உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 10/1 பக். 5-9
  • அரியதொரு கிறிஸ்தவ சுதந்தரிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அரியதொரு கிறிஸ்தவ சுதந்தரிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தகப்பன் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறார்
  • ஊழியத்தில் விரைவான துவக்கம்
  • என்னுடைய பெற்றோருடன் கடவுளைச் சேவித்தல்
  • என்னுடைய தாத்தா பாட்டியிடமிருந்து பயிற்றுவிப்பு
  • துன்புறுத்தலின் வருடங்கள்
  • பெற்றோரின் வழிநடத்துதலுக்காக நன்றி
  • திருமணமும் பயண வேலையும்
  • பெற்றோரைக் கவனித்தல்
  • கடவுளை நேசிக்க கற்றுத்தந்த பெற்றோர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • எங்களுடைய செழுமையான ஆவிக்குரிய சொத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • என் பெற்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 10/1 பக். 5-9

அரியதொரு கிறிஸ்தவ சுதந்தரிப்பு

ப்லாஸம் ப்ரான்ட் கூறியபடி

நான் பிறந்த நாளாகிய ஜனவரி 17, 1923-ல், டெக்ஸஸிலுள்ள சான் அன்டோனியோவில் பனிபெய்துகொண்டிருந்தது. வெளியே குளிராக இருந்தது; ஆனால் அன்பான கிறிஸ்தவ பெற்றோர் ஜட்ஜ் மற்றும் ஹெலன் நாரிஸ் ஆகியோரின் அனலான கரங்களில் நான் வரவேற்கப்பட்டேன். என்னுடைய ஆரம்பகால நினைவுகளிலிருந்து, என் பெற்றோர் செய்த எல்லாமே, அவர்கள் யெகோவா தேவனை வணங்குவதை மையமாகக் கொண்டிருந்தது.

என் தாய் எட்டு வயதாய் இருந்தபோது, 1910-ல், அவளுடைய பெற்றோர் பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலிருந்து, டெக்ஸஸிலுள்ள ஆல்வினுக்குப் புறம்பான ஒரு பண்ணைக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு, ஓர் அயலாரிடமிருந்து பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்கள் சந்தோஷப்பட்டனர். இராஜ்ய நம்பிக்கையில் மற்றவர்களை அக்கறைகொள்ளச் செய்வதில் அம்மா தன்னுடைய மீதி வாழ்க்கையைச் செலவிட்டாள். அந்தக் குடும்பம் டெக்ஸஸிலுள்ள ஹெளஸ்டனுக்குக் குடிபெயர்ந்தபின் அவள் 1912-ல் முழுக்காட்டப்பட்டாள்.

என் தாயும் அவளுடைய பெற்றோரும், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் முதல் தலைவர் சார்ல்ஸ் T. ரஸலை, அவர் ஹெளஸ்டன் சபையை விஜயம் செய்தபோது, முதன்முதலாகச் சந்தித்தனர். அப்போது யாத்ரீகர் (pilgrims) என்று அழைக்கப்பட்ட சங்கத்தின் பயண பிரதிநிதிகளை அந்தக் குடும்பம் அடிக்கடி தங்களுடைய வீட்டில் உபசரித்தது. ஒருசில வருடங்களுக்குப்பின், அம்மா தன் பெற்றோருடன் இல்லினாய்ஸிலுள்ள சிகாகோவிற்குச் சென்றுவிட்டாள்; அங்குள்ள சபையையும் சகோதரர் ரஸல் விஜயம் செய்பவராய் இருந்தார்.

என் பாட்டிக்கு 1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் வந்தது; அவளுடைய உடல்நலத்தின்மீது அது கொண்டிருந்த பலவீனப்படுத்தும் பாதிப்பால், அவள் அதைவிட அதிக வெப்பமான தட்பவெப்பநிலையை உடைய ஓர் இடத்தில் வசிக்கும்படி மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர். தாத்தா, புல்மேன் ரயில் கம்பெனிக்கு வேலை செய்ததால், அவர் திரும்பவும் 1919-ல் டெக்ஸஸுக்கு மாற்றல் வாங்கினார். அங்குச் சான் அன்டோனியோவில், ஜட்ஜ் நாரிஸ் என்ற பெயரை உடைய ஓர் இளம், வைராக்கியமான சபை அங்கத்தினரை அம்மா சந்தித்தாள். அவர்கள் உடனடியாக, ஒருவரிடம் ஒருவர் கவரப்பட்டனர்; முடிவாக அவர்கள் திருமணம் செய்தனர்; ஜட்ஜ் என்னுடைய தந்தையானார்.

