மரணத்தைப் பற்றிய கட்டுக்கதைகள் ஒரு கண்ணோட்டம்
வரலாறு முழுவதிலும் மனிதன் மனச்சோர்வை உண்டுபண்ணும் மரணத்தைப் பார்த்து குழம்பிப் போயிருக்கிறான். அச்சத்தில் உறைந்து போயிருக்கிறான். இது போதாதென்று, பொய் மத கருத்துக்களும் பிரபலமான பழக்க வழக்கங்களும் ஆழமாக பதிந்துவிட்ட நம்பிக்கைகளும் சேர்ந்து இந்த மரண பயத்தை இன்னும் அதிகரித்திருக்கின்றன. மரண பயம் வாழ்க்கையை அனுபவிக்கும் திறனை ஊனப்படுத்தி, வாழ்ந்து என்ன பயன் என்று நினைக்கும் அளவுக்கு ஒருவரின் நம்பிக்கையை அழித்துவிடுகிறது.
மரணத்தைப் பற்றிய பிரபல கட்டுக்கதைகளை பரப்புவதற்கு விசேஷமாக முக்கிய மதங்களைத்தான் குறைசொல்ல வேண்டும். பைபிள் சத்தியத்தின் உதவியோடு இவற்றில் சிலவற்றை ஆராய்வதன் மூலம் மரணத்தைப் பற்றிய உங்கள் சொந்த கருத்துக்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
கட்டுக்கதை 1: மரணம், வாழ்க்கையின் இயற்கையான முடிவு.
“மரணம் . . . வாழ்வின் முக்கிய அம்சம்” என்கிறது மரணம்—வளர்ச்சியின் கடைசி கட்டம் என்ற ஆங்கில புத்தகம். இது போன்ற கருத்துக்கள், மரணம் இயல்பானது, அனைத்து உயிரினங்களின் இயற்கையான முடிவு என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. இது, எதிலும் நம்பிக்கையில்லாத தத்துவம் வளர்வதற்கு காரணமாகி அநேகரை சந்தர்ப்பவாதிகளாக நடந்துகொள்ள தூண்டியிருக்கிறது.
ஆனால் உண்மையிலேயே மரணம், வாழ்க்கையின் இயற்கையான முடிவா? எல்லா ஆய்வாளர்களும் அதை நம்புவதில்லை. உதாரணமாக, மனிதனின் முதுமை குறித்து ஆய்வு செய்யும் உயிரியலர் கால்வின் ஹார்லே, மனிதர்கள் “சாவதற்காக படைக்கப்பட்டிருப்பதாக” தான் நம்பவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். நோய் தடுப்பியல் நிபுணர் வில்லியம் க்ளார்க் இவ்வாறு கூறினார்: “மரணம் வாழ்வோடு பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்திருக்க வேண்டியதில்லை.” கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஸிமோர் பென்ஸர், “முதுமையடைவதை ஒரு கடிகாரம் என்று வருணிப்பது சரியல்ல, ஆனால் அதை நம்மால் மாற்ற முடிகிற சம்பவங்களாக வருணிப்பதே பொருத்தமானதாகும்” என்று யோசனையோடு தெரிவிக்கிறார்.
மனிதன் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்து பார்க்கையில் விஞ்ஞானிகள் வாயடைத்து நிற்கிறார்கள். மனிதனின் தனித் திறமைகளையும் செயல்படும் ஆற்றல்களையும் பார்த்தால், 70-80 வருடங்களில் முடிந்து போகிற வாழ்க்கைக்குத் தேவையாயிருப்பதைவிட ஏராளமானவற்றை பெற்றிருப்பது தெரிகிறது. உதாரணமாக மனித மூளைக்கு அளவிட முடியாத ஞாபக சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “உலகின் மிகப் பெரிய நூலகங்களிலுள்ள இரண்டு கோடி புத்தகங்களிலுள்ள” தகவலை சேமித்து வைக்க நம் மூளையால் முடியும் என்று ஒரு ஆய்வாளர் மதிப்பிட்டுள்ளார். சராசரி வாழ்நாள் காலத்தில், ஒரு நபர் தன்னுடைய மூளையின் திறனில் 1 சதவீதத்தில் 1/100 பாகத்தை (.0001) மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது சில நரம்பியல் அறிவியலர்களின் கருத்து. ‘இத்தனை பிரமாண்டமான ஆற்றல்கொண்ட ஒரு மூளை நமக்கிருக்க சராசரி வாழ்நாள் காலத்தில் அதில் ஒரு சிறிய பின்னத்தை மட்டுமே பயன்படுத்த முடிவது ஏன்’ என்று கேட்பது பொருத்தமானதே.
