வியப்பூட்டும் அண்டம்
‘ஏதோவொன்று விட்டுப்போயிருக்கிறது’—அது என்ன?
தெளிவான, இருண்ட இரவில் விண்மீன்களை உற்றுநோக்கிவிட்டு, நாம் குளிருடனும் கண்ணிமைத்துக்கொண்டும், பேரழகிலும் எண்ணற்ற கேள்விகளிலும் நம் மனங்கள் சுழன்றுகொண்டுமிருக்க உள்ளே வருகிறோம். இந்த அண்டம் ஏன் இங்கு இருக்கிறது? அது எங்கிருந்து வந்தது? அது எங்கு செல்கிறது? இவையே அநேகர் பதிலளிக்க முயலும் கேள்விகள்.
உலகெங்கும் அறிவியல் மாநாடுகளுக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் அவரைக் கொண்டு சென்ற ஐந்து வருட அண்டவியல் ஆராய்ச்சிக்குப் பின் டென்னிஸ் ஓவர்பை என்ற எழுத்தாளர், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளராகிய ஸ்டீவன் ஹாக்கிங் என்பவருடன் நிகழ்ந்த ஓர் உரையாடலை விவரிக்கிறார்: “முடிவில் நான் ஹாக்கிங்கிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்பியது, நான் எப்போதும் ஹாக்கிங்கிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்பிய ஒரு காரியம்: நாம் சாகும்போது எங்கே போகிறோம்.”
மேற்சொல்லப்பட்ட கூற்று, முரண் நகைத்திறத்துடன் சொல்லப்பட்டிருக்கிறபோதிலும், இந்த வார்த்தைகள் நம்முடைய சகாப்தத்தைக் குறித்து அதிகத்தை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கேள்விகள் அதிகப்படியாக விண்மீன்களையும் அவற்றைக் குறித்து ஆராயும் அண்டவியலாளர்களின் கொள்கைகளையும் முரண் கருத்துக்களையும் சார்ந்தவையாகவே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதவர்க்கத்தை ஓயாது வாட்டிக்கொண்டிருக்கும் இந்த அடிப்படை கேள்விகளின் பதில்களுக்காக இன்றும் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்: நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? கடவுள் ஒருவர் இருக்கிறாரா? நாம் இறக்கும்போது எங்கே செல்கிறோம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் எங்கே இருக்கின்றன? இவை விண்மீன்களில் கண்டுபிடிக்கப்பட வேண்டுமா?
வேறொரு அறிவியல் எழுத்தாளர், ஜான் பாஸ்லோ குறிப்பிட்டது என்னவென்றால், மக்கள் மதத்தை விட்டுவிட்டதால், அண்டவியலாளர்கள் போன்ற அறிவியலாளர்கள் “ஒரு உலகப்பிரகாரமான சகாப்தத்துக்கு முழுமையான குருவர்க்க அமைப்பாக இருக்கின்றனர். மத குருக்கள் அல்ல, ஆனால் அவர்களே இப்போது, ஆவிக்குரிய தீடீர் வெளிப்படுத்துதலின் போர்வையில் அல்ல, ஆனால் அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புதிராகவே இருக்கும் சமன்பாடுகளால் அண்டத்தின் எல்லா ரகசியங்களையும் படிப்படியாக வெளிப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள்.” ஆனால் அவர்கள் அண்டத்தைப் பற்றிய எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தி, காலங்காலமாக மனிதவர்க்கத்தை வாட்டிக்கொண்டிருந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பார்களா?
