யாரை குறைசொல்வது—உங்களையா உங்கள் ஜீன்களையா?
குடிப்பழக்கம், ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி, பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கம், வன்முறை, இயல்புக்கு மாறான மற்ற நடத்தை ஆகியவற்றுக்கும் மரணத்துக்கும்கூட மரபியல் காரணங்களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஊக்கமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய செயல்களுக்கு நாமல்ல, மரபியல் உருவமைப்பே காரணம் என்றால் அது நமக்கு நிம்மதி அளிக்கும் அல்லவா? நாம் செய்த தவறுகளுக்கு வேறொருவர் மேல் அல்லது வேறொன்றின் மேல் பழிபோடுவதே மனித இயல்பு.
ஜீன்கள்தான் பொறுப்பு என்றால், மரபணு பொறியியல் மூலம் விரும்பத்தகாத குணங்களை நீக்கி, அவற்றை மாற்றிவிடலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித ஜீன்களை முழுமையாக வரைந்துகாட்டுவதில் அண்மையில் பெற்ற வெற்றி இந்த நம்பிக்கைகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
ஆனால் இது, பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் ஜீன்கள்தான் வில்லன், நம்முடைய எல்லா பாவங்களுக்கும் தவறுகளுக்கும் காரணம் என்ற இந்த ஊகத்தின் அடிப்படையிலானது. நம்முடைய ஜீன்களுக்கு எதிராக வழக்குத்தொடர விஞ்ஞான புலனாய்வாளர்கள் போதிய அத்தாட்சியைக் கண்டுபிடித்துவிட்டார்களா? இதற்கான விடை நம்மையும் எதிர்காலத்தைப் பற்றிய நம் கருத்தையும் வெகுவாக பாதிக்கும் என்பது தெளிவாக உள்ளது. எனினும் அத்தாட்சியை ஆய்வு செய்வதற்கு முன்பாக மனிதனின் ஆரம்பத்தை சற்று ஆராய்வது அறிவொளியூட்டுவதாக இருக்கும்.
அதெல்லாம் எப்படி ஆரம்பமானது
முதல் மனித தம்பதியாகிய ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் பாவத்திற்குள் விழுந்ததைப் பற்றிய பதிவு பெரும்பாலானவர்களுக்கு நன்றாக தெரியும் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுடைய ஜீன்களில் ஏதோ குறைபாடுகளுடன் அவர்கள் படைக்கப்பட்டார்களா? வடிவமைப்பில் இருந்த ஏதோவொரு குறைபாட்டினால்தான் சுலபமாக அவர்கள் பாவத்துக்கும் கீழ்ப்படியாமைக்கும் பலியானார்களா?
அவர்களுடைய படைப்பாளராகிய யெகோவா தேவனுடைய செயல்கள் அனைத்தும் பரிபூரணமானவை. அவருடைய படைப்புகளில் தலைசிறந்த படைப்பாகிய பூமியின் படைப்பைக் குறித்து, “மிகவும் நன்றாயிருந்தது” என்று அவரே அறிவித்திருக்கிறார். (ஆதியாகமம் 1:31; உபாகமம் 32:4) தம்முடைய செயல்கள் தமக்கு மனநிறைவை அளித்ததற்கு மேலுமான அத்தாட்சியாக அவர் அந்த முதல் தம்பதியினரை பலுகி பெருகி பூமியை நிரப்பும்படி ஆசீர்வதித்து, அவருடைய பூமிக்குரிய படைப்புகளை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் வேலையையும் அவர்களிடம் ஒப்படைத்தார். தம் கைவேலைப்பாட்டைப் பற்றி நிச்சயமற்ற ஒருவர் செய்யும் காரியங்கள் அல்ல இவை.—ஆதியாகமம் 1:28.
முதல் மனித ஜோடியின் படைப்பைப் பற்றி பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும்பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27) மனிதன் தோற்றத்தில் கடவுளைப் போல சிருஷ்டிக்கப்பட்டான் என்பது இதன் அர்த்தமல்ல, ஏனென்றால் “தேவன் ஆவியாயிருக்கிறார்.” (யோவான் 4:24) சரியாக சொன்னால், ஒழுக்க உணர்வாகிய மனசாட்சியையும் கடவுளுடைய பண்புகளையும் மனிதர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். (ரோமர் 2:14, 15) ஒரு காரியத்தை மதிப்பிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவு செய்யும் சுதந்திரம் பெற்றவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.
