உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 2/1 பக். 26-29
  • அது யாருடைய தவறு?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அது யாருடைய தவறு?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பணக் கஷ்டம்
  • பிள்ளைகளைப் பற்றிய ஏமாற்றம்
  • ஆவிக்குரியப் பிரகாரமாய் செழித்தோங்கத் தவறுவது
  • கடைசி சாக்குப்போக்கு
  • மெய்ம்மையை எதிர்ப்படுதல்
  • எப்பொழுதும் குற்றம்சாட்டப்படுவதை நான் எப்படி நிறுத்துவது?
    விழித்தெழு!—1997
  • அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?
    அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?
  • யெகோவா குற்றஞ்சாட்டப்படவேண்டியவர் அல்ல
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “அது என் குற்றமில்லை”
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 2/1 பக். 26-29

அது யாருடைய தவறு?

முதல் மனிதனாகிய ஆதாம் அந்தப் போக்கை ஆரம்பித்தான். பாவம் செய்த பிறகு அவன் கடவுளிடம் சொன்னான்: “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்.” அதன் அர்த்தம், “அது என் தவறு அல்ல!” என்று சொல்லிக் கொண்டிருந்தான். முதல் மனுஷியாகிய ஏவாளும்கூட இவ்வாறு சொன்னபோது அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்: “சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்.”—ஆதியாகமம் 3:12, 13.

மனிதர்கள் தங்கள் சொந்த செயல்களுக்கான உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஏதேன் தோட்டத்தின் நிகழ்ச்சி ஒரு முன்னோடியாக இருந்தது. நீங்கள் எப்போதாவது இந்தக் குற்ற உணர்ச்சியுடையவர்களாய் இருந்திருக்கிறீர்களா? பிரச்சினைகள் எழும்புகையில், நீங்கள் விரைவாக மற்றவர்களைக் குற்றம்சாட்டியிருக்கிறீர்களா? அல்லது அது உண்மையில் யாருடைய தவறு என்பதை காண்பதற்கு அந்த நிலைமையை அலசி ஆராய்ந்து பார்க்கிறீர்களா? அன்றாடக வாழ்க்கையில் நம்முடைய தவறுகளை மற்றவர்கள் மேல் போட்டு விட்டு “அது என் தவறு அல்ல!” என்று சொல்லும் பழக்கத்துக்குள் அகப்பட்டுக்கொள்வது அதிக சுலபமானது. பொதுவாக ஏற்படும் சூழ்நிலைமைகளையும், அப்போது சிலர் என்ன செய்யும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் இப்போது பார்ப்போம். அதே சூழ்நிலைமைகளின்கீழ் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பது அதிமுக்கியமானது.

பணக் கஷ்டம்

சிலர் அதிக பணக் கஷ்டத்துக்குள் வரும்போது இவ்வாறு சொல்கின்றனர்: “அது என் தவறு அல்ல—பொருளாதாரம், நேர்மையற்ற வியாபார ஆட்கள், அதிக உயர்வான வாழ்க்கைச் செலவுகள்—இவை தான் காரணம்.” ஆனால் இந்தக் காரணங்களை தான் நாம் குற்றம் சொல்ல வேண்டுமா? ஒருவேளை கேள்விக்குரிய அல்லது துணிச்சலாக வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு நிச்சயமற்ற நிலைமைகள் அவர்களை வழிநடத்தியிருக்கலாம். சில சமயங்களில் பேராசை உண்மையான நிலையை மறைத்துவிடுகிறது, ஜனங்கள் அறியப்படாத வியாபாரத்தில் ஈடுபட்டு, கொள்ளையடிக்கும் இயல்புடைய பேராசை பிடித்தவர்களுக்குப் பலியாகி விடுகின்றனர். “உண்மையாய் இருப்பதற்கு ஏதோவொன்று அதிக நல்லதாக தோன்றினால், அது அவ்வாறு தோன்றும் அளவுக்கு நல்லதாய் இல்லை” என்ற பழமொழியை அவர்கள் மறந்து விடுகின்றனர். அவர்கள் கேட்க விரும்பும் புத்திமதிக்காக தேடுகின்றனர், ஆனால் பொருளாதார கஷ்டம் விரும்பத்தகாத மெய்ம்மையாகும் போது, வேறு எவராவது ஒருவர் மேல் குற்றம் சுமத்த பார்த்துக்கொண்டிருப்பர். விசனகரமாக இது சில சமயங்களில் கிறிஸ்தவ சபையிலும்கூட ஏற்படுகிறது.

