கடவுள் தம்மைக் கண்டுகொள்வதற்கு எங்களை அனுமதித்தார்
அரசனாகிய தாவீது தன் ராஜ்யபாரத்தை தன் மகனுக்கு கொடுக்கத் தயாரானபோது, அவர் தன்னுடைய மகனுக்கு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “நீ உன் பிதாவாகிய தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.”—1 நாளாகமம் 28:9.
இதை எங்களுடைய அனுபவத்தில் உண்மையானதாகக் கண்டோம். நாங்கள் கடவுளைத் தேடினோம், அவரை நிச்சயமாகவே கண்டடைந்தோம்—ஆனால் அநேக பொய்யான பாதைகளுக்குள் திசைதிருப்பப்பட்ட பிறகுதான் கண்டடைந்தோம். எங்களுடைய எண்ணங்களின் உள்நோக்கங்கள் அவரிலும் அவருடைய சேவையிலும் எவ்வளவு பலமாக ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தன என்பதை யெகோவா பகுத்துணர்ந்து, எங்களால் அவர் கண்டுகொள்ளப்படுவதற்கு அனுமதித்தார் என்று நாங்கள் நம்புகிறோம். அது எவ்வாறு நிகழ்ந்தது என்று பின்வரும் பதிவு காண்பிக்கிறது.
அ.ஐ.மா.-விலுள்ள ஃப்ளாரிடாவில் நாங்கள் நான்கு சகோதரர்களும் வளர்க்கப்பட்டோம். குடும்பத்தை ஆதரிப்பதற்காக எங்கள் அப்பா ஒரு சமையல்காரராக நீண்ட ஷிஃப்டுகள் வேலை செய்தார்; அம்மா வீட்டை கவனித்துக்கொண்டார்கள்; பையன்களாகிய நாங்கள் நால்வரும் புல் வெட்டுதல், செய்தித்தாள் போடுதல் போன்ற குடும்பத்தின் வருவாயைக் கூட்டும் ஏதாவதொரு வேலையைச் செய்தோம். அம்மா ஒரு கத்தோலிக்காகவும் அப்பா ஒரு பாப்டிஸ்ட்டாகவும் இருந்தனர். நாங்கள் அனைவரும் கடவுளையும் பைபிளையும் நம்பினோம், ஆனால் அதைக்குறித்து ஒன்றும் செய்யவில்லை, அரிதாகவே சர்ச்சுக்கும் சென்றோம். ஆரம்ப ’70-களில், சமாதான இயக்கங்களும், பெல்-பாட்டம் ஜீன்ஸ்களும், முடியை நீளமாக வைத்துக்கொள்வதும், ராக் இசையும் மிகப் பிரபலமாக இருந்த காலமாக அது இருந்தது. இதெல்லாம் எங்கள் வாழ்க்கையின்மீது செல்வாக்கு செலுத்தியது.
1982 வரையாக, எங்களில் இருவராகிய ஸ்காட்டும் ஸ்டீவும்—முறையே 24 மற்றும் 17 வயதுள்ளவர்கள்—பைபிளில் கவனமான அக்கறை செலுத்தவும், சீரழிந்து வரும் உலக நிலைமைகளைக் குறித்து அதிக கவலைகொள்ளவுமில்லை. ஸ்காட்டுக்கு தன் சொந்த கட்டுமான தொழில் இருந்தது. அது லாபகரமாக இருந்ததால், நாங்கள் சேர்ந்து ஒரு அப்பார்ட்மன்ட்டுக்கு குடிபெயர்ந்தோம். வழக்கமான அதே பார் நடவடிக்கைகளும் அந்த வாழ்க்கை முறையும் எங்களுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தன; வேறெங்காவது வாழ்க்கை இன்னும் பசுமை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்தது. ஆவிக்குரிய காரியங்களுக்காக பசியுணர்வுள்ளவர்களாக ஆரம்பித்தோம். எங்கள் பைபிளை ஒழுங்காக வாசிப்பது, கடவுளுடைய வார்த்தையிலிருந்து அதிக அறிவையும் உட்பார்வையையும் பெற விரும்புவதற்கு உதவியது.
நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெவ்வேறு சர்ச்சுகளுக்குப் போக தொடங்கினோம். ஃப்ளாரிடாவிலுள்ள லேக்வர்த்தில் எங்கள் வீட்டிற்கு அருகில் நாங்கள் சென்றவற்றில், ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் 25 நிமிடங்கள், பணம் கொடுப்பதைப் பற்றியே இருக்கும். “தாராளமாய்க் கொடுங்கள், உங்கள் பாக்கெட்டுகளின் அடிவரை சென்றெட்டி கொடுங்கள்,” என்று பேச்சாளருக்குரிய சாய்வுமேசைமீது பாதியளவு வரையாக சாய்ந்துகொண்டு அந்தப் பிரசங்கியார் சொல்லுவார். ஒரு கூட்டத்தில் பெரும்பாலும் மூன்று முறை, காணிக்கை தட்டை சுற்றுக்கு அனுப்புவார்கள்; அநேகருடைய பாக்கெட்டுகள் காலியாவதில் இது விளைவடைந்தது. நாங்கள் அநேக சர்ச்சுகளுக்குச் சென்றோம்; ஆனால் அதிக காணிக்கை தட்டுகள் சுற்றுக்கு அனுப்பப்படுவதையும் சமூக கூட்டுறவுகளையுமே கண்டோம்.
யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி எச்சரிக்கப்படுதல்
அடிப்படையான பைபிள் போதனைகள் என்று நாங்கள் நினைத்தவற்றால் போதிக்கப்பட்டோம்; அவற்றைக் கற்பித்தவர்கள் அதில் தேர்ந்த இறைமையியலாளர்கள் என்பதால் நாங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டோம். அந்த வகுப்புகளில் ஒன்று அமெரிக்காவிலுள்ள மதப்பழமைவாத அமைப்புகளைக் குறித்ததாக இருந்தது; அந்தப் பட்டியலில் முதன்மையாகக் கருதப்பட்டது எதுவென்றால் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் இயேசுவில் நம்பிக்கை வைப்பதில்லை, தங்கள் சொந்த பைபிளைக் கொண்டிருந்தார்கள், அவர்கள் பரலோகத்திற்குப் போவதில்லை, நரகமென ஒன்று இல்லையென நம்பினார்கள் என்றெல்லாம் நாங்கள் எச்சரிக்கப்பட்டோம். நிச்சயமாகவே, இவை அனைத்தும், சாட்சிகள் நம்புவது தவறு என்ற முடிவுக்கு எங்களை வரவைத்தன.
இப்போதைக்குள் எங்களுக்கு ஒரு பலமான வைராக்கியம் இருந்தது, ஆனால் திருத்தமான அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. (ரோமர் 10:2) மத்தேயு 28:19, 20-ல் இயேசு என்ன சொன்னார் என்று நாங்கள் அறிந்திருந்தோம்—நற்செய்தியை பிரசங்கித்து, சீஷர்களை உண்டுபண்ண வேண்டும். அப்போது நாங்கள் பைபிள் டவுண் என்று அழைக்கப்பட்ட 2,000 அங்கத்தினர் அடங்கிய ஒரு சர்ச்சுக்குச் சென்றுகொண்டிருந்தோம்; 17-க்கும் 30-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள சுமார் 100 பேருள்ள இளைஞர் தொகுதி ஒன்றின் பாகமாக இருந்தோம். ஏதோ ஒரு வகையான பிரசங்கிப்பிற்கு அவர்களை ஒழுங்குபடுத்த ஸ்காட் முயன்றார்—ஆனால் எவ்வித பயனும் இருக்கவில்லை.
ஆகவே எங்கள் சொந்த பிரசங்க நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்தோம். உள்ளூர் சந்தையில் தனி விற்பனை சாவடி ஒன்றை அமைத்து துண்டுப்பிரதிகளையும் பைபிள்களையும் கொடுக்கலாம் என்ற எண்ணம் ஸ்காட்டுக்கு உதித்தது. ஆகவே அதையே நாங்கள் செய்தோம். உள்ளூர் ‘கிறிஸ்தவ’ புத்தகக்கடை ஒன்றிற்குச் சென்று, நிறைய துண்டுப்பிரதிகளையும் பைபிள்களையும் வாங்கினோம்; சந்தைக்குச் சென்று இரண்டு மரச்சட்டங்களை அங்கு நிறுத்திவைத்து, அவற்றின் மேலே மெல்லிய பலகையை வைத்து மேசைபோல அமைத்து, எங்கள் துண்டுப்பிரதிகளையும் பைபிள்களையும் அவற்றின்மீது வைத்தோம்; இவ்வாறு செய்து, “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும்” இருக்க முயன்றோம்.—யாக்கோபு 1:22.