ஆனால் நம்முடைய முதல் பெற்றோருக்கு எந்த வழிநடத்தலும் கொடுக்கப்படாமல் இல்லை. தவறு செய்தால் சந்திக்க வேண்டிய விளைவுகளைக் குறித்து அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். (ஆதியாகமம் 2:17) ஆகவே ஒழுக்க சம்பந்தமாக தீர்மானம் செய்யும் சூழ்நிலையை எதிர்ப்பட்டபோது ஆதாம், அந்தச் சமயத்தில் தனக்கு எது நல்லதென, உகந்ததென தோன்றியதோ அதை செய்ய தெரிந்துகொண்டான். படைப்பாளரோடு தனக்கிருக்கும் உறவைப் பற்றியோ அல்லது தன்னுடைய செயலின் விளைவுகளைப் பற்றியோ எண்ணிப் பார்க்காமல் தன் மனைவியின் தவறான போக்கையே இவனும் பின்பற்றினான். அதன் பிறகு யெகோவா கொடுத்த மனைவியே தன்னை தவறாக வழிநடத்தியதாக சொல்லி அவர்மீதே பழியைப் போட அவன் முயற்சி செய்தான்.—ஆதியாகமம் 3:6, 12; 1 தீமோத்தேயு 2:14.
ஆதாம் ஏவாள் செய்த பாவத்துக்கு கடவுள் செயல்பட்ட விதம் நமக்கு மேலுமான புரிந்துகொள்ளுதலை அளிக்கிறது. அவர்களுடைய ஜீன்களில் இருந்த ஏதோ ‘வடிவமைப்பு குறைபாட்டை’ சரிப்படுத்த அவர் முயலவில்லை. அதற்கு பதிலாக, அவர்களுடைய செயல்களுக்கு எதை பலனாக பெறுவார்கள் என சொல்லி இருந்தாரோ அதையே அவர் நிறைவேற்றினார். இதனால் காலப்போக்கில் அவர்கள் மரிக்க நேரிட்டது. (ஆதியாகமம் 3:17-19) இந்தப் பண்டைய சரித்திரம் மனித நடத்தையின் இயல்பினை புரிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவுகிறது.a
ஜீன்களின் உருவமைப்புக்கு எதிரான அத்தாட்சி
மனிதர்களின் நோய்க்கும் நடத்தைக்கும் மரபியல் காரணங்களையும் பரிகாரங்களையும் கண்டுபிடிக்கும் மாபெரும் பணியில் நீண்ட காலமாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆய்வாளர்களின் ஆறு தொகுதிகள், பத்து வருடங்களாக முயன்று ஹன்டிங்டன்ஸ் நோய்க்கு காரணமான ஜீனை கண்டுபிடித்தன; எனினும் இந்த ஜீன் எவ்வாறு இந்த நோயை உண்டுபண்ணுகிறது என்பது இன்னமும் ஆய்வாளர்களுக்கு புரியாத புதிரே. ஆனால் இந்த ஆய்வைக் குறித்து அறிவிப்பு செய்கையில், ஹார்வர்ட் உயிரியலர் ஈவன் பாலபலன், “நடத்தை சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு காரணமான ஜீன்களைக் கண்டுபிடிப்பது அதைவிட ரொம்பவே கடினம்” என கூறுவதாக சையன்டிஃபிக் அமெரிக்கன் கூறியது.
குறிப்பிட்ட சில ஜீன்களை மனித நடத்தையோடு சம்பந்தப்படுத்த முயலும் ஆராய்ச்சி உண்மையில் தோல்வியையே தழுவியிருக்கிறது. உதாரணமாக, சைக்காலஜி டுடே-வில் மன உளைச்சலுக்கு காரணமான ஜீன்களைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து ஒரு அறிக்கை இவ்வாறு கூறியது: “மக்களில் பெருவாரியாக காணப்படும் மன நோய்களுக்கு வெறும் ஜீன்கள் மட்டுமே காரணமல்ல என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.” அந்த அறிக்கை இதற்கு ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறது: “1905-க்கு முன்னால் பிறந்த அமெரிக்கர்களில் 75 வயதிற்குள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1 சதவீதத்தினரே. அரை நூற்றாண்டுக்கு பின்னால் பிறந்த அமெரிக்கர்களில் 24 வயதிற்குள்ளேயே 6 சதவீதத்தினர் மன உளைச்சலால் அவதிப்படுகிறார்கள்!” அப்படியென்றால் உடலுக்கு வெளியே உள்ள அல்லது சமுதாய காரணிகளே இத்தனை குறுகிய காலத்திற்குள் இத்தனை பெரிய மாற்றங்கள் நிகழுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற முடிவுக்கு அது வருகிறது.
