வியப்பூட்டும் அண்டம்
பேரதிர் வெடிக் கொள்கை எதை விளக்குகிறது—எதை விளக்கவில்லை
ஒவ்வொரு காலையும் ஓர் விந்தைதான். காலை கதிரவனுக்குள், லட்சக்கணக்கான டிகிரி வெப்பத்தில் ஹைட்ரஜன், ஹீலியமாக மாறுகிறது. X கதிர்களும் காமா கதிர்களும் உட்பகுதியிலிருந்து கடுஞ்சீற்றத்துடன் வெளியேறி கதிரவனைச் சுற்றியுள்ள அடுக்குகளில் ஊற்றுகின்றன. முழுவதுமாக ஒளி ஊடுருவத்தக்க பளிங்குபோன்ற இயல்புடையதாக சூரியன் இருந்திருந்தால், இந்தக் கதிர்கள் ஒருசில வதக்கும் வினாடிகளுக்குள் சூரியனின் மேற்பரப்புக்கு ஊடுருவிப் பாய்ந்திருக்கும். அதற்குப் பதிலாக, அவை இறுக்கமாகப் பொதிந்தமைக்கப்பட்டுள்ள அணுவிலிருந்து சூரிய “காப்பீடுள்ள” அணுவிற்கு துள்ள ஆரம்பிக்கின்றன; அவ்வாறு செய்கையில் மெதுவாக ஆற்றலை இழக்கின்றன. நாட்களும் வாரங்களும் நூற்றாண்டுகளும் கடந்துசெல்கின்றன. ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பின்னர், ஒருசமயம் அழிவுக்கேதுவானதாக இருந்த கதிர்வீச்சு, சூரியனின் மேற்பரப்பிலிருந்து பொன்னிற மென்னொளியாக வீசுகிறது—இனிமேலும் ஓர் அச்சுறுத்தலாக இராமல், பூமியை அதன் கதகதப்பால் நீராட்டுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.
ஒவ்வொரு இரவும்கூட ஒரு விந்தைதான். நமது பால்வழி மண்டலத்தின் பரந்த வானவெளியின் குறுக்கே மற்ற சூரியன்கள் நம்மை நோக்கி மின்னுகின்றன. வரம்பற்ற ஏராளமான நிறங்கள், அளவுகள், வெப்பங்கள், செறிவுகள் ஆகியவற்றைக் கொண்டவை அவை. சில பிரமாண்டமானவை; நமது சூரியனிருக்கும் நிலையில் இவற்றில் ஒன்று மையப்படுத்தப்பட்டால், நம் கோளில் மீதமிருப்பது அந்த ராட்சத வீண்மீனின் மேற்பரப்பிற்கு உள்ளில் இருக்குமளவுக்கு அவ்வளவு பெரிதானவையாக இருக்கின்றன. மற்ற சூரியன்கள் சின்னஞ்சிறிய, வெள்ளைக் குள்ளர்கள்—நம் பூமியைவிட சிறியவை, இருந்தாலும் நம் சூரியனளவு கனமுடையவையாக இருக்கின்றன. சில, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு அமைதியாக இழுத்துச் செல்கின்றன. மற்றவை சிதைவுறு ஒளிர் விண்மீண் (supernova) வெடிப்புகளின் விளிம்பில் நிற்கின்றன; அந்த வெடிப்புகளில் ஒரு விண்மீன் வெடிக்கையில் தன்னைத்தானே அழித்து, சற்றுநேரத்திற்கு முழு பால்வழி மண்டலங்களையும் மிஞ்சி பிரகாசிக்கிறது.
ஆரம்ப காலத்து மக்கள், கடல் அரக்கர்கள் மற்றும் போரிடும் தெய்வங்கள், வலுசர்ப்பங்கள், ஆமைகள் மற்றும் யானைகள், தாமரைப் பூக்கள் மற்றும் கனவுகாணும் தெய்வங்கள் ஆகியவற்றின் வாயிலாக விளக்கினர். பின்னர், பகுத்தறிவு யுகம் எனப்பட்ட காலத்தின்போது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நுண்கணிதம் மற்றும் நியூட்டனின் விதிகள் ஆகியவற்றின் “மாயம்,” தெய்வங்களை மாற்றீடு செய்தது. பண்டைய செய்யுளையும் பழங்கதையையும் இழந்த ஒரு யுகத்தில் நாம் தற்போது வாழ்கிறோம். இன்றைய அணு யுகத்தின் பிள்ளைகள், தாங்கள் படைப்பதற்கான மாதிரியாக பண்டைய கடல் அரக்கனை அல்ல, நியூட்டனின் “இயந்திரத்தை” அல்ல, ஆனால் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான அடையாளக்குறியாக இருக்கும் அணுகுண்டையே தெரிந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய “படைப்பாளர்” ஒரு தீப்பந்து. அவர்களுடைய அண்டத்தின் வெடிப்பை பேரதிர் வெடி என்கிறார்கள்.