காணப் பெறாத வைரங்களை வாங்குவது, விரைவில் தோல்வியடைந்து போன ஹிட் டிவி நிகழ்ச்சிகளுக்குப் பணம் கொடுப்பது அல்லது திவாலாகிப்போகும் ரியல் எஸ்டேட் வியாபாரங்களை ஆதரிப்பது போன்ற ஞானமற்ற முதலீட்டு திட்டங்களில் சிலர் சிக்கியிருக்கின்றனர். செல்வத்தைப் பெறுவதற்காக அவர்கள் கொண்டிருக்கும் அளவுக்கு மிஞ்சிய ஆசை பைபிளின் புத்திமதியை அவர்கள் மறந்துபோகும்படி மங்கலாக்கியிருக்கலாம்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் . . . விழுகிறார்கள் . . . அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.

கட்டுப்பாடில்லாமல் செலவு செய்வதும்கூட பெரும் பணக் கஷ்டத்துக்கு வழிநடத்தக்கூடும். சிலர், நவீன புதுப்பாணி பத்திரிகைகளில் இருக்கும் ஆட்களைப் போல் தாங்கள் தோற்றமளிக்க, அதிக செலவை உட்படுத்தும் விடுமுறைகள் எடுக்க, உயர்தரமான ஹோட்டல்களில் உணவருந்த, பெரியவர்களின் நவீன ‘விளையாட்டுப் பொருட்கள்’—பொழுதுபோக்கு வாகனங்கள், படகுகள், காமராக்கள், ஸ்டீரியோ சாதனங்கள்—வாங்க நினைக்கின்றனர். சிலர் புத்திசாலித்தனமாக திட்டமிட்டு சேமித்து வைப்பதன் மூலம் இப்படிப்பட்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விரைவில் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெரும் கடனுக்குள் விழுகின்றனர். அவ்வாறு நேரிடும்போது, அது யாருடைய தவறு? நீதிமொழிகள் 13:18-ல் உள்ள புத்திமதியை அவர்கள் அசட்டை செய்திருக்கின்றனர் என்பது தெளிவாயிருக்கிறது: “புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்.”

பிள்ளைகளைப் பற்றிய ஏமாற்றம்

“மூப்பர்கள்தான் என் பிள்ளைகள் சத்தியத்தை விட்டுச் சென்றதற்குக் காரணம். என் பிள்ளைகளிடம் அவர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை” என்று சில பெற்றோர் ஒருவேளை சொல்லலாம்.

மூப்பர்கள் மந்தையை மேய்த்து அவற்றைக் கவனித்துக் கொள்ளவேண்டிய உத்தரவாதத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை தான், ஆனால் பெற்றோரைப் பற்றியென்ன? எல்லா நடவடிக்கைகளிலும் கடவுளுடைய ஆவியின் கனியை வெளிப்படுத்திக் காட்டுவதில் முன்மாதிரிகளாக இருக்கிறீர்களா? குடும்ப பைபிள் படிப்பு ஒழுங்காக நடத்தப்பட்டதா? பெற்றோர் யெகோவாவின் சேவையில் வைராக்கியத்தைக் காண்பித்து, அதற்காக தயாரிக்கும்படி பிள்ளைகளுக்கு உதவி செய்தார்களா? அவர்கள் பிள்ளைகளின் கூட்டாளிகளைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருந்தார்களா?

