சுற்றுச்சூழல் கேடு—ஆரோக்கியத்தின் அஸ்தமனம்
உலகளாவிய சுற்றுப்புறச் சூழல் மீது மனிதன் விளைவித்த பாதிப்புகள் மிக மிக அதிகம். மனிதன் “இந்த சுழற்சிகளை மிகப்பெரிய அளவில் கெடுக்கிறான்” என உலக வள நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். வால்டர் ரீட், ஐநா ரேடியாவில் தெரிவித்தார். சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள இந்தக் கேடுகள், உலகம் முழுவதும் சுகாதார சம்பந்தமான ஆபத்துக்களை அதிகரித்திருக்கின்றன என அவர் சொல்கிறார். உலக வளங்கள் 1998-99 (ஆங்கிலம்) புத்தகத்தை மறுபரிசீலனை செய்து நம் கோளம் (ஆங்கிலம்) என்ற பத்திரிகையில் அதைப்பற்றிய தகவல்களை ஐக்கிய நாடுகள் பிரசுரித்தது. மக்களுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயங்கள் சிலவற்றை இந்தப் பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் சில இதோ:
◻ சுவாசம் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு, வீட்டிற்குள்ளும் வெளியேயும் இருக்கும் அசுத்த காற்றே காரணம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40 லட்சம் பிள்ளைகள் இந்த வியாதிகளால் சாகின்றனர்.
◻ சுத்தமான தண்ணீர் தட்டுப்பாட்டாலும் சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தாலும் வயிற்றுப்போக்கு சம்பந்தமான வியாதிகள் வருகின்றன. இவை ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பிள்ளைகளின் உயிரைக் குடித்துவிடுகின்றன. உதாரணமாக, லத்தீன் அமெரிக்காவில் இருந்து அறவே ஒழிக்கப்பட்டதாக கருதிய காலரா, மறுபடியும் திடீர்ப்பிரவேசம் செய்து 1997-ல் மட்டுமே 11,000 பேரைக் கொன்று குவித்தது.
உலகின் பின்தங்கிய நாடுகளில், சுற்றுச்சூழல் சம்பந்தமான வியாதிகளால் ஒவ்வொரு நாளும் 30,000-க்கும் அதிகமான பிள்ளைகள் சாவதாக அறிக்கையிடப்படுகிறது. ஒரே நாளில் 30,000 பேர். சற்று கற்பனை செய்து பாருங்கள். சுமார் 75 ஜம்போ ஜெட்டுகளை நிரப்ப போதுமான எண்ணிக்கை!
இருந்தாலும், சுற்றுச்சூழல் சம்பந்தமான சுகாதாரக் கேடுகள் வளரும் நாடுகளில் மட்டுமே இருக்கும் பிரச்சினையல்ல. “ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பத்து கோடிக்கும் அதிகமானவர்கள் இன்னும் அசுத்தமான காற்றைத்தான் சுவாசித்து வருகின்றனர்” என்றும் இதனால் ஆஸ்துமா நோய் கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரித்திருக்கிறது என்றும் நம் கோளம் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சுமார் 30 புது விதமான தொற்றுநோய்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. சர்வதேச பிரயாணமும் வியாபாரமும் இந்த நோய்கள் பரவுவதற்கு காரணம். மேலும், சென்ற காலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நோய்கள் “மறுபடியும் முழுவீச்சில் வீரியத்தோடு தாக்க ஆரம்பித்திருக்கின்றன” என்று அந்தப் பத்திரிகை அறிவிக்கிறது.
சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் பெரும்பாலானவை, இப்போதிருக்கும் தொழிநுட்பத்தால் குறைந்த செலவில் தவிர்க்கப்படக்கூடியவை என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக, எல்லாருக்கும் சுத்தமான தண்ணீரும் சுற்றுப்புற வசதியும் ஏற்படுத்தி தருவதன்மூலம் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடையலாம். இந்த லட்சியத்தை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும்? ஐக்கிய நாடுகளின் மனிதவள முன்னேற்ற அறிக்கை 1998-ன்படி, (ஆங்கிலம்) ஐநா ரேடியோ அறிவிக்கிறதாவது: ஒவ்வொருவருக்கும் சுத்தமான தண்ணீரும் சுற்றுப்புற சூழலையும் தர 1,100 கோடி டாலர் செலவாகும். ஐரோப்பியர்கள் ஒரு வருடத்தில் ஐஸ்கிரீமுக்காக செலவழிக்கும் தொகையைவிட இது குறைவே!
[படத்திற்கான நன்றி]
ஃபோட்டோ: Casas, Godo-Foto