மாஸ்கோவின் பளபளப்பான நிலத்தடி அரண்மனைகள்
ரஷ்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
சுரங்கப் பாதை அல்லது மெட்ரோ இருந்த இடத்தை ஊகிப்பது கடினமாக இருக்கவில்லை. நிலத்தடிக்கு கொண்டுவிடும் ஒரு நுழைவாயிலுக்குள் இடைவிடாமல் மக்கள் திரண்டு சென்றவண்ணமாகவே இருந்தனர். நுழைவாயிலுக்கு மேலே M என்ற எழுத்து பிரகாசமான செவ்வொளி விளக்கில் ஒளிவீசிக்கொண்டிருந்தது. நுழைவாயில் கதவுகள் எனக்கு முன்னால் தானாக திறந்துகொண்டன. உள்ளே மக்கள் ஒரு பாதாளத்தில் வேகமாக நுழைந்துகொண்டும் மறைந்துகொண்டும் இருப்பது போன்ற விந்தையான காட்சியை நான் பார்த்தேன். முதலில் நான் தயங்கினேன். பின்னர், என்னுடைய பய உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு நான் பின்தொடர்ந்தேன்.
என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒரு சுரங்கப்பாதையில் இருந்தேன். சாதாரணமான ஒரு சுரங்கப்பாதையில் அல்ல—மாஸ்கோ மெட்ரோ! ஆனால் மனிதன் விண்வெளியில் பயணிக்கவும், அணுவைப் பிளக்கவும், சிக்கலான மூளை அறுவை சிகிச்சையையும்கூட செய்ய முடிகிற ஓர் உலகில், ஒரு சுரங்கப்பாதையைப்பற்றி அப்படி என்ன விசேஷம்?
ஒரு காரியமானது, மாஸ்கோ மெட்ரோ ஒருவேளை உலகிலேயே மிக அழகான சுரங்கப்பாதை என்பதாக நான் கேள்விப்பட்டிருந்தேன். ரஷ்ய முதுமொழி ஒன்று சொல்வது போல, “ஏதோவொன்றைப்பற்றி நூறு தடவைகள் கேட்பதைவிட ஒரே ஒரு முறை உங்கள் சொந்தக் கண்களாலே பார்த்துவிடுவதே மேல்.” கடந்த ஜூலை மாஸ்கோவில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டுக்கு நான் சென்றிருந்தபோது, மெட்ரோவில் பயணம்செய்ய நான் ஆவலாயிருந்தேன்.
அது எவ்விதமாக வந்தது
க்ரெம்லின் சுவர் ஓரமாக ஓடி நகரின் மையத்தைச் சுற்றிவரும் நிலவழிப் போக்குவரத்து அமைப்பு ஒன்றை உருவாக்குவதுபற்றி 1902-ல் ஒரு ரஷ்ய விஞ்ஞானியும் பொறியாளருமான பலின்ஸ்கி என்ற பெயருடையவர் யோசனைத் தெரிவித்தார். ஆனால் மாஸ்கோ நகரின் சட்ட மன்றம் அந்தச் சமயத்தில் இந்த அமைப்பை உருவாக்கும் திட்டங்களை நிராகரித்துவிட்டது. பத்து வருடங்கள் கழித்து சட்ட மன்றம் இக்கருத்து பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தது—ரஷ்யாவில் இதுவே இவ்வகையில் முதலாவதாக இருக்கவிருந்தது—ஆனால் 1914-ல் முதல் உலகப் போர் துவக்கமானது மேலுமான வளர்ச்சியைத் தாமதப்படுத்தியது. இந்த யோசனை 1931-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போதுதான் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மைய குழு தேசத்தின் முதல் நிலத்தடி ரயில்பாதை மாஸ்கோவில் அமைக்கப்பட வேண்டும் என்பதாக ஆணைப் பிறப்பித்தது. இப்படிப்பட்ட பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை மேற்கொள்வதில் ரஷ்யா இவ்விதமாக 11-வது தேசமாகவும் மாஸ்கோ 17-வது நகரமாகவும் ஆனது.
