உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/8 பக். 7-10
  • நீங்கள் கடவுளை நம்பலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் கடவுளை நம்பலாம்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுள் உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்
  • பைபிளை நம்புவதற்கான காரணங்கள்
  • பைபிள்​—⁠கடவுள் தந்த புத்தகம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கை அவசியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/8 பக். 7-10

நீங்கள் கடவுளை நம்பலாம்

நீங்கள் கடவுளையும், அவருடைய வார்த்தையாகிய பைபிளையும் பூரணமாக நம்பலாம். ஒரு வாழ்நாள் முழுவதும் கடவுளை நம்பியபிறகு, நூறு வயதைத் தாண்டிய ஒருவர், தன் நம்பிக்கைக்கான இந்தக் காரணத்தைக் கொடுத்தார்: “இதோ!” அவர் கூறினார், “இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.

இந்த மனிதர், பண்டைய இஸ்ரவேலரின் ஒரு தலைவராயிருந்த யோசுவா, கடவுளின் மற்றும் அவருடைய வார்த்தையின் முழுமையான நம்பத்தக்கத்தன்மையை அனுபவித்திருந்தார். இஸ்ரவேலருக்குக் கடவுள் வாக்களித்த எல்லா காரியமும் உண்மையானது. நீங்கள் படைப்பாளரையும் அவரது வார்த்தையையும்பற்றி அதிகமாய்த் தெரிந்துகொண்டால், நீங்களும் அதே நம்பிக்கையை வளர்க்கலாம். அதற்குப் பிறகு வாழ்ந்த, கடவுளை வணங்கியவராகிய, தாவீது ராஜா இவ்விதமாய்த் தெரிவித்தார்: “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.”—சங்கீதம் 9:10.

கடவுள் உங்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்

நீங்கள் எந்தளவுக்கு அதிகமாய் ‘கடவுளின் பெயரை அறிய’ வருகிறீர்களோ, மற்றும்—அவரது நோக்கங்கள், நடவடிக்கைகள், மேலும் பண்புகளைக் குறித்து—அவரது பெயர் எதைக் குறிக்கிறது என்பதையும் அறிய வருகிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமாய் அவரை நம்புவீர்கள். அவர், உங்களை ஒருபோதும் ஏமாற்றாத அல்லது தன் வார்த்தையை மீறாத, நம்பத்தகுந்த ஒரு நண்பராய் இருக்கிறார். அவருடைய பிரதிநிதிகளாகத் தங்களை உரிமைபாராட்டிக் கொண்டு, பிறரோடு நம்பிக்கைத் துரோகமாகக் காரியங்களைக் கையாளுபவர்களின் பாசாங்குத்தனத்தால் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். அத்தகைய மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிராதவர்களாக பைபிளில் அடையாளம் காட்டப்படுகின்றனர். மதப் பாசாங்குக்காரர்கள் தாங்கள் சொல்லும் காரியம் ஒன்றாயிருக்க, அதற்கு முரணானதைச் செய்கிறார்கள். அப்போஸ்தலன் பேதுரு எச்சரித்த விதமாக, அவர்கள் மந்தையைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்துகிறார்கள். பேதுரு எழுதினார்: “அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்ளுவார்கள்.”—2 பேதுரு 2:2, 3.

அத்தகைய மக்கள் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்கிறதில்லை. அவர்கள் அவரது வார்த்தையை அவமதிக்கின்றனர். பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விதத்தில், கடவுளின் சொந்தப் பதிவையும் சான்றுகளையும் நீங்கள்தாமே ஏன் கூர்ந்தாராயக் கூடாது? ‘ஆனால்,’ நீங்கள் கேட்கலாம், ‘மற்றெந்தப் புத்தகங்களைக் காட்டிலும் அதிகமாக பைபிளை நான் ஏன் நம்பவேண்டும்?’ சரித்திரமுழுவதிலும், எண்ணற்ற மத மோசடிகள் இருந்திருக்கின்றன என்பது உண்மையானாலும், பைபிள் வித்தியாசமானது. பைபிளை நம்புவதற்கான பின்வரும் காரணங்களைக் கருத்திற்கொள்ளுங்கள்.