இந்த ஆய்வுகளும் எண்ணற்ற பிற ஆய்வுகளும் நமக்கு என்ன சொல்கின்றன? நம்முடைய ஆளுமையின் வளர்ச்சியில் ஜீன்களுக்கு முக்கிய பங்கு இருந்தாலும் செல்வாக்கு செலுத்தும் வேறு காரணிகளும் இருப்பது தெளிவு. அதில் நம்முடைய சுற்றுச்சூழல் ஒரு முக்கிய காரணியாகும். இது இன்று பெரும் மாற்றங்களுக்குள்ளாகி வந்திருக்கிறது. இன்றைய இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பொழுதுபோக்கில் அவர்கள் பார்க்கும், கேட்கும் விஷயங்களைக் குறித்து பையன்கள் பையன்களாகவே இருப்பர் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. “மக்கள் தாக்கப்படுவதை, சுட்டுக் கொல்லப்படுவதை, கத்தியால் குத்தப்படுவதை, குடல்கள் உருவப்படுவதை, துண்டிக்கப்படுவதை, தோலுரிக்கப்படுவதை அல்லது உடல் உறுப்புகள் வெட்டப்படுவதை டிவியில் ஆயிரக்கணக்கான மணிநேரம் பார்த்துக்கொண்டும் கற்பழிப்பு, தற்கொலை, போதை பொருட்கள், மதுபானம், கொள்கைவெறி ஆகியவற்றை கௌரவிக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டும் வளருகிற பிள்ளைகள்” நல்ல தார்மீக நியமங்களை வளர்த்துக்கொள்வது முடியாத காரியம் என்று அது கூறுகிறது.
‘இந்த உலகத்தின் அதிபதியாகிய’ சாத்தான், மனிதனின் மிக மட்டமான ஆசைகளுக்கு தீனிபோடும் ஒரு சுற்றுச்சூழலை உருவாக்கியிருக்கிறான். இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் நம் அனைவர்மீதும் ஏற்படுத்தும் பலமான தாக்கத்தை யாரால் மறுக்க முடியும்?—யோவான் 12:31; எபேசியர் 6:12; வெளிப்படுத்துதல் 12:9, 12.
மனிதகுலத்தின் தொந்தரவுகளுக்கு மூல காரணம்
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, முதல் மனித தம்பதியினர் பாவம் செய்தபோது மனிதகுலத்துக்கு தொந்தரவுகள் ஆரம்பமாயின. விளைவு? ஆதாமின் சந்ததியார் அனைவரும், அவனது பாவத்துக்கு பொறுப்புள்ளவர்களாக இல்லாதபோதிலும், பாவம், அபூரணம், மரணம் ஆகிய ஆஸ்தியைப் பெற்றவர்களாகவே பிறக்கின்றனர். பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12.
மனிதனின் அபூரணம் அவனுக்கு உண்மையிலேயே தீங்காகத்தான் இருக்கிறது. ஆனால் அது அவனை எல்லா தார்மீக பொறுப்பிலிருந்தும் விடுவிப்பதில்லை. ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டில் விசுவாசம் வைத்து கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ்கிறவர்கள் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வர் என்று பைபிள் சொல்லுகிறது. யெகோவா தம்முடைய அன்புள்ள தயவினால், ஆதாம் இழந்ததை திரும்ப பெறுவதற்காகவும் மனிதகுலத்தை மீட்டுக்கொள்வதற்காகவும் ஒரு இரக்கமுள்ள ஏற்பாட்டை செய்திருக்கிறார். அதுதான் அவருடைய பரிபூரண குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிரய பலி ஏற்பாடு. இயேசு இவ்வாறு கூறினார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16; 1 கொரிந்தியர் 15:21, 22.
