நமது மரபணுக்களால் நாம் முன்விதிக்கப்பட்டிருக்கிறோமா?
“நமது விதியை நட்சத்திரங்கள் தீர்மானிக்கின்றன என்பதாக நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். இப்போது நமது விதி நமது மரபணுக்களால் பெருமளவில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நமக்கு தெரியும்.” இவ்வாறு ஜேம்ஸ் வாட்சன் சொன்னதாக, மரபணு கட்டுக்கதையை தவறென காட்டுதல் என்ற புத்தகத்தின் ஆரம்பத்தில் ரூத் ஹப்பர்ட் மற்றும் எலைஜா வால்ட் மேற்கோள் காட்டுகின்றனர். எனினும், வாட்சனின் மேற்கோளுக்கு கீழேயே, ஆர். ஸி. லவான்டன், ஸ்டிவன் ரோஸ், லியான் ஜே. கேமன் ஆகியோர் இவ்வாறு சொல்வதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது: “சமூக நிலைமைகளால் உருவமைக்கப்பட முடியாதபடி நமது மரபணுக்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த குறிப்பிடத்தக்க மனித சமூக நடத்தையைப் பற்றியும் எங்களால் குறிப்பிட முடியவில்லை.”
அப்புத்தக அட்டை, பொருளடக்கத்தை சுருக்கமாக கூறி, “மனித நடத்தை மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறதா?” என்ற முக்கியமான கேள்வியோடு ஆரம்பமாகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், உயிரினத்தினுடைய மரபுரிமையாக பெறத்தக்க உள்ளியல்பான தன்மைகளையும் பண்புகளையும் கடத்தக்கூடிய மரபணுக்களால் மனித நடத்தை முழுமையாகவே தீர்மானிக்கப்படுகிறதா? மரபணுவியலின் அடிப்படையில் சில ஒழுக்கக்கேடான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? மரபியலால் முன்விதிக்கப்பட்டதன் காரணமாக குறைவான பொறுப்புள்ளோராக இருப்பதாக கோரும் குற்றவாளிகள், மரபியல் தொகுப்பினால் பாதிக்கப்பட்டோராக கையாளப்பட வேண்டுமா?
இந்த நூற்றாண்டில் அநேக பயன்தரும் கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் செய்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாதது. இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்று, நமது மரபியல் உருவமைப்பின் உருவப்படிவம் என்பதாக அழைக்கப்படும் ஆச்சரியமூட்டும் டிஎன்ஏ. மரபியல் தொகுப்பிலுள்ள தகவல், விஞ்ஞானிகள் மற்றும் பாமர மக்களின் ஆவலை ஒரேவிதமாக தூண்டியிருக்கிறது. மரபியல் துறையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி உண்மையிலேயே எதைக் கண்டுபிடித்திருக்கிறது? முன்திட்டமிடப்படுதல் அல்லது முன்விதிக்கப்படுதல் என்ற நவீன கோட்பாட்டை ஆதரிப்பதற்காக எவ்வாறு கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன?
துரோகம் மற்றும் ஒத்த பாலியல் புணர்ச்சியைப் பற்றியென்ன?
தி ஆஸ்ட்ரேலியன்-ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின்படி, சில மரபியல் ஆராய்ச்சி, “துரோகம் ஒருவேளை நமது மரபணுக்களிலேயே உள்ளது. . . . நமது நம்பிக்கைத்துரோக மனச்சாய்வு அவ்வாறு இருக்கும்படியே முன்விதிக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது,” என்பதாக வலியுறுத்துகிறது. இந்த மனப்பான்மை, கட்டுப்பாடற்ற வாழ்க்கைப் பாணிக்காக முழு பொறுப்பாளியாய் தீர்க்கப்படாமலிருக்கும்படி கேட்க விரும்பும் எவருக்கும் தப்பிப்பதற்கான வழியை உண்டாக்குவதன் மூலம் திருமணங்களின்மீதும் குடும்பங்களின்மீதும் எப்பேர்ப்பட்ட நாசத்தை உண்டாக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
ஒத்த பாலியல் புணர்ச்சியைக் குறித்து, நியூஸ்வீக் பத்திரிகை, “பிறப்பா வளர்ப்பா?” என்ற தலைப்புவரியைக் கொண்டிருந்தது. அந்தக் கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “ஒத்த பாலியல் புணர்ச்சி மரபியல் சார்ந்த ஒன்றாக இருக்கலாம், பெற்றோரின் வளர்ப்பு அல்ல என்பதாக குறிப்பிடும் புதிய ஆராய்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு அறிவியலும் மனநிலை மருத்துவமும் போராடிக்கொண்டிருக்கின்றன. . . . ஒத்த பாலியல் புணர்ச்சிக்காரரின் சமுதாயத்திலேயே, ஒத்த பாலியல் புணர்ச்சி குரோமோசோம்களில் உருவாகிறது என்ற குறிப்பை அநேகர் வரவேற்கின்றனர்.”
