சிநேகபாவமான ராபின்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
செம்பழுப்பு வண்ணச்சாயல்கள் எங்களது நார்த்தம்பர்லான்ட்டின் கானகங்களை இலையுதிர் காலத்தின் இனிய சூழலுக்கு மாற்றுவதற்கு வெகு முன்னரே, ஆண் ராபின் தன் வந்திருத்தலை உணர வைக்கிறான். அவனது பிரகாசமான சிவந்த மார்பும் அவனது பாடலிலுள்ள மென்னய சந்தங்களும் எங்கள் தோட்டத்திற்கு வண்ணத்தையும் இன்பத்தையும் கூட்டுகின்றன. எவ்வளவு இன்பகரமான நண்பன் அவன்!
பொன் பழுப்பு நிற தோள்கள் மற்றும் தலை, செம்மஞ்சளும் சிவப்பும் கலந்த மார்பு, தொண்டை, மற்றும் நெற்றி, வெள்ளை நிறம்சார்ந்த வயிறு ஆகியவற்றை வைத்து ராபினை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இந்த உருண்ட பறவை, எப்போதும் விழிப்புணர்வுள்ளதாக, அதன் தலையிலிருந்து வால் வரையாக 14 சென்டிமீட்டர் அளவுள்ளதாக உல்லாசமாய் நேராக நிமிர்ந்து நிற்கிறது. 1961-ல் ராபின், பிரிட்டனின் தேசிய பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமேதுமில்லை.
பிரிட்டிஷ் ராபின் அவனது இணையாகிய அமெரிக்க ராபினைவிட சிறியவன்; இங்கிலாந்திலிருந்து வந்து ஆரம்பத்தில் குடியேறியவர்கள், அவர்களுக்கு அறியப்பட்ட பெயராக இருந்த ராபின் என்ற பெயரை அவனுக்குச் சூட்டினார்கள். என்றாலும், பிரிட்டிஷ் ராபின் தனித்தன்மை வாய்ந்தவனாக இருக்கிறான்.
இலையுதிர்காலம் வரவிருக்கையில், ஒரு பிரிட்டிஷ் தோட்டத்தில் ராபின் தன் மிகச் சிறந்த தோற்றத்தில் காணப்படுகிறான். மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும் ஒருவரின் அருகில் நின்றுகொண்டு, ஒரு புழு மேலெழும்பி வருவதற்காகப் பார்த்துக்கொண்டு நிற்பான். சில வேளைகளில், தோட்டக்காரர் ஓய்வெடுக்கையில், அக்காட்சியைக் காண்பதற்காக அந்த ராபின் அந்த மண்வெட்டியில் குந்திக்கொண்டிருப்பான். துடுக்குத்தனமான இந்தப் பறவை, புதிதாகத் தோண்டப்பட்ட மண்மேடுகளை ஆராய்வதற்காக ஒரு புற்றின் தடத்தைப் பின்பற்றிச் செல்வதாகக்கூட அறியப்பட்டிருக்கிறது. பூச்சிகள், விதைகள், பெரி பழங்கள் ஆகியவற்றுடன் புழுக்களும் உட்பட ராபினின் உணவு பல்வகைப்பட்டதாக இருக்கிறது.
ராபினின் கூடு ஒன்றைக் கண்டுபிடிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமானது! ஏதாவதொரு திறந்த குடிலின் கதவு அல்லது ஜன்னல், இனப்பெருக்கம்செய்யும் ஒரு ஜோடிக்கு ஓர் அழைப்பாக இருக்கிறது. பழைய பூந்தொட்டிகள் அல்லது களைந்துவிட்ட கெட்டில்களில், ஒயர் சுருள்கள், அல்லது தோட்டவேலைக்குப் பயன்படுத்தும் கோட்டின் பாக்கெட்டுகளுக்குள்கூட விரைவாகக் கூடுகள் கட்டப்படலாம்! கூடு கட்டுவதற்கு அபூர்வமான இடங்களைக் கண்டுபிடிப்பதற்கான ராபினின் சாமர்த்தியம் எல்லையற்றது.
உங்கள் கைகளிலிருந்து உணவை எடுத்து உட்கொள்ளும்படி பயிற்றுவிப்பதற்கு மிகவும் எளிதான பறவைகளில் ஒன்று ராபின். குளிர்காலம் நெருங்குகையில், அவனுக்கு இயற்கையாகக் கிடைக்கும் உணவு குறையும்போது, உங்கள் திறந்த உள்ளங்கையில் கொஞ்சம் உணவையும்—பாலடைக்கட்டி துண்டுகள் அல்லது உண்ணக்கூடிய புழுக்கள்—அருகிலுள்ள நிலையான ஒரு பொருள் மீது கொஞ்சம் உணவையும் வையுங்கள். பிந்தியதிலுள்ள உணவை இரண்டு அல்லது மூன்று முறை எடுத்து உண்ட பிறகு, அவன் நம்பிக்கை அடைந்து, பின்னர் உங்கள் நீட்டிய கரத்திலிருந்து எடுத்து உண்ணுவான். உங்கள் விரல்களில் அவன் ஒருபோதும் வந்து அமரமாட்டான் என்றாலும், அப்போதிருந்து ராபின் எப்போதும் உங்களைத் தன் சிநேகிதனாகக் கருதுவான். அடுத்த பருவகாலத்தில் அவன் திரும்பி வரும்போது உங்களை மறந்துபோயிருக்க மாட்டான்—நீங்கள் எப்படி உங்கள் சிநேகிதனாகிய ராபினை மறந்திருக்க மாட்டீர்களோ, அதைப் போலவே!