உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 1/22 பக். 28-29
  • உலகை வனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை வனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “சப்தமில்லா சர்வநாசம்”
  • சிகரெட்டுகளைவிட அதிக தீங்குள்ளது
  • தாய்மாரின்மீது படிப்பறிவின் விளைவு
  • தகர்க்கப்பட்ட நம்பிக்கை
  • குடும்ப வாழ்க்கை சீரழிகிறது
  • சர்வதேச திருமணயிணைப்பின் ஆபத்துகள்
  • பயண அசௌக்கியம்
  • பிரான்ஸில் காற்றின் தூய்மைக்கேடு படுமோசமாகிறது
  • பிள்ளைகள் மத்தியில் பேச்சுக்கோளாறுகள்
  • பெண்ணுக்கும் அவள் செய்யும் வேலைக்கும் மதிப்பு
    விழித்தெழு!—1998
  • தாய்மாரின் தடை தாண்டும் ஓட்டம்
    விழித்தெழு!—2002
  • குழந்தைகள்—சொத்தா, கடனா?
    விழித்தெழு!—1993
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 1/22 பக். 28-29

உலகை வனித்தல்

“சப்தமில்லா சர்வநாசம்”

கார்டியன் வீக்லி என்ற பிரிட்டன் செய்தித்தாளின்படி, முன்னேற்றமடைந்த பிரபல தரும ஸ்தாபனமான ஆக்ஸ்ஃபேமின் நோக்குநிலையில், “சப்தமில்லா சர்வநாசம்,” என்று பெயரிடப்படும் அளவிற்கு உலகின் ஏழைகளுடைய துன்பம் அவ்வளவு கடுமையானதாக உள்ளது. உலகின் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒரு ஐந்து-வருட ஒழுங்குபடுத்தப்பட்ட சேவையை ஆரம்பித்ததன் ஒரு அறிக்கையில், உலகின் ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மிக ஏழ்மையான 50 தேசங்களில் வாழ்கின்றனரென்பதை ஆக்ஸ்ஃபேம் கண்டுபிடித்தது. உலகின் வருமானத்தில் தங்களுடைய பங்கு வெறும் 2 சதவீதம் என்றளவுக்கு குறைந்திருப்பதாக அதே நாடுகள் கண்டிருக்கின்றன. நாடுகளுக்குள்ளே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பிளவும்கூட வளர்ந்து வருகிறது. உதாரணத்திற்கு, மெக்ஸிகோ, ஒரு கடுமையான நிதி சம்பந்தமான நெருக்கடியினாலும் மிகப் பரவலாயிருந்த வறுமையினாலும் துன்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் அது மிக வேகமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆக்ஸ்ஃபேமைச் சேர்ந்த ஒரு பெண்-பிரதிநிதி இவ்வாறு சொல்கிறார்: “உலகத் தலைவர்களும் ஐநா-வும் . . . நம்பிக்கை இழந்திருக்கின்றனர் என்ற ஒரு உணர்வு இருக்கிறது. ஒரு புதிய ஆயிர ஆண்டு காலத்திற்காக ஒரு புதிய அணுகுமுறை நமக்குத் தேவைப்படுகிறது.”