பின்பு அந்தக் கட்டுரை டாக்டர் ரிச்சர்ட் பிலர்ட் இவ்வாறு சொன்னதாக மேற்கோள் காட்டுகிறது: “பாலியல் மனச்சாய்வு ஒருவருடைய மரபியலால் நிர்ணயிக்கப்பட்டால், அது இவ்வாறு அர்த்தப்படுத்துகிறது, ‘இது ஒரு குற்றமில்லை, இது உங்கள் குற்றமுமில்லை.’ ” இந்தக் “குற்றமில்லை” வாக்குவாதத்திற்கு கூடுதலான ஆதரவளிக்கும் விதத்தில், ஒத்த பாலியல் புணர்ச்சியை ஆராய்பவரான ஃப்ரெட்ரிக் விட்டம் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒத்த பாலியல் புணர்ச்சி உள்ளியல்பான ஒன்று என்று சொல்லப்படும்போது நிம்மதிப் பெருமூச்சுவிடும் மனச்சாய்வு ஜனங்களுக்கு இருக்கிறது. அது குடும்பங்களையும் ஒத்த பாலியல் புணர்ச்சிக்காரர்களையும் குற்றவுணர்விலிருந்து விடுவிக்கிறது. ஒத்த பாலியல் புணர்ச்சி பழக்கமுள்ள ஆசிரியர்களைப் பற்றி சமுதாயம் இனியும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.”
சில சமயங்களில், ஒத்த பாலியல் புணர்ச்சியின்பேரிலான மனச்சாய்வுகள் மரபணுக்களால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதற்கு அத்தாட்சியாக சொல்லப்படுவது, மக்கள் தொடர்பு சாதனங்களால் சாத்தியமானதும் நிச்சயமற்றதுமான ஒன்றாக காட்டப்படாமல் உண்மையானதாகவும் நிச்சயமானதாகவும் காட்டப்படுகிறது.
நியூ ஸ்டேட்ஸ்மன் & சொஸைட்டி என்ற பத்திரிகை, கண்டுபிடிப்பை அறிக்கை செய்வதில் பயன்படுத்தப்படும் கவரத்தக்க உரைநடையை சிறுமைப்படுத்துகிறது: “திகைப்படைந்திருக்கும் வாசகர், உண்மையிலேயே மெய்யான இயல்பண்பின் அத்தாட்சி தெளிவற்று இருப்பதை ஒருவேளை கவனியாமல் விட்டுவிட்டிருந்திருப்பார்—அல்லது உண்மையில், வரம்புமுறையற்ற பாலுறவு ‘ஆண் மரபணுக்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்றும் ஆண் மூளையில் அது ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது’ என்றும் சொல்லப்படுகிற அறிவியல் சார்ந்த அப்பட்டமான [படுமோசமான] உரிமைகோரலுக்கான அடிப்படை முழுமையாகவே இல்லாதிருப்பதையோ ஒருவேளை கவனியாமல் விட்டுவிட்டிருந்திருப்பார்.” மரபியல் விதியைத் தெளிவுபடுத்துதல் (ஆங்கிலம்) என்ற தங்களது புத்தகத்தில் டேவிட் ஸூசூகி, ஜோசஃப் லவின் ஆகிய இருவரும் தற்போதைய மரபியல் ஆராய்ச்சியைக் குறித்து தங்களுக்கிருக்கும் கவலையைத் தெரிவிக்கின்றனர்: “மரபணுக்கள் பொதுவான அர்த்தத்தில் நடத்தையை நிர்ணயிக்கின்றன என்று விவாதிப்பதற்கு சாத்தியம் இருக்கிறபோதிலும், ஒரு குறிப்பிட்ட மரபணு—அல்லது மரபணுக்களின் ஒரு ஜோடி அல்லது எண்ணற்ற மரபணுக்கள்—உண்மையிலேயே சூழ்நிலைக்கு ஒரு மனிதன் பிரதிபலிப்பதன் குறிப்பிட்ட விவரங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதைக் காண்பிப்பது முழுமையாகவே வேறொரு விஷயம். இந்தச் சமயத்தில், குறிப்பிட்ட நடத்தைகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் டிஎன்ஏ-வின் ஸ்ட்ரான்டுகள் எவற்றையாவது எவராவது கண்டுபிடித்திருக்கிறார்களா, முழுமையான மூலக்கூறின் அர்த்தத்தில் கண்டறியவும் மாற்றியமைக்கவும் செய்திருக்கிறார்களா என கேட்பது நியாயமானதாக இருக்கும்.”
