பைபிளின் கருத்து
நடனமாடுதல் கிறிஸ்தவர்களுக்கானதா?
“நான் இதைப் பார்க்க முடியாது. நான் வெளியேற வேண்டியதாயிருக்கும்,” என்று ஓர் இளம் மனிதர் தனது இருக்கையிலிருந்து எழுந்தவாறே தன் மனைவியிடம் கிசுகிசுத்தார், பிறகு இதமான இரவுநேரக் காற்றில் காலார நடந்துசெல்வதற்காக அந்த அறையை விட்டு வெளியேறினார். அவருக்கு தர்மசங்கடமாயிருந்தது.
அவரும் அவரது மனைவியும் ஒரு சமூக நிகழ்ச்சிக்காக நண்பர்களால் அழைக்கப்பட்டிருந்தனர். விருந்துக்கு அழைத்தவர்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியை அளிப்பதற்குத் திட்டமிட்டிருந்தனர், அதில் மூன்று பெண்களின் நடனமும் உட்பட்டிருந்தது. விருந்தாளிகளாயிருந்த பார்வையாளர்களில் மீதியானோர் அமைதிகுலையாதவர்களாய்த் தோன்றினர். அவர் மட்டுமீறிய கூருணர்வுடையவராய் இருந்தாரா? நடனமாடினவர்கள் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாயும் நடனமாடுவதற்கான சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாயும் மட்டுமே இருக்கவில்லையா? கிறிஸ்தவ நோக்குநிலையிலிருந்து நடனத்தைப்பற்றி புரிந்துகொள்ள நாம் முயலுவோமாக.
நடனமாடுதல் ஒரு தகவல் தொடர்பு
மனிதர் தகவல் தொடர்புகொள்ளும் வழிகளில் ஒன்றானது, சைகை அல்லது அசைவுகள் ஆகியவற்றின் மூலமாகும். உதாரணமாக, ஓர் அயல்நாட்டில், பார்வையாளர்கள் பலர், எவ்விதத் தவறும் இல்லாததாகத் தாங்கள் கருதிய ஓர் அசைவானது, அங்கு வேறொரு அர்த்தத்தை—ஒருவேளை விரும்பத்தகாத ஒன்றை—உடையதாயிருந்தது என்பதை அறிகையில் வியப்புற்றிருந்திருக்கின்றனர். சாலமன் தீவுகள், மலேசியா, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த முன்னாள் மிஷனரி ஒருவர் கூறினார்: “சில பகுதிகளில் இனசம்பந்தமான அர்த்தங்கள் குறிப்பிட்ட உடல் அசைவுகளோடு தொடர்புடையனவாயிருக்கின்றன. உதாரணமாக, ஒரு பெண் தரையில் கால்நீட்டி அமர்ந்திருக்கும்போது, ஓர் ஆண் அவளைத் தாண்டி அடியெடுத்து வைப்பது தகாததாகக் கருதப்படுகிறது. அதேபோன்று, ஓர் ஆண் தரையில் அமர்ந்திருக்கும்போது ஒரு பெண் அவருக்கு முன்பாகக் கடந்து செல்லுவதும் விவேகமற்றதாகும். இரு சந்தர்ப்பங்களிலும் இனசம்பந்தமான அர்த்தங்கள் உடனடியாக புரிந்துகொள்ளப்படுகின்றன.” அதைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும் சரி, அறியாதிருந்தாலும் சரி, நம் உடலின் அசைவுகள் பேசுகின்றன. ஆகவே வரலாறு முழுவதிலும் நடனமாடுதல் தகவல் தொடர்பின் ஓர் அம்சமாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிகையில் அது நமக்கு வியப்பூட்டுவதாயில்லை.