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்

நீங்கள் பைபிளை நம்பலாம், ஏனெனில் அதன் வாக்குகளும் தீர்க்கதரிசனங்களும் எப்பொழுதுமே நிறைவேறுகின்றன. இங்கே ஓர் உதாரணம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்டிருந்த இஸ்ரவேலருக்கு நம்பமுடியாததாய்த் தோன்றியிருந்திருக்கலாமென்றாலும், பைபிளின் ஆசிரியராகிய யெகோவா தேவன், அவர்களை பலத்த பாபிலோனியரின் சிறையிருப்பிலிருந்து விடுவித்து, எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுசெல்வார் என்பதாக வாக்களித்திருந்தார். அது நடவாத ஒரு நம்பிக்கையாய்த் தோன்றினது, ஏனெனில் பாபிலோன் அந்நாளில் எருசலேமை முற்றிலும் பாழாக்கிப்போட்ட செல்வாக்குள்ள உலக வல்லரசாய் இருந்தது. ஆனால் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பாபிலோனைக் கவிழ்த்து, தம் மக்களை விடுவிக்கும் ஒருவராக பெர்சிய ஆட்சியாளரான கோரேசின் பெயரையும் யெகோவா குறிப்பிட்டிருந்தார், மேலும் பாபிலோனின் ஆற்று அரண்கள் எவ்வாறு தோல்வியுறும் என்றும் முன்னுரைத்தார். அப்பதிவை நீங்கள் ஏசாயா 44:24–45:4-ல் வாசிக்கலாம்.

வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகம் எவ்வாறு அந்த வாக்கு நிறைவேறியது என்று விளக்குகிறது: “இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டபோது கோரேசு பிறந்திருக்கவில்லை. . . . பொ.ச.மு. 539-லிருந்து இந்தத் தீர்க்கதரிசனம் நுட்பவிவரமாக நிறைவேற ஆரம்பித்தது. கோரேசு ஐப்பிராத் நதியின் நீரை ஒரு செயற்கை ஏரிக்குத் திருப்பினான். நகரத்தில் விருந்து நடந்துகொண்டிருக்கையில் பாபிலோனின் நதிவாசல்கள் அஜாக்கிரதையாய்த் திறந்துவிடப்பட்டிருந்தன. கோரேசின் தலைமையின்கீழ் மேதிய-பெர்சியர் பாபிலோனைக் கைப்பற்றினர். அதன்பின், கோரேசு சிறையிருப்பிலிருந்த யூதர்களை விடுதலைசெய்து எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கான கட்டளைகளோடு எருசலேமுக்கு அவர்களை அனுப்புவித்தான்.”a கடவுளால் செய்யப்பட்ட இதுபோன்ற ஒவ்வொரு வாக்கும், பைபிளில் அடங்கியுள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசனமும், குறிதவறாமல் நிறைவேறியிருக்கிறது.

நிறைவேற்றமடைந்த தீர்க்கதரிசனத்தின் மற்றொரு உதாரணம், நமது நூற்றாண்டில் நம்பிக்கை குறைந்துவிட்டிருக்கும் இந்த உண்மையேயாகும். இதை, நாம் வாழும் காலத்தின் ஒரு குறிப்பிடத்தக்கத் தன்மையாக பைபிள் முன்னுரைத்தது, ஏனெனில், 1914-ல் முதல் உலகப் போரோடு ஆரம்பித்த சகாப்தத்தை அது “கடைசி நாட்கள்” என்று அழைக்கிறது, மேலும் அவை ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களைக்’ (NW) கொண்டுவரும் என்றும் கூறுகிறது. நம் நாட்களில் மக்கள் “தற்பிரியராயும், . . . வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், . . . நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் [“உண்மைத்தன்மையற்றவர்களாயும்,” NW], சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், . . . துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்” இருப்பார்கள் என்று தெரியப்படுத்தியது. மேலும் அது முன்னுரைத்தது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-4, 13) அதைத்தான் நாம் நம் நாளில் பார்த்திருக்கிறோம்.