தகப்பன் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறார்

ஜட்ஜ்-க்கு (நீதிபதி) அவர் பிறந்தபோது அவருடைய அசாதாரணமான பெயர் கொடுக்கப்பட்டது. அவருடைய தந்தை அவரை முதலில் பார்த்தபோது, அவர்: “ஒரு நீதிபதியைப்போலக் குழந்தை அமைந்தடங்கியதாக இருக்கிறது,” என்றார்; அது அவருடைய பெயராயிற்று. அப்பா 16 வயதாக இருந்தபோது, 1917-ல், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் அச்சிடப்பட்ட மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? (Where Are the Dead?) மற்றும் ஆத்துமா என்றால் என்ன? (What Is the Soul?) என்ற துண்டுப்பிரதிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. அப்பாவின் தந்தை இரண்டு வருடங்களுக்குமுன் மரித்துப்போயிருந்தார்; மரித்தவர்களின் நிலையைப்பற்றி அவர் தேடிக்கொண்டிருந்த பதில்களை அந்தத் துண்டுப்பிரதிகள் அவருக்கு அளித்தன. சிறிது காலத்திற்குப்பின், பைபிள் மாணாக்கருடைய கூட்டங்களுக்குச் செல்ல துவங்கினார்; யெகோவாவின் சாட்சிகள் அப்போது அந்தப் பெயரால் அறியப்பட்டிருந்தனர்.

அப்பா உடனடியாகச் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள விரும்பினார். அவர் பிரசங்கிக்க ஒரு பிராந்தியத்தைப் பெற்றுக்கொண்டார்; பள்ளி நேரத்திற்குப்பின், துண்டுப்பிரதிகளை அளிப்பதற்காகத் தன்னுடைய சைக்கிளில் அங்குச் சென்றார். இராஜ்ய நம்பிக்கையைப் பகிர்ந்தளிப்பதில் அவர் முழுமையாக ஈடுபட்டார்; மார்ச் 24, 1918-ல், அவர் யெகோவாவுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் வெளிக்காட்டினார்.

அதற்கடுத்த வருடம் அம்மா சான் அன்டோனியோவிற்குக் குடிபெயர்ந்தபோது, அப்பா தான் பார்த்ததிலேயே “மிக இனிமையான புன்முறுவலும் நீல வண்ணக் கண்களும்” என்று அவர் சொன்னவற்றால் உடனடியாகக் கவரப்பட்டார். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக விரைவில் தெரியப்படுத்தினார்கள்; ஆனால் அம்மாவின் பெற்றோரை ஏற்கச்செய்வதில் கடினமான சமயத்தைக் கொண்டிருந்தனர். இருப்பினும், ஏப்ரல் 15, 1921-ல், திருமணம் நிகழ்ந்தது. இருவரும் முழுநேர ஊழியத்தைத் தங்கள் இலக்காகக் கொண்டிருந்தனர்.

ஊழியத்தில் விரைவான துவக்கம்

அம்மாவும் அப்பாவும், 1922-ல் சீடர் பாயின்ட், ஒஹாயோ மாநாட்டிற்குச் செல்ல திட்டமிடுவதில் சுறுசுறுப்பாக இருந்தபோது, அம்மா கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். நான் பிறந்ததற்குச் சற்றுப் பின்னர், அப்பா வெறும் 22 வயதாயிருக்கையில், அவர் சபை ஊழிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் எல்லா வெளி ஊழிய ஏற்பாடுகளையும் செய்வதை இது அர்த்தப்படுத்தியது. நான் பிறந்து வெறும் சில வாரங்களில், அம்மா என்னை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கொண்டு சென்றாள். உண்மையில், என்னுடைய தாத்தா பாட்டியும் என்னை ஊழியத்தில் தங்களுடன் கொண்டிருக்க விரும்பினர்.

எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, என் பெற்றோர் டெக்ஸஸிலுள்ள டல்லஸுக்குக் குடிபெயர்ந்தனர்; மூன்று வருடங்கள் கழித்து அவர்கள் பயனியர்களாக முழுநேர ஊழியத்தைத் துவங்கினர். இரவில் அவர்கள் சாலையோரத்தில் ஒரு கட்டிலில் உறங்கினர்; என்னைக் காரின் பின் சீட்டில் உறங்க வைத்தனர். நான் இதை வேடிக்கையாக நினைத்தபோதிலும், இன்னும் அவர்கள் பயனியர் வாழ்க்கைக்குத் தயாராக இல்லை என்பது சீக்கிரத்தில் தெளிவாகப் புலப்பட்டது. ஆகையால் அப்பா ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார். காலப்போக்கில், திரும்பவும் பயனியர் சேவையைத் துவங்குவதற்குத் தயாரிப்பாக ஒரு சிறிய குடியிருப்பு வண்டியை (trailer) கட்டினார்.

