வாழ்க்கை சரிதை
“ஒன்றையுமே மாற்ற மாட்டேன்!”
க்ளாடிஸ் ஆலன் சொன்னபடி
“திரும்பவும் ஒருமுறை வாழ வாய்ப்பு கிடைச்சா எதையெல்லாம் மாற்றுவீங்க?” என்று சில பேர் என்னிடம் கேட்கிறார்கள். மனதை திறந்து சொல்ல வேண்டுமென்றால், “ஒன்றையுமே மாற்ற மாட்டேன்!” ஏன் என்பதைக் கேளுங்கள்.
எனக்கு 1929-ன் கோடைக்காலத்தில் இரண்டு வயசு இருக்கும்போது அப்பாவுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் ஏற்பட்டது. அப்பாவின் பெயர் மாத்யூ ஆலன். “இன்று வாழும் லட்சக்கணக்கானோர் இறக்கவே மாட்டார்கள்!” என்ற ஆங்கில சிறு புத்தகம் அவருக்குக் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் வெளியிட்டிருந்தார்கள்; அப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய பெயர் அதுதான். ஆர்வத்தோடு சில பக்கங்களை வாசித்ததுமே, “இப்படியொரு அருமையான விஷயத்தை நான் படிச்சதே இல்லை!” என்று அப்பா பூரிப்படைந்தார்.
அதன்பின் சீக்கிரத்தில் பைபிள் மாணாக்கர்களின் மற்ற பிரசுரங்களையும் அப்பா பெற்றுக்கொண்டார். படித்த விஷயங்களை உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த எல்லாரிடமும் சொல்ல ஆரம்பித்தார். இருந்தாலும் எங்கள் கிராமத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை இல்லை. ஆனால் தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு செல்வது அவசியமென அப்பாவுக்கு புரிந்தது. ஆகவே கனடாவில் ஒன்டாரியோவிலுள்ள ஆரின்ஜ்வில் என்ற பட்டணத்தில் ஒரு சபை இருந்ததால் 1935-ல் அங்கு நாங்கள் குடிமாறிப் போனோம்.
அந்தக் காலத்திலெல்லாம் பிள்ளைகளையும் சபைக் கூட்டங்களுக்கு அழைத்து வரும்படி அவ்வளவாக உற்சாகப்படுத்தப்படவில்லை; பெரியவர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு வரும்வரை பிள்ளைகள் பொதுவாக வெளியே விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்பாவுக்கோ இது பிடிக்கவில்லை. “கூட்டங்களுக்கு போறது எனக்கு நல்லதுன்னா என் பிள்ளைகளுக்கும் நல்லதுதான்” என நினைத்தார். ஆகவே அப்பா அப்போதுதான் புதிதாக கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்திருந்தார் என்றாலும் பாப் அண்ணனையும் எள்ளா அக்காவையும் ரூபி அக்காவையும் என்னையும் பெரியவர்களோடு உட்கார்ந்து கூட்டங்களை கவனிக்கும்படி சொன்னார். நாங்களும் அப்படியே செய்தோம். கொஞ்ச நாட்களில் மற்ற சாட்சிகளுடைய பிள்ளைகளும் கூட்டங்களில் வந்து உட்கார ஆரம்பித்தார்கள். கூட்டங்களுக்கு செல்வதும் அங்கே நடைபெறும் கலந்தாலோசிப்புகளில் பங்கெடுப்பதும் எங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயங்களாயின.
அப்பாவிற்கு பைபிளென்றால் உயிர், பைபிள் கதைகளை மிக தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். இவற்றின் மூலம் முக்கிய பாடங்களை எங்கள் பிஞ்சு மனங்களில் ஆழமாக பதிய வைத்தார். அந்தப் பாடங்களை இப்போதும் ஆசையாசையாக நினைத்துப் பார்ப்பதுண்டு. யெகோவா தமக்குக் கீழ்ப்படிபவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பது அப்பாடங்களில் என் நினைவில் நிற்கும் ஒன்று.
