யாரெயின் நடன பிசாசுகள்
அது வெறும் முற்பகலே; ஆனாலும் வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. முழுக்க முழுக்க பாரம்பரிய உடையில் இருந்த ஆண்களின் ஒரு குழுவை பார்த்தபோது, இந்த எரிக்கும் வெயிலில் எப்படிதான் தாக்குப்பிடிக்கப் போகிறார்களோ என்று நாங்கள் வியந்தோம்! வெனிசுவேலாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ டி யாரெயைச் சேர்ந்த சிறிய விவசாய நகரத்தை நாங்கள் பார்வையிட சென்றிருந்தோம். நடன உடையில் இருந்த அந்த ஆண்கள், பிரசித்திபெற்ற டயாபுளோஸ் டான்ஸான்ட்டெஸ் டி யாரெ என்றழைக்கப்படும் யாரெயின் நடன பிசாசுகள்.
வெனிசுவேலாவைச் சேர்ந்த பெரும்பாலானோர் கத்தோலிக்கர்; பைபிளில் நம்பிக்கையிருப்பதாக சொல்லிக்கொள்வோர். என்றபோதிலும், உள்ளூர் கலாச்சாரத்தில், பேய்களைப் போன்ற உருவை முக்கியமாய் சிறப்பித்துக் காட்டும் வழிவழியாய் வந்த சடங்காச்சார நடனங்கள் இடம் பெற்றன. கத்தோலிக்க சர்ச் இந்த நடனங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல் உண்மையிலேயே அவற்றை முன்னேற்றுவிக்கவும் செய்கின்றன. யாரெயின் நடன பிசாசுகளின் விஷயத்திலும் இதுவே உண்மை.
யாரெக்குப் போய்ச்சேர்ந்த பிறகு, மகா பரிசுத்த புனிதசடங்கு சகோதரத்துவம் என்றழைக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க அமைப்பின் உள்ளூர் தலைமை அலுவலகத்தைப் பார்த்தபோது, அதுவே நடன பிசாசுகளுக்கும் தலைமை அலுவலகமாய் இருந்ததை அறிந்து நாங்கள் பிரமித்தோம். இந்தக் கட்டடம் காஸா டே லோஸ் டயாபுளோஸ் (பிசாசுகளின் வீடு) என்று அழைக்கப்படுகிறது. அது ஒரு புதன்கிழமை. கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற கத்தோலிக்க பண்டிகைக்கு முந்தின நாள். தொழில்முறை போட்டோகிராபர்கள் பலர் அந்தக் கட்டடத்துக்கு வெளியே அணிவகுத்து நின்றிருந்தனர். திடீரென, மேளச்சத்தம் பலமாக முழங்கியது; பேய்களைப் போல உடுத்தியிருந்த பல ஆண்கள் ஆட ஆரம்பித்தனர்.
பிசாசு நடனக்காரர்களின் உடைகள்
நடனக்காரன் ஒவ்வொருவனும் சிவப்பு சட்டையும், சிவப்பு கால்சட்டைகளும், சிவப்பு சாக்ஸுகளும், காலணிகளும் அணிந்திருந்தான். ஒவ்வொருவனும் ஒரு ஜெபமாலையையும், ஒரு சிலுவையையும், ஒரு கத்தோலிக்க பதக்கத்தையும் கழுத்தில் அணிந்திருந்தான். மற்றொரு சிலுவை அவனது உடையுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவனும் ஒரு கையில் பிசாசைப் போன்ற தோற்றமளிக்கும் மரக்கா கிலுகிலுப்பையையும் மற்றொரு கையில் ஒரு குட்டையான சவுக்கையும் வைத்திருந்தான். மிக முக்கியமானவை என்னவெனில், கொம்புகளையும், பெரிய கண்களையும், பெரும்பாலும் ஈ-யென்று காட்டிக்கொண்டிருந்த பற்களையும் உடையனவாய் இருந்த பெரிதும் கோரமுமான பலவண்ண முகமூடிகளே. ஒவ்வொரு முகமூடியிலும் நீண்ட, சிவப்பான துணியாலான முக்காடு இணைக்கப்பட்டிருந்தது.
வெவ்வேறு வகையான நடனக்காரர்கள் இருந்தனரென நாங்கள் தெரிந்துகொண்டோம். தலைமை காப்பாட்டாஸ் அல்லது கண்காணி, டயாபுளோ மாயோர், அல்லது தலைமை பிசாசு என்றும் அறியப்படுகிறார். அவருடைய முகமூடியில் நான்கு கொம்புகள் இருக்கின்றன. பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில் அவர் தெரிந்தெடுக்கப்படுகிறார். உதவி கண்காணி, அல்லது ஸெகுண்டோ காப்பாட்டாஸ் என்பவருக்கு மூன்று கொம்புகளும், எவ்வித கிரேடும் இல்லாத சாதாரண நடனக்காரர்களுக்கு இரண்டே இரண்டு கொம்புகளும் இருக்கின்றன. நடனக்காரர்களில் சிலர் புரோமெஸெர்ரோஸ் என்பவர்கள்; இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ, சில ஆண்டுகளுக்கோ, ஒருவேளை வாழ்நாள் முழுக்கவோ ஆடுவதற்கு நேர்ந்துகொள்பவர்கள். இந்த வேண்டுதல் அல்லது நேர்த்திக்கடன், பொதுவாக கடவுள் தங்களுடைய விசேஷ வேண்டுதலுக்கு பதிலளித்ததாக நம்பும் ஆட்களால் நேர்ந்துகொள்ளப்படுகிறது.
