மாஸ்கோ—நிலைத்திருக்கும் ஒரு நகரம் அதன் 850-வது ஆண்டுவிழா
என்னிடம் வாரும், மாஸ்கோவிற்கு வாரும், என் அன்பரே.” 1147-ம் ஆண்டில் யூர்யே டல்கரூக்கி என்பவர் உடன் ஆட்சியாளருக்கு இந்த அழைப்பை விடுத்தார்; சரித்திர பதிவுகளிலேயே இதில்தான் முதன்முறையாக மாஸ்கோ ஒருவேளை குறிப்பிடப்பட்டிருக்கலாம். 850 வருடங்களுக்கு முந்திய அந்த நாள், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ தோன்றிய நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது; அதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அங்கு ஒரு சிறு கிராமம் இருந்ததாக புதைபொருள்கள் சான்றளிக்கிறபோதிலும் அத்தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மாஸ்கோவின் 850-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, நகரின் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்—அரங்குகள், தியேட்டர்கள், சர்ச்சுகள், இரயில் நிலையங்கள், பூங்காக்கள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவை—புதுப்பிக்கப்பட்டு பொலிவூட்டப்பட்டன. என்னே ஓர் அற்புத மாற்றம்! “முழு வளாகங்களே அடையாளம் தெரியாதபடி மாறிவிட்டன” என மாஸ்கோ நகரத்துப் பெண் ஒருவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதத்தில் மாஸ்கோவிற்குச் சென்றிருந்தபோது, நகரின் சென்டர் ஏரியா முழுவதுமாக, ரெட் ஸ்கொயர் அருகே, வேலையாட்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். வேலை, ராத்திரி பகலாக இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கடைகள், பாதாள ரயில் பாதை, விளக்குக் கம்பங்கள், விற்பனைப் பொருட்கள் என எங்கும் 850-வது ஆண்டுவிழா ஸ்டிக்கர்கள் மயம்; மாஸ்கோ சர்க்கஸுக்கு நாங்கள் சென்றிருந்தபோது அதிலும் ஒரு நிகழ்ச்சி இவ்விழாவை விளம்பரப்படுத்தியது.
செப்டம்பர் மாதத்திற்குள், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் 850-வது விசேஷ ஆண்டுவிழாவிற்காக அங்கு வந்திருந்தனர்; புதுப்பிக்கப்பட்ட மாஸ்கோவின் தோற்றம் கண்களுக்கு அற்புதகரமான விருந்தளித்தது. ஆம், மாஸ்கோ, அதன் காலமெல்லாம் பயங்கரமான கஷ்டங்களை எதிர்ப்பட்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் கடந்துவந்து, இன்று செழித்தோங்குகிறது.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், பைபிளில் “அர்மகெதோன்” என குறிப்பிடப்பட்டிருப்பதோடு சம்பந்தப்பட்ட “யுத்தத்தை” பற்றி ஒரு பைபிள் வல்லுநர் விமர்சிக்கையில், மாஸ்கோவின் சரித்திரத்தில் இடம்பெற்ற கஷ்டகாலம் ஒன்றை மனதில் வைத்தே குறிப்பிட்டிருப்பார் என தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) அர்மகெதோன் மாஸ்கோவில் நிகழும் என சிலர் சொல்லிக்கொண்டதாய் குறிப்பிட்டார்; ஆனாலும் அவர்தாமே அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. a
சிலர் ஏன் அவ்வாறு கருதினர்? மாஸ்கோவின் ஆர்வமிக்க, பெரும்பாலும் சோகம் நிறைந்த சரித்திரக் கதையைக் கேளுங்கள்.
ஆரம்ப காலங்களில் பிழைக்கிறது
மாஸ்கோ, முக்கிய நதிகள் (ஓகா, வால்கா, டான், நீப்பர்) சூழ அமைந்திருக்கிறது; அதுமட்டுமின்றி முக்கிய சாலைகளோடும் இணைக்கப்பட்டுள்ளது; இவ்வாறு அது பகைவரிடமிருந்து பாதுகாப்பாயுள்ள ஒரு சந்திப்பிடத்தில் அமைந்துள்ளது. டல்கரூக்கி அரசர், “மாஸ்கோ நகருக்கு அடிக்கல் நாட்டினார்” என 1156-ன் ஆண்டுக்கணிப்பு அறிக்கை செய்கிறது; மண்மேடுகளைக் கட்டி, அதன்மீது மர மதில் அமைத்து இவ்வாறு முதல் பாதுகாப்பு அரண்களை அவர் உண்டாக்கினார் என்பதை இது அர்த்தப்படுத்துவதாய் தோன்றுகிறது. இந்தக் க்ரெம்லின் அல்லது கோட்டை, மாஸ்க்வா நதிக்கும் நெக்ளினாயா என்ற உபநதிக்கும் இடையேயுள்ள முக்கோண வடிவ நிலத்தில் அமைந்திருந்தது.