பைபிளை பயன்படுத்தி எங்கள் நம்பிக்கையின் சார்பாக பேசும் விதத்தையும்கூட அப்பா கற்றுக்கொடுத்தார். நாங்கள் அதை ஒரு விளையாட்டுப்போல் செய்தோம். உதாரணத்திற்கு, “செத்த பிறகு பரலோகத்துக்கு போறத நம்பறவன் நான். ஆனால் அது தவறுன்னு இப்போ நீங்க எனக்கு நிரூபிக்கணும்” என்று சொல்வார். அந்தப் போதனையை தவறென நிரூபித்துக் காட்ட ரூபியும் நானும் கன்கார்டன்ஸை புரட்டோ புரட்டுன்னு புரட்டி வசனங்களைத் தேடி கண்டுபிடிப்போம். பின்னர் அந்த வசனங்களை அப்பாவுக்கு வாசித்துக் காட்டுவோம்; அவரோ “இன்டரிஸ்டிங்காகத்தான் இருக்கு, ஆனா என்னால முழுசா ஏத்துக்க முடியலயே” என்பார். மறுபடியும் கன்கார்டன்ஸை புரட்டுவோம். பல சந்தர்ப்பங்களில், இப்படி மணிக்கணக்காக உட்கார்ந்து பதில்களைத் தேடி கண்டுபிடித்து சொன்ன பிறகே அப்பாவை திருப்தி செய்ய முடிந்தது. இதனால் ரூபி அக்காவும் நானும் எங்கள் நம்பிக்கைகளை விளக்குவதிலும் விசுவாசத்தின் சார்பாக பேசுவதிலும் கெட்டிக்காரர்கள் ஆனோம்.
மனித பயத்தை விட்டொழித்தல்
வீட்டிலும் சபை கூட்டங்களிலும் நல்ல பயிற்றுவிப்பு கிடைத்தாலும் கிறிஸ்தவளாக வாழ்வது சிலசமயங்களில் எனக்கு சிரமமாக இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அநேக இளைஞர்களைப் போல் எனக்கும், மற்றவர்களிலிருந்து, முக்கியமாக என் வகுப்பு பிள்ளைகளிலிருந்து வித்தியாசமானவளாக இருப்பது பிடிக்கவில்லை. இன்ஃபர்மேஷன் மார்ச்சஸ் என்றழைக்கப்பட்ட ஊர்வலங்கள் சம்பந்தமாக என் விசுவாசம் ஆரம்பத்தில் பரீட்சிக்கப்பட்டது.
அந்த ஊர்வலங்களில் சகோதர சகோதரிகள் கூட்டமாக அறிவிப்பு அட்டைகளை அணிந்துகொண்டு முக்கிய தெருக்களின் வழியே மெதுவாக நடந்து செல்ல வேண்டியிருந்தது. எங்கள் ஊரிலிருந்த சுமார் 3,000 பேருக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரியும். ஒருமுறை ஊர்வலத்தின்போது, “மதம் ஒரு கண்ணியும் மோசடியும்!” என்ற அறிவிப்பு அட்டையை அணிந்தவளாக வரிசையின் கடைசியில் நடந்துசென்று கொண்டிருந்தேன். என் பள்ளி மாணவர்கள் சிலர் என்னைப் பார்த்துவிட்டார்கள்; உடனடியாக எனக்குப் பின் வரிசையாக நின்றுகொண்டு “கடவுள் ராஜாவைக் காப்பாற்றுவாராக” என்று தேசிய கீதத்தைப் பாட ஆரம்பித்தார்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? ஊர்வலத்தில் தொடர்ந்து செல்ல எனக்குப் பலம் தரும்படி கடவுளிடம் கெஞ்சிக் கேட்டேன். ஊர்வலம் முடிந்தவுடன், ஒருவழியாக அறிவிப்பு அட்டையை கழற்றிக் கொடுத்துவிட்டு வீடு திரும்புவதற்காக ராஜ்ய மன்றத்திற்கு விரைந்தேன். ஆனால் ஊர்வலங்களை மேற்பார்வையிட்டு வந்த சகோதரர், மற்றொரு ஊர்வலம் ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும் அறிவிப்பு அட்டையை அணிந்து செல்வதில் ஒருவர் குறைவுபடுவதாகவும் என்னிடம் சொன்னார். ஆகவே இன்னும் அதிக ஊக்கமாக ஜெபித்துக்கொண்டே மறுபடியும் ஊர்வலத்தில் சென்றேன். ஆனால் அதற்குள் என் வகுப்பு மாணவர்கள் களைப்படைந்து வீடு திரும்பிவிட்டார்கள். இப்போது பலம் கேட்டு ஜெபிப்பதற்கு பதிலாக நன்றி சொல்லி ஜெபித்தேன்!—நீதிமொழிகள் 3:5.