மாஸ்கோவின் தலைநகர் சுரங்கப்பாதை, கட்டுமானப் பணித் துவங்கி மூன்றே வருடங்களில் சுமார் 11 கிலோமீட்டர் இருப்புப்பாதை கொண்ட அதன் முதல் பாதையை 1935, மே 15-ம் தேதி காலை ஏழு மணிக்கு திறந்துவைத்தது. நான்கு ரயில்கள் 13 நிலையங்களில், நாளொன்றுக்கு சுமார் 2,00,000 பயணிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டன. மாஸ்கோ மக்களும் அயல் நாட்டவரும் மிகவும் கவரப்பட்டு போனார்கள். அது அத்தனை புதுமையாக, அத்தனை அசாதாரணமாக இருந்தது! மாலை நேரங்களில் மக்கள் அதன் பயணிகளில் முதலாவதானவர்களாக இருக்கும் பொருட்டு வரிசையில் காத்திருந்தனர். அது பார்ப்பதற்குரிய ஒன்றாக இருந்தது. இன்னும் அவ்வாறே இருக்கிறது.
இந்த அமைப்பு 1935 முதற்கொண்டு 149 நிலையங்களைக் கொண்ட மொத்தம் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கும் ஒன்பது இருப்புப்பாதைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் ஆற்றுப்பாதைகள் உட்பட, மாஸ்கோவிலுள்ள ஏறக்குறைய மற்ற எல்லா பொது போக்குவரத்துகளும் ஏதாவது ஒரு வகையில் மெட்ரோவில் பயணிப்பதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், மாஸ்கோ மக்களால் மெட்ரோ இல்லாமல் வாழ்க்கையை கற்பனைசெய்தும் பார்க்கமுடியாது. இது புரிந்துகொள்ளப்படக்கூடியதே, ஏனென்றால் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய பின்லாந்தின் மக்கள்தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும் 90 லட்சம் பயணிகளை அது ஏற்றிச்செல்கிறது. ஒப்பிடுகையில், லண்டன் மற்றும் நியூ யார்க் நகரின் சுரங்கப்பாதைகள் சேர்ந்து அந்த எண்ணிக்கையில் சுமார் பாதியளவு பயணிகளையே ஏற்றிச்செல்கின்றன.
அருகாமையிலிருந்து நோட்டமிடுதல்
நிலத்தடியில் 20 மாடி கட்டிட ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காண நீங்கள் ஆவலாய் இருக்கிறீர்களா? தானாகவே நகரும் படிக்கட்டு நம்மை விரைவாக கீழே கொண்டுசெல்கிறது. முழு அமைப்பிலும் தானாகவே நகர்ந்து மேலேற்றி கீழிறக்கும் சுமார் 500 படிக்கட்டுகளில் இது ஒன்றாகும், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை எடுத்தால், இது 50 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும். முப்பது டிகிரி சாய்வில் நொடிக்கு அநேகமாக ஒரு மீட்டர் வேகத்தில் இறங்குவது என்னே பரபரப்பூட்டுவதாய் உள்ளது—மற்ற அநேக தேசங்களிலுள்ள தானாகவே நகர்ந்து மேலேற்றி கீழிறக்கும் படிக்கட்டுகளுடையதைவிட சுமார் இரண்டுமடங்கு அதிகமான வேகம்!
நாங்கள் மாயகாஃப்ஸ்கைய நிலையத்தினுள் நுழைந்துவிட்டோம். அதன் கட்டட நிர்மாணக் கலை, ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் இருப்பதைவிட ஓர் அரண்மனையில் இருப்பது போன்றே எங்களை உணரச்செய்கிறது. நாங்கள் உண்மையில் நிலத்தடியில்தான் இருக்கிறோமா என கற்பனைசெய்து பார்ப்பதை கடினமாக உணர்கிறோம். இப்படிப்பட்ட அழகிய கட்டட நிர்மாணக் கலையை நான் நிலத்துக்கு மேலேயே அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன், நிலத்தடியில் அதைவிட குறைவாகவே பார்த்திருக்கிறேன். 1937 மற்றும் 1939 ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட சர்வதேச கட்டட நிர்மாணக் கலை கண்காட்சி இதுவும் உட்பட ஐந்து மாஸ்கோ மெட்ரோ நிலையங்களுக்கு சிறப்புப் பட்டங்களை வழங்கியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. நிச்சயமாகவே எல்லா 149 நிலையங்களுமே மாயகாஃப்ஸ்கையப் போல அரண்மனைமாதிரி இல்லை; புதிதாக இருப்பவற்றில் பெரும்பாலானவை அதிக எளிமையாக—ஆனாலும் மனதை கவருவதாக—ஒவ்வொன்றும் பாணியிலும் வடிவிலும் தன்னிகரில்லாதவையாக இருக்கின்றன.
