ஊனம்—ஆனாலும் ஓட்ட முடிகிறது
“என்னால் கார் ஓட்ட முடியும்!” இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஒரு பொருட்டல்லாததாய்த் தோன்றலாம், ஆனால் என்மீது அவை ஓர் ஆழ்ந்த விளைவைக் கொண்டிருந்தன. அவ்வாறு சொன்ன அந்த 50 வயதானவர் எனக்கு முன்பாக தரையில் உட்கார்ந்திருந்தார். குழந்தையாய் இருந்தபோதே, இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்டிருந்த அவரது கால்கள் வளர்ச்சியடையவே இல்லை. மிகச் சிறியவையாகவும், பயனற்றவையாகவும் அவை அவரது உடலின் கீழ்ப்பகுதியில் குறுக்காக மடங்கி இருந்தன. ஆனாலும், பல ஆண்டுகளாக தன் கைகளை வைத்து நகர்ந்து சென்றதால், அவருக்கு பலமுள்ள புயங்களும் தோள்களும் இருந்தன. முற்றிலும் தன்னிரக்கம் கொள்ளாதிருந்த அவரது நிலைதானேயும்—விசேஷமாக தன்னால் கார் ஓட்ட முடியும் என்று கூறுகையில் அவரது தொனியில் இருந்த மகிழ்ச்சி கலந்த பெருமை என்னை வெட்கமடையச் செய்தது.
நான் 28-வது வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்டேன். நான் கவட்டுக் கட்டையின்றி இனிமேலும் நடக்க முடியாது என்ற செய்தியைக் கேட்டபோது எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இம்மனிதனின் எளிய வார்த்தைகள் எனக்கிருந்த மனச்சோர்வை சமாளிப்பதற்கு எனக்கு உதவின. என்னைவிட அதிகமாய் ஊனமுற்றிருந்தபோதிலும், அவர் தனது பெருந்துன்பத்திலிருந்து மீண்டுவர முடியும்போது, அதேபோன்று நான் ஏன் செய்யக்கூடாது? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். மீண்டும் கார் ஓட்டுவேன் என்று நானும் அப்போதே தீர்மானித்தேன்!
அவ்வளவு எளிதல்ல
அது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது. அப்போதெல்லாம் ஊனமுற்ற ஒருவர் கார் ஓட்டுவது என்பது மனவுறுதியற்றவருக்குத் தகுந்ததல்ல. திருத்தியமைக்கப்பட்ட எனது கார் விசித்திரக் கட்டமைப்பையுடைய ஒரு பொறியாய் இருந்தது! க்ளட்ச் பெடல் வரை நீண்டுள்ள இறுக்கிப் பிடிக்கும் ஒரு கவட்டுக் கட்டை என் இடது அக்குளின்கீழ் வைக்கப்பட்டது. என் இடது தோளை முன்னோக்கி அசைத்து க்ளட்ச்சை முடுக்கிவிட்டேன். ஆக்ஸிலரேட்டர் பழைய மாடல் டி ஃபோர்டிலிருந்து எடுக்கப்பட்ட, கையினால் இயக்கப்படும் நெம்புகோலாக இருந்தது, மேலும் ப்ரேக்கும்கூட ஒரு கை நெம்புகோலால் இயக்கப்பட்டது. நான் அவ்விதம் ஓட்டுவதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? என் தோள் முன்னும்பின்னுமாக அசைந்துகொண்டிருந்தது, என் இடது கை ஸ்டீயரிங்கை இயக்குவது, ப்ரேக்கை இயக்குவது ஆகிய இரண்டையும் செய்தது; என் வலது கை ஸ்டீயரிங்கை இயக்குவது, ஆக்ஸிலரேட்டரை இயக்குவது, கையால் சிக்னல் காட்டுவது போன்ற வேலைகளைச் செய்தது! (ஆஸ்திரேலியாவில் நாங்கள் சாலையின் இடது பக்கத்தில் ஓட்டிச் செல்கிறோம்.) திருப்பத்தைக் குறித்துக்காட்டும் கண்சிமிட்டும் இன்டிகேட்டர்கள் அப்போது கார்களில் இருக்கவில்லை.