நீங்கள் பைபிளை நம்பலாம், ஏனெனில் அது முற்றிலும் நம்பத்தக்கது. எவராகிலும் எக்காலத்திலும் பைபிளின் நம்பத்தக்கத்தன்மையை ஆட்சேபித்து வெற்றிகண்டிருக்கவில்லை. பலரும் அறிந்த விஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன் கூறினார்: “மதரீதியல்லாத வரலாறு எதுவாயிருந்தாலும், அதிலிருப்பதைவிட அதிக நிச்சயமான நம்பத்தக்கத்தன்மையின் குறிப்புகளை பைபிளில் நான் காண்கிறேன்.” ஹிட்லரின் “நாட்குறிப்பேடு” போன்ற எந்தப் போலியும் இங்கில்லை! மேலும், மற்ற பண்டைய எழுத்துக்களோடு பைபிள் எவ்விதம் ஒப்பிடுகிறது? தி பைபிள் ஃப்ரம் தி பிகின்னிங் கூறுகிறது: “ஒரு நூலுக்குச் சான்றளிக்கும் பண்டைய MSS.-ன் [(manuscripts) கையெழுத்துப் பிரதிகள்] எண்ணிக்கையிலும், மூல நூலுக்கும் சான்றளிக்கும் MSS.-க்கும் இடையே கடந்துவிட்டிருந்த ஆண்டுகளின் எண்ணிக்கையிலும், பண்டைய நூல்களைக் [ஹோமர், பிளேட்டோ மற்றும் பிறரால் எழுதப்பட்ட நூல்களைக்] காட்டிலும் பைபிள் ஓர் உறுதிப்பாடான நன்மையை அனுபவிக்கிறது. . . . மொத்தத்தில் பண்டைய MSS. பைபிளின் கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிடப்படுகையில் வெகு சொற்பமாகவே உள்ளன. எந்தவொரு பண்டைய நூலும் பைபிளைப்போன்று அத்தனை நன்றாக சான்றளிக்கப்பட்டிருக்கவில்லை.” பைபிளைப் பற்றிய ஒவ்வொரு காரியமும் அதன் முற்றிலுமான மெய்மைத்தன்மையைக் குறித்துக்காட்டுகிறது.

நீங்கள் பைபிளை நம்பலாம், ஏனெனில் அதன் கூற்றுகளெல்லாவற்றிலும் அது முழுவதும் திருத்தமாயுள்ளது. கடவுள் “உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்” என்பதாக பைபிள் கூறுகிறது. (யோபு 26:7) பூமி யானைகளால் தாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுபோன்ற, அக்காலத்தில் பரவியிருந்த கற்பனையான தத்துவங்களைத் திரும்ப உரைப்பதற்குமாறாக, அதைப் பின்தொடர்ந்து விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையை—பூமி விண்வெளியில் ‘தொங்கிக்கொண்டிருக்கிறது’ என்ற உண்மையை—பைபிள் கூறியது. அதோடுகூட, கொலம்பஸின் காலத்துக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, பூமி உருண்டையானது என்பதை பைபிள் தெளிவாகக் கூறினது.—ஏசாயா 40:22.

அதன் நேர்மை மற்றும் ஒளிவுமறைவின்மைக்காக நீங்கள் பைபிளை நம்பலாம். பைபிள் எழுத்தாளர்கள் எதையுமே திரித்துக்கூறவில்லை. தாங்கள் கூறினது தங்கள்மீது, தங்கள் உடன்தேசத்தார்மீது, மற்றும் தங்கள் ஆட்சியாளர்மீது மோசமாகப் பிரதிபலித்தபோதிலும், அவர்கள் உண்மைகளை நேர்மையாக அறிக்கைசெய்தனர். உதாரணமாக, அப்போஸ்தலன் மத்தேயு தன் சுவிசேஷத்தில், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் சில சமயங்களில் விசுவாசக் குறைவைக் காட்டியிருந்ததை, முதன்மைநிலைக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டதை, மற்றும் இயேசு கைதுசெய்யப்பட்டபோது அவரைக் கைவிட்டுச் சென்றதையும்கூட வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.—மத்தேயு 17:18-20; 20:20-28; 26:56.

