கோஸ்டாரிகா வட்ட கற்களின் மர்மம்
கோஸ்டாரிகாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
உறுதியான வட்ட கற்களை, பல்வேறு அளவுகளில், சுமார் 16 நூற்றாண்டுகளுக்கு முன், தென்மேற்கு கோஸ்டாரிகா மக்கள் செதுக்கியுள்ளனர். பத்து சென்டிமீட்டர் விட்டமுடைய சிறு வட்ட கல் முதல் 2.4 மீட்டர் விட்டமுடைய பெரிய வட்ட கல் வரை செதுக்கினார்கள். துல்லிய அளவுகளோடு, படு கச்சிதமாகச் செய்யப்பட்டிருக்கும் இந்த வட்ட கற்களைப் பார்த்ததும், ‘இவற்றை எப்படி செய்தார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்?’ என்ற ஆவலைத் தூண்டும் கேள்விகள் தானாக எழுகின்றன.
சிலி, மெக்ஸிகோ, ஐக்கிய மாகாணங்கள் உட்பட பல நாடுகளில் வட்ட வடிவ பாறைகள் காணப்படுவது என்னவோ உண்மை. ஆனால் கோஸ்டாரிகாவின் வட்ட கருங்கல்லிற்கு ஈடிணையே கிடையாது. அவற்றின் தரமோ சூப்பர். வழவழப்பான மேற்பரப்போடு, வட்ட வடிவத்திற்கே இலக்கணமாய் சில கற்கள் திகழ்கின்றன. அவற்றை பெரும்பாலும் 20 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஒருசேர காணலாம். ஆனால் பல கற்கள் ஜியோமிட்டரி வடிவங்களில், அதாவது முக்கோணம், செவ்வகம், நேர் கோடிகள் போன்ற வடிவங்களில் அடுக்கி வைத்திருப்பதை காணும்போது நம் ஆர்வம் கொழுந்துவிட்டு எரிகிறது. அவ்வாறு கற்களை அடுக்கி வைத்தபோது பெரும்பாலும் புவியின் வடக்கு காந்த புலத்தை சுட்டிக்காட்டும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.
டிகிஸ் ஆற்றுப்படுகையில் ஏராளமான வட்ட கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வட்ட கற்கள், பால்மார் சூர், போனஸ் அயர்ஸ், கொல்பீட்டோ போன்ற தென் நகரங்களின் அருகிலும், கவானாகாஸ்டெ மாகாணத்தின் வடக்கேயும், மத்திய சமவெளியிலும் காணப்படுகின்றன. வட்ட கற்கள் செதுக்கப்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய தடயங்களை, இந்தக் கற்களோடு கிடைத்த மற்ற கலைப்பொருட்களிலிருந்து பெறலாம். ஒருசில மர்ம கற்கள் பொ.ச. 400 வருடத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகிறார்கள். பொ.ச. 800-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் ஏராளமான கற்கள் வெளிவந்திருக்கின்றன. மக்கள் குடியிருந்ததாக தெரிகிற பகுதிகளிலும், கல்லறைகளின் அருகிலும் சில கற்களை கண்டெடுத்துள்ளனர். காலத்தினூடே, கற்களில் உள்ளே புதையலை எதிர்பார்த்த மக்கள், அவற்றை உடைத்து நாசம் செய்தனர். இப்படியெல்லாம் நாசம் செய்தும், சுமார் 130 கற்கள் கைவசம் இருப்பதாக கோஸ்டாரிகா தேசிய மீயூஸியம் பட்டியலிடுகிறது. ஆனால் பட்டியலிடப்படாத எத்தனையோ கற்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எண்ணுவது கஷ்டம். அவற்றை உருவாக்கிய இடத்திலேயே விட்டுவைத்திருந்தால் எண்ணிவிடலாம். ஆனால் அவற்றை எடுத்து சென்று, தனியார் இடங்களை, அதாவது தோட்டங்களையும், சர்ச்சுகளையும் அழகுபடுத்திவிட்டார்கள். போதாக்குறைக்கு மண்ணில் வேறு புதைந்து கிடைக்கின்றன. அடர்ந்த காடுகளில் மாட்டிக்கொண்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் தேடினால், நிச்சயம் நிறைய கிடைக்கும்.
அவற்றை எவ்வாறு செய்தார்கள்? அதுதான் மர்மம். இவ்வளவு துல்லிய அளவுகளோடு செய்ய நிச்சயம் இயந்திரத்தின் உதவி தேவைப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. வட்ட கற்களை செதுக்கிய சிற்பிகளின் தலைசிறந்த கைவண்ணம் அக்காலத்து சிற்பங்கள் பலவற்றில் பளிச்சிடுகிறது. தங்கத்தால் பொருட்களை உருவாக்க கடும் உஷ்ணம் தேவை. பொ.ச. 800-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழம்பெரும் தங்க கலைப்பொருட்களைக் காணும் போது கடும் உஷ்ணத்தை பிரயோகித்து வேலைசெய்வதில் இவர்கள் கில்லாடிகள் என்பதை அடித்துக்கூறமுடியும். பாறையின் மேற்பரப்புகளை நீக்கி, வட்ட வடிவமாக கற்களை செதுக்க, முதலில் கல்லை பயங்கரமாக சூடாக்கி, பிறகு குளிர வைக்கும் முறையைப் பின்பற்றியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. கடைசியில் மணல் அல்லது தோல் கொண்டு பாலிஷ் செய்து வட்ட கற்களை செய்து முடித்திருப்பார்கள்.
