வியப்பூட்டும் அண்டம்
அவ்வளவு புதிரானது, ஆயினும் அவ்வளவு அழகானது
வருடத்தின் இந்தச் சமயத்தில், இரவு நேர வானம், ஒப்பனைசெய்த அழகு மிளிர அழைக்கிறது. ஜனவரியின் மாலைவேளைகளில், அலாஸ்காவிலுள்ள ஆங்கரேஜிலிருந்து தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டௌன் வரையாக வானத்தின் மேலே உயரத்தில் மகத்தான ஓரியன் தாவி நிற்கிறது. ஓரியனைப் போன்ற நன்கு அறியப்பட்ட விண்மீன் குழுக்களில் காணப்படக்கூடிய வான்சார்ந்த பொக்கிஷங்களை சமீபத்தில் உற்று நோக்கி இருக்கிறீர்களா? அண்மையில் சரிசெய்யப்பட்ட ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை வைத்து வானவியலாளர்கள் சமீபத்தில் உற்று நோக்கினார்கள்.
ஓரியனின் மண்டலத்திலுள்ள மூன்று விண்மீன்களிலிருந்து அதன் வாள் ஊசலாடுகிறது. அந்த வாளின் மத்தியிலிருக்கும் மங்கலான விண்மீன் உண்மையில் ஒரு விண்மீனே அல்ல, ஆனால் பிரபல ஓரியன் நெபுலாவாகும்; ஒரு சிறிய தொலைநோக்கியின் வழியாக நோக்கும்போதுகூட கண்கவர் அழகுடைய பொருளாக அது இருக்கிறது. என்றாலும், வானுலகைச் சார்ந்த அதன் ஜொலிப்பு தானே வானவியல் நிபுணர்களின் கவர்ச்சிக்கான காரணம் அல்ல.
“ஓரியன் நெபுலாவையும் அதன் அநேக இளம் விண்மீன்களையும் வானவியலாளர்கள் ஆராய்வது ஏனென்றால், நமது பால்வழி மண்டல பகுதியில் அதுவே மிகப் பெரியதும் விண்மீன் பிறப்பில் மிகவும் செயற்பாடுள்ள தொகுதியுமாக இருக்கிறது,” என்று ஷான் பையர் காயோ வானவியல் (ஆங்கிலம்) பத்திரிகையில் அறிக்கை செய்கிறார். அந்த நெபுலா (ஒண்முகிற்படலம்) அண்டத்தின் மகப்பேறு பிரிவைப் போல் தோன்றுகிறது! ஓரியன் நெபுலாவை ஹபிள் தொலைநோக்கி, முன்னொருபோதும் காணப்பட்டிராத விவரங்களுடன் சேர்த்து படம்பிடித்தபோது, விண்மீன்களையும் மின்னும் வளிமங்களையும் மட்டுமல்ல, ஆனால் “மங்கலான நீள்வட்டங்கள்” என்று காயோ விவரிப்பவற்றையும் வானவியலாளர்கள் கண்டார்கள். “செம்மஞ்சள் நிற ஒளி திட்டுகளாக அவை இருந்தன. ஒருவரது மதிய உணவின் துணுக்குகள் தற்செயலாக அந்த நிழற்படத்தில் விழுந்திருப்பதைப்போல் அவை காட்சியளித்தன,” என்றும் விவரித்தார். என்றாலும், இருட்டறையின் குறைபாடுகள் என்பதாக நினைப்பதற்கு மாறாக, இந்த மங்கலான நீள் வட்டங்கள் “1,500 ஒளியாண்டுத் தொலைவிலிருந்து நோக்குகையில், சூரிய குடும்பங்களின் உருவாக்கத்தில் முதன்மைப்படியில் இருக்கும் முகிழ் கோள்சார்ந்த தட்டுகள் (protoplanetary disks)” ஆகும் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். எல்லா விண்மீன்களும்—உண்மையில், சூரிய குடும்பங்கள் அனைத்தும்—இந்தத் தருணத்தில்தான் ஓரியன் நெபுலாவில் பிறக்கின்றனவா? ஆம் என்பதாக அநேக வானவியலாளர்கள் நம்புகின்றனர்.