கட்டுக்கடங்காத இணைப்புகளைக் கொண்ட அக்காலத்திய ஓட்டுதல் கடந்துபோய்விட்டதற்காக நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். இன்று, தானியங்கு டிரான்ஸ்மிஷன்கள், இயக்குவதற்கு எளிதாயுள்ள கண்சிமிட்டும் இன்டிகேட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு கார் ஓட்டுவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊனமுற்ற பலர் ஓட்டுவதை சாத்தியமாக்கியிருக்கின்றன. வழக்கமாய் பயன்படுத்தப்படும் சில கருவிகள் பக்கம் 14-லுள்ள பெட்டியில் விளக்கப்பட்டுள்ளன.
என் தனிப்பட்ட சிபாரிசுகள்
நீங்கள் ஊனமுற்றிருந்து, ஓட்டுவதற்காக ஒரு மோட்டார் காரைத் திருத்தியமைப்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், இத்துறையில் உள்ள ஒரு நிபுணரை அணுகும்படியாக நான் உறுதியுடன் ஆலோசனை கூறுகிறேன். ஓட்டுநராக உங்களையும், உங்கள் பயணிகளையும் பாதுகாக்கும் பொருட்டு எல்லா இயந்திரங்களையும் ஆய்வு செய்வதற்கு அவர் ஏற்பாடு செய்யக்கூடும். விபத்துக்கள் ஏற்படும் சாத்தியமிருப்பதால், அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் முழு காப்பீட்டைக் கொண்டிருப்பது முக்கியமானதாகும்.
பொதுவாக, ஓட்டும்போது, துணைக்கு ஒருவரைக் கூட்டிச்செல்வது ஞானமான முன்னெச்சரிக்கையாய் இருக்கலாம். பழங்கால நீதிமொழி ஒன்று விவேகத்துடன் ஆலோசனை கூறுகிறது: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; ஏனெனில் இருவருமாய்ச் சேர்ந்து அவர்கள் அதிக செயல்திறத்தோடு வேலை செய்ய முடியும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.” (பிரசங்கி 4:9, 10, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஏதேனும் விபத்து நேரிடுகையிலோ, ஓர் இயந்திரம் சரிவர வேலை செய்யாதபோதோ, அல்லது டயர் தேய்வுறுகையிலோ துணையாக இருப்பவர் பெரும் உதவியாய் இருக்கலாம். சில ஊனமுற்ற ஓட்டுநர்கள் காரில் ஒரு செலுலார் தொலைபேசியை வைக்கின்றனர். அவ்விதமாக அவர்கள், தேவைப்பட்டால் தனியாகவே அதிக நம்பிக்கையோடு ஓட்டலாம்.
ஊனமுற்ற ஓட்டுநர் ஒருவர், பகலிலோ அல்லது இரவிலோ உதவிக்காக ஓர் அழைப்பைக் கேட்கையில் விரைவில் பதிலளிக்கப்படும்படியாக, மோட்டார் ஓட்டுநர்களின் சாலைவழி சேவை நிறுவனத்தில் சேர்ந்துகொள்வது விவேகமானது. ஆண்டுக்கட்டணம் பொதுவாக நியாயமானதாய் உள்ளது—அது அளிக்கும் மனநிம்மதிக்காக செலுத்தப்படும் ஒரு சிறிய தொகையாக உள்ளது.