நான் பள்ளிக்குச் செல்லுமுன், அம்மா எனக்கு வாசிக்க எழுத கற்றுக்கொடுத்தாள்; மேலும் நான் நான்காவது பெருக்கல் வாய்ப்பாடுவரை அறிந்திருந்தேன். நான் கற்றுக்கொள்ள உதவிசெய்வதிலேயே அவள் எப்போதும் கவனம் செலுத்தினாள். அவள் பாத்திரங்களைக் கழுவக் கழுவ நான் அவற்றைத் துடைக்கும்படி அவளருகே என்னை ஒரு நாற்காலியின்மீது நிற்க செய்தாள்; மேலும் வசனங்களை மனப்பாடம் செய்யவும் ராஜ்ய பாடல்கள் அல்லது துதிப்பாடல்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட பாடல்களைப் பாடுவதற்கும் அவள் சொல்லிக்கொடுத்தாள்.

என்னுடைய பெற்றோருடன் கடவுளைச் சேவித்தல்

ஒஹாயோவிலுள்ள கொலம்பஸில், நாங்கள் எல்லாரும், 1931-ல் அந்தக் கிளர்ச்சியூட்டும் மாநாட்டில் ஆஜராயிருந்தோம்; அங்குத்தான் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரைப் பெற்றோம். அப்போது எனக்கு வயது எட்டாகவே இருந்தாலும், நான் கேட்டிருந்தவற்றிலேயே மிக அழகான பெயர் அதுவே என நான் நினைத்தேன். நாங்கள் வீடு திரும்பியதற்குச் சற்றுப் பின்னர், அப்பாவின் தொழில் தீ பற்றியதால் தரைமட்டமாக்கப்பட்டது; அப்பாவும் அம்மாவும் இதை “கர்த்தருடைய சித்தம்” என்று எடுத்துக்கொண்டு, திரும்பவும் பயனியர் செய்ய துவங்கினர். இவ்வாறு, 1932-ன் கோடைக்காலத்தில் துவங்கி, முழுநேர ஊழியத்தில் நாங்கள் பல ஆண்டுகளை அனுபவித்துக் களித்தோம்.

இன்னும் சான் அன்டோனியோவிலிருந்த அம்மாவின் பெற்றோருக்கு அருகே இருக்கும்படி என் பெற்றோர், மத்திப டெக்ஸஸில் பயனியர் செய்தனர். நியமனத்திலிருந்து நியமனத்திற்கு மாறிக்கொண்டே இருந்தது, நான் அடிக்கடி பள்ளிகள் மாற்றியதை அர்த்தப்படுத்தியது. சில நேரங்களில் சிந்தனையற்ற சாட்சிகள், நான் சரியாகக் கவனிக்கப்படாததுபோல், “நீங்கள் ஏன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி அந்தக் குழந்தைக்கு ஒரு வீட்டைக் கொண்டிருக்கக்கூடாது,” என்று சொன்னார்கள். ஆனால் நான் எங்கள் வாழ்க்கை கிளர்ச்சியூட்டுவதாய் இருப்பதாயும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவர்களுடைய ஊழியத்தில் உதவுவதாகவும் நினைத்தேன். உண்மையில், பின்னர் என்னுடைய சொந்த வாழ்க்கை பாணியாக ஆகப்போகும் ஒன்றிற்காக நான் பயிற்றுவிக்கப்பட்டுத் தயாராக்கப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நான் முழுக்காட்டப்பட விரும்பியதை மாதக்கணக்காக அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்; அவர்களும் அடிக்கடி அதைக்குறித்து என்னிடம் பேசினார்கள். அது எவ்வளவு பொறுப்புவாய்ந்த ஒரு தீர்மானம் என்பதை நான் அறிந்திருப்பதை அவர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பினர். டிசம்பர் 31, 1934-ல், என் வாழ்வின் இந்த முக்கியத்துவம்வாய்ந்த சம்பவத்திற்கான நேரம் வந்தது. இருந்தாலும், அதற்கு முந்தின இரவில், நான் யெகோவாவிடம் ஜெபத்தில் அணுகியதை அப்பா நிச்சயப்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் அவர் ஓர் அழகான காரியத்தைச் செய்தார். எங்கள் எல்லாரையும் முழுங்காற்படியிடும்படி செய்து, அவர் ஒரு ஜெபத்தைச் செய்தார். தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்காகத் தன் சிறிய பெண் எடுத்த தீர்மானத்தைப்பற்றி அவர் மிகவும் சந்தோஷப்பட்டதாக அவரிடம் சொன்னார். வரும் எல்லா காலங்களிலும் நான் அந்த இரவை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று நீங்கள் நிச்சயமாக இருக்கலாம்!