மகப்பேறு பிரிவிலிருந்து உடுக்கண இடுகாடு வரையாக
கையில் வில்லுடன் ஓரியன் முன்னோக்கிச் செல்லுகையில், எருதாகிய டாரஸ் (ரிஷபம்) விண்மீன்குழுவை எதிர்ப்படுவதாகத் தோன்றுகிறது. அந்த எருதின் தென்பக்க கொம்பின் நுனியருகே மங்கலான ஒளி கற்றை ஒன்று தென்படுவதை ஒரு சிறிய தொலைநோக்கியிலும் காணலாம். அதுதான் நண்டு நெபுலா எனப்படுகிறது; ஒரு பெரிய தொலைநோக்கியிலோ, அது பக்கம் 9-ல் காண்பிக்கப்பட்டிருக்கிறதுபோல, தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு வெடிப்பாக காட்சியளிக்கும். ஓரியன் நெபுலாவானது விண்மீன் சிசுக்களுக்குரிய ஓர் இடம் என்றால், அதற்கருகிலுள்ள நண்டு நெபுலா, கற்பனை செய்யமுடியாதளவு சீற்றத்தால் மரணத்தை அனுபவித்த ஒரு விண்மீனின் இடுகாடு எனப்படக்கூடும்.
வான்சார்ந்த அந்தப் பேரழிவே சீன வானவியலாளர்களால் பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கக்கூடும்; ஜூலை 4, 1054 அன்று திடீரென்று டாரஸில் தோன்றி, அவ்வளவு பிரகாசமாக ஜொலித்ததால் 23 நாட்களுக்கு பகல்நேரத்தில் காணப்பட்ட ஒரு “விருந்தாளி விண்மீன்” பற்றி அவர்கள் விவரித்தனர். “சுமார் 40 கோடி சூரியன்களின் ஒளிக்கு ஒத்த அளவில் அந்த விண்மீன் ஒருசில வாரங்களுக்கு சுடரொளி வீசியது,” என்று வானவியலாளர் ராபர்ட் பெர்னெம் குறிப்பிடுகிறார். அப்பேர்ப்பட்ட குறிப்பிடத்தக்க விண்மீன் தற்கொலையை வானவியலாளர்கள் ஒரு சிதைவுறு ஒளிர் விண்மீன் என்கிறார்கள். இப்போதும்கூட, அவ்வாறு கவனிக்கப்பட்டதற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்குப் பின், அந்த வெடிப்பின் சிதறிய துண்டுகள், ஒரு நாளைக்கு எட்டு கோடி கிலோமீட்டர் என்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள வேகத்தில் அண்டவெளியினூடே சுழன்றுகொண்டிருக்கின்றன.
இந்தப் பகுதியிலும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி ஆய்வு நடத்தி வந்திருக்கிறது; அந்த ஒண்முகிற்படலத்தினுள் உற்றுநோக்கி, வானவியல் பத்திரிகை சொல்லுகிறபடி, “வானவியலாளர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திராத விவரங்களை நண்டு நெபுலாவில்” கண்டுபிடித்துள்ளது. அந்தக் கண்டுபிடிப்புகள் “கோட்பாட்டளவான வானவியலாளர்கள் வருங்கால வருடங்களில் தங்கள் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கச் செய்யும்,” என்று வானவியலாளர் பால் ஸ்கோவன் சொல்லுகிறார்.