குடிவெறி மற்றும் குற்றச்செயலுக்கான மரபணுக்கள்
குடிவெறியைப் பற்றிய ஆராய்ச்சி, அநேக ஆண்டுகளாக மரபியல் ஆராய்ச்சியாளர்கள் பலரைக் கவர்ந்திருக்கிறது. குறிப்பிட்ட சில மரபணுக்கள் இருப்பதோ இல்லாமலிருப்பதோ குடிவெறிக்கு காரணமாக இருக்கிறதென்பதை ஆராய்ச்சிகள் காண்பித்திருப்பதாக சிலர் சொல்கின்றனர். உதாரணத்திற்கு, தி நியூ இங்லாண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின் 1988-ல் இவ்வாறு அறிக்கை செய்தது: “கடந்த பத்தாண்டுகளில், குடிவெறி, மரபு வழியாக பெறத்தக்க ஒரு பண்பு என்ற முடிவான அத்தாட்சியை மூன்று தனிப்பட்ட ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன.”
எனினும், துர்ப்பழக்கங்களுக்கு அடிமையாகுதல் துறையின் வல்லுநர்களில் சிலர், குடிவெறி உள்ளியல்பான காரணிகளால் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது என்ற கருத்தை இப்போது சவால்விடுகின்றனர். ஏப்ரல் 9, 1996-ன் தி பாஸ்டன் க்ளோப்-ல் ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “குடிவெறி மரபணு சமீப எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படுமென்று தோன்றவில்லை; பெரும்பாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்போவதாய் தோன்றுவது, சில ஜனங்கள் வெறிமயக்கமடையாமல் பெருமளவில் குடிப்பதை அனுமதிக்கும் மரபணு பாதிப்புக்குள்ளாகும் நிலை—அவர்களை எளிதில் குடிவெறிக்கு ஆளாகச்செய்யும் ஒரு பண்பு—என்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.”
“மரபியல் மற்றும் குற்ற இயல்புள்ள நடத்தையின்மீது செய்யப்படும் ஆராய்ச்சியின் அர்த்தமும் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டைக் குறித்து தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. குற்றச்செயலுக்குப் பொறுப்புள்ள மரபணுவைப் பற்றிய கருத்து கவரத்தக்க விதத்தில் எளிமையானது. அநேக உரையாளர்கள் இந்தப் போக்கை ஆதரிக்க ஆர்வமுள்ளோராக இருக்கின்றனர். தீமை, “கருத்தரிப்பின் சமயத்தில் நம் பெற்றோர்களிடமிருந்து கடத்தப்படும் குரோமோசோம்களின் சுருள்களில் பதிந்திருக்கலாம்” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை-ல் அறிவியல் எழுத்தாளர் ஒருவர் சொன்னார். தி நியூ யார்க் டைம்ஸ்-ல் வெளிவந்த ஒரு கட்டுரை, குற்றச்செயலுக்கு ஆளாகச்செய்யும் மரபணுக்களைப் பற்றிய தொடர்ச்சியான கலந்தாராய்வு, குற்றச்செயலுக்கு “ஒரு பொதுவான ஆரம்பம்—மூளையின் இயல்பு மாறிய தன்மை”—இருக்கிறது என்ற அபிப்பிராயத்தை உண்டாக்குகிறது என்பதாக அறிக்கை செய்தது.