என்னுடைய தாத்தா பாட்டியிடமிருந்து பயிற்றுவிப்பு

நான் 1928-ற்கும் 1938-ற்கும் இடையில், சான் அன்டோனியோவில் இருக்கும் என்னுடைய தாத்தா பாட்டியைச் சென்று பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டேன். அவர்களுடைய வழக்கமுறை என் பெற்றோரிடம் இருந்ததைப்போலவே பெரும்பாலும் இருந்தது. பாட்டி ஒரு கோல்போர்ட்டராக இருந்திருந்தார்; அப்போது பயனியர்கள் அவ்வாறே அழைக்கப்பட்டனர்; பின்னர் அவர் ஒரு பகுதி நேர பயனியராக ஆனார். தாத்தா டிசம்பர் 1929-ல் ஒரு பயனியராக நியமிக்கப்பட்டார்; ஆகவே வெளி ஊழியம் ஒரு தினசரி நடவடிக்கையாக இருந்தது.

இரவில் தாத்தா என்னைத் தனது கைகளில் தூக்கிவைத்துக்கொண்டு, நட்சத்திரங்களின் பெயர்களைக் கற்றுத்தருவார். தன் மனதிலிருந்து கவிதைகளை என்னிடம் மனப்பாடமாக ஒப்பிப்பார். இரயில்பாதைக்காக அவர் பணிபுரிந்தபோது, நான் அவரோடுகூட இரயிலில் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். நான் தொந்தரவில் இருக்கையில், எப்போதும் அவரை நோக்கிச் செல்லக்கூடிய ஒருவராக அவர் இருந்தார்; அவர் எனக்கு ஆறுதலளித்து என்னுடைய கண்ணீர்களைத் துடைத்துவிட்டார். இருப்பினும், நான் தவறாக நடந்துகொண்டதற்குச் சிட்சிக்கப்பட்டு, ஆறுதலுக்காக அவரிடம் சென்றால், அவர் வெறுமனே இவ்வாறு சொல்வார் (நான் அந்தச் சமயத்தில் புரிந்துகொள்ளாத வார்த்தைகள், ஆனால் அவற்றின் தொனி தெளிவாக இருந்தது): “கண்ணே, தவறு செய்பவனுடைய வழி கடுமையாக இருக்கிறது.”

துன்புறுத்தலின் வருடங்கள்

இரண்டாம் உலகப் போர், 1939-ல் துவங்கியது; யெகோவாவின் மக்கள் துன்புறுத்தலையும் வன்முறை கும்பல் தாக்குதல்களையும் அனுபவித்தனர். அம்மா, 1939-ன் கடைசியில் மிகவும் நோய்வாய்ப்பட்டாள்; முடிவில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது; ஆகவே நாங்கள் சான் அன்டோனியோவிற்குத் திரும்பவும் சென்றுவிட்டோம்.

சான் அன்டோனியோவின் தெருக்களில் நாங்கள் பத்திரிகை ஊழியம் செய்கையில் கலகக் கும்பல்கள் கூடிவிடும். ஆனால் ஒவ்வொரு வாரமும், ஒரு குடும்பமாக நாங்கள் எங்களுக்கென்று நியமிக்கப்பட்ட மூலையில் நின்றோம். அப்பாவை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் இழுத்துச் செல்வதை நான் அடிக்கடி பார்த்தேன்.

அம்மா பயனியர் செய்வதை நிறுத்தவேண்டியதாக இருந்தாலும், அப்பா தொடர்ந்து செய்ய முயற்சி செய்தார். இருந்தபோதிலும், பகுதி நேர வேலையின்மூலம் போதுமான அளவிற்குச் சம்பாதிக்க முடியாததால், அவரும் நிறுத்தவேண்டியதாயிற்று. நான் 1939-ல் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, நானும் வேலைக்குச் சென்றேன்.