நண்டு நெபுலா போன்ற சிதைவுறு ஒளிர் விண்மீன்களின் எஞ்சிய பகுதிகளைப் புரிந்துகொள்வது முக்கியம் ஏனென்றால், தற்போது தீவிர ஆராய்ச்சிக்குரிய ஒரு துறையாக இருக்கிற மற்ற பால்வழி மண்டலங்களின் தொலைவை அளத்தலில் அவை பயன்படுத்தப்படலாம் என்று ஹார்வார்டைச் சேர்ந்த ராபர்ட் கெர்ஷ்னர் போன்ற வானவியலாளர்கள் நம்புகின்றனர். நாம் பார்த்திருக்கிறபடி, மற்ற பால்வழி மண்டலங்களின் தொலைவுகளைப் பற்றிய வேறுபட்ட கருத்துக்கள், அண்டத்தின் படைப்பைப் பற்றிய பேரதிர் வெடிக் கொள்கையைக் குறித்து சமீபத்தில் உயிரூட்டமுள்ள சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
டாரஸுக்கு அப்பால், ஆனாலும் வட பாதிக்கோளத்தில் காணப்படுவதாய், ஜனவரியின்போது மேற்கு வானத்தில் ஆந்திரமேடா (Andromeda) விண்மீன் குழுவில் ஒரு மென்னொளி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. அந்த ஒளிர்வுதான் ஆந்திரமேடா பால்வழி மண்டலம்; சாதாரண கண்களுக்குப் புலப்படக்கூடிய மிகத் தொலைவிலிருக்கும் பொருள் அதுவே. ஓரியன் மற்றும் டாரஸின் அதிசயங்கள் அண்டத்தில் ஓரளவுக்கு நமக்கு அருகில்—பூமியிலிருந்து ஒருசில ஆயிர ஒளியாண்டுகளுக்குள்—இருக்கின்றன. என்றபோதிலும், 20 லட்ச ஒளியாண்டுகளென கணக்கிடப்பட்டுள்ள தொலைவின் குறுக்கே, தற்போது நாம், நமது பால்வழி மண்டலமாகிய, பால்வழி (Milky Way) போன்ற, ஆனால் அதைவிட பெரியதான—ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு சுமார் 1,80,000 ஒளியாண்டுகள் அளவுள்ள—பெரியதோர் விண்மீன் சுருளை உற்று நோக்குகிறோம். ஆந்திரமேடாவின் மென்னொளியை நீங்கள் பார்க்கையில், 20 லட்ச வருடங்களுக்கும் அதிக வயதுள்ள அவ்வொளியில் உங்கள் கண்கள் திளைத்து நிற்கின்றன!
சமீப வருடங்களில், மார்க்ரட் கெல்லரும் மற்றவர்களும் நம்மைச் சுற்றியுள்ள எல்லா பால்வழி மண்டலங்களையும் முப்பரிமாண வரைபடங்களாக்கும் பேரார்வமிக்க திட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்; அதன் பலன்கள் பேரதிர் வெடிக் கொள்கையைக் குறித்து பலமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. ஒவ்வொரு திசையிலும் பால்வழி மண்டலங்கள் நேர்த்தியாகப் பரவியிருப்பதைக் காண்பதற்குப் பதிலாக கோடிக்கணக்கான ஒளியாண்டுகளுக்குப் பரவியிருக்கும் ஓர் அமைப்பில் “சிக்கலான திட்டமைப்புள்ள பால்வழி மண்டலங்களை” அந்த அண்ட வரைபட தயாரிப்பாளர்கள் கண்டனர். அறிவியல் (ஆங்கிலம்) என்ற மதிக்கப்பட்ட பத்திரிகையின் சமீப அறிக்கை ஒன்றின்படி, “புதிதாகப் பிறந்த அண்டத்திலிருந்த ஏறக்குறைய ஒரே சீரான பருப்பொருளால் அந்தச் சிக்கல்வாய்ந்த அமைப்பு எப்படி இழைந்திருந்தது என்பது அண்டவியலின் மிக இன்றியமையாத கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது.”
ஜனவரியில் நமது இரவுநேர வானத்தைப் பார்த்து இன்று மாலையை ஆரம்பித்தோம்; உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அழகை மட்டுமல்லாமல், அண்டத்தின் இயல்பு மற்றும் அதன் ஆரம்பம் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் புதிர்களையும் சீக்கிரத்தில் எதிர்ப்பட்டோம். அது எப்படி தொடங்கியது? சிக்கல்வாய்ந்த தற்போதைய நிலையை அது வந்தடைந்தது எப்படி? நம்மைச் சூழ்ந்திருக்கும் வான்சார்ந்த விந்தைகளுக்கு என்ன நடக்கும்? எவராவது சொல்ல முடியுமா? நாம் பார்க்கலாம்.