பைபிளை நம்புவதற்கான மற்றொரு முனைப்பான காரணம் யாதெனில், மக்கள் பைபிளின் ஆலோசனையைப் பொருத்துமளவுக்கு அதை நம்பினபோதெல்லாம், அது எப்போதும் நடைமுறையானதாகவும் பயனுள்ளதாகவும் நிரூபித்திருக்கிறது. (நீதிமொழிகள் 2:1-9) பைபிளின் ஆலோசனைகள், வாழ்க்கையின் பிரச்சினைகளை மேற்கொள்வதில் “நிபுணர்களின்” அடிக்கடி மனமாறுகிற ஆலோசனைகளோடு வெகுவாய் வேறுபடுகின்றன. தேசிய செய்தித்தாள்கள் பலவற்றில் அத்தகைய ஆலோசனைகளை அளிக்கும் பத்திரிகையாளர்களைக் குறித்து, லண்டனின் தி சன்டே டைம்ஸ் கேட்கிறது: “சந்தர்ப்பவசமாய் ஆலோசனை கூறும் இந்தப் பத்திரிகையாளர்களிடம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும், தங்கள் உள்ளான எண்ணங்களையும் உணர்வுகளையும் கூறிக்கொண்டிருக்கின்றனரா?” பைபிள் எழுத்தாளர்கள் வெறுமனே சந்தர்ப்பவசமாய் ஆலோசனை கூறிக்கொண்டிருக்கவில்லை. காலத்தின் சோதனையை வென்றிருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமான, கடவுளால் ஏவப்பட்ட ஆலோசனையைப் பதிவுசெய்தனர்.—2 தீமோத்தேயு 3:16, 17.

“என் வாழ்க்கையைப் பாழாக்கியிருந்திருக்கக்கூடிய ஒரு வழிகாட்டுதலிலிருந்து பைபிளின் ஆலோசனை என்னைக் காப்பாற்றியிருக்கிறது,” என்று இப்போது தன் 30-களிலுள்ள, திருமணமான, சந்தோஷமுள்ள எலன் கூறுகிறார். “விவாகரத்து செய்தவர்களாயிருந்த என் பெற்றோர், திருமண ஏற்பாடுகளில் விசுவாசம் காட்டவில்லை, மேலும், நான் எவரையாவது திருமணம் செய்வதற்கு மாறாக, அவரோடு சும்மா சேர்ந்து வாழும்படி உண்மையில் என்னை உற்சாகப்படுத்தினர். பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பது என் வாழ்க்கைக்குக் கொடுத்திருந்த நிலைத்தன்மையை நான் நினைத்துப்பார்க்கையில், என் சொந்தப் பெற்றோரின் ஆலோசனைக்கும் மேலாக நான் பைபிளை நம்பினதற்காக சந்தோஷப்படுகிறேன்.”—எபேசியர் 5:22-31; எபிரெயர் 13:4-ஐக் காண்க.

“காரியங்களைப் பற்றி பைபிள் கூறினதை நான் கற்றுக்கொள்ளத் தொடங்கினபோது எனக்கு 14 வயதாகவே இருந்தது,” என்று ஃப்ளாரன்ஸ் கூறுகிறார். “பின்னோக்கி, 1960-களைப் பற்றியும், அக்காலத்திலிருந்த மதிப்பீடுகளையும் ஒழுக்கநெறிகளையும் பின்பற்றுவதன்மூலம் என் வயதையொத்தவர்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட தொல்லைகளைப் பற்றியும் நான் நினைத்துப்பார்க்கையில், இளமையான, அனுபவமற்ற ஒரு பெண்ணாயிருந்த எனக்கு பைபிளின் ஆலோசனை அளித்த பாதுகாப்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாயிருக்கிறேன்.”—1 கொரிந்தியர் 6:9-11-ஐக் காண்க.