அப்பாவின் பெயர் ஜட்ஜ் (நீதிபதி), அந்த வருடங்களில் உதவியாக இருந்தது. உதாரணமாக, சான் அன்டோனியோவிற்குச் சற்று வடக்கிலுள்ள பட்டணத்தில் ஒரு தொகுதியான சாட்சிகள் பிரசங்கிக்க சென்றனர்; அவ்விடத்து முதல்வர் அவர்கள் எல்லாரையும் சிறையிலடைக்கத் துவங்கினார். என்னுடைய தாத்தா பாட்டி உட்பட சுமார் 35 பேரை அவர் சிறையிலடைத்திருந்தார். அவர்கள் அப்பாவுக்குச் சொல்லிவிட்டிருந்தார்கள்; அவர் அங்குச் சென்றார். அந்த முதல்வரின் அலுவலகத்திற்குள் அவர் சென்று, இவ்வாறு சொன்னார்: “நான் சான் அன்டோனியோவிலிருந்து வரும் ஜட்ஜ் நாரிஸ்.”

“சரி சார், நீதிபதியே, உங்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்?” என்று அந்த முதல்வர் கேட்டார்.

“நான் இந்த மக்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கான வழியைப் பார்க்க வந்திருக்கிறேன்,” என்று அப்பா பதிலளித்தார். அதோடு அந்த முதல்வர் ஜாமீனின்றி அவர்கள் விடுபட அனுமதித்தார்—அதற்குமேல் எந்தக் கேள்விகளும் இல்லை!

உள்நகர் அலுவலகக் கட்டடங்களில் சாட்சி பகர அப்பா விரும்பினார்; முக்கியமாக நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் சந்திக்க விரும்பினார். அவர் வரவேற்பாளரிடம் சொல்வார்: “நான் ஜட்ஜ் நாரிஸ், நான் ஜட்ஜ் இன்னாரைப் பார்க்க வந்திருக்கிறேன்.”

பின்னர், அவர் அந்த ஜட்ஜைச் சந்தித்தபோது, அவர் எப்போதும் முதலில் இவ்வாறு சொன்னார்: “இப்போது, என்னுடைய சந்திப்பிற்கான காரணத்தைப்பற்றி பேசுமுன், நான் உங்களைவிட அதிக நாட்கள் ஜட்ஜாக இருந்திருக்கிறேன் என்பதை விவரிக்க விரும்புகிறேன். நான் என் வாழ்க்கை முழுவதும் அவ்வாறு இருந்திருக்கிறேன்.” பின்னர் தான் எப்படி அந்தப் பெயரைப் பெற்றார் என்று விவரிப்பார். இது ஒரு சிநேகபான்மையான துவக்கமாக இருந்தது; அக்காலங்களில் இருந்த நீதிபதிகளுடன் அவர் பல நல்ல உறவுகளை வளர்த்தார்.

பெற்றோரின் வழிநடத்துதலுக்காக நன்றி

நான் குழப்பம் நிறைந்த பருவ வயது வருடங்களில் இருந்தேன்; அடுத்து என்ன செய்வேன் என்பதைக் கவனித்து யோசிக்கையில் அப்பாவும் அம்மாவும் பல தடவைகள் தங்கள் மூச்சைப்பிடித்துக்கொண்டு இருந்தனர் என்பதை அறிவேன். எல்லா பிள்ளைகளும் செய்வதைப்போல, நான் பல முறை அப்பாவையும் அம்மாவையும் சோதித்திருக்கிறேன்; அவர்களுடைய பதில் வேண்டாம் என்று இருக்கும் என்பதை முன்னரே அறிந்துகொண்டு, எதையாவது செய்வதற்கு அல்லது எங்காவது போவதற்குக் கேட்பதன்மூலம் அவ்வாறு செய்திருக்கிறேன். சில நேரங்களில் கண்ணீராக இருந்தது. உண்மையில், அவர்கள் எப்போதாவது, “போய் உன் இஷ்டப்படி செய். எங்களுக்குக் கவலை இல்லை,” என்று சொல்லியிருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன்.

அவர்களுடைய தராதரங்களை மாற்றும்படி நான் அவர்கள்மீது செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதை அறிந்திருந்தது எனக்கு ஒரு பாதுகாப்புணர்ச்சியைக் கொடுத்தது. உண்மையில், இது மற்ற இளைஞர் ஞானமற்றப் பொழுதுபோக்குகளைக் குறிப்பிடும்போது, எனக்குப் பதில் சொல்வதை எளிதாக்கியது; ஏனென்றால் நான் இவ்வாறு சொல்ல முடியும்: “என் அப்பா என்னை அனுமதிக்கமாட்டார்.” எனக்கு 16 வயதாக இருந்தபோது, நான் கார் ஓட்டக் கற்றுக்கொள்வதையும் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றுக்கொள்வதையும் அப்பா நிச்சயப்படுத்திக்கொண்டார். மேலும், ஏறக்குறைய இந்தச் சமயத்தில் வீட்டிற்கான ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். அவர் என்னை நம்பினார் என்பது என்னை மிகவும் நெகிழச் செய்தது. நான் மிகவும் வளர்ந்த பெரியவளாக உணர்ந்தேன்; அது எனக்கு ஒரு பொறுப்புணர்ச்சியையும், அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏமாற்றமளித்துவிடக்கூடாது என்ற ஆசையையும் கொடுத்தது.