ஏறக்குறைய எல்லா நிலையங்களுமே ரஷ்ய வரலாற்றைப் பற்றி எதையாவது சொல்வதற்கு கொண்டிருக்கின்றன. சலவைக்கல், செராமிக் மற்றும் கருங்கல் அலங்கரிப்புக்குப் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிலுள்ள 20 வித்தியாசமான பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டன. இவ்விதமாக, ஒரு ஃபோட்டோ கையேடு குறிப்பிடுகிறது: “மாஸ்கோ மெட்ரோவை அமைக்க உதவுவதில் முழு தேசமும் கைகொடுத்தது.” கருங்கல் திடமாக இருப்பதால் தரை அலங்காரத்துக்கு அதிக விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரளான மக்கள் தினந்தோறும் நிலையங்களில் கும்பலாக சாடுவதால் இது முக்கியமானதாகும்.
இந்த நிலத்தடி அரண்மனையின் வனப்புகளை அனுபவித்துக்கொண்டிருக்கையில், இரு பக்கங்களிலும் அதிவேகத்தில் கடந்துசெல்லும் ரயில்களை நாங்கள் கவனிக்கிறோம். நிலையத்திலிருந்து ஒன்று வெளியேறி சுமார் 90 நொடிகள் போல் ஆனப்பிறகு, அடுத்துவந்துகொண்டிருக்கும் ரயிலின் விளக்குகளை ஏற்கெனவே பார்க்கமுடிகிறது. ரயில்கள் எப்பொழுதும் இந்த அளவு அடிக்கடி ஓடுகின்றனவா? வழக்கமாக நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் இவ்வாறு இருக்கின்றன. மற்றபடி அவை மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இடைவேளையில் ஓடுகின்றன.
எங்களுடைய வசதியான ரயில் இருக்கைகளில் நாங்கள் நன்றாக உட்காருவதற்குள் எத்தனை வேகமாக ரயில் அதிவேகமெடுப்பதை நாங்கள் உணருகிறோம். அது சுமார் ஆறு மீட்டர் மட்டுமே விட்டத்தைக்கொண்ட சுரங்கப்பாதையின் வழியாக, சிலசமயங்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் சடசடவென்ற ஒலியோடு செல்கிறது. ஏன், மெட்ரோவின் மொத்த நீளத்தையும் ஒருவர் சுமார் ஆறு மணிநேரங்களில் பிரயாணம்செய்துவிட முடியும்! மாஸ்கோ மக்கள் மெட்ரோவை விரும்புவதற்கு காரணம், பயணிப்பதற்கு அதுவே வேகமான வழிமுறை என்பதால் மட்டுமல்லாமல், அது மலிவானதாகவும் செளகரியமானதாகவும் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டின் போது, மெட்ரோவில் எவ்விடத்துக்கும் பயணிப்பதற்கு அப்போது ஒரு ஐ.மா. சென்டுக்கு சமமான பத்து ரூபிள்களாக இருந்தன.