ஒவ்வொரு வாரமும் கடந்துசென்றபோது, ஆங்கில மற்றும் ஸ்பானிஷ் பிரசுரங்களையும் அளிப்பதன்மூலம் சந்தை ஊழியங்களெனப்பட்ட அவை வளர்ச்சியடைந்தன. மேலும், பைபிள்களையும், 30 வித்தியாசப்பட்ட வகையான துண்டுப்பிரதிகளையும், “கடவுள் உங்களை நேசிக்கிறார்” என்று சொல்லும் தொப்பியில் குத்தும் பின்களையும்கூட வைத்திருந்தோம். சில காலம் கழித்து, சிறிய பைபிள் செய்திகளை டி-ஷர்ட்டுகளில் பதியவைக்கும் இயந்திரத்தை ஸ்காட் கொண்டுவந்தார்—இதுபோன்ற கூற்றுகள்: “இன்று உங்கள் பைபிளை வாசித்தீர்களா?,” “நான் ஏன் புன்முறுவலுடன் இருக்கிறேன் தெரியுமா? இயேசு என் இதயத்தில் இருக்கிறார்,” இன்னும் பல. மற்றொன்று, நான்கு குதிரைவீரர்களின் படத்துடன் “வெளிப்படுத்துதல்” என்று வாசித்தது.
அந்த ஷர்ட்டுகளை எவ்விடத்திலும் அணிந்து செல்வதன்மூலம், நாங்கள் ஓர் அமைதியான சாட்சியை அளிப்பதாக எண்ணினோம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 8 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை, சந்தை ஊழியங்களின் அத்தாட்சியைக் காணலாம். வாகன நிறுத்துமிடம் ஒன்றின் வழியாக நீங்கள் நடந்து செல்கையில், கார்கள் மீது துண்டுப்பிரதிகளைக் கண்டீர்களானால்—அது எங்களுடைய வேலையாகத்தான் இருக்கும். பிரசுரங்கள் அனைத்தும் நன்கொடையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டன; என்றாலும் மிகக் குறைவான நன்கொடையே கிடைத்தது. ஒரு வருடம், அந்த வருடத்தின் செலவுகளையெல்லாம் நாங்கள் கூட்டிப் பார்த்தபோது, $10,000-க்கும் அதிகமாக இருந்தது.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை சந்திக்கிறோம்
ஒருமுறை, நாங்கள் போனீட்ட ஸ்பிரிங்ஸிலுள்ள கடற்கரைகளில் ஒன்றில் நீச்சலடித்துக்கொண்டிருந்தபோது, எங்களைவிட வயதானவர் ஒருவர் எங்களை அணுகி, எங்களுடைய ட்ரக்கின் பம்பரிலுள்ள ஸ்டிக்கர்களைப் பார்த்ததாகவும் எங்கள் டி-ஷர்ட்டுகளைக் கவனித்ததாகவும் சொன்னார். பைபிளைப் பற்றியும் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசவும் தொடங்கினார். அப்போஸ்தலர் 2:31-லுள்ள குறிப்பை எடுத்து இவ்வாறு கேட்டார்: “எரிநரகம் ஒன்று இருந்து, கெட்டவர்கள் மட்டுமே அங்கு சென்றார்கள் என்றால், இயேசு அங்கிருந்ததாக ஏன் பைபிள் சொல்லுகிறது?” இன்னும் அநேக வசனங்களைக் கலந்தாலோசித்து, அவர் தொடர்ந்தார். கடைசியாக, ஸ்காட் சொன்னார்: “நீங்க யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தராகத்தான் இருக்கணும்.” “ஆமா,” என்று பதிலளித்தார் அவர். பின்னர் ஸ்காட் சொன்னார்: “நீங்கெல்லாம் இயேசுவை நம்புவதில்லை.” அடுத்த 20 நிமிடங்களுக்கு, அந்த சாட்சி, இயேசுவைப் பற்றி பேசினார்; ஆனால் எப்படியோ அது எங்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நாங்கள் வார இறுதிகளில் எங்களுடைய சந்தை ஊழியங்களைத் தொடர்ந்தோம். மூன்று வருடங்களாக நாங்கள் இதைச் செய்து வந்திருக்கிறோம்—நாங்கள் சத்தியத்தைக் கொண்டிருக்கிறோம், சரியானதைச் செய்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே செய்து வந்தோம். நாங்கள் இன்னும் சர்ச்சுகளுக்குச் சென்று