இயற்கைச் சேதங்கள்—இதைச் சமாளிப்பதற்கு உங்கள் பிள்ளைக்குஉதவுதல்
நிலநடுக்கங்கள், பலமான சுழல்காற்றுகள், தீ, வெள்ளப்பெருக்குகள், புயற்காற்றுகள்—இயற்கையின் உக்கிரத்தை நாம் எதிர்ப்படும்போது எவ்வளவு உதவியற்று இருக்கிறோம்! இயற்கைச் சேதம் ஒன்றினால் பதிந்திருக்கும் பயமூட்டும் மனக்காட்சி மறைய ஆரம்பிப்பதற்கு பல வருடங்கள் எடுப்பதாக வயது வந்தவர்கள் அடிக்கடி காண்கின்றனர். ஆச்சரியமல்லாமல், அப்படிப்பட்ட அனுபவங்களிலிருந்து மீளுவதற்கு கூடுதலான உதவி பிள்ளைகளுக்கு தேவைப்படலாம்.
சேதம் ஏற்பட்ட உடனேயே, பிள்ளைகள் பொதுவாக கீழ்க்கண்டவற்றுக்கு பயப்படுகின்றனர் என்பதாக ஐ.மா. ஃபெடரல் எமர்ஜன்ஸி மேனேஜ்மன்ட் ஏஜென்ஸி (FEMA) குறிப்பிடுகிறது: (1) அவர்கள் தனியாக விடப்படுவார்கள், (2) அவர்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுவார்கள், (3) சம்பவம் மறுபடியும் நிகழும், (4) எவராவது காயமடைவார் அல்லது கொல்லப்படுவார். சேதத்தின் பின்விளைவுகளின்பேரில் உங்கள் பிள்ளைக்கு இருக்கும் கவலையைக் குறைப்பதற்கு ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்யலாம்? FEMA இந்தப் பரிந்துரைகளை அளிக்கிறது. a
குடும்பமாக ஒன்றுசேர்ந்திருக்க முயற்சி செய்யுங்கள். ஒன்றாக சேர்ந்திருப்பது, உங்கள் பிள்ளைக்கு திரும்பவும் நம்பிக்கையளித்து, கைவிடப்பட்டதாய் உணரும் பயத்தைப் போக்குகிறது. நீங்கள் உதவியை நாடும்போது பிள்ளைகளை உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ அல்லது ஒரு காப்பகத்திலோ விட்டுவிடாதிருப்பது நல்லது. “பிள்ளைகள் கவலையடைகின்றனர், தங்கள் பெற்றோர் மீண்டும் வரமாட்டார்கள் என்று நினைத்து வேதனை அடைவார்கள்,” என்பதாக FEMA தெரிவிக்கிறது. நீங்கள் வேறு இடத்திற்கு செல்லவேண்டியதாக இருந்தால், முடிந்தவரை உங்கள் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். அந்த விதத்தில் உங்கள் “பிள்ளை பயத்தினால் உங்களையே தொற்றிக்கொண்டிருக்கும் பழக்கத்தைப் பெற்றிட அநேகமாய் வாய்ப்பிருக்காது.”
நிதானமாகவும் உறுதியாகவும் சூழ்நிலையை விளக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். சேதத்தைக் குறித்து உங்களுக்கு தெரிந்ததை உங்கள் பிள்ளைக்கு சொல்லுங்கள். தேவையிருந்தால், உங்கள் விளக்கத்தை பல தடவை திரும்பச் சொல்லுங்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை சுருக்கமாக சொல்லுங்கள். உதாரணத்திற்கு, ‘இன்றிரவு நாம் எல்லாரும் ஒன்றாக பாதுகாப்பிடத்தில் தங்குவோம்’ என்பதாக நீங்கள் சொல்லலாம். பிள்ளைகளிடம் அவர்கள் கண்மட்டத்திற்கு சமமாக இருந்து, தேவைப்பட்டால் முழங்காற்படியிட்டுப் பேசுங்கள்.
பேசும்படி உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள். “பிள்ளையின் கவலையைக் குறைப்பதற்கு பேச்சுத்தொடர்பு மிகவும் உதவிசெய்யும்,” என்பதாக FEMA சுட்டிக்காட்டுகிறது. சேதத்தைப் பற்றியும் தனக்கிருக்கும் பயத்தைப் பற்றியும் ஒவ்வொரு பிள்ளையும் உங்களிடம் சொல்வதைக் கேளுங்கள். (யாக்கோபு 1:19-ஐ ஒப்பிடுக.) பயப்படுவது சாதாரணமான ஒன்றுதான் என்பதை அவனிடம் சொல்லுங்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்த உங்கள் பிள்ளை தயங்குவதாக தோன்றினால், நீங்களும் பயப்படுகிறீர்கள் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு செய்வது, அவன் தன் சொந்த பயங்களை வெளிக்காட்டுவதை சுலபமாக்கி இவ்வாறு அவனுடைய கவலையை குறைக்கும். (நீதிமொழிகள் 12:25-ஐ ஒப்பிடுக.) “கூடுமானால், முழு குடும்பத்தையும் கலந்தாலோசிப்பில் உட்படுத்துங்கள்.”
சுத்தம் செய்யும் வேலைகளில் பிள்ளைகளை உட்படுத்துங்கள். வீட்டை சுத்தம் செய்து பழுது பார்க்கும்போது, பிள்ளைகளுக்கு அவர்களுக்குரிய வேலைகளைக் கொடுங்கள். “ஒரு வேலையைக் கொண்டிருப்பதுதானே எல்லாம் சரியாகிவிடும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும்.” எனினும், மிகவும் சிறிய பிள்ளைக்கு பொதுவாக விசேஷ கவனிப்பு தேவைப்படுகிறது. FEMA இவ்வாறு விளக்குகிறது: “அப்படிப்பட்ட பிள்ளைக்கு தேக சம்பந்தமான அதிக கவனிப்பும், அதிக அணைப்பும் தேவைப்படுகிறது; இது, கவனிப்பு தேவைப்படும் மற்ற காரியங்களுக்கு பெற்றோர் கவனம் செலுத்துவதை கடினமாக்குகிறது. அசந்தர்ப்பவசமாக, எந்தக் குறுக்கு வழியும் இல்லை. பிள்ளையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், பிரச்சினை இன்னும் நீண்ட காலம் நீடித்திருக்கும்.”
ஒரு கடைசியான குறிப்பு மனதில் வைக்கப்பட வேண்டும். “முடிவாக, உங்கள் பிள்ளைக்கு எது சிறந்தது என்பதை நீங்கள்தானே தீர்மானிக்க வேண்டும்,” என்பதாக FEMA ஆலோசனை சொல்கிறது. வழிகாட்டும் இந்த அறிவுரைகளை கடைப்பிடிப்பது கடினமான ஒரு சூழ்நிலையை சிறந்த விதத்தில் கையாள உங்களுக்கு உதவும்.
[அடிக்குறிப்பு]
a FEMA-வினால் பிரசுரிக்கப்பட்ட சேதத்தைச் சமாளிப்பதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல் மற்றும் புயற்காற்றினிடமாகவும் மற்ற சேதங்களினிடமாகவும் பிள்ளைகளின் பிரதிபலிப்புகளைச் சமாளித்தல் ஆகிய ஆங்கில பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்டது.