அந்தக் காலங்களில் திருமணத்தைப்பற்றி அதிகப்படியான ஆலோசனை கொடுக்கப்படவில்லை; ஆனால் பைபிளையும், அது “கர்த்தருக்குள் உட்பட்டவனை மாத்திரமே” திருமணம் செய்வதைப்பற்றி சொல்வதையும் அப்பா அறிந்திருந்தார். (1 கொரிந்தியர் 7:39, NW) நான் எப்போதாவது ஓர் உலகப்பிரகாரமான பையனை வீட்டிற்கு அழைத்துவந்தாலோ, அல்லது அப்படிப்பட்ட ஒருவனுடன் பழகுவதற்காகச் சந்தித்தாலோ, அவருடைய ஏமாற்றம் சமாளிப்பதற்கரிதானதாக இருக்கும் என்பதை அவர் எனக்குத் தெளிவாக்கி இருந்தார். அவர் சொன்னது சரி என்பதை நான் அறிந்திருந்தேன்; ஏனென்றால் அவர்கள் “கர்த்தருக்குள்” திருமணம் செய்ததால் அவர்களுடைய திருமணத்தில் இருந்த மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் நான் பார்த்திருக்கிறேன்.

எனக்கு 18 வயதாய் இருந்தபோது, 1941-ல், சபையிலிருந்த ஒரு வாலிபனிடம் நான் காதல் கொண்டிருந்ததாக நினைத்தேன். அவர் ஒரு பயனியராகவும் வழக்கறிஞர் ஆகும்படி படித்துக் கொண்டும் இருந்தார். நான் கிளர்ச்சி அடைந்தேன். நாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதை என் பெற்றோரிடம் நாங்கள் சொன்னபோது, மறுப்புத் தெரிவிப்பதற்கு அல்லது தடைசெய்வதற்கு மாறாக, அவர்கள் வெறுமனே இவ்வாறு சொன்னார்கள்: “ப்லாஸம், நாங்கள் உன்னிடம் ஒரு தயவைக் கேட்க விரும்புகிறோம். நீ மிகவும் இளமையாக இருப்பதாக நாங்கள் உணருகிறோம்; உன்னை ஒரு வருடம் காத்திருக்கும்படி கேட்க விரும்புகிறோம். நீங்கள் உண்மையில் காதல் கொண்டிருந்தால், ஒரு வருடம் ஒரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது.”

அந்த ஞானமான ஆலோசனைக்கு நான் செவிசாய்த்ததற்கு மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். அந்த வருடத்திற்குள், நான் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து, ஒரு நல்ல திருமண துணையை உருவமைக்கும் குணாதிசயங்கள் இந்த இளம் மனிதனிடம் இல்லை என்பதைப் பார்க்க துவங்கினேன். அவர் கடைசியில் அமைப்பைவிட்டு வெளியே சென்றுவிட்டார்; நானும் என் வாழ்வில் பெருஞ்சேதமாக இருந்திருக்கும் ஒன்றைத் தப்பித்துவிட்டேன். அவர்களுடைய கணிப்பில் சார்ந்திருக்கக்கூடிய அளவிற்கு ஞானமான பெற்றோரைக் கொண்டிருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது!

திருமணமும் பயண வேலையும்

ஆறு வருடங்கள் பயனியர் செய்வதிலும், பகுதி நேர வேலையிலும் செலவிட்டப்பின், 1946-ன் குளிர்காலத்தில், நான் சந்தித்ததிலேயே மிகச் சிறந்த இளம் மனிதர் ராஜ்ய மன்றத்திற்குள் நுழைந்தார். சகோதரர்களுக்குப் பயண ஊழியராயிருந்தவருக்குத் துணையாக ஜீன் ப்ரான்ட் நியமிக்கப்பட்டிருந்தார்; வட்டாரக் கண்காணி அப்போது அவ்வாறே அழைக்கப்பட்டார். அது பரஸ்பர கவர்ச்சியாக இருந்தது; ஆகஸ்ட் 5, 1947-ல் எங்களுக்குத் திருமணமானது.