ரயில்களுக்கிடையிலான இடைவெளி அத்தனை குறுகியதாக இருப்பதன் காரணமாக, ரயில்கள் அத்தனை அதிவேகத்தில் செல்வது எப்படி சாத்தியமாயிருக்கிறது என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். விளக்கம் எளிமையானதாகும். தானியங்கி வேகக் கட்டுப்பாடு அமைப்பு ஒன்று விபத்துக்களைத் தவிர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக ரயில்களுக்கிடையிலான தூரம், அந்த வேகத்தில் ஒரு ரயிலை நிறுத்துவதற்கு தேவையான தூரத்தைவிட ஒருபோதும் குறைவாக இருக்காதபடி பார்த்துக்கொள்ளப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் ஒரு ரயில், முன்னாலிருக்கும் ரயிலிலிருந்து தேவையான நிற்கும் தூரத்தைவிட அருகாமையில் வரும்போது தானாகவே அதன் ப்ரேக்குகளைப் போட ஆரம்பிக்கிறது. கூடுதலாக, முன்னாலிருக்கும் ரயிலிலுள்ள பொறியாளர் அபாய அறிவிப்பொலியால் எச்சரிக்கப்படுகிறார். இந்த அமைப்பு நிச்சயமாகவே பயணப் பாதுகாப்பை வெகுவாக கூட்டுகிறது. மாஸ்கோவிலுள்ள மெட்ரோ பயணிகள் அத்தனை அமைதியாகவும் தளர்ந்த நிலையிலும் காணப்படுவதற்கு காரணம் அதுவாக இருக்குமா? அவர்களில் பெரும்பாலானவர்கள் சேரவேண்டிய இடத்துக்கு பத்திரமாக சேர்ந்துவிடும் தெளிவான நம்பிக்கையோடு வாசித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கின்றனர்.
விளக்குகளும் காற்றும்
ஒவ்வொரு அதிகாலையும், ஆயிரக்கணக்கான மின் மோட்டார்கள் விர் என்ற ஒலியோடு சுழலவும் லட்சக்கணக்கான விளக்குகள் ஒளிவிடவும் ஆரம்பிக்கின்றன. அப்போது, ஜனநெரிசலுள்ள நிலத்தடி அரண்மனைகளுக்குள் இடுங்கிய வழியே பல லட்சக்கணக்கானோர் இழைந்து செல்ல ஆரம்பிக்கின்றனர். அங்கு, நாள்முழுவதும் சுமார் 3,200 சுரங்கப்பாதை வண்டிகளின் கதவுகள் மாறி மாறி திறந்து மூடிக்கொண்டிருக்கும். இவை அனைத்துமே பேரளவான மின் ஆற்றலால் சாத்தியமாகிறது.
இந்தச் செயல்கள் உருவாக்கும் பேரளவான வெப்பத்தில் ஒரு பகுதி சுற்றியுள்ள நிலத்தினால் உட்கிரகித்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் சுரங்கப்பாதைகளையும் நிலையங்களையும் அளவுக்கு அதிகமாக வெப்பமூட்டக்கூடிய மிஞ்சியிருக்கும் வெப்பத்தைப் பற்றி என்ன? ஆம், அரண்மனைகளுக்கு பொருத்தமாகவே, ஒவ்வொரு நிலையமும் காற்றோட்ட அமைப்பால் சீர்காப்பு செய்யப்படுகிறது. இது மணிக்கு நான்கு முறைகள் காற்றை முழுவதுமாக புதுப்பிக்கிறது. மெட்ரோ எத்தனை நெரிசலாக இருந்தாலும், தூய்மையான காற்று எப்போதும் கிடைக்கிறது. உண்மையில் மாஸ்கோ மெட்ரோவிலுள்ள காற்றோட்ட அமைப்புமுறை உலகிலேயே மிகச் சிறந்ததாக அநேகரால் கருதப்படுகிறது.
என்றாலும் குளிர்காலத்தின் போது, இந்த வெப்பம் பிரயோஜனமாய் இருக்கிறது. நிலத்துக்கு மேலே அமையப்பெற்றிருக்கும் கட்டடங்களுக்கும் நுழைவாயில்களுக்கும் தவிர, வெப்பமூட்டும் அமைப்பு தேவையில்லை. ரயில்கள், மக்கள் கூட்டம், நிலம்தானேயும் இளவேனிற்காலத்திலும் கோடைகாலத்திலும் வெப்பத்தை சேமித்து வைத்திருப்பதால், நிலத்தடி அரண்மனைகளை செளகரியமான அளவு அனலாக வைத்திருப்பதற்கு தாராளமாக வெப்பத்தை வெளியேற்றுகின்றன.
