“சிறகொடிந்த இந்தப் பறவை சிறகடித்துப் பறக்கப் போகிறது!”
சாரா வான் டெர் மான்ட் சொன்னபடி
“சாரா, உன் சிரிப்பே தனி அழகு. எப்படி உன்னால எப்பவும் சந்தோஷமா இருக்க முடியுது?” என்று அநேகர் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். எனக்கு அருமையான நம்பிக்கை இருப்பதுதான் காரணம் என்று நான் சொல்வேன். சுருங்கச் சொன்னால்: “சிறகொடிந்த இந்தப் பறவை சிறகடித்துப் பறக்கப் போகிறது!”
நான் பிரான்சிலுள்ள பாரிஸில் 1974-ல் பிறந்தேன். பிறக்கும்போதே பல பிரச்சினைகளுடன்தான் பிறந்தேன்; அதோடு, நான் மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது பிறகு தெரிந்தது. என் கைகால்களை ஓரளவே அசைக்க முடிந்தது, என் பேச்சும் தெளிவில்லாமல் இருந்தது. அதுமட்டுமல்ல, எனக்குக் காக்காய்வலிப்பும் வர ஆரம்பித்துவிட்டது; போதாததற்கு, தொற்று நோயால் அடிக்கடி பாதிக்கப்பட்டேன்.
எனக்கு இரண்டு வயதிருக்கும்போது எங்கள் குடும்பம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் நகருக்குக் குடிமாறிப் போனது. அங்குபோய் இரண்டு வருடங்களில் என்னுடைய அப்பா என்னையும் அம்மாவையும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தச் சமயத்தில்தான் முதன்முறையாகக் கடவுளிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. அம்மா யெகோவாவின் சாட்சி என்பதால் தவறாமல் என்னைச் சபைக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்; கடவுள் என்னை நேசிப்பதையும் அவர் என்மீது அக்கறையாய் இருப்பதையும் பற்றி அங்கே கற்றுக்கொண்டேன். இதுவும், அம்மா காட்டிய அன்பும், அவர் கொடுத்த நம்பிக்கையும் எனக்குப் பாதுகாப்பு உணர்வை அளித்தன; மாறியிருந்த எங்கள் சூழ்நிலையைச் சமாளிக்க உதவின.
யெகோவாவிடம் எப்படி ஜெபம் செய்வதென்றும் அம்மா கற்றுக்கொடுத்தார். சொல்லப்போனால், மற்றவர்களிடம் பேசுவதைவிட ஜெபம் செய்வது எனக்கு மிக எளிதாக இருந்திருக்கிறது. ஜெபம் செய்கையில் வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு உச்சரிக்க வேண்டியதில்லை; என் மனதிலேயே அவற்றைச் சொல்ல முடிகிறது, “கேட்கவும்” முடிகிறது. என்னால் தெளிவாகப் பேச முடியாததால், நான் மனதுக்குள் சொல்லும் விஷயங்களையும்சரி திக்கித்திணறிச் சொல்லும் விஷயங்களையும்சரி, யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது ஆறுதலாய் இருக்கிறது.—சங். 65:2.
பிரச்சினைகளைச் சமாளித்தல்
எனக்கு ஐந்து வயதிருக்கும்போது என்னுடைய மூளைவாதம் இன்னும் மோசமாகி விட்டதால் இரண்டு கால்களிலும் போலியோ ஷூ போன்ற கனமான ஷூவை இடுப்புவரை அணிந்துதான் நடக்க வேண்டியிருந்தது. அப்படியும் தள்ளாடித் தள்ளாடிதான் நடந்தேன்! 11 வயதானபோது என்னால் சுத்தமாக நடக்க முடியவில்லை. பிற்பாடு, மின் இயந்திர உதவியில்லாமல் என்னால் படுக்கையில் ஏறிப் படுக்கவோ, எழுந்திருக்கவோ, இயந்திரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் உட்காரவோ முடியவில்லை; கையால் இயக்கப்படும் லீவரின் உதவியோடு அந்தச் சக்கர நாற்காலியை ஓட்டுகிறேன்.