அண்டவியலாளர்கள் இப்போது எதை வெளிப்படுத்துகிறார்கள்? நம்முடைய காலத்தின் உலக மதமாகியிருக்கும் பேரதிர் வெடி “இறைமையியல் கொள்கையின்” விவரக்குறிப்புகளைக் குறித்து பெரும்பாலானவர்கள் தொடர்ந்து விவாதிக்கிறபோதிலும், அதன் ஏதோவொரு விளக்கத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். “இருந்தாலும், புதிய மற்றும் முரண்பாடான ஆய்வுகளின் சூழமைவில் வைத்துப்பார்க்கையில், பேரதிர் வெடிக் கொள்கையானது படைப்பு சம்பவத்தை விளக்குவதற்கு அதிகமதிகமாக மிகவும் எளிய விளக்கமாகத் தோன்றுகிறது. 1990-களின் ஆரம்பத்திற்குள் பேரதிர் வெடிக் கொள்கை. . . பெரும்பாலான அடிப்படை கேள்விகளுக்கு அதிகப்படியாகப் பதிலளிக்க முடியாததாகி வருகிறது,” என்று பாஸ்லோ குறிப்பிட்டார். “அது 1990-கள் வரையாகக்கூட தாக்குப்பிடிக்காது என்பதாக நிறைய கொள்கையாளர்கள் கூறியிருக்கிறார்கள்,” என்று அவர் மேலுமாகச் சொன்னார்.
ஒருவேளை அண்டம்சார்ந்த தற்போதைய ஊகிப்புகளில் சில சரியானவை ஆகலாம், ஒருவேளை ஆகாமலும் இருக்கலாம்—ஓரியன் நெபுலாவிலுள்ள ஒளிவண்ணப் பட்டையில் கோள்கள் ஒன்றிணைந்திருப்பதாகவும் ஒருவேளை இருக்கலாம், அவ்வாறு ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம் என்பதுபோலவே. மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், இந்தப் பூமியிலிருக்கும் எவருக்கும் அதைப் பற்றிய நிச்சயம் இல்லை. கொள்கைகள் மிகுந்து காணப்படுகின்றன, ஆனால் சுமூகமான பேச்சுகள் இருந்தாலும், அண்டத்தைப் பற்றிய தற்போதைய புரிந்துகொள்ளுதலில் அடிப்படையான ஏதோவொன்று விட்டுப்போயிருப்பதாகத் தோன்றுகிறது என்ற மார்க்ரட் கெல்லரின் அறிவுக்கூர்மையுள்ள கருத்துக்கணிப்பை அநேக நேர்மையுள்ள கருத்துக்கணிப்பாளர்கள் எதிரொலிக்கிறார்கள்.
விட்டுப்போயிருக்கிறது—விருப்பமில்லாத உண்மைகளை எதிர்ப்பட மனமுள்ளவர்களாய் இருத்தல்
பெரும்பாலான அறிவியலாளர்கள்—இது பெரும்பாலான அண்டவியலாளர்களையும் உட்படுத்துகிறது—பரிணாமக் கொள்கைக்குச் சாதகமாகவே இருக்கிறார்கள். படைப்பில் புத்திக்கூர்மைக்கும் நோக்கத்திற்கும் பங்கிருக்கிறது என்ற பேச்சிலேயே விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்; கடவுளைப் படைப்பாளர் என்று குறிப்பிடுகையிலேயே அவர்கள் வெறுப்புடன்கூடிய நடுக்கத்திற்குள்ளாகிறார்கள். அப்படிப்பட்ட முரண் கருத்தை என்னவென்று பார்க்கக்கூட மறுக்கிறார்கள். கர்வமுள்ள ஒருவனைக் குறித்து சங்கீதம் 10:4, அவன் “தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே,” என்று பழித்துரைக்கிறது. அவனுடைய படைப்புத் தெய்வம் தற்செயல் நிகழ்வு. ஆனால் அறிவு அதிகரிக்கையில், தற்செயல் நிகழ்வும் நிகழ்வுப்பொருத்தமும் அதிகரித்துவரும் அத்தாட்சிகளுக்கு முன்னால் வீழ்ந்துவிடும்போது, புத்திக்கூர்மை மற்றும் திட்டம் போன்ற தடையாயிருந்த காரியங்களில் அறிவியலாளன் அதிகமதிகமாகக் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான். பின்வரும் உதாரணங்களை எண்ணிப்பாருங்கள்:
“அண்டவியல் பற்றிய ஆராய்ச்சிகளில் ஏதோவொரு அம்சம் விட்டுப்போயிருப்பது தெளிவாக இருக்கிறது. அண்டத்தின் தோற்றுவாய், ரூபிக் க்யூப்பின் தீர்வைப் போலவே புத்திக்கூர்மையைத் தேவைப்படுத்துகிறது,” என்று வான்-இயற்பியலாளராகிய ஃப்ரெட் ஹாயில், தனது புத்தகமாகிய புத்திக்கூர்மையுள்ள பிரபஞ்சம், பக்கம் 189-ல் எழுதினார்.