பேரதிர் வெடிக் கொள்கை எதை “விளக்குகிறது”
சுமார் 1,500 கோடியிலிருந்து 2,000 கோடி வருடங்களுக்கு முன்னர், இந்த அண்டமும் இருக்கவில்லை, வெற்று வெளியும் இருக்கவில்லை. காலம் இருக்கவில்லை, பருப்பொருள் இருக்கவில்லை—தனித்தன்மைக்கூறு (singularity) எனப்பட்ட, மிகவும் அடர்த்தியானதும், மிகவும் சிறியதுமான ஒரு புள்ளியைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை; அது தற்போதைய அண்டமாக வெடித்தது என்று படைப்பைப் பற்றி இந்தத் தலைமுறையின் மிகப் பிரபலமான கருத்து கூறுகிறது. ஒரு நொடியின் முதல் மிகச்சிறிய பின்னக்கூறின்போது, ஒளியின் வேகத்தைவிட அதிக விரைவாக அந்த இளம் அண்டம் வீங்கிய அல்லது விரிவடைந்த சுருக்கமான காலப்பகுதியையும் அந்த வெடிப்பு உட்படுத்தியது.
பேரதிர் வெடியின் முதல் சில நிமிடங்களின்போது, அண்டம்தழுவிய ரீதியில் அணுக்கரு பிணைப்பு ஏற்பட்டது; இப்போது உடுக்கண வெளியில் காணப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தின் அளவுகளுக்கும் லித்தியத்தின் அளவில் கொஞ்சத்திற்குமாவது இந்த பிணைப்பு காரணமாக இருந்திருக்கிறது. ஒருவேளை 3,00,000 வருடங்களுக்குப் பின்னர், அண்டம்தழுவிய அந்தத் தீப்பந்து, சூரிய மேற்பரப்பின் வெப்ப அளவிலிருந்து சற்று குறைந்த அளவுக்கு வந்தது; அணுக்களைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைகளில் எலெக்ட்ரான்கள் அமர்ந்துகொண்டு ஃபோட்டான்களின் பிரகாசத்தை அல்லது ஒளிப் பிரகாசத்தை வெளிவிட இது இடங்கொடுக்கிறது. அந்த ஆதி ஆரம்ப பிரகாசம், பெரிதும் தணிந்திருக்கிறபோதிலும், இன்று அண்டம்சார்ந்த பின்புலக் கதிர்வீச்சு என்பதாக 2.7 கெல்வின் வெப்ப அளவிற்கு இணையாகவுள்ள நுண்ணலை அதிர்வெண்களில் உய்த்துணரப்படலாம்.a உண்மையில், இந்தப் பின்புலக் கதிர்வீச்சு 1964-65-ல் கண்டுபிடிக்கப்பட்டதுதான், பேரதிர் வெடிக் கொள்கைக்கு ஏதோவொரு உறுதிப்பாடு இருப்பதாக அநேக அறிவியலாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது. தொலைதூரத்து பால்வழி மண்டலங்கள் நம்மைவிட்டும் ஒன்றைவிட்டு ஒன்றும் அதிவேகத்தில் அகன்றுசெல்வதுடன், அண்டம் ஏன் எல்லா திசைகளிலும் விரிவடைந்துகொண்டே செல்வதாகத் தோன்றுகிறது என்பதையும் இந்தக் கொள்கை விளக்குவதாக உரிமைபாராட்டுகிறது.