அப்போஸ்தலன் பவுல் இந்த ஏற்பாட்டுக்கு தன்னுடைய ஆழ்ந்த போற்றுதலை காட்டுபவராக இவ்வாறு கூறினார்: “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” (ரோமர் 7:24, 25) பலவீனத்தினால் பாவம் செய்துவிட்டால் இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பின் பலியின் அடிப்படையில் கடவுளிடம் மன்னிப்பைக் கேட்கலாம் என்பதை பவுல் அறிந்திருந்தார்.b
முதல் நூற்றாண்டைப் போலவே, இன்றும் முன்பு மிகவும் மோசமாக வாழ்ந்து வந்த அல்லது நம்பிக்கையே இல்லாதிருந்த அநேகர், பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவை பெற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, கடவுளுடைய தயவை பெறும் நிலைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் சுலபமானவையாக இருக்கவில்லை. இன்னும் அநேகர் தீங்கான மனசாய்வுகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் கடவுளுடைய உதவியோடு உத்தமத்தைக் காத்துக்கொண்டு, அவரை மகிழ்ச்சியோடு சேவித்து வருகிறார்கள். (பிலிப்பியர் 4:13, NW) கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக பெரிய மாற்றங்களைச் செய்த ஒரு நபரின் உதாரணத்தை வாசித்துப் பாருங்கள்.
உற்சாகமூட்டும் ஒரு அனுபவம்
“சிறுவயதில் ஒரு போர்டிங் பள்ளியில் படிக்கையில் நான் ஓரினப்புணர்ச்சி பழக்கங்களில் ஈடுபட்டு வந்தேன். ஆனாலும் நான் ஒரு ஆண்புணர்ச்சிக்காரன் என்று ஒருபோதும் என்னைப் பற்றி நினைக்கவில்லை. என் பெற்றோரின் மணவாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. நானோ பெற்றோரின் அன்புக்காக ஏங்கி தவித்தேன், அது எனக்கு கிடைக்காமலேயே போய்விட்டது. பள்ளி படிப்பை முடித்ததும் கட்டாய இராணுவ சேவையில் சேர்ந்தேன். என் பக்கத்துக் குடியிருப்பில் ஆண்புணர்ச்சிக்காரர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அவர்களோடு கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தேன். அவர்களோடு பழக ஆரம்பித்து ஒரு வருட காலத்துக்குப்பின் என்னையும் ஒரு ஆண்புணர்ச்சிக்காரனாகவே நினைக்க ஆரம்பித்தேன். ‘நான் அப்படிப்பட்டவன்தான், என்னை மாற்றிக்கொள்ளவே முடியாது’ என்று நினைத்தேன்.
“ஆண்புணர்ச்சிக்காரரின் பரிபாஷையை கற்றுக்கொண்டு அவர்களுடைய கிளப்புகளுக்கு போக ஆரம்பித்தேன். அங்கே போதை பொருட்களும் மதுபானமும் தட்டுப்பாடில்லாமல் கிடைத்தன. மேலோட்டமாக பார்ப்பதற்கு இவை எல்லாம் மிகவும் கிளர்ச்சியாகவும் கவர்ச்சியாகவும் தோன்றியபோதிலும், உண்மையில் எனக்குள் ஒரு அருவருப்பு உணர்ச்சி இருந்து வந்தது. இந்த விதமான உறவு இயற்கைக்கு மாறானது, இதற்கு எந்த எதிர்காலமும் இல்லை என்று என் உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.
“ஒரு சிறிய பட்டணத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் வழியாக ஒருநாள் சென்றேன், அங்கே கூட்டம் நடந்துகொண்டிருந்தது. உள்ளே சென்று எதிர்காலத்தில் வரவிருக்கும் பரதீஸைப் பற்றிய சொற்பொழிவைக் கேட்டேன். அதன் பிறகு சில சாட்சிகளை நான் சந்தித்தேன். ஒரு மாநாட்டுக்கு வரும்படி அவர்கள் எனக்கு அழைப்புவிடுத்தார்கள். நானும் போனேன், அங்கே பார்த்த காட்சி என் கண்களை திறந்தது—சந்தோஷமாக ஒன்றுசேர்ந்து வணங்கும் குடும்பங்கள். நான் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தேன்.