சர்ச்சுக்குச் செல்லுதல்
மதிய வேளையில், நடனக்காரர்கள் தங்கள் தலைமை அலுவலகத்தை விட்டு, ஊர்வலத்தின் மீதமுள்ள பகுதிக்கும் பாதிரியின் அனுமதியைப் பெறுவதற்கென உள்ளூர் சர்ச்சுக்குச் செல்கின்றனர். நடன பிசாசுகள் சர்ச்சுக்கு வெளியே பாதிரியை சந்திக்கின்றனர். அங்கே அவருடைய ஆசியைப் பெற அவர்கள் முழங்காலிடுகின்றனர். பிறகு அவர்கள் நகர வீதிகளின் வழியாகவும், சில சமயங்களில் வீடு வீடாகவும் சென்று நடனமாடுகின்றனர். பெரும்பாலும் அந்த வீட்டுக்காரர்கள் மிட்டாய்களையும், பானங்களையும், மற்ற உணவுவகைகளையும் கொடுத்து நடன பிசாசுகளை வரவேற்கின்றனர். இந்த ஊர்வலம் மதியம் முழுவதும் விடாமல் தொடருகிறது.
அடுத்த நாள் காலை, சர்ச்சில் பூசை ஆரம்பிக்கையில், நடனக்காரர்கள் மறுபடியும் காஸா டே லோஸ் டயாபுளோஸ்-ல் கூடுகின்றனர். கொட்டும் முரசுக்கேற்ப தங்கள் மரக்காக்களை ஒன்றுபோல் ஆட்டி நடனமாடிக்கொண்டே, அங்கிருந்து கல்லறைத்தோட்டத்தை நோக்கி செல்கின்றனர். கல்லறைத்தோட்டத்தில் ஒரு பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது; அதற்கு முன்பாக நின்று இறந்த தங்கள் நண்பர்களுக்கு அவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். இந்த ஆசாரத்தின்போது, கொட்டுச் சத்தம் மெதுவாய் ஒலிக்கிறது. பிறகு, மூடநம்பிக்கையின் பயத்தால், அவர்கள் கல்லறைத்தோட்டத்தை விட்டு, தங்கள் முதுகை பீடத்துக்குக் காட்டாதவாறு பார்த்துக்கொண்டே பின்னோக்கி நடந்துசெல்கின்றனர். அங்கிருந்து சர்ச்சுக்குச் சென்று பூசை முடியும் வரை அவர்கள் காத்திருக்கின்றனர்.
பாதிரியின் ஆசி
பூசை முடிவில், அந்தப் பாதிரி வெளியே வந்து நடனக்காரர்களை ஆசீர்வதிக்கிறார். அவர்களோ தங்கள் தலை குனிந்து, முழங்காலில் நிற்கின்றனர்; அவர்களுடைய முகமூடிகள் அந்த முக்காட்டிலிருந்து தொங்கிக்கொண்டு, தீமையை நன்மையால் வென்றதை அடையாளம் காட்டுகின்றன. தலைமை பிசாசுக்கு அருகில் அந்தப் பாதிரி ஒரு இருக்கையில் அமர்கிறார். ஏன் நேர்ந்துகொள்ளுகிறார்கள் என்றும், எத்தனை ஆண்டுகளுக்கு நடனமாடுவார்கள் என்றும் விளக்கமளிக்கும் புதிய புரோமெஸெர்ரோஸ்கள்-ன் நேர்த்திக்கடன்களுக்கு அவ்விருவரும் செவிகொடுக்கின்றனர்.
மேளக்காரர்கள் தங்கள் மேளத்தை வேகமாக கொட்டத் தொடங்குகின்றனர்; நடன பிசாசுகளும் தங்கள் உடல்களையும் தங்கள் மரக்காக்களையும் குலுக்கிக் குலுக்கி, வெகுவேகமாய் உச்ச வேகத்தில் முழங்கும் அந்த ஓசைக்கேற்ப ஆடுகின்றனர். பெண்களும் நடனமாடுகின்றனர்; ஆனால் நடன பிசாசு உடைகளை அணிவதில்லை. அவர்கள் சிவப்பு பாவாடைகளும், வெள்ளை சட்டைகளும் அணிந்துகொண்டு, தங்கள் தலைகளில் வெள்ளை அல்லது சிவப்பு கைக்குட்டைகளை கட்டிக்கொள்கின்றனர். இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியின்போது, நடன பிசாசுகளில் சிலர் தங்கள் விருப்பப் புனிதர்களின் சிலையைத் தங்கள் தோள்களில் சுமந்துசெல்கின்றனர். நடனக்காரர்கள், நகரிலுள்ள பிரதான சிலுவைக்கு மரியாதை செலுத்திய பிறகு, சர்ச்சுக்கு முன்னால் அணிவகுத்து நின்று தங்கள் ஊர்வலத்தை முடிக்கின்றனர்.
யெகோவாவின் சாட்சிகளுக்கு உரியதல்ல
சுற்றுப்பயணிகளாக, எங்களுக்கு இது ஆர்வத்தைத் தூண்டும் ஓர் அனுபவமாய் இருந்தது. யாரெயின் சிறிய நகரை நாங்கள் சந்திக்கச் சென்றபோது, நடன பிசாசுகளுடைய ஆட்டத்தின் பொது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை எங்களால் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும், கிறிஸ்தவர்களாக நாங்கள், வெனிசுவேலாவிலுள்ள 70,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளைப் போலவே யாரெயின் நடன பிசாசுகளின் பண்டிகை கொண்டாட்டத்திலோ அதைப் போன்ற ஊர்வலத்திலோ கலந்துகொள்வதில்லை.
ஏன்? ஏனெனில் நாங்கள் அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கிறோம்: “நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.” (1 கொரிந்தியர் 10:20, 21)—அளிக்கப்பட்டது.