பேரதிர் வெடிக் கொள்கை அவ்வளவை விளக்குவதாகத் தோன்றுகையில், அதை ஏன் சந்தேகிக்க வேண்டும்? ஏனென்றால் அது விளக்கம் தராத அதிகமும் இருக்கிறது. உதாரணமாக: சூரியனும் கோள்களும் பூமியைச் சுற்றி பெரிய வட்டங்களில் சுற்றுகின்றன என்றும், அதேநேரத்தில் புறவட்டங்கள் எனப்படும் சிறிய வட்டங்களையும் உருவாக்கிக்கொண்டே சுற்றுகின்றன என்றும் பண்டைய வானவியலாளர் டாலமி ஒரு கொள்கையைக் கொண்டிருந்தார். அந்தக் கொள்கை, கோள்களின் இயக்கத்தை விளக்குவதாகத் தோன்றியது. நூற்றாண்டுகளாக வானவியலாளர்கள் அதிகமான விவரக் குறிப்புகளைச் சேகரித்தபோது, அந்தப் புதிய விவரக் குறிப்புகளை “விளக்குவதற்கு” டாலமியின் கருத்தையுடைய அண்டவியலாளர்கள் தாங்கள் வைத்திருந்த மற்ற புறவட்டங்களுடன் மேலுமான புறவட்டங்களை எப்போதுமே கூட்ட முடிந்தது. ஆனால் அதுதானே அந்தக் கொள்கை சரியானதென்று அர்த்தப்படுத்தவில்லை. கடைசியாக, விளக்குவதற்கு மிக அதிகமான விவரக் குறிப்புகள் இருந்தன; மேலும் காரியங்களைச் சிறந்த முறையிலும் இன்னும் எளிமையாகவும் விளக்கிய, பூமி சூரியனைச் சுற்றிவந்தது என்ற காப்பர்னிக்கஸின் கருத்தைப் போன்ற மற்றுமநேக கொள்கைகளும் வரத்தொடங்கின. இன்று டாலமியின் கருத்தை நம்பும் ஒரு வானவியலாளரைக் காண்பது அரிது!
புதிய கண்டுபிடிப்புகளை எதிர்ப்படுகையில் ஏற்கப்படாததாய் ஆகிவரும் தங்கள் கொள்கையை மீண்டும் நிலைநாட்டுவதற்காக டாலமியின் கருத்தை நம்பும் அண்டவியலாளர்கள் எடுக்கும் முயற்சிகளை, இன்று பேரதிர் வெடிக் கொள்கையில் நம்பிக்கை வைப்பவர்கள் தங்கள் கொள்கையை நம்பிக்கைக்குரியதாய் வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடுகிறார் பேராசிரியர் ஃப்ரெட் ஹாயில். புத்திக்கூர்மையுள்ள பிரபஞ்சம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் அவர் எழுதினார்: “பேரதிர் வெடிக் கொள்கையிலுள்ள முரண்பாடுகளை மறைப்பதற்கே, முன்பிருந்ததைவிட அதிக சிக்கலானதும் எளிதில் விளங்காததுமாக ஆகியிருக்கும் ஒரு கருத்தை உருவாக்குவதற்கே ஆய்வாளர்கள் பிரதான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.” தன்னுடைய கொள்கையைப் பாதுகாப்பதற்காக டாலமி பிரயோஜனமற்ற வகையில் பயன்படுத்திய புறவட்டங்களைப் பற்றி குறிப்பிட்டப் பின்னர், ஹாயில் தொடர்ந்து சொன்னதாவது: “அதன் விளைவாக பேரதிர் வெடிக் கொள்கையின்மீது வலுவற்ற மங்கலான திரையொன்று தற்போது அச்சுறுத்திக்கொண்டு நிற்கிறது என்று சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமுமில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, உண்மைகளின் தொகுப்பு ஒன்று, ஒரு கொள்கையை எதிர்ப்பட்டு நிற்கையில், அது அரிதாகவே மீண்டும் நிலைபெறும் என்று அனுபவம் காண்பிக்கிறது.”—பக்கம் 186.
டிசம்பர் 22/29, 1990-ன் நியூ சயன்டிஸ்ட் (ஆங்கிலம்) பத்திரிகை, அதைப்போன்ற கருத்துக்களை எதிரொலித்தது: “அண்டத்தைப் பற்றிய பேரதிர் வெடிக் கொள்கைக்கு . . . டாலமியின் முறை தாராளமாகப் பொருத்தப்படுகிறது.” அந்தக் கட்டுரை பின்னர் கேட்கிறது: “துகள் இயற்பியலிலும் அண்டவியலிலும் நாம் எப்படி நிஜமான முன்னேற்றத்தை அடைய முடியும்? . . . நாம் மிகவும் போற்றிக்காக்கிற ஊகிப்புகள் சிலவற்றின் முற்றிலும் கற்பனையான தன்மையைப் பற்றி நாம் அதிக நேர்மையாயும் ஒளிவுமறைவின்றியும் சிந்திக்க வேண்டும்.” புதிய குறிப்புகள் இப்போது தாராளமாக வந்துகொண்டிருக்கின்றன.
