி 12, 1917 அன்று, துருப்புகளின் கப்பலில் பிரான்ஸிலுள்ள ரூயானுக்குப் பயணப்பட்டார். அங்கு ஒவ்வொரு நாளும் தன்னுடைய நிலையைக் குறித்து அதிக வெறுப்புணர்ச்சி உள்ளவரானார் என்று அவருடைய நாட்குறிப்பேடு தெரிவிக்கிறது. காயப்பட்ட படைவீரர்கள் மீண்டும் போய் போரிடுவதற்காகவே அவர்களை கவனிக்கிறார் என்பதை உணர்ந்தார்.
மீண்டும் அவர் ஒத்துழைக்க மறுத்தார். இந்த முறை படைத்துறை நீதிமன்ற விசாரணை அவருக்கு பிரிட்டிஷ் ராணுவ சிறையில் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்தது. மனச்சாட்சியினிமித்தம் படைத்துறைப் பணியை மறுப்பவராக பொதுச் சிறைக்கு மாற்றப்படும்படி அப்பா கேட்டுக்கொண்டே இருந்தபோது, அவர் மூன்று மாதங்களுக்கு ரொட்டி மற்றும் தண்ணீரில் பிழைக்கும்படி தண்டிக்கப்பட்டு, பின்னர் அவருடைய எடை அதிகரிக்கும் வரையாக ஒழுங்கான சிறை உணவு அளிக்கப்பட்டார்; பின்னர் மீண்டுமாக அதேவிதமாகச் செய்யப்பட்டது. அவருடைய கைகள் பகலில் முதுகிற்குப் பின்னால் வைக்கப்பட்டும், இரவிலும் சாப்பாட்டு வேளைகளிலும் முன்னால் வைக்கப்பட்டும் விலங்கிடப்பட்டிருந்தன. அவருடைய வாழ்நாள் முழுவதும், மணிக்கட்டில் தழும்புகளைக் கொண்டிருந்தார்; மிகவும் சிறியதாக இருந்த கைவிலங்குகள் அவருடைய சதைக்குள் செருகிப்பிடிக்கும்படி பொருத்தப்பட்டிருந்ததால், சீழ்க்கட்டும் புண்களில் விளைவடைந்தது. இடுப்புடன் சேர்த்திணைக்கப்பட்ட கால் விலங்குகளும் அவருக்குப் போடப்பட்டிருந்தன.
அவருடைய மனதிடத்தைக் கெடுப்பதற்கு அந்தப் படைத்துறை அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள்; ஆனால் அவற்றால் எந்தப் பயனும் இருக்கவில்லை. அவருடைய பைபிளும் புத்தகங்களும் அவரிடமிருந்து எடுக்கப்பட்டன. அவருக்கு வீட்டிலிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை, அவராலும் அனுப்பமுடியவில்லை. இரண்டு வருடங்களுக்குப்பின் அவர் தன்னுடைய உண்மையான நிலையை உண்ணாவிரதத்தின் மூலமாக வெளிக்காட்ட தீர்மானித்தார். ஏழு நாட்களுக்கு அவர் தன் தீர்மானத்தைக் காத்துக்கொண்டார்; உண்ணவும் இல்லை குடிக்கவும் இல்லை; மிகவும் உடல்நலமின்றி சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படும் நிலையில் இது விளைவடைந்தது. அதன் விளைவாக, தன் உயிரை இழக்கப்போகும் நிலையில் இருந்தபோதிலும், தான் உண்மையாக இருந்ததை அவர் நிரூபித்தார். தன் உயிரை இவ்விதமாக ஆபத்திற்குள்ளாக்கியது தவறு என்றும் இனி ஒருபோதும் அப்படிப்பட்ட வழியை மேற்கொள்ளமாட்டார் என்றும் பிற்பட்ட வருடங்களில் ஒத்துக்கொண்டார்.