சிகரெட்டுகளைவிட அதிக தீங்குள்ளது

ஏழை மனிதனின் சிகரெட் என்பதாகவும் சொல்லப்படும் பீடியைக் குறித்ததில் இந்தியாவிலுள்ள ஒரு நாடாளுமன்ற செயற்குழுவின் முடிவான கருத்து இதுதான். 40 இலட்சத்திற்கும் மேலான ஆண்கள், பெண்கள், மற்றும் பிள்ளைகள் டென்டு இலைகளில் புகையிலைத் தூளை சுற்றி, நூலினால் அந்த சிறிய சுருளைக் கட்டி இவ்வாறாக ஒரு நாளிற்கு 30 கோடிக்கும் மேலான பீடிகளைத் தயாரிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தி டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையின்படி, சிகரெட்டுகளைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக புற்றுநோய் உண்டாக்கக்கூடிய சாத்தியம் பீடிக்கு இருப்பதாகவும் நுரையீரல் நார்க்கட்டி, (silicosis) காசநோய் போன்றவற்றை உண்டாக்கக்கூடும் என்பதாகவும் ஒரு சமீபத்திய அறிக்கை காண்பிக்கிறது. மேலுமாக 36 சதவீதம் தாரையும் 1.9 சதவீதம் நிக்கட்டினையும் கொண்டிருக்கும் ஸ்டான்டர்ட் இந்திய சிகரெட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 47 சதவீதம் தாரையும் 3.7 சதவீதம் நிக்கட்டினையும் பீடி கொண்டிருக்கிறதென்பதாக அந்த அறிக்கை காண்பிக்கிறது. புகைபிடிப்பவர்கள் மாத்திரம் அபாயத்திலில்லை. பீடிகளைத் தயாரிக்கும் இலட்சக்கணக்கான ஜனங்கள், சுகாதாரமற்ற நிலைமைகளில், காற்றோட்டமில்லாத குடிசைகளில் புகையிலை தூளை சுவாசித்துக்கொண்டு வழக்கமாக பல மணிநேரங்களாக வேலை செய்கின்றனர். முக்கியமாக குழந்தைத் தொழிலாளிகள் துன்பப்படுகின்றனர்.

தாய்மாரின்மீது படிப்பறிவின் விளைவு

வளர்முக நாடுகளிலுள்ள பிள்ளைகளுடைய தாய்மார் படிப்பறிவுள்ளவர்களாக இருக்கும்போது பிழைத்திருப்பதற்கு அதிக வாய்ப்பை அந்தப் பிள்ளைகள் பெற்றிருப்பார்கள் என்பதாக பொது சுகாதார நிபுணர்கள் வெகுகாலமாக நம்பிவந்திருக்கின்றனர்—ஆனால் வாசிப்பதை மாத்திரமே ஒரு இறுதியான காரணக்கூறாகத் தனிப்படுத்த அவர்களால் ஒருபோதும் முடியவில்லை. நியூ சையன்டிஸ்ட் பத்திரிகையின்படி, நிகரகுவாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி “பெண்களுக்கு கல்வியளிப்பது அவர்களுடைய பிள்ளைகளின் உடல்நலத்தின்மீது ஒரு நேரடியான பாதிப்பை கொண்டிருக்கிறதென்பதை மெய்ப்பித்துக்காட்டுவதில் முதலாவதாயிருக்கிறது.” 1979 மற்றும் 1985-க்கு இடையே நிகரகுவாவில் நடத்தப்பட்ட மாபெரும் படிப்பறிவு திட்டத்தில் வயதுவந்தவர்களாகப் பங்குகொண்ட படிப்பறிவில்லாத பெண்களை அந்த ஆராய்ச்சி பரிசீலித்தது. 1970-களின் பிற்பகுதியில், படிப்பறிவில்லாத தாய்மாரின் பிள்ளைகளுடைய இறப்பு வீதம் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1,000 பிறப்பிற்கும் ஏறக்குறைய 110 மரணங்களாக இருந்தன. 1985-க்குள்ளாக, அந்தத் திட்டத்தில் வாசிக்க கற்றுக்கொண்ட தாய்மாரின் பிள்ளைகளுடைய இறப்பு வீதம் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் 84-ஆக குறைந்தது. அவர்களுடைய பிள்ளைகள் மேம்பட்ட விதத்தில் போஷிக்கப்பட்டுமிருந்தனர். படிப்பறிவுள்ள தாய்மாரின் பிள்ளைகள் ஏன் இவ்வளவு ஆரோக்கியமாயிருக்கின்றனர் என்பதைக் குறித்து நிபுணர்கள் இன்னும் நிச்சயமற்றிருக்கின்றனர்.