ஊனமுற்ற ஓட்டுநர்களாகிய நாங்கள் எங்கள் வரைமுறைகளை அறிந்தவர்களாயும் அதற்கேற்ப ஓட்டுபவர்களாயும் இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நம்மாலும் மற்றவர்களைப் போல் ஓட்ட முடியும் என்பதை நிரூபிப்பதற்காக பிறரை முந்திக்கொண்டு ஓட்ட வேண்டியதில்லை. அதற்கு மாறாக, ஊனமுற்ற பல ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் “ஊனமுற்ற ஓட்டுநர்—எச்சரிக்கை” என்ற, அல்லது அதற்கொத்த வார்த்தைகளை உடையோராய் இருக்கின்றனர். அந்த ஊனமுற்ற ஓட்டுநர் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கும் பிறரைவிட சற்று மெதுவாக ஓட்டுவதற்கும் வெறுமனே ஒரு அறிவிப்பாகத்தான் இது இருக்கிறது. மற்றவர்கள் அவரது காரைவிட்டு வெகுதூர இடைவெளியில் தங்கள் காரை ஓட்ட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், என் அனுபவத்தில், குறிப்பாக நவீன இணைப்புகளின் வருகையிலிருந்து, ஓர் ஊனமுற்ற நபர் நல்ல உடல்நிலையிலுள்ள ஓர் ஓட்டுநர் பிரேக் போடும்போது எடுக்கும் நேரத்தைவிட அதிக நேரத்தை அரிதாகவே எடுத்துக்கொள்ளுகிறார்.
ஓட்டுவது, ஓட்டாமலிருப்பது—ஒரு பொறுப்புள்ள தீர்மானம்
நீங்கள் ஊனமுற்றவராயிருந்து, ஒரு காரை ஓட்ட விரும்பினால், எல்லாவற்றையும்விட அதிக பொறுப்புணர்ச்சியோடு அக்காரியத்தை அணுக வேண்டும். முதலில், உங்கள் மருத்துவரையும் குடும்ப உறுப்பினர்களையும் அணுகுங்கள். நீங்கள் இதுமாதிரியான கேள்விகளையும் கேட்டுப்பார்க்கலாம்: நான் ஓட்டுவது அவசியமானதா? ஒரு விபத்து நேரிடுமேயானால் அதை நான் கையாள முடியுமா? நான் ஏதேனும் பயத்தை உடையவனாயிருந்தால் அதை மேற்கொள்ள முடியுமா? அதன் நன்மைகள் யாவை? எனது ஓட்டும் திறன் நான் ஒரு பணியாளராகத் திரும்பவும் சேருவதற்கு என்னைத் தகுதியுள்ளவனாக்குமா? மற்றவர்களோடு இன்னும் அதிகமாக ஈடுபாடு கொண்டவராவதற்கு அது எனக்கு உதவுமா?
எப்போது ஓட்டுவதை விட்டுவிட வேண்டும் என்பதை அறிந்திருப்பதும் முக்கியமானது. ஊனமுற்றவரோ இல்லையோ, எந்தவொரு ஓட்டுநருக்கும் நிதானிப்பு குறைவுபடும்போதும் பிரதிபலிப்பதில் தாமதம் ஏற்படும்போதும் அத்தகைய ஒரு தீர்மானம் செய்வதைத் தூண்டும் காலம் வரலாம். உங்களுக்கு அந்தச் சமயம் வந்தால், உங்களை மட்டுமே அல்லாமல், இன்னும் பலரைப்பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேசிக்கும் ஆட்களைப் பற்றியதென்ன—உங்கள் குடும்பத்தினர் மற்றும் சாலையில் செல்லும் உங்கள் அயலகத்தார், உங்கள் உடன் மானிடரைப் பற்றியதென்ன? நீங்கள் சரிவர ஓட்டாமலிருப்பது அவர்களுக்கு எவ்விதத்திலாவது ஆபத்தைக் கொண்டுவருமா?
என் சொந்த நாடான ஆஸ்திரேலியாவைப் போன்ற சில நாடுகளில், 65 வயதுக்கும் மேற்பட்ட ஊனமுற்ற ஓட்டுநர் வருடத்திற்கு ஒருமுறைதான் ஓட்டுநருக்கான தனது உரிமத்தைப் புதுப்பிக்க முடியும்—மேலும், அவரது ஓட்டும் திறனை இன்னும் மோசமாக்கும் மருத்துவ சம்பந்தமான பிரச்சினை எதுவும் இல்லை என்பதைக் குறிப்பிட்டுள்ள ஒரு மருத்துவரின் சான்றிதழை முதலில் பெற்ற பிறகுதான் அவ்விதம் புதுப்பிக்க முடியும்.