மரணத்தைக் குறித்ததில் மனிதர்கள் எவ்வாறு இயற்கைக்கு மாறாக பிரதிபலிக்கிறார்கள் என்பதைக்கூட எண்ணிப் பாருங்கள்! பெரும்பாலானவர்களுக்கு மனைவி, கணவன் அல்லது பிள்ளையின் மரணமே தங்கள் வாழ்நாள் காலத்தில் சந்திக்கும் பெரும் அதிர்ச்சிதரும் அனுபவமாக இருக்கும். உயிருக்கு உயிராய் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் வெகு நாட்களுக்கு பின்னும் உணர்ச்சிரீதியில் மக்கள் ஒரேயடியாக நிலைகுலைந்து போகிறார்கள். மரணம் ஏற்படுவது இயற்கையே என்று சொல்பவர்கள்கூட தங்களுடைய மரணம் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வரும் என்பதை ஜீரணிக்க கஷ்டப்படுகின்றனர். ‘முடிந்த வரை நீண்ட காலம் வாழவே அனைவரும் விரும்புகின்றனர் என்று பொதுவாக நிபுணர்கள் நம்புவதாக’ பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் குறிப்பிட்டது.
மரணத்திற்கு மனிதரின் பொதுவான பிரதிபலிப்பு, நினைவுபடுத்திப் பார்ப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் அவனுக்குள்ள அசாத்தியமான திறமை, நித்தியமாக வாழ வேண்டும் என்ற உள்ளான ஏக்கம் ஆகியவற்றை கவனிக்கையில் அவன் வாழ்வதற்கென்றே உண்டாக்கப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரியவில்லையா? ஆம், மனிதன் முடிவில் இயற்கையாக மரிப்பதற்கு அல்ல என்றென்றும் வாழ்வதற்கே கடவுள் அவனை படைத்திருக்கிறார். முதல் மனித தம்பதியிடம், அவர்களுடைய எதிர்கால எதிர்பார்ப்பைப் பற்றி கடவுள் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) எப்பேர்ப்பட்ட அற்புதமான நித்திய எதிர்காலம்!
கட்டுக்கதை 2: மக்கள் தன்னோடு இருப்பதற்காக கடவுள் அவர்களை மரணத்தில் எடுத்துக்கொள்கிறார்.
மூன்று குழந்தைகளுக்கு தாயாகிய 27 வயது பெண் ஒருவர், அவர்களை அனாதைகளாக விட்டுவிட்டு, மரணபடுக்கையில் இருந்தபோது கத்தோலிக்க கன்னியாஸ்திரீயிடம் இவ்வாறு சொன்னார்: “இதுவேதான் கடவுளின் சித்தம் என்று சொல்லிவிடாதீர்கள். . . . இப்படி வேறு யாராவது சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வருகிறது.” ஆனால் தம் அருகில் இருப்பதற்காக மக்களை கடவுள் மரணத்தில் எடுத்துக்கொள்கிறார் என்றே இன்று பல மதங்கள் கற்பித்து வருகின்றன.