சோகம் என்னவெனில், வெறும் 21 வருடங்களிலேயே, அருகிலிருந்த ரியாஜன் நகரின் அரசர், “மாஸ்கோவிற்கு எதிராக படையெடுத்துவந்து அந்த முழு நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.” மாஸ்கோ திரும்ப கட்டப்பட்டது; ஆனால் டிசம்பர் 1237-ல், புகழ்பெற்ற ஜெங்கிஸ் கானின் பேரனான பாட்டூ கான் தலைமையில், மங்கோலியர்கள் மாஸ்கோவைக் கைப்பற்றி, மீண்டும் அதை எரித்துத் தரைமட்டமாக்கினர். மங்கோலியர்கள் 1293-ல் இந்நகரை சூறையாடவும் செய்தனர்.
ஒவ்வொரு பலத்த அடியையும் மாஸ்கோ தாங்கியிருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? 1326-ல் அந்நகரம் ரஷ்யாவின் மத மையமாகவும் திகழ்ந்தது; ஏனெனில், அவ்வருடத்தில் மாஸ்கோவின் அரசரான ஐவான் காலிட்டா, ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவரை மாஸ்கோவில் வாழும்படி சம்மதிக்கவைத்தார்.
இறுதியில், மகா ஐவானின் ஆட்சிக் காலத்திற்குள் (1462-லிருந்து 1505 வரை), மாஸ்கோ மங்கோலியர்களிடமிருந்து விடுதலை பெற்றிருந்தது. 1453-ல், கான்ஸ்டன்ட்டிநோபிள் நகரை (இப்போது இஸ்தான்புல்) துருக்கியர்கள் கைப்பற்றினர்; அதன் காரணமாக, உலகிலேயே ரஷ்ய ஆட்சியாளர்கள் மட்டும்தான் ஆர்த்தடாக்ஸ் மன்னர்களாய் இருந்தார்கள். ஆக மாஸ்கோ, “மூன்றாம் ரோம்” என்ற பெயர்பெற்றது; ரஷ்ய மன்னர்கள், சார்கள் அல்லது சீசர்கள் என அழைக்கப்பட்டனர்.
மகா ஐவானின் ஆட்சியினுடைய முடிவில், கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்கு கடற்பிரயாணம் செய்துகொண்டிருந்த சமயம், க்ரெம்லின் பெரிதாக்கப்பட்டது; செங்கற்களாலான மதில்களும் கோபுரங்களும் கட்டப்பட்டன; அவை இன்றுவரை கிட்டத்தட்ட அதே வடிவில் அழியாது காணப்படுகின்றன. மதில்களின் நீளம் இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகம், அவற்றின் பருமன் சுமார் 6 மீட்டர், உயரம் 18 மீட்டர்; கிட்டத்தட்ட 70 ஏக்கர் பரப்பளவுள்ள க்ரெம்லின் பகுதியை அவை சூழ்ந்திருக்கின்றன.