வந்தோம்; ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் ஒவ்வொரு சர்ச்சுக்குச் சென்றோம், நாங்கள் சென்றுவந்த எதிலும் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. இனி போவதற்கு சர்ச்சுகளே இல்லாத நிலைக்கு வந்தோம், எனவே ஓரிரவு, “யெகோவாவின் சாட்சிகளுடைய சர்ச்சுகள்” என்பதாக நாங்கள் அழைத்தவற்றில் ஒன்றிற்குச் செல்ல தீர்மானித்தோம். அவர்களிடம் இயேசுவைக் குறித்துப் பிரசங்கிக்கப் போவதாக இருந்தோம். தொலைபேசி தகவல் விவர புத்தகத்திலிருந்து நாங்கள் முகவரியைக் கண்டுபிடித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்றோம். மற்ற எல்லா சர்ச்சுகளையும் போல அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் கூட்டம் இல்லை என்பதை அறிந்ததும், அவர்கள் நிஜமாகவே இயேசுவை நம்பவில்லை என்று நாங்கள் முடிவு செய்தோம். கூட்டங்களின் நேரங்களைக் குறிக்கும் அடையாளக்குறி ஒன்றில் திங்கள்கிழமை இரவு புத்தக படிப்பு இருப்பதைக் கவனித்தோம். ஆகவே நாங்கள் எங்கள் பைபிள்களை எடுத்துக்கொண்டும், டி-ஷர்ட்டுகளை அணிந்துகொண்டும் திரும்பி வந்தோம். எந்த டி-ஷர்ட்டை அணிய வேண்டும்—எது ஒரு நல்ல சாட்சியாக இருக்கும்—என்று தீர்மானிப்பதற்கு ஒருசில நிமிடங்களை எடுத்துக்கொண்டது நினைவிருக்கிறது. தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே அங்கு சென்றடைந்தோம்; ஒருசில சகோதரர்கள் எங்களை அணுகினார்கள். அவர்கள் கனிவும் சிநேகபான்மையும் உள்ளவர்களாய் இருந்தார்கள். உடனடியாகவே, வெளிப்படுத்துதலைப் பற்றிய ஒரு ஆழ்ந்த கலந்தாலோசிப்புக்கு உள்ளானோம். கூட்டங்களுக்கும் இருக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். வணக்கத்தில் ஒன்றுபடுதல் புத்தகத்தை எங்களுக்குத் தந்தார்கள், ஆகவே நாங்கள் அங்கு அமர்ந்தோம்.a ஒரு சகோதரர் ஜெபத்துடன் படிப்பை ஆரம்பித்தார்.
நாங்கள் உன்னிப்பாகக் கவனித்தோம். முடிக்கும்போது, அவர் சொன்னார்: “இயேசுவின் நாமத்திலே கேட்டுக்கொள்கிறோம். ஆமென்.” நாங்கள் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்தோம். “அவர் சொன்னதை நாம் சரியா கேட்டோமா? அவர் இயேசுவின் நாமத்தில் ஜெபம் பண்ணினார்!” அப்போது எங்கள் கண்கள் திறக்கப்பட்டு, கனத்த செதிள்கள் விழுந்தது போல் இருந்தது. நாங்கள் செம்மையான இருதயமுள்ளவர்களென்றால், கவனித்துக் கேட்பதற்கு இதுவே சமயமாக இருந்தது. வணக்கத்தில் ஒன்றுபடுதல் என்ற புத்தகத்தில் 21-ம் அதிகாரத்திற்குத் திருப்பும்படி அந்த சகோதரர் சொன்னார்; அது இயேசுவைப் பற்றியும் உலகின் எவ்வித பாகமாகவும் இல்லாமல் இருப்பதையும் பற்றியது. அதைவிட சிறந்ததோர் படிப்பில் நாங்கள் பங்கெடுத்திருக்க முடியாது. அது இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியம், கடைசி நாட்கள், நடுநிலை வகிப்பு ஆகியவற்றைப் பற்றி இருந்தது. நாங்கள் அறிந்திராத அநேக குறிப்புகளின் பேரில் இளைஞர்கள் குறிப்பு சொல்வதைக் கேட்டோம். மீண்டும், கூட்டத்தை முடிக்கும்போதும், அந்த சகோதரர் இயேசுவின் நாமத்திலே ஜெபம் செய்தார்!