“அண்டத்தை நான் எவ்வளவு அதிகமாக ஆராய்ந்து, அதன் கலை நயத்தின் விவரக்குறிப்புகளை ஆராய்கிறேனோ, அந்த அளவுக்கு, நாம் இங்கு வருவோம் என்று ஏதோவொரு வழியில் இந்த அண்டம் அறிந்திருக்கவேண்டும் என்பதற்கான அத்தாட்சியை நான் காண்கிறேன்.”—ஃப்ரீமான் டைஸனின் அண்டத்தை தொந்தரவுசெய்தல் (ஆங்கிலம்), பக்கம் 250.
“நம்மைப் போன்ற சிருஷ்டிகள் உருவாவதற்கு அண்டத்தின் எந்த அம்சங்கள் தேவைப்பட்டன, மேலும் எதிர்பாராத நிகழ்வுப்பொருத்தத்தின் காரணத்தாலா, அல்லது ஏதாவது உணரமுடியாத ஆழ்ந்த காரணத்திற்காகவா நமது அண்டம் இந்த அம்சங்களைக் கொண்டிருக்கின்றன? . . . அண்டம் மனிதவர்க்கத்திற்காகவே உண்டாக்கப்பட்டது என்பதை நிச்சயப்படுத்துவதற்கு வேறு ஏதாவது ஆழமான திட்டம் இருக்கிறதா?”—ஜான் க்ரிப்பன் மற்றும் மார்ட்டின் ரீஸின் அண்ட நிகழ்வுப்பொருத்தங்கள் (ஆங்கிலம்), பக்கங்கள் xiv, 4.
இந்தப் பண்புகளைக் குறித்து ஃப்ரெட் ஹாயிலும் மேற்குறிப்பிடப்பட்ட தனது புத்தகத்தில், பக்கம் 220-ல் குறிப்பிடுகிறார்: “அப்படிப்பட்ட பண்பியல்புகள் இந்த இயல்பான உலகென்னும் துணியினூடே, மகிழ்ச்சியான விபத்துக்களாலான நூலிழைபோல் பின்னி இணைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் உயிருக்குத் தேவையான இந்த வினோதமான நிகழ்வுப்பொருத்தங்கள் அத்தனை அநேகமாய் இருப்பதால், அவை இருப்பதற்கான காரணத்தைக் கூற கொஞ்சம் விளக்கம் தேவைப்படுவதாகத் தோன்றுகிறது.”
“மனிதன் அண்டத்திற்கேற்ப தகவமைக்கப்பட்டவன் என்பதாக மட்டும் இல்லை. அண்டம் மனிதனுக்கேற்ப தகவமைக்கப்பட்டதாய் இருக்கிறது. இயற்பியலின் அடிப்படை பரிமாண மாறிலிகளில் ஏதோவொன்று, ஏதோவொரு விதத்தில் ஒருசில சதவீதத்தால் மாற்றப்பட்டிருக்கிற ஒரு அண்டத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு அண்டத்தில் மனிதன் ஒருபோதும் வாழவே முடியாது. மனித இயல்புக்குரிய கோட்பாட்டின் மையக் குறிப்பு அதுவே. இந்தக் கோட்பாட்டின்படி, உலகின் முழு இயக்கம் மற்றும் திட்டமைப்பின் மையத்தில் உயிரளிக்கக்கூடிய ஓர் அம்சம் இருக்கிறது.”—ஜான் பாரோ மற்றும் ஃப்ராங் டிப்லரின் மனித இயல்புக்குரிய அண்டம்சார்ந்த கோட்பாடு, பக்கம் vii.