சில சமயங்களில் என்னுடைய குறைபாடுகளை நினைத்து நான் சோர்ந்துபோவது உண்டு. அப்போதெல்லாம் என் குடும்பத்தாரின் தாரக மந்திரம்தான் என் நினைவுக்கு வரும்: “உன்னால் செய்ய முடியாததை நினைத்துக் கவலைப்படாதே. உன்னால் முடிந்ததைச் செய்துகொண்டே இரு.” இது எனக்கு உதவியாக இருந்ததால், குதிரை சவாரி செய்தேன், படகு ஓட்டினேன், கூடாரம்போட்டு தங்கினேன்; சொல்லப்போனால், தனிவழிப் பாதையில் காரையும் ஓட்டினேன்! என் கலைத் திறமையை வளர்த்துக்கொண்டு ஓவியம் வரைந்தேன், துணிகளைத் தைத்தேன், மெல்லிய மெத்தை செய்தேன், பூத்தையல் போட்டேன், மண்பாண்டங்கள் தயாரித்தேன்.
என் உடல் குறைபாடுகளைப் பார்த்து, கடவுளை வணங்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடியுமாவெனச் சிலர் சந்தேகித்தார்கள். எனக்கு 18 வயதிருக்கையில் என் பள்ளி ஆசிரியை என் அம்மாவின் மதத்திலிருந்து “தப்பிக்க” வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார். நான் தங்குவதற்கு ஒரு வீட்டைப் பார்த்துக்கொடுப்பதாகக்கூடச் சொன்னார். என்றாலும், என் விசுவாசத்தைவிட்டு விலகவே மாட்டேன் என்றும் நானே எல்லாவற்றையும் செய்துகொள்ள முடிகிறவரை வீட்டைவிட்டு வெளியேறவே மாட்டேன் என்றும் அவரிடம் சொல்லிவிட்டேன்.
இதற்குப் பிறகு வெகு சீக்கிரத்திலேயே நான் ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சியாக ஆனேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறிய வீட்டுக்குக் குடிமாறிச் சென்றேன். இங்கு எனக்குத் தேவையான உதவியும், அதேசமயத்தில் நான் விரும்புகிற சுதந்திரமும் கிடைத்திருப்பதை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன்.
எதிர்பாராமல் வந்த வரன்
வருடங்கள் கடந்து ஓட ஓட வேறு பல சோதனைகள் என் விசுவாசத்தைச் சோதித்தன. ஒருநாள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த உடல்குறைபாடுள்ள ஒரு மாணவன் என்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன். சொல்லப்போனால், முதலில் உச்சிகுளிர்ந்து போனேன். எல்லாப் பெண்களையும்போல நானும் ஒரு துணைவருக்காக ஏங்குவது உண்மைதான். என்றாலும், இருவருக்கும் உடல்குறைபாடு இருக்கிறது என்பதற்காக மணவாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்று சொல்லவே முடியாது. அதோடு, அவன் ஒரு யெகோவாவின் சாட்சியாகவும் இல்லை. எங்களுடைய நம்பிக்கைகள், நடவடிக்கைகள், இலக்குகள் என எல்லாமே முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. அப்படி இருக்கும்போது, நாங்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? சக கிறிஸ்தவரை மட்டுமே மணம் செய்யும்படி கடவுள் கொடுத்திருக்கிற தெளிவான அறிவுரைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்பதிலும் நான் உறுதியாய் இருந்தேன். (1 கொ. 7:39) எனவே, என்னால் அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதென்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டேன்.
அன்று நான் எடுத்த முடிவு சரியான முடிவென இன்றும் நம்புகிறேன். கடவுள் கொண்டுவரப் போகிற புத்தம்புதிய பூமியில் நான் சந்தோஷமாக இருப்பேன் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை. (சங். 145:16; 2 பே. 3:13) அதற்கிடையில், யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதற்கும், தற்போது நான் உள்ள சூழ்நிலையில் திருப்தியாய் இருப்பதற்கும் தீர்மானமாய் இருக்கிறேன்.
என்னுடைய சக்கரநாற்காலியை விட்டுக் குதித்தெழுந்து, மனம்போல் ஓடித்திரியும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது, “சிறகொடிந்த பறவையாக இருந்தேன், இன்று சிறகடித்துப் பறக்கிறேன்—இனி என்றென்றும் பறக்கப் போகிறேன்!” என்று சந்தோஷமாகச் சொல்லுவேன்.