1500-ன் மத்திபத்திற்குள்ளாக, மாஸ்கோ லண்டனைக் காட்டிலும் பெரிதாகிவிட்டதாய் சொல்லப்பட்டது; இது ஒருவேளை உங்களை ஆச்சரியப்படுத்தலாம். அதன்பின், ஜூன் 21, 1547-ல் விபரீதச் சம்பவம் நிகழ்ந்தது; அந்நகரம் தீக்கிரையாகி, கிட்டத்தட்ட அனைவரும் வீடுகளை இழந்தனர். இன்னொரு முறை, திறன்மிக்க நகரத்தினர் மாஸ்கோவை திரும்பக் கட்டினர். இம்முறை செ. பசில்ஸ் கத்தீட்ரலையும் அவர்கள் கட்டினார்கள்; அது காஸான் நகரத்து தார்தாரியர்களை அல்லது மங்கோலியர்களை வென்று வெற்றி வாகை சூடியதை கொண்டாடுவதற்காக கட்டப்பட்டது. இன்றும்கூட ரெட் ஸ்கொயரிலுள்ள இந்தத் தலைசிறந்த கட்டடம் (1561-ல் முடிக்கப்பட்டது) மாஸ்கோவின் சின்னமாக பரவலாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, 1571-ல், கிரீமிய மங்கோலியர்கள் மாஸ்கோவினுள் புகுந்து, அதைக் கைப்பற்றி, பேரளவு சேதத்தை ஏற்படுத்தினர். க்ரெம்லினைத் தவிர கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர்கள் எரித்து சாம்பலாக்கினர். நகரில் வசித்த 2,00,000 மக்களில் வெறுமனே 30,000 பேரே தப்பிப்பிழைத்ததாக பதிவுகள் காட்டுகின்றன. “மாஸ்கோ நதியில் அந்தளவுக்கு பிணங்கள் குவிந்ததால் அது வேறுபக்கமாக திருப்பிவிடப்பட்டது; மைல்கணக்கில் இரத்தம் வெள்ளமாக ஓடியது” என ரஷ்யாவின் தோற்றம்-ல் (ஆங்கிலம்) டைம்-லைஃப் புத்தகங்களின் பதிப்பாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
திரும்பவும் மாஸ்கோவை புதுப்பிக்க வேண்டியதாயிற்று. அவ்வாறே செய்யப்பட்டது! க்ரெம்லினுக்கு புறம்பே, கிட்டை காரட் (Kitai Gorod), வைட் சிட்டி (White City), உவுட்டன் சிட்டி (Wooden City) என்ற பகுதிகளை உள்ளடக்கும் அடுத்தடுத்த மதில்கள் ஏற்படுத்தப்பட்டு, இவ்வாறு நகரம் விரிவாக்கப்பட்டது. இன்றும் மாஸ்கோவில் அதே வட்ட வடிவமைப்பு காணப்படுகிறது; மதில்களுக்குப் பதிலாக வளைவு சாலைகள் க்ரெம்லினைச் சூழ்ந்துள்ளன.
இச்சமயத்தில், மகா ஐவானின் பேரனான அச்சந்தரும் ஐவானின் கொடுங்கோல் ஆட்சியால் மாஸ்கோ நகரத்து மக்கள் கடுந்துயரை அனுபவித்தனர். அதன்பின் 1598-ல், அச்சந்தரும் ஐவானின் மகனும் அவருக்கு பின்வந்த அரசருமான ஃபையாடர் வாரிசின்றி காலமானார். அப்போதுதான் “தொல்லைகள் நிறைந்த காலம்” ஆரம்பமானது; அது “ரஷ்ய சகாப்தத்திலேயே அதிகக் கலவரம் நிறைந்த மிகக் குழப்பமான காலக்கட்டம்” என ரஷ்யாவின் தோற்றம் என்ற புத்தகம் சொல்கிறது. அது சுமார் 15 வருடங்களுக்கு நீடித்தது.
பெரும் நெருக்கடியை சமாளித்தல்
ஃபையாடரின் மச்சானான பரிஸ் கோடுனாவ் மன்னராக பதவியேற்று சிறிது காலத்திற்குள்ளாகவே, மாஸ்கோ கடும் வறட்சியினாலும் பஞ்சத்தினாலும் அவதிப்பட்டது. 1602-ல் ஏழு மாத காலப்பகுதி ஒன்றின்போது 50,000 பேர் இறந்ததாக அறிக்கையிடப்பட்டது. 1601-க்கும் 1603-க்கும் இடைப்பட்ட காலத்தில், மொத்தம் 1,20,000-க்கும் அதிகமானோர் மடிந்தனர்.