நவம்பர் 1918-ல் போர் முடிந்தது; அப்பா இன்னும் ரூயான் சிறையில் இருந்தார்; ஆனால் அடுத்த வருட தொடக்கத்தில், அவர் இங்கிலாந்திலுள்ள பொதுச் சிறை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அருமையான பைபிள் மற்றும் புத்தகங்களோடுகூட அங்கு வந்து சேர்ந்திருந்த அம்மாவின் எல்லா கடிதங்களையும் பார்ஸல்களையும் பெறுவதில் அவருக்கிருந்த சந்தோஷத்தைக் கற்பனைசெய்து பாருங்கள்! அவர் வின்செஸ்டர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்; அங்கு தன்னையொத்த போர்க்கால அனுபவங்களைக் கொண்டிருந்த ஒரு இளம் சகோதரரைச் சந்தித்தார். அவருடைய பெயர் ஃப்ராங்க் ப்ளாட்; அவர் பின்னர் லண்டன் பெத்தேலில் பல வருடங்கள் சேவை செய்தார். அவர்கள் அடுத்த நாள் சந்திக்கும்படி ஏற்பாடுகளைச் செய்தனர், ஆனால் அதற்குள் ஃப்ராங்க் வேறெங்கோ மாற்றப்பட்டுவிட்டார்.
ஏப்ரல் 12, 1919 அன்று அம்மாவுக்கு ஒரு தந்தி வந்தது: “அல்லேலூயா! வீட்டுக்கு வருகிறேன்—லண்டன் பெத்தேலுக்கு ஃபோன் செய்து பேசுவேன்.” மூன்று வருட சோதனை, பரீட்சை, மற்றும் பிரிவுக்குப் பின் என்னே ஓர் ஆனந்த நேரம்! தொலைபேசியில் அழைத்துவிட்டு, லண்டன் பெத்தேலில் உள்ள சகோதரர்களைச் சந்திப்பதே அப்பாவின் முதல் எண்ணமாக இருந்தது. 34 க்ரேவன் டெரஸில் அவர் அன்பான வரவேற்பைப் பெற்றார். குளித்து, சவரம் செய்தபின், கடன்வாங்கிய ஸூட்டுடனும் தொப்பியுடனும் அப்பா வீடு திரும்பினார். நாங்கள் மீண்டும் ஒன்றுகூடியதை உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா? அப்போது எனக்கு ஐந்து வயது, அவரை எனக்கு ஞாபகம் இல்லை.
அப்பா தன் விடுவிப்பிற்குப் பின் ஆஜராகிய முதல் கூட்டம், நினைவு ஆசரிப்பாக இருந்தது. மன்றத்தின் படியேறிச் சென்றதும், அவர் பார்த்த முதல் ஆள் யாரென்றால், லீட்ஸிலுள்ள ராணுவ மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட சகோதரராகிய ஃப்ராங்க் ப்ளாட். தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்! அப்போதிருந்து அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரையாக எங்கள் வீடு அவருடைய வீட்டைப் போன்றே அவருக்கு இருந்தது.
அம்மாவின் உண்மையான சேவை
அப்பா இல்லாத இந்தக் காலத்தின்போது, அரசாங்கத்திலிருந்து வரும் குறைந்த வருவாயைக் கூட்டுவதற்கு அம்மா மற்றவர்களுக்குத் துணி துவைத்து சமாளித்தார்கள். சகோதரர்கள் எங்களிடம் மிகவும் தயவாக நடந்துகொண்டார்கள். ஒவ்வொரு வாரங்களிலும் சபை மூப்பர்களில் ஒருவர், பெயர் குறிப்பிடப்படாத, நன்கொடையை உடைய சிறிய உறை ஒன்றை அவர்கள் கையில் ஒப்படைத்தார். சகோதரர்களின் அன்புதான் தன்னை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்தது என்றும் அந்தச் சோதனையான காலங்களைச் சகித்திருக்க உதவியது என்றும் அம்மா எப்போதும் சொன்னார்கள். அப்பா இல்லாத சமயம் முழுவதும், அம்மா உண்மையாகச் சபைக் கூட்டங்களுக்குச் சென்றுவந்தார்கள். ஒரு வருடத்திற்கு மேலாக அப்பா உயிரோடிருக்கிறாரா இல்லையா என்று அறியாமல் இருந்ததுதான், அம்மாவுக்கு மிகக் கடுமையான சோதனையாக இருந்தது. கூடுதலான பாரமாக, 1918-ல் அம்மாவுக்கும் எனக்கும் ஸ்பானிய சளிக்காய்ச்சல் வந்தது. எங்களைச் சுற்றிலும் மக்கள் இறந்துகொண்டிருந்தார்கள். அயலாருக்கு உதவிசெய்ய சென்ற அயலார் அந்த நோயால் பீடிக்கப்பட்டு இறந்தனர். அப்போதிருந்த உணவு பற்றாக்குறைகள், மக்களின் நோய்த்தொற்று எதிர்ப்பாற்றலைக் குறைக்க ஏதுவாக இருந்ததில் சந்தேகமேதுமில்லை.
அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் உண்மையாக நிரூபித்தது: “தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக”! (1 பேதுரு 5:10) என் பெற்றோர் அனுபவித்த துன்பம், அவர்களுக்குள் யெகோவாவிடமாக ஓர் அசைக்கமுடியாத விசுவாசத்தை, அவர் நிச்சயமாக நம்மைக் கவனிக்கிறார் என்றும் கடவுளிடமுள்ள அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்றும் ஓர் முழுமையான உறுதியை வளர்த்தது. விசுவாசத்தில் அப்படியொரு வளர்ப்புமுறையைக் கொண்டிருந்ததில் நான் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டேன்.—ரோமர் 8:38, 39; 1 பேதுரு 5:7.
இளமைப்பருவ சேவை
அப்பாவின் விடுவிப்பைத் தொடர்ந்து, ராஜ்ய சேவை எங்கள் வாழ்வில் முக்கிய பாகத்தை வகித்தது. நோயுற்றிருந்தாலொழிய ஒரு கூட்டத்தையாவது தவறவிட்டதாக எனக்கு நினைவில்லை. அப்பா வீடு திரும்பி சிறிது காலத்தில், ஒரு மாநாட்டுக்குச் செல்வதற்கான பணத்தைப் பெற, தன்னுடைய ப்ளேட் காமராவையும் அம்மா தன் தங்கக்காப்பையும் விற்றார்கள். எங்களால் விடுமுறைகளுக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், லண்டனில் உள்ளவை உட்பட இதுபோன்ற கூட்டங்களை நாங்கள் ஒருபோதும் தவறவிடவில்லை.
போருக்குப் பின்னான முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் புத்துணர்வளிக்கும் வருடங்களாக இருந்தன. கூட்டுறவுகொள்வதற்கும் பழகுவதற்குமான எல்லா வாய்ப்புகளையும் அப்பாவும் அம்மாவும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நாங்கள் எப்படி மற்ற சகோதர சகோதரிகளைச் சந்திக்கச் செல்வோம் என்றும், என்னைவிட பெரியவர்கள் சத்தியத்தைப் பற்றிய புதிய புரிந்துகொள்ளுதல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கையில் நான் ஒரு சிறுமியாக, வண்ணந்தீட்டிக்கொண்டும் படம்வரைந்துகொண்டும் இருப்பேன் என்றும் எனக்கு நினைவிருக்கிறது. ஒன்றாகச்சேர்ந்து பேசிக்கொண்டும், ஆர்கன் இசையின் துணையுடன் பாடும் நேரங்களையும், இன்பமான கூட்டுறவையும் கொண்டிருப்பது அவர்களை மிக மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அடைந்தவர்களாக ஆக்கியது.