[பக்கம் 8-ன் பெட்டி]
அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?
ஆந்திரமேடா பால்வழி மண்டலம் 20 லட்ச ஒளியாண்டு தொலைவில் இருக்கிறதென்று வானவியலாளர்கள் நமக்குச் சொல்லும்போது, அவர்களது கணிப்பு உண்மையில் தற்போது நிலவும் எண்ணங்களின் அடிப்படையிலானது. மனதில் எண்ணிப்பார்க்க முடியாத அப்படிப்பட்ட தொலைவுகளை நேரடியாக அளக்கக்கூடிய முறையை எவரும் கண்டுபிடித்திருக்கவில்லை. சுமார் 200 ஒளியாண்டுகளுக்குட்பட்ட தொலைவுகளில் இருப்பதைப் போன்ற, மிக அண்மையிலுள்ள விண்மீன்களின் தொலைவுகள், எளிய கோண கணிதத்தை உட்படுத்துகிற உடுக்கண விழிக்கோட்டக் கோணளவால் நேரடியாக அளக்கப்படலாம். ஆனால் பூமியானது சூரியனைச் சுற்றிச் செல்கையில் லேசாக நகர்வதுபோல் தோன்றுமளவிற்கு பூமிக்கு அவ்வளவு அருகிலிருக்கும் விண்மீன்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரும்பாலான விண்மீன்களும், எல்லா பால்வழி மண்டலங்களும் அதிக தொலைவிலேயே இருக்கின்றன. அந்நிலையில் ஊகிப்புத் தொடங்குகிறது. ஓரியனிலுள்ள பிரபல செந்நிற மிகப்பெரிய ராட்சத திருவாதிரை (பீடல்ஜுஸ்) போன்ற ஓரளவு அருகிலிருக்கும் விண்மீன்கள்கூட ஊகிப்பிற்கு உரியவையாகவே இருக்கின்றன; அதன் தொலைவுகள் 300-லிருந்து 1,000-க்கும் மேலான ஒளியாண்டுகள் வரையாக கணிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, பத்து லட்ச மடங்குகள் அதிகமாகவுள்ள பால்வழி மண்டல தொலைவுகளைப் பொறுத்தமட்டில் வானவியலாளர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்களைக் காண்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடாது.
[பக்கம் 8-ன் பெட்டி]
சிதைவுறு ஒளிர் விண்மீன்கள், துடிக்கும் விண்மீன்கள், மற்றும் கருந்துளைகள்
அறியப்பட்டிருக்கும் அண்டத்திலேயே மிக விநோதமான ஒரு பொருள், நண்டு நெபுலாவின் மையத்தில் இருக்கிறது. அறிவியலாளர்களின்படி, மடிந்துபோன ஒரு விண்மீனின் சின்னஞ்சிறிய பிணம் நம்பமுடியாத அடர்த்திகளில் அழுத்தத்தின்கீழ் வைக்கப்பட்டு, அதன் கல்லறையில் ஒரு வினாடிக்கு 30 முறை தன்னைத்தானே சுற்றுகிறது; முதல்முதலாக 1968-ல் பூமியில் உணரப்பட்ட ரேடியோ அலைகளின் கற்றையை வெளியே அனுப்பிக்கொண்டிருந்தது. அது துடிக்கும் விண்மீன் (பல்சார்) எனப்படுகிறது; மூல விண்மீனின் அணுக்களுக்குள் எலெக்ட்ரான்களும் புரோட்டான்களும் இணைந்து நியூட்ரான்களை உருவாக்குமளவிற்கு ஒன்றாகச்சேர்த்து நெருக்கப்பட்டு மிகுந்த அழுத்தத்தின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் சிதைவுறு ஒளிர் விண்மீனின் சுழன்றுகொண்டிருக்கும் எஞ்சியபொருளாக அது விவரிக்கப்படுகிறது. ஓரியனிலுள்ள பீடல்ஜுஸ் அல்லது ரீகல் போன்ற மிகப்பெரிய ராட்சத விண்மீனின் பருமன்வாய்ந்த உட்கருவாக அது ஒருகாலத்தில் இருந்ததாக அறிவியலாளர்கள் சொல்லுகின்றனர். அந்த விண்மீன் வெடித்து, வெளிப்புற அடுக்குகள் புறவெளிக்குள் சிதறியபோது, சுருங்கிய கரு மட்டுமே, அதன் அணுக்கருசார்ந்த நெருப்பு நெடுங்காலத்திற்குமுன் அணைக்கப்பட்டு, வெண்கனல் வீசும் கங்காக விடப்பட்டிருந்தது.