நாங்கள் ஆவிக்குரியவிதத்தில் போஷிக்கப்படுகிறோம்
சத்தியத்திற்கான தாகத்துடன் நாங்கள் அந்த மன்றத்திற்குள் நுழைந்தோம்; அங்கேதான் சத்தியம் இருந்தது, ஒருபோதும் தொலைவில் அல்ல. நாங்கள் ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்பட்டோம் என்பதை அறிந்தவர்களாக அங்கிருந்து திரும்பினோம்; மீண்டும் ஒரு சர்ச்சுக்குள் நாங்கள் ஒருபோதும் நுழையவில்லை. அடுத்த நாள் இரவு, ஒரு லாண்ட்ரோமாட்டில் சலவை செய்ய சென்றபோது, சோடா மஷின் ஒன்றின் அருகே காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் பெருங்குவியலை—குறைந்தது 150-ஆவது இருப்பதை—கவனித்தோம். முன்னொருபோதும் நாங்கள் அதை வாசித்திருக்க மாட்டோம், இப்போதோ எத்தனையோ பொருட்களில் அக்கறையுள்ளவர்களாய் நாங்கள் அவற்றை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றோம்.
அவற்றில் ஒரு கட்டுரை இவ்வாறு கேட்டது, “நீங்கள் திரித்துவத்தை நம்புகிறீர்களா?” மற்றொன்று, “உண்மையிலேயே நரகமென்று ஒன்று இருக்கிறதா?” ஒரு விழித்தெழு!-வில் சிலைகளைப் பற்றி ஒரு கட்டுரை இருந்தது. அன்றிரவு, ஸ்டீவ், திரித்துவத்தைப் பற்றியதை வாசித்து, அதிகமான ஆராய்ச்சி செய்து, எல்லா வசனங்களையும் எடுத்துப் பார்த்து, தான் படித்த காரியங்களின் காரணமாக நள்ளிரவு 12:30-க்கு ஸ்காட்டை எழுப்பினார். அதற்கடுத்த நாள், புதன்கிழமை, வேலை நேரத்திற்குப் பின், நரகத்தைப் பற்றிய கட்டுரையை ஸ்டீவ் வாசித்தார். யோவான் 11:11-ல், லாசரு நித்திரையடைந்திருந்ததாக இயேசு சொன்னதைக் குறித்து அது நியாயவாதம் செய்தது. ஸ்டீவ், ஸ்காட்டை பார்த்தபோது, அவர் சொன்னார்: “எரிநரகம் ஒன்று இருப்பதாக என்னுடைய பைபிள் போதிக்கவில்லை.” சிலைகள் மற்றும் பல வகையான சிலுவைகளைப் பற்றிய விழித்தெழு!-வை வாசித்த பிறகு, நாங்கள் எங்களுடையவற்றை குப்பைபோடும் ட்ரக்கில் தூக்கியெறிந்துவிட்டு, அவை கொண்டுசெல்லப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, திருப்தியுடன் தலைகளை அசைத்துக்கொண்டு, புன்முறுவல் செய்தோம். மிகவும் விசேஷித்த ஒன்றை—சத்தியத்தை—நாங்கள் கண்டடைந்துவிட்டோம் என்று அறிந்தோம்.
ஒரு நாள் கழித்து, இரண்டு பெட்டிகள் வந்தன. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நரகத்திற்குப் போவீர்கள் என்று சொல்கிற 5,000 துண்டுப்பிரதிகள் அவற்றில் இருந்தன. பைபிள் போதனையின்படி, இந்தத் துண்டுப்பிரதிகளில் பெரும்பாலானவை சரியானவை அல்ல என்று நாங்கள் இப்போது அறிந்திருந்தோம். சற்று குழம்பியவர்களாய், நாங்கள் மீண்டும் திங்கள்கிழமை இரவு, புத்தகப் படிப்பிற்குச் சென்றோம்; எங்கள் துண்டுப்பிரதிகளில் பலவற்றையும் எடுத்துச் சென்றோம். நாங்கள் கேட்டோம், “இந்த துண்டுப்பிரதி சரியானதா?” ஓரிரவு நாங்கள் அவை அனைத்தையும் சோதித்துப் பார்த்தோம். சீக்கிரத்தில் துண்டுப்பிரதிகளின் குவியல் ஒன்று தரையில் கிடந்தது, அவற்றில் ஒன்றுகூட பைபிள் போதனைக்கு இசைவானதாக இருக்கவில்லை. நாங்கள் அவை அனைத்தையும் தூக்கியெறிந்தோம். நாங்கள் புதிதாகக் கண்டறிந்த விசுவாசம், எங்களுடைய மற்றும் நாங்கள் யாருக்குப் பிரசங்கித்தோமோ அவர்களுடைய ஜீவனைக் குறித்தது என்று அறிந்திருந்தோம். எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் பைபிளைப் படிப்பதற்காக இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று விரும்பினோம்.
