உங்கள் கார்—காப்பிடமா கண்ணியா?
“அநேகமாக ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும், தங்களுடைய காருக்குள்ளேயே இருப்பதா அல்லது காரைவிட்டு வெளியேறுவதா என்று அறிந்திருந்தால் பிழைத்திருக்கக்கூடிய பலியாட்களைக் காண்கின்றனர் மீட்புப் படையினர்,” என்று எச்சரிக்கிறது FEMA (ஐ.மா. கூட்டாட்சியின் அவசரநிலை கட்டுப்பாட்டு நிறுவனம்). ஆம், தவறான ஒரு தீர்மானம் உங்கள் உயிரையே இழக்கச்செய்யும். ஒரு பேரழிவு ஏற்படுமானால் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட வினாடிவினாவிற்கு விடையளித்து, உங்கள் விடைகளைக் கீழே கொடுக்கப்பட்ட விடைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
1. பூமியதிர்ச்சி
□ காருக்குள்ளேயே இருங்கள்
□ காரைவிட்டு வெளியேறுங்கள்
2. சூறாவளிக் காற்று
□ காருக்குள்ளேயே இருங்கள்
□ காரைவிட்டு வெளியேறுங்கள்
3. பனிப்புயல்
□ காருக்குள்ளேயே இருங்கள்
□ காரைவிட்டு வெளியேறுங்கள்
4. வெள்ளம்
□ காருக்குள்ளேயே இருங்கள்
□ காரைவிட்டு வெளியேறுங்கள்
விடைகள்:
1. பூமியதிர்ச்சி: காருக்குள்ளேயே இருங்கள்.
காரின் ஸ்ப்ரிங் அமைப்பானது (suspension system) காரை பயங்கரமாக அதிரவைக்கிறபோதிலும், நீங்கள் காருக்குள்ளேயே இருந்தால்தான் ஒருவேளை மிகவும் பாதுகாப்பாக இருப்பீர்கள்—ஆனால் நீங்கள் கட்டிடங்கள், பாலங்கள், அல்லது மின் கம்பிகள் ஆகியவற்றிற்கு அருகே இல்லாமலிருக்க வேண்டும்.
2. சூறாவளிக் காற்று: காரைவிட்டு வெளியேறுங்கள்.
சூறாவளிக் காற்று வரும்போது ஒளிந்துகொள்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் காரில் இருப்பதேயாகும். ஆனால் ஒளிந்துகொள்வதற்கு அருகில் பாதுகாப்பான இடங்கள் இல்லாமலிருக்குமானால்? FEMA சொல்வதாவது: “ஒரு பள்ளத்திலோ அல்லது நிலத்திலுள்ள மற்ற குழிகளிலோ கைகளை உங்கள் தலைமீது வைத்துக்கொண்டு தரைமட்டமாக படுத்துக்கொள்ளுங்கள்.”
3. பனிப்புயல்: காருக்குள்ளேயே இருங்கள்.
ஓரளவு தூரத்தில் பாதுகாப்பான ஒரு இடத்தை நீங்கள் பார்த்தாலொழிய, மீட்கப்படுவதற்காக காத்திருப்பதே மிகவும் நல்லது. வெப்பம் கிடைப்பதற்காக சிறிது நேர இடைவெளிகளில் எஞ்ஜினை ஸ்டார்ட் பண்ணி வைத்திருங்கள். ஆனால் கார்பன் மோனாக்ஸைடு விஷமேறுவதைத் தவிர்க்க ஒரு ஜன்னலைக் கொஞ்சமாக திறந்துவையுங்கள். மீட்புப் பணியாளர்கள் அடையாளம் கண்டுகொள்வதற்காக காரின் உள்ளே உள்ள ஒரு விளக்கைப் போட்டே வைத்திருங்கள்.
4. வெள்ளம்: காரைவிட்டு வெளியேறுங்கள்.
“வெள்ளத்தினால் கார் நின்று போய்விட்டால், உடனடியாக காரைவிட்டு வெளியேறி உயரமான இடத்திற்கு ஓடுங்கள். வெள்ளம் இன்னும் உயர்ந்துகொண்டே வந்து, எந்த நிமிஷமும் காரை அடித்துக்கொண்டு போகலாம்,” என்று எச்சரிக்கிறது FEMA. ஆபத்தை அற்பமாய் கருதாதீர்கள். நீர்மட்டம் நாம் பார்ப்பதைவிட ஆழமாக இருக்கலாம், உடனடியாகவும் உயரலாம்.
இந்தத் தகவலை உங்கள் காரின் ஸ்டியரிங் வீலுக்கு பக்கத்திலுள்ள சிறிய அறையில் வைத்திருக்கும்படி FEMA ஆலோசனை தருகிறது. மேலும் எல்லா சூழ்நிலைமைகளிலும், “மிக முக்கியமான விதிமுறை என்னவென்றால்: பீதியடையாதீர்கள்,” என்று சிபாரிசு செய்கிறது.