பல்வேறு உணர்ச்சிகள்—ஒரு கொண்டாட்டத்துடன் தொடர்புடைய குதூகலம் மற்றும் கட்டிலடங்கா உணர்ச்சி போன்றவற்றிலிருந்து, மதசம்பந்தமான சடங்கு மற்றும் பாரம்பரியத்தின் பக்தி போன்றவை வரை—நடனத்தில் வெளிப்படுத்தப்படலாம். (2 சாமுவேல் 6:14-17; சங்கீதம் 149:1, 3) தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது: “நடனமாடுபவர் அந்தப் பார்வையாளரோடு தனிப்பட்ட இரு வழிகளில் தகவல் தொடர்பு கொள்ளுகிறார், உடலைக் கொண்டும் முகத்தைக் கொண்டும் உணர்ச்சியைக் கொட்டுவதன் மூலமாக அல்லது அபிநயத்தைக் கொண்டும் சைகையைக் கொண்டும் ஒரு சிக்கலான மொழியின் மூலமாக.” சில நடனங்களின்மூலம் கொள்ளும் தகவல் தொடர்பு மிகவும் எளிதில் புரிந்துகொள்ளப்படுவதாய்த் தோன்றலாம். மற்ற நடன முறைகளில், அம் மொழியானது அதைப் பற்றி ஏற்கெனவே அறிந்துள்ள சிலரால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாய் இருக்கலாம். உதாரணமாக, கிளாசிக்கல் கூட்டு நடனத்தில் (ballet) கையை இதயத்தின்மீது வைப்பது அன்பையும், இடது கையின் நான்காவது விரலைக் குறித்துக்காட்டுவது திருமணத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. சீன இசைநாடகத்தில், வட்ட வடிவத்தில் நடப்பது ஒரு பயணத்தையும், அதே சமயத்தில் ஒரு சுழற்றும் சவுக்கைக் கைகளில் கிடைமட்டமாய்ப் பிடித்துக்கொண்டு மேடையை வட்டமிடுவது ஒரு குதிரையின்மீது சவாரி செய்வதையும் தெரிவிக்கிறது; ஒரு கறுப்புக்கொடியை மேடையின் குறுக்கே இழுத்துச் செல்வது புயலையும், அதே சமயத்தில் ஒரு வெளிறிய நீலநிறக் கொடியை அவ்விதம் இழுத்துச் செல்வது ஒரு தென்றல் காற்றையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆகவே, நடன அசைவுகளிலும் சைகைகளிலும், அந்த உடல் தகவல் தொடர்பு கொள்ளுகிறது. ஆனால் அந்தச் செய்தி எப்பொழுதுமே முறையானதாயிருக்கிறதா?
நடனமாடுதல்—முறையானதும் முறையற்றதும்
நடனமாடுவது பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சியின் ஓர் இன்பகரமான அம்சமாய் இருக்கக்கூடும். அது வாழ்வில் பெறும் தனித்தன்மை வாய்ந்த இன்பத்திற்கு ஒரு மகிழ்ச்சிகரமான சரீரப்பிரகார பிரதிபலிப்பைக் காட்டுவதாய் அல்லது யெகோவாவின் நற்குணத்திற்கான போற்றுதலைக் காட்டுவதாய் உள்ள, ஒரு சுத்தமான மற்றும் ஒளிவுமறைவற்ற வெளிக்காட்டலாயிருக்கலாம். (யாத்திராகமம் 15:20; நியாயாதிபதிகள் 11:34) சில கூட்டு நடனங்களும் கிராமிய நடனங்களும் இன்பகரமானவையாய் இருக்கக்கூடும். இயேசு கூறின கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில், நடனமாடுபவர்களின் ஒரு குழுவைக் குறிப்பிட்டுக் காட்டினார், அது தெளிவாகவே, களியாட்டங்களின் ஒரு பகுதியாக, கூலிக்கு அமர்த்தப்பட்ட நடனக் கலைஞர்களின் ஒரு தொகுதியைக் குறித்தது. (லூக்கா 15:25) ஆகவே, தெளிவாகவே, பைபிள் நடனமாடுவதை முற்றிலும் கண்டனம் செய்வதில்லை. என்றபோதிலும், கெட்ட சிந்தனைகளையும் ஆசைகளையும் தூண்டுவதற்கு எதிராக அது எச்சரிக்கிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில்தான், குறிப்பிட்ட வகையான நடனங்கள் அடக்கமற்றதாயும், ஒருவரின் ஆவிக்குரிய தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாயும்கூட இருக்கலாம். (கொலோசெயர் 3:5) பண்டைய காலங்களிலிருந்து நோக்குகையில், நடனமாடுவது சில சந்தர்ப்பங்களில் காம உணர்வைத் தூண்டுவதாயும், தீங்கு விளைவிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாயும் இருந்திருக்கின்றன.—மத்தேயு 14:3-11-ஐ ஒப்பிடுக.