நாங்கள் அலாஸ்காவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கு முதல் கூட்டத்திற்குச் சென்றபோது, எங்களுடன் தினமும் படிக்க முடியுமா என்று ஒரு மூப்பரிடம் கேட்டோம். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் நாங்கள் கேட்டுக்கொண்டதைக் கேட்டார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் நல்ல முன்னேற்றமடைந்து, என்றும் வாழலாம் புத்தகத்தை முடித்து, இரண்டு நாள் மாநாடுகளில் ஒன்றில் முழுக்காட்டுதல் பெற விரும்பினோம்.* ஆனால் நாங்கள் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. பயனியர் செய்வது எங்களுடைய இலக்காக இருந்தது. எதிர்பாராதவிதத்தில், எங்கள் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனது; நாங்கள் உதவும்படியாக ஃப்ளாரிடாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
ஆவிக்குரிய முதிர்ச்சியினிடமாக முன்னேறுகிறோம்
ஃப்ளாரிடாவில் நாங்கள் சிறந்த முன்னேற்றமடைந்தோம்; வணக்கத்தில் ஒன்றுபடுதல் புத்தகத்தை முடித்தோம், பின்னர் 1987-ல் முழுக்காட்டுதல் பெற்றோம். நாங்கள் முதல்முதலாகத் தொடங்கியதிலிருந்து 11 மாதங்கள் ஆகி இருந்தன. உடனடியாக நாங்கள் ஆறு மாதங்களுக்கு துணை பயனியர்கள் ஆனோம்; பின்னர் ஒழுங்கான பயனியர்கள் ஆனோம். ஒன்றரை வருடங்கள் கழிந்ததும், நாங்கள் இருவரும் உதவி ஊழியர்களாக நியமிக்கப்பட்டோம். நாங்கள் முழுக்காட்டுதல் பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர், புருக்லின் பெத்தேலில் சேவை செய்கிறோம்; அங்கு ஸ்காட் இன்றுவரையாக சேவை செய்துகொண்டும், இரண்டு வருடங்களாக சீன மொழி கற்றுக்கொண்டும் இருக்கிறார். ஸ்டீவ் தற்போது ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார். சத்தியமும் அதற்கான தேடலும் நீதிமொழிகள் 2:1-5-ல் விளக்கப்பட்டிருக்கிற விதமாகவே இருந்ததை நாங்கள் இருவரும் கண்டோம்: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.”
ஸ்டீவ் எப்படி மாஸ்கோவைச் சென்றடைந்தார்
நியூ யார்க்கில் வாழ்ந்துகொண்டிருப்பதால், அங்கு கூடுதலான ஒரு மொழியை அறிந்திருப்பது பிரசங்க வேலையை சுவாரஸ்யமானதாக்கும் என்பதாலும்—யெகோவா ரஷ்யாவுக்கான கதவை சீக்கிரத்தில் திறப்பார் என்றும் நினைத்துக்கொண்டு—நான் ரஷ்ய மொழியைப் படிக்க தீர்மானித்தேன். அந்த சமயத்தில், புருக்லின் பெத்தேலில் சேவை செய்யும்போது நான் ரஷ்ய புத்தக படிப்புக்குச் செல்ல ஆரம்பித்தேன். வெள்ளிக்கிழமைகளில் கூடிவருகிற ரஷ்ய புத்தக படிப்பு ஒன்றே ஒன்றுதான் இருந்தது. காலம் கடந்து சென்றபோது, நான் ரஷ்ய தொகுதியுடன் அதிகம் ஈடுபடலானேன். அவர்களுடைய பிரசங்க வேலையில் நான் சேர்ந்துகொண்டேன்; ரஷ்யர்களின் கனிவின் காரணமாக அது மிகவும் அனுபவிக்கத்தக்கதாக இருந்தது. ரஷ்ய தொகுதிக்கு எனக்கு மாற்றல் தரும்படி சேவை துறைக்கு எழுதி கேட்டேன். அவர்கள் இதற்கு ஒத்துக்கொண்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு நாள், பெத்தேல் காலை வணக்கத்தின்போது, ஒரு விசேஷ அறிக்கை இருக்கும் என்று உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரஸிடென்ட் மில்டன் ஜி. ஹென்ஷல், குடும்பத்திடம் கூறினார். பின்னர் அவர், யெகோவாவின் சாட்சிகள் ரஷ்யாவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் இப்போது நம் சகோதரர்கள் வணக்க சுதந்திரத்தை அனுபவிப்பார்கள் என்றும் அறிவித்தார். அவ்வளவு அருமையான செய்தியைக் கேட்டதும் அன்று காலை நாங்கள் பெற்ற சந்தோஷத்தை பெத்தேலிலுள்ள எவரும் மறக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அந்த பரந்த புதிய பிராந்தியத்தின் பாகமாக இருக்க முடிவது ஒரு பெரிய சிலாக்கியமாக இருக்குமென்று நான் அந்தக் கணம் சிந்தித்தேன்.