அதே போல், பள்ளி வேலையைக் குறித்து பெற்றோர் இவ்விதமாக சொல்வது சுலபம்: “என் மகன் பள்ளியில் நன்றாக படிக்காததற்கு காரணம் ஆசிரியர்களின் தவறு. அவர்களுக்கு என் மகனைப் பிடிக்கவில்லை. பள்ளியின் கல்வித் தரம் மிகவும் குறைவு.” ஆனால் பெற்றோர் பள்ளியோடு நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்களா? பிள்ளையின் பாடத்திட்டத்திலும் பாடத்திலும் பெற்றோர் அக்கறை காட்டினார்களா? அவனுடைய வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்யப்பட்டதா, தேவைப்பட்ட போது உதவி அளிக்கப்பட்டதா? அந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் அந்தப் பிள்ளையின் அல்லது பெற்றோரின் மனநிலை அல்லது சோம்பேறித்தனமாக இருக்கக்கூடுமா?

பெற்றோர் பள்ளி நிர்வாகத்தைக் குறை சொல்வதற்குப் பதிலாக, தங்கள் பிள்ளைகள் சரியான மனநிலையைக் கொண்டிருப்பதற்கும், பள்ளியில் படிப்பதற்குப் பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கும் அவர்கள் உடன்பாடான நடவடிக்கை எடுப்பது அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கும்.

ஆவிக்குரியப் பிரகாரமாய் செழித்தோங்கத் தவறுவது

எப்போதாவது ஒருவர் இவ்வாறு சொல்வதை நாம் கேட்கிறோம்: “நான் ஆவிக்குரியப் பிரகாரமாய் பலமாய் இருந்திருப்பேன், ஆனால் அவ்வாறு இல்லாதது என் தவறு அல்ல. மூப்பர்கள் எனக்குப் போதுமான கவனம் செலுத்துவதில்லை. எனக்கு நண்பர்களே கிடையாது. யெகோவாவின் ஆவி இந்தச் சபையின் மீது இல்லை.” ஆனால் சபையில் இருக்கும் மற்றவர்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர், நல்ல ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் செய்கின்றனர்; சபை ஆவிக்குரிய செழுமையாலும் வளர்ச்சியாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஏன் சிலருக்கு மட்டும் பிரச்சினைகள் உள்ளன?

எதிர்மறையான குறைகூறும் ஆவியை வெளிப்படுத்திக் காண்பிக்கும் நபர்களோடு நெருங்கிய தோழர்களாக இருக்க அநேகர் விரும்புவதில்லை. கூர்மையான நாவும் தொடர்ந்து குறைகூறுதலும் உற்சாகத்தை அதிகமாக இழக்கச் செய்யும். ஆவிக்குரியப் பிரகாரமாய் பலவீனமடையாமல் இருக்க விரும்பும் சிலர், அப்படிப்பட்ட நபர்களோடு சமூகக் கூட்டுறவுக் கொள்வதை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இதை மனதில் வைத்துக்கொண்டு சபையில் அன்பில்லை என்று நினைத்து, ஒருவர் வேறு இடத்துக்கு மாறிச் செல்ல ஆரம்பிக்கலாம், முதலில் ஒரு சபைக்கு, பின்பு மற்றொரு சபைக்கு, அதற்குப் பின் மற்றொன்றுக்கு என்று இவ்வாறே போய்க் கொண்டிருக்கலாம். பசுமையான புல்வெளிகளுக்காக எப்போதும் தேடிக்கொண்டிருக்கிற ஆப்பிரிக்காவின் சமவெளிகளில் உள்ள மந்தைகள் இடம் விட்டு இடம் மாறிச் செல்வது போல, இப்படி “இடம் விட்டு இடம் மாறிச் செல்லும்” கிறிஸ்தவர்கள் தங்களுக்குப் பிரியமாயிருக்கும் சபைக்காக எப்போதும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மாறாக, மற்றவர்களில் இருக்கும் நல்ல குணங்களைப் பார்த்து, தங்கள் வாழ்க்கையில் கடவுளின் பரிசுத்த ஆவியின் கனிகளை இன்னும் முழுமையாக வெளிக்காட்ட முயற்சி செய்தால் அவர்கள் எவ்வளவு சந்தோஷமாயிருப்பர்!—கலாத்தியர் 5:22, 23.