முழுநேர ஊழியர்களுக்கு எங்கள் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருந்தது. அவர்கள் சந்தோஷமிக்க ஊழியர்கள், அவர்களை உபசரிப்பதுகூட சந்தோஷம் தரும் அனுபவம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, என் பெற்றோர் முழுநேர ஊழியமே சிறந்த பணியென பிள்ளைகளாகிய எங்களுக்கு எப்போதும் போதித்து வந்தார்கள்.
அவர்கள் கொடுத்த உற்சாகத்தால் 1945-ல் முழுநேர ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். பிறகு, ஒன்டாரியோவிலுள்ள லண்டனில் பயனியர் ஊழியம் செய்துவந்த எள்ளா அக்காவுடன் சேர்ந்துகொண்டேன். அங்கே செய்யப்பட்ட ஒருவித ஊழியம் எனக்கு கொஞ்சமும் ஒத்துவராது என நினைத்தேன். சகோதரர்கள் பார்களில் டேபிள் டேபிளாக சென்று வாடிக்கையாளர்களுக்கு காவற்கோபுரம், ஆறுதல் (இப்போது விழித்தெழு!) பத்திரிகைகளை விநியோகித்தார்கள். நல்லவேளையாக அந்த ஊழியம் சனிக்கிழமை மதியவேளையில் செய்யப்பட்டது, இதனால் அந்த ஊழியத்தில் கலந்துகொள்ள தைரியம் கேட்டு வாரம் முழுவதும் ஜெபிக்க முடிந்தது! எனக்கு அப்படியொரு கஷ்டமாக இருந்தது அந்த ஊழியம், ஆனால் அது பலன்தந்தது.
அதேசமயம் ஆறுதல் பத்திரிகையின் விசேஷ பிரதிகளை அளிக்கும் விதத்தையும் கற்றுக்கொண்டேன்; அது நாசி சித்திரவதை முகாம்களில் நம் சகோதரர்கள் துன்புறுத்தப்பட்டதைப் பற்றி விளக்கியது; முக்கியமாக, பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட கனடாவின் பிரபல பிஸினஸ் புள்ளிகளை சந்தித்து இந்தப் பிரதிகளை விநியோகித்தோம். பலத்திற்காக யெகோவாவை சார்ந்திருக்கும்வரை அவர் எப்போதும் துணையாக இருப்பார் என்பது பல ஆண்டுகால அனுபவத்தில் நான் கண்டறிந்த உண்மை. அப்பா சொன்ன விதமாகவே, யெகோவா தமக்குக் கீழ்ப்படிபவர்களை ஆசீர்வதிக்கிறார்.