கடவுள், திட்டமைப்பு, மற்றும் இயற்பியல் மாறிலிகள்
அண்டத்தில் உயிர் வாழ்வு தொடர்ந்திருப்பதற்குத் தேவையான இந்த அடிப்படை இயற்பியல் மாறிலிகளில் சில யாவை? ஜனவரி 8, 1995-ன் தி ஆரஞ்ச் கௌன்டி ரெஜிஸ்டர் அறிக்கை, இந்த மாறிலிகளில் ஒருசிலவற்றைப் பட்டியலிட்டது. இந்த அம்சங்கள் எவ்வளவு நேர்த்தியாக ஒத்திசைவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அது இவ்வாறு குறிப்பிட்டு அழுத்திக் காண்பித்தது: “அண்டத்தை வரையறுக்கக்கூடிய பல அடிப்படை இயற்பியல் மாறிலிகளின் அளவுசார்ந்த மதிப்புகள்—உதாரணமாக, ஒரு எலெக்ட்ரானின் மின்னூட்டம், அல்லது ஒளியின் நிலையான வேகம், அல்லது இயற்கையிலுள்ள அடிப்படை விசைகளுடைய பலங்களின் விகிதம்—திகைப்பூட்டும் அளவிற்கு துல்லியமாக, அவற்றில் சில 120 தசம ஸ்தானங்கள் வரையாக துல்லியமாக இருக்கின்றன. உயிரின பெருக்கம் தொடர்கிற ஒரு அண்டத்தின் வளர்ச்சி, இந்தக் குறிப்புகளுக்கு மிகுதியான உணர்வுள்ளவையாக இருக்கின்றன. இங்கொரு நானோ நொடி அங்கொரு ஆங்ஸ்ட்ராம் என்பதுபோன்ற மிக சிறிய மாறுதல் இருந்திருந்தால்கூட, அண்டம் உயிரிழந்து தரிசாகி இருந்திருக்கக்கூடும்.”
வழக்கமாகக் குறிப்பிடப்பட முடியாததை இந்த அறிக்கையின் எழுத்தாளர் பின்னர் குறிப்பிட்டார்: “அந்தச் செய்முறையினுள், நம்முடைய வருகைக்குத் தயாராக அண்டத்தை நுட்பமாக ஒத்திசைய வைத்த புத்திக்கூர்மையும் நோக்கமுமுள்ள ஒரு சக்தியின் நடவடிக்கையில் ஒருவேளை ஏதோ புதிரான உள்நோக்கு உள்ளுறைந்திருக்கிறது என்று ஊகிப்பது அதிக நியாயமானதாகத் தோன்றுகிறது.”
வானவியல் மற்றும் அண்டவியல் பேராசிரியராகிய ஜார்ஜ் க்ரின்ஸ்டைன் இணைவாழ்வுத் திறமுள்ள அண்டம் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் இந்த இயற்பியல் மாறிலிகளின் இன்னும் நீண்ட பட்டியல் ஒன்றை அளித்தார். துல்லியமாக ஒத்திசைவிக்கப்பட்ட மாறிலிகள் அந்தப் பட்டியலில் இருந்தன. எவ்வளவு துல்லியமானவை என்றால், அவை மிகச் சிறிய அளவுக்கு விலகியிருந்தாலும், எந்த அணுவும், எந்த விண்மீனும், எந்த அண்டமும் உருவாகும் சாத்தியம் ஒருபோதும் இருந்திருக்காது. இந்தத் தொடர்புகளின் விவரங்கள் இதோடு இணைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இயற்பொருள் சார்ந்த உயிர் வாழ்வைச் சாத்தியமாக்க அவை நிலைத்திருக்க வேண்டும். அவை சிக்கலானவையாகவும், வாசகர்கள் அனைவராலும் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் இருக்கக்கூடும்; ஆனால், அவை மற்றும் பலருடன்கூட, இந்தத் துறைகளில் பயிற்றுவிக்கப்பட்ட வான்-இயற்பியலாளர்களாலும் ஏற்கப்பட்டவை.
இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்றபோது க்ரின்ஸ்டின் வியப்பில் ஆழ்த்தப்பட்டார். அவர் சொன்னார்: “இத்தனை எதிர்பாரா நிகழ்வுப்பொருத்தங்கள்! நான் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக, அப்படிப்பட்ட ‘எதிர்பாரா நிகழ்வுப்பொருத்தங்கள்’ அரிதாகவே தற்செயலாக நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பவைக்கப்பட்டேன். ஆனால் இந்த நம்பிக்கை வளரவளர, வேறு ஏதோவொன்றும் அதோடு வளர்ந்தது. இந்த ‘ஏதோவொன்றை’ வார்த்தைகளால் வெளிப்படுத்துவது இப்போதும்கூட கடினமாகவே இருக்கிறது. அது தீவிரமான ஒரு பின்வாங்கும் உணர்ச்சியாக இருந்தது; சில வேளைகளில் அது ஏறக்குறைய சரீரப்பிரகாரமான இயல்புடையதாக இருந்தது. அசௌகரியத்தின் காரணமாக நான் கட்டாயமாக நெளிந்துகொண்டிருப்பேன். . . . உன்னதமான ஒருவர் இருக்கிறார் என்பதற்கான அறிவியல்பூர்வ நிரூபணத்தை, நாம் உத்தேசிக்காமலேயே திடீரென்று தற்செயலாகக் கண்டுபிடித்திருக்கக் கூடுமா? கடவுள்தாமே இடைப்பட்டு, அண்டத்தை நம்முடைய நன்மைக்காக அவ்வளவு நன்றாகத் திட்டமைத்தாரா?”
அந்த எண்ணத்தால் சோர்வும் அதிர்ச்சியும் அடைந்தவராய் க்ரின்ஸ்டின் சீக்கிரமாக தான் சொன்னதிலிருந்து பின்வாங்கி, மீண்டும் தன் அறிவியல்பூர்வ மத பாரம்பரியத்தை நிலைநாட்டி, இவ்வாறு அறிவித்தார்: “அதற்கு கடவுள் ஒரு விளக்கமல்ல.” இது ஒரு நியாயமான காரணமல்ல—அந்த எண்ணம் அவரை சுகவீனப்படுத்தும் அளவிற்கு அவ்வளவு விரும்பத்தகாததாக இருந்தது!
இயல்பான மனித தேவை
அண்டவியலாளர்கள் உட்பட நேர்மையுள்ள அறிவியலாளர்களின் கடின உழைப்பைப் பழித்துரைப்பதற்காக இதில் எதுவும் சொல்லப்படவில்லை. உண்மை கடவுளாகிய யெகோவாவின் வல்லமை, ஞானம், அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் படைப்பைப் பற்றிய அவர்களது கண்டுபிடிப்புகள் பலவற்றை விசேஷமாக யெகோவாவின் சாட்சிகள் போற்றுகிறார்கள். ரோமர் 1:20 அறிவிக்கிறது: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.”