இராஜ்ய மன்றத்தில் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் வித்தியாசமான நபர்களோடு பேசுவதற்கு விசேஷ முயற்சி எடுத்து, ஒரு நல்ல குறிப்பின் பேரில் உண்மையான பாராட்டுதலைத் தெரிவிப்பதன் மூலம் சிலர் அதைச் செய்கின்றனர். அது அவருடைய பிள்ளைகள் நன்றாக நடந்துகொள்வது, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஒழுங்காக வருவது, காவற்கோபுர படிப்பில் நன்கு-தயாரிக்கப்பட்ட குறிப்புகள் சொல்வது, சபைப் புத்தகப் படிப்பு, வெளி ஊழியத்திற்கான கூட்டம் ஆகியவற்றுக்குத் தங்கள் வீட்டை உபயோகிக்கக் கொடுப்பது போன்றவற்றைப் பற்றி இருக்கலாம். அபூரணம் என்ற மேல்பூச்சுக்குக் கீழே உற்றுநோக்க வேண்டும் என்பதை உங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், நீங்கள் நிச்சயமாகவே உங்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளில் சிறப்பான குணங்களைக் கண்டுபிடிப்பீர்கள். இது அவர்களிடம் அன்பு காட்ட உங்களுக்கு உதவும், அப்போது உண்மையான நண்பர்களுக்குக் குறைவே இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.

கடைசி சாக்குப்போக்கு

“அது கடவுளுடைய சித்தம்.” “சாத்தான்மீது பழியைப் போடுங்கள்.” நம்முடைய சொந்த தவறுகளுக்காக கடவுளை அல்லது சாத்தானைக் குறைகூறுவது கடைசி சாக்குபோக்காக இருக்கலாம். கடவுள் அல்லது சாத்தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களின் பேரில் செல்வாக்குச் செலுத்தியிருக்கக்கூடும். ஆனால் சிலர் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களுமே, நல்லதாய் இருந்தாலும் சரி அல்லது கெட்டதாக இருந்தாலும் சரி, அவை கடவுள் அல்லது சாத்தானின் குறுக்கிடுதலினால் ஏற்பட்ட விளைவு என்று நினைக்கின்றனர். தங்களுக்கு நடந்தவை எல்லாம் தங்கள் சொந்த செயல்களின் விளைவே அல்ல என்பது போல் எண்ணுகின்றனர். “அந்தப் புதிய காரை நான் கொண்டிருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பினால், எப்படியாவது நான் அதைப் பெற்றுக்கொள்ளும்படி பார்த்துக் கொள்வார்.”

அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை அசட்டுத் துணிச்சலோடு நடத்துவர், கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என்ற எண்ணத்தின் பேரில் அவர்கள் பண சம்பந்தமான தீர்மானத்தையும் மற்ற தீர்மானங்களையும் செய்வர். அவர்களுடைய புத்தியற்ற செயல்கள் பொருளாதார அல்லது வேறு ஏதாவது நாசத்தில் விளைவடைந்தால், அவர்கள் சாத்தான்மீது பழி போடுவர். முதலாவது ‘செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமல்’ துணிச்சலோடு, சிந்தியாமல் ஏதோவொன்றை செய்து விட்டு, அதற்குப் பிறகு தோல்வியடையும் போது சாத்தானைக் குறைகூறுவது அல்லது அதைவிட மோசமான காரியம் என்னவென்றால், யெகோவா குறுக்கிடும்படி எதிர்பார்ப்பது, அகம்பாவமுள்ளதாக மட்டுமல்லாமல் வேதாகமத்திற்கு முரணானதாகவும் இருக்கும்.—லூக்கா 14:28, 29.

இயேசு அவ்விதமாக நினைத்து, தம் செயல்களுக்குத் தாம் உத்தரவாதத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று யோசிக்கும்படி சாத்தான் முயற்சி செய்தான். இரண்டாவது சோதனையைக் குறித்து மத்தேயு 4:5-7 இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.” அசட்டுத் தைரியத்தோடு, தற்கொலை செய்துகொள்ளும் போக்கை அவர் மேற்கொண்டு விட்டு, யெகோவா குறுக்கிடும்படி எதிர்பார்ப்பது சரியல்ல என்று இயேசு உணர்ந்தார். எனவே அவர் பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறதே.”