என் காரும் என் ஊழியமும்
வேகமாய் உருண்டோடும் இந்த யுகத்தில், சில நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு மோட்டார் கார் ஓர் அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆயிரக்கணக்கான, ஒருவேளை லட்சக்கணக்கான மக்களை கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியுடன் எட்டுவதற்கு கார்கள் அவர்களுக்கு உதவியிருக்கின்றன. (மத்தேயு 24:14) என்னைப்போன்ற, ஆற்றலிழந்தவர்களுக்கு இது விசேஷமாக உதவியாயிருக்கிறது. என் வாகனம், என் தனிப்பட்ட தேவைகளுக்காக திருத்தியமைக்கப்பட்டதாய், விபத்துக்கள், நோய்கள், எல்லாவித ஊனங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு புதிய உலகம் விரைவில் வரவிருக்கிறது என்ற என் நம்பிக்கையை மற்றவர்களுக்குக் கூற உதவியிருக்கிறது. (ஏசாயா 35:5, 6) ஊனமுற்றவர்கள் சிலர் முழு நேர சுவிசேஷகர்களாக சேவை செய்ய முடிந்திருக்கிறது.
அ.ஐ.மா.-வின் அயோவா நகரைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரால் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே இதைப் பல ஆண்டுகளாகச் செய்ய முடிந்திருக்கிறது. அவரது வேன் அவருக்கு மிகவும் உதவியிருப்பதாக விளக்குகிறார்; ஓர் உயர்த்தியானது அவரை வேனிற்குள் உயர்த்துவது போன்ற அதன் விசேஷித்த கட்டுப்பாட்டு இயந்திரங்களை ஓர் உடன் சாட்சி வடிவமைத்திருந்தார். ஒருமுறை உள்ளே சென்றவுடன், அவர் சக்கர நாற்காலியிருந்து ஓட்டுநரின் இருக்கைக்கு இடமாறிச் செல்கிறார். அவர் கூறுகிறார்: “இவ் வகையில் நான் வெளியில் சென்று தவறாமல் ஜனங்களை அவர்களின் வீடுகளில் சந்திக்க முடிந்திருக்கிறது, பல வேதப்படிப்புகளையும் பொதுவாக நடத்த முடிந்திருக்கிறது.”
என் சொந்த விஷயத்தில், நான் ஊழியத்தில் முழு நேரம் சேவை செய்ய முடியாதபோதிலும், திருத்தியமைக்கப்பட்ட என் வாகனம் பிரசங்க வேலையில் ஒரு மதிப்பிடமுடியாத சொத்தாகவே இருந்திருக்கிறது. பல ஆண்டுகளாக கவட்டுக் கட்டையைப் பயன்படுத்தி வீட்டுக்கு வீடு நான் சென்றேன், ஆனால் நாளாக ஆக, என் புயங்களிலும் தோள்களிலும் வலியெடுக்க ஆரம்பித்தது. ஆகவே ஓர் இலகுவான வழிமுறையைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டியதாயிருந்தது. நான் நகர்ப்புறத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தாலும் சரி, அல்லது நாட்டுப்புறப் பகுதியில் ஊழியம் செய்துகொண்டிருந்தாலும் சரி, காரை ஓட்டிச் செல்லுவதற்கு ஏற்றாற்போன்ற பாதையைக் கொண்டிருந்த வீடுகளைத் தெரிவு செய்கிறேன், அவை வாசலுக்குப் பக்கத்தில் ஓட்டிச் செல்வதற்கு என்னை அனுமதிக்கின்றன.
