எமது வாசகரிடமிருந்து
உலகமே ஒரு தோட்டம் “உலகமே ஒரு தோட்டம்—கனவா எதிர்கால நனவா?” (ஏப்ரல் 8, 1997) என்ற தலைப்பிலிருந்த பிரமாதமான தொடர் கட்டுரைகளுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆம், தோட்டங்களும் நிறங்களும் நம்முடைய உடல்நிலையைப் பாதிப்பதோடில்லாமல் நம்மை மகிழ்ச்சியாகவும் உணரச் செய்கின்றன. “பரதீஸுக்கு திரும்பும் வழி” என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “வழி இதுவே” என்று விடுக்கப்பட்ட அழைப்பில் இருந்த அந்த ஒருசில வார்த்தைகள் காதில் இன்பத்தேனாய் பாய்ந்தன. எதிர்காலத்தில், காலைத் தொடங்கி மாலை வரை இந்தப் பூமியை ஒரு அழகிய நந்தவனமாக மாற்றிட உதவுவதில் கிடைக்கும் இன்பமே தனிதான்! வண்ணம் தீட்டுவதிலும், சித்திரங்கள் வரைவதிலும், கைவேலைப்பாடுகள் செய்வதிலும் எனக்கு அலாதி பிரியம். அதனால் உங்கள் பத்திரிகையில் வரும் படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.
வி. ஆர்., ஆஸ்திரேலியா
இந்தக் கட்டுரைகளுக்காக நான் உங்களை பாராட்ட விரும்புகிறேன். அவற்றை ஒருவரிகூடவிடாமல் படித்து மகிழ்ந்தேன். எனக்கு கிட்டத்தட்ட 80 வயதாகிறது. ஆனால், இன்னும் என்னுடைய கொல்லைப்புறத்தில் வேலை செய்ய எனக்கு ரொம்ப ஆசை. நான் பயிர் செய்த பூக்களும் காய்கறிகளும் கண்காட்சியில் வைக்கப்போனால் முதல் பரிசைப் பெறுபவையாக இருக்காது; ஆனாலும், கொல்லைப்புறத்தில் அவற்றுடன் இருந்து வேலை செய்வதென்றால் ரொம்ப பிடிக்கும். அந்தக் கட்டுரைகளைப் படித்த பிறகு, மனிதர்கள் தோட்டங்களில் வேலை செய்ய ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதை நன்றாக புரிந்துகொண்டேன்.
ஆர். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
திருமணத்தை காக்க முடியுமா? “துரோகம் செய்தபிறகு திருமணத்தை காக்க முடியுமா?” (ஏப்ரல் 8, 1997) என்ற கட்டுரையை வாசித்தபோது, யெகோவா எனக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் என்றே நான் உணர்ந்தேன். அதில், என் வாழ்க்கையில் என்னவெல்லாம் நேரிட்டதோ, நான் எப்படியெல்லாம் உணர்ந்தேனோ, அது அப்படியே விவரிக்கப்பட்டிருந்தது. என் கணவர் எனக்கு துரோகம் செய்தார், ஆனால், உள்ளப்பூர்வமாக மனந்திரும்பினார். அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தபடி, பலத்த சூறாவளியில் சிக்கிக்கொண்டதைப்போல உணர்ந்தேன். அவரை மன்னித்துவிடலாமென்று முடிவு செய்தேன்; ஆனால் சிலசமயங்களில் நான் சிந்தித்த விதத்தைக் குறித்து நானே வெட்கமடைந்தேன். என்னுடைய உணர்ச்சிப் பிரதிபலிப்பு மிகவும் இயல்பானதே, நியாயமானதே என்பதை புரிந்துகொள்ள அந்தக் கட்டுரை எனக்கு உதவி செய்தது. யெகோவா எங்களுடைய முயற்சிகளை பெரிதும் ஆசீர்வதித்திருக்கிறார், எங்களுடைய திருமணத்தையும் காத்துக்கொண்டோம்.