பெரிய வட்ட கற்கள், “கலைஞனின் நுட்பமான கலை படைப்புகள். டேப்பு, தூக்குக்குண்டு ஆகியவற்றை கொண்டு அளந்து பார்த்தாலும், குறையே காண முடியாதபடி, [வட்டங்களோ] படு துல்லியம்” என்கிறார் ஒரு விஞ்ஞானி. இந்தத் துல்லியத்தை பார்க்கும்போது, அந்த ஊர் மக்கள் கணிதத்தில் புலிகள், கலை வடிப்பதில் மன்னர்கள், சிற்ப உளிகளை கையாளுவதில் சூரர்கள் என்று புரிகிறது. ஆனால் அம்மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாததால், எப்படி வட்ட கற்களை வடித்தார்கள் என்ற பதிவும் இல்லாமல் போயிற்று.
பெரும்பாலன வட்ட கற்களை ஏதோவொருவகை கருங்கல் பாறையிலிருந்தே செதுக்கியுள்ளார்கள். ஆனால் கல்லெடுக்கும் சுரங்கம் ஏதும் பக்கத்தில் இல்லையே! டிகிஸ் ஆற்றுப்படுகைக்கு அருகில் இருக்கும் சுரங்கத்தை எடுத்துக்கொண்டாலும், அது சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தில் மலை உச்சியில் அல்லவா இருக்கிறது! அப்படியென்றால், அவ்வளவு கனமான கற்களை அங்கிருந்து எப்படித்தான் சிற்பிகள் கொண்டுபோயிருப்பார்கள்? ஒருவேளை சுரங்கத்திலேயே வட்ட கல்லை செதுக்கியிருந்தால், அவற்றை மிகவும் பத்திரமாக கீழே இறக்கியிருக்க வேண்டும். யானை கனம் கனக்கும் கல்லை, எந்தவொரு நவீன கருவியும் இன்றி, அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டுவர எப்படியெல்லாம் சிரமப்பட்டிருப்பார்கள் என்று யோசிக்க முடிகிறதா? அது சரி, உண்மையில் கல் எவ்வளவு கனம் இருந்தது? 16 டன்னுக்கு மேல்! என்ன மூக்கில் விரலை வைக்க தோன்றுகிறதா?
அப்படியே, கருங்கல்லை வெட்டியெடுத்து, வேறு இடத்தில் செதுக்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போதுகூட, 2.4 மீட்டர் விட்டமுடைய வட்ட கல்லை உருவாக்க, 2.7 கன மீட்டர் அளவான பாறை வேண்டுமே! அதன் எடை 24 டன்னுக்குமேல் போகுமே! மேலும் கற்களை கொண்டுவர கரடுமுரடு இல்லாத, நல்ல அகலமான ரோடு தேவை. அதற்காக அம்மக்கள் அடர்ந்த காடுகளை வெட்டியிருக்க வேண்டும். இவையெல்லாம் சாமான்னிய விஷயமா! சுண்ணாம்பு கற்கள் போலிருக்கும் கோக்கினா கற்களால், ஒருசில வட்ட கற்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவை டிகிஸ் ஆற்று முகப்பின் அருகிலுள்ள கடற்கரையில் காணப்படுகின்றன. அப்படியென்றால் மிதவையில் கற்களை சுமந்துகொண்டு, சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு நீரோட்டத்தை எதிர்த்து பயணித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பசிபிக் கடற்கரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கேனா தீவிலும் சில வட்ட கற்கள் உள்ளன.
இத்தகைய வட்ட கற்களை ஏன் உருவாக்கினார்கள் என்பது மர்மமாக உள்ளது. பழங்குடி மக்கள் தலைவனின் அல்லது ஒரு கிராமத்தின் அருமை பெருமைகளை பறைசாற்ற கற்களை வட்டமாக செதுக்கியிருக்கலாம். மதத்தின் அல்லது சடங்காச்சாரத்தின் சின்னங்களாகவும் அவை இருந்திருக்கலாம். எது எப்படியோ, ஒருநாள் புதைப்பொருள் ஆராய்ச்சியின் உதவியால் கோஸ்டாரிகா வட்ட கற்களின் மர்மம் வெளிவரலாம்.
[பக்கம் 22, 23-ன் வரைப்படம்]
கோஸ்டாரிகா
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 23-ன் படம்]
வட்ட கல்லின் பின்னால் நிற்கும் என்ஜினைப் பார்த்தால், அம்மாடியோ கல்லு எவ்வளவு பெருசு!
[படத்திற்கான நன்றி]
நன்றி: National Museum of Costa Rica
[பக்கம் 24-ன் படங்கள்]
கோஸ்டாரிகா தேசிய மீயூஸிய வளாகத்தில் வட்ட கற்கள்
செதுக்கப்பட்ட காலம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத இப்பெரிய வட்ட கல்லின் விட்டமோ 8.5 அடி
[படத்திற்கான நன்றி]
நன்றி: National Museum of Costa Rica