என்னுடைய பயிற்றுவிப்பைக் குறித்ததில் என் பெற்றோர் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோதே, பள்ளியில் நான் வித்தியாசப்பட்டவளாக முனைப்பாகக் காணப்பட்டேன்; என் வகுப்பார் கத்தோலிக்க பாடத்தைப் பயின்றபோது, நான் வாசிப்பதற்காக என்னுடைய ‘புதிய ஏற்பாட்டை’ எடுத்துக்கொண்டேன். பின்பு, படைத்துறை வீரர் நினைவு நாள் கொண்டாட்டங்களில் நான் பங்குகொள்ளாததற்காக “மனச்சாட்சியினிமித்தம் மறுப்புத் தெரிவிப்பவர்” என்பதாக முழு பள்ளிக்கும் முன்பு காட்சியாக நிறுத்தப்பட்டேன்.a நான் வளர்க்கப்பட்ட முறையைக் குறித்து வருந்துவதில்லை. உண்மையில், அது எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்து, ‘இடுக்கமான பாதையில்’ நிலைத்திருப்பதை எளிதாக்கியது. என்னுடைய பெற்றோர் எங்கெல்லாம் சென்றார்களோ, கூட்டங்களானாலும் அல்லது ஊழியமானாலும் நான் அங்கு இருந்தேன்.—மத்தேயு 7:13, 14.
நான் சொந்தமாக பிரசங்கிக்கத் தொடங்கிய அந்த ஞாயிற்றுக்கிழமை காலையை நான் விசேஷமாக நினைவுகூருகிறேன். எனக்கு 12 வயதுதான் ஆகியிருந்தது. என்னுடைய பருவவயதில் இருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நான் வீட்டிலேயே இருக்கப் போகிறேன் என்று அறிவித்தது நினைவிருக்கிறது. யாரும் என்னைக் குறைகூறவோ கட்டாயப்படுத்தி பிரசங்கிக்கச் செல்ல வைக்கவோ இல்லை; ஆகவே நான் தோட்டத்தில் உட்கார்ந்து பைபிளைப் படித்துக்கொண்டும் மிகவும் வருத்தமுள்ளவளாகவும் இருந்தேன். இது நடந்து ஓரிரு வாரங்களுக்குப் பின், நான் அப்பாவிடம் சொன்னேன்: “நான் இன்று காலை உங்கக்கூட வருவேன்னு நினைக்கிறேன்!” அப்போதிருந்து நான் ஒருபோதும் பின்னிட்டுப் பார்க்கவில்லை.
1931 எவ்வளவு அருமையான வருடமாக இருந்தது! நம் புதிய பெயராகிய யெகோவாவின் சாட்சிகள் என்பதைப் பெற்றது மட்டுமல்லாமல், லண்டனிலுள்ள அலெக்ஸான்ட்ரா பாலஸில் நடந்த தேசிய மாநாட்டில் நான் முழுக்காட்டப்பட்டேன். நான் அந்த நாளை ஒருபோதும் மறக்கமாட்டேன். நாங்கள் நீளமான, கறுப்புக் கச்சைகளை அணிந்துகொண்டோம்; என்னுடையது ஏற்கெனவே இன்னொருவரால் அணியப்பட்டதால் ஈரமாக இருந்தது!
ஒரு சிறுமியாக இருக்கையிலேயே, அப்போது முழு நேர ஊழியர்கள் அழைக்கப்பட்டபடி ஒரு கோல்போர்ட்டர் ஆகவேண்டும் என்பதே எப்போதும் என் இலட்சியமாக இருந்தது. நான் வளர்ந்துவந்தபோது, யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்யவேண்டுமென்று நினைத்தேன். ஆகவே, மார்ச் 1933-ல், 18 வயதாக இருக்கையில், முழு நேர ஊழியர்களின் வரிசைகளைச் சேர்ந்துகொண்டேன்.