மரணத்தை எண்ணி நம் இருதயம் எப்படி கலங்குகிறது என்பது தெரிந்திருந்தும் கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றி மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு படைப்பாளர் உண்மையில் அத்தனை கொடூரமானவரா? இல்லை, பைபிளின் கடவுள் அப்படிப்பட்டவர் அல்ல. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என 1 யோவான் 4:8 சொல்கிறது. கடவுளுக்கு அன்பிருக்கிறது என்றோ, அவர் அன்புள்ளவர் என்றோ சொல்லாமல், தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று பைபிள் சொல்வதை கவனியுங்கள். அவருடைய அன்பு அந்தளவுக்கு ஆழமானதாக, தூய்மையானதாக, பரிபூரணமானதாக இருப்பதாலும் அது அவருடைய ஆளுமையிலும் செயல்களிலும் முழுமையாக வெளிப்படுவதாலும் அவர் அன்பின் உருவாகவே இருப்பதாக சொல்வது பொருத்தமானதே. தம் அருகே வைத்துக்கொள்வதற்காக மக்களை மரணத்தில் எடுத்துக்கொள்ளும் கடவுள் இவரல்ல.
மரித்தவர்கள் செல்லும் இடத்தையும் அவர்களின் நிலைமையையும் குறித்து எதை எதையோ சொல்லி பொய் மதங்கள் அநேகரை குழப்பிவிட்டிருக்கின்றன. அவர்கள் பரலோகம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம், லிம்போ ஆகிய இடங்களுக்கும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவற்றில் தொடங்கி முற்றிலும் பயமுறுத்தக்கூடியவை வரையாக இன்னும் பல்வேறு இடங்களுக்கும் செல்வதாக அவை சொல்கின்றன. ஆனால் மரித்தவர்கள் உணர்வற்று இருப்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது; அவர்களுடைய நிலைமை உறக்கத்திலிருப்பவர்களின் நிலைக்கு ஒத்திருக்கிறது. (பிரசங்கி 9:5, 10; யோவான் 11:11-14) அயர்ந்து தூங்கும் ஒருவரைப் பார்க்கையில் நாம் எப்படி கவலைப்படுவதில்லையோ அப்படியே மரணத்துக்குப்பின் நமக்கு நடப்பதைக் குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ‘ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள அனைவரும்’ எழுந்து புதுப்பிக்கப்பட்ட உயிரோடு ஒரு பரதீஸிய பூமியில் ‘வரப்போகிற’ ஒரு காலத்தைப் பற்றி இயேசு கூறினார்.—யோவான் 5:28, 29, NW; லூக்கா 23:43.
கட்டுக்கதை 3: தேவதூதர்களாக ஆவதற்காக குழந்தைகளை கடவுள் எடுத்துக்கொள்கிறார்.
நோயால் பீடிக்கப்பட்டு சாவை எதிர்நோக்கியிருப்பவர்களை வைத்து ஆய்வு நடத்திய எலிசபெத் கப்ளர் ராஸ் என்பவர் மதப்பற்றுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் மற்றொரு பொதுவான கருத்தைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு உண்மை சம்பவத்தை விவரித்து, “மரணத்தில் தன் சகோதரனை இழந்துவிட்ட ஒரு சிறுமியிடம், கடவுளுக்கு சின்னஞ்சிறு ஜானியிடம் கொள்ளைப் பிரியம் இருந்ததால் அவனை பரலோகத்துக்கு எடுத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்வது முட்டாள்தனம்” என்று கூறினார். இது கடவுளைப் பற்றிய தவறான அபிப்பிராயம் பெற வழிநடத்துகிறது, அது அவருடைய ஆளுமையையும் நடத்தையையும் சரியாக எடுத்துக்காட்டுவதில்லை. டாக்டர் கப்ளர் ராஸ் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “இந்தச் சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னும் அவளுக்கு கடவுள் மீதிருந்த கோபம் தணியவில்லை, முப்பதாண்டுகளுக்குப்பின் தனக்குப் பிறந்த மகனை மரணத்தில் இழந்தபோது சித்தம் கலங்கி மனச்சோர்வில் மூழ்கிவிட்டாள்.”