அறிவியலாளர்களின் ஆராய்வுகளும் உழைப்புகளும், மனிதவர்க்கத்தின் அடிப்படை தேவைகளாகிய உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் போன்ற ஒரு தேவைக்கு இயல்பான மனித பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. எதிர்காலத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் பற்றிய ஒருசில கேள்விகளுக்கு பதிலை அறிந்துகொள்வதற்கான தேவையே அது. கடவுள் “நித்திய கால நினைவை மனிதரின் இருதயங்களில் வைத்தார்; இருந்தாலும் கடவுள் ஆதியிலிருந்து அந்தம்வரை செய்திருக்கிறவற்றை அவர்கள் அறிந்துகொள்ள முடியாது.”—பிரசங்கி 3:11, தி ஹோலி பைபிள்—நியூ இன்டர்நேஷணல் வெர்ஷன்.
இது அவ்வளவு மோசமான செய்தி அல்ல. மனிதவர்க்கத்தினர் ஒருபோதும் அனைத்தையும் அறிந்துகொள்ள மாட்டார்கள், ஆனால் கற்றுக்கொள்வதற்கு புதிய காரியங்கள் இல்லாமல் விடப்படவும் மாட்டார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது: “தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.”—பிரசங்கி 8:17.
பிரச்சினைக்குக் கடவுளைத் “தீர்வாக்குவது,” மேலுமான ஆராய்ச்சி செய்வதற்கான தூண்டுதலைக் குன்றச்செய்கிறது என்று சில அறிவியலாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். என்றபோதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் படைப்பாளராக கடவுளை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு, கண்டுபிடிப்பதற்கு மேலுமாக கவர்ச்சியூட்டும் ஏராளமான விவரங்களும் துருவி ஆராய்வதற்கான ஆவலைத்தூண்டும் புதிர்களும் இருக்கின்றன. கண்டுபிடிப்பு மற்றும் படிப்பிற்கான இன்பகரமான துணிச்சலுள்ள செயலை மேற்கொள்ள பச்சை விளக்கு அவருக்குக் காட்டப்பட்டிருப்பதைப் போல் அது இருக்கும்!
ஏசாயா 40:26-ன் அழைப்பை யார்தான் மறுக்க முடியும்? “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்.” இந்த ஒருசில பக்கங்களில் நாம் நம்முடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்திருக்கிறோம்; நாம் என்ன பார்த்திருக்கிறோமோ அதுதான் அண்டவியலாளர்களின் கவனத்திற்குத் தப்பிய அந்த ‘விட்டுப்போயிருந்த ஏதோவொன்று’. காலங்காலமாக மனிதனின் மனதை நெருடியிருக்கிற திரும்பத்திரும்ப எழும்பும் அந்தக் கேள்விகளின் அடிப்படை பதில்களையும் கண்டுபிடித்துவிட்டோம்.
ஒரு புத்தகத்தில் அந்த பதில்கள் காணப்படுகின்றன
அந்தப் பதில்கள் எப்போதுமே அங்கு இருந்திருக்கின்றன; ஆனால் இயேசுவின் நாளிலிருந்த மத நம்பிக்கை உள்ளவர்களைப் போலவே, அநேகர் தங்களுடைய மனித கொள்கைகளுக்கு அல்லது தங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட வாழ்க்கை பாணிக்கு ஒத்துவராத பதில்களுக்கு தங்கள் கண்களைக் குருடாக்கி, தங்கள் காதுகளை அடைத்து, தங்கள் இருதயங்களைக் கடினமாக்கினர். (மத்தேயு 13:14, 15) அண்டம் எங்கிருந்து வந்தது, பூமி எப்படி இங்கு வந்தது, மேலும் அதில் யார் வாழ்வார்கள் என்று யெகோவா நமக்குச் சொல்லியிருக்கிறார். பூமியின் மனித குடியிருப்பாளர்கள் அதைப் பண்படுத்தி, அவர்களோடு அதைப் பகிர்ந்துகொள்ளும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அன்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நமக்குச் சொல்லியிருக்கிறார். மக்கள் சாகும்போது என்ன நடக்கிறது என்றும், அவர்கள் மீண்டும் உயிர்பெற முடியும் என்றும், பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் நமக்குச் சொல்லியிருக்கிறார்.