க்யுபெக்கில் ஊழியம் செய்ய சம்மதித்தல்
ஜூலை 4, 1940-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் கனடாவில் தடைசெய்யப்பட்டது. பிற்பாடு அந்தத் தடை நீக்கப்பட்டது; ஆனால் ரோமன் கத்தோலிக்க மாகாணமாக இருந்த க்யுபெக்கில் நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டோம். அங்கே சகோதரர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, அதைக் கடுமையாக சாடிய ஒரு துண்டுப்பிரதி விசேஷமாக விநியோகிக்கப்பட்டது; அத்துண்டுப்பிரதியின் தலைப்பு: கடவுள்மீதும் கிறிஸ்துமீதும் சுதந்திரம்மீதும் க்யுபெக் காட்டும் கடும் வெறுப்பு கனடாவிற்கு பெருத்த அவமானம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான சகோதரர் நேதன் எச். நார், மான்ட்ரீல் நகரிலிருந்த நூற்றுக்கணக்கான பயனியர்களை சந்தித்து, நாங்கள் செய்யவிருந்த விசேஷ ஊழியத்தைப் பற்றி விளக்கினார். இந்த விசேஷ ஊழியத்தில் பங்குகொள்ள நாங்கள் சம்மதித்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட நேரிடலாம் என்றும் சகோதரர் நார் சொன்னார். இது எவ்வளவு உண்மையாகிவிட்டது! ஒரு கட்டத்தில் நான் 15 முறை கைதுசெய்யப்பட்டேன். நாங்கள் வெளி ஊழியத்திற்கு செல்லுகையில் ராத்திரி ஜெயிலில் தங்க நேரிடலாம் என்பதால் மறக்காமல் டூத்பிரஷையும் சீப்பையும் எடுத்துக்கொண்டு போனோம்.
ஆரம்பத்தில், முடிந்தவரை பலரின் கண்களிலும் படாமலிருக்க பெரும்பாலும் ஊழியத்தை இரவில் செய்தோம். பை நிறைய துண்டுப்பிரதிகளை திணித்து அதைக் கழுத்தில் மாட்டிக்கொள்வேன்; அதற்குமேல் கோட்டு ஒன்றைப் போட்டுக்கொள்வேன். அந்தப் பை புடைத்துக்கொண்டு இருந்ததால் பார்க்க கர்ப்பிணி போல் தோன்றினேன். ஒருவிதத்தில் அதுவும் நல்லதாகிவிட்டது; ஏனென்றால் ஊழியத்திற்கு நெரிசலான ஸ்ட்ரீட் காரில் பயணித்த சமயங்களில் பல ஆண்கள் எழுந்திருந்து தங்கள் சீட்டை இந்தக் “கர்ப்பிணிக்கு” கொடுத்திருக்கிறார்கள்.
பின்னர் போக போக பகல் நேரத்திலே ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். மூன்று அல்லது நான்கு வீடுகளில் துண்டுப்பிரதிகளை விநியோகித்துவிட்டு வேறொரு ஏரியாவிற்கு சென்றுவிடுவோம். அது பெரும்பாலும் நல்ல பலன் தந்தது. ஆனால் நாங்கள் அந்த ஏரியாவில் இருப்பது பாதிரிக்கு தெரிந்தாலோ அவ்வளவுதான். ஒருமுறை, பாதிரியின் தூண்டுதலால் கிட்டத்தட்ட 50, 60 பேர் எங்கள்மீது தக்காளிகளையும் முட்டைகளையும் சரமாரியாக வீசியெறிந்தார்கள்; அந்தக் கூட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்ல பிள்ளைகளும் இருந்தார்கள். நாங்கள் ஒரு கிறிஸ்தவ சகோதரியின் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தோம்; அன்றைய இரவு அங்கேயே தரையில் படுத்துத் தூங்கினோம்.
க்யுபெக்கில் பிரெஞ்சு மொழி பேசிய மக்களுக்கு பிரசங்கிக்க பயனியர்கள் உடனடியாக தேவைப்பட்டனர்; ஆகவே 1958, டிசம்பரில் ரூபி அக்காவும் நானும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். அதன் பிறகு அந்த மாகாணத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வசித்த பல ஏரியாக்களில் ஊழியம் செய்ய நாங்கள் நியமிக்கப்பட்டோம். ஒவ்வொரு நியமிப்பும் ஒரு தனி அனுபவம்தான். ஒரு ஏரியாவில், இரண்டு வருடத்திற்கு தினமும் எட்டு மணிநேரம் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தோம், ஆனால் ஒருவரிடம்கூட பேச முடியவில்லை! ஆட்கள் முதலில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பார்கள், பிறகு ஸ்க்ரீனை மூடிவிட்டு போய்விடுவார்கள். ஆனாலும் நாங்கள் தளர்ந்துவிடவில்லை. இன்று அந்தப் பட்டணத்தில் இரண்டு சபைகள் தழைத்தோங்குகின்றன.