என் முதல் சந்திப்பின்போது, நான் பொதுவாக காரை விட்டு, முன்வாசல் வரையில் கவட்டுக் கட்டையின் உதவியுடன் நடந்துசென்று, என் சந்திப்பின் நோக்கத்தை சுருக்கமாய் விளக்குகிறேன். அந்த வீட்டுக்காரர் செய்தியில் ஓரளவு அக்கறையைக் காட்டினாரென்றால், ஒரு நட்பை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறேன், அப்போதுதான் அடுத்த சந்திப்புகளின்போது நான் வந்திருப்பதை அவர்களுக்கு அறிவிக்க ஹார்ன் ஒலி எழுப்பும் உரிமையை எடுத்துக்கொள்ள முடியும்—பிறகு என்னிடம் வரவேண்டியது அவர்களுடைய முறையாகும்.
இந்த அணுகுமுறை நன்கு பயனளிக்கிறது. சங்கடமாக உணருவதற்கு மாறாக, பல வீட்டுக்காரர்கள் சிறிது நேரம் என்னோடு காருக்குள் அமருவதற்கு ஒத்துக்கொள்கிறார்கள், அப்போது, வானிலை மாற்றங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாய் சாவகாசமாக நாங்கள் பேச முடிகிறது. என் சந்திப்பை வரவேற்று, ஓர் உற்சாகமளிக்கும் பைபிள் செய்தியைக் கலந்தாலோசித்து, சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப் பெறுவதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற வீட்டுக்காரர்கள் எனக்குக் கிடைக்காமல் இருந்ததில்லை.
ஊனமுற்ற ஒவ்வொரு நபரின் சூழ்நிலையும் வேறுபட்டது என்பது மெய்தான். ஆனால் ஓட்டுவது எனக்கு, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, சுதந்திரம், பிறருக்கு உதவும் சந்தர்ப்பம், அதோடுகூட, “நான் கார் ஓட்டிச் செல்லப் போகிறேன்!” என்று கூறமுடிவதால் அடையும் அளவற்ற இன்பம் போன்ற நன்மைகளைக் கொண்டுவந்திருப்பதுபோல் ஒருவேளை உங்களுக்கும் நன்மை பயக்கலாம்.—சீஸல் டபிள்யூ. ப்ரூனால் கூறப்பட்டது.
[பக்கம் 13-ன் படம்]
ஊனமுற்றோருக்கென்று கார்கள் எவ்வாறு திருத்தியமைக்கப்படுகின்றன
பெரும்பாலான ஊனமுற்ற ஓட்டுநர்கள் தங்கள் கால்கள் செய்யமுடியாதவற்றைச் செய்வதற்குத் தங்கள் கைகளைப் பயன்படுத்துகின்றனர். கைக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு முறை விசேஷமாய் வசதியாக உள்ளது. அது, ஸ்டீயரிங் வீலின் அடியில் ஒழுங்காக பொருத்தப்பட்டு, ஸ்டீயரிங் தண்டிலிருந்து நீண்டுள்ள ஒரு நெம்புகோலாகும். இந்த நெம்புகோலிலிருந்து பிரேக் பெடல் வரை ஒரு இரும்பு ராட் செல்லுகிறது. அந்த நெம்புகோலை முன்னால் தள்ளுகையில் பிரேக் பிடிக்கிறது.
இதே பாகத்திலிருந்து, ஆக்ஸிலரேட்டருடன் ஒரு கேபிள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த நெம்புகோல் இருவழி அசைவை உடையது: பிரேக் பிடிப்பதற்காக முன்னோக்கியும், வேகத்தை முடுக்குவதற்காக மேல்நோக்கியும் அசையும். அதற்குக் குறைந்த பலம் போதுமானது. இம்மாதிரியான கைக் கட்டுப்பாட்டின் திட்டவட்டமான நன்மையானது, இந்த வாகனங்களைப் பொதுவாக ஓட்டிச் செல்வதிலிருந்து மற்றவர்களை எவ்விதத்திலும் தடை செய்வதில்லை. கூடுதலாக, இந்தப் பாகத்தைப் பிற கார்களில் எளிதில் பொருத்தலாம்.
