“அது என் குற்றமில்லை”
‘என்னை மன்னித்துவிடுங்கள். அது என் குற்றம்தான். நான்தான் முழுமையான பொறுப்பாளி!’ என்று எவராவது சொல்வதை இன்று நீங்கள் எவ்வளவு அடிக்கடி கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் அப்படிப்பட்ட சாதாரண நேர்மையான காரியம்கூட அரிதாகவே கேட்கப்படுகிறது. உண்மையில், அநேக சமயங்களில், குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், பழியை மற்றொருவர்மீதோ குற்றத்தைக் குறைத்துக்காட்டும் சூழ்நிலைகள்மீதோ சுமத்திவிடுவதற்கு அனைத்து முயற்சியும் எடுக்கப்படுகிறது; அச்சூழ்நிலைகள்மீது தனக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை என்பதாக குற்றவாளி சொல்லிக்கொள்கிறார்.
சிலர் தங்கள் மரபணுக்களைக்கூட குற்றஞ்சாட்டுகின்றனர்! ஆனால் இது நியாயமாக தோன்றுகிறதா? மரபணு கட்டுக்கதையை தவறென காட்டுதல் என்ற ஆங்கில புத்தகம், மரபணு ஆராய்ச்சியின் சில அம்சங்களினுடைய குறிக்கோள்களைக் குறித்தும் பயன்பாட்டைக் குறித்தும் கேள்வி எழுப்புகிறது. ஆஸ்திரேலிய பத்திரிகையாளரான பில் டியேன், இந்தப் புத்தகத்தை விமர்சிக்கையில், இப்படிப்பட்ட சிந்தனைமிக்க முடிவுக்கு வருகிறார்: “சமூக நியதிவாத கோட்பாட்டாளர்கள், எவரும் தங்களுடைய செயல்களுக்கு பொறுப்பாளிகளாக்கப்பட கூடாது என்ற தங்களது தத்துவத்தை ஆதரிப்பதற்கு கிட்டத்தட்ட பிழையற்ற அத்தாட்சியை கண்டுபிடித்துவிட்டதாக சமீபத்தில் நம்ப ஆரம்பித்திருப்பதாக தோன்றுகிறது: ‘அவளது கழுத்தை அவனால் வெட்டாமல் இருக்க முடியவில்லை, யுவர் ஆனர்—அது அவனது மரபணுவில் பதிந்திருக்கிறது.’ ”
உண்மையிலேயே ஒரு புதிய போக்கு அல்ல
“நான்-இல்லை” சந்ததி என்பதாக ஓர் எழுத்தாளரால் அழைக்கப்படுவதை நோக்கி வேகமாக வளர்ந்துவரும் இந்தச் சந்ததியில், பழிசுமத்தும் இந்தப் போக்கு அதிகரித்துவருவதாக ஒருவேளை தோன்றலாம். எனினும், “உண்மையிலேயே என்னை குற்றம்சொல்ல முடியாது” என்ற சாக்குப்போக்கைச் சொல்லி, மற்றவர்கள்மீது பழிசுமத்துவது மனித வாழ்வின் ஆரம்பம் முதற்கொண்டே இருந்துவந்திருப்பதாக பதிவுசெய்யப்பட்ட சரித்திரம் காட்டுகிறது. கடவுள் தடைசெய்திருந்த பழத்தை சாப்பிட்டு, முதல் பாவத்தைச் செய்த பிறகு ஆதாமும் ஏவாளும் பிரதிபலித்த விதம், பழிசுமத்துதலுக்கு பொருத்தமான ஓர் உதாரணமாக இருந்தது. அங்கே நடைபெற்ற சம்பாஷணையைக் குறித்து ஆதியாகம பதிவு அறிக்கை செய்கிறது; கடவுள் முதலில் இவ்வாறு பேசுகிறார்: “புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.”—ஆதியாகமம் 3:11-13.
அந்தச் சமயம் முதற்கொண்டே, மனிதர்கள் வெவ்வேறு வகையான நம்பிக்கையை கண்டுபிடித்து, தங்களது செயல்களுக்கான எந்த விதமான உண்மையான பொறுப்பிலிருந்தும் தங்களை விடுவிக்கும் வித்தியாசமான சாக்குப்போக்குகளைத் தேடியிருக்கின்றனர். விதியின்பேரிலான பூர்வ நம்பிக்கை இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வினைப்பயனை மனமார நம்பிய ஒரு புத்தப் பெண்மணி இவ்வாறு சொன்னாள்: “நான் பிறப்பிலிருந்தே பெற்றிருக்கும் ஒன்றிற்காக துன்பப்படுவதில், அதுவும் அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதபோது அதற்காக துன்பப்படுவதில் அர்த்தமேயில்லை என்பதாக நான் நினைத்தேன். அதை என் தலையெழுத்தாய் ஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருந்தது.” ஜான் கால்வின் கற்பித்த முன்விதி கோட்பாட்டினால் போதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவமண்டலத்தில் விதியின்மீதான நம்பிக்கையும்கூட பொதுவாக காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட விபத்து கடவுளுடைய சித்தமாக இருந்தது என்பதாக துயரத்திலிருக்கும் உறவினருக்கு குருமார் அடிக்கடி சொல்கின்றனர். பின்பு, நன்னோக்கம் கொண்ட கிறிஸ்தவர்களில் சிலரும்கூட, தங்களது வாழ்க்கையில் நடக்கும் எல்லா கெட்ட காரியங்களுக்கும் சாத்தானை குற்றம்சாட்டுகின்றனர்.
இப்போது, பொறுப்பாளிகளாக்காத நடத்தையை நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்; இது சட்டத்தாலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு நபருடைய உரிமைகள் அதிகரித்துக்கொண்டும் பொறுப்புகள் குறைந்துகொண்டும் வருகிற ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.
ஒழுக்கக்கேட்டிலிருந்து கொலை வரையுள்ள அனைத்து நடத்தைக்கும் கட்டுப்பாடற்ற வாய்ப்பளிக்கும் என்பதாக சிலரால் கருதப்படும் விஞ்ஞான அத்தாட்சியை, மனித நடத்தையின்பேரில் செய்யப்பட்ட ஆராய்ச்சி சமர்ப்பித்திருக்கிறது. இது, அந்தத் தனிப்பட்ட நபரைத் தவிர்த்து மற்ற எதன்மீதாவது அல்லது எவர்மீதாவது பழிசுமத்துவதன்பேரில் சமுதாயத்திற்கு இருக்கும் ஆர்வத்தின் வெளிக்காட்டாகும்.
இவற்றைப்போன்ற கேள்விகளுக்கு நமக்கு பதில் தேவைப்படுகிறது: அறிவியல் உண்மையிலேயே எதைக் கண்டுபிடித்திருக்கிறது? மனித நடத்தை நமது மரபணுக்களால் மாத்திரமே தீர்மானிக்கப்படுகிறதா? அல்லது உள்ளான சக்திகள், புறம்பான சக்திகள் ஆகிய இரண்டினாலேயும் நமது நடத்தை கட்டுப்படுத்தப்படுகிறதா? அத்தாட்சி உண்மையிலேயே எதைக் காண்பிக்கிறது?