அந்தத் துயரச் சம்பவத்தைப் பின்தொடர்ந்து, அச்சந்தரும் ஐவானின் மகன் திமித்திரி இளவரசன் என தன்னைச் சொல்லிக்கொண்ட ஒரு ஆள், போலந்து படைவீரர்களின் உதவியைக்கொண்டு ரஷ்யாவின்மீது படையெடுத்தான். உண்மையில், அசல் திமித்திரி 1591-ல் கொல்லப்பட்டதாக அத்தாட்சி காண்பிக்கிறது. 1605-ல் கோடுனாவ் திடீரென இறந்துவிட்டபோது, போலி திமித்திரி மாஸ்கோவில் நுழைந்து சார் மன்னராக அரியணை ஏறினான். வெறுமனே 13 மாதங்கள் ஆட்சி நடத்திய பிறகு அவன் எதிராளிகளால் கொல்லப்பட்டான்.
வேறுபல போலிகளும் அரியணையேற போட்டியிட்டனர். இரண்டாவது போலி திமித்திரியும் இதில் அடங்குவான்; அவனும் போலந்தின் ஆதரவைப் பெற்றிருந்தான். சூழ்ச்சியும் உள்நாட்டுப் போரும் கொலையும் அதிகரித்தன. போலந்தின் அரசரான மூன்றாம் சிகஸ்மண்ட் வாசா, 1609-ல் ரஷ்யாவின்மீது படையெடுத்தார்; சிறிது காலத்திற்குப் பின் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது; அது அவரது மகனான நான்காம் வ்ளாடிஸ்லாஃப் வாசாவை சார் மன்னராக அறிவித்தது. 1610-ல் போலந்து படையினர் மாஸ்கோவிற்குள் நுழைந்தனர்; அப்போது அந்நகரம் போலந்தின் அதிகாரத்திற்குள் வந்தது. ஆனால், விரைவில் ரஷ்யர்கள் போலந்து படையினருக்கு எதிராக ஒன்றுதிரண்டு, 1612-ன் முடிவிற்குள் அவர்களை மாஸ்கோவிலிருந்து விரட்டியடித்தனர்.
தொந்தரவுகள் நிறைந்த இந்தக் கொடிய காலங்களின்போது, மாஸ்கோ, ‘மைல்கணக்கில் முட்செடிகளும் களைகளும் ஏராளமாய் காணப்பட்ட பொட்டல் நிலமாய்’ மாறியது; ‘சாலைகள் இருந்ததற்கான அடிச்சுவடே தெரியவில்லை.’ உவுட்டன் சிட்டியின் மதில் தீயினால் சாம்பலாகியிருந்தது, மேலும் க்ரெம்லின் கட்டடங்கள் பழுதடைந்திருந்தன. “அதுவே மாஸ்கோ நகரின் பயங்கரமான விபரீத முடிவாய் இருந்தது” என வருகைதந்திருந்த ஸ்வீடன் நாட்டுத் தூதர் ஒருவர் சொன்னார். இருந்தபோதிலும் அவர் நினைத்தது தவறாகிவிட்டது.
ரோமனாவ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 1613-ல் ரஷ்ய சார் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; ரோமனாவ் சார் மன்னர்களின் இந்தப் புதிய ஆட்சியே அடுத்த முந்நூறு ஆண்டுகளுக்கு நீடித்தது. அறிக்கையின்படி, சேதத்தின் காரணமாக புதிய சார் மன்னராகிய இளம் மைக்கேலுக்கு “வாழ இடமில்லாத” ஒரு நிலை நிலவியபோதிலும், மாஸ்கோ திரும்பவும் கட்டப்பட்டு மீண்டும் உலகின் மாநகரங்களில் ஒன்றானது.
1712-ல், சார் மன்னராகிய, மைக்கேலின் பேரனான மகா பீட்டர், ரஷ்யாவின் தலைநகரை மாஸ்கோவிலிருந்து செ. பீட்டர்ஸ்பர்க்குக்கு மாற்றினார்; அவர் அதை பால்டிக் கடலையொட்டி கட்டியிருந்தார். ஆனால் மாஸ்கோ தொடர்ந்து ரஷ்யாவின் ஆருயிர் “இதயமாக” விளங்கிற்று. உண்மையில், பிரெஞ்சு அரசரான நெப்போலியன் போனப்பார்ட், வெற்றி வாகை சூடும் நோக்கோடு இவ்வாறு சொன்னதாக அறிக்கை செய்யப்பட்டது: ‘நான் பீட்டர்ஸ்பர்க்கை கைப்பற்றினால், ரஷ்யாவின் தலையைப் பிடித்துவிடுவேன், மாஸ்கோவைக் கைப்பற்றினால் அதன் இதயத்தையே நொறுக்கிவிடுவேன்.’