“அது பெரும் போராட்டமாக இருந்தாலும், நான் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டவற்றைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அசுத்தமான எல்லா பழக்கங்களையும் விட்டுவிட்டேன். 14 மாதங்கள் படித்தப்பின், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன். என் வாழ்க்கையில் முதன்முறையாக, எனக்கு உண்மையான நண்பர்கள் கிடைத்தார்கள். மற்றவர்களும் பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவியிருக்கிறேன். இப்போது கிறிஸ்தவ சபையில் ஒரு உதவி ஊழியனாக இருக்கிறேன். யெகோவா என்னை உண்மையிலேயே ஆசீர்வதித்திருக்கிறார்.”
நாமே பொறுப்பு
நம்முடைய தவறான நடத்தைக்கு நம் ஜீன்களை முழுக்க முழுக்க குறைசொல்வது பிரச்சினைக்கு பரிகாரமாகாது. அப்படி செய்வதால், பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது சமாளிப்பதற்கு பதிலாக, “நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டிருப்போம், இதுவே அநேக பிரச்சினைகளுக்கு காரணம். இது பிரச்சினைகளைக் குறைப்பதற்கு பதிலாக அவற்றை அதிகப்படுத்தவே செய்கிறது” என்று சைக்காலஜி டுடே குறிப்பிடுகிறது.
நம்முடைய பாவ மனச்சாய்வுகளும் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் நம்மை திசைத்திருப்ப சாத்தான் எடுக்கும் முயற்சிகளும் உட்பட, நம்மை எதிர்க்கும் பல பெரிய சக்திகளோடு நாம் போராட வேண்டும் என்பது உண்மையே. (1 பேதுரு 5:8) நம்முடைய ஜீன்களும்கூட பல்வேறு வழிகளில் நம்மீது செல்வாக்கு செலுத்தலாம் என்பதும் உண்மையே. ஆனால் நாம் துளியும் உதவியற்றவர்களாக இல்லை. யெகோவா, இயேசு கிறிஸ்து, கடவுளுடைய பரிசுத்த ஆவி, அவருடைய வார்த்தையாகிய பைபிள், கிறிஸ்தவ சபை ஆகிய உதவிகள் உண்மை கிறிஸ்தவர்களுக்கு பலத்த துணையாக இருக்கின்றன.—1 தீமோத்தேயு 6:11, 12; 1 யோவான் 2:1.
இஸ்ரவேல் தேசத்தார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னால், மோசே கடவுளுக்கு முன்பாக அவர்களுக்கிருந்த பொறுப்பைக் குறித்து இவ்வாறு நினைப்பூட்டினார்: ‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பற்றிக்கொள்வாயாக.’ (உபாகமம் 30:19, 20) அதைப் போலவே இன்று, கடவுளை சேவிப்பதையும், அவர் எதிர்பார்ப்பவற்றை செய்வதையும் குறித்து தனிப்பட்ட தீர்மானம் எடுக்கும் கடமை பொறுப்புள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தெரிவை செய்ய வேண்டியவர் நீங்களே.—கலாத்தியர் 6:7, 8.
[அடிக்குறிப்புகள்]
b யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருக்கும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் பக்கங்கள் 62-9-ஐக் காண்க.
[பக்கம் 9-ன் படங்கள்]
ஆதாமும் ஏவாளும் தங்கள் ஜீன்களில் இருந்த குறைபாட்டால் பாவத்தில் சிக்கும் நிலையில் இருந்தார்களா?
[பக்கம் 10-ன் படங்கள்]
ஒவ்வொருவரும் தன் தீர்மானங்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமா?
[படத்திற்கான நன்றி]
போதைப் பொருள் பயன்படுத்துபவர்: Godo-Foto
[பக்கம் 11-ன் படம்]
மனிதர்களின் நடத்தைக்கு ஜீன்கள்மீது பழிபோட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியை தழுவியிருக்கின்றன
[பக்கம் 12-ன் படம்]
பைபிள் சொல்வதை கேட்டு நடப்பது உண்மையுள்ளவர்கள் மாறுவதற்கு வழிசெய்யும்