தகர்க்கப்பட்ட நம்பிக்கை

கனடாவின் வடமேற்கு பிரதேசங்களிலுள்ள ஹட்ஸன் விரிகுடாவிலிருக்கும் சிறிய பட்டணமாகிய செஸ்ட்ர்ஃபீல்ட் இன்லட், பள்ளி சிறுவர்கள் பரவலாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது பற்றிய குற்றச்சாட்டுகளில் நிலைகுலைந்திருக்கிறது. மாக்லீன்ஸ் பத்திரிகையின்படி, சர் ஜோசஃப் பர்னியர் ஃபெடரல் டே ஸ்கூலிலும் அடுத்தாற்போலுள்ள கத்தோலிக்க சர்ச் நடத்தும் வசிப்பிடத்திலும் 1950-களிலும் 1960-களிலும் ஒரு 17-வருட காலத்திற்கு இன்யூட் பிள்ளைகளை பால் சம்பந்தமாகவும் உடல் ரீதியாகவும் துர்ப்பிரயோகம் செய்திருப்பதற்கான சம்பவங்களை அரசாங்கம் சமீபத்திலே வெளியிட்டிருக்கும் ஒரு சுயேச்சையான அறிக்கை கண்டது. துர்ப்பிரயோகத்தின்பேரிலான நிரூபிக்கப்படாத 236 குற்றச்சாட்டுகளின் 21-மாத புலன்விசாரிப்பை போலீஸ் முடித்தது. குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாதென்று முடிவெடுத்தது—ஏனென்றால் சில வழக்குகளில் காலவரையறை முடிந்துவிட்டிருந்ததன் காரணமாக; மற்றவை குற்றவாளியாகச் சொல்லப்படுபவர்கள் முதிர்வயதுள்ளவர்களாக அல்லது மரித்துவிட்டுமிருந்ததன் காரணமாக; மற்றவை முந்திய மாணவர்களில் சிலர் குற்றவாளிகளை நிச்சயத்தோடு அடையாளங்காட்ட முடியாததன் காரணமாக. மாக்லீன்ஸ் குறிப்பிட்டது: “காலம் கடந்துசெல்வதானது குற்றஞ்சுமத்தப்படுபவர்களை தண்டிப்பதை நிச்சயமாகவே அதிக கடினமாக்கியிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுடைய வேதனையை அது நீக்கிவிடவில்லை.”

குடும்ப வாழ்க்கை சீரழிகிறது

இந்த காலத்தில் குடும்ப வாழ்க்கை எவ்வாறு செல்கிறது? ஐக்கிய நாடுகளின் பொது தகவல் இலாகாவின்படி, உலகம் முழுவதுமாக உள்ள தகப்பன்மார் தனிமையில் தங்களுடைய பிள்ளைகளோடு சராசரியாக ஒரு நாளிற்கு ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகின்றனர்—ஹாங்காங்கில் சராசரி வெறுமனே ஆறு நிமிடங்கள்தான். ஒற்றை பெற்றோர்களும் அதிகரித்துவருகின்றனர். பிரிட்டிஷ் கூட்டரசில், உதாரணத்திற்கு, 1990-ல் இருந்த எல்லா பிறப்புகளிலும் பாதியளவு, திருமணமாகாத பெண்களுக்கிருந்தது. குடும்ப வன்முறையும்கூட அதிகரித்து வருகிறது. ஐக்கிய மாகாணங்களிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வாழ்கிற பிள்ளைகளில் 4 சதவீதத்தினர் ஒவ்வொரு வருடமும் வீட்டிற்குள் பயங்கரமான வன்முறையை அனுபவிக்கின்றனர் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. முதிர்வயதுள்ளவர்களும் பிரச்சினைகளை உடையவர்களாயிருக்கின்றனர். ஐநா அறிக்கை கூறுகிறது: “ஐரோப்பியக் குழுவின் ‘வளர்ச்சியடைந்த’ நாடுகளென்று சொல்லப்படுபவற்றிலும்கூட, வயதுவந்த ஜனத்தாரில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஓரளவுக்கு வறுமையில் வாழ்கின்றனர். ஒரு விரிவான குடும்ப அமைப்பின் ஆதரவின்றி அவர்கள் நகரத்தில் சிறுபான்மையினர் பகுதிகளில் அடிக்கடி ஒதுங்கியிருக்கின்றனர்.”