எல்லா விதத்திலும் யெகோவா காத்தார்
1965-ல் நாங்கள் விசேஷ பயனியர்களாக ஊழியத்தை துவங்கினோம். அவ்வாறு ஊழியம் செய்த ஒரு இடத்தில், “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என 1 தீமோத்தேயு 6:8-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் பவுலின் வார்த்தைகளை முழுமையாக புரிந்துகொண்டோம். நாங்கள் காசை எண்ணி எண்ணி செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆகவே ஹீட்டர், வீட்டு வாடகை, கரெண்ட் பில், சாப்பாடு ஆகியவற்றிற்குப் பணத்தை ஒதுக்கினோம். மீதமிருந்தது 25 சென்டுகள்; அதை வைத்தே மாதம் முழுவதும் மற்ற செலவை சமாளிக்க வேண்டியிருந்தது.
காசு கையைக் கடித்ததால் இரவில் சில மணிநேரத்துக்கே ஹீட்டரை உபயோகிக்க முடிந்தது. ஆகவே எங்கள் பெட்ரூம் 15 டிகிரி செல்சியஸை தாண்டியதில்லை. பெரும்பாலும் அதைவிட ரொம்ப குளிராகவே இருந்தது. ஒருநாள், ரூபி அக்கா பைபிள் படிப்பு நடத்தும் ஒருவரின் மகன் எங்களை சந்திக்க வந்திருந்தார். அவர் தன் வீடு திரும்பியதும் நாங்கள் குளிரில் நடுநடுங்கி செத்துக்கொண்டிருந்ததாக தன் அம்மாவிடம் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். ஏனென்றால் அதுமுதல் அவரது அம்மா மாதாமாதம் முன்னூறு ரூபாயை எங்களுக்கு அனுப்ப ஆரம்பித்தார்; எப்போதும் ஹீட்டரை உபயோகிப்பதற்கு எண்ணெய் வாங்கவே அப்பணத்தை அனுப்பினார். எங்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. நாங்கள் ரொம்ப வசதிபடைத்தவர்களாக இல்லாவிட்டாலும் எப்போதுமே தேவையான அனைத்தும் இருந்தன. கூடுதலாக கிடைத்த அனைத்தையும் ஆசீர்வாதமாக கருதினோம். சங்கீதம் 37:25 சொல்வது முற்றிலும் உண்மை: “நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை”!
எதிர்ப்பின் மத்தியிலும், என்னோடு பைபிள் படித்தவர்களில் அநேகர் சத்தியத்தின் அறிவை ஏற்றுக்கொண்டதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவர்களில் சிலர் முழுநேர ஊழியர்களானார்கள்; இது எனக்கு இன்னுமதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
புதிய சவால்களை வெற்றிகரமாக சந்தித்தல்
1970-ல் ஒன்டாரியோவிலுள்ள கார்ன்வாலில் ஊழியம் செய்யும்படியான புதிய நியமிப்பை பெற்றோம். கார்ன்வாலுக்கு சென்று சுமார் ஒரு வருடத்தில் அம்மா நோய்வாய்ப்பட்டார்கள். அப்பா 1957-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார்; ஆகவே 1972-ல் அம்மா இறக்கும்வரை என் அக்காமார் இரண்டு பேரும் நானும் மாறி மாறி அம்மாவை கவனித்துக்கொண்டோம். இந்த சமயத்தில் விசேஷ பயனியர் ஊழியத்தில் எங்கள் பார்ட்னர்களாக இருந்த எள்ளா லிஸிட்ஸாவும் ஆன் கோயலென்கோவும் அன்போடு ஆதரவு தந்து நாங்கள் நிலைகுலைந்துவிடாதிருக்க உதவினார்கள். நாங்கள் இல்லாத சமயங்களில் எங்கள் பைபிள் படிப்புகளையும் மற்ற பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டார்கள். நீதிமொழிகள் 18:24 (பொ.மொ.) சொல்கிறபடி, “உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு” என்பதில் சந்தேகமில்லை!