ரஷ்யாவில் க்ராஸ்னடாரில் வசிக்கும் வலாட்ய என்ற ஒரு ரஷ்ய சகோதரருடன் நான் தொடர்புகொள்ள ஆரம்பித்தேன். அவர் என்னை ரஷ்யாவுக்கு வரும்படி அழைத்தார். ஆகவே ஜூன் 1992-ல், நான் என் சாமான்களை மூட்டை கட்டிக் கொண்டு, மாஸ்கோவுக்குப் புறப்பட்டேன். அங்கு சென்றடைந்ததும், விமான நிலையத்தில் சகோதரர் வலாட்ய எனக்காகக் காத்துக்கொண்டிருந்ததைக் காண மிகவும் சந்தோஷப்பட்டேன். நான் சகோதரர் ஸ்டிஃபான் லவின்ஸ்கி—45 வருடங்கள் சத்தியத்தில் இருப்பவர்—என்பவருடன் தங்கினேன். மாஸ்கோவில் நான் சந்தித்த முதல் சாட்சி அவரே; சத்தியத்திற்கான அவருடைய நிலைநிற்கைக்காக அவர் அநேக வருடங்கள் சிறையில் செலவிட்டிருந்தார். சகோதரர்களுடைய உபசரிப்பு உண்மையிலேயே சிறந்ததாக இருந்தது.
ஆக நான் இப்போது, மொழியும் அவ்வளவாகத் தெரியாமல் மாஸ்கோவில் இருந்தேன். அப்போது, நான்கு சபைகள் மட்டுமே அங்கிருந்தன; எல்லா சகோதரர்களும் ஒருவரையொருவர் அறிந்திருந்தோம். அப்போதிருந்து, முயன்றுமுயன்று ஒருவழியாக என்னுடைய விசாக்களை நீடித்துக்கொண்டேன். என்னுடைய செலவுகளைச் சமாளிக்க அவ்வப்போது என்னால் வேலை பார்க்க முடிகிறது. பேச்சுத்தொடர்பு கொள்ளுவதற்கும் கூட்டங்களில் ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்படுவதற்கும் போதியளவு ரஷ்ய மொழியை கற்றுக்கொள்வதே மிகப் பெரும்பாடாக இருந்தது. முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது, நான் இன்னும் அதில் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
அநேக மாநாடுகளுக்குச் செல்வதற்கும் ஆச்சரியத்திற்குரிய வளர்ச்சியையும் பேரெண்ணிக்கையானோரின் முழுக்காட்டுதல்களையும் காண்பதற்கும் சிலாக்கியம் பெற்றிருந்தேன். இங்குள்ள நம் சகோதரரின் தூய வைராக்கியத்தைக் காண்பதுதானே விசுவாசத்தை மிகவும் பலப்படுத்தும் ஓர் அனுபவமாக இருந்திருக்கிறது. அதற்குப் பதிலாக வேறு எதையும் நான் மாற்றீடு செய்துகொள்ள மாட்டேன். நான் இங்கு வந்தபோது, அப்போதுதான் படித்துக்கொண்டு இருந்தவர்கள் அல்லது அப்போதுதான் முழுக்காட்டப்பட்டவர்கள் என்பதாக நான் பார்த்தவர்கள், தற்போது முழு நேர ஊழியர்களாக அல்லது உதவி ஊழியர்களாக, அல்லது ரஷ்யாவில், செ. பீட்டர்ஸ்பர்கிலுள்ள ஸோல்நெக்நாயேவில் பெத்தேல் ஊழியர்களாக இருக்கிறார்கள். நான் போகிற சபை, ஆள் கூட்டத்தால் நிறைந்திருக்கிறது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 530 பேர் வருகிறார்கள்; ஒவ்வொரு மாதமும் சராசரியாக, முழுக்காட்டப்படாத 12 புதிய பிரஸ்தாபிகள் சேர்கிறார்கள். கடைசியாக எண்ணிக்கை எடுக்கும்போது, 380 பிரஸ்தாபிகள், 3 மூப்பர்கள், 7 உதவி ஊழியர்கள் இருந்தனர். எங்கள் சபை, 486-க்கு அதிகமான பைபிள் படிப்புகளை அறிக்கை செய்கிறது. பிப்ரவரி 1995-ல், ஊழியப் பேச்சு கொடுக்கும்படி எங்கள் 29 புத்தக படிப்பு தொகுதிகளையும் விஜயம் செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ஒரு வாரத்தில் நான்கு தொகுதிகளை விஜயம் செய்தேன். ஒவ்வொரு மாநாட்டுக்கு முன்னரும், முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களுக்கான