பேரதிர் வெடிக் கொள்கை பதிலளிக்காத கேள்விகள்
மற்ற பால்வழி மண்டலங்களின் தூரங்களை அளப்பதற்கு ஒளியியல் உபகரணங்கள் சரிப்படுத்தப்பட்ட ஹபிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்துகிறவர்களிடமிருந்து, பேரதிர் வெடிக் கொள்கைக்கு பெரிய சவால் வந்திருக்கிறது. புதிய விவரக் குறிப்புகள், அந்தக் கொள்கையினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன!
கன்னி விண்மீன் குழுவிலுள்ள ஒரு பால்வழி மண்டலத்தின் தூரத்தை அளப்பதற்கு வென்டி ஃப்ரீட்மன் என்ற வானியலாளரும் மற்றவர்களும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை சமீபத்தில் பயன்படுத்தினர்; முன்பு எண்ணப்பட்டதைவிட, அண்டம் விரைவாக விரிந்துகொண்டு செல்வதாகவும், அதன் காரணமாக அதன் வயது குறைவானது என்றும் அந்த அளவு உணர்த்துகிறது. உண்மையில், அந்தக் குறிப்புகள் “சுமார் 800 கோடி வருடங்கள் என்ற குறைந்த அளவுக்கே அண்டத்தின் வயதைச் சுட்டிக்காண்பிக்கிறது,” என்று சயன்டிஃபிக் அமெரிக்கன் (ஆங்கிலம்) பத்திரிகை கடந்த ஜூனில்தான் அறிக்கை செய்தது. 800 கோடி வருடங்கள் என்பது மிக நீண்ட காலமாகத் தோன்றினாலும், தற்போது கணக்கிடப்பட்டுள்ள அண்டத்தின் வயதில் கிட்டத்தட்ட பாதியாகவே அது இருக்கிறது. இது ஒரு விசேஷித்த பிரச்சினையை உண்டுபண்ணுகிறது, ஏனென்றால், அந்த அறிக்கை தொடர்ந்து சொல்லுகிறபடி, “ஒருசில விண்மீன்கள் குறைந்தபட்சம் 1,400 கோடி வருட வயதுள்ளவையாகவாவது இருப்பதாக மற்ற விவரக் குறிப்புகள் குறிப்பிட்டுக் காண்பிக்கின்றன.” ஃப்ரீட்மன் எண்கள் உண்மையானவையாக நிரூபித்தால், அந்த வயதான விண்மீன்கள், பேரதிர் வெடி ஏற்பட்டதற்கும் முன்னதாகவே இருந்திருக்கவேண்டும்!
பேரதிர் வெடிக் கொள்கைக்கு மற்றுமொரு பிரச்சினை, அண்டத்தில் “குமிழ்கள்” இருப்பதைக் குறித்து தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தாட்சியிலிருந்து வருகிறது; இவை, தங்களுக்கு வெளியே பால்வழி மண்டலங்களையும் உள்ளே வெற்றிடங்களையும் கொண்டவையாய், பத்து கோடி ஒளியாண்டு அளவை உடையவையாய் இருக்கின்றன. வான்-இயற்பியலுக்கான ஹார்வார்ட் ஸ்மித்ஸோனியன் மையத்தைச் சேர்ந்த மார்க்ரட் கெல்லர், ஜான் ஹக்ரா என்பவர்களும், இன்னும் மற்றவர்களும், வட பாதிக்கோள வானத்தின் குறுக்காக சுமார் 50 கோடி ஒளியாண்டுகள் நீளத்தில் பால்வழி மண்டலங்களாலான பெருஞ்சுவர் என்று அவர்கள் அழைப்பதைக் கண்டிருக்கிறார்கள். ஏழு போராளிகள் (Seven Samurai) என்று அறியப்படலான மற்றொரு தொகுதியான வானியலாளர்கள், தெற்கு விண்மீன் குழுக்களாகிய ஹைட்ரா மற்றும் சென்ட்டாரஸின் அருகில், பெருங் கவர்ச்சிகன் (Great Attractor) என்று அவர்கள் அழைக்கிற வேறொரு அண்டக்கூளம் இருப்பதன் அத்தாட்சியைக் கண்டிருக்கிறார்கள். அதைவிடவும் பெரியதொன்று, மான்தலை விண்மீன் குழுவிற்கு (ஓரியன்) அப்பால் இருக்கவேண்டும் என்றும், அது “விண்வெளி ஆறு” போன்ற ஒன்றில் நமது பால்வழி மண்டலம் உட்பட நூற்றுக்கணக்கான பால்வழி மண்டலங்களை அந்தத் திசையில் தோணிகளைப் போல் செல்லவைத்துக் கொண்டிருக்கவேண்டும் என்றும் வானியலாளர்களாகிய மார்க் போஸ்ட்மான் மற்றும் டாட் லாயர் நம்புகின்றனர்.