நமது சூரியன்களில் இரண்டைப் போன்ற பருமன் வாய்ந்த ஒரு விண்மீனை எடுத்து 15-லிருந்து 20 கிலோமீட்டர் விட்டமுள்ள ஒரு பந்துக்குள் திணித்து வைப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! பூமியாகிய கோளை எடுத்து 400 அடிக்குள் திணிப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். இந்தப் பொருளின் 16 கனசதுர சென்டிமீட்டரானது 1,600 கோடி டன்னுக்கும் அதிகமான எடையுடையதாக இருக்கும்.
அழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள பருப்பொருளைப் பற்றி இதுகூட முழுமையான விளக்கமாகத் தோன்றவில்லை. பூமியை ஒரு கோலியின் அளவு வரையாகச் சுருங்க வைத்தால், இறுதியில் ஒளிகூட வெளிவர முடியாதளவுக்கு புவியின் நிறையீர்ப்புப் புலம் அவ்வளவு பலமுள்ளதாகிவிடும். இந்தத் தருணத்தில் நமது சின்னஞ்சிறிய பூமி கருந்துளை (black hole) என்றழைக்கப்படும் ஒன்றிற்குள் மறைந்துவிடுவதாகத் தோன்றலாம். பெரும்பாலான வானவியலாளர்கள் கருந்துளைகளில் நம்பிக்கை வைக்கிறபோதிலும், அவை இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவுமில்லை; ஒருசில வருடங்களுக்குமுன் எண்ணப்பட்டதுபோல் அவை அவ்வளவு அடிக்கடி தோன்றுவதாகத் தெரியவுமில்லை.
[பக்கம் 10-ன் பெட்டி]
அந்த வண்ணங்கள் நிஜமானவைதானா?
ஒரு சிறிய தொலைநோக்கியை வைத்துக்கொண்டு வானத்தைக் கூர்ந்தாராய்கிறவர்கள், பிரபலமான ஒரு பால்வழி மண்டலத்தையோ ஒண்முகிற் படலத்தையோ முதலாவதாக காண்கையில் அடிக்கடி ஓர் ஏமாற்ற உணர்ச்சியை அடைகின்றனர். நிழற்படங்களில் அவர்கள் பார்த்த அழகிய வண்ணங்கள் எங்கே? “இன்றிருக்கும் மிகப் பெரிய தொலைநோக்கிகளின் வழியாகக்கூட மனித கண்ணால் நேரடியாக பால்வழி மண்டலங்களின் வண்ணங்களைப் பார்க்க முடியாது, ஏனென்றால் விழித்திரையிலுள்ள ஏற்பிகளைத் தூண்டுவதற்கு அவற்றின் ஒளி மிகவும் மங்கலானது,” என்று வானவியலாளரும் அறிவியல் எழுத்தாளருமான டிமத்தி ஃபெரஸ் குறிப்பிடுகிறார். இது சிலரை, வானவியல்சார்ந்த நிழற்படங்களில் காணப்படும் அழகிய வண்ணங்கள் போலியானவை, நிழற்பட உருவாக்கத்தின்போது எப்படியோ சேர்க்கப்பட்டவை என்ற முடிவுக்கு வர வைத்திருக்கிறது. என்றபோதிலும், இது உண்மை அல்ல. “அந்த வண்ணங்கள்தாமே நிஜமானவை, மேலும், துல்லியமாக அவற்றை உருவப்படி எடுத்து வழங்குவதற்கான வானவியலாளர்களின் மிகச் சிறந்த முயற்சிகளையே அந்த நிழற்படங்கள் காண்பிக்கின்றன,” என்று ஃபெரஸ் எழுதுகிறார்.