ஹார்வர்ட் உளவியல் மருத்துவரான ஜெரோம் கேகன், வன்செயலின்பேரில் மனச்சாய்வைக் கொண்டிருக்கும் பிள்ளைகளை மரபியல் பரிசோதனைகள் அடையாளப்படுத்தப்போகும் ஒரு காலம் வரும் என்பதாக முன்னறிவிக்கிறார். சமூக சீர்திருத்தத்தின் மூலமாக அல்லாமல் உள்ளியல்பை மாற்றுவதன் மூலமாக குற்றச்செயல் கட்டுப்படுத்தப்பட எதிர்பார்க்கலாம் என்பதாக சில ஜனங்கள் சொல்கின்றனர்.
நடத்தைக்கான மரபியல் அடிப்படையைக் குறித்த இப்படிப்பட்ட ஊகிப்புகளின் அறிக்கைகளுடைய மொழிநடை அடிக்கடி தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. மரபணு கட்டுக்கதையை தவறென காட்டுதல் என்ற புத்தகம், மனச்சோர்வுக்கு மரபியல் காரணம் ஒன்று இருக்கிறதென்பதைக் காண்பிக்கும் அத்தாட்சியைக் கண்டுபிடித்திருப்பதாக சொன்ன லின்கன் இவ்ஸ் என்ற நடத்தையியல் மரபியலரால் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியைப் பற்றி சொல்கிறது. சோர்வுக்கு உள்ளாகக்கூடியவர்களாக கருதப்படும் பெண்களை பேட்டிகண்ட பின்பு, இவ்ஸ், “[பெண்களின்] சோர்வுற்ற மனோபாவமும் நடத்தையும் அப்படிப்பட்ட தற்செயலான தொந்தரவுகளை இன்னும் அதிகமாக நிகழும் சாத்தியமுள்ளதாக ஆக்கியிருக்கலாம் என்பதாக கருத்து தெரிவித்தார்.” இந்தத் “தற்செயலான தொந்தரவுகள்” என்னவாக இருந்தன? பேட்டி காணப்பட்ட அந்தப் பெண்கள் “கற்பழிக்கப்பட்டோராக, தாக்கப்பட்டோராக, அல்லது தங்களது வேலைகளிலிருந்து நீக்கப்பட்டோராக” இருந்திருக்கின்றனர். ஆகவே சோர்வு இப்படிப்பட்ட அதிர்ச்சிமிக்க சம்பவங்களை உண்டாக்கியதா? “என்னே ஒரு இலட்சணமான நியாயங்காட்டுதல்?” என்பதாக புத்தகம் தொடர்கிறது. “அந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டோராக, தாக்கப்பட்டோராக, அல்லது வேலைகளிலிருந்து நீக்கப்பட்டோராக இருந்தனர்; ஆகவே அவர்கள் சோர்வுற்றிருந்தனர். அவர்கள் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை எந்தளவுக்கு எதிர்ப்பட்டிருக்கிறார்களோ அந்தளவுக்கு அதிக நாள்பட்டதாக சோர்வு இருக்கிறது. . . . சோர்வு எந்தவொரு வாழ்க்கை அனுபவத்தோடும் சம்பந்தப்படுத்தப்பட்டதாக இல்லை என்பதை அவர் [இவ்ஸ்] கண்டுபிடித்திருந்தால், மரபியல் காரணியை நாடுவது தகுந்ததாக இருந்திருக்கும்.”
இப்படிப்பட்ட கதைகள் “[நடத்தையியல்] மரபியலைக் குறித்து மக்கள் தொடர்பு சாதனங்கள், அறிவியல் பத்திரிகைகள் ஆகிய இரண்டிலேயுமே வெளிவரும் தற்போதைய அறிக்கை பெரும்பான்மையானவற்றிற்கு பொருத்தமானவையாக [இருக்கின்றன]. நம்முடைய வாழ்க்கையில் மரபணுக்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் உண்மைகள், ஆதாரமற்ற அனுமானங்கள், ஆராயப்படாத மிகைகள் ஆகியவற்றின் ஒரு கலவையை அவை பெற்றிருக்கின்றன. பெரும்பான்மையான இந்தக் கதைகளில் உடனே தெரிவது அதன் தெளிவற்ற தன்மையாகும்,” என்பதாக அதே பிரசுரம் சொல்கிறது. அது இவ்வாறு தொடர்கிறது: “மரபு பண்புகளை அடைதல் பற்றிய மெண்டலின் கோட்பாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலைகளோடு மரபணுக்களை தொடர்புபடுத்துவதற்கும் புற்றுநோய் அல்லது உயர்ந்த இரத்த அழுத்தம் போன்ற சிக்கலான தேகநிலையை விளக்குவதற்கு அனுமானிக்கப்பட்ட மரபியல் ‘மனச்சாய்வுகளைப்’ பயன்படுத்துவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. மனித நடத்தையை விளக்குவதற்கு மரபியல் ஆராய்ச்சி உதவுமென்ற கருத்தைச் சொல்லும்போது விஞ்ஞானிகள் அவசரப்பட்டு முடிவுக்கு வருகின்றனர்.”