நெப்போலியன் மாஸ்கோவைக் கைப்பற்றியது என்னவோ உண்மை, ஆனால் சரித்திரம் காண்பிக்கிறபடி, நொறுங்கியது அவரது இதயம்தான், மாஸ்கோ அல்ல. மாஸ்கோவில் நடந்தவை அந்தளவுக்கு பயங்கரமானவையாய் இருந்ததால், அதுவே, சிலர் அந்நகரை அர்மகெதோனோடு சம்பந்தப்படுத்திப் பேசும்படி செய்தது.
மாஸ்கோ இடிபாடுகளிலிருந்து எழுகிறது
1812-ம் ஆண்டு இளவேனிற்காலத்தில், நெப்போலியன் தன்னுடைய ராணுவத்தோடு ரஷ்யாவின்மீது படையெடுத்தார்; அந்த ராணுவ படை சுமார் 6,00,000 பேர்கொண்டதாய் அதிகரித்திருந்தது. ரஷ்யர்கள், “எல்லாவற்றையும் தீக்கிரையாக்கும்” கொள்கையைக் கையாண்டு, எதிராளிக்கு எதையும் விட்டுவைக்காமல் பின்வாங்கினர். இறுதியில், வெறுமையாக்கப்பட்ட மாஸ்கோவை பிரெஞ்சு படையினருக்கு விட்டுச்செல்ல அவர்கள் தீர்மானித்தனர்!
மாஸ்கோ மக்கள், பிரெஞ்சு படை தங்கள் நகரை கைப்பற்றுவதைவிட தாங்களே அதைத் தீவைத்துவிடுவது மேல் என கருதி அவ்வாறு செய்தனர் என அநேக புத்தகங்கள் சொல்கின்றன. “சூறாவளிக் காற்று நெருப்பை அசல் நரகமாக்கியது” என ரஷ்ய சரித்திரப் புத்தகம் ஒன்று அறிக்கை செய்கிறது. பிரெஞ்சு படையினருக்கு உணவோ தீவனமோ கிடைக்கவில்லை; இதை அப்புத்தகம் இப்படி விளக்குகிறது: “பிரெஞ்சு படைக்கு ரஷ்ய மக்கள் ஒரேவொரு மூட்டை மாவையோ ஒரு வண்டி வைக்கோலையோகூட விட்டுவைக்கவில்லை.” வேறு வழியே இல்லாமல், பிரெஞ்சு படையினர் மாஸ்கோவிற்குள் நுழைந்த ஆறு வாரங்களுக்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டனர்; பின்வாங்கிய சமயத்தில் அவர்கள் கிட்டத்தட்ட தங்களது முழு படையையும் இழந்தார்கள்.
மாஸ்கோ நகரத்தினரின் துணிவு அவர்களது மேம்பட்ட நகரத்தைப் பாதுகாத்தது; திடதீர்மானத்தோடு அவர்கள் அதை இடிபாடுகளிலிருந்து எழச் செய்தனர். ரஷ்யாவின் மாபெரும் கவிஞர் என பெரும்பாலும் கருதப்படும் அலெக்ஸான்டர் புஷ்கின் என்பவருக்கு, அவரது பிறந்த ஊரான ஆருயிர் மாஸ்கோவின்மீது நெப்போலியன் படையெடுத்தபோது 13 வயது. மாஸ்கோவைப் பற்றி அவர் இப்படி எழுதினார்: “அந்தப் பெயரைக் கேட்கையில், உண்மை தவறாத ஒவ்வொரு ரஷ்யனுக்கும் என்னே நினைவுகள் பெருக்கெடுக்கின்றன! என்னே ஓர் உரத்த எதிரொலி கேட்கிறது!”