தங்கள் கைகளில் குறைவான பலத்தையுடையவர்களுக்காக, இந்தக் கைக் கட்டுப்பாட்டில் சற்று வேறுபாடுள்ள அமைப்பும் கிடைக்கிறது. அது அதேவிதமாக வேலை செய்கிறது, பிரேக் பிடிப்பதற்கு முன்னோக்கியும், வெறும் கையின் பளுவால் மட்டுமே ஆக்ஸிலரேட்டரை முடுக்கும்படியாக கீழ்நோக்கியும் தள்ளுவது.
சக்கர நாற்காலிகளைப் பற்றியதென்ன?
ஊனமுற்ற ஓட்டுநர் மற்றொரு பிரச்சினையை எதிர்ப்படுகிறார்: அந்தச் சக்கர நாற்காலியை வைத்து அவர் என்ன செய்ய வேண்டும்? இளம் ஓட்டுநர்கள் பலர் இரண்டு கதவுகளைக்கொண்ட கூப்பே எனப்படும் மோட்டார் கார்களை வாங்குகின்றனர், அவை ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்புறமுள்ள இடத்தில் அந்தச் சக்கர நாற்காலியை உயர்த்தும்படி அவர்களை அனுமதிக்கின்றன. இதற்கு புயங்களிலும் தோள்களிலும் அதிகளவு பலம் தேவை என்பது மெய்தான். போதியளவு பலமில்லாதவர்கள் வாகனத்திற்குள் தங்கள் நாற்காலியை ஏற்றுவதற்கு ஒரு சிநேகப்பான்மையான வழிப்போக்கர் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
மற்றொரு முறையானது, சக்கர நாற்காலி ஏற்றி என்றழைக்கப்படும், காரின் மேற்கூரையின்மேல் ஏற்றப்பட்டிருக்கும் ஃபைபர் கண்ணாடியாலான ஒரு பெரிய பெட்டியாகும். ஒரு பட்டனைத் தொட்டவுடன், கப்பிகளின் உதவியால் சக்கர நாற்காலி அதற்குள் ஏற்றப்படும்படி ஒரு சிறிய மோட்டார் மெதுவாக அப் பெட்டியை நேரே நிறுத்துகிறது. ஒருமுறை ஏற்றியவுடன், அந்தப் பெட்டி மீண்டும் தட்டையாக கிடக்கிறது. ஆஸ்திரேலியாவில் கிடைக்கப்பெறும் அத்தகைய ஏற்றி ஒன்று காரின் சிகரெட் லைட்டரின் இணைப்பைப் பயன்படுத்தி வசதியாக பொருத்தப்படுகிறது.
சக்கர நாற்காலி ஏற்றியில் உள்ள ஒரு குறைபாடு என்னவெனில், காற்று வீசுகையில் காரின் வேகத்தைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் தேவைப்படும் அளவை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. அதோடு, அக்கருவியின் விலையுங்கூட மிக அதிகமாயிருக்கலாம். இருந்தபோதிலும், அவை அளிக்கும் சுதந்திரத்திற்காக பலர் ஏற்றியாகச் செயல்படும் கருவிகளைத் தகுந்தவையாக எண்ணுகின்றனர். ஊனமுற்றிருந்த ஒரு பெண் குறிப்பிட்டார்: “இப்போது சக்கர நாற்காலியை இறக்குவதில் உதவி செய்வதற்காக என்னோடுகூட அல்லது நான் போய்ச் சேருமிடத்தில் எவரேனும் இருப்பதற்குத் தேவையில்லாமல் நானாகவே எங்கு வேண்டுமென்றாலும் போக முடியும்.”
[பக்கம் 13-ன் படம்]
என் காரிலிருந்தே நான் சாட்சி கொடுக்க முடியும்