ஒருசில பெரிய நகரங்களில் “பயனியர் வாரங்கள்” எங்களுக்கு விசேஷ சந்தோஷமாக இருந்தன; அங்கு ஒரு டஜன் வரையாக முழு நேர ஊழியர்கள் ஒன்றுகூடி வந்து, உள்ளூர் சகோதரர்களுடன் தங்கியிருந்து, ஒரு குழுவாக வேலை செய்வார்கள். மதத் தலைவர்களுக்கும் மற்ற பிரபலமான மனிதருக்கும் நாங்கள் சிறிய புத்தகங்களை அளித்தோம். அவர்களை அணுகுவதற்கு தைரியம் தேவைப்பட்டது. பெரும்பாலும் நாங்கள் இகழ்ச்சியுடனே ஏற்கப்பட்டோம்; பெரும்பாலானோர் கதவுகளை எங்கள் முன் தடாலென அடைத்தார்கள். இது எங்களைக் கவலையடையச் செய்யவில்லை; ஏனென்றால், எங்கள் ஆர்வம் அவ்வளவு அதிகமாக இருந்ததன் காரணமாக கிறிஸ்துவினுடைய நாமத்தின் காரணமாக இகழப்படுவதைக் குறித்து களிகூர்ந்தோம்.—மத்தேயு 5:11, 12.
லீட்ஸில் நாங்கள் ஒலிபெருக்கிகளையுடைய ஃபோனோகிராஃப்களைக் கொண்டுசெல்வதற்கு ஏற்றவிதத்தில், குழந்தையை வைத்துத் தள்ளிச் செல்லும் வண்டி, மூன்று சக்கர மிதிவண்டி, அப்பாவின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைட் கார், பின்னர் அவருடைய கார் ஆகியவற்றை மாற்றி அமைத்தோம். இரண்டு சகோதரர்கள் அந்த இயந்திரத்துடன் தெருவிற்குள் சென்று மக்களை விழிப்படையச் செய்து கதவண்டை வரச்செய்வதற்காக இசைத்தட்டை இசைப்பார்கள்; பின்னர் இதைத் தொடர்ந்து சகோதரர் ரதர்ஃபர்டால் பதிவு செய்யப்பட்ட ஐந்து நிமிட பேச்சைக் கேட்கும்படி போடுவார்கள். பிரஸ்தாபிகளாகிய நாங்கள் அதைத் தொடர்ந்து சென்று பைபிள் பிரசுரங்களை அளிக்கையில், அவர்கள் அதற்குப்பின் அடுத்த தெருவிற்குள் செல்வார்கள்.
பல வருடங்களாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூட்டங்களுக்குப் பிறகு, நாங்கள் நகர சதுக்கத்திற்குச் செல்வோம்; அங்கு பேச்சாளருக்கென்று ஒரு இடம் இருந்தது; நாங்கள் அங்கு சென்று சகோதரர் ரதர்ஃபர்டின் பதிவுசெய்யப்பட்ட பேச்சுகளில் ஒன்றைக் கேட்டு, அக்கறை காண்பிக்கிறவர்களுக்குத் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தும் அவர்களுடன் தொடர்புகொண்டும் அதற்கு ஆதரவளித்தோம். நாங்கள் அங்கு நன்கு அறியப்பட்டவர்களானோம். போலீஸார்கூட எங்களை மதித்தார்கள். ஒரு மாலைவேளையில் நாங்கள் வழக்கம்போல் கூடினோம்; சற்றுத் தொலைவில் கொட்டுகள் மற்றும் இசைமேளத்தின் சத்தத்தைக் கேட்டோம். விரைவில் சுமார் நூறு பாசிஸவாதிகள் அந்தச் சாலை வழியாக அணிவகுத்தனர். அவர்கள் எங்களுக்குப் பின்னால், சுற்றி அணிவகுத்து வந்து, தங்கள் கொடிகளை உயர்த்திப்பிடித்துக்கொண்டு நின்றார்கள். இசைமேளம் நின்றது; அமைதி நிலவியது; அந்தச் சமயத்தில் சகோதரர் ரதர்ஃபர்ட்டின் குரல் முழங்கியது: “அவர்களுக்கு விருப்பமானால் அவர்கள் தங்கள் கொடிகளை வணங்கி, மனிதரைத் துதிக்கட்டும். நம் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே நாம் வழிபடவும் துதிக்கவும் செய்வோம்!” அடுத்ததாக என்ன சம்பவிக்குமோவென்று நாங்கள் யோசித்தோம்! அவர்களுக்கு ஒரு நல்ல சாட்சி கொடுக்கப்பட்டதும், நாங்கள் மீதி பொதுப் பேச்சைக் கேட்கும்படியாக போலீஸ் அவர்களை அமைதலாக இருக்கச் செய்ததுமே தவிர வேறெதுவும் சம்பவிக்கவில்லை.