பால்வழி மண்டலங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில், பால்வழி மண்டலங்கள் அல்லது பெரும்பாலான ஒண்முகிற் படலங்கள் போன்ற மங்கிய தொலை தூரத்துப் பொருட்களின் நிழற்படங்கள், “ஒரு தொலைநோக்கியை ஒரு பால்வழி மண்டலத்தை நோக்கி இலக்காக வைத்து, ஒரு ஒளிப்படத் தட்டில் பல மணிநேரங்களுக்கு ஒளி படவைத்து, விண்மீன் ஒளி ஒளிப்படப் பால்மக் கரைசலினூடாகச் செல்லும்படி குறித்தநேரத்திற்கு ஒளி படவைத்து எடுக்கப்பட்டவை. இந்த சமயத்தின்போது, உந்துவிக்கும் இயங்கமைப்பு ஒன்று பூமியின் சுழற்சிக்கு ஈடுசெய்து, அந்தத் தொலைநோக்கி அந்தப் பால்வழி மண்டலத்தையே இலக்காகக் கொண்டிருக்கும்படி செய்யும்; அதேநேரத்தில் அந்த வானியலாளரால், அல்லது சில சமயங்களில், தானியங்கும் வழிகாட்டு அமைப்பு ஒன்றால் மிகச் சிறிய திருத்தங்கள் செய்யப்படுகின்றன,” என்று ஃபெரஸ் விளக்குகிறார்.
[பக்கம் 7-ன் வரைப்படம்/படங்கள்]
1 ஓரியன் விண்மீன் குழு, உலகெங்கும் ஜனவரியில் இரவுநேர வானில் வழக்கமான காட்சி
2 ஓரியன் நெபுலா, அந்த மங்கலான ‘விண்மீனின்’ மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட பிரமிப்பூட்டும் படம்
3 ஓரியன் நெபுலாவின் உள் ஆழத்தில்—அண்டம்சார்ந்த ஒரு மகப்பேறு பிரிவா?
[பக்கம் 9-ன் படம்]
ஆந்திரமேடா பால்வழி மண்டலம், சாதாரண கண்களுக்குப் புலப்படக்கூடிய மிகத் தொலைவிலிருக்கும் பொருள். அதன் சுழற்சி வீதம், நியூட்டனின் ஈர்ப்பு விதியை மீறுவதாகத் தோன்றி, தொலைநோக்கிகளுக்கு மறைவாக இருக்கும் இருண்ட பருப்பொருளைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது
[படத்திற்கான நன்றி]
Astro Photo - Oakview, CA
[பக்கம் 9-ன் படம்]
டாரஸில் நண்டு நெபுலா—ஒரு உடுக்கண இடுகாடா?
[படத்திற்கான நன்றி]
Bill and Sally Fletcher
[பக்கம் 10-ன் படங்கள்]
மேலே: வண்டிச்சக்கர (Cartwheel) பால்வழி மண்டலம். சிறிய பால்வழி மண்டலம் ஒன்று அதனுடன் மோதி, அதனூடே இங்குமங்குமாகச் சென்று, வண்டிச்சக்கர பால்வழி மண்டலத்தைச் சூழ்ந்து கோடிக்கணக்கான புதிதாக உருவாக்கப்பட்ட விண்மீன்களாலான நீல வளையத்தை அதன் பாதையில் விட்டுச் சென்றது
[படத்திற்கான நன்றி]
Kirk Borne (ST Scl), and NASA
கீழே: பூனைக் கண் (Cat’s Eye) நெபுலா. மிக எளிதாக ஒன்றை ஒன்று சுற்றி வரும் இரு விண்மீன்களின் செயல்விளைவு சிக்கல்வாய்ந்த அமைப்புமுறைகளை விளக்குகிறது
[படத்திற்கான நன்றி]
J. P. Harrington and K. J. Borkowski (University of Maryland), and NASA