தேக ஆரோக்கியமும் சுற்றுச்சூழலும்
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
உலகம் முழுவதுமாக ஒவ்வொரு வருடமும், 4.9 கோடி மக்கள் மரிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒரு அறிக்கையின்படி, இந்த மரணங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குறைப்பிரசவத்தினால் உண்டானது, அதற்கான காரணம் குறைபாடுள்ள சுற்றுச்சூழலோடும் வாழ்க்கை பாணியோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. சில உதாரணங்களை கவனியுங்கள்:
◼ புற்றுநோய் ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் பேரை கொல்லுகின்றன. இவை பெரும்பான்மையானவற்றிற்கு, “சென்ற 30 வருடங்களாக புகை பிடிப்பதில் ஏற்பட்ட மாபெரும் அதிகரிப்பே நேரடியான காரணமென்று சொல்லலாம்,” என்பதாக WHO அறிக்கை செய்கிறது.
◼ வயிற்றுப்போக்கு வியாதிகள், ஒவ்வொரு வருடமும் 30 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகளை கொல்லுகின்றன. இவை மாசுபடுத்தப்பட்ட உணவினாலும் தண்ணீரினாலும் சரியான சுகாதாரம் இல்லாததன் காரணமாகவும்கூட அடிக்கடி உண்டாகிறது.
◼ எலும்புருக்கி நோய், ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேரை கொல்லுகிறது. ஏழ்மையான மற்றும் அளவுக்கு அதிகமான ஜன நெருக்கமுள்ள சூழ்நிலைகளில், முக்கியமாக குறைபாடுள்ள சுகாதாரம் இருக்கும் இடங்களில் இது அபிவிருத்தி அடைகிறது.
◼ சுவாச சம்பந்தமான தொற்று நோய், குறிப்பாக நுரையீரல் வீக்கம், ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதுக்கு கீழே உள்ள 35 லட்சம் சிறுவர்களை கொல்லுகிறது. அநேகர் அதிக அளவான காற்று தூய்மைக்கேட்டிற்கு உள்ளாகும் நகரவாசிகள்.
இந்த உயிரிழப்புகளோடுகூட, ஒவ்வொரு வருடமும் சுமார் 250 கோடி பேர்—கிட்டத்தட்ட உலக ஜனத்தொகையின் பாதியளவானோர்—பற்றாக்குறையான அல்லது மாசுபடுத்தப்பட்ட தண்ணீரினாலும் குறைபாடுள்ள சுகாதாரத்தினாலும் உண்டாகக்கூடிய நோயினால் அவதிப்படுகிறார்கள். கூடுதலாக, திராவக மழை, ஓசோன் படலத்தின் குறைவு, உலக வெப்ப விளைவு போன்ற தற்போதைய கவலைக்குரிய காரியங்களை அநேகருடைய ஆரோக்கிய குறைவோடு WHO இணைக்கிறது. ஒட்டுமொத்தத்தில், 200 கோடிக்கும் அதிகமான நபர்கள் வாழ்க்கையை அச்சுறுத்துகிற அல்லது ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிற சுற்றுச்சூழல்களில் வாழ்வதாக WHO-ன் அறிக்கை குறிப்பிட்டது.
WHO-ன் தலைமை இயக்குனர் டாக்டர் ஹிரோஷி நாகாஜிமா, இவ்வாறு எச்சரிக்கையூட்டுகிறார்: “நாம் இப்போது செயல்படாவிட்டால், பூமிக்கும் அதனுடைய குடிமக்களுக்கும் நெருக்கடி, இனியும் தக்கவைக்க முடியாத ஒரு சுற்றுச்சூழலோடு, தாங்கமுடியாத அளவிற்கு கடுமையானதாகிவிடும்.”
‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு காலம் இருக்கும் என்பதாக பைபிள் வாக்களிக்கிறது. (ஏசாயா 33:24) இது மனிதனுடைய முயற்சியினால் அல்ல, ஆனால் வியாதிகளையும் அவற்றிற்கு காரணமாயிருப்பவற்றையும் நீக்கப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாக நிறைவேற்றப்படும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Godo-Foto