தவர வகைகள் அழிகின்றன—ஏன்?
சீனாவில், கிட்டத்தட்ட 10,000 வகை கோதுமைகள் 1949-ம் வருடத்தில் பயிர் செய்யப்பட்டன. இருப்பினும், 1970-ம் ஆண்டுக்குள்ளாக, 1,000 வகைகள் மட்டுமே தொடர்ந்து பயிர் செய்யப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில், 1804-ம் ஆண்டிலிருந்து 1904-ம் ஆண்டு வரையாக பயிர் செய்யப்பட்டவை என்பதாக அறிவிக்கப்பட்ட 7,098 வகை ஆப்பிள்களில் சுமார் 86 சதவீதம் பூண்டோடு அழிந்துவிட்டன. கூடுதலாக, உணவுக்கும் விவசாயத்துக்குமான உலக தாவரங்களின் மரபு வள நிலை அறிக்கையின்படி, (ஆங்கிலம்) “முட்டைக்கோஸின் 95 சதவீத வகைகளும், ஒருவகை சோளத்தின் 91 சதவீத வகைகளும், பட்டாணியின் 94 சதவீத வகைகளும், தக்காளியின் 81 சதவீத வகைகளும் அழிந்துவிட்டன என்பது வெட்டவெளிச்சமாகிறது.” உலக முழுவதிலுமுள்ள நாடுகளிலிருந்தும் இதேவிதமான புள்ளிவிவரங்கள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. ஏன் இந்தத் திடீர் வீழ்ச்சி? வணிகத்திற்கான நவீன விவசாயத்தின் பரவலான அதிகரிப்பும், சிறு குடும்ப பண்ணைகளின் படிப்படியான மறைவுமே இதற்கான முக்கிய காரணம்; இதனால், காலங்காலமாக பயிர்செய்யப்பட்டுவந்த, பெருமளவு வேறுபாட்டை உடைய பயிர் வகைகள் அழிந்துவிட்டன என்று சிலர் சொல்கின்றனர்.
தாவர வகைகளின் அழிவு, பயிர்களின் விளைச்சல் எளிதில் பாதிக்கப்படும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. உதாரணமாக, 1845-ம் ஆண்டிலிருந்து 1849-ம் ஆண்டு வரையாக அயர்லாந்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உருளைக்கிழங்கு பஞ்சத்தை கவனியுங்கள். தாவர நோய் ஒன்று பெரும் எண்ணிக்கையான உருளைக்கிழங்கு செடிகளை அழித்ததால் ஏறத்தாழ 7,50,000 மக்கள் பட்டினியால் மரித்தனர். இந்தப் பேரிழப்பிற்கு உயிரியல்ரீதியான காரணம் என்ன? “மரபுவழி ஒற்றுமை” என்று ஐக்கிய நாடுகளின் ஒரு அறிக்கை சொல்கிறது.
1970-களிலும் 1980-களிலும் தாவர மரபுவழி வளங்களை ஒன்றுதிரட்டி, பாதுகாப்பதற்காக உலகமுழுவதிலும் 1,000-க்கும் மேற்பட்ட, தாவர மரபணு வங்கிகள் நிறுவப்பட்டன. ஆனால், இத்தகைய மரபணு வங்கிகளில் பெரும்பாலானவை விரைவாக தரமிழந்து வருகின்றன. மேலும், அவற்றில் சில ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. இன்று சுமார் 30 நாடுகள் மட்டுமே தாவர விதைகள் கெட்டுப்போகாமல் நீண்ட காலத்திற்கு சேமித்து வைப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தேவையான வசதி உடையவையாய் இருக்கின்றன என்பதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியில், யெகோவா, “சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், . . . நிறைந்த விருந்தாயிருக்கும்.” (ஏசாயா 25:6) ‘மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரும்’ மரபுவழி வேறுபாட்டின் படைப்பாளருமாகிய யெகோவா தேவன் உணவுக்கான மனிதனின் எல்லா தேவைகளையும் திருப்தி செய்வார் என்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுடன் இருக்கலாம்!—சங்கீதம் 136:25; ஆதியாகமம் 1:29.