சீக்கிரத்தில், அப்பாவும் ஜீனும் ஒரு கணக்குப்பதிவு அலுவலகத்தைத் திறந்தனர். ஆனால் அப்பா ஜீனிடம் சொன்னார்: “ஒரு கூட்டத்தை அல்லது ஒரு தேவராஜ்ய வேலையை இந்த அலுவலகம் தடுக்கும் நாளில், நான் கதவைப் பூட்டி சாவியை எறிந்துவிடுவேன்.” யெகோவா இந்த ஆவிக்குரிய நோக்குநிலையை ஆசீர்வதித்தார்; அந்த அலுவலகம் எங்களுடைய பொருளாதார தேவைகளுக்குப் போதுமானவற்றைக் கொடுத்துப் பயனியர் செய்வதற்கும் சமயம் அனுமதித்தது. அப்பாவும் ஜீனும் வியாபாரத்தொழிலில் சிறந்தவர்களாய் இருந்தனர்; நாங்கள் எளிதாகச் செல்வந்தராகி இருக்கலாம், ஆனால் இது ஒருபோதும் அவர்களுடைய இலக்காக இருக்கவில்லை.

ஜீன் 1954-ல், வட்டார வேலைக்கு அழைக்கப்பட்டார்; இது எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறித்தது. என்னுடைய பெற்றோர் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? மறுபடியும், அவர்கள் தங்களைக்குறித்துக் கவலைகொள்ளாமல், கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளுக்காகவும் தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனுக்காகவும் கவலைகொண்டனர். அவர்கள் ஒருபோதும் இவ்வாறு எங்களிடம் சொல்லவில்லை: “நீங்கள் ஏன் எங்களுக்குப் பேரக்குழந்தைகளைத் தரக்கூடாது?” பதிலாக, அது எப்போதும் இவ்வாறாக இருந்தது: “முழுநேர ஊழியத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”

ஆகவே நாங்கள் விடைபெறவேண்டிய நாள் வந்தபோது, எங்களுடைய மகத்தான சிலாக்கியத்தைக்குறித்து உற்சாகமளிக்கும் வார்த்தைகளும் சந்தோஷமுமே இருந்தன. நாங்கள் அவர்களைக் கைவிட்டுவிடுவதாக அவர்கள் எங்களை ஒருபோதும் உணர வைக்கவில்லை; ஆனால் 100 சதவீதம் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். நாங்கள் சென்றபின், அவர்கள் இன்னொரு பத்து வருடங்களுக்குப் பயனியர் வேலையில் தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டனர். சான் அன்டோனியோவிற்கு நகர கண்காணியாக அப்பா நியமிக்கப்பட்டார்; அவர் அந்த நிலையில் 30 வருடங்கள் இருந்தார். அவர் அந்த மாநகரத்தில் 1920-களில் ஒரு சபையிலிருந்து 1991-ல் அவர் மரிப்பதற்கு முன் 71 சபைகளாக வளருவதைப் பார்ப்பதில் சந்தோஷப்பட்டார்.

ஜீனுக்கும் எனக்கும் வாழ்க்கை கிளர்ச்சி நிறைந்ததாய் இருந்தது. நாங்கள் 31-ற்கும் மேற்பட்ட மாகாணங்களிலுள்ள அன்பான சகோதர சகோதரிகளைச் சேவிக்கும் பெரும் மகிழ்ச்சியை கொண்டிருந்தோம்; மேலும் அதில் சிறந்ததாக இருக்கக்கூடியது என்னவென்றால், 1957-ல் உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியடின் 29-ஆம் வகுப்பிற்குச் செல்லும் சிலாக்கியமாகும். அதற்குப்பின் நாங்கள் பயண வேலைக்குத் திரும்பினோம். வட்டார மற்றும் மாவட்ட வேலையில் 30 வருடங்களுக்குப்பின், 1984-ல், சங்கம் தயவாக ஜீனுக்குச் சான் அன்டோனியோவில் ஒரு வட்டார நியமிப்பை வழங்கியது; ஏனென்றால் எங்கள் பெற்றோர் தங்களுடைய 80-களிலும் உடல்நலக் குறைவுடனும் இருந்தனர்.

பெற்றோரைக் கவனித்தல்

நாங்கள் சான் அன்டோனியோவிற்குத் திரும்பிப்போய் ஒன்றரை வருடங்களே ஆகியிருந்தது; அம்மா பாதி உணர்விழந்த நிலைக்குச் சென்று மரித்துவிட்டாள். நான் அவளிடம் சொல்ல விரும்பிய காரியங்களில் சிலவற்றைச் சொல்லக்கூட முடியாதபடி அது அவ்வளவு விரைவாகச் சம்பவித்தது. இது அப்பாவிடம் நிறைய பேசும்படி எனக்குக் கற்றுக்கொடுத்தது. திருமணமாகி 65 வருடங்களுக்குப்பின், அவர் அம்மாவை மிகவும் தேடினார்; ஆனால் அன்பையும் ஆதரவையும் கொடுக்க நாங்கள் இருந்தோம்.

கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்லுதல், படிப்பு மற்றும் ஊழியத்தில் அப்பாவின் வாழ்நாள் முன்மாதிரி மரணம் வரையாகத் தொடர்ந்தது. அவர் வாசிப்பதை மிகவும் விரும்பினார். நாங்கள் ஊழியத்திற்குச் செல்லும்போது, அவர் தனியாக இருக்கவேண்டியதால், நான் வீட்டிற்கு வந்து “நீங்கள் தனிமையாக உணர்ந்தீர்களா?” என்று கேட்பேன். அவர் வாசிப்பதிலும் படிப்பதிலும் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்ததால், அந்த எண்ணமே அவர் மனதில் தோன்றியிருக்கவில்லை.

நாங்கள் காத்துவந்த மற்றொரு வாழ்நாள் பழக்கம் இருந்தது. குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுவதை, குறிப்பாகத் தினசரி வேதவாக்கியம் கலந்தாலோசிக்கப்படும் காலை உணவுநேரத்தின்போது சேர்ந்திருப்பதில் அப்பா எப்போதும் விடாப்பிடியாக இருந்தார். நான் அதைச் செய்யாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. சிலநேரங்களில் நான் சொல்லுவேன்: “ஆனால் அப்பா, நான் பள்ளிக்கு (அல்லது வேலைக்கு) தாமதமாகிவிடுவேன்.”

“தினவாக்கியம் உன்னைத் தாமதப்படுத்தவில்லை; நீ சரியான நேரத்திற்கு எழுந்திருக்கவில்லை,” என்று அவர் சொல்லுவார். நான் இருந்து அதைக் கேட்க வேண்டும். இந்த நல்ல முன்மாதிரி அவருடைய வாழ்நாட்களின் கடைசி வரை நிலைத்திருப்பதை அவர் நிச்சயப்படுத்திக்கொண்டார். இது அவர் எனக்காக விட்டுச்சென்ற மற்றொரு சுதந்தரம்.

அப்பா கடைசி வரை மனம் சம்பந்தமாகச் சுதாரிப்புடன் இருந்தார். அவரைக் கவனிப்பதை எளிதாக்கியது என்னவென்றால், அவர் ஒருபோதும் அற்ப காரியங்களுக்கும் படபடப்பவராகவோ குறைகூறுபவராகவோ இல்லாததே ஆகும். ஓ, சிலநேரங்களில் அவர் தன்னுடைய மூட்டுவீக்கத்தைப்பற்றி (arthritis) குறிப்பிடுவார்; ஆனால் நான் அவருக்கு உண்மையில் இருப்பது “ஆதாமியவீக்கம் (Adamitis),” என்று சொன்னதும் அவர் சிரிப்பார். ஜீனும் நானும் அவர் அருகில் உட்கார்ந்திருக்கையில், அப்பா சமாதானமாக, நவம்பர் 30, 1991 அன்று காலையில் மரணமடைந்தார்.

எனக்கு இப்போது 70 வயதுக்கு மேலானபோதிலும், இன்னும் என்னுடைய அன்பான கிறிஸ்தவ பெற்றோரின் நல்ல முன்மாதிரியால் பயனடைந்துகொண்டிருக்கிறேன். மேலும் இந்தச் சுதந்தரிப்பை வருங்காலம் முழுவதும் சரியாகப் பயன்படுத்துவதன்மூலம் அதற்கான என்னுடைய முழுப் போற்றுதலையும் நிரூபிக்க வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த ஜெபமாக இருக்கிறது.—சங்கீதம் 71:17, 18.

[பக்கம் 5-ன் படம்]

அம்மாவும் நானும்

[[பக்கம் 7-ன் படம்]]

1. என்னுடைய முதல் மாநாடு: சான் மார்கோஸ், டெக்ஸஸ், செப்டம்பர் 1923

2. அப்பாவின் கடைசி மாநாடு: ஃபோர்ட் வொர்த், டெக்ஸஸ், ஜூன் 1991 (அப்பா உட்கார்ந்தவண்ணம்)

[பக்கம் 9-ன் படம்]

ஜீன் மற்றும் ப்லாஸம் ப்ரான்ட்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்