“என் விஷயத்தில்,” ஜேம்ஸ் கூறுகிறார், “நான் சூதாட்டம், புகைபிடித்தல், குடித்தல் போன்ற நடவடிக்கைகளில் உட்பட்டிருந்தேன்.” அவர் தொடர்ந்து சொல்கிறார்: “இது பல மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழைத்திருக்கும் சேதம் எனக்குத் தெரியும். முதலில் நான் என் பிரச்சினைகளுக்கான பைபிளின் நடைமுறைத் தன்மையைப் பகுத்துணர முடியவில்லை. ஆனால் நல்லதுக்காக என் சிந்தனையின்மீது அது எப்படி செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதையும் மிக ஆரோக்கியகரமான வாழ்க்கைப்பாணியைக் காத்துக்கொள்ள அது எப்படி உதவியிருக்கிறது என்பதையும் இப்போது நான் தெளிவாகப் பார்க்கிறேன்.”—2 கொரிந்தியர் 7:1-ஐக் காண்க.

மேரி ஆன் ஒரு தொல்லைநிறைந்த பின்னணியிலிருந்து தோன்றிய வாழ்க்கையின் அழுத்தங்களினாலும், உணர்ச்சிப்பூர்வ சங்கடங்களினாலும் தற்கொலை செய்துகொள்ள நினைத்துக் கொண்டிருந்தார். “அப்போது தற்கொலை மட்டுமே தீர்வாக இருந்ததாய்த் தோன்றியது,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் பைபிள் என் சிந்தனையை சரிசெய்தது. பைபிளிலிருந்து வாசித்திருந்ததனால் மட்டுமே நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை.”—பிலிப்பியர் 4:4-8-ஐக் காண்க.

இவ்வெல்லா மக்களுக்கும் உதவினது என்ன? அவர்கள் கடவுளிலும் அவரது வார்த்தையாகிய பைபிளிலும் ஒரு முழு நம்பிக்கையை வளர்த்திருந்தனர். சங்கடமான காலங்களில் தங்களது காதுகளுக்குள் குசுகுசுவென்று ஆலோசனைகூறிய ஒரு நம்பிக்கையான, அன்பான நண்பரைப்போன்று கடவுள் ஆகிவிட்டார். (ஏசாயா 30:21-ஐ ஒப்பிடுக.) வாழ்க்கையின் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் மேற்கொள்ள உதவின பைபிள் நியமங்களை அவர்கள் கற்றனர். மேலும், பொய்சொல்லக்கூடாத கடவுளிடமிருந்து ஆச்சரியமான வாக்குகளை—எல்லாவித வஞ்சனை, பொய்கள், சுயநலத்துக்காகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து விடுதலையான மற்றும் கவலை, உடல்நலமின்மை ஆகியவற்றிலிருந்தும், மரணத்திலிருந்தும்கூட விடுதலையான ஓர் அழகிய “புதிய பூமி”யைப் பற்றிய வாக்குகளை நம்புவதற்கு அவர்கள் கற்றனர்!—2 பேதுரு 3:13; சங்கீதம் 37:11, 29; வெளிப்படுத்துதல் 21:4, 5.

நீங்கள் அதே நம்பிக்கையை வளர்க்கலாம். உலகம் உங்கள் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யலாம், ஆனால் கடவுளிலும் அவரது வார்த்தையிலும் உள்ள உங்கள் நம்பிக்கை முறிக்கப்படாது என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். இப்பத்திரிகையின் பிரசுரிப்பாளர்கள் நீங்கள் கடவுளைப்பற்றியும் அவரது வார்த்தையாகிய பைபிளைப்பற்றியும் மேம்பட்ட விதத்தில் அறிந்துகொள்ள எவரேனும் உங்களுக்கு உதவுவதற்கு ஏற்பாடுசெய்ய மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பார்கள்.

[அடிக்குறிப்பு]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 8-ன் படம்]

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பாபிலோன் எப்படி கவிழ்க்கப்படும் என்று கடவுளுடைய தீர்க்கதரிசி முன்னுரைத்தார்

[பக்கம் 9-ன் படம்]

சர் ஐசக் நியூட்டன் பைபிளை நம்பத்தகுந்ததாகக் கண்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்