கடவுளுடைய ஏவப்பட்ட எழுத்தாகிய பைபிளின் மொழிநடையில் அந்தப் பதில்களைப் பெற நீங்கள் ஆவலுள்ளவர்களாய் இருந்தால், பின்வரும் வேதவசனங்களை தயவுசெய்து வாசியுங்கள்: ஆதியாகமம் 1:1, 26-28; 2:15; நீதிமொழிகள் 12:10; மத்தேயு 10:29; ஏசாயா 11:6-9; 45:18; ஆதியாகமம் 3:19; சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5; அப்போஸ்தலர் 24:15; யோவான் 5:28, 29; 17:3; சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:3-5.
ஏதாவதொரு மாலை வேளையில் உங்கள் குடும்பத்தாருடன் அல்லது அயலார் ஒருவருடன் அல்லது ஒரு நண்பர் தொகுதியுடன் இந்த வசனங்களை நீங்கள் ஏன் வாசிக்கக்கூடாது? தகவல்நிறைந்த, உயிரூட்டமுள்ள ஒரு கலந்தாலோசிப்புக்கு அது இடமளிக்கும் என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்!
அண்டத்தின் புதிர்களால் உங்கள் ஆவல் கிளரப்பட்டதாகவும் அதன் அழகால் நெகிழப்பட்டவர்களாகவும் நீங்கள் உணருகிறீர்களா? அதைப் படைத்தவரை மேம்பட்ட விதத்தில் அறிந்துகொள்ள ஏன் முயலக்கூடாது? உயிரற்ற வானங்களுக்கு நமது அறியும் ஆர்வமும் வியப்பும் எதையும் அர்த்தப்படுத்துவதில்லை; ஆனால் அவற்றின் படைப்பாளராகிய யெகோவா தேவனே நமது படைப்பாளர்; மேலும் அவரையும் அவருடைய படைப்புகளையும் பற்றி அறிய ஆர்வமுள்ள சாந்தகுணமுள்ளவர்கள்மேல் அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். பூமி முழுவதிலும் இப்போது அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது: “வா . . . கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 22:17.
யெகோவாவிடமிருந்து வரும் எப்பேர்ப்பட்ட உளங்கனிந்த அழைப்பாக இது இருக்கிறது! யோசனையற்ற, நோக்கமற்ற வெடிப்பால் ஏற்பட்டதற்கு மாறாக, ஆதிமுதற்கொண்டே உங்களை மனதில் கொண்டிருந்த வரம்பற்ற புத்திக்கூர்மையும் திட்டவட்டமான நோக்கமுமுள்ள ஒரு கடவுளால் இந்த அண்டம் படைக்கப்பட்டது. அவரது வரையறையற்ற சக்தி இருப்புகள் கவனமாக கட்டுக்குள் வைக்கப்பட்டு அவருடைய ஊழியர்களைக் காப்பதற்காக எப்போதும் கிடைப்பதாய் இருக்கின்றன. (ஏசாயா 40:28-31) அவரை அறிந்துகொண்டதற்கான உங்கள் வெகுமதி முடிவுறாததாய் தொடர்ந்திருக்கும், இந்த மகத்தான அண்டத்தைப் போலவே!
“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” —சங்கீதம் 19:1.