எனினும், குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் கருத்தில்கொள்ளும்போது, அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன: மாறியிருக்கும் நடத்தைப் பாணிகள் நமது வாழ்க்கையில் எழும்புவதாக ஏன் சில சமயங்களில் நாம் உணருகிறோம்? அப்படிப்பட்ட நிலைமைகளை நம்மால் எந்தளவுக்குக் கட்டுப்படுத்த முடிகிறது? நமது வாழ்க்கையின்பேரில் கட்டுப்பாட்டைப் பெற்று அதை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சில பதில்களை அளிப்பதற்கு அடுத்த கட்டுரை உதவியாக இருக்கலாம்.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
மரபியல் மருத்துவம்—எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா?
மரபியல் மருத்துவத்தைப்—பிறப்பில் பெற்ற மரபியல் வியாதிகளைக் குணப்படுத்துவதற்காக நோயாளிகளுக்கு சரிப்படுத்தக்கூடிய மரபணுக்களை ஊசிவழி ஏற்றுவதைப்—பற்றியென்ன? ஒருசில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் அதிகமான எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். “மரபியல் மருத்துவத்தை துவங்குவதற்கு இது ஏற்ற காலமா?” என்பதாக டிசம்பர் 16, 1995-ன் தி எக்கானமிஸ்ட் கேட்டு, இவ்வாறு சொல்கிறது: “அதன் மருத்துவ தொழிலர்கள் பொதுப்படையாக சொன்ன கூற்றுகளை வைத்தும் வெளிவந்த அநேக செய்திகளை வைத்தும் தீர்மானிக்கையில், நீங்கள் ஒருவேளை அவ்வாறு நினைக்கலாம். ஆனால் அமெரிக்காவின் வித்தியாசப்பட்ட அறிவியல் நிபுணர்களின் குழு கருத்தில் வேறுபடுகிறது. இந்தத் துறையில் மறு ஆய்வு செய்யும்படியாக பிரசித்திபெற்ற பதினான்கு விஞ்ஞானிகள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த்-த்தின் (NIH) தலைவரான ஹரால்ட் வார்மஸினால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஏழு மாதங்களாக ஆழ்ந்து ஆலோசனை செய்த பிறகு கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், மரபியல் மருத்துவம் பெரும்பாலும் வெற்றியடையப்போவதாய் இருந்தாலும் இதுவரையாக அதன் சாதனைகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதாக அவர்கள் சொன்னார்கள்.” அடினோசின் டீயமினேஸ் (ADA) குறைபாட்டாலோ வேறு மரபணுக்கள் உள்ளேற்றப்படும் சிகிச்சைக்கு ஏற்றதாக நினைக்கப்படும் டஜன் கணக்கான நோய்கள் ஒன்றினாலோ பாதிக்கப்பட்டிருந்த 597 நோயாளிகளை உட்படுத்திய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தி எக்கானமிஸ்ட் இவ்வாறு சொல்கிறது: “டாக்டர் குழுவின்படி, அப்படிப்பட்ட பரிசோதனையில் பங்குகொண்ட காரணத்தால் ஒரு நோயாளிகூட தெளிவாகவே நன்மையடையவில்லை.”
[பக்கம் 7-ன் படங்கள்]
மரபியலால் முன்விதிக்கப்பட்டிருப்பதைக் குறித்து சிலர் சொன்னாலும், எவ்வாறு நடந்துகொள்வதென்பதை ஜனங்கள் தேர்ந்தெடுக்கலாம்