சர்வதேச திருமணயிணைப்பின் ஆபத்துகள்

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஐரோப்பா வரையாக பயணம் செய்வதற்கு கிடைத்திருக்கும் கூடுதலான சுயாதீனத்தோடு ஒரு வெறுப்பூட்டும் துணைவிளைவு வந்திருக்கிறது: சர்வதேச திருமணயிணைப்பு. 1991 முதற்கொண்டு 15,000 என்று கணக்கிடப்பட்டிருக்கும் பெண்கள், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவிற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட மணப்பெண்களாக சென்றிருக்கின்றனர். அநேக பெண்கள் ஏழ்மையில் வாழ்ந்து ஒரு மேம்பட்ட வாழ்க்கையை கனவுகாண்கின்றனர், ஆகவே ஒரு திருமணயிணைப்பு ஏஜென்ஸியினுடைய விளம்பரம் ஒன்றிற்கு பதிலளிக்கின்றனர். ஒரு பெண் கடைசியாக அயல்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் ஒரு முரட்டுத்தனமான கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படும்போது, வெகு அடிக்கடி, ஆசைக்கனவு ஒரு கொடுங்கனவாக மாறிவிடுகிறது. ஒரு போலந்து மணப்பெண் அவளுடைய கணவனால் ஜெர்மனியில் அவ்வளவு மோசமாக அடிக்கப்பட்டதன் காரணமாக அவள் காட்டுப்பகுதிக்கு ஓடிப்போய் இரண்டு நாட்களாக உறையவைக்கும் தட்பவெப்பநிலையில் அங்கே ஒளிந்திருந்தாள். உறைபனியால் விறைத்துப் போனதன் காரணமாக, அவளுடைய இடது பாதமும் வலது காலும் வெட்டி எடுக்கப்படவேண்டியதாயிருந்தது. கார்டியன் வீக்லி என்ற ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டது: “அநேக திருமணயிணைப்பு ஏஜென்ஸிகள் விபசாரக் கூட்டங்களாக தங்களுடைய கதாபாத்திரத்தை மாற்றிவருகின்றன. அவை பெண்களை வெளிநாட்டிற்கு மயக்கி கொண்டுசென்று பின்பு பலாத்காரமாக வேசி இல்லங்களில் தள்ளுகின்றன. எதிர்க்கக்கூடியவர்கள் வழக்கமாக கொல்லப்படுகின்றனர்.”

பயண அசௌக்கியம்

நீங்கள் பயணத்தின்போது அசௌக்கியமடைகிறீர்களா? அப்படியிருந்தால், நீங்கள் மாத்திரம் அதை அனுபவிக்கவில்லை. ஒவ்வொரு 10 ஜனங்களிலும் முழுமையாகவே 9 பேர் அசைவினால் ஏற்படக்கூடிய அசௌக்கியத்திற்கு வித்தியாசமான அளவுகளில் ஆளாகக்கூடியவர்களாயிருக்கின்றனர் என்று இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிபியூன் அறிக்கை செய்கிறது. நாய்கள், முக்கியமாக நாய்க்குட்டிகளும்கூட, எளிதில் பாதிக்கப்படுகின்றன. படகுகளில் அமைதியற்ற கடலில் கொண்டுசெல்லப்படும்போது மீன்களும்கூட அசௌக்கியமாகக்கூடும்! இதற்கான தீர்வு என்ன? அநேக மருந்துக்கடைகளில் வாங்கமுடிகிற மருந்துகளிடமாக சிலர் திரும்புகின்றனர். நமக்கு உதவக்கூடிய மற்ற ஆலோசனைகள் இங்கே இருக்கின்றன: நகர்ந்து கொண்டிருக்கும் வாகனத்திலிருக்கும்போது எதையும் வாசிக்காதீர்கள். மிகக் குறைவான அசைவு எங்கேயிருக்கிறதோ அங்கே அமருங்கள்—ஒரு காரினுடைய முன் இருக்கையில், உதாரணத்திற்கு, அல்லது ஒரு விமானத்தின் இறக்கைப் பகுதியில். அடிவானம் போன்ற தொலைதூர பொருட்களின் மீது கண்களை ஒருமுகப்படுத்துங்கள். அவ்வாறு செய்ய உங்களுக்கு விருப்பமில்லையென்றால், உங்களுடைய கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