மற்றொரு தேவதூதன் வேண்டும் என்பதற்காக கடவுள் ஏன் ஒரு குழந்தையைப் பறித்துக்கொள்ள வேண்டும்? அந்தக் குழந்தையின் பெற்றோரைவிட கடவுளுக்குத்தான் அந்தக் குழந்தை தேவையா? கடவுள் குழந்தைகளை எடுத்துக்கொள்வது உண்மையானால், அன்பில்லாத, சுயநலமுள்ள படைப்பாளராகத்தானே அவர் இருக்க வேண்டும்? இந்தக் கருத்துக்கு நேர் எதிர்மாறாக, “அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது” என்று பைபிள் கூறுகிறது. (1 யோவான் 4:7) ஓரளவு ஒழுக்க உணர்வுள்ள மனிதர்களேகூட நியாயம் என்று ஏற்றுக்கொள்ளாத இழப்பை அன்புள்ள கடவுள் ஏற்படுத்துவாரா?
ஆகவே குழந்தைகள் ஏன் மரிக்கிறார்கள்? இதற்கு ஓரளவு பதில் பைபிளில் பிரசங்கி 9:11-ல் (NW) காணப்படுகிறது: ‘காலமும் எதிர்பாராத சம்பவமும் அனைவருக்கும் நேரிடுகிறது.’ கருத்தரிக்கும் சமயத்திலிருந்தே நாமனைவரும் அபூரணர், பாவமுள்ளவர்கள் என்பதை சங்கீதம் 51:5 நமக்கு சொல்கிறது, இப்போது மனிதர்கள் அனைவருக்கும் சாவு பல விதமான காரணங்களினாலும் ஏற்படுகிறது. சிலர் இந்த உலகைக் காணாமலே கண் மூடிவிடுகின்றனர், அதாவது இறந்து பிறக்கின்றனர். மற்றவர்கள் மோசமான சூழ்நிலைமைகளில் அல்லது விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இவற்றிற்கு கடவுள் பொறுப்புள்ளவர் அல்ல.
கட்டுக்கதை 4: மரணத்துக்குப்பின் சிலர் வாதிக்கப்படுகிறார்கள்.
பொல்லாதவர்கள் அக்கினிமயமான நரகத்துக்குச் செல்கிறார்கள், அங்கே என்றுமாக வாதிக்கப்படுகிறார்கள் என்று பல மதங்கள் கற்பிக்கின்றன. இந்தப் போதனையில் நியாயம் இருக்கிறதா? இதற்கு பைபிளில் ஆதாரம் இருக்கிறதா? மனிதன் 70, 80 ஆண்டுகளே வாழ்கிறான். ஒருவன் வாழ்நாள் முழுவதும் எத்தனை பொல்லாத காரியங்களைச் செய்த குற்றவாளியாக இருந்தாலும் அவனை என்றென்றுமாக வாதிப்பது நியாயமான தண்டனையாக இருக்குமா? இருக்காது. குறுகிய வாழ்நாள் காலத்தில் செய்த பாவங்களுக்காக ஒருவனை என்றுமாக வாதிப்பது முழுக்க முழுக்க அநீதியானதாக இருக்கும்.
மனிதர்களின் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை கடவுள் மாத்திரமே சொல்ல முடியும். அதை அவர் தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் சொல்லியிருக்கிறார். பைபிள் சொல்வதாவது: “இவைகள் [மிருகங்கள்] சாகிறதுபோலவே அவர்களும் [மனிதரும்] சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே. . . . எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” (பிரசங்கி 3:19, 20) இங்கே அக்கினிமயமான நரகத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. மனிதர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்—அவர்கள் மரிக்கையில் இல்லாமல் போகிறார்கள்.
ஒருவனை வாதிப்பதற்கு அவன் உணர்வுள்ளவனாக இருக்க வேண்டும். மரித்தவர்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனரா? மறுபடியும் பைபிளே பதிலளிக்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.” (பிரசங்கி 9:5) ‘ஒன்றும் அறியாத’ மரித்தவர்கள் எந்த இடத்திலும் வேதனையை அனுபவிக்கவே முடியாது.