நம் எதிரியாகிய பிசாசான சாத்தான், நடன அசைவுகளும் முறையற்ற சிந்தனைகளும் சேர்ந்து தன் கையிலுள்ள சக்திவாய்ந்த ஆயுதமாய் இருப்பதாக அறிந்திருக்கிறான். (யாக்கோபு 1:14, 15-ஐ ஒப்பிடுக.) உடல் அசைகையில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான கவர்ச்சியையும், அது காம உணர்வுக்குரிய சிந்தனைகளைத் தூண்டும் விதத்தையும் அவன் நன்கு அறிந்திருக்கிறான். சாத்தான் நம்முடைய ‘மனது கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்றும் கற்பினின்றும் விலகும்படி கெடுக்கப்படும்’ வகையில் வஞ்சிப்பதற்குத் திடத் தீர்மானமுள்ளவனாய் இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (2 கொரிந்தியர் 11:3, NW) முறையற்ற நடனத்தை நாம் கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் அதில் பங்கு பெறுவதன் மூலமாகவும் நம் மனது, ஒழுக்கங்கெட்ட சிந்தனை நம்மை உருவக் குத்தும்படியாக அனுமதிக்கையில் பிசாசு கொள்ளும் மகிழ்ச்சி எத்தகையதாய் இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். கட்டுப்படுத்தப்படாத நமது ஆசைகள் அவிழ்த்து விடப்பட்டு முறையற்ற நடத்தையெனும் முட்செடியில் சிக்கிக்கொண்டதானால் அவன் இன்னும் தொடர்ந்து மகிழ்ச்சி கொள்ளுவான். அசைவு மற்றும் நடனத்தை அந்த நோக்கத்துடன் கடந்த காலத்தில் அவன் பயன்படுத்தியிருக்கிறான்.—யாத்திராகமம் 32:6, 17-19-ஐ ஒப்பிடுக.
முறையானதா, முறையற்றதா—எப்படி தீர்மானிப்பது
முடிவாக, ஒரு நடனம் தொகுதிகளாலோ, இருவராலோ, அல்லது ஒரே ஒருவராலோ ஆடப்படுகையில், அந்த அசைவுகள் உங்களுக்குள் தூய்மையற்ற சிந்தனைகளைத் தூண்டினால், அந்த நடனம் பிறருக்குத் தீங்கு விளைவிக்காவிட்டாலும், உங்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
நவீன நடனங்கள் பலவற்றில், அவ்விதம் கூட்டாளிகளுடன் இணைந்து ஆடுகையில், ஒருவரையொருவர் தொடாதிருப்பதை சிலர் குறிப்பிட்டிருக்கின்றனர். என்றபோதிலும், தொடுவதும் தொடாதிருப்பதுமே உண்மையில் கேள்விக்குரியதாய் இருக்கிறதா? “முடிவான விளைவு ஒன்றாகவே இருக்கிறது—கட்டித் தழுவிக்கொள்ளுவதன் மூலமாகவோ, அல்லது பாதி-உணர்வுடன் கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவோ நடனமாடும் செயல்நடவடிக்கையிலும், ஒரு கூட்டாளியின் இன உணர்வை அறிந்திருப்பதிலும் பெறும் சரீரப்பிரகாரமான இன்பம்” என்று கூறுவதன் மூலம் பிரிட்டானிக்கா இவ்விஷயத்தைத் தொகுத்துரைக்கிறது. திருமணக் கட்டுக்கு வெளியே “ஒரு கூட்டாளியின் இன உணர்வை அறிந்திருப்பது” ஞானமானதாய் இருக்கிறதா? “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்ற இயேசுவின் கூற்றின்படி அவ்விதமாய் இல்லை.—மத்தேயு 5:28.
நீங்கள் நடனமாடுவதும் நடனமாடாதிருப்பதும் உங்களுடைய தெரிவாகும். பின்வரும் கேள்வியைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது, நீங்கள் ஞானமாய் தீர்மானம் செய்வதற்கு உங்களுக்கு உதவலாம். இந்நடனத்தின் இலக்கு என்ன? அது எதற்குப் பேர்பெற்றது? நடன அசைவுகள் எதை வலியுறுத்துகின்றன? என்ன விதமான சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் அவை என்னில் தூண்டுகின்றன? என் கூட்டாளியில், அல்லது பார்த்துக் கொண்டிருப்பவர்களில் என்ன விதமான ஆசைகளை அவை தூண்டுகின்றன? நிச்சயமாகவே, எமது முகவுரையில் கூறப்பட்ட அந்த இளம் கணவன் செய்ததைப் போன்றே, மற்றவர் செய்வதைப் பொருட்படுத்தாமல், ஒருவர் தனது மனச்சாட்சிக்கு ஏற்றாற்போல பிரதிபலிக்க வேண்டும்.
அழகு, சந்தம், வனப்பு ஆகிய பரிசுகளை நாம் அனுபவிக்க வேண்டும் என்று படைப்பாளர் விரும்புவதாக பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆம், அவற்றை அனுபவியுங்கள்—ஆனால், நீங்கள் நடனமாடுகையில் உங்கள் உடல் பேசுகிறது என்பதை மனதில் கொண்டிருங்கள். பிலிப்பியர் 4:8-ல் பவுல் கூறும் வழிகாட்டும் அறிவுரைகளை நினைவில் கொள்ளுங்கள்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”