தங்கள் சொந்த கேள்விக்குரிய செயல்களுக்குச் சாத்தானை அல்லது கடவுளை குறைகூறும் மனச்சாய்வு உள்ளவர்கள், கடவுள் அல்லது சாத்தானுக்குப் பதிலாக நட்சத்திரங்களை நம்பும் ஜோதிடத்தைப் பின்பற்றுபவர்கள் போல் இருக்கின்றனர். நிகழும் சம்பவங்கள் எல்லாமே தங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றன என்று முழுவதும் நிச்சயமாய் இருப்பவர்கள், கலாத்தியர் 6:7-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் எளிய நியமத்தை கவனியாமல் விடுகின்றனர்: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”

மெய்ம்மையை எதிர்ப்படுதல்

நாம் ஒரு அபூரண உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை எவருமே மறுக்க மாட்டோம். இங்கே கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் பிரச்சினைகள் மெய் வாழ்க்கை சம்பவங்கள். ஜனங்கள் பண விஷயத்தில் நம்மை ஆதாயப்படுத்திக் கொள்வார்கள். வேலைக்கு அமர்த்துபவர்கள் சிலர் நேர்மையற்றவர்களாய் இருக்கலாம். அறிமுகமானவர்கள் நம்முடைய பிள்ளைகளைத் தவறாக பாதிக்கக்கூடும். மூப்பர்கள் சில சமயங்களில் அதிக அன்பானவர்களாகவும் அக்கறையுள்ளவர்களாகவும் இருந்திருக்கலாம். நாம் அபூரணத்தின் பாதிப்புகளையும், பைபிள் காண்பிக்கிறபடி “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகையால் வாழ்க்கையினூடாக நம்முடைய பாதை எப்போதும் கஷ்டங்கள் இல்லாமல் சுலபமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது மெய்ம்மைக்கு ஒத்தது அல்ல.—1 யோவான் 5:19.

கூடுதலாக, நம்முடைய சொந்த அபூரணங்களையும் வரையறைகளையும் அறிந்திருக்க வேண்டும், அநேக சமயங்களில் நம்முடைய பிரச்சினைகள் சொந்த அறிவற்ற நடத்தையின் விளைவு என்றும் உணர வேண்டும். ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் அறிவுரை கூறினார்: “உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் இருக்க வேண்டும்.” (ரோமர் 12:3) அந்தப் புத்திமதி இன்று நமக்கு அதே வலிமையோடு பொருந்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது தவறாக நடந்துவிட்டால், நம்முடைய முன்னோர்களாகிய ஆதாம் ஏவாளைப் பின்பற்றி உடனடியாக “அது என் தவறு அல்ல!” என்று சொல்லமாட்டோம். அதற்கு மாறாக நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வோம்: ‘இந்த மகிழ்ச்சியற்ற விளைவைத் தவிர்ப்பதற்கு நான் என்ன வித்தியாசமான காரியத்தைச் செய்திருக்கலாம்? இந்த விஷயத்தில் நல்ல நிதானிப்பைப் பிரயோகித்து ஒரு ஞானமான ஊற்றுமூலத்திலிருந்து ஆலோசனையை நாடினேனா? பிரச்சினையில் உட்பட்டிருந்த எதிர்சாராரைக் குற்றமற்றவர்கள் என்று கருதுவதன் மூலம் அவர்களுக்குக் கண்ணியத்தை அளித்தேனா?’

நாம் கிறிஸ்தவ நியமங்களைப் பின்பற்றி நல்ல நிதானிப்பைப் பிரயோகித்தோம் என்றால், நமக்கு நண்பர்கள் அநேகர் இருப்பார்கள், பிரச்சினைகள் குறைவாக இருக்கும். நம்முடைய அன்றாடக வாழ்க்கையில் வரும் அநேக தேவையற்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும். நாம் மற்றவர்களோடு கொண்டுள்ள தொடர்புகளில் சந்தோஷத்தைக் கண்டடைவோம், “அது யாருடைய தவறு?” என்ற கேள்வியால் வாதிக்கப்பட மாட்டோம்.

[பக்கம் 28-ன் படங்கள்]

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆவிக்குரியப் பிரகாரமாய் செழித்தோங்குவதற்கு உதவி

செய்ய அதிகத்தைச் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்