தப்பிப்பிழைத்தலும் செழிப்படைதலும்
1917-ல் ஆரம்பமான ரஷ்ய புரட்சியின்போது மாஸ்கோ அனுபவித்த கொடிய கஷ்ட காலங்களை இன்று வாழும் அநேகர் ஞாபகம் வைத்திருக்கின்றனர் அல்லது சினிமாக்களைப் பார்த்து நினைவுகூருகின்றனர். இருந்தபோதிலும் அந்நகரம் தப்பிப்பிழைத்தது மட்டுமின்றி, செழிப்படையவும் செய்தது. பாதாள ரயில் பாதை கட்டப்பட்டது; மேலும் நகரின் தண்ணீர் வசதிக்காக மாஸ்கோ-வால்கா கால்வாயும் வெட்டப்பட்டது. அடிப்படையில் கல்லாமை ஒழிக்கப்பட்டது; 1930-களின் பிற்பகுதிக்குள் மாஸ்கோவில் ஆயிரத்திற்கும் அதிகமான நூலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரின் முன்னாளைய மேயர், 1937-ல், முன்னேற்றப் பாதையில் மாஸ்கோ என்ற ஆங்கில புத்தகத்தில் இப்படி எழுதினார்: “எந்தப் பெரும் போர்களும் இல்லாதிருந்தால் . . . பத்து ஆண்டுத் திட்டத்தின் முடிவிற்குள், மாஸ்கோ, அனைத்து குடிமக்களுக்கும் ஆரோக்கியத்தையும் வசதிகளையும் வாழ்க்கை நலங்களையும் அளிப்பதில் உலகிலேயே இதுவரை தோன்றியிராத சிறந்த திட்டமைப்புள்ள மகா நகரமாய் விளங்குமளவிற்கு முன்னேறியிருக்கும் என நான் நம்புகிறேன்.”
ஆனால் ஜூன் 1941-ல், எந்தத் தூண்டுதலுமின்றி திடீரென ஜெர்மனி அதன் நட்பு நாடான ரஷ்யாவைத் தாக்கியது; அது ரஷ்யாவுடன் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்து இரண்டு வருடங்கள்கூட முடிந்திருக்கவில்லை. அக்டோபர் மாதத்திற்குள், ஜெர்மானிய படையினர் க்ரெம்லினைப் பிடிப்பதற்கு வெறும் 40 கிலோமீட்டர் தூரமே இருந்தது. மாஸ்கோவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாய் தோன்றியது. மாஸ்கோவின் 45 லட்ச குடிமக்களில் கிட்டத்தட்ட பாதிபேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். சுமார் 500 தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கட்டப்பட்டு, கிழக்கு ரஷ்யாவில் புதிய இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஆனாலும் மாஸ்கோ அழிவை ருசிபார்க்க மறுத்தது. அந்நகரத்தினர் சொல்லர்த்தமாகவே மறைகுழிகள் தோண்டி, அரண் அமைத்து, ஜெர்மானிய படையை விரட்டியடித்தனர்.
மற்ற அநேக ரஷ்ய நகரங்களைப் போலவே மாஸ்கோ பயங்கர துன்பத்தை அனுபவித்தது. “ஒரு நூற்றாண்டிலேயே மாஸ்கோ அந்தளவுக்கு பாடுகளை அனுபவித்திருப்பதால், அது தப்பிப்பிழைத்திருப்பதைப் பார்த்து வாயடைத்து நிற்கிறேன்” என 1930-களிலும் 1940-களிலும் அங்கு வாழ்ந்த ஓர் அமெரிக்க செய்தியாளர் எழுதினார். மாஸ்கோ தப்பிப்பிழைத்து, நவீன உலகின் மிகப் பெரிய, மிக முக்கிய நகரமாக ஆகியிருப்பது உண்மையில் குறிப்பிடத்தக்கது.
இன்று, மாஸ்கோவில் 90 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்; அதன் பரப்பளவு சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் ஆகும்; இவ்வாறு அது நியூ யார்க் நகரைக் காட்டிலும் பெரிய நகரமாகவும் அதிக மக்கட்தொகையுள்ள நகரமாகவும் விளங்குகிறது. க்ரெம்லினைச் சுற்றி அடுத்தடுத்து வளைவு சாலைகள் அமைந்திருக்கின்றன; 100 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திற்கு அமைந்துள்ள மாஸ்கோ ரிங் சாலை, ஓரளவு மாஸ்கோவின் எல்லைக்கோடாக திகழ்கிறது. அகன்ற பெருஞ்சாலைகள், சக்கரத்து கம்பிகள்போல் நகரின் மையத்திலிருந்து பிரிந்துசெல்கின்றன.