எல். பி., பிரான்ஸ்
என் திருமணத்தை காக்க முடியவில்லை; இருந்தாலும்கூட, என்னுடைய உணர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டியதால் இக்கட்டுரை நிஜமாகவே ஆசீர்வாதமாக இருந்தது. இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சூழ்நிலைமையும் என் வாழ்க்கையையே எனக்கு ஞாபகமூட்டின. இதிலிருந்து என்னைப் போலவே நன்மையடைந்த மற்றவர்களையும்கூட எனக்கு தெரியும். எங்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்வது அநேகருக்கு கடினமாயிருக்கிறது; ஆகவே, இந்தக் கட்டுரை, அத்தகைய நபர்களுக்கு எங்களை ஆழமாக புரிந்துகொள்ள மிகப்பெரிய விதத்தில் உதவும்.
எம். சி., அயர்லாந்து
விசுவாசத்தில் இல்லாத என் கணவரோடு நான் ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். அவர் எனக்கு துரோகமிழைத்து வருகிறார். “அந்தத் திருமணம் காப்பாற்றப்படக்கூடியதா?” என்ற உபதலைப்பில் வந்த பாராக்களை வாசித்தபோது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. என் கணவர் அந்தப் பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டு, அதேசமயத்தில் என்னோடும் வாழவும் விரும்புகிறார். எனவே, எங்களுடைய திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது ஒற்றைத் தாயாக என் வாழ்க்கையை தொடரப்போகிறேன்.
எம். எஸ். பி., ட்ரினிடாட்
அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஜாக்கிரதையாகவும் கையாளப்பட்ட கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. உறவை திரும்பக் ஸ்தாபிக்கலாமென்றால், அது வெற்றிபெறுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குரிய ஆலோசனை மிகச் சிறந்தவை. என் கணவர் எனக்கு துரோகம் செய்வாரென்றால், அவரை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் என்றுதான் எப்போதுமே நினைத்திருக்கிறேன். ஆனால், அது சரியான மனநிலை அல்லவென்று இப்போது புரிந்துகொண்டேன். இது தெளிவாகவே வளர்ந்துவருகிற பிரச்சினையாக இருக்கிறதென்பது வெட்கத்துக்குரியதுதான்; ஆனாலும், எங்களுக்கு நாங்களே எப்படி உதவி செய்துகொள்ளலாம் என்பதற்கு வேதப்பூர்வ உட்பார்வையை அளித்ததற்கு உங்களுக்கு நன்றி. என் கணவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பினார். (இன்றும் அவ்வாறே இருக்கிறார்); அதனால், யெகோவாவின் மேல் சார்ந்திருப்பதானது ஆழமான மனச்சோர்வு ஏற்பட்டபோதும், மன்னிப்பதற்குரிய பலத்தை கண்டடைய எனக்கு உதவி செய்தது.
எஸ். என்., ஐக்கிய மாகாணங்கள்
செவிடர் யெகோவாவை துதிக்கின்றனர் “செவிடர் யெகோவாவை துதிக்கின்றனர்” (ஏப்ரல் 8, 1997) என்ற கட்டுரையை வாசிக்கையில், அதற்கு ஆஜரானவர்களின் படத்தை பார்ப்பதற்காக சற்றே வாசிப்பதை இடையில் நிறுத்தினேன். யெகோவாவை துதிப்பதற்காக சைகை மொழியைப் பயன்படுத்தும் திரளான சகோதர சகோதரிகளை பார்ப்பது எந்தளவுக்கு விசுவாசத்தை பலப்படுத்துகிறது! அவர்களுடைய வைராக்கியத்தையும், திடதீர்மானத்தையும், ஒப்புக்கொடுத்தலையும் மனதுக்குள் பெரிதும் பாராட்டியபோது, எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இத்தகைய கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றி.
ஆர். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்