வாழ்க்கையில் பல சவால்களை சமாளிக்க வேண்டும் என்பது உண்மைதான். யெகோவா அன்போடு உதவிக்கரம் நீட்டியதால் அவற்றை என்னால் சமாளிக்க முடிந்திருக்கிறது. இப்போதும் முழுநேர ஊழியத்தை சந்தோஷமாக செய்கிறேன். பாப் அண்ணன் 1993-ல் இறந்துவிட்டார்; அவர் 20 ஆண்டுகள் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார்; அதில் 10 ஆண்டுகள் தன் மனைவி டாலுடன் சேர்ந்து பயனியர் ஊழியத்தை அனுபவித்து மகிழ்ந்தார். எள்ளா அக்கா 1998, அக்டோபர் மாதம் காலமாகிவிட்டார்; அவர் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயனியர் ஊழியம் செய்தார், கடைசிவரை அந்த பயனியர் மனப்பான்மையைக் காத்துக்கொண்டார். 1991-ல் ரூபி அக்காவுக்கு கான்ஸர் இருப்பது தெரிய வந்தது. சுகவீனமாக இருந்தும் அவர் நற்செய்தியை பிரசங்கித்தார். 1999, செப்டம்பர் 26-ம் தேதி காலையில் இறக்கும்வரை அவர் தன் நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை. சகோதரிகளை நான் பறிகொடுத்துவிட்டாலும் எனக்கு ஆவிக்குரிய குடும்பம் உண்டு; அக்குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என் நகைச்சுவை உணர்வை இழக்காதிருக்க உதவுகிறார்கள்.
இப்போது நான் கடந்து வந்த வாழ்க்கை பாதையை திரும்பி பார்க்கையில் எதை மாற்றுவேன்? நான் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால் சத்தியத்திற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்த அன்பான பெற்றோரையும் அண்ணனையும் அக்காக்களையும் பெற்றது எனக்கு கிடைத்த பாக்கியம். விரைவில் அவர்கள் எல்லாரும் உயிர்த்தெழுந்து வருவதைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். அப்பா என்னை இறுக அணைத்துக்கொள்வதையும் அம்மா ஆனந்தக் கண்ணீர் வடிப்பதையும் நாங்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொள்வதையும் இப்போதே மனக்கண்களால் பார்க்க முடிகிறது. எள்ளா அக்காவும் ரூபி அக்காவும் பாப் அண்ணனும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார்கள்.
இதற்கிடையில், யெகோவாவிற்கு மகிமையும் துதியும் சேர்க்க, எனக்கிருக்கும் ஆரோக்கியத்தையும் சக்தியையும் தொடர்ந்து பயன்படுத்தவே மனமார விரும்புகிறேன். முழுநேர ஊழியம் அருமையான, பயன்தரும் வாழ்க்கை முறை. யெகோவாவின் வழிகளில் நடப்போரைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னது எவ்வளவு உண்மை: “நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், நலம் பெறுவீர்கள்.”—சங்கீதம் 128:1, 2, NW.
[பக்கம் 26-ன் படங்கள்]
அப்பாவுக்கு பைபிளென்றால் உயிர். அதை பயன்படுத்தி எங்களுடைய நம்பிக்கைகளின் சார்பாக பேசும் விதத்தை எங்களுக்குக் கற்றுத் தந்தார்
[பக்கம் 28-ன் படம்]
இடமிருந்து வலம்: ரூபி, நான், பாப், எள்ளா, அம்மா, அப்பா, 1947-ல்
[பக்கம் 28-ன் படம்]
முன் வரிசை, இடமிருந்து வலம்: நான், ரூபி, எள்ளா, மாவட்ட மாநாட்டின்போது, 1998