இந்த அமைப்புகள் அனைத்தும் மலைக்க வைப்பவையாய் இருக்கின்றன. பேரதிர் வெடிப்பில் ஏற்பட்ட வெடிப்பு விட்டுச்சென்றதாக எண்ணப்பட்டிருக்கும் பின்புலக் கதிர்வீச்சின்படி, அந்த வெடிப்பு மிகவும் தங்குதடையின்றியும், சீராகவும் இருந்ததாக அண்டவியலாளர்கள் சொல்லுகின்றனர். அவ்வளவு தங்குதடையற்ற ஆரம்பம் எப்படி அப்பேர்ப்பட்ட பிரமாண்டமான சிக்கலான அமைப்புகளை உருவாக்கியிருக்க முடியும்? “எப்படி அவ்வளவு அமைப்பும் அந்த 1,500 கோடி வருட அண்ட வயதுக்குள்ளாக உருவாகியிருக்க முடியும் என்ற புதிரை, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அநேக சுவர்களும் கவர்ச்சிகன்களும் இன்னும் முனைப்பானதாக்குகின்றன,” என்று சயன்டிஃபிக் அமெரிக்கன் ஒத்துக்கொள்கிறது—அண்டத்தின் கணக்கிடப்பட்ட வயதை ஃப்ரீட்மனும் மற்றவர்களும் இன்னுமதிகமாக குறைத்துக் கொண்டுவருகையில் மேலுமாக மோசமாகிவருகிற ஒரு பிரச்சினையாகவே இது இருக்கிறது.
“ஏதோவொரு அடிப்படைக் கூறை நாம் தவறவிடுகிறோம்”
முடிச்சுகளும், பின்னலமைப்புகளும், குமிழ்களுமுள்ள ஆயிரக்கணக்கான உடுமண்டல திரட்சிக் குவியல்களைப் பற்றிய கெல்லரின் முப்பரிமாண வரைபடங்கள், அறிவியலாளர்கள் அண்டத்தைச் சித்தரிக்கும் விதத்தை மாற்றியமைத்திருக்கின்றன. அவர் எதைப் பார்க்கிறாரோ அதைப் புரிந்துகொள்வதாக நடிப்பதில்லை. ஈர்ப்பு விசையை மட்டும் வைத்து அவரது பால்வழி மண்டல பெருஞ்சுவரை விளக்க முடியாதென்று தோன்றுகிறது. “இந்த அமைப்பைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளில் ஏதொவொரு அடிப்படைக் கூறை நாம் தவறவிடுகிறோமென நான் அடிக்கடி எண்ணுகிறேன்,” என்று அவர் ஒத்துக்கொள்கிறார்.
கெல்லர் தன்னுடைய சந்தேகங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்: “பேரதிர் வெடிக் கொள்கையை வைத்து பெரிய அமைப்பின் உருவாக்கத்தை விளக்குவது எப்படி என்று நமக்கு தெளிவாகத் தெரியாது.” வானங்களைப் பற்றிய தற்போதைய வரைபடங்களின் அடிப்படையில் அண்ட அமைப்பை விளக்க முற்படுவது திட்டவட்டமான ஒன்றிலிருந்து மிகவும் அப்பாற்பட்டது—அ.ஐ.மா.-லுள்ள ரோட் தீவை அளந்துவிட்டு முழு உலகின் வரைபடத்தைத் தயாரிக்க முற்படுவது போன்றதை அது பெரிதும் ஒத்திருக்கும். கெல்லர் தொடர்ந்தார்: “நாம் எல்லா துண்டுகளையும் சரிவர பொருத்தி வைக்கவில்லை என்பதை என்றோ ஒருநாள் கண்டறிவோம்; அவ்வாறு செய்யும்போது, நாம் ஏன் அதைக் குறித்து இதைவிட சீக்கிரமாக நினைத்துப் பார்க்கவேயில்லை என்று நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அது அவ்வளவு தெளிவானதாகத் தோன்றும்.”
எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகப் பெரிய கேள்விக்கு அது வழிநடத்துகிறது: பேரதிர் வெடியைத்தானே எது உண்டுபண்ணியிருக்க வேண்டும்? பேரதிர் வெடிக் கொள்கையின் மிக பிரபலமான விரிவடைதல் விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தவர்களில் ஒருவரான ஆன்ட்ரியி லின்ட என்பவரே, ஒரே சீராக விரிவடைதல் கொள்கையானது இந்த அடிப்படை கேள்விக்குப் பதிலளிப்பதில்லை என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார். “பேரதிர் வெடிக் கொள்கை இருப்பதுதானே முதலாவதான, முக்கியமான பிரச்சினை,” என்று அவர் சொல்லுகிறார். “எது முதலாவதாக வந்தது? கால-வெளி அப்போது இருக்கவில்லை என்றால், ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து எப்படி எல்லாமே தோன்ற முடியும்? . . . என்று ஒருவர் யோசிக்கக்கூடும். தொடக்கத்தின் இந்தத் தனித்தன்மைக்கூறை—இது அனைத்தும் எங்கு மற்றும் எப்போது தொடங்கியது என்பதை—விளக்குவது, நவீன அண்டவியலில் கையாளப்பட முடியாத மிகப் பெரிய பிரச்சினையாகவே இன்னும் இருக்கிறது.”
“பேரதிர் வெடிக் கொள்கைதான் கடைமுடிவான கொள்கை என்பதாக நியாயத்தன்மையுள்ள அண்டவியலாளர் எவரும் வாதாட மாட்டார்,” என்பதாக டிஸ்கவர் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை சமீபத்தில் கூறி முடித்தது.
நாம் இப்போது சற்று வெளியே சென்று விண்மீன் அமைப்பின் அழகையும் அதன் புதிர்நிலையையும் பற்றி சிந்தனை செய்வோமாக.
[அடிக்குறிப்பு]
a கெல்வின் என்பது வெப்பநிலை அளவுகோலின் ஓர் அலகாக இருக்கிறது; கெல்வின் அளவுகோல் யதார்த்த பூஜியத்தில், அதாவது -273.16 டிகிரி செல்சியஸுக்கு சமமான 0 K-ல் தொடங்குகிறது என்பதைத் தவிர, இதிலுள்ள டிகிரி, செல்சியஸ் வெப்ப அளவுகோலின் டிகிரியை ஒத்ததாகவே இருக்கிறது. தண்ணீர் 273.16 K-ல் உறைகிறது, 373.16 K-ல் கொதிக்கிறது.
[பக்கம் 5-ன் பெட்டி]
ஒளியாண்டு—ஓர் அண்ட அளவுகோல்
அண்டத்தை மைல் அல்லது கிலோமீட்டரில் அளப்பது, லண்டனிலிருந்து டோக்கியோவை நுண்ணளவை மானி ஒன்றை வைத்து அளப்பதற்கு ஒத்திருக்கும் வகையில் அண்டம் அவ்வளவு பெரியதாக இருக்கிறது. அதைவிட மிகப் பொருத்தமான அளவீட்டு அலகு ஒளியாண்டாகும்; இது ஓர் ஆண்டில் ஒளி செல்லும் தொலைவு, அல்லது 94,60,00,00,00,000 கிலோமீட்டராகும். ஒளி, அண்டத்திலேயே அதிவிரைவில் செல்வதாகவும், சந்திரனுக்கு வெறும் 1.3 நொடிகளிலும் சூரியனுக்கு சுமார் 8 நிமிடங்களிலும் செல்வதாகவும் இருப்பதால், ஒரு ஒளியாண்டு உண்மையிலேயே பேரளவானதாகத் தோன்றும்!