கட்டுக்கதை 5: மரணம் நம் வாழ்வின் நிரந்தர முடிவு.
நாம் மரிக்கும்போது இல்லாமல் போகிறோம், ஆனால் எல்லாமே அத்துடன் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. உண்மையுள்ள மனிதன் யோபு மரிக்கையில் கல்லறையாகிய ஷியோலுக்குச் செல்லப் போவதை அறிந்திருந்தார். ஆனால் அவர் கடவுளிடம் செய்த ஜெபத்தை சற்று கவனியுங்கள்: “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ? . . . என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்.”—யோபு 14:13-15.
மரணம் வரைக்கும் உண்மையுள்ளவராக இருந்தால், கடவுள் தன்னை நினைவுகூருவார், காலப்போக்கில் உயிர்த்தெழுப்புவார் என்று யோபு நம்பினார். பூர்வ கால கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் இப்படித்தான் நம்பினார்கள். இந்த நம்பிக்கையை இயேசுவே உறுதி செய்து, மரித்தோரை எழுப்புவதற்கு கடவுள் தம்மை பயன்படுத்துவார் என்பதை சுட்டிக்காட்டினார். கிறிஸ்துவே சொன்ன வார்த்தைகள் இந்த உறுதியை நமக்குக் கொடுக்கின்றன: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவின்] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.
சீக்கிரத்தில் கடவுள் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி பரலோக ஆட்சியின்கீழ் புதியதோர் உலகை உருவாக்குவார். (சங்கீதம் 37:10, 11; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 16:14, 16) அப்பொழுது பூமி முழுவதும் பரதீஸாக இருக்கும், அதில் கடவுளை சேவிப்போர் குடியிருப்பார்கள். பைபிளில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
பயத்திலிருந்து விடுதலை
உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் அந்த ஏற்பாட்டின் மூலகாரணரையும் பற்றி அறிவது உங்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என இயேசு உறுதியளித்தார். (யோவான் 8:32) மரண பயத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதும் இதில் உட்பட்டிருக்கிறது. யெகோவா மாத்திரமே முதுமையையும் மரணத்தையும் மாற்றி நமக்கு நித்திய ஜீவனை அருள முடியும். கடவுளுடைய வாக்குறுதிகளை நீங்கள் நம்பலாமா? தாராளமாக நம்பலாம், ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை எப்போதும் உண்மையில் நிறைவேறி வருகிறது. (ஏசாயா 55:11) மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். இதற்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியோடு உதவுவார்கள்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
மரண பயம் வாழ்க்கையை அனுபவிக்கும் ஒருவருடைய திறனை ஊனப்படுத்திவிடலாம்
[பக்கம் 7-ன் அட்டவணை]
மரணத்தைப் பற்றிய சில பொதுவான கட்டுக்கதைகள் வேதவாக்கியங்கள் சொல்வது என்ன?
● மரணம், வாழ்க்கையின் இயற்கையான முடிவு ஆதியாகமம் 1:28; 2:17; ரோமர் 5:12
●மக்கள் தன்னோடு இருப்பதற்காக கடவுள் அவர்களை யோபு 34:15; சங்கீதம் மரணத்தில் எடுத்துக்கொள்கிறார் 37:11,29; 115:16
●தேவதூதர்களாக ஆவதற்காக குழந்தைகளை சங்கீதம் 51:5; 104:1, 4; கடவுள் எடுத்துக்கொள்கிறார் எபிரெயர் 1:7, 14
●மரணத்துக்குப்பின் சிலர் வாதிக்கப்படுகிறார்கள் சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5,10; ரோமர் 6:23
●மரணம் நம் வாழ்வின் நிரந்தர முடிவு யோபு 14:14,15; யோவான் 3:16; 17:3; அப்போஸ்தலர் 24:15
[பக்கம் 8-ன் படம்]
மரணத்தைப் பற்றிய உண்மையை அறிவது மரண பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Barrators—Giampolo/The Doré Illustrations For Dante’s Divine Comedy/Dover Publications Inc.