பிரான்ஸில் காற்றின் தூய்மைக்கேடு படுமோசமாகிறது

அதை சமாளிப்பதற்கு ஒன்றுபட்ட முயற்சிகளிருந்தும், காற்றின் தூய்மைக்கேடு மோசமாகிக்கொண்டு வருகிறது. பாரிஸ் மற்றும் மற்ற பிரான்ஸ் நகரங்களில் வாழ்கிற இலட்சக்கணக்கானோரின் ஆரோக்கியத்திற்கு ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக இது உள்ளது. கடந்த காலத்தில் கனரகத் தொழிற்சாலை பிரதானமாக குற்றஞ்சாட்டப்படவேண்டிய ஒன்றாக இருந்தபோதிலும், இன்றைக்கு நகரத்தில் காற்றின் 80 சதவீதம் தூய்மைக்கேட்டுக்கு பொறுப்பு மோட்டார் வண்டி ஆகும். பிரான்ஸில் வாகனங்களின் எண்ணிக்கை 1970 முதற்கொண்டு இரட்டிப்பாக, அதாவது 1 கோடியே 20 இலட்சத்திலிருந்து 2 கோடியே 40 இலட்சமாக உயர்ந்திருக்கிறது; பாரிஸ் பகுதியில் மாத்திரம் 32 இலட்சமாக இருக்கிறது. பாரிஸ் பகுதியில் விஷவாயுக்களின் அடர்த்தியினுடைய ஒவ்வொரு அதிகரிப்பிற்கும் ஏற்றாற்போல், சுவாச சம்பந்தமான வியாதிகளினால் மரித்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக ஒரு சமீபத்திய அரசாங்க ஆராய்ச்சி காண்பித்ததாக பாரிஸ் செய்தித்தாள் லே மான்ட் சொல்கிறது. சாத்தியமான எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை. தெளிவாகவே, பாதிப்பை ஏற்படுத்தும் அளவு கடுமையான எந்த நடவடிக்கைகளும் வண்டியோட்டும் அவர்களுடைய வாக்காளர்களை பிரியப்படுத்தாதென்பதைக் குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர்.

பிள்ளைகள் மத்தியில் பேச்சுக்கோளாறுகள்

மாயின்ஸ், ஜெர்மனியில், பேச்சுத்தொடர்பு கோளாறுகளுக்கான பல்கலைக்கழக கிளினிக்கிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், பள்ளிக்குச்செல்லும்-வயதடையாத பிள்ளைகளில் நான்கில் ஒன்றிற்கு பேச்சுக்கோளாறு இருப்பதாக கண்டுபிடித்திருக்கின்றனர். “அந்த எண்ணிக்கையை என்னால் நம்பமுடியவில்லை,” என்பதாக கிளினிக்கின் நிர்வாகஸ்தரான பேராசிரியர் மான்ஃப்ரேட் ஹைனமன் ஒப்புக்கொண்டார். மூன்று மற்றும் நான்கு வயதுள்ள பிள்ளைகளின்மீது மருத்துவ பணியாளர்கள் சோதனை நடத்தி 18-லிருந்து 34-க்கு இடைப்பட்ட சதவீதத்தினருக்குப் பேச்சுக்கோளாறு இருந்ததாக கண்டுபிடித்திருக்கின்றனர். 1982-ல் அது வெறுமனே நான்கு சதவீதமாக இருந்தது. ஏன் இந்த அதிகரிப்பு? “குடும்பங்கள் மிக அதிகமாக தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு மிகக் குறைவாக பேசுகின்றனர்,” என்பதாக டேர் ஷ்டைகர்வால்ட்-போடா என்ற ஜெர்மன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அநேக குடும்பங்களில் வீடியோக்கள், டிவி, மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் பெற்றோர்களுடைய பங்கை எடுத்துக்கொள்வதாகத் தெரிகிறது. சில பிள்ளைகள் அரிதாகப் பேசக்கூடியவர்களாயிருந்தாலும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளைப் பொறுத்தவரையில் “உடனடியாக ஒளியைப்போல்” அவ்வளவு விரைவாக பிரதிபலித்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்