போரில்லா ஓர் உலகம் சாத்தியமானதா?
போர் மற்றும் அதன் பின்விளைவுகளின் பயங்கரமான உண்மையை ஒருபோதும் பார்க்காமல் அல்லது மீண்டும் அனுபவிக்காமல் இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். துப்பாக்கி சுடுதல்கள் அல்லது குண்டுகளின் சத்தத்தை ஒருபோதும் கேட்காமல் இருப்பதை, ஏறக்குறைய பட்டினியாக இருக்கும் அகதிகளின் திரள் தப்பியோடுவதை ஒருபோதும் பார்க்காமல் இருப்பதை, நீங்கள் அல்லது அன்பான ஒருவர் ஏதாவதொரு கொடூரமான, அர்த்தமற்ற சச்சரவில் உயிரிழக்க வேண்டி வருமோ என்று யோசிக்காமல் இருப்பதை கற்பனை செய்துபாருங்கள். போரில்லா ஓர் உலகில் வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கும்!
‘சாத்தியமானதோர் எதிர்நோக்கு அல்ல,’ என்று நீங்கள் சொல்லக்கூடும். என்றாலும், வெறும் ஒருசில வருடங்களுக்கு முன்னர், ஒரு சமாதான உலகிற்கான காட்சி பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. 1990-லும் 1991-லும், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் ஒரு புதிய சகாப்தத்தின் நுழைவாயிலில் நாடுகள் இருப்பதாக அநேகர் சொல்லிக்கொண்டிருந்தனர். காலங்களின் போக்கை பிரதிபலிப்பவராய், ஐக்கிய மாகாணங்களின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ், வரப்போகிற ‘புதிய உலக ஒழுங்கை’ பற்றி பல சந்தர்ப்பங்களில் பேசினார்.
ஏன் இந்த நம்பிக்கையான மனநிலை? பனிப்போர் முடிவுக்கு வந்திருந்தது. 40 வருடங்களுக்கும் மேலாக, மெல்லிய நூலில் தொங்கவிடப்பட்ட கத்தியைப்போல அணுக்கரு ஆற்றல் போரின் அச்சுறுத்தல் மனிதவர்க்கத்தின்மீது வரப்போவதாக அச்சுறுத்திக்கொண்டு நின்றிருக்கிறது. ஆனால் கம்யூனிஸத்தின் மறைவோடும், சோவியத் யூனியன் சிதறப்பட்டதோடும், அணுக்கரு ஆயுத பேரழிவின் அச்சுறுத்தல் மறைந்துபோவதாகத் தோன்றியது. உலகம் அதிக நிம்மதியாக உணர ஆரம்பித்தது.
மக்கள் ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கினர் என்பதற்கும் இன்னும் அநேகர் அவ்வாறு ஏன் நோக்குகின்றனர் என்பதற்கும் மற்றொரு பெரிய காரணம் இருந்தது. நான்கு பத்தாண்டுகளாக, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் இருந்த பகைமையானது ஐக்கிய நாட்டுச் சங்கத்தை வெறுமனே வாதங்களை நடத்தும் ஒரு சங்கமாக ஆக்கியது. ஆனால் பனிப்போரின் முடிவு, ஐநா என்ன செய்ய வேண்டும் என்பதற்காகத் திட்டமைக்கப்பட்டதோ அதைச் செய்யும்படி—அதாவது, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக உழைக்கும்படி—அதை விடுவித்தது.
போரைக் குறைப்பதற்காக சமீபத்திய வருடங்களில் ஐநா அதன் முயற்சிகளை அதிகரித்திருக்கிறது. உறுப்பினர் நாடுகளிலிருந்து துருப்புகளைப் பெற்றதாய் ஐக்கிய நாட்டுச் சங்கம், கடந்த 44 வருடங்களில் ஈடுபட்டதைவிட 1994-க்கு முன்னான 4 வருடங்களில் அதிகமான அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. உலகெங்கிலும் நடந்த 17 நடவடிக்கைகளில், படைத்துறைச் சாராத மற்றும் படைத்துறைச் சார்ந்த சுமார் 70,000 பேர் அதில் சேவை செய்தனர். இரண்டே வருடங்களில், அமைதிகாப்பதற்கான செலவுகள், இரண்டு மடங்குக்கும் அதிகமாகி, 1994-ல் $330 கோடியானது.
ஐநா பொதுச் செயலர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, சமீபத்தில் எழுதினார்: “கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு [ஐநா நிறுவப்பட்டபோது] சான் பிரான்ஸிஸ்கோவில் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டுப் பாதுகாப்பு அமைப்புமுறை, ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்ட விதத்திலேயே கடைசியில் செயல்பட தொடங்கியிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன . . . நடைமுறைக்கு ஒத்த சர்வதேச அமைப்புமுறை ஒன்றை அடைவதினிடமாக நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.” இந்த முன்னேற்றங்களின் மத்தியிலும், ஒரு புதிய உலக ஒழுங்கைப் பற்றிய தொலைநோக்கு விரைவாக மங்குகிறது. போரில்லா ஓர் உலகிற்கான நம்பிக்கைகளை இருண்டதாகச் செய்யும்படி என்ன நடந்திருக்கிறது? நாம் எப்போதாவது உலகளாவிய சமாதானத்தைக் காண்போம் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறதா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளைச் சிந்திக்கும்.