எனினும், மாஸ்கோ நகரத்தினரில் பெரும்பாலானோர், நகரின் உயர்தரம்வாய்ந்த பாதாள ரயிலில் பயணம் செய்கின்றனர்; ஒன்பது பாதைகளும் சுமார் 150 நிலையங்களும் அமைக்கப்பட்டு, நகரின் அனைத்து பகுதி மக்களுக்கும் பணிபுரியும்படி அது விரிவாக்கப்பட்டிருக்கிறது. உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா-வின்படி, மாஸ்கோவின் பாதாள ரயில் நிலையங்கள் “உலகிலேயே அதிக அலங்கரிப்பு மிக்கவை” என அழைக்கப்படுகின்றன. சில நிலையங்கள், ஏராளமான சரவிளக்குகளாலும், சிலைகளாலும், வண்ணக் கண்ணாடிகளாலும், பளிங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு மாளிகைகளைப்போல் காட்சியளிக்கின்றன. உண்மையில், முதலில் கட்டப்பட்ட 14 நிலையங்கள் 70,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பளிங்கு பதிக்கப்பட்டிருந்தன; இது, 300 வருட காலத்தில் ரோமனாவினர்கள் கட்டிய மாளிகைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதைக் காட்டிலும் அதிகம்!
நகரம் புதுத் தோற்றத்தைப் பெறுகிறது
கடந்த கோடைக்காலத்தில் நாங்கள் அங்கு சென்றிருந்தபோது, பிரமாண்டமான புதுப்பிக்கும் பணி ஒன்றைப் பார்க்க பாதாள ரயிலில் சென்றோம்; 1950-களில் தென் மாஸ்கோவில் கட்டப்பட்ட, 1,03,000-இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய லெனின் ஸ்டேடியத்தைப் புதுப்பிக்கும் பணிதான் அது. நாங்கள் சென்றபோது புது இருக்கைகளை பொருத்திக்கொண்டிருந்தனர்; வருடம் முழுவதுமாக நிகழ்ச்சிகளை நடத்தும்படி, தேவைக்கேற்ப பிரித்து போடும் கூரை பொருத்தப்பட்ட பின் எப்படி இருக்கும் என நாங்கள் கற்பனைசெய்து பார்த்தோம்.
க்ரெம்லினிலிருந்து ரெட் ஸ்கொயருக்கு எதிரே அமைந்திருந்த புகழ்பெற்ற GUM டிப்பார்ட்மென்ட் ஸ்டோரின் முகப்பு புதிய தோற்றத்தில் அழகாய் காட்சியளித்தது. க்ரெம்லினின் மறுபக்கத்து இயற்கைக் காட்சியில் இப்போது ஓர் ஓடை இடம்பெறுகிறது; முன்பு அங்கு நெக்ளினாயா நதி ஓடியது, கடந்த நூற்றாண்டின்போது அது பாதாளத்தில் பாயும்படி திசை திருப்பப்பட்டது. ஓடைக்கு நேரெதிராக, ரெஸ்டரண்டுகளும் மற்ற கட்டிடங்களும் அடங்கிய ஒரு பிரமாண்டமான பலமாடி பாதாள ஷாப்பிங் சென்டர் கட்டப்பட்டுவந்தது. ஒரு மாஸ்கோ எழுத்தாளர் அதை “ஐரோப்பாவின் மிகப் பெரிய ஷாப்பிங் சென்டர்” என அழைத்து, “அல்லது அப்படித்தான் மேயரின் அலுவலகம் நம்புகிறது” என்றும் சொன்னார்.
க்ரெம்லினுக்கு சற்று அருகே அமைந்திருந்த மற்றொரு ஏரியாவில், பில்டிங் க்ரேன்கள் எங்கும் காணப்பட்டன, கட்டுமான வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. தோண்டப்பட்ட இடங்களில் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன; ஒரு இடத்தில், 15-லிருந்து 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 95,000-க்கும் அதிகமான ரஷ்ய மற்றும் மேற்கு ஐரோப்பிய நாணயங்களின் ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது.