கேள்விகளைச் சிந்திப்பதிலும் நாங்கள் மிகவும் அலுவலாக இருப்போம். மே 1995-ல், விசேஷ மாநாட்டு தினத்தைக் கொண்டிருந்தோம்; அதில் எங்கள் சபையிலிருந்து 30 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். மொத்தத்தில், அங்கு சுமார் 10,000 பேர் ஆஜராகி இருந்ததுடன், 607 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். கோடைகால மாவட்ட மாநாட்டில், மொத்தம் 877 பேர் முழுக்காட்டப்பட்டதில் எங்கள் சபையிலிருந்து 24 பேர் இருந்தனர்! எங்கள் சபையில் 13 பயனியர்களையும் 3 விசேஷித்த பயனியர்களையும் கொண்டிருக்கிறோம். அவர்கள் மொத்தமாக சுமார் 110 படிப்புகளை அறிக்கை செய்கிறார்கள்! தற்போது, எங்கள் சபையில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் 132 பேர் இருக்கிறார்கள்.
1995-ல் நினைவு ஆசரிப்பு நாளுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 1,012! எங்கள் சபைக்கு மாடிஷ் என்ற ஒரு போலிஷ் சகோதரரை சொஸைட்டி இப்போது அனுப்பியிருக்கிறது. அவர் ஊழியப் பயிற்சி பள்ளியில் பட்டம் பெற்றவர்; மிகவும் உதவியாக இருப்பார். இப்போது மூன்று மூப்பர்கள் இருக்கிறார்கள். ஆகவே மேலும் ஒரு சபை உருவாக்கப்படும்; எங்கள் பிராந்தியம்—கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்களைக் கொண்டது—இரண்டாகப் பிரிக்கப்படும். இரண்டு சபைகளும், ஒவ்வொன்றிலும் சுமார் 200 பிரஸ்தாபிகளைக் கொண்டிருக்கும். ஒரு சபைக்கு இரண்டு மூப்பர்களும் அடுத்த சபைக்கு ஒரு மூப்பரும் இருப்பார்கள். இன்னொரு மாநாடு வரவிருக்கிறது; ஆகவே அப்போது முழுக்காட்டுதலுக்கு தயாராகும் 44 பேருடன் நாங்கள் தற்போது கேள்விகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். நம்பமுடியாததாகத் தோன்றுகிறது! உண்மையிலேயே ஓர் ஆவிக்குரிய பரதீஸ்! அது ஆச்சரியமூட்டுவதாய் இருக்கிறது! நிஜமாகவே யெகோவா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் அவருடைய ரதம் ரஷ்யாவினூடே விரைவாக முன்னேறிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அக்டோபர் 1995 வரையாக, மாஸ்கோவில் சுமார் 40 சபைகள் இருக்கின்றன. போதுமான மூப்பர்கள் இருந்தால் சுலபமாக அது இரட்டிப்பாகும்.
எங்கள் சந்தை ஊழிய நாட்கள் கடந்த காலமாகிவிட்டன. ஸ்காட் புருக்லின் பெத்தேலில் இருக்கிறார், மாஸ்கோவிலுள்ள சபைகளில் ஒன்றில் ஸ்டீவ் ஒரு மூப்பராக இருக்கிறார்—கடவுள் தம்மைக் கண்டுகொள்வதற்கு எங்களை அனுமதித்ததற்காக நாங்கள் இருவரும் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இன்னும் லட்சக்கணக்கானோர் அவரைத் தேடவும் அவர்கள் தம்மைக் கண்டுகொள்வதற்கு கடவுள் அனுமதிக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம்.—ஸ்காட் மற்றும் ஸ்டீவ் டேவிஸ் சொன்னபடி.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 12-ன் படம்]
ஸ்காட்
[பக்கம் 13-ன் படம்]
ஸ்டீவ்
[பக்கம் 14-ன் படம்]
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 530 பேருக்கும் அதிகமானோர் மாஸ்கோவிலுள்ள ஒரு சபைக்கு கூடிவருகிறார்கள்