எல்லா பக்கங்களிலிருந்தும் பாராட்டு
எதிர்பார்க்கப்படும் விதமாகவே, படங்கள் மூலம் விளக்கப்படும் மெட்ரோ கையேடு சிறுபுத்தகம் கட்டிலடங்கா உணர்ச்சியோடு பாராட்டுகிறது: “மாஸ்கோவின் மெட்ரோ உலகிலேயே மிக அழகானதாக சரியாகவே கருதப்படுகிறது, அரண்மனைப் போன்ற அதன் நிலையங்கள் அவற்றின் சிக்கலான இருப்புப்பாதை பின்னல்வலை, மின்சார கம்பிகளின் அமைப்பு, குழாய்கள் மற்றும் பாதாள கம்பிகள் ஆகியவை மிகச் சிறந்த கைவண்ண முயற்சியும் பொறியியல் புத்திநுட்பமும் உண்மையிலேயே கருத்தை ஈர்க்கும் வகையில் இணைந்திருப்பதைக் காட்டுகின்றன. நிலையங்கள் என்பதைவிட இவை ஈடற்ற நேர்த்தியும் கவர்ச்சியுமுள்ளவையாக சலவைக்கல், கருங்கல், உருக்கு இரும்பு மற்றும் தளம் பாவுதல் மூலமாக ரசனையோடு அலங்கரிக்கப்பட்ட கட்டட நிர்மாணக் கலையின் தலைசிறந்தப் படைப்புகளாக இருக்கின்றன. புதுமையான வடிவமைப்பின் ஒளியூட்டுதல், செதுக்குகலை, பல துண்டுகளை இணைத்து செய்யப்பட்ட சித்திரவேலைப்பாடு, உருக்கி வார்த்தல், அடைப்புப் பலகை, புதுவண்ணச் சாயம்கொண்ட கண்ணாடி மற்றும் புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்துருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு ஆகியவை இவற்றைத் தூக்கி எடுத்துக்காட்டுகின்றன.” சிற்பிகள் உட்பட “தேசத்தின் மிகச் சிறந்த கட்டட கலைஞர்களும் ஓவியர்களும் கட்டடத்தின் அமைப்பிற்கும் அலங்கரிப்புக்கும் பங்களித்திருக்கிறார்கள்.”
இப்பொழுது மாஸ்கோவுக்குச் சென்று மெட்ரோவை நேரில் பார்த்தபிறகு, நான் இதை ஒப்புக்கொள்வேன். மாநாட்டுக்கு வந்திருந்த என்னுடைய உடன் பிரதிநிதிகள் பலரும்கூட மனம் கவரப்பட்டனர். ஜெர்மன் நாட்டவர் ஒருவர் என்னிடம் சொன்னார்: “அழகான கொத்து விளக்குகள் கொண்ட இசைநிகழ்ச்சி நடைபெறும் ஓர் மண்டபத்திற்குள் நுழைந்திருப்பது போல நான் உணர்ந்தேன். நான் மகிழ்ந்து பரவசமடைந்தேன்.” ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்திருந்த ஒரு பார்வையாளர், மெட்ரோவின் நேரந்தவறாமை, சுத்தம் மற்றும் சிறப்பாக காரியங்களைச் செய்யும் திறமையால் கவரப்பட்டார். தூர சைபீரியாவிலிருந்து வந்த மாநாட்டுப் பிரதிநிதி ஒருவர் நிலத்தடி கட்டட அமைப்புகளின் பிரமாண்டமான பரிமாணத்தையும் அளவையும் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
எப்போதாவது நீங்கள் மாஸ்கோ செல்ல நேரிட்டால், இந்தப் பளபளப்பான நிலத்தடி அரண்மனைகளைப் பார்க்கச் செல்லும்படி நான் உங்களைத் துரிதப்படுத்துவேன். நினைவிருக்கட்டும்: “ஏதோவொன்றைப்பற்றி நூறு தடவைகள் கேட்பதைவிட ஒரே ஒரு முறை உங்கள் சொந்தக் கண்களாலே பார்த்துவிடுவதே மேல்.”
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
மாஸ்கோவின் அழகிய சுரங்கப்பாதை நிலையங்களில் ஒருசில