சர்ச்சுகள் புதுப்பிக்கப்பட்டன; சில மீண்டும் கட்டப்பட்டன. ரெட் ஸ்கொயரிலிருந்த ‘அவர் லேடி ஆஃப் காஸான் கத்தீட்ரல்’ 1936-ல் அழிக்கப்பட்டு, ஒரு பொது கழிப்பறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது; இப்போது அது மீண்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. நெப்போலியன் வெற்றி வாகை சூடியதைக் கொண்டாடுவதற்குக் கட்டப்பட்ட மிகப் பெரிய கத்தீட்ரலான க்ரைஸ்ட் த சேவியர், 1931-ல் மதத்திற்கு எதிராய் நடத்தப்பட்ட கம்யூனிஸ போராட்டத்தின்போது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது; அதன்பின் அவ்விடம் மிகப் பெரிய திறந்தவெளி வெந்நீர் நீச்சல் குளமாக பல வருடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நாங்கள் சென்றிருந்தபோது, அதே இடத்தில் கத்தீட்ரல் மீண்டும் கட்டிமுடிக்கப்படும் தறுவாயில் இருந்தது.
கட்டுமானப் பணிகளை பார்வையிட்டது ஆர்வமூட்டுவதாய் இருந்தது; அதுவும் விசேஷமாக, இவ்வருடத்தின் முடிவில் மாஸ்கோ பெறவிருக்கும் புதிய தோற்றத்தை மனதில் கொண்டவாறே அவற்றைப் பார்வையிட்டபோது நாட்டம் அதிகரித்தது. ஆனாலும், மாஸ்கோவில் எங்களை மிகவும் கவர்ந்தது அங்கு வசித்த மக்களே. “மாஸ்கோ மக்களின் இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கும் குணமாகிய நட்புறவால் வருகையாளர்கள் திக்குமுக்காடிப்போகிறார்கள்” என மாஸ்கோ நிருபர் ஒருமுறை குறிப்பிட்டார். அது நிஜம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்; அதுவும் முக்கியமாக, ஒரு சிறிய சமையலறை திட்டைச் சுற்றி நின்றுகொண்டு, ஒரு ரஷ்ய குடும்பத்தாரின் அன்பையும் உபசரிப்பையும் அனுபவிக்கையில் அவ்வாறு உணர்ந்தோம்.
அநேக மாஸ்கோ நகரத்தினர் அர்மகெதோனின் உண்மையான அர்த்தத்தை கற்றிருப்பதைக் கண்டதும் சந்தோஷமளித்தது; அதாவது, அர்மகெதோன் என்பது கடவுள் கொண்டுவரவிருக்கும் ஒரு யுத்தம்; அது முழு பூமியை சுத்திகரிக்கும்; அதன்பின் கடவுளை உண்மையாய் நேசிப்போர், தப்பெண்ணங்களுடனும் சந்தேகத்துடனும் அல்ல, ஆனால் புரிந்துகொள்ளுதலுடனும் நம்பிக்கையுடனும், ஒருவரையொருவர் நேசித்து ஒன்றுபட்டு கடவுளை சேவிக்கும் கடவுளின் பிள்ளைகளாக வாழும் ஒரு காலத்தைப் பிறப்பிக்கும். (யோவான் 13:34, 35; 1 யோவான் 2:17; வெளிப்படுத்துதல் 21:3, 4)—அளிக்கப்பட்டது.
[அடிக்குறிப்பு]
a ஆடம் க்ளார்க் என்பவர் எழுதிய பரிசுத்த பைபிளின் உரை, (ஆங்கிலம்), ஒரு-வால்யூம் பதிப்பு, பக்கம் 1349.
[பக்கம் 13-ன் படம்]
மாஸ்கோவின் மிகப் பிரபலமான சின்னங்களாகிய செ. பசில்ஸ் கத்தீட்ரலும் க்ரெம்லின் மதில்களும்
[பக்கம் 15-ன் படம்]
எங்கும், 850-வது ஆண்டுவிழா ஸ்டிக்கர்கள் மயம்
[பக்கம் 16-ன் படம்]
புகழ்பெற்ற GUM டிப்பார்ட்மென்ட் ஸ்டோர், புதிய தோற்றத்தில்
[பக்கம் 16, 17-ன் படம்]
அநேக பாதாள ரயில் நிலையங்கள்
மாளிகைகள்போல் காட்சியளிக்கின்றன
[பக்கம் 17-ன் படம்]
லெனின் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது
[பக்கம் 17-ன் படம்]
க்ரெம்லினுக்கு மறுபக்கத்தில் காணப்படும் புதிய இயற்கை காட்சி
[பக்கம் 18-ன் படம்]
க்ரேன்கள் எங்கும் காணப்பட்டன, கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்றுவந்தது
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
Tass/Sovfoto