[பக்கம் 13-ன் பெட்டி]
உயிர் வாழ்வுக்குத் தேவையான இயற்பியல் மாறிலிகள் சிலவற்றின் பட்டியல்
எலெக்ட்ரான் மற்றும் புரோட்டானின் மின்னூட்டங்கள் சமமானவையாகவும் எதிரானவையாகவும் இருக்க வேண்டும்; நியூட்ரானின் நிறை புரோட்டானுடையதைவிட ஒரு சிறிய விகிதத்தில் அதிகமாக இருக்க வேண்டும்; ஒளிச்சேர்க்கை ஏற்படுமுன் சூரியனின் வெப்பத்திற்கும் பச்சையத்தின் உறிஞ்சும் தன்மைகளுக்கும் இடையில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும்; பலமான விசை கொஞ்சம் பலம் குறைந்ததாக இருந்தால், அணுக்கரு இயக்கங்கள் மூலமாக சூரியன் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியாது, ஆனால் அது கொஞ்சம் அதிக பலமுள்ளதாக இருந்தால், ஆற்றலை உற்பத்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கடுமையானவிதத்தில் நிலையற்றதாக இருக்கும்; செந்நிற ராட்சத விண்மீன்களின் உட்கருக்களின் அணுக்கருக்களுக்கிடையில் தனித்தனியான இரண்டு குறிப்பிடத்தக்க ஒத்ததிர்வுகள் இல்லையென்றால், ஹீலியத்திற்கு அப்பாற்பட்ட எந்தத் தனிமமும் உருவாகியிருக்க முடியாது; வெளியானது மூன்று பரிமாணங்களில்லாமல் குறைவாக இருந்தால், இரத்த ஓட்டத்திற்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள உட்தொடர்புகள் சாத்தியமற்றவையாக இருக்கும்; வெளியானது மூன்று பரிமாணங்களைவிட கூடுதலாக இருந்தால், கோள்கள் சூரியனை நிலையாகச் சுற்றிவர முடியாது.—இணைவாழ்வுத் திறமுள்ள அண்டம், பக்கங்கள் 256-7.
[பக்கம் 14-ன் பெட்டி]
கண்டுணரப்படாத பருப்பொருளை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
சுருளிப் பால்வழி மண்டலங்கள் அனைத்தையும் போலவே ஆந்திரமேடா பால்வழி மண்டலம், அது ஒரு மிகப் பெரிய சூறாவளியாக இருப்பதுபோல அண்டவெளியில் மகத்தாக சுழல்கிறது. ஒளி வண்ணப் பட்டையிலிருந்து பல பால்வழி மண்டலங்களின் சுழல் விகிதத்தை வானவியலாளர்களால் கணக்கிட முடியும்; அவர்கள் அவ்வாறு கணக்கிடுகையில், திகைப்பூட்டக்கூடிய ஏதோவொன்றை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். சுழல் விகிதங்கள் அவ்வாறிருக்க சாத்தியமற்றவையாகத் தோன்றுகின்றன! சுருளிப் பால்வழி மண்டலங்கள் அனைத்தும் மிக வேகமாகச் சுழல்வதாகத் தோன்றுகின்றன. தொலைநோக்கியால் காணப்பட முடியாததாக இருக்கும் இருண்ட பருப்பொருளின் மிகப் பெரிய ஒளிவட்டத்தில் அந்த பால்வழி மண்டலத்தின் காணக்கூடிய விண்மீன்கள் பதித்து வைக்கப்பட்டிருப்பதைப் போல் அவை நடந்துகொள்கின்றன. “அந்த இருண்ட பருப்பொருள் எந்த உருவில் இருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியாது,” என்று வானவியலாளர் ஜேம்ஸ் கேலர் ஒத்துக்கொள்கிறார். கண்டுணரப்படாத பருப்பொருளில் 90 சதவீதத்தைப் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை என்று அண்டவியலாளர்கள் கணிக்கிறார்கள். மிகப் பெரிய நியூட்ரினோக்களின் உருவில் அல்லது ஏதோ அறியாத ஆனால் மிகவும் பேரளவான உருவிலுள்ள பருப்பொருளாக அதைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் வெறியாய் இருக்கிறார்கள்.
கண்டுணரப்படாத பருப்பொருளை நீங்கள் கண்டுபிடித்தால், உடனடியாக உள்ளூர் அண்டவியலாளருக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்!