இதற்குள், ஒரு மகத்தான சாட்சி கொடுப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்ய ஃபோனோகிராஃப் பயன்படுத்தப்பட தொடங்கியது. வாசற்படியில், மக்கள் அந்தப் பதிவுசெய்யப்பட்ட பைபிள் பிரசங்கத்தை ஐந்து நிமிடம் முழுவதும் கேட்கும்படி உற்சாகப்படுத்துவதற்காக நாங்கள் எங்கள் கண்களைக் கவனமாக அந்த ரெகார்டில் ஊன்றவைத்தோம். வீட்டுக்காரர்கள் அடிக்கடி எங்களை வீட்டிற்குள் அழைத்து, அதிகமான ரெகார்டுகளை மீண்டும் வந்து போட்டுக்காண்பிக்கும்படி விரும்பினார்கள்.
1939-ம் ஆண்டு எதிர்ப்புகள் மற்றும் வன்முறைகள் எழும்பியதுடன், மிகவும் சுறுசுறுப்பானதும் கஷ்டமானதுமான ஆண்டாக இருந்தது. எங்களுடைய மாநாடுகளில் ஒன்றிற்குப் பிறகு, தெருவில் ஓரளவான கலகக்கும்பல்கள் மற்றும் கூச்சல்களை சகோதரர்கள் எதிர்ப்பட்டனர். ஆகவே, மாநாட்டின்போது, தொந்தரவுள்ள பகுதிகளில் பிரசங்கிப்பதற்கு சகோதரர்களடங்கிய விசேஷித்த தொகுதி கார்களிலும், சகோதரிகளும் மற்ற சகோதரர்களும் அதிக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படியும் திட்டமிட்டனர். ஒரு தொகுதியுடன் சேர்ந்து ஒரு தெருவில் வேலை செய்யும்போது, பின்னால் இருக்கும் வீடுகளைச் சந்திக்கச் செல்வதற்காக ஒரு சந்து வழியாகச் சென்றேன். ஒரு வீட்டில் இருக்கும்போது, ஏதோவொரு குழப்பம் ஆரம்பிப்பதுபோன்ற சத்தத்தைக் கேட்டேன்—அந்தத் தெருவில் சத்தமும் கூச்சலுமாக இருந்தது. கதவண்டையிலிருந்த ஆளுடன் நான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்; நிலைமைகள் அமைதியாவதை நான் கேட்கும்வரையாக என் உரையாடலை நீட்டிக்கொண்டே இருந்தேன். பின்னர் அந்த சந்து வழியாகச் சென்று, வெளியே தெருவிற்கு வந்து நான் கண்டது என்னவென்றால், மற்ற சகோதர சகோதரிகள் என்னைக் காணவில்லை என கலக்கமுற்றிருந்ததையே! இருந்தாலும், அன்று சற்றுநேரம் கழித்து, கலகக்காரர்கள் எங்கள் கூட்டத்தைக் கெடுக்க முயன்றார்கள்; ஆனால் சகோதரர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இரண்டாம் உலகப் போர் தாக்குகிறது
இப்போதெல்லாம் படைத்துறையில் கட்டாயமாக ஆள்சேர்க்கும் காரியம் அமலில் இருந்தது; அநேக இளம் சகோதரர்கள் 3-லிருந்து 12 மாதங்கள் வரையாகச் சிறையிலடைக்கப்பட்டனர். அப்போது, சிறையைச் சந்திக்கச் செல்லும் கூடுதலான ஒரு சிலாக்கியத்தை அப்பா பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் உள்ளூர் சிறையில் காவற்கோபுர படிப்பை நடத்தினார். புதன்கிழமை மாலைவேளைகளில் சகோதரர்களை அவர்களுடைய சிறிய சிறை அறைகளில் சென்று சந்தித்தார். முதல் உலகப் போரின்போது நீண்டதும் கடினமானதுமான சிறை அனுபவத்தை அவர்தானே கொண்டிருந்ததால், அதேவிதமான சோதனைகளை அனுபவிக்கிறவர்களுக்கு சேவைசெய்வது அவருக்கு விசேஷ மகிழ்ச்சியாக இருந்தது. இதை அவர் 20 வருடங்களாக, 1959-ல் அவருடைய மரணம் வரையாகச் செய்தார்.
1941-ற்குள், எங்கள் நடுநிலை வகிப்பின் காரணமாக அநேக மக்கள் வெளிக்காட்டிய கசப்பானதும் பகைமையானதுமான உணர்ச்சிகளுக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். பத்திரிகைகளை கையில் வைத்து தெருவில் நின்றுகொண்டு இதை எதிர்ப்படுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதேநேரத்தில், எங்கள் பகுதியில் இருந்த அகதிகளுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். லாட்வியர்கள், போலாந்தைச் சேர்ந்தவர்கள், எஸ்டோனியர்கள், ஜெர்மானியர்கள் ஆகியோர் காவற்கோபுரம் அல்லது ஆறுதல் (தற்போது விழித்தெழு!) பத்திரிகைகளை தங்கள் சொந்த பாஷையில் கண்டபோது அவர்கள் கண்கள் ஒளிர்வதைக் காண்பது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது!
பின்னர், இரண்டாம் உலகப் போரின்போது நான் மேற்கொண்ட நடுநிலையான நிலைநிற்கை பற்றிய என் விசாரணை வந்தது. என்னுடைய சிறிய அறையில், ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் 19 மணிநேரம் அடைக்கப்பட்டிருந்த என் சிறை வாழ்க்கையை கடினமாக உணர்ந்தேன். முதல் மூன்று நாட்கள் மிகக் கடினமானவையாக இருந்தன, ஏனென்றால் நான் தனியாக இருந்தேன். நான்காவது நாள், நான் கவர்னரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன்; அங்கு இரண்டு பெண்கள் நிற்பதைக் கண்டேன். அவர்களில் ஒரு பெண் மெதுவாக என்னிடம்: “நீ எதற்காகச் சிறையிலிருக்கிறாய்?” என்றாள். நான் சொன்னேன்: “உனக்குத் தெரிந்தால் ஆச்சரியப்படுவாய்,” என்றேன். அவள் விறைப்பான குரலில் மெதுவாக: “நீ ஒரு JW-வா?” என்று கேட்டாள். அவள் கேட்டதை மற்ற பெண் கேட்டு, எங்கள் இருவரிடமும்: “நீங்கள் JW-க்களா?” என்று கேட்டாள்; நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டோம். நாங்கள் இனிமேலும் தனியாக இல்லை!
இன்பகரமான முழுநேர சேவை
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின், நான் என் முழுநேர சேவையைத் தொடர்ந்தேன்; அப்போதுதான் பள்ளிப்படிப்பை நிறுத்தியிருந்த 16 வயது இளம் பெண் என்னைச் சேர்ந்துகொண்டாள். யார்க்ஷைர் டேல்ஸின் பக்கத்திலுள்ள அழகிய நகரமாகிய இல்க்லிக்கு நாங்கள் சென்றோம். ஆறு மாதங்கள் முழுவதுமாக, எங்கள் கூட்டங்களுக்கு ஏற்ற இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக நாங்கள் கடினமாக முயன்றோம். கடைசியில், கார் நிறுத்தக்கூடிய சிறிய கொட்டில் ஒன்றை வாடகைக்கு எடுத்து, ராஜ்ய மன்றமாக மாற்றினோம். வெளிச்சம் மற்றும் உஷ்ண வசதிகளைச் செய்வதில், அப்பா எங்கள் உதவிக்கு வந்தார். அவர் அந்தக் கட்டடத்தை எங்களுக்காக அலங்கரிக்கவும் செய்தார். ஒவ்வொரு வாரமும் பொதுப் பேச்சுக்களைக் கொடுப்பதற்கு சகோதரர்களை நியமிப்பதன்மூலமாக அருகிலிருந்த சபை பல வருடங்களாக எங்களுக்கு ஆதரவளித்தது. யெகோவாவின் ஆசீர்வாதத்தால் நாங்கள் செழித்தோங்கி, வளர்ச்சி அடைந்தோம்; கடைசியில் ஒரு சபையும் நிறுவப்பட்டது.
ஜனவரி 1959-ல் அப்பா திடீரென்று நோய்வாய்ப்பட்டார். நான் வீட்டிற்கு அழைக்கப்பட்டேன்; அவர் ஏப்ரலில் காலமானார். அதைத் தொடர்ந்த வருடங்கள் கடினமானவையாக இருந்தன. அம்மாவின் ஆரோக்கியமும் அதோடு அவர்களுடைய ஞாபகசக்தியும் குன்றின; அது எனக்குக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் யெகோவாவின் ஆவி எனக்குத் தொடர்ந்து உதவியது; அவர்கள் 1963-ல் காலமாகும் வரையாக என்னால் அவர்களைக் கவனிக்க முடிந்தது.
அந்த வருடங்களினூடே எனக்கு யெகோவாவிடமிருந்து எவ்வளவோ ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன. அவை சொல்வதற்கு மிக அதிகமானவை. என்னுடைய தாய் சபை வளர்ந்து நான்குமுறை பிரிக்கப்பட்டு, பிரஸ்தாபிகளையும் பயனியர்களையும், உகாந்தா, பொலிவியா, லாவோஸ் போன்ற தொலைவிலுள்ள நாடுகள் வரையாக சில மிஷனரிகளையும் அனுப்பியிருக்கிறதை நான் பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான சூழல் எனக்கு அமையவில்லை. அது என்னை வருத்தமடையச் செய்யவில்லை; நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்திருக்கிறேன். எனக்குச் சொந்தமான சரீரப்பிரகாரமான உறவினர்கள் இல்லையென்றாலும், கர்த்தருக்குள் அநேக பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், நூறத்தனையாகவும்கூட கொண்டிருக்கிறேன்.—மாற்கு 10:29, 30.
கிறிஸ்தவக் கூட்டுறவை அனுபவிப்பதற்காக நான் அடிக்கடி இளம் பயனியர்களையும் மற்ற இளைஞர்களையும் என் வீட்டிற்கு அழைக்கிறேன். நாங்கள் காவற்கோபுர படிப்பை ஒன்றாகத் தயார் செய்கிறோம். என் பெற்றோர் செய்ததைப் போலவே, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறோம், ராஜ்ய பாட்டுகளையும் பாடுகிறோம். மகிழ்ச்சியான இளைஞர் தொகுதியால் சூழப்பட்டிருந்து, நான் இளமையும் மகிழ்ச்சியுமான மனோபாவத்தைக் காத்துக்கொள்கிறேன். பயனியர் சேவையைக் காட்டிலும் அதிக மேம்பட்ட வாழ்க்கை எனக்கு எதுவுமில்லை. என்னுடைய பெற்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் சிலாக்கியத்தை நான் கொண்டிருந்ததற்காக யெகோவாவுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நித்தியகாலமாக நான் தொடர்ந்து யெகோவாவைச் சேவிக்கவேண்டும் என்பதே என் ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a 1918-லும் பின்னர் 1945-லும் பகைமைகளின் முடிவின் நினைவுகூருதலாக.
[பக்கம் 23-ன் படம்]
ஹில்ட பஜெட்டும் அவர்களுடைய பெற்றோர் அட்கன்ஸன்னும் பாற்றியும்
[பக்கம் 23-ன் படம்]
சத்தியத்தில் அப்பாவின் அக்கறையைக